ஆயினும் தாமரை மொட்டுகளே..!

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் . வரலாற்றில் முதன் முறையாக 'பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே' வாக்களித்து 'நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை' தெரிவு செய்து கொள்ளப் போகும் ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இன்றைய தேர்தலில் மூவர் போட்டியிடுகின்றனர். அதில் அனுரகுமார தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனாலும் போட்டியிடுகின்றார்; 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது போலவே.

அடுத்த இருவர் ரணில், டலஸ். இந்த இருவரது வெற்றி வாய்ப்பு குறித்த கருத்துக் கணிப்பு நேற்றைய நாள் முழுவதும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கிறது.

'மொட்டு'க் கட்சி என அழைக்கபடும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன விற்கான அடித்தளம் 2012 ஆம் ஆண்டு 'உள்ளூராட்சி மன்ற எல்லை மீள்நிரணய' செயற்பாடுகளில் இருந்தே ஆரம்பித்தது. அதன் தந்தை பஷில் ராஜபக்‌ஷ. பண்டாரநாயக்க வை முன்னிலைப்படுத்தும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ராஜபக்‌ஷவை முன்னிலைப்படுத்தக் கூடிய கட்சியாக அதனை மாற்றுவது என்பது மொட்டுக் கட்சயின் அடிப்படைக் கருத்தியல்.

பண்டாரநாயக்க பரம்பரை - சிறிமா, அனுர, சந்திரிக்கா என வந்து அதற்கடுத்த நிலையில் தொடராத நிலையில் அல்லது சந்திரிக்கா தனது பிள்ளைகளை அரசியலில் இறக்க விருப்பம் கொண்டிருக்காத நிலையில் 'ராஜபக்‌ஷ' அரசியல் அடையாளம் ஒன்றை நாட்டில் நிலை நிறுத்துவது என்ற அடிப்படையில் டி.ஏ.ராஜபக்‌ஷவுக்கு சிலை, கொழும்பில் 'மொட்டு' சிலை (தாமரைக் கோபுரம்) என செயற்கையாக செய்யப்பட்டக் கட்சி இது.

2012 ஆம் ஆண்டு உள்ளூராட்சி எல்லை மீள்நிரணயத்தை (வட்டார உருவாக்கம்) அதற்கு சாதகமாக வடிவமைத்த கட்சி 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அமோக வெற்றி யீட்டியது. அது 2019, 2020 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற முறையே ஜனாதிபதி, பொதுத் தேர்தலில் உச்சம் தொட்டது. இந்த மூன்று தேர்தல்களுக்கும் பின்னர் நாடு எதிர் கொள்ளும் தேர்தல் ஒன்று இன்றைய 'பாராளுமன்ற ஜனாதிபதித் தேர்தல்' என்பதனால்தான் இந்தப் பின்னணி இங்கே கூறப்படுகிறது.

இனி, இன்றைய தேர்தல் குறித்து ....

மேலே கூறிய பின்னணிகளின் பிரகாரம் ,

மொட்டுக் கட்சிக் கொண்டுள்ள பிரிதிநிதித்துவக் கட்டமைப்பை உடைத்து (ராஜபக்‌ஷ சிலையையும் பிம்பத்தையும் நாட்டில் உடைத்து இருந்தாலும்) இன்னுமொருவர் எப்படி வெற்றி பெறுவது என்பதே இன்று எழுந்திருக்கும் வியூக அமைப்புகளாகும்.

அதில்,

ரணில் மொட்டுக் கட்சியை 'மொத்தமாகவும்' சஜித் 'சில்லறையாகவும்' வாங்கியுள்ளனர்.

ஓரே ஒரு ஆசனத்தோடு உள்ளேவந்த ரணில் கையில், அவரைத் தவிர அனைத்துமே 'மொட்டுகள்'. இன்றைய திகதியில் டக்ளஸ் தேவானந்தாவின் 'வீணை' இரண்டும் அவருக்கு நேரடி ஆதரவை வழங்கி உள்ளன. நேற்றைய இரவில் 'சில பறவைகள்' சேர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.

தவிரவும் ஒரே தேசிய பட்டியல் ஊடே உள்ளேவந்த ரணில் பிரதமர், தற்காலிக ஜனாதிபதி, பதில் ஜனாதிபதி என தனது இடத்தை வலுப்படுத்திக் கொண்டே ரணில் இன்றைய 'இடைக்கால ஜனாதிபதி' தேர்தலில் களம் இறங்குகிறார்.

அவரது கையில் இருக்கும் இன்னுமொரு முக்கிய துரும்பு அவர் கைவசம் இருக்கும் 'அமைச்சரவை' யும் அதன் தலைமைப் பொறுப்பும். அவர் வெற்றி பெற்றால் அடுத்து அமைச்சரவையில் புதியவர்களை உள்வாங்கும் ஓர் ஆசையை மொட்டுவின் பின்வரிசைகளுக்கு அவர் நிச்சயம் ஏற்படுத்திக் கொண்டிருப்பார்.

மறுபக்கத்தில் தான் ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்காமலேயே பிரதமர் ஆகிவிடும் கனவில் வியூகம் அமைத்துள்ளார் சஜித். இதற்கு அவர் கையில் எடுத்ததும் 'மொட்டுகளையே'. சஜித்துடன் இணைந்த மொட்டுகள் அனைத்துமே 'அண்மையில் அதில் அதிருப்தி கொண்டவை' என்பதை அவதானிக்க வேண்டும்.

அதில் ஒருவரான டலஸ் இப்போது முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். மகிந்த ராஜபக்‌ஷ பதவி விலகலுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பதான மொட்டுக் கட்சி கூட்டத்தில் "டலஸ் முதுகில் குத்துகிறார்" என திஸ்ஸ குட்டி ஆராச்சி எம்பி (பதுளை) நேரடியாகவே குற்றம் சாட்ட, அவருக்கு பதில் அளித்த டலஸ்: 'நான் எப்போதுமே அணி மாறியவன் இல்லை, எனது கருத்துக்களை நேரடியாக பேசுபவன்" என ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பாய்ந்து மொட்டுவுக்கு வந்த திஸ்ஸ குட்டி தலையில் ஒரு குட்டு வைத்தார்.

அதன்போது மகிந்தவும் "டலஸ் முதுகில் குத்த மாட்டார். அவரை நானே அரசியலுக்குக் கொண்டு வந்தேன்" என டலஸ் பக்கமே நின்றார்.(இதற்கு மறுதலை உண்டு )

டலஸின் அரசியல் வருகை மங்கள ஊடாக நடந்தது என மங்கள சமரவீரவே முன்பு ஒரு முறை கூறி இருந்தார். ஆனாலும் சந்திரிக்கா அரசாங்கத்தில் அங்கம் வகித்த டலஸ் தான் அதில் அதிருப்தி அடைந்துவிட்டதாக கூறி கண்ணீர் மல்க கருத்துக் கூறி அரசியலில் விடைபெற்று 2000 ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அதன் பின்னர் 2005 ல் மகிந்த தலைமைப் பொறுப்பை ஏற்றதன பின்னர் வந்து இணைந்து கொண்டார். அதனையே மகிந்த தான் அரசியலுக்கு அழைத்து வந்ததாக கூறுவாராக இருக்கும்.

டலஸ், அடிப்படையில் ஓர் ஊடகவியலாளர். எளிமையான மனிதர். நல்ல பேச்சாளர். பாராளுமன்ற உறுபிப்பினர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதிப் பத்திர முறைமையை ஆரம்பித்தில் இருந்தே மறுத்து வந்தவர்,மாமிசம் உண்ணாதவர், மதுப்பழக்கம் அற்றவர் என சில அடையாளப்படுத்தல்களைச் செய்யலாம்.

அவர் மீது வைக்கப்படும் இரண்டு பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்று, சந்திரக்காவின் மகன் விமுக்தி விஜேகுமாரதுங்கவுக்குப் பிறந்தவர் இல்லை என செய்தி வெளியிட்டவர் என்பது. ( இந்த முரண் சந்திரிக்கா ஆட்சியில் விலகிச் செல்ல காரணமாக இருக்கலாம்).

இரண்டாவது, பொதுவாக தமிழ் - முஸ்லிம் சமூகத்தில் முன்வைக்கப்படும் 'சிங்களம் மட்டும் தேசியக் கொடியைக் கையில் ஏந்தினார்' என்பது. ( அந்த நிழற்படம் இப்போது அதிகமாக பகிரப்படுகிறது).

இந்தப் பின்னணிகளுடன் டலஸ் எப்படி ஜனாதிபதி வேட்பாளர் ஆனார் ? என்பது இங்கே எதிர்பார்க்கப்படும் செய்தி.

மொட்டுவின் அதிருப்தி குழுக்களுக்கு இப்போது இடம் ஒன்று தேவைப்படுகிறது என்பதே இதன் அடிப்படை. மொட்டுக் கூட்டணியிலே இருந்து வெளியேற நேர்ந்த பல குழுக்கள் தனிநபர் கட்சிகளும் பத்துக்கும் குறைவான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளாகும். எனவே அடுத்த பொதுத்தேர்தலில் இவர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது எனும் குழப்பத்துக்கு விடை தேடும் போது இப்போதைக்கு அதிருப்தி கொண்டுள்ள முன்னாள் மொட்டுப் பங்காளிகளில் தனிக்கட்சி தலைமையில்லாத (மைத்ரி,விமல்,வாசு,கம்மன்பில, கம்யுனிஸ்ட் கட்சி வரிசை) ஒருவரை அடையாளம் காணும் தேவை இருந்தது. அத்தகைய ஒருவர் என்பதே இப்போதைக்கு டலஸ் அழகப்பெரும கொண்டிருக்கும் தகுதி. இதற்கு ஜி.எல்.பீரிஸ் உம் ஆதரவு அளித்து இப்போது மொட்டு வை மொட்டுகள் ( இளைஞர்கள்) கைகளில் விட்டுவிட்டு மூத்தவர்கள் எல்லாம் எப்படியாவது அடுத்த பொதுத் தேர்தலில் மலர்ந்து விடுவது என்பதே இப்போதைய உத்தி.

அந்த வியூகத்தில், ஜனாதிபதி பதவியும் கிடைத்து விட்டால் தமது புதிய கூட்டணிக்கு இன்னுமொரு பலமே தவிர இப்போதைக்கு டலஸ் தலைமையில் புதிய கூட்டணி அமைப்பை உறுதி செய்து கொண்டுள்ளார்கள்.

இந்தக் கூட்டணிக்கு கைகொடுத்து உதவி இருக்கிறார்கள் சஜித் அணியினர் என்பதனை இப்போது அவர்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் அடுத்த பொதுத் தேர்தலில் உணர்வார்கள்.

இந்த பின்ணிகளுடன் 'பாராளுமன்ற ஜனாதிபதி தேர்தலுக்கு' முன்பதாக ரணில், டலஸ் தமது அரசியல் வெற்றிகளை இப்போது பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்றே கருதலாம்.

ஆனால் சஜித் அணி எந்த விடயத்திலும் முன்னகராமல் 'கழன்ற மொட்டுக்களுடன்' கைகோர்த்து அவர்களைத் தூக்கிவிடும் பணியையே செய்து இருக்கிறது.

டலஸ் ஜனாதிபதியாகி சஜித் பிரதமர் ஆனாலும் கூட அடுத்துவரும் இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சரவையைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மொட்டுவில் இருந்த விலகிவந்த பலர் தனிக்கட்சி தலைவர் அடையாளத்துடன் அமைச்சுப் பதவியை எதிர்பார்ப்பார்கள். மறுபுறம் ஐக்கிய மக்கள் சக்தியும் தமது உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை எதிர்பார்க்கும் ( குறிப்பாக அதுவும் ஒரு கூட்டணி கட்சி என்பது கவனிக்கத்தக்கது).

எனவே அத்தகைய அனைத்துக் கட்சி அமைச்சரவைத் தலைமையை பிரதம அமைச்சரான சஜித் எவ்வாறு எதிர்கொள்வார். அந்த கதம்ப கூட்டணியை ஜனாதிபதியாக டலஸ் எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதெல்லாம் கேள்விக் குறிதான். இந்த இருவரது 'புதிய பொறுப்புகள்' என்பதை இவர்கள் இருவரும் கற்றுத் தேர்ந்து வருவது என்பது இந்த நெருக்கடி சூழலை மேலும் உக்கிரமடையச் செய்யலாம்.

மறுபுறத்தில் ரணில் தனது நீண்ட அனுபவத்தோடு காய் நகர்த்தல்களைச் செய்து தனது ஜனாதிபதி கவனவை நனவாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகமே உள்ளது. அவர் அந்தப் பதவிக்கு வந்தால் ஐக்கிய தேசியக் கட்சியை பலமடையச் செய்வார். அது நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் ஒன்று அல்ல. அவ்வாறு ரணில் முயற்சிப்பது இன்றைய சூழலில் கண்டனத்துக்குரியது. அதேநேரம் இப்போது அவரோடு இணையும் மொட்டு அணியை பலவீனமடையச் செய்யும் ஒரு நிகழ்ச்சி நிரலும் இதனூடே அவர் நிகழ்த்துகிறார் என்பது அவதானிக்க வேண்டியது.

ஆக அரசியல் ரீதியாக அடுத்தத் தேர்தலில் 'மொட்டு' பலவீனமடையும். அது கடந்த இரண்டாண்டு கால ஆட்சியினாலும், கோட்டா வெளியேற்றம் வரையிலான மக்கள் கொண்ட அதிருப்தி மாத்திரமல்ல இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் தெளிவாகப் பிரியும் மொட்டுக் கட்சி அதனை உறுதி செய்யும்.

அவ்வாறு உடையும் 'மொட்டு' வுடன் கைகோர்த்தே அதற்கு எதிர் கட்சிகளாகக் கருதப்படும் ஐக்கிய தேசிய கட்சி (ரணில்) , ஐக்கிய மக்கள் சக்தி (சஜித்) தமது அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டும் எனும் நிலையே இப்போது முக்கிய அடையாளப்படுத்தல் ஆகிறது.

ரணில் வந்தால் ராஜபக்‌ஷக்களை காப்பாற்றுவார் என்பதே அவர் மீது வைக்கப்படும் பாரிய விமர்சனமாக உள்ளது. அதே நேரம் டலஸ் ஜனாதிபதியானால் ராஜபக்‌ஷக்களை காப்பாற்ற மாட்டார் என்று என உறுதியாக சொல்ல முடியாது. அதே நேரம் தண்டனை வழங்குவார் என எப்படியும் எதிர்பார்க்கவே முடியாது. எனவே வெற்றிபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் இப்போதைய இருவரில் யார் தெரிவானாலும் ராஜபக்‌ஷவினர் காப்பாற்றப்படுவதில் அல்லது தண்டிக்கப்படுவதில் புதிதாக ஏதும் நடந்துவிடப் போவதில்லை.

எனவே இலங்கை புதிய இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்து கொள்ளப்போகும் இன்றைய தேர்தலில் வெற்றிப் பெறப்போவது

ராஜபக்ஷக்கள் பாதுகாக்கப்படுகின்ற 'மொட்டு' வே ஆகும் 2018, 2019, 2020 தேர்தல்களைப் போலவே.

அதற்கு நேரடியாக ரணிலும் மறைமுகமாக (டலஸ் ஊடாக) சஜித் தும் உதவுகிறார்கள். இதில் ஐக்கிய தேசிய கட்சியை விட ஐக்கிய மக்கள் சக்தி பலவீனமடையும் வாய்ப்புகளே அதிகம்; டலஸ் வென்றாலும் தோற்றாலும்.

அடுத்த பொதுத் தேர்தலின் பின்னரே மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நோக்கிய பயணம் ஆரம்பமாகும். இந்த இரண்டைர வருடங்கள் என்பது 'மொட்டுவின்' முட்டுகளாகவே ஆட்சித் தொடரும்.

மல்லியப்பு சந்தி திலகர்


தொழிற்சங்கம் தவிர்ந்த வேறு துறையை நாடாதவர் செபஸ்தியன்

-அனுதாபச் செய்தியில் முன்னாள் எம்.பி.திலகர்

தொழிலாளர் தேசிய சங்கத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை இணைந்திருந்த இவர் தொழிற்சங்கம் தவிர்ந்த வேறு ஒரு துறையை தன் வாழ்நாளில் நாடாதவர். அத்தகைய அனுபவமிக்க ஒருவரின் இழப்பு மலையக தொழிற்சங்க இயக்கத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்து உள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் முதன்மை உறுப்பினர்களில் ஒருவருமான ஜே.எம்.செபஸ்தியன் அவர்களின் மறைவினை அடுத்து அவர் விடுத்திருக்கும் அனுதாபச் செய்மியிலேயே இவ்வாறு தெரிவித்து உள்ளார். அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச்செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய ஜே.எம். செஸ்தியன் பாடசாலைக்கல்வியை முடித்ததும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் தொழிற்சங்கத்துறை பயிலுனராக இணைந்தவர். அமரர் வி.கே.வெள்ளையன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்துவந்து தொழிலாளர் தேசிய சங்கத்தை உருவாக்கியபோது அவரோடு இணைந்து கொண்டவர்.

இவர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தினராக இல்லாமல் இருந்தாலோ அல்லது இவரது மருமகன் எனது நண்பன் ரொபர்ட் ( மொனரகலை பஸ் விபத்தில் காலமாகிவிட்டார்) தொழிலாளர் தேசிய சங்கத் தலைமைக் காரியாலயத்தில் தங்கி 92/93 காலப்பகுதியில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் என்னோடு சக மாணவனாக உயர்தரம் கற்றிருக்காவிட்டாலோ, எனக்கும் 'தொழிலளர் தேசிய சங்கத்துக்கும்' தொடர்பு ஏற்பட்டு இருக்காது.

அந்தவகையில் 1992 முதல் 2020 வரையான 28 ஆண்டு கால தொடர்பை தொழிலாளர் தேசிய சங்கத்துடன் ஏற்படுத்திய பெரியவர் செபஸ்டியன் அவர்களது இழப்பு எனக்கு பெரும் வேதனை அளிப்பது.

2007 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக நான் இணைந்து கொண்ட நாளில் இருந்து 2020 ஆண்டு ஒதுங்கிக் கொண்ட நாள் வரை பிரதிப் பொதுச் செயலாளர் பதவி வகித்தபோதும் உண்மையில் அந்த காலப்பகுதி முழுவதும் நிதிச் செயலாளராக பதவி வகித்த செபஸ்தியன் அவர்களுக்கு உதவியாளராகவே இருந்தேன்.

மாதாந்த கணக்காய்வு, வருடாந்த கணக்கு அறிக்கை சமர்ப்பிப்பு என கணக்காளர் கணேசனுடன் இணைந்து இவருடன் நெருங்கிப் பழகிய அனுபவம் எனக்கு உள்ளது. இப்போது அந்த இருவருமே மறைந்துவிட்டார்கள் என்பது பெரும் வேதனையானது.

செபஸ்தியன் அவர்களின் ஆங்கிலப்புலமையும் தொழிற்சங்க அனுபவங்களும் தொழிலாளர் தேசிய சங்க மீள் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தது. சங்கத்தின் வரலாறு குறித்த ஒரு நடமாடும் தகவல் களஞ்சியமாகவே அவர் செயற்பட்டிருந்தார். வி.கே வெள்ளையன் அவர்களுடன் இணைந்து தோட்டம் தோட்டமாக நடந்து திரிந்து தொழிற்சங்கம் அமைத்த அனுபவம் இவருக்கு உண்டு. அதனை அவ்வப்போது சுவாரஷ்யமாக பகிர்ந்து கொள்வார்.

தொழிற்சங்கம் தவிர்ந்த வேறு ஒரு துறையை தன் வாழ்நாளில் நாடாதவர் இவர் அத்தகைய அனுபவமிக்க ஒருவரின் இழப்பு மலையக தொழிற்சங்க இயக்கத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அன்னாருக்கு மலையக அரசியல் அரங்கத்தின் சார்பில் அஞ்சலியைப் பதிவு செய்வதுடன் அவரது பிரிவால் துயருற்று இருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொழிற்சங்க அங்கத்தினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.


அடுத்தத் தலைமுறைக்கான அரசியல் பாலமே 'மலையக அரசியல் அரங்கம்'

- தலைமை ஒருங்கிணைப்பாளர் திலகராஜ் கூறுகிறார்-

‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் பெயரில் கடந்த ஞாயிறு அமைப்பு ஒன்று தலவாக்கலை நகரில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ், உதயசூரியனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.

உரையாடல் : சதீஷ்குமார்.

மலையக அரசியல் அரங்கம் எனும் அமைப்பானது அரசியலோடு தொடர்பு பட்டதா?

அரசியல் தொடர்பில்லாத அமைப்பாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அமைப்பின் பெயரிலேயே ‘அரசியல்’ எனும் பதம் வரும் வகையில் வடிவமைத்தோம். நிச்சயமாக அரசியல் தொடர்புடையதுதான்.

 

அரங்கம் தொடர்பில் சற்று விளக்க முடியுமா?

1. மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் தளத்தை உரையாடல் வெளியை ஏற்படுத்துவது
2. மாவட்ட எல்லைகளைக் கடந்து மலையக அரசியலை முன்னெடுப்பது
3. ஆண்களுக்குச் சமனாக பெண்களுக்கும் அரசியலில் சம வாய்ப்பளிப்பதை வலியுறுத்துவது
4. மலையகத்தில் அடுத்த தலைமுறை அரசியலுக்கு பாலம் அமைப்பது
எனும் நான்கு இலக்குகளைப் பிரதானமாகக் கொண்டு மலையக அரசியல் அரங்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

உங்களுடைய அமைப்பின் இலட்ச்சினைகள் தொடர்பில் கூறமுடியுமா?

மலையகத் தமிழ் சமூகம் இலங்கையில் இருநூறு வருடங்களை நிறைவு செய்கிறது. அதில் சரியாக ஒரு நூற்றாண்டு காலமாக பிரதிநிதித்துவ அரசியலை முன்னெடுத்து 1921 முதல் சட்டவாக்கச் சபை ( Legislative Council) அரச பேரவை ( State Council ) நாடாளுமன்றம் ( Parliament ) மாகாண சபை ( Provincial Council) உள்ளூராட்சி சபை ( Local Authorities ) என அங்கத்துவம் கண்டுள்ளது.

இந்தப் பயணத்தை மலையகம் என்ற உணர்வோடு ஆரம்பித்து வைத்த மலையக தேச பிதா கோ.நடேசய்யர் அவர்களையும் அவரது துணைவியாரும் அரசியல் சமூக கலை இலக்கிய செயற்பாட்டாளருமான மீனாட்சியம்மை ஆகியோரின் உருவப் படங்களை இலட்சினையாகக் கொண்டுள்ளோம்.

இதன்மூலம் மலையகத் தமிழ்ச் சமூகத்தை கூலிச்சமூகமாகக் காட்ட முயல்வதற்கு மாறாக ஓர் அரசியல் சமூகமாக அடையாளப்படுத்தவும், ஆண்களைப் போலவே பெண்களும் மலையக அரசியலில் சம்பங்கு வகித்துள்ளார்கள் என்பதையும் வலியுறுத்துவதோடு பிரதிநிதித்துவ அரசியல் மாத்திரம் அன்றி சமூக அரசியலும் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அவசியமானது என்பதையும் வெளிப்படுத்துவதாக இலச்சினை அமைகிறது.

மலையக அரசியல் அரங்கம் எனும் அமைப்பானது மலையக பெருந்தோட்ட மக்களை பொருத்தவரையில் எந்நதளவில் பயன் தரும் ?
பெருந்தோட்டம் என்பது அருகிவரும் ஒரு பொருளாதார வலயம். இலங்கை சுதந்திரமடையும்போது 100% ஆக இருந்த பெருந்தோட்டக் கட்டமைப்பு 1972 ஆம் ஆண்டு ஆகும்போது 25 % சிறுதோட்டமாகவும் 75% பெருந்தோட்டங்களாகவும் இருந்தன. 1992 ல் இரண்டும் தலா 50% ஆக பதிவானது. ஆனால் , 2020 ல் சிறுதோட்டம் 75%ஆகவும் பெருந்தோட்டங்கள் 25 % ஆகவும் குறைந்துள்ளதோடு 2050 ஆம் ஆண்டு ஆகும்போது பெருந்தோட்டம் 1% ஆக குறைப்பதற்கு உத்மியோகபூர்வமாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

எனவே பெருந்தோட்டம் என்பதற்கு இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை.அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரியத் தொடங்கிவிட்டது. பெருந்தோட்டத்தைப் பாதுகாப்போம் எனும் கோஷத்தை முன்வைப்பவர்கள் இதனை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. தவிரவும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்தான் இற்றைநாள்வரை மலையக அரசியலின் வேர்களாக இருந்து வருகிறார்கள். தோட்டத் தொழிலாளர்கள் அல்லாதவர்கள் இன்னும் தங்களை ‘அரசியல் ரீதியாக’ அடையாளப்படுத்தாமை மலையக சமூகத்தின் பெரும் சாபக்கேடு. தொழிற்சங்கங்கள் இன்று திராணியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட நிலையில் தொழிற்சங்க அரசியலில் தங்கி இருப்பதானது திராணியற்ற அரசியல் பயணத்திற்கே இட்டுச் செல்கிறது.

இப்போதைய அவசியத்தேவை தோட்டத் தொழிலாளர் நலனில் அக்கறைகொண்ட தொழிலாளர் அல்லாத மலையகத் தரப்பினர் முன்னெடுக்கும் அரசியலே ஆகும். அத்தகைய அக்கறையாளர்களை வெவ்வேறு பெயர்களில் மலையகத் தளத்திலே காணக்கிடைக்கிறது.

அவர்கள் தம்மை அரசியல் ரீதியாக அடையாளப்படுத்த தவறவிடும்போது மலையகத் தமிழ் சமூகத்தின் விடுதலை தாமதமாகிறது என்பதே அர்த்தமாகும். அத்தகைய அக்கறை கொண்ட அமைப்புக்களை, தனிநபர்களை மாவட்ட எல்லைகள் கடந்து மலையக அரசியல் தளத்தில் ஒன்று சேர்ப்பது எமது அமைப்பின் பிரதான இலக்காகும்.

இந்த அமைப்பிற்கு மலையக அரசியல்வாதிகளால் எதிர்ப்புகள் வரகூடிய வாய்ப்புகள் உள்ளதா?

நான் மேலே கூறிய விடயங்கள் எந்தவொரு அரசியல் தரப்புக்கும் எதிரானது அல்ல. ஆனால் , மக்கள் சார்பானது, மக்களுக்கு அவசியமானது. எனவே இதனை யாரும் எதிர்க்கும் தேவை இருக்கும் என நான் நினைக்கவில்லை. மாறாக ஆதரவு தரலாம். அரங்கத்தில் வந்து தாராளமாக இணையலாம்.

தற்போது மலையகத்தில் உள்ள அரசியல்வாதிகளின் வாரிசுகள் எதிர்வரும் காலங்களில் அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன இது குறித்து தாங்களின் கருத்து என்ன?

‘வாரிசு அரசியல்’ மலையகத்துக்குப் புதியதல்ல. இலங்கையிலும், இந்தியா உள்ளிட்ட தென் ஆசிய பிராந்தியத்திலும் இந்த வாரிசு அரசியல் இருப்பதை எடுத்துக்காட்டி, வாரிசு அரசியலை தமக்கு சாதகமாக நியாயப்படுத்திக் கொள்ளும் போக்கு மலையகத்தில் காணப்படுவது துரதிஷ்ட்டவசமே. வாரிசு அரசியலுக்கு எதிராக பேசி மக்களிடம் வாக்குகளைச் சூறையாடியவர்களும் கூட இப்போது தமது வாரிசுகளைக் களத்தில் இறக்க முனைப்புக் காட்டுவது நகைப்புக்குரியது. அதே நேரம் அடுத்துவரும் ஐம்பது ஆண்டுகளுக்கான தலைவரை தமது கட்சிக்கு தேர்ந்து எடுத்துவிட்ட அரசியல் கட்சிகளையும் மலையகத்தில் காண்கிறோம். கட்சித்தலைமையில் அரைநூற்றாண்டு காலத்திற்கு மாற்றம் வராது எனத் தெரிந்த பின்னரும் மாற்று அரசியல் கலாசாரத்தையும் அரசியல் அமைப்புகளையும் கட்டியெழுப்ப மலையக இளந்தலைமுறையினர் சிந்திக்கத் தவறினால், கடந்த எண்பதாண்டு காலம் கண்ட அதே அவல நிலையை அடுத்த ஐம்பதாண்டு காலத்திற்கும் தொடரத் தயாராக வேண்டியதுதான்.

தற்பொழுது மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாளாந்தம்எதிர்நோக்குகின்ற பிரச்சினை தொடர்பில் உங்கள் மலையக அரசியல் அரங்க அமைப்பின் ஊடாக தீர்வினை பெற்றுகொள்ளும் வகையில் ஏதாவது வழிமுறைகள்உள்ளனவா?

மலையக அரசியல் அரங்கம் ஒரு தொழிற்சங்கம் அல்ல. தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் சந்தா வாங்கும் அமைப்பு அல்ல. எனவே அவர்களது நாளாந்த தொழில் பிரச்சினைகளை கையாள வேண்டியது அவர்களிடம் சந்தா வாங்கும் தொழிற்சங்கங்களின், அரசியல் கடசிகளின் கடப்பாடு ஆகும்.
அதே நேரம் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைசார்ந்த விடயங்களில் மலையக அரசியல் அரங்கம் நிச்சயம் பங்கேற்கும்.

எதிர்வரும் மாகாணசபை தேர்தலின் போது மலையக அரசியல் அரங்கம் என்ற அமைப்பின் ஊடாக தேர்தலில் களமிறக்கப்படுவார்களா?

அரசியல் ரீதியாக அமைப்பொன்றைத் தோற்றுவித்துவிட்டு தேர்தலில் பங்கேற்காதுவிட்டால், மன்றங்கள், விளையாட்டுக் கழகங்கள் போன்று செயற்பட்டுவிட்டுப் போகலாம். எனவே தேர்தல் ஒன்று வரும் போது அதற்குரிய வியூகத்தில் எமது அமைப்பினர் களம் இறங்குவார்கள்.அது கட்டாயமாக மலையக அரசியல் அரங்கம் என்ற பெயரில்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. வேறு கூட்டணி வடிவங்களையும் எடுக்கலாம். ஆனால், இப்போதைக்கு மாகாண சபை தேர்தல் அல்ல எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் மனநிலையில் அரசும் இல்லை மக்களும் இல்லை என்பதுதான் உண்மை நிலை. காலம் மிகப் பெரிய ஆசான். அது தீர்மானங்களை எடுக்கும் திசையை தீர்மானிக்க வல்லது.

தற்போதைய அரசாங்கத்தின் வரவுசெலுவு திட்டம் தொடர்பாக தாங்களின்கருத்து எவ்வாறு அமையும் என கூறுவீர்கலா?

ஐநூறு மில்லியன் நிதியில் மூன்று வருடத்தில் மலையகத்தில் எல்லா லயன்களையும் இல்லாமல் ஆக்கும் திட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். அவை குடும்பம். ஒன்றுக்கு பத்து பேர்ச்சஸ் நிலத்தைப் பெறுக்கொடுப்பதாயும் கூரைக்கு பதில் கொங்ரீட் தளமாக (ஸ்லப்) அமைந்து அடுத்த தலைமுறை வீடு கட்டும் ஏற்பாட்டையும் கொண்டிருக்கும் எனவும் எண்ணுகிறேன். அப்படித்தானே தேர்தல் அறிக்கைகள் கூறி இருந்தன.

மலையக அரசியல் அரங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?

2021 ஒக்டோபர் 30 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப்போது ஒரு மாதம் கடந்த நிலையில் இரண்டு செயற்குழு கூட்டத்தையும், ஒரு மெய்நிகர் உரை அரங்கத்தையும், ஒரு நாள் கருத்தரங்கையும், ஒரு ஊடகச்சந்திப்பையும், ஒரு மக்கள் சந்திப்பையும் நடாத்தி உள்ளோம். இதன்மூலம் வேறுபட்ட தளங்களில் எமது அரங்கம் விரிவாக்கம் பெற்றுள்ளது.

செயற்குழு கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராக நானும், செயலாளராக என்.கிருஷ்ணகுமாரும், பிரதான அமைப்பாளராக இராமன் செந்தூரனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவை தவிர மாவட்ட வாரியாக செயற்குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களுக்குச் செல்லும்போது அதன் விபரங்கள் தெரியவரும். மாதாந்த உரை நிகழ்வை மறைந்த மலையக அரசியல் தலைவர்களின் பெயரில் நினைவுப் பேருரையாக நிகழ்த்த உள்ளோம்.முதலாவது உரையை அரசியல் ஆய்வாளர் பி.ஏ.காதர் ‘இருநூற்றாண்டு கால மலையகமும் அதன் நூற்றாண்டு கால அரசியல் பிரதிநிதித்துவமும்’ எனும் தலைப்பில் மலையகத் தேச பிதா கோ.நடேசய்யர் நினைவுப் பேருரையாக ஆற்றினார். அதனை சிறுபிரசுரமாக வெளியிட்டு விநியோகிக்க உள்ளோம்.

அடுத்த உரை டிசம்பர் மாத இறுதி சனியன்று ‘தேர்தல் முறைமை மாற்றமும் மலையகப் பிரதிந்தித்துவத்தில் அதன் தாக்கமும்’ எனும் தலைப்பில் மலையக காந்தி கே.ராஜலிங்கம் நினைவுப் பேருரையாக இடம்பெறவுள்ளது. இவ்வாறு இருநூற்றாண்டு மலையக ஞாபகார்த்தமாக 24 உரைகளை நிகழ்த்தி அவற்றைப் பிரசுரமாக வெளியிட்டு விநியோகம் செய்ய உள்ளோம்.

மாதம் ஒரு மாவட்டம் என மலையக மாவட்டங்கள் தோறும் மக்கள் சந்திப்புகளை நடாத்தத் திட்டமிட்டு உள்ளோம். கொவிட் முடக்கம் வராதவிடத்து அதனை முறையாகச் செயற்படுத்த உள்ளோம். மாவட்ட ரீதியாக செயற்பட முன்வருவோரை இணைத்து அரங்கத்தை மலையக சமூக அரசியல் தளமாகக் கட்டி எழுப்பத் திட்டமிட்டுள்ளோம்.


மலையகத் தமிழர் : அர்த்தமுள்ள குடியுரிமையை நோக்கி

மயில்வாகனம் திலகராஜ்- மு.பா.உ

(இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரினரின் இலங்கைக் குடியுரிமை பறிக்கப்பட்ட நவம்பர் 15 ம் திகதியை நினைவு கூர்ந்து மலையக அரசியல் விழிப்புணர்வுக் கழகம் ஒழுங்கு செய்த உரையரங்கத்தில் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் ஆற்றிய உரையின் தொகுப்பு)

இலங்கை சுதந்திரமடைந்ததோடு பிரித்தானியர்கள் இலங்கையை விட்டு வெளியேற, யாரெல்லாம் இலங்கைப் பிரஜைகள் என தீர்மானிப்பதற்காக இலங்கையின்  முதலாவது நாடாளுமன்றம் '1948 ஆம் ஆண்டு 18 ஆம்இலக்க குடியுரிமைச் சட்டத்தை' நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட நிபந்தனைகளின் பிரகாரம் லட்சக்கணக்கான  இந்திய வம்சாவளியினர் இலங்கைக் குடியுரிமையை இழந்தனர்.

இதனை அடுத்து 1949 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில்  குடியுரிமை இல்லாதவர்கள் வாக்குரிமையை இழப்பார்கள் என்ற சர்த்துச் சேர்க்கப்பட்டதால் அதற்கு முந்தைய 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் வாக்களித்து 7 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தமது வாக்குரமையையும் இழந்தனர். இந்த இரண்டு சட்டங்களும் 'குடியுரிமைச் சட்டம்', 'பாராளுமன்றத் தேர்தல் சட்டம்' எனும் பெயர்களில் இந்திய வம்சாவளியினரின் 'பிரஜா உரிமையைப்' பறிப்பதற்கான சட்டங்களாகவே அதைந்தன என்பது தெளிவு.

இந்த இரண்டு சட்ட ஏற்பாடுகளின்போதும் மேல்தட்டு இந்தியர்களினதும் பாகிஸ்தானியர்களினதும்  ( இந்தியாவுடன் பாகிஸ்தான் சேர்ந்து இருந்த போது இலங்கை வந்தவர்கள்) பிரஜாவுரைமையும் பறிபோனதால் அவர்களுக்கு மீளவும் வழங்கும் வகையில், அதே 1949 ஆம் ஆண்டு 3 ஆம்இலக்க இந்திய - பாகிஸ்தான் பிரஜைகளுக்கான குடியுரிமைச்  சட்டத்தினைக் கொண்டுவந்து, அதன் ஊடாக விண்ணப்பித்து குடியுரிமையைப் பெறலாம் எனும் மாயையை உருவாக்கி,  இந்திய மேல்தட்டு வர்க்கத்துக்கும்   மீளவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் இந்திய வம்சாவளியினரில் தோட்டத் தொழிலாளர்களான பாட்டாளி வர்க்கத்தினரின் குடியுரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் இந்தியர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அங்கேயே திருப்பி அனுப்புதல் என முடிவுக்கு வந்தது இலங்கை அரசு.

இதன்படி 1954 ( நேரு - கொத்லாவல ), 1964 (சிறிமா - சாஸ்த்திரி ) 1974 (சிறிமா - இந்திராகாந்தி )  ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன்மூலம் இவர்கள் இலங்கையர்கள் இல்லை என்ற வாதமும் அவர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவது என்ற திட்டமும் நடைமுறைக்கு  வந்தது.  1983 ஆம் ஆண்டு கலவரங்களுடன் இலங்கை உள்நாட்டு யுத்தம் உக்கிரமடைய, ராமானுஜம் கப்பல் சேவை நிறுத்தப்பட்டதால் சிறிமா - சாஸ்த்திரி ஒப்பந்தத்துக்கு அமைவாக இந்தியா ( தாயகம் ) திரும்புதல் தடைபட்டது.

இலங்கையில் ஏற்பட்டிருந்த இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியாக  இந்திய மத்தியஸ்த்தத்துடன் பூட்டான் நாட்டின் தலைநகரமான ‘திம்பு’ வில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 'நாடற்ற தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்' எனும் தமிழர் தரப்பின்  கோரிக்கையின் பயனாக  ( மலையகத் தமிழர்களுக்கு என நேரடியாக குறித்துரைக்காதபோதும் ) '1986 ஆம் ஆண்டு ஐந்தாம் இலக்க நாடற்றவர்களுக்கான குடியுரிமை சட்டம்' நிறைவேற்றப்பட்டது.

இதுவரை, மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது எனும்  எண்ணத்திலேயே   இருந்த அரசு, இந்தச் சட்டத்தில் இந்த மக்கள் 'நாடற்றவர்கள்'  ( Stateless) எனும் அடையாளத்தை சுமத்தி, இலங்கைக் குடியுரிமை வழங்கியது. இதன் பின்னணியில் மலையகத்தையும் தளமாக இணைத்து இயங்கிய ஈரோஸ் அமைப்பின் கருத்து நிலையே காரணம் என்பது நன்றியுடன் நினைவுகூரப்படல் வேண்டும். இந்தச் சட்டத்தின் தொடர்ச்சியாக 1988 ஆம் ஆண் டு திருத்தம் ஒன்றை முன்வைத்து ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு  வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் அப்போதைய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு வேட்டைக்கு இவர்களின் வாக்குகள் அவசியமாக இருந்தது என்பதே உண்மையான காரணமாகும்.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த  இந்தியாவுக்கு திரும்பிச்செல்லல் பட்டியலில்  இந்திய கடவுச்சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டதால் இலங்கையிலேயே வாழ நேர்ந்த  91000 பேருக்கான குடியுரிமையை வழங்குவதற்காக  2003 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இந்திய வம்சாவளியினருக்கான குடியுரிமை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்போதும் இந்த மக்களை இந்திய வம்சாவளியினர் என அடையாளப்படுத்தவே இலங்கை அரசு முனைப்பு காட்டியுள்ளது.

இந்தச் சட்டத்திற்கான ஒரு திருத்தமாகவே 2009 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்கச்சட்டம் கொண்டுவரப்பட்டு,  நாடற்றவர் நிலையில் மலைநாட்டுப் பகுதியில் இருந்து வன்னி, கிளிநொச்சி  மாவட்டங்களுக்குக் குடியேறி,  அங்கிருந்து யுத்தம் காரணமாக அகதியாக தமிழ்நாட்டுக்குள் அகதிகளாகச்  சென்று சேர்ந்த  28459 பேருக்கு, இலங்கைத் திரும்பினால் இலங்கைக் குடியுரிமை வழங்கப்படும் என்ற ‘ஏற்பாடு’ செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் மலையகத் தமிழரின் குடியுரிமை சம்பந்தமான சட்டம் ஒன்றுக்கான தேவை எழவில்லை.

ஆனாலும்  1948 ல் பறிக்கப்பட்ட குடியுரிமை வெவேறு கட்டங்களில் வெவ்வேறு பெயரிலான வேறுபட்ட நோக்கங்களிலான சட்டங்களின் ஊடாக திரும்ப வழங்கப்பட்டதே தவிர,  இவர்களிடம் பறிக்கப்பட்ட குடியுரிமைக்காக மன்னிப்புக் கோரலுடன், உண்மையில் பிரஜாவுரிமையை வழங்க வேண்டும் உந்துதலுடன் உள்நோக்கத்துடன் எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை 1949 முதல் 2009 வரையான குடியுரிமையை மீள் வழங்கிய சட்டங்களின் பெயர்களைக் கொண்டே இதனை உறுதி செய்ய முடியும்.

எனவே 2009 என்பது ஏதோ ஒரு வகையில் தீர்க்கப்பட்ட மலையகத் தமிழர் குடியஉரிமைப் பிரச்சினை நிறைவுக்கு வந்த ஆண்டு எனலாம். அதேநேரம், இலங்கையில் இரண்டு தமிழ் தரப்புகள் ( இலங்கைத் தமிழர் - மலையகத் தமிழர்) மேற்கொண்டிருந்த நாட்டுரிமைக்கான போராட்டங்கள் முடிவுக்கு  வந்த ஆண்டு 2009 என்றும் கூறலாம். இந்தக் கட்டத்தில் இன்னுமொரு வரலாற்று வடிவையும் பதிவு செய்து செல்வது நல்லது.  இந்திய வம்சாவளி மலையகப் பெருந்தோட்டத் தமிழ் சமுதாயத்தினரை  இலங்கையின் உள்நாட்டவர்களாக இலங்கை  ஏற்றுக் கொள்வது இல்லை எனும் ஒரு நிலைப்பாடு குறித்த பிறிதொரு அம்சத்தையும் சுட்டிக் காட்டுவது பொருத்தமானது.

 

1). 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழு ஏற்பாட்டில் ‘சர்வஜன வாக்குரிமை’ இலங்கையின் ஏனைய இன மக்களைப் போலவே இந்திய வம்சாவளி மக்களுக்கும் கிடைத்த போதும் அது பிரித்தானியர்களின் ‘இலங்கையில்’ வழங்கப்பட்டதாக எண்ணிக்கொண்ட உள் நாட்டு சக்திகள், இந்த மக்களை உள்நாட்டு நிர்வாகத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது.
2). 1987 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டபோது அதற்கு உதவும் அடுத்த படிநிலையாக (Tier), அதுவரை நடைமுறையில் இருந்த கிராமசபை (கம்சபா) முறைமையை பிரதேச சபையாக மாற்றியமைக்க  தீர்மானம் எடுக்கப்பட்டே பிரதேச சபைகள் சட்டம் உருவாக்கப்பட்டது.

அதற்கு முன்பதான கிராமசபை (கம்சபா) முறைமைக்குள்  மலையகப் பெருந்தோட்டத்துறை மக்களை ஆரம்பத்தில் இருந்தே உள்வாங்கிக்கொள்ளாத  அதே நேரம் ‘கிராம சபை’ முறைமை மாற்றப்பட்டு, 1987 ஆம் ஆண்டு  பிரதேச சபைகள் முறையாக மாற்றப்பட்டுச்  சட்டம் இயற்றப்பட்டபோது அந்தச் சட்டத்திலேயும்  ( 33 வது பிரிவு ) தோட்டப் பகுதிகளுக்கு ‘பிரதேச சபைகள்’ சேவை வழங்க முடியாது என இருந்த கிராம சபை முறைமையில் இருந்த அந்த பாரபட்சம் அப்படியே எழுதப்பட்டது.

மாகாண சபைகள் மூலம் தமக்கு அதிகார பகிர்வைப் பெற்றுக் கொள்ள முனைந்த வடகிழக்கு தரப்பு,  மறுபக்கமாக மாற்றமுறும் கிராம சபை முறைமையில்  ஏற்கனவே உள்வாங்கப்பட்டிருக்காத  மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகத்தினருக்கு  பிரதேச சபைச் சட்டத்தில் இருந்தும் விலக்களிக்கப்படுகின்றது என்பதையும்  அதிகார பகிர்வில் அவர்கள் துண்டிக்கப்படுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவில்லை. ஒருபக்கம் 'மாகாண சபை மூலம்' தமக்கு அதிகாரப் பகிர்வை பெறும் அதே பொறிமுறைக்குள் சகோதர மலையகத் தமிழ் சமூகத்துக்கு 'பிரதேச சபையில்' கூட அதிகாரப் பகிர்வு மறுக்கப்படுகின்றது என்பது வடக்கு கிழக்கு தமிழர் தரப்பு கிஞ்சித்தும் கவனிக்கவில்லை. வடகிழக்குத் தரப்பு மாத்திரமல்ல,  அப்போது  அமைச்சுப்பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருந்த மலையகத் தலைமைகளும் வாளாவிருந்துள்ளன என்பது  மலையக அரசியலின் மிகமிக துரதிஷ்ட்டமான வரலாற்று வடுவாகும்.

இறுதியாக 2018 ஆம் ஆண்டே பிரதேச சபைகள் சட்டம் திருத்தப்பட்டு, தோட்டப் பகுதிக்கும் சேவையாற்றலாம் எனும் நிலைமை உருவாக்கப்பட்டது. சுருங்கச் சொன்னால் மலையகப் பெருந்தோட்டச் சமூகம் இலங்கையின் உள்நாட்டு நிர்வாகத்தில் அதிகாரம் பெற்ற ஆண்டு 2018 தான் என்பதுவே உண்மை.

இப்படியாக 1948 முதல் 2018 வரை வெவ்வேறு வடிவங்களில் பெற்றுக் கொள்ளப்பட்ட, பறிக்கப்பட்ட குடியுரிமையானது பல்வேறு காலகட்டங்களில் மீளக்கிடைக்க கிடைக்கப்பெற்றாலும் அவை அர்ததமுள்ள குடியுரிமையாக அல்லாமல் வாக்களிக்கும் உரிமையை மாத்திரம் வழங்கும் ஒரு பிரஜா உரிமை வடிவமாகவே வழங்கப்பட்டுள்ளது என்பதே இன்றைய மலையகத்தின் இக்கட்டான நிலைக்கு பிரதான காரணமாகும.

சுமார் நாற்பது வருடங்களாக நாடற்றவர்களாக வைக்கப்பட்டு இருந்தவர்கள் நாட்டின் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் தேசிய நிர்வாகப் பொறிமுறைக்குள் இன்னும் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. கிராமசேவகர் பிரிவுகள் முறையாக வழங்கப்படவில்லை. இன்னுமே கூட தனியா கம்பனிகளின் தோட்ட  நிர்வாகத்தால் அவர்களது சமூக நிர்வாகம் கட்டுப்படுத்தப்படுகின்றது.

காலம் தாழ்த்தி 'இலவசக் கல்வி' அவர்களுக்கு வழங்கப்பட்டாலும் பெருந்தோட்டப் பாடசாலை அலகு எனும் ஓர் அலகினால் பாரபட்சமாகவே அதன் நிர்வாகம் இன்றும்கூட மேற்கொள்ளப்படுகின்றது. அவர்கள் வாழும் பகுதிகளின் வீதிகள் ‘தோட்ட வீதிகள்’ என கணக்கிடப்பட்டு உள்நாட்டு நிர்வாக வீதி கட்டமைப்பில்  சேர்க்கப்படாமல் உள்ளது. ஆபத்தான முறைமையில்  பழைய லயன் குடியிருப்புகளுக்குமின்சாரம் வழங்கப்பட்டு அடிக்கடி அவை பற்றி தீபற்றி எரியும் ஆபத்தை எதிர் கொண்டு உள்ளன.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றாக தோட்ட சுகாதார முறைமை என ஒரு முறைமையின் கீழ் தேசிய சுகாதார முறைமைக்குள் உள்வாங்கப்படாத சமூகமாகவே வைக்கப்பட்டுள்ளனர். அதனை மாற்றுவதற்கான முழுமையான உத்தியோகபூர்வ அறிக்கை 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளபோதும் அதனை அடுத்து ஓர் அடியும் நகராமல் உள்ளது. இந்தச் சுகாதார முறைமை மாற்ற விடயம் உச்சகட்டமாக பாராளுமன்றிலும் குழு அறையிலும் பேசப்பட்டுவந்த 2015 - 2020 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார கொத்தணிகளை உருவாக்க்குவதற்கான தேசிய கொள்கை வகுப்பின்போது தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தில்,  "இந்த ஆரம்ப சுகாதார கொத்தணி முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் பெருந்தோட்டப்பகுதி யில் வாழும் குடிபெயர்ந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பமும் (Plantation ‘migrant Workers’ and their families) நன்மையடைவார்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே கொள்கை வகுப்பாளர்களின் பார்வையில் இன்னும் இலங்கையின் குடிமக்களாக அல்லாது குடிபெயர்ந்த (இந்தியாவில் இருந்து) வந்த தொழிலாளர் களாகவே (Migrant Workers ) தெரிகிறார்கள் என்பது இந்த மக்கள் இன்னும் இந்த நாட்டில் அர்த்தமுள்ள குடிமக்களாக மாற்றப்படவில்லை என்பதன் அடையாளத்துக்கான ஒரு சான்றாகும். இதனை மனதில் கொண்டு  2020 ஆண்டுக்குப் பின்னரும் நிவாரண அரசியலில்  தங்கியிருக்காது,  தமது 'அர்த்தமுள்ள குடியுரிமையைப்' ( Meaningful Citizenship) பெறுவதற்கான அரசியல் நகர்வை முன்கொண்டு செல்லவேண்டிய ஒரு யுகத்தை மலையக அரசியல் களம் வேண்டி நிற்கிறது.


மனங்கொண்ட படைப்பாக வந்திருக்கும் மக்கத்துச் சால்வை - மண்ணும் மணமும்

மல்லியப்புசந்தி திலகர்

நம்பிக்கையின் நிழல் என்ற தலைப்பில், மக்கத்துச் சால்வை வாசகர் வட்டம் எழுதிய அறிமுகக் குறிப்புடன் தொடங்குகிறது எழுத்தாளர் எஸ். எல்.எம். ஹனிபா நினைவுக் குறிப்புகள் அடங்கிய 'மக்கத்துச் சால்வை மண்ணும் மணமும்' எனும் தொகுப்பு நூல். இந்த நூல் தொகுப்பின் நோக்கம் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் அடுத்த கட்ட செயற்பாடுகள் பற்றியும் கூட விபரிக்கும் அறிமுகக் குறிப்பு நூலுக்குள் வாசகனை வரவேற்கிறது.

"உனது சுயமே உனக்குச் சொந்தம். அன்பாக சக மனிதனை மதித்து வாழ்வோம்.அடக்குமுறைக்கும் ஆணவத்திற்கும் பயந்து வாழ்வதைவிட அதை எதிர்த்து மடிதல் மேலானது" எனும்எஸ்எல்எம் ஹனிபாவின் பிரகடனத்துடன் அவரது அழகிய வண்ணப்புகைப்படம் பிரசுரம் பெறுகிறது.

அவரது வாழ்வும் பணியும் குறித்த நீண்ட கட்டுரையை ஓட்டமாவடி அறபாத் எழுதி நூலுக்குள் வாசகரை அழைத்துச்செல்கிறார். தேசிய மட்டப் போட்டிகள் வரை கலந்துகொண்ட குறுந்தூர ஓட்மவீரர் எஸ்எல்எம் என்பது பலருக்கு புதிய செய்தியாக இருக்கலாம். 1987 ல் வந்த மாகாண சபையின் உறுப்பினராக அறியப்பட்ட எஸ்எல்லெம் 1965 லேயே அரசியல் மேடை ஏறியவர் என்பதுவும் அப்படியே. தாவரவியல், விலங்கியல் தொடர்பான அவரது ஆர்வம் ஆலோசனை சேவை இயற்கையை நேசிக்கும் நெஞ்சம் என்பனவும் இந்தக் கட்டுரையில் பதிவாகிறது. பேராசிரியர் எம். ஏ. நுஹ்மானின் கட்டுரை யில் "ஹனிபா ஒரு கூர்மையான அவதானி, நிறைந்த அனுபவம் உடையவர். இந்த வயதிலும் அவருடைய நினைவாற்றல் நான் பொறாமைப்படக் கூடிய அளவுக்கு அலாதியானது. அவருடைய எழுத்தாற்றலும் அப்படித்தான்" என மனந்திறக்கிறார்.

வேதாந்தி ( சேகு இஸ்இதீன்), "ஒரு அடக்கமான அறிஞனின் ஈடுபாடு ஆன்ம தரிசனத்தை தேடுவதாயிருக்கும். ஹனிபா அதற்கு வேறானவர் இல்லை" என குறிக்கிறார்.கரிசல் காட்டுக்கு ஒரு கி.ராஜநாராயணன் என்றால் மட்டக்களப்புக்கு ஒரு எஸ்எல்எம், என்கிறார் வைத்தியரும் இலக்கியவாதியுமான எம்.கே. முருகானந்தன்.

பேராசிரியர் அ. ராமசாமி (தமிழ்நாடு ) யின் நினைவுகள ஒரு பயணக்கட்டுரையாக பதிவாகி, இறுதியில் " நேராக ஓட்டமாவடியில் வந்து இறங்கி அவர் தோட்டத்தில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி, ஆற்றில் குளித்து மீன் சுட்டுச் சாப்பிட வேண்டும். அவரது மனதில் இருந்த அழகுப் பெண்களைப் பற்றிய கதைகளையும் கேட்க வேண்டும்" என எல்லோர் மனது ஆசையையும் எடுத்துக் கூறி உள்ளார்.

பாரம்பரியமும் சரித்திரமும் கொண்ட ஒரு மனிதக் குடித்தொகையின் எழுச்சி, வீழ்ச்சி, வெற்றி, தோல்வி, குடியகல்வு, குடிப்பெயர்வு போன்றவற்றின் தகவல்களை அறியக்கூடிய இறுதி எச்சம் இவர் மட்டுமே என மு.கா.மு. மன்சூர் எழுதுகிறார்.

ஒளிபரப்பாளரான என். ஆத்மா, எஸ்எல்எம் உடனான தனது முதல் சந்திப்பு முதல் தனது நேரடி ஒளிபரப்புகளில் எஸ்எல்எம் தொடர்ச்சியாக கலந்து கொண்டதுவரையான பல சுவாரஷ்யமான பொழுதுகளை எண்ணிக் களிக்கிறார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ( தமிழ்நாடு ) மக்கத்துச் சால்வை எனும் தலைப்பிலேயே எழுதியுள்ள கட்டுரையில் "கிழக்கிலங்கைப் படைப்பாளிகள் பலருக்கும் அவர் ஞானத்தந்தை" என்றும் குறிக்கிறார்.

விரிவுரையாளர் அஷ்ஷெயக் எம். டி.எம். றிஸ்வி எஸ்எல்எம் "எதனைக் பேசினாலும் எதனை எழுதினாலும் இங்கிதம் பேசுபவர்" எனக் குறிப்பிடுகிறார். 'எஸ்எல்எம் எழுத வந்த கதை' எனும் தலைப்பில் இந்தக் கதைசொல்லியின் கதையைப் பதிவு செய்கிறார் பேராசிரியர் செ. யோகராசா.

எஸ். எல். எம். ஹனிபா வினது அரசியல், தொழில், ஆன்மீகம், இன நல்லுறவு செயற்பாடுகள் என பல பக்கங்கள் பற்றியும் குறிப்பிட்டு எழுதி உள்ளார் கலாசார உத்தியோகத்தர் ஏ. எல். பீர்முஹம்து. 'எஸ்எல்எம் எனது மாணவன்' என அவரது ஆசிரியர் ஏ. எம். அப்துல் காதர் சிறு வயது முதலான அவரது வாசிப்புப் பழக்கம் கற்பனையற்ற கதைகள் பற்றியும் விபரிக்கிறார். 'நிலம் மணக்கும் எஸ்எல்எம்மின் கதை வெளி' எனும் தலைப்பில் றமீஸ் பர்ஸான், எஸ்எல்எம் சிறுகதைகளை மதிப்பீடு செய்கிறார். வி. ஏ. ஜுனைத் எழுதியுள்ள பதிவில் லா.சா. ராவின் கதைகளின் மீதான பற்றுதலால் அவரைச் சந்திக்கச் சென்றதோடு அதனை தொடர் கட்டுரையாக பத்திரிகையில் எழுதிய தொடரையும் நினைவுபடுத்துகிறது.

எழுத்தாளர் நோயல் நடேசன் " பார்த்தசாரதியாக எஸ்எல்எம் ஹனிபா" எனும் தலைப்பில் இரண்டு பாகங்களாகவும், எஸ்ஸெல்லமும் நானும் எனும் தலைப்பில் ஜவ்வாத் மரைக்கார் ஒரு நினைவோட்டத்தையும் பதிவு செய்துள்ளார்கள்

ஹனீபா எனும் ஞானத்தந்தை" - இளைய அப்துல்லாஹ், "உங்களோடு இருபது ஆண்டுகள்" நபீல், 'கிராமிய அழகியல்' - சாஜித், 'தேர்ந்த கதைசொல்லி' - சிராஜ்மஷ்ஹூர், 'பெருவிருட்ஷம்' - அனார், எஸ்.எல்.எம் ஒரு முன்னோடியின் சுவடுகள் - கருணாகரன், 'வாழ்வை மீண்டும் வாழ்ந்துபார்த்தல்' - டி.சே. தமிழன், 'மக்கத்துச்சால்வை, அவளும் ஒரு பாற்கடல் தொகுதிகளை முன்வைத்து' - அம்ரிதா ஏயெம், எஸ்எல்எம் மாமா - சப்ரி, நம்முன், கடந்த காலத்தின் வாழ்வும் இறந்த காலத்தின் நிலமும் மனிதர்களும் - எம். பௌசர், எஸ்எல்எம் பற்றி - ஹசீன், இன நல்லுறவுக்கு ஒரு ஆவணம் எஸ்எல்எம்- எஸ். நளீம் என சமகால இலக்கியச் செயற்பாட்டாளர்களின் கட்டுரைகள் சுவாரஷ்யமிக்கவை.

எழுத்தாளர் முருகபூபதி, விரிவுரையாளர் ஏ. எம். றியாஸ் அகமட் ஆகியோரின் கட்டுரைகள் இலக்கியத்தோடு இயற்கை மீது பற்று கொண்ட எஸ்எல்எம் பற்றி பேசுகின்றன.

தமயந்தி ( நோர்வே ) சீவகன் பூபாலரட்ணம் ( லண்டன் ), இளங்கோ, தேவமுகுந்தன், மல்லியப்புசந்தி திலகர் , எம்எச்எம் இத்ரிஸ் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகள் எஸ்எல்எம் உடானான தமது உறவாடலின் ஆழத்தைப் பதிவு செய்வன.SLM Haniffa : An Icon of the Eastern Tamil - Muslim Heartland எனும் ஆங்கிலக் கட்டுரையை MLM Mansoor எழுதி உள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன் ( தமிழ்நாடு ) எஸ்எல்எம் ஹனீபா எனும் தலைப்பில் எழுதி இருக்கும் கட்டுரையில் "நான் சமீபகாலத்தில் அவரைப்போன்ற உயாராற்றல் ஒவ்வொரு கண்மும் பீரிடும் ஒரு மனிதரைப் பார்த்ததில்லை" என பதிவு செய்கிறார். எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தனது கட்டுரையை சுகம் தரும் நினைவுகள் எனும் தலைப்பில் எழுதியுள்ளதோடு எஸ்எல்எம் பற்றிய நினைவுகள் நீண்டவை, சுகமானவை என பதிவு செய்கிறார்.

இத்தகைய சுகமான அனுபவங்களாக எஸ்எல்எம் தனது வாழ்வு நினைவுகளை நினைந்தெழுதியுள்ள ஐந்து கட்டுரைகளுடன் சுந்தர ராமசாமி, செல்வராசா, பித்தன் ஷா, உமா வரதராஜன், சோலைக்கிளி, அன்புமணி நாகலிங்கம், எஸ். பொன்னுத்துரை ( எஸ். பொ) போன்றோர் எஸ்எல்எம்முக்கு எழுதிய கடிதங்களும் தொகுப்பு முழுவதும் விரவிக்கிடங்கும் நிழற்படங்களும் தொகுப்பின் பெறுமதிக்கு வலு சேர்ப்பன.

நிழற்படங்களில் மக்களுக்கு நிகராக மாடுகள், ஆடுகள், மான்களுடன் எஸ்எல்எம் எடுத்துக் கொண்டதான படங்கள் சம அளவில் போட்டியிடுவது எஸ்எல்லத்தின் உள்ளத்தைக் காட்டுகிறது.

ஓவியர்கள் புகழ், றஷ்மி, நளீம்,பிருந்தாஜினி,கோமதி சரவணன் , ஸஜ்ஜாத்,ஏ.எம். சமீம் வரைந்த எஸ்எல்எம்மின் முகத்தோற்றங்களையும் ஈரிஏ ஸஜ்ஜாத் ஒரு பக்கத்தில் தொகுத்தளித்துள்ளார். இத்தனை ஆளுமைகளின் நினைவுப் பதிவுகளுடன் கடிதங்கள், படங்கள், ஓவியங்கள் குறிப்புகள் என ஓரிடத்தில் குவியச்செய்த இந்தத் தொகுப்பில் எஸ்எல்எம்மின் 'கடுகு' சிறுகதையும் சேர்க்கப்பட்டுள்ளது.

இத்தனை உள்ளடக்கங்களையும் கொண்டதாக ஒரு தொகுப்பினைக் கொண்டு வந்து ஓர் இலக்கியவாதியை வாழும்போதே வாழ்த்துவதற்கு பெரும் மனது வேண்டும். அந்த மனங்கொண்ட நல்லிதயங்களின் ஒன்றிணைந்த உழைப்பால் உருப்பெற்றுள்ள 'மக்கத்துச்சால்வை - மண்ணும் மணமும்' , எஸ்எல்எம் ஹனிபா' எனும் மானுடத்தின் வாழ்க்கையின் ஊடாக ஒரு வரலாற்றுப் பதிவு செய்யும் தொகுப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வாசிக்க மட்டுமல்ல வைத்துப் பாதுகாக்கவும் வேண்டிய வரலாற்று ஆவணம் இது.


சகவாழ்வியம் -இலங்கையை மையப்படுத்திய உரையாடல்

- மல்லியப்புசந்தி திலகர்

தனது சிந்தனைத் தளத்தை மொழிப்புலமையோடு கலந்து இலக்கியப் பிரதியாக்கி இறக்கி வைக்கும் புதிய முயற்சியாக வெளிவந்திருக்கும் நூல் 'சகவாழ்வியம்'.

பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் ஊடகவியலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர் எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத், 'இலங்கையை மையப்படுத்திய உரையாடல்' எனும் உப தலைப்போடு எழுதியிருக்கும் இந்த நூலை , முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மையம் வெளியீடு செய்துள்ளது. பெற்றோருக்குப் பின் தன்னை வளர்த்த மாமாவுக்கும் சித்திக்கும், தனது தூண்டல் புள்ளிகளான நண்பர்களுக்கும் இந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார் நூலாசிரியர்.

ஒற்றைத் தன்மை, பன்மைத்தன்மை, பல்லினத்தன்மை முதலான விடயங்கள் தத்துவஞானிகள், கல்வியியலாளர்கள், சிந்தனையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள காலகட்டம் ஒன்றில், இலங்கையை மையப்படுத்தியதாக இத்தகைய நூல் ஒன்றை எழுதுவது வரவேற்கத்தக்கது.

பிஸ்ரின் பேசப்படாத விஷயங்களைப் பேசத்துணியும் ஓர் ஊடகவியலாளர். பெண்களின் விருத்தச் சேதனம் தொடர்பிலும், இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பது பற்றியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையே தயாரித்து நெறிப்படுத்தியவர். வயோதிப ஆண்கள் ஏன் பாலியல் வன்புணர்வு நோக்கி உந்தப்படுகிறார்கள் என்பதையும் பொது வெளியில் உரையாடத் துணிந்தவர்.

அவரது துணிச்சலான முயற்சிகளில் ஒன்று இந்த சகவாழ்வியம். அவரது இரண்டாவது நூல்.106 பக்கங்களைக் கொண்ட இந்தச் சிறியநூலில் 10 தலைப்புகளில் இலங்கையின் சகவாழ்வியம் பற்றி உரையாட முனைகிறார்.

ஒற்றைத் தன்மையும் பன்மைத்துவமும், பன்மைத்துவமும் மனிதனும், இனம், மதம், சாதியம் கலாசாரம் என்பவற்றுள்ளான பன்மைத்துவ புரிதல், இலங்கையின் சூழல் அமைவிடம் மற்றும் இனம்சார் பன்மைத்துவம், இலங்கைச் சூழலும் பண்பாட்டு பன்மைத்துவமும், இலங்கையின் இன முரண்பாடு, இலங்கையின் அரசியல் பன்மைத்துவத்தின் 51 நாள் செயற்பாடு , சகவாழ்வு, சகவாழ்வியம், இலங்கையின் சகவாழ்வு பற்றிய விமர்சனங்களும் முன்மொழிவுகளும் எனும் பத்து தலைப்புகளில் 'சகவாழ்வியம்' குறித்த உரையாடலைப் பதிவு செய்ய முனைகிறார் நூலாசிரியர்.

உலகம் நிறங்களால் அற்றதாக, முழுவதுமே கருப்பு நிறமாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என வாசகர்களைக் கற்பனச் செய்யக் கோரி, அதனூடே ஏற்படும் மன உணர்வில் இருந்து பன்மைத்துவம் என்பதனை அழகியல் உணர்வோடு உணரச் செய்கிறார். நிறங்களால் பல வண்ணங்களால் ஆன உலகுதானே அழகாய்த் தெரிகிறது. எனவே பன்மைத்துவமே அழகானதாக இருக்கும் என வித்தியாசங்களின் முக்கியத்துவத்தை உணரச் செய்வதன் ஊடே ஆரம்பமாகிறது நூல்.

வித்தியாசங்களினாலேயே உலகம் அமையப் பெற்றுள்ளது. பன்மைத்துவம் என்பது இயற்கையில் இயல்பாகவே தோற்றம்பெற்ற ஒரு விடயமாகவுள்ளது.எனவே பன்மைத்துவம் என்ற கதையாடல் உலகின் இயங்கியலின் எல்லாத்தளங்களிலும் ஊடுருவியுள்ள பல கோணங்களில் நின்று கதைக்கப்படவேண்டிய நீண்ட உரையாடலுக்கான விடயமாக உள்ளது என்கிறார்.

மனிதனின் பன்மைத்துவத்தை உரையாட வரும்போது, உயிரினம் ஒன்றாயினும் அவை வாழும் சூழல், இட அமைவு என்பவற்றுக்கு ஏற்ப பல்வகைத்தனமைப் பெறுவதை, ஒரே உயிரினம் உலகின் இரண்டு பிரதேசங்களில் எவ்வாறு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளன என்பதைக் கொண்டு விளக்குகிறார்.

மனித இனமானது இயற்கை அமைவியல், காலநிலை, சூழல், மரபணு என்பவற்றால் வேறுபடுவதையும் அதனால் மானிடவியல் ஆய்வாளர்கள், மனிதனின் தோற்றம், தோல்,கண்ணின் நிறம், மண்டையோட்டு அமைப்பு இரத்தத்தொகுதி என்பவற்றின் அடிப்படையில் மங்கோலிய இனம், காக்கேஷியஸ் இனம், நீக்ரோ இனம் என மூன்று வகையாக வகுத்துள்ளனர் என்கிறார்.

மனிதனின் தோற்றம் முதற்கொண்டு மனிதப்பரவல் பூமியில் ஆரம்பமான காலத்தில் இருந்தே இனம், மதம், சாதியம், கலாச்சாரம், பண்பாடு என்ற புரிதல், வித்தியாசமான தளங்களில் இருந்து தோற்றம் பெற்றுள்ளதைப் போலவே, கருத்தியல், சிந்தனைசார் புதுமைகளையும் ஏற்படுத்தியுள்ளன.

நவீன தொழிநுட்ப வளர்ச்சியை அடுத்து மதங்கள் மீது மனிதர்கள்கொண்ட ஆதிக்கம் குறைந்து, இயற்கையில் பொதிந்த ரகசியங்கள் விஞ்ஞானத்தின் ஊடாகக் கட்டுடைப்புச் செய்யப்பட்டதால், மத்த்தின் மீது மனிதன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு தகர்க்கப்பட்டது என்பது போன்ற புரிதல்களுடன் இலங்கையின் பல்லினத்துவம், பன்மைத்துவம் பற்றி அலசி ஆராய்கிறார்.

இலங்கையின் சூழல் அமைவிடம் மற்றும் பன்மைத்துவம் இயற்கையாகவே தோற்றம் பெற்றது என்பதனை அதன் தரைத்தோற்ற சூழல் அமைவில் இருந்தே அடையாளம் காணுகிறார். இலங்கை ஒரு தீவானபோதும் தரைத்தோற்றம் உலக அரங்கில் இலங்கைக்கு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது என்கிறார்.

இலங்கையில் வாழ்கின்ற மக்களைப் பொறுத்தவரை ஒரே இனம், மதம், கலாசாரம், பண்பாடுகள் என அமையப் பெறாமல் பன்முகப்பட்ட கலாசார விடயங்கள் உள்வாங்கப் பட்டு இருப்பதால் தனித்துவத்தையும் வித்தியாசத்தையும் அடையாளப்படுத்தி நிற்கிறது. பல்லின கலாசாரம் உள்ளடக்கிய இலங்கைப் போன்ற நாடுகளில் கருத்தியல் ரீதியாகவும் சிந்தனா ரீதியாகவும் பல்வேறு முரண்பாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை வரலாற்று சம்பவங்கள் சான்று பகர்கின்றன.

இலங்கைச் சூழலில் பண்பாட்டு பன்மைத்துவம் வாழ்வியலுக்கான அடையாளமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு இனத்தவரது தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் கருவியாக பண்பாடு அமைந்துள்ளது. சிங்களவர்கள் ஆயினும் கண்டிய சிங்களவர்களுக்கும் தென்பகுதி சிங்களவர்களுக்கும் பண்பாட்டு வித்தியாசங்கள் காணப்படுகின்றன. தமிழர்களில் வடபகுதி, தென்பகுதி, மலையகத் தமிழரிடையே பண்பாட்டு அடிப்படையில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. கிழக்கு முஸ்லிம்களினதும் கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்களினதும் பண்பாடுகளில் பாரிய இடைவெளி காணப்படுகிறது.

இவ்வாறு இனரீதியாக பண்பாடு வேறுபடுவது மாத்திரமின்றி வேறுபட்ட குழுக்களுள்ளேயும் வேறுபட்ட பண்பாட்டுத் தன்மைகள் காணப்படுவதையும் வலியுறுத்துகிறார். கணிதத்தில் 0 ( பூச்சியம்) எவ்வாறு முதன்மையானதோ அவ்வாறே மானிடவியலிலும் பண்பாடு எனும் கருத்தியல் முதன்மையானதாக காணப்படுவதாக சமூகவியலாளர்கள் கருதுவதாக சுட்டிக் காட்டுகின்றார்.

இலங்கையில் இன முரண்பாடு தொடர்பாக பேசும்போது வரலாறு நெடுகிலும் அரசியல் தலைவர்கள் விட்ட பாரிய தவறுகளைப் பட்டியல் இட்டுச் செல்கின்றார்.அரசியல்வாதிகளின் பிற்போக்கான குறுகிய சிந்தனைகளினாலேயே இந்த பன்மைத்துவ நாடு பல தசாப்த காலமாக இரத்தக் காடாக மாறியது.

பௌத்த பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு குழு ஒன்று முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்னால் சென்றபோது அதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததனால் அது இனக்கலவரமாக மாறியது. அநகாரிக்க தர்மபால போன்ற அரசியல் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் விரோதப் பிரச்சாரமே இத்தகைய கலவரங்களுக்கு காரணம் என ‘பன்சலைப் புரட்சி’ எனும் நூலில் குறிப்பிட்டு இருப்பதாகவும் சுட்டிக் காட்டுகின்றார்.

“மொழி ஒன்று என்றால் நாடு இரண்டு, மொழி இரண்டு என்றால் நாடு ஒன்று” என்ற புகழ்பெற்ற வாக்கியத்தை முன்வைத்த கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வாதான், சாதாரண சட்டமாக இருந்த தனிச் சிங்களச் சட்டத்தை 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டமாக உயர்த்தும் அரசியல் யாப்பை எழுதினார் என்பதை மேற்கோள் காட்டுகிறார்.

இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் இயற்கைக் கொடுத்த வரமாக பன்மைத்துவம் எல்லாத்தளங்களிலும் கதையாடப்படும் விடயமாகவுள்ளது. இந்தச் சூழலில் மற்றமைகளின் இருப்பை ஏற்றுக்கொண்டு இணைந்து வாழவேண்டிய கடப்பாடு, தேச மக்கள் அனைவருக்கும் கடமையாகவுள்ளது. மேற்படி இனத்தவர்கள் அளவில் வேறுபட்ட போதிலும் தமக்கான தனிப்பட்ட இயல்புகளோடு இலங்கை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்னறர்.இந்த வித்தியாசங்களைப் புரிந்து கொண்டு, வித்தியாசங்களை ஏற்றுக் கொண்டு வாழப்பழகும்போதே சகவாழ்வு சாத்தியமாகும்.

இனங்கள் மதங்களுக்கு இடையில் இணைந்து வாழ்தல், சேர்ந்து வாழ்தல், புரிந்து கொள்ளுதல் என்ற கருத்தியல் மிகவும் பரந்துபட்ட விரிந்த தளத்துக்கு இட்டுச் செல்லும் ஒரு தத்துவமாகவே சகவாழ்வியம் ( Co - Existentialism) அமையப் பெற்றுள்ளது.

இவ்வாறு சிக்கலான ஒரு விடயப்பரப்பை கருப்பொருளாகக் கொண்டு ஒரு நூலை இளைய தலைமுறை எழுத்தாளர் ஒருவர் 2021 ஆம் ஆண்டு வெளியீடு செய்கிறார் என்பது நம்பிக்கை தருவதாகவே உள்ளது.

எனினும் இந்த சகவாழ்வியத்தை வாழ்க்கைக் கோலமாகவும் ( Life Style ) அரசியல் செல்நெறியாகவும் ( Political Trend ) ஆக்கிக் கொள்வது அடுத்த தலைமுறை ஏற்கவேண்டிய சவாலாக உள்ளது. அத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் துணிவைப் பெற இத்தகைய நூல்களை வாசிப்பதும் அது சார்ந்து யோசிப்பதும் அவசியம்.
*


‘அக்கினிப்பூக்கள்’அந்தனி ஜீவா

மல்லியப்புசந்தி திலகர்

அந்தனிஜீவா எனும் பெயரை இலங்கை, தமிழ்நாடு, புலம்பெயர் இலக்கிய சூழலில் அறியாதோர் இருக்க வாய்ப்பில்லை. இந்திய இராணுவத்தில் பணியாற்றியபோது பர்மா சென்ற வீரர் கொழும்புக்கு வந்த சமயம் கொழும்பில் வாழ்ந்த பெண்ணை காதலித்து மணமுடிக்க அவர்களது இரண்டாது குழந்தையாகப் பிறந்தவர் அந்தனி ஜீவா.

கொழும்பு, கிருலப்பணை சுவர்ணா பாடசாலையிலும் பம்பலப்பிட்டி சென். மேரிஸ் பாடசாலையிலும் கற்றவர். தனது பாடசாலை ஆசிரியர்களான திரு. சந்தானம், திருமதி. எம். பேர்னாண்டோ ஆகிய இரு ஆசிரியர்களை மறவாமல் நினைவு கூரும் அவர், தனது பாடசாலை மூத்த மாணவரான கலைஞர் ஜே.பி.ராபர்ட், கலைஞர் ராஜபாண்டியன் ஆகியோரையும் தனது ஆரம்ப கால கலை வழிகாட்டிகளாக கூறுகின்றார்.

இலக்கியத்துறையில் மட்டுமல்லாது ஒடுக்கப்பட்டோர் அரங்கு, பிரயோக அரங்கு, பங்குபற்றல் அரங்கு, முதலான துறைகளோடு ஊடாட்டம் கொண்டு பங்களிப்பு செய்துள்ள அந்தனி ஜீவா ஒரு ‘வினையி’ (Activist) எனும் வகிபாகம் கொண்டவர் எனக்குறிக்கின்றார் பேராசிரியர் சபா.ஜெயராஜா.
சதா சுறுசுறுப்பாக இங்கிக்கொண்டு இருக்கும் அந்தனிஜீவா ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம் போன்றவர். எப்போதும் தகவல்களை விரல் நுணியில் வைத்திருப்பார். தொடர்பாடலில் வல்லவர். இலங்கைக்குள் எந்தத் திசை இலக்கியம் என்றால் என்ன? எந்த மொழி இலக்கியம் என்றால் என்ன? தமிழ் நாட்டில் எந்த அணி இலக்கியம் என்றால் என்ன? இவரது தொடர்பு நிச்சயமாக அவர்களுடன் இருக்கும்.

 

‘தலைநகரில் தமிழ் நாடக அரங்கு’ எனும் இவரது நூலுக்கு, ‘தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் எழுதி இருக்கும் குறிப்பு இவ்வாறு அமைகிறது: ‘இலங்கை நாடக மேடையின் வளர்ச்சிக்கு பங்களித்த அத்தனை பேரையும் ஒருவர் விடாமல் நினைவு கூர்ந்து பதிவு செய்திருக்கும் அந்தனிஜீவாவே ஓர் அற்பதமான கலைஞர். சுமார் 16 மேடை நாடகங்களை மேடை ஏற்றியவர். வீதி நாடகங்களையும் நடாத்தியவர்.

அந்தனிஜீவா போன்ற அயல்நாட்டு தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்றோரை தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் ‘கலைமாமணி’ போன்ற விருதுகளுக்கும் பாராட்டுகளுக்கும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மனிதனின் அடையாளம் கடவுச்சீட்டாக இருக்க முடியாது. மொழியாகததான் இருக்க முடியும்’. இவ்வாறு தமிழ்நாட்டிலும் தனக்கான ஒர் அங்கீகாரத்தைக் கொண்டிருப்பவர் அந்தனி ஜீவா. இவர் பல நாடகங்களை எழுதியவர், இயக்கியவர், தயாரித்தவர் என்ற போதும் ‘அக்கினிப்பூக்கள்’ மிக மிக பிரபலமான நாடகம். அந்த நாடகம் பின்னர் நூலாக வெளிவந்தபோது 1999 ஆம் ஆண்டு சிறந்த நாடகப்பிரதிக்கான சாகித்திய விருதினை வென்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைக் காலம் முதலே தனது படைப்புகளை பத்திரிகைகளுக்கு எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ள அந்தனிஜீவா, நீர்கொழும்பில் இருந்து வெளிவந்த ‘மாணவர் குரல்’ சஞ்சிகையில் ஆரம்பித்து, பாடசாலை நண்பர்களுடன் இணைந்து ‘கரும்பு’ எனும் கையெழுத்துப்பிரதியை நடாத்தி வந்துள்ளார். ஓவியர் சாமியும், பாடகர் முத்தழகுவும் கூட இவரது பள்ளிக்கூட நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில் வீரகேசரி, தினகரன் போன்ற முன்னணி பத்திரிகைகள், இதழ்களில் எல்லாம் எழுதிவந்தவர். தினபதி – சிந்தாமணி பத்திரிகைகளோடு பணியாற்றிய காலத்தில் பத்திரிகை ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் , தன்னை புடம் போட்டார் என நினைவுகூர்கிறார். பின்னாளில் ‘குன்றின் குரல்’, ‘கொழுந்து’ போன்ற சஞ்சிகைகளின் பொறுப்பாசிரியராக அந்தனிஜீவா செயற்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சம்.

இளம் வயது முதலே சிவப்பு நிறத்தில் ஆர்வம் கொண்ட தான், இடதுசாரி அரசியல் அணி சார்ந்து தான் செயற்பட்ட விதம் குறித்தும் தனது அனுபவ பகிர்வு நூலில் பதிவு செய்துள்ளார். டொமினிக் ஜீவா போன்றே இவரும் இந்திய இடதுசாரி தலைவர் ஜீவானந்தன் மீதான பற்றுதலால் தனது அந்தனியுடன் ஜீவாவை இணைத்துக் கொண்டவர்தான். இங்கா சமசமாஜ கட்சியில் தன்னை இணைந்துகொண்டவர், அதன் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றியுமுள்ளார்.

இதன்போது கொல்வின் ஆர.டி சில்வா, என்.எம்.பெரேரா , வாசுதேவ நாணயக்கார போன்ற அரசியல் தலைவர்களுடன் பழகும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இதன் நீட்சியாக 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் வேட்பாளராகவும் அந்தனிஜீவா பெயரிடப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கட்சியின் ‘தேசம்’ பத்திரிகையின் ஆசிரியர் பீடத்திலும் அங்கத்தினர், ஆலோசகர்.

‘மலையகம் எனது பிறப்பிடமல்ல. ஆனாலும் மலையக மண்ணில் பிறந்தவர்களைவிட அந்த மண்ணின் மீது நேசம் கொண்டவன். எனக்கு அந்த மலையக மண்ணின் மீது பாசத்தையும் நேசத்தையும் ஊட்டியவரக்ள இருவர். ஒருவர் இலங்கைத் திராவிடக் கழகப் பொhதுச் செயலாளர் நாவலர். ஏ.இளஞச்செழியன், மற்றவர் மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை. சி.வி. வேலுப்பிள்ளையுடனான தொடர்பு காரணமாக கிழமைக்கு இரண்டு நாட்களாவது சந்தித்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். மலையக இலக்கியத்தின் முதல்வரும் முன்னோடியுமான தேசபக்தன் கோ.நடேசய்யரின் பணிகள் குறித்த பல தகவல்களைச் சி.வி எனக்குச் சொல்லுவார்’ என தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் அந்தனிஜீவா.

உண்மையில் மலையக தேசப்பிதா கோ.நடேசய்யர் அவர்களைப்பற்றி அந்தனிஜீவா அளவுக்கு எடுத்துக்கூறி நின்றவர்கள் வேறு யாருமில்லை எனும் அளவுக்கு அவரது பணிகளை பல தளங்களில் பேசியவராக அந்தனிஜீவாவை அடையாளம் காட்ட முடியும். தேசபக்தன் கோ. நடேசய்யர், பத்திரிகையாளர் நடேசய்யயர் ஆகிய நூல்களை எழுதிய சாரல்நாடனும் கூட அந்தனிஜீவாவின் உந்துதலும் பங்களிப்பும் இல்லாமல் தனது ஆய்வு முயற்சிகள் சாத்தியமான ஒன்று அல்ல என்றே பதிவு செய்துள்ளார். கோ.நடேசய்யரின் ‘அந்தரப்பிழைப்பு’ நாடகத்தை குமரன் பதிப்பகம் ஊடாக அந்தனிஜீவா பதிப்பாசிரியராக இருந்து மறுபதிப்பு (2017) செய்துள்ளார் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.

மலையகத்துடனான இவரது ஈடுபாடு காரணமாக மலையக கலை இலக்கிய பேரவையின் செயலாளராக இருந்து ஆற்றிய இலக்கிய பணிகள் விரிவாக பேசக்கூடியவவை. பேரவை, கொழும்புத்தமிழ்ச் சங்கத்தில் ஒழுங்கு செய்த பாராட்டு நிகழ்வு ஒன்றிலேயே 1983 ம் ஆண்டு பேராசிரியர் க.கைலாசபதி முன்னிலை வகிக்க சி.வி. வேலுப்பிள்ளையை 'மக்கள் கவிமணி' என விருதளித்து கௌரவம் செய்துள்ளனர்.

1996 ஆம் ஆண்டு மாகாண கல்வி அமைச்சராக வி.புத்திரசிகாமணி செயற்பட்ட காலத்தில் இடம்பெற்ற ‘மலையகத் தமிழ் ஆராய்ச்சி’ மாநாட்டுக்கான ஒழுங்கமைப்பு குழுவின் தலைவராக தி.வே.மாரிமுத்து செயற்பட, செயலாளராக அந்தனி ஜீவா செயற்பட்டார் என்பது முக்கியமாக பதிவு செய்யப்படவேண்டியது. இந்த மாநாட்டின் முக்கிய பங்கேற்பாளராக பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் கலந்துகொண்டு உரை வழங்கி இருந்தார். பின்னாளில் மாநாட்டுக் கட்டுரைகளை தொகுத்து நூலாக்கியதிலும் அந்தனி ஜீவாவின் பங்களிப்பு போற்றுதற்குரியது.

ஈழத்தில் தமிழ் நாடகங்கள் (1981), அன்னை இந்திரா (1985), காந்தி நடேசய்யர் (1990), சுவாமி விபுலானந்தார்(1992), The Hill Country in Sri Lanka Tamil Literature (1995), மலையகமும் இலக்கியமும் (1995), மலையக மாணிக்கங்கள்(1999), அக்கினிப்பூக்கள் (1999) சி.வி.யும் நானும் (2001), மலையகத் தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு (2002), மலையகக் கவிதை வளர்ச்சி (2003), திருந்திய அசோகன்-சிறுவர் நாவல் (2003), நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம் (2004), மலையக தொழிற்சங்க வரலாறு (2005), சிறகு விரிந்த காலம்(2007), அ.ந.க ஒரு சகாப்தம்(2009), பார்வையின் பதிவுகள் (2010), தலைநகரில் தமிழ் நாடக அரங்கு(2013), ஒரு வானம் பாடியின் கதை (2014) போன்ற நூல்களுடன், சி.வி.வாழும்போதே ‘சி.வி.சில நினைவுகள்’ எனும் நூலை எழுதியவர். சி.வி நூற்றாண்டு நினைவையொட்டி ‘சி.வியும் நானும்’ என 2002 ல் வெளியிட்ட நூலை திருத்திய மறுபதிப்பாக 2014ஆம் ஆண்டு வெளியிட்டது மாத்திரமின்றி அவருக்குக் கொழும்புத் தமிழச்சங்கத்தில் விழாவும் எடுத்தவர்.

அவரது நாடகம், அனுபவப்பகிர்வு, பயணக்கட்டுரைகள் தவிர்ந்த ஏனைய நூல்கள் அளவில் மிகச்சிறியதே. அவை ஆழமான விடயங்களைச் சுமந்துவராத போதும், அந்த விடயதானங்கள் சமூகத்தளத்தில் பேசப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவன, அதற்காக அடியெடுத்துக் கொடுப்பன. மலையக பெண்கவிஞர்களின் தொகுப்பு, பெண் சிறுகதையாளர்களைக் கொண்டு தனது அம்மா நினைவாகத் தொகுத்த ‘அம்மா’ எனும் பெயரிலான தொகுப்பு முதலானவையும் இத்தகைய முயற்சிகளே. மலையகம் வெளியீட்டகம் என நூல் பதிப்பு முயற்சிகளிலும் இறங்கியவர்.

இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பரவலாக இலக்கியவாதிகள், கலைஞர்களுடன் தொடர்புகளைப் பேணுவதில் இவருக்கு தனியிடமுண்டு. குறிப்பாக கடிதம் எழுதுவதன் மூலம் நட்பை, உறவை, தோழமையை தொடர்பில் வைத்திருக்கும் உயர்வான பண்பு அந்தனிஜீவாவுக்கு உரியது எனலாம். புதிய எழுத்தாளர்கள், கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது, அவர்களுக்கு கடிதங்கள் எழுதி ஊக்குவிப்பது எனும் வழக்கத்தை தனதாக்கிக் கொண்டவர். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினராக, ஆட்சிக் குழு உறுப்;பினராக தொடர்ந்து இலக்கிய பணியில் தன்னை இணைத்துக்கொண்டவர்.

அந்தனிஜீவா நிற்கும் சூழல் எப்போதும் கலகலப்பாக இருக்கும். சதா ஏதாவது ஒரு விசயத்தை பேசிக்கொண்டு இருப்பவராக, தகவல் களஞ்சியமாக தன்னை தகவமைத்துக்கொண்டவர். தனது அரைநூற்றாண்டுகால பொது வாழ்க்கை அனுபவங்களை ‘ஜீவநதி’ இதழில் தொடர் கட்டுரையாக எழுதி வந்தவர், அதற்கு இட்ட தலைப்பு ‘ஒரு வானம் பாடியின் கதை’. அதனை ‘ஜீவநதி’ நூலாகவும் பதிப்பித்து அவருக்கு கௌரவம் செய்துள்ளது. அக்கினிப்பூக்கள் தந்த அந்தனிஜீவா எனும் வானம் பாடி, கலை இலக்கிய வானில் கானம் பாடி என்றும் சிறகடிக்கும் என்பது திண்ணம்.


தொ. தே. சங்கத்தையும் என்னையும் இணைத்து கதையாடல்கள் இடம்பெறுவது தவிர்க்க இயலாதது

 

- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ்

உரையாடல் : சாம்பசிவம் சதீஷ்குமார்.

கடந்த பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த நீங்கள் இப்போது அமைதியாக இருப்பதன் காரணம் என்ன?

நான் அமைதியாக இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்களாக வரப்பிரசாதம் பெற்றுக் கொண்டு சம்பளம் வாங்கிக் கொண்டு அங்கே செல்லாது இருப்பவர்களைவிட அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு சம்பிரதாய உரைகளை ஆற்றுபவர்களைவிட அதிகளவில் சமூகத்தளத்தில் பேசிக்கொண்டு இருக்கிறேன். அவை வெறும் வாய்ச் சவடால்களாகவோ அல்லது அவசரத்தில் ரயிலைப் பிடிக்க ஓடுவது போன்றோ அல்லாமல் நிதானமான ஆய்வுப் பதிவுகளாக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகத்தளத்திலும் உரையாடல் தளத்திலும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன. மலையக சமூகத்தின் அரசியல், சமூக, கல்விக், கலை கலாசாரம் பண்பாடு , பொருளாதாரம் சார்ந்த ஆய்வு ரீதியான எழுத்துக்களாகவும் உரைகளாகவும் அவை அமைகின்றன. நான் எப்போதும் போலவே மலையக விடயங்களில் இற்றைப்படுத்தலுடன் (Update )இருக்கிறேன்.

இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?

2006 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த எனது ஆலோசனை சேவை நிறுவனம் கடந்த ஐந்தாண்டு காலமாக அரசியல் பணிகள் காரணமாக செயற்படாமல் இருந்தது. அதனை மீண்டும் இயங்கச் செய்து பணி செய்து வருகிறேன். ஊடகங்களில் பல கட்டுரைகளை எழுதி வருகிறேன். கொவிட் சூழல் காரணமாக எழுந்திருக்கும் இணைய வழி கலந்துரையாடல்களில் வாரந்தோறும் ஒரு தளத்தில் பேசுகின்றேன். அவற்றில் சிலவற்றை நானே ஒழுங்கும் செய்கிறேன்.

தொழிலாளர் தேசிய சங்கத்தில் மீண்டும் இணையப் போவதாக செய்திகள் கசிகின்றனவே...

அது பற்றி நான் உங்கள் உதயசூரியன் பத்திரிகைக்கே இதற்கு முன்னர் தெளிவாக எனது நிலைப்பாட்டைத் தெரிவித்து உள்ளேன். பாய்ச்சல் காட்ட மாட்டேன் என. தொழிலாளர் தேசிய சங்கத்தின் இரண்டாம் எழுச்சி எனபது திலகர் இல்லாவிட்டால் நிகழ்ந்தே இருக்காது. எனவே என்னையும் சங்கத்தையும் இணைத்து கதையாடல்கள் இடம்பெறுவது தவிர்க்க இயலாதது. நான் இப்போது நாகரீகமாக அதில் இருந்து விலகி இருக்கும் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டு ஒதுங்கி இருக்கிறேன். அந்த நாகரீகம் கருதியே சங்கத்தில் உள்ள பலரும் என்னோடு உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் தோட்டக் கமிட்டி தலைவர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள், அமைப்பாளர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், உயர்பீட உத்தியோகத்தர்கள் என எல்லோரும் அடங்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் 5 முதல் பத்துப் பேர்வரையான ஒரு குழுவினர் மாத்திரமே என்னோடு நேரடியாக பேசுவதில்லை.

ஆனால், அவர்கள் சதா என்னைப் பற்றி சிந்தித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவருகிறது. அந்த உரையாடலில் கலந்து கொள்ளும் யாராயினும் ஒருவர் எனக்கு அதனை அறிவிக்கிறார். இது எப்படியோ நடந்து விடுகிறது. இது தவிர நானாக யாரிடமும் எந்த விசயத்துக்ககவும் பேசவும் இல்லை அணுகவும் இல்லை. அதற்கான எந்தத் தேவையும் இப்போது எழவில்லை.

அப்படியாயின் நீங்கள் மீளவும் வந்தால் சிலர் விலகுவதாக தலைமைக்கு அறிவித்து உள்ளதாக தகவல் வந்துள்ளதே...

அந்த ஒரு சிலரைத்தான் நான் முன்னர் குறிப்பிட்டேன். அவர்களை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் தங்களது எதிர்ப்பை தன் பெயர் கொண்டு வெளிப்படுத்த முடியாத கோழைகள். ஏனெனில், 'இப்படி ஒரு செய்தி வந்துள்ளது. நான் எதிர்ப்பு இல்லை' என பலர் எனக்கு அழைப்பு எடுத்துப் பேசினார்கள். அவர்களிடம் நான் சொன்னது, 'இப்படி என்னிடம் பேசுவதற்கே உங்களிடம் நேர்மை இருக்கிறது. அதனால் நீங்கள் நிச்சயம் அந்தப் பட்டியலில் இல்லை' என்பதுதான். அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் கடைசிவரை அவர்கள் பெயரை வெளியே சொல்லாமல் செய்திகளைக் கசியவிடும் கோழைகள்.

அந்தக் கோழைகளை தலைமைக்கே கூட அடையாளம் காண முடியாது. அத்தகைய கோழைகள் நிச்சயமாக தொழிலாளர் தேசிய சங்க நித்திய உறுப்பினர்களாக இருந்திருக்க மாட்டார்கள். உண்மையான தொழிலாளர் தேசிய சங்கப் பற்றுக் கொண்ட யாரும் எனக்கு எதிர்நிலையில் இருக்க மாட்டார்கள் என்பது எனது பூரண நம்பிக்கை. ஏனெனில் சங்கத்தின் வளர்ச்சியில் எனது பங்களிப்பை அவர்கள் அறிவார்கள். எப்போதும் சங்கம் உடைந்து செல்வதை நான் விரும்பியவனல்ல. அதனால்தான் நான் ஒதுங்கி வந்தபோதும் கூட ஒருவரையும் கூட அழைத்து வரவில்லை. பெருந்திரளாக விலகி வரவிருந்த பலரையும் நான் தடுத்து நிறுத்தினேன் என்பதை அங்கே மனசாட்சியுடையவர்கள் அறிவார்கள். இப்போது கூட சங்கம் உடைந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். ஏனெனில் அதனை மீளக்கட்டமைக்க பட்ட சிரமங்களை நானே அறிவேன்.

சங்கத்தில் நீங்கள் இல்லாத இடைவெளி உணரப்படுவதாக நீங்கள் அறிவீர்களா?

ஓராண்டு கடக்கும் நிலையிலும் நீங்கள் ஊடகவியலாளராக என்னோடு இது குறித்து உரையாடுவதே சங்கத்தில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியின் குறியீடு தானே.

மலையக அரசியலிலும் இந்த இடைவெளி தெரிகிறது என நான் கூறினால்...

நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன். உள்நாட்டில் , வெளிநாட்டில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு உரையாடும் பலர் இந்த இடைவெளி குறித்து என்னுடன் பேசுகிறார்கள். அது நிரப்பப்பட வேண்டியது என்பதையும் நான் உணராமல் இல்லை. இடைவெளி உணரப்படும்போதே எழுச்சி உண்டாகும். இந்த இடைவெளியை உணர்ந்து எழும் எழுச்சியே அடுத்த கட்ட அரசியல் செல்நெறியாக வேண்டும் என்பதில் நான் தெளிவாக உள்ளேன்..அதற்கேற்ப எனது உரையாடல் வெளியை மேற்கொண்டு வருகிறேன்.

உங்களது அடுத்தத் திட்டம் என்ன ?

அரசியலில் 5 வருடங்கள் என்பது ஒரு யுகத்திற்கு ஒப்பானது. கடந்த தேர்தலுக்குப் பின்னர் ஒரு ஆண்டு கூட இன்னும் கடந்து விடவில்லை. கடந்த ஆண்டு இந்த நேரம் தீவிர பிரச்சாரம் இடம்பெற்ற காலம். அப்போது என்பெயரைக் கூறி தமக்கு வாக்குக் கேட்டுக் கொண்டவர்களும் இந்த பாராளுமன்றில்தான் இருக்கிறார்கள். ஓராண்டு ஆவதற்குள் என்னென்ன நடந்துள்ளது என்பதை மக்கள் அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு எதிராக எந்தக் காலத்திலும் செயற்பட்டவனும் இல்லை. செயற்படப் போவதும் இல்லை. காலம் வரும்போது எனது வகிபாகம் என்ன என்பது தெரியவரும். நான் ஒப்புக்கு பாராளுமன்ற அமர்வுகளுக்குப் போவதுமில்லை, அங்கே ஒப்புக்குப் பேசுவதும் இல்லை. எனது உரைகளுக்கும், பணிகளுக்கும், மக்களுக்கும் ஒரு இடைத்தொடர்பு இருந்தது. மக்கள் ஒவ்வொருவரும் அதனைத் தமது குரலாக உணர்ந்தார்கள். ஏனெனில் எனது வார்த்தைகள் இதயத்தில் இருந்து வரும். உதட்டில் இருந்து வந்து உளறாது.

இறுதியாக பாராளுமன்ற உறுப்பினர் பழநி திகாம்பரம் எப்போது உங்களோடு பேசினார்? என்ன பேசினார் ?

ஆறுமுகன் தொண்டமான் இறந்து விட்டதாக தொலைபேசியில் எனக்கு கூறியது அவர்தான். அதற்கு அடுத்த நாள் பாராளுமன்ற முன்றலுக்கு ஆறுமுகன் தொண்டமானின் தேகம் கொண்டு வந்தபோது ஓரிரண்டு வார்த்தைகள். அதுதான் அவரும் நானும் பேசிக் கொண்டதும் சந்தித்துக் கொண்டதுமான கடைசி தருணம் என்பது எனக்குத் தெளிவாக நினைவில் உள்ளது.

நன்றி - உதயசூரியன் / 12.08.2021

'சமூக நீதி' கோரிக்கையாக மாற வேண்டிய நீதிக்கான கோஷங்கள்

மயில்வாகனம் திலகராஜா (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

கடந்த இரண்டு வாரங்களும் மலையகத்தில் மட்டுமல்லாது மலையகத்துக்கு வெளியேயும் இலங்கையில் 'நீதி' கோரிய கோஷங்கள் எழுந்திருந்தன. அந்த கோஷத்தை முன்னிறுத்தச் செய்தது ஒரு சிறுமியின் உயிர். அந்த சிறுமியின் துர்பாக்கிய நிலை மரணத்துக்கு நீதி வேண்டிய கோஷங்களுக்கு மத்தியில் 'அரசியல்' நிகழ்ச்சி நிரல்களும் தம்மைப் பிணைத்துக்கொண்டன என்பது வெளிப்படை. ஆனால், அதனையும் தாண்டிய சமூக 'உணர்ச்சி' நிலை மலையகத்தில் ஆத்மார்த்தமாக மேம்பட்டு நின்றது.

மலையகத்தில் மக்களால் முன்வைக்கப்பட்ட 'நீதி வேண்டும்' கோஷம், அரசியல் - பணபலங்களைக் கொண்டு மறைக்கப்பட்டிருக்கக்கூடிய மரணத்தை நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்தி இருக்கிறது. சம்பவம் நடந்து பத்து நாட்களாக உயிருக்குப் போராடிய குழந்தையை வைத்தியசாலைக்குச் சென்று பார்க்கத் துணியாத, அப்போது விசாரணையைத் துரிதப்படுத்துங்கள் என காவல் துறையைத் தூண்டத் துணியாத, மரணத்துக்குப் பின் நீதி கேட்டாலும் அதற்காக பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பாக சட்டத்தரணிகளை நியமிக்காத மலையக அரசியல் பிரதிநிதிகள் மத்தியில் அந்த சிறுமிக்காக தன்னார்வமாக முன்வந்து மன்னறில் ஆஜரான மலையக சட்டத்தரணிகள், இந்த வழக்கிற்கு வெளியே ஒன்றை ஆழமாக உணர்த்தி நிற்கிறார்கள்.

அது மலையகம் எனும் 'உணர்வு'. உணர்ச்சி நிலையில் ஓங்கி நிற்கும் சமூகத்தை உணர்வுநிலையில் புரிந்து கொண்டு செயற்படும் தலைமைக்கான வெற்றிடம் தாராளமாகவே வெளிப்பட்ட தருணம் இது.

இந்தப் பிரச்சினைகளின் பின்னணிகளை நீதிமன்றம் ஆராய்வதற்கு முன்னமே தீர்ப்பெழுதிய தனிநபர்கள், நிறுவனங்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு, பிரச்சினைக்கு பின்னணியாக இருந்திருக்கக் கூடியதான காரணங்களைக் கண்டறிவதும் அவற்றுக்கான தீர்வைத் தேடுவதன் ஊடாக இது போன்றதோர் இன்னுமொரு அவலமும், மரணமும் மலையகத்தில் நேராதிருப்பது எவ்வாறு என சிந்திப்பதே சமூகத்தின் பொறுப்பாகிறது.

ஒட்டு மொத்த இலங்கையுமே சிறுவர் தொழிலாளர்களை அனுமதித்துக் கொண்டிருப்பதாக பல புள்ளிவிபரங்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக வெளி வந்து கொண்டிருக்கிறது. அவற்றை இங்கே அலசி ஆராயாவிட்டாலும் அந்த புள்ளி விபரங்கள் சொல்லும் தகவல் முக்கியமானது.
மலையகத்தில் மட்டுமல்ல மலையகத்துக்கு வெளியேயும் இலங்கையில் இத்தகைய பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது அந்தச் செய்தி.

மலையகத்தில், இப்போது நடந்திருப்பதுதான் முதலாவது சம்பவமும் அல்ல. இதற்கு முன்னர் நடந்தபோது 'நீதி வேண்டும்' கோஷங்கள் மலையகத்தில் எழும்பாமலும் இல்லை. இப்போது மலையகம் நிற்கும் புள்ளியும் அப்போது நின்ற புள்ளியும் ஒன்று தான். இது மலையகம் நிற்க வேண்டிய புள்ளியல்ல, அசைய வேண்டிய புள்ளி என்ற நிலையில் இருந்து விடயங்களை அலசி ஆராய வேண்டியது சமூகக் கடமையாகிறது.

இவ்வாறு சிறுவர்கள், பெண்கள் வீட்டு வேலைக்குச் செல்லும் நிலை ஏன் உருவாகிறது என்பதற்கு பொதுவானதும் உண்மையானதுமான ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அது வறுமை. மலையகப் பெருந்மோட்டப் பகுதிகளில் வறுமை நிலவுகிறது என்பதற்கான குறிகாட்டியாக சிறுமியின் மரணம் இருந்துவிட முடியாது. இலங்கைத் தொகை மதிப்பு புள்ளிவிபரத்திணைக்களம், மத்தியவங்கி அறிக்கைகள் தமது விபரப்பட்டியலை துறைசார்ந்து மூன்றாக வகுத்துக்கொண்டுள்ளன. அவை நகரம் (Urban), கிராமம் (Rural), தோட்டம் (Estate) என்பதாகும்.

இதில் பொருளாதார பிரதிகள் தோட்டத்துறையில் உயர்வான பதிவுகளைச் செய்ய சமூகக் குறிகாட்டிகள் மோசமான பிரதிகளைச் சுட்டிக்காட்டுவதனை அவதானித்தல் வேண்டும். நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் சுதந்திரத்துக்கு முன்பு இருந்த காலம் தொட்டே உயர்வான பதிவுகளைக் காட்டிவரும் தோட்டத்துறை தேயிலை ஏற்றுமதி இன்றுவரை கணிசமான பெறுமதியைக் கொண்டே காணப்படுகிறது. இலங்கைத் தேயிலை ஏற்றுமதி 2021 இல் 650 மில்லியன் அமெரிக்க டொலர் என பதிவாவதுடன், இலங்கையின் விவசாய ஏற்றுமதிப் பொருட்களில் 52வீதத்துக்கும் அதிகமாக தேயிலையே இடம்பெறுகிறது. இவை சிறுதோட்டம், பெருந்தோட்டம் இரண்டும் கலந்த ஏற்றுமதிப் பெறுமதிதான் என்றாலும் இலங்கையில் இன்று சிறுதோட்டங்களாக பகிரந்தளிக்கப்பட்டவையும் பெருந்தோட்டங்களாக இருந்தவையே. அதுவும் இந்த இருநூறு வருடகால வரலாற்றின் பகுதிதான்.

இலங்கைக்கு இலவசக்கல்வி, இலவச சுகாதாரம், ரயில்போக்குவரத்து, பாதை வலையமைப்பு, வங்கிக் காப்புறுதி துறை அபிவிருத்தி வலைபின்னல், உட்கட்டுமான அபிவிருத்தி என காலனித்துவ காலத்தில் இருந்தே அதற்கான அடிப்படையைக் கொடுத்தது பெருந்தோட்டத் துறையே என்பதனை யாராலும் மறுக்க முடியாது. விவசாயத்துறை தொழிற்படையில் 62.6 வீதம் தோட்டத்துறை உழைப்பாளர்களே உள்ளனர் என்றும் பதிவாகிறது.

இந்த தொழிற்படையின் இருநூறு வருடகால உழைப்புக்கு மாற்றீடாக பெருந்தோட்டத் துறை உழைப்பாளர் சமூகத்துக்கு இலங்கை வழங்கியுள்ள பரிசு வறுமையில் உயர் இடத்தில் இருக்கிறார்கள் என்பதே. தலைக்கான வறுமைச் சுட்டி எனும் தரவுகளில் நகரத்துறை 1.9 ஆகவும் கிராமத்தில் 4.3 ஆகவும் உள்ள தகவல்கள் தோட்டத்துறையில் 8.8 புள்ளியாக அமைந்து தோட்டத்துறையில் வறுமை உச்சம் என காட்டி நிற்கிறது. எனவே தோட்டத்துறை என்பதை பொருளாதார 'செழுமையும்' சமூக 'வறுமையும்' கொண்ட துறையாக பேணுவதில் இலங்கை அரசு இருநூறு வருட காலத்தில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.

இந்த பின்னணியில், சிறுமியின் மரணத்தில் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜராக்கியபோது சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக ஆஜரான பிரதி மன்றாடிகள் நாயகம் கூறியுள்ள விடயம் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. 'பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வீட்டு வேலைக்கு சிறுவர்களைக் கொண்டுவருவது ஒரு ஆட்கடத்தல் வியாபாரம் போலவே நடைபெற்று வருகிறது'.

இந்தக் கூற்று யாரால் யாருக்குச் சொல்லப்பட்டது என்பது வரலாற்று முக்கித்துவத்துமிக்கது. இலங்கையின் சட்ட வழிகாட்டலுக்கு பொறுப்பான சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு மலையகச் சிறுவர்கள் ஆள்கடத்தல் முறையில் தலை நகருக்கு அழைத்து வருவது தெளிவாகத் தெரிந்தும் அதனைத் தடுப்பதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்காமலேயே இருந்து வருகிறது என தெளிவான பொருள் கொள்ளலாம்.

இப்படி அரசின்பக்கம் கவனிப்பாரற்ற சமூகமாக மலையகத் தோட்ட சமூகம் காலங்காலமாக இருந்துவரும் நிலையில், இந்த மக்களுக்காக முன்வைக்கப்படும் அரசியல் நிலைப்பாடு தோட்டத் தொழிலாளர்களுக்கு வெளியே தனது கவனத்தை பெரிதாக திருப்பாத நிலையிலேயே இயங்கி வந்துள்ளது.

தொழிற்சங்க அங்கத்தவர்களின் பலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் அரசியலாகவே அந்தக் கட்டமைப்பு இயங்கி வந்த நிலையில் அந்தத் தொழிற்சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனையோடு அரசியல் கட்சியைக் கட்டமைப்பதில் தாமதித்தே வந்துள்ளது.

1992 ஆம் ஆண்டுக்குப்பின்னரான தோட்டத் தொழில் கட்டமைப்பு மாறி வந்துள்ள நிலையில் அப்போதிருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆறு லட்சமாக இருந்து 2020 ஆம் ஆண்டு ஆகும் போது ஒரு லட்சம் எனும் அளவுக்கு குறைந்துள்ளது. ஆனாலும் பெருந்தோட்ட நிறுவனங்களும் கட்டமைப்பும் அவ்வாறே செயற்பட்டு வருகின்றன. அப்படியாயின் அந்த தொழிற்படையில் சேரந்திருக்க வேண்டிய தோட்ட சமூகப்பிரிவினர் ஆண்டுக்கு சராசரியாக 15,000 வீதம் வேறு துறைகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அடுத்த தலைமுறையினர் தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை என வாதிட்டாலும் அந்த வாதம் சரி என்றாலும் கூட அவ்வாறு தோட்டத் தொழிலில் இணையாத அல்லது இணைய வாய்ப்பு வழங்கப்படாத எல்லோரும் கல்வித்துறையில் சாதித்தவர்களாக உயர் தொழிலுக்கு சென்றவர்கள் இல்லை. அதன் வீதாசாரம் குறைவானது. அவர்களில் முறைசாராத தொழில்களுக்கு சென்றவர்களின் எண்ணிக்கையே அதிகம். இந்த காலப்பகுதியில்தான் வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைப் பணிகளுக்கும், தலைநகர் கொழும்பில் வீட்டு வேலைப் பணிகளுக்கும் என பெண்கள் படை எடுக்கலாயினர். அதேபோல கடைச்சிப்பந்திகளாகவும் (இந்தத் துறையில் ஏற்கனவே ஒரு நாட்டம் மலையக இளைஞர்களிடையே இருந்துவந்தது) இன்னோரன்ன உடல் உழைப்பாளர்களாகவும் மலையக இளைஞர்கள் வெளியேறத் தொடங்கினர்.

இவர்கள் தமது பெற்றோருடன் தொடர்ந்தும் வாழ வகையற்றவர்களாக வீடுகளில் இருந்து வெளியேற நேர்ந்தது. சிறுக சிறுக ஆரம்பித்த இந்த முறைசாரா துறையில் ( informal sector) தொழில் செய்வோர் முறைசார் தோட்டத்துறையில் (formal Estate sector) தொழில் செய்வோர் எண்ணிக்கையை விட அதிகமாகும். அந்த அதிமான தொகையை ஒரு மதிப்பீட்டின் மூலம் ஊகிக்கலாமே தவிர அதன் சரியான தரவுகளைப் பெற்றுக்கொள்ள எந்த ஒரு பொறிமுறையும் இல்லை.

அதனால்தான் கொரொனா பரவல் தொடங்கியதும் 7000 பேர் லொறிகளில் ஏறி மலையகத்துக்கு வந்துவிட்டனர் என அரசியல் பிரதிநிதிகளால் கற்பனை கணக்கு காட்ட முடிந்தது அல்லது ஒட்டுமொத்த மலையக சனத்தொகையில் ஒரு லட்சமே தொழிலாளர்கள் ஏனையோர் தொழிலாளர்கள் இல்லை என வாய்ச்சவடால் விட முடிந்தது.

அந்த மிச்சம் பேர் என்ன செய்கின்றனர் என அறிய முடியாத கட்சிக் கட்டமைப்பைக் கொண்ட தலைவர்களால் அந்த வகுதியில் ஒருவராக இவ்வாறு அவலமாக இறந்துபோன சிறுமிகளுக்காக நியாயமான விசாரணையைக் கோர முடியுமே தவிர நல்வாழ்வுக்கான திட்டங்களைத் தீட்ட முடியாது. தரகர்களை கண்டால் தாக்கச் சொல்ல முடியுமே தவிர, அதனால் வரக்கூடிய விளைவுகளை உணரமுடியாது.

தரகர்கள் உருவாகாமல் இருக்க வழி சொல்லவும் தெரியாது. வீதியில் இறங்கிப் போராடுவதற்கு மக்களே தலைவர்களுக்கு வழிகாட்டுகின்றனர் என்பதனை நன்கு அவதானித்தால் புரியும். மாறாக மக்களுக்கு வழிகாட்டும் தலைமைக்காக மலையகத் தமிழ் மக்கள் காத்திருக்கும் நிலையே உள்ளது. மலையகத்துக்கு வெளியே வந்த 'நீதி வேண்டும்' கோஷங்கள் எல்லாமே மலையக சமூகம் மீதான அக்கறையில் வந்ததில்லை என்ற கசப்பான உண்மையை உணர்ந்தவர்களாக மலையகத்துக்கு வெளியேயான நேச சக்திகளை சரியாக அடையாளம் காணுதலும் அத்தகைய தலைமையின் தகைமைகளில் ஒன்றாயிருத்தல் வேண்டும்.

இந்த நிலையிலேயே இறந்துபோன சிறுமிக்காக 'நீதி வேண்டும்' கோஷம் எழுப்பும் மலையகத்தின் இளைய தலைமுறையினர் 'சமூக நீதிக்கான கோரிக்கையாக' அதனை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை இலக்கு வைத்து செயற்படுபவர்களாக மாற வேண்டிய காலம் எழுந்துள்ளது.

சிறுமியின் அவல மரணத்துக்கு வறுமைதான் காரணமெனில் அந்த வறுமையை சரியாக அடையாளம் கண்டு அதற்கு தீர்வு தேடும் அரசியல் தலைமைத்துவத்தின் அவசியம் குறித்து சிந்தித்தல் வேண்டும். மலையகத்தில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமை எல்லையைக் கடந்தும் தோட்ட எல்லையைக் கடந்தும் வெளியேறிவிட்டனர். அவர்களின் எண்ணிக்கை சுமார் லட்சம் அளவினைக் கொண்டது. மலையகத் தோட்டப் பகுதியில் வாழ்வோர் எண்ணிக்கை 9 இலட்சம் அளவாக உள்ளது.

அவர்களுள் வறுமையின் எல்லையைக் கடந்து வெளியேறுவோர் 10 சதவீதமாகவும் வறுமைக்கு மத்தியிலும் போராடி முன்நகர்வோர் 30 சதவீமாகவும் வறுமை நிலையில் சமாளித்து வாழ்க்கை நடாத்துவோர் 40 சதவீதமாகவும் உள்ளநிலையில் வறுமையில் இருந்து மீளமுடியாத நிலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டோர் வீதம் 10 சதவீதம் மாத்திரமே (இது ஒரு தோட்டப்பிரிவு மட்டத்தில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு பொதுவாக பொருந்திவரக்கூடிய முடிவும் கூட).

ஆனால், இந்த பத்து சதவீத பகுதியையே ஒட்டமொத்த மலையகத் தோட்டத் துறைச் சமூகமாக சித்திரிக்கப்படுகிறது. இந்த பத்து சதவீத்தில் இருந்தே சிறுவர் தொழிலாளர்களும், முதியோர் தொழிலாளர்களும், என இக்கட்டான தொழில்களுக்குச் செல்லத் தள்ளப்படுகின்றனர்.

அவர்களை அடையாளம் காணவும் உதவிகள் செய்யவும் ஒரு பொறிமுறை தேவை அவ்வளவுதான். இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இன்றைய 'நீதி வேண்டும்' கோஷம் ஒரே ஒரு சிறுமிக்காக எழுந்ததாக இருந்துவிடக் கூடாது. இதுபோன்ற இன்னுமொரு சிறுமிக்கு நேர்ந்துவிடாத 'சமூக நீதிக்கான' அரசியல் களம் குறித்த சிந்தனையும் செயற்பாடுகளுமே மலையகத்தின் அடுத்த கட்ட அரசியலாதல் வேண்டும். அதனை முன்னெடுக்கும் பாரிய பொறுப்பினை மலையக இளையத் தலைமுறையினர் தமது தலையில் சுமக்கத் தயாராதல் வேண்டும்.


மலையக சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் விசேடமாக உறுதி செய்யப்படல் வேண்டும்:

- தேர்தல் மறுசீரமைப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கோரிக்கை

இலங்கை சுதந்திரம் அடைந்த போது குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்ட 1948 ஆம் ஆண்டிலேயே ஏழு பாராளுமன்ற உறுப்புரிமையை கொண்டிருந்த மலையக தமிழர் சமூகம் 1980 க்குப் பின்னர் தமக்கு மீளவும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி விகிதாசார பிரதிநிதித்துவத்தை தொடர்ச்சியாக தக்க வைத்து கொண்டுள்ளது. அது உரிய எண்ணிக்கை அல்லாத போதும் இயலுமான எண்ணிக்கையை எல்லா தேர்தல்களிலும் பாராளுமன்றம், மாகாண சபை , உள்ளூராட்சி சபைகளில் பிரதிநிதித்துவம் இடம்பெற்று வந்தது. இந்த நிலைமையில் தேர்தல் முறைமை மாற்றம் பெறுமானால் மலையக சமூகம் மீண்டும் 1948 - 1977 காலப்பகுதிக்கு செல்ல நேரிடும் அச்சம் மலையக மக்கள் மத்தியில் நிலவுகிறது.

நாடு தவிர்க்க முடியாத வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் இருந்து கலப்பு முறைக்கு செல்லும் நிலை வந்தால் , ஆக குறைந்தது தற்போதைய அரசியல் பிரதிநிதித்துவ எண்ணிக்கையில் குறைவு ஏற்படுத்தாத முறைமை குறித்து குழு கவனம் செலுத்துதல் வேண்டும். மலையக மக்கள் மீண்டும் அரசியல் உரிமை இழக்கும்

நிலையை உருவாக்க முடியாமல் குடியுரிமை பறிப்பு தவறை ஏற்று அதற்கு பொறுப்பு கூறும் வகையில் சிறு தேர்தல் தொகுதிகளை பாராளுமன்ற தேர்தலுக்காக உருவாக்கி மலையக சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் விசேடமாக உறுதி செய்யப்படல் வேண்டும் எனவும் கருத்து பதிவு செய்யப்பட்டது.

இலங்கையில் தேர்தல் முறைமை மறுசீரமைப்பு நோக்கத்தில் பாராளுமன்றத்தில் தெரிவுக் குழு அமைக்கப்பட்டு பொதுமக்களிடத்தில் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ள நிலையில் அந்தக் குழுவுக்கு மலையகம் தழுவிய முன்மொழிவுகள் பலவற்றை பல்வேறு தரப்பினரும் பல எண்ணிக்கையில் அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், தூய அரசியல் கலாசாரத்தை கட்டி எழுப்புவதற்கான மார்ச் 12 தேசிய இயக்கத்துடன் இணைந்து நடாத்திய இணைய வழிகலந்துரையாடலிலேயே மேற்படி விடயம் பதிவு செய்யப்பட்டது.

நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை, மொனராகலை, குருநாகல் உள்ளிட்ட பெருதோட்ட மாவட்டங்களும் கொழும்பு, கம்பஹா,வன்னி என பெருந்தோட்டம் சாராத மாவட்டங்களிலும் என பரந்து விரிந்து வாழும் மலையகத் தமிழ் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் முன்மொழிவை தயார் செய்யும் நோக்கோடு இந்த நிகழ்வு ஒழுங்கு செய்ப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தொடக்கவுரையில் தெரிவித்தார்.

அவ்வாறே அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சிவில் சமூக பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தமது கருத்துகளை முன்வைத்தனர். பிரதான உரையை மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளரும் அரசியல் ஆய்வாளருமான அ. லோரன்ஸ் வழங்கினார். பவரல் அமைப்பின் சார்பில் அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சார்பில் மஞ்சுளா கஜநாயக்க, ட்ரான்ஸ்பெரன்ஷி, இன்ரநெஷனல் நிறுவனம் சார்பில் கௌரீஸ்வரன் கலாநிதி ஜெஹான் பெரேரா ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

தமது முன் மொழிவுகளில் மலையக மக்களின் அபிலாஷைகளையும் உள்ளடக்குவதற்கு உறுதி தெரிவித்தனர்.