தட்டப்பாறை- வெளிகளைத் திறந்துவிடும் புதினம்

முன்பின் அறியாத முகநூல் நண்பர் முஹம்மது யூசுப். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இப்போது மத்திய கிழக்கு நாட்டில் தொழில் புரிவதாக கூறினார். என்ன தொழில் என்று எங்கும் எழுதவில்லை ஆயினும் இவர் எந்த தொழிலும் செய்யக்கூடிய ஒருவராக இருப்பார் என ஊகிக்க முடிகிறது. பழங்குடிகளின் வரலாறு, மதங்கள் பற்றிய மதிப்பீடு, பூகோளவியல், புவியியல், தொல்லியல், தொல்பொருளியல், மானுடவியல், சமூகவியல், அறிவியல், மொழியியல் என பல தளங்களில் நின்று ஒரு புதினத்தை தருவதற்கு முயற்சித்துள்ளார்; முஹம்மது யூசுப். அதுவே தட்டப்பாறை.

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களாக தமிழ்நாடு சென்ற ஒரு குடும்பத்தில் தந்தையும் தாயும் ஒரு மகனும். அந்த மகன் இலங்கையை விட்டுப் போகும்போது 12 வயது. இலங்கையில் ஜெயசீலனாக பிறந்த அந்த சிறுவன் இந்தியாவில் தேவசகாயம் ஆகிறான். ஆனாலும் அவனது கையில் ‘சீலன்’ என பச்சைக் குத்தப்பட்டுள்ளது. அந்த சீலன், ஜெயசீலன் என்பதை மட்டுமல்ல அவன் ‘சிலோன்’ காரன் என்பதை நினைவுறுத்தியபடி நிலைக்கிறது.
சிறிமா - சாஸ்த்திரி ஒப்பந்தம் பிரகாரம் இந்தியா திரும்பிய சீலன் குடும்பம் நுவரெலியா லபுக்கலை கொண்டகலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதாக கதையின் இறுதிப்பாகத்தில் தெரியவருகிறது. அப்போது சீலனுக்கு திருமண வயதில் ஒரு மகளும் ( ஜெசிபா)கூட இருக்கிறார்.
ஆக தாயகம் திரும்பிய உறவுகளின் இரண்டு தலைமுறைகளை இணைத்துப் பார்க்கும் புதினம் இது. முதல் தலைமுறை ஆளாக மேரி என்பவரும் உலா வருகிறார். அவர் இலங்கையைவிட்டுப் போகும் அவலம் 1983 ஆண்டு இனக்கலவரத்தின் பின் நிகழ்வதாக காட்டப்படுகிறது. அந்த மேரி இலங்கையில் இன வன்முறைகளின் போது மட்டுமல்ல இந்தியாவில் வன்முறையாகவும் பாலியல் பலவந்தம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டுகிறது புதினம்.
இதற்கிடையே டேனியல் எனும் கதாபாத்திரம் நாவல் முழுதும் உலாவருகிறது. அவர்தான் நாவலாசிரியர் எனும் கற்பனை வாசகனில் எழுகிறது. ஆனால்,டேனியலும் இலங்கையில் இருந்து இந்தியா சென்றவராகவே காட்டப்படுகிறது. இவர் சிறிமா - சாஸ்த்திரி ஒப்பந்தம் ஊடாகவா அல்லது 1990 களுக்குப் பின் அகதியாகவா இந்தியா சென்றார் என்ற தெளிவு இல்லை. நாவலாசிரியருக்கும் தமிழகத்தில் பலரைப் போன்று இவர்களை வேறுபடுத்தி அறிவதில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது.
ஆனால் டேனியல் இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இலங்கை மலையகத் தமிழர் என்பது மட்டும் உறுதியாகச் சொல்லப்படுகிறது. ஆனால் டேனியல் அங்கிருந்து ஐரோப்பிய நாடான பிரான்ஸ்க்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்று விடுகிறார். ஆவணப்பட அல்லது வெப்சீரியல் ஆர்வலரான டேனியல் பிரான்ஸில் இருந்து தமிழகம் வந்து பின்னர் இலங்கை வந்து தனது பூர்விகத்தைத் தேட முயற்சிக்கிறார். அப்போது மேரி அம்மாவையும் கூட அழைத்து வருகிறார். அப்போது தேவசகாயமும் ( முன்னாள் ஜெயசீலன்) கூட இலங்கை வந்திருப்பதான ஒரு கற்பிதம் நிகழ்கிறது.
இப்படி தேவசகாயம், மேரி, டேனியல் எனும் இலங்கை மலையக கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு, தூத்துக்குடி மாவட்ட ‘தட்டப்பாறை’ எனும் ஊரின் பெயரில் உருவாகியுள்ள புதினம் பல திசைகளில் பயணிக்கிறது. பிரதான பாத்திரங்களான இந்த மூவரும் கிறித்தவர்களாக இருப்பது அல்லது மாற்றம் பெறுவது தற்செயல் அல்ல. கிறித்தவ நிர்வாக முறைமை இந்த மூவருக்கும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வாழ்வளிக்கிறது அல்லது அநாதையாகி நின்ற அவர்களுக்கு ஆதரவளிக்கிறது, ஆளாக்குகிறது. எனவே நாவலில் மூன்று கிறித்தவ பாதிரிகளும் வந்து போகிறார்கள்.
இடையில் தேவசகாயத்தின் நண்பராக இருளன் எனும் மலையாள இடதுசாரி தோழரும் இணைக்கப்படுகிறார். இவர் நாவல் முழுவதும் கம்யூனிசப் பார்வையில் இந்தியாவை , மானுடத்தை விளக்கிச் செல்பவராக வருகிறார். இவரது பார்வையில் சாதிமத கட்டமைப்புக்கு முந்திய பழங்குடிகள் நிலையில் நின்று சமூகங்களையும் அவர்தம் கலாசாரத்தையும் ஆராய விழைகிறது நாவல். ஒரு வகையில் இந்த புதினம் பழங்குடிகள் அல்லது பூர்விகம் குறித்த தேடலின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கிறது எனலாம்.
இப்படி ஆதியை ஆராய முனையும்போது மறுபுறமாக தேவசகாயத்தின் சாதி என்னவென்று தேடும் கல்லூரி சூழல், அவனது மனைவியை இழக்கநேரும் அரசியல் சூழல் தமிழ் நாட்டுக்கே உரிய அசல் தன்மையோடு விபரிக்கப்படுகிறது. இடையே டேனியலின் நண்பனாக வரும் கடக்கரை அஜித் எனும் பாத்திரமும் கூட அதற்கு சாட்சி சொல்லி நிற்கிறது.
தேவசகாயத்தின் மகளின் வயதை ஒத்த அபு எனும் இஸ்லாமிய இளைஞன், அவரோடு நட்பாகி பின்னர் காதலியாகும் சௌம்யா அவளது தோழி செல்வி என இளந்தலைமுறையினரான இணையவழி தலைமுறையையும் இணைத்துக் கொள்கிறது நாவல்.கணிணியுக ஆய்வுகள், அதில் உள்ள நெளிவு சுழிவுகள், பல்தேசிய கம்பனிகளின, அறிவியல் அதன் அரசியல் என அவர்களையும் உலாவ விட்டு இறுதியில் புதினத்தின் மையச்சரடுடன் இணைத்து விடுகிறார் நாவலாசிரியர்.
டேனியல் எனும் பாத்திரத்தின் ஆய்வு நோக்கத்தை முன்னிறுத்தி பேச முனையும் புவியியல், கலாசார தொடர்புகள், ஆரிய - திராவிட- அரேபிய மொழியியல் ஆய்வுகள் சமயத்தில் சலிப்படையச் செய்தாலும் சிந்திக்க வேண்டிய கோணம் ஒன்றை வாசகர்களுக்குத் தருகிறது.
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை பயணங்கள் ஊடாக புவியியல் தோற்றப்பட்டு அடிப்படையில் பூகோள பிராந்தியத்தை ஒருங்கிணைத்துப் பார்க்கும் முயற்சி, அல்பிரட் வெக்னரின் கண்ட நகர்வு கொள்கைவரை யான பார்வைகள் சில சமயங்களில் புனைவு நாவல் அல்லாத அபுனைவு ஆய்வு நூலை அல்லது பாடப்புத்தகம் ஒன்றை வாசிப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தாமல் இல்லை. ஆனால் அடுத்த அத்தியாயத்தை வெகு சாதாரண உரையாடல்கள் சம்பவங்கள் ஊடாக புதினத்தின் இயல்புக்கு கொண்டு வந்து அதனைச் சரி செய்து விடுகிறார் நாவலாசிரியர்.
“வாழ்வின் மீதான தீவிரத் தேடல் உள்ள ஒருவனுக்கு இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் அவனுடைய நிலத்தின் ஆதாரம். மேம்போக்கான ஆட்களுக்கு அவை சலிப்பூட்டும் வெற்றுத் தகவல்கள்.
கன்னி, கொடி, மொளை, பள்ளை, செம்போரை என ஆட்டின் வகைகளையும் தர்ப்பைப் புல்லையும் இடையனையும் தேடி அலைந்ததில் என் உடல் முழுக்க ஆட்டாம்புழுக்கை வாசம்.
தட்டப்பாறை நாவல் என்பது இதுவல்ல. இதை வாசித்ததும் நீங்கள் தேடப்போகும் உங்களின் உள்மன விசாலமான எண்ணங்கள்தான் உண்மையான ‘தட்டப்பாறை’ நாவல்” என தனது முயற்சிக்குரிய மதிப்புரையைத் தானே பின்னட்டையில் குறிப்பிட்டிருக்கிறார் நாவலாசிரியர்.
முஹம்மது யூசுப் எனும் இந்த இளைஞனுக்குள் இத்தனைத் தேடல்களா? என பலமுறை புருவம் உயர்த்தி வாசித்த புதினம் ‘தட்டப்பாறை’. நாவல் என்பது எழுதுவது அல்ல உழைப்பது என ஆங்கிலத்தில் சொல்லப்படுவதுண்டு. ( working on a novel). தட்டப்பாறை நாவலைக் கொண்டுவர நாவலாசிரியர் முஹம்மது யூசுப் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதனை அந்த நூல் காட்டும் வெளிகளும் அது பேசும் பொருள்களும் பேசும் திசைகளும் காட்டும் மாந்தர்களும் சாட்சி சொல்வன.
தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டபோது சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த திரைப்பட இயக்குனர் பாலா உரையாற்றும்போது, ‘பரதேசி’ படத்தை இயக்குவதற்கு முன்பதாக தான் இலங்கைக்கு பயணித்து நுவரெலியா தேயிலைத் தோட்டப் பகுதிகளை பார்வையிட்டதாக குறிப்பிட்டார்.பரதேசி திரைப்படம் இலங்கை மலையகத் தமிழர்களைப் பற்றிப் பேசவில்லையாயினும் அந்த கதையின் நாயகனாக மலையகத்தவன் ஒருவன் தன்னை உணரும் தன்மையைக் கொண்டிருக்கும்.
அதுபோல ஒரு டேனியலாக, தேவசகாயமாக மலையக வாசகனை இணைத்துப் பார்த்து நாவல் வாசிப்பை நகர்த்திப் போகும் சூழலை தனது எழுத்தின் ஊடாக பதிவு செய்கிறார் முஹம்மது யூசுப். அவர் இலங்கைவந்து சுற்றித்திரிந்ததற்கான பல ஆதாரங்கள் நாவலில் தெரிகின்றன. இலங்கையரான நாம் காணாத பலாங்கொடை ஜெய்லானி மலையையும் இரத்தினபுரி நகரத்தின் இரத்தினக்கல் பட்டைத் தீட்டும் பக்கம் ஒன்றையும் கூட அவரால் படைக்க முடிந்துள்ளது. இலங்கைத் தேயிலைத் தோட்டங்களின் பெயர்ப் பட்டியலொன்றை நாவலில் சேர்த்து எம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.
“எல்லோரும் வாசிக்கும் புத்தகங்களை மட்டுமே நீங்களும் வாசித்தால் எல்லோரும் சிந்திப்பதுபோல மட்டுமே உங்களாலும் சிந்திக்க இயலும்” என ஹாருகி முரகாமியில் கூற்றை எழுதி தனது முன்னுரையை ஆரம்பித்திருக்கும் நாவலாசிரியர், “உலகெங்கும் உள்ள இலங்கைச் சார்ந்த மலைவாழ் இந்தியத் தமிழர்களுக்கும், என தமிழ் சொந்தங்களுக்கும் இந்த நூல் சமர்ப்பணம்” என நிறைவு செய்துள்ளார்.
இலங்கை மலையகத் தமிழர்கள் குறித்து இந்தியத் தமிழக உறவுகள் புரிந்து கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இலங்கை மலையகத்தில் அதிகமே உள்ள நிலையில் அதற்கான எத்தனிப்பை ஏதேனும் ஒரு வகையில் செய்வதற்கு முனைந்த, தமிழ்மகன் எழுதிய ‘வனசாட்சி’ புதினத்தைப் போன்று ‘தட்டப்பாறை’ புதினத்துக்கும் தனியான ஓர் இடம் உண்டு.
வாசிக்கவும் வாங்கிப் பாதுகாக்கவும் வேண்டிய நூல் தட்டப்பாறை (530 பக்கங்கள்). ‘யாவரும் பதிப்பகம்’ சென்னை. முதலாம் பதிப்பு 2021 சனவரி

இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்

 மல்லியப்புசந்தி திலகர்

இலங்கை மலையக வரலாற்றில் கோ.நடேசய்யருக்கு என்று தனித்துவமான இடமுண்டு. 1920 களிலேயேமலையகப் பெருந்தோட்ட தொழிலாளர் மக்களிடையே தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்கி அவர்களைஅமைப்பாக்கம் செய்தவர். அத்தகைய அமைப்பாக்கத்தின் தொடர்ச்சியாகவே அந்த மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டனர்.

அதன்விளைவாக அப்போதைய நாடாளும் சபையான அரச பேரவையிலும் அந்தமக்களின் பிரிதிநிதியாக அங்கம் வகித்தார். இந்த அமைப்பாக்கத்தை அரசியல், தொழிற்சங்கசெயற்பாட்டுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளாமல், அடிப்படையில் ஒரு பத்திரிகையாளரான நடேசய்யர்தனது பத்திரிகைப் பணியையும் தொடர்ந்தார்.

அவர் ‘தேசநேசன்’, ‘தேசபக்தன்’,’உரிமைப்போர்’, ‘ The Citizen’, ‘ The Forward’, உட்பட 11 பத்திரிகைகளையும் வெளியிட்டவர். அந்தப் பத்திரிகை ஒன்றில் அவர்எழுதிய ‘ ராமசாமி சேர்வையின் சரிதம்’ என்ற கதை மலையகத்தின் முதலாவது சிறுகதையாகவும் பதிவாகிறது.

இவ்வாறு தொழிற்சங்க, அரசியல், ஊடகவியல், இலக்கியம் ( சிறுகதை), வரிசையில் நாடகத்துறையிலும்ஈடுபட்டுள்ள இவர் நூல்களை அச்சிட்டு வெளியிட்டதன் மூலம் ஒரு பதிப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்தியமலையக நிர்மாண சிற்பி கோ.நடேசய்யர்.

தனதுபதிப்பு முயற்சிபள் மூலம் ‘வெற்றியுனதே’, ‘நீ மயங்குவதேன்’, ‘ புபேந்திரன் சிங்கன் அல்லதுநரேந்திரபதியின் நகர வாழ்க்கை’, ‘ இந்தியா - இலங்கை ஒப்பந்தம்’, ‘ தொழிலாளர் சட்ட புஸ்த்தகம்’, ‘ The Planter Raj’, ‘The Ceylon & Indian Critics’ ‘கணக்குப்பதிவு நூல்’, ‘ கணக்குப் பரிசோதனை’, ‘ ஆபில் எஞ்சின்’, போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டவர்.

 

 

அந்த வரிசையில் 1937 ஆம் அவர் வெளியிட்ட நூல்களில் ஒன்று ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர்அந்தரப் பிழைப்பு நாடகம்’. இந்த நாடகத்தில் வரும் பாடல்களை எழுதியவர் ஶ்ரீமதி கோ.ந.மீனாட்சிம்மாள்என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நூலினை கோ.நடேசய்யர் யாருக்கு உரிமையாக்கியுள்ளார் என்பதுஉணர்ச்சிகரமானது.

“அந்நியர் லாபம் பெற அந்திய நாட்டில் நெற்றி வியர்வை நிலத்தில் வீழ உழைத்துப் போதிய ஊதியமும் பெறாதுஉழலும் எனது இந்திய சகோதர சகோதரிகளுக்கு இந்தூல் உரிமையாக்கப்பெற்றது” எனக்குறிக்கின்றார்கோ.நடேசய்யர். இந்த நாடக நூல் மலையகப் பெருந்தோட்ட மக்களின் வரலாற்று ஆவணம் என்றவகையில் இதனை 2018 ஆண்டு மறுபதிப்பு செய்துள்ளார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அந்தனிஜீவா.

1937 ஆம் ஆண்டுகொழும்பு கமலா அச்சகத்தில் முதற்பதிப்பாக அச்சிடப்பட்டுள்ள இந்த நூலை கொழும்பு, குமரன் பதிப்பகம் ( புத்தக இல்லம்) மறுபதிப்பு செய்துள்ளது.

இலக்கியப் பயணியான ( Literary Traveler) அந்தனிஜீவா இந்தியா சென்றிருந்த சமயம் சென்னையில்நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் பற்றிய சிறப்பிதழாகவெளிவந்திருந்த ‘மாற்றுவெளி’ இதழில் ஆங்கில விரிவுரையாளரும் நாடக செயற்பாட்டாளருமானதிருமதி.அ.மங்கை எழுதியிருந்த கட்டுரையில் இந்த நடேசய்யரின் நாடக நூலைப் படித்ததாககுறிப்பிட்டிருந்ததை அறிந்து, ரோஜா முத்தையா நூலகத்துக்குச் சென்று அந்தப் பிரதியினைப் பெற்று இந்தமறுபதிப்பைக் கொண்டுவந்துள்ளார்.

அத்துடன் அ.மங்கை எழுதிய ‘மாற்றுவெளி’ ( 2010) கட்டுரையையும் இந்தநூலில் இணைத்துள்ளார். அதில் ‘நான் அறிந்தவரையில் தமிழில் அரசியல் அரங்கம் குறித்த வரலாற்றைஎழுதுகையில் தொழிற்சங்கவாதியாகவும் அரசியலில் தீவிரமாகவும் பணியாற்றிய ஒருவரின் நாடக முயற்சியாகஇந்நாடகத்தைக் காணலாம்’ என அ.மங்கை பதிவு செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

மேலும் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கேசரி தகவல் களஞ்சியத்தில்’ ஆய்வறிஞர் மு.நித்தியானந்தன்எழுதியுள்ள கட்டுரையை இந்த நூலுக்கான முன்னுரையாகவும் இணைத்துள்ளார் பதிப்பாசிரியர் அந்தனிஜீவா.

அந்த கட்டுரையில் அற்புதமான பல தகவல்களைத் தரும் அது.நித்தியானந்தன் இறுதியாக இவ்வாறு நிறைவுசெய்கிறார்:

‘இந்த நாடகத்திற்கு நடேசய்யர் எழுதியிருக்கும் முகவுரை இலங்கையில் வாழும் இந்தியத் தொழிலாளர்களின்நிலைமை பற்றிய அரசியல் பிரகடனமாகும்.இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் தோட்டத்தொழிலாளர்கள் ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றப்பட்டு கடத்தப்பட்டுவருபவர்கள்தானே தவிர, தமதுசுயவிருப்பின் தெரிவில் வருபவர்கள் அல்லர் என்பதை நடேசய்யர் இந்நாடகநூலில் ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். இந்தத் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்கள் என்பதுதான்நடேசய்யர் இந்நூலில் உணர்த்த விரும்பும் உண்மையாகும்’.

இந்த மறுபதிப்பு நூலின் வெளியீட்டினை 2017 செப்தெம்பரில் பிரான்சில் இடம்பெற்ற உலகத்தமிழ் நாடகவிழாவில் நடாத்த பதிப்பாசிரியர் அந்தனிஜீவா எண்ணியிருந்தாலும் அது சாத்தியமற்றுப் போகவே, அதே ஆண்டுதமிழ்நாடு திண்டுக்கல் காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற மலையக இலக்கியஆய்வரங்கில் கட்டுரையாளரால் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு வெளியிட்டு வைக்கப்பட்டது.

அதனை அடுத்து 2018 ஆம் ஆண்டுகொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் அறிமுகவிழாவினை நடாத்தி இருந்தார்.

இதன்போது கிழக்குப்பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராசா ‘ஈழத்தின் முதலாவது அரசியல் நாடக நூல்’ கோ.நடேசய்யரின் ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்’ எனஆதாரபூர்வமாக உரையாற்றி இருந்தார். இந்த நாடகம் எவ்வாறு மேடையேற்றப்பட வேண்டும் என்பதனை மிகுந்த கரிசணையுடன் நூலில் குறிப்பிடுகிறார் கோ.நடேசய்யர்.

இந்த மறுபதிப்பைச் செய்து வெளியிட்ட அந்தனிஜீவா அனைவரதும் பாராட்டுக்குரியவர். அதேநேரம் இந்தநூலின் பிரதிகளை வாங்கி வாசித்து இந்த நாடகத்தை மேடையேற்றுவதே பதிப்பாசிரியருக்கும் நூலாசிரியர் கோ.நடேசய்யருக்கும் வழங்கும் கௌரவமாகும்.


மலைநாட்டுத் தமிழர்கள்

தோட்டத் தமிழர்கள், இந்திய வம்சாவளி தமிழர்கள், மலைநாட்டுத் தமிழர்கள், நாடற்றவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் எனும் பல பெயர்களில் இலங்கையின் பெருந்தோட்டங்களில், தேயிலை ரப்பர் தொழில்துறைகளில் அடிமைகள் போன்று தலைமுறை தலைமுறையாக வாழவைக்கப்பட்டிருக்கும் ‘ஒரு தமிழ்ச்சமூகம்’ பற்றிய தனது புரிதலாக, உமா மகேஸ்வரன் தலைமையில் இயங்கிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வெளியீடாக கொண்டு வந்திருக்கக் கூடியதே THE UPCOUNTRY TAMILS - The Wretched of the Earth (மலைநாட்டுத் தமிழர்கள் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட தரப்பினர் ) எனும் இந்த ஆங்கில நூல்.

இந்த நூல் குறித்த பார்வைக்கு வருவதற்கு முன் நடைமுறை அரசியலுடன் தொடர்புபடுத்திய விடயம் ஒன்றைப் பார்த்துவிட்டு வருவது பொருத்தமானது.

கடந்தவாரம் (23/01/2021)ஒரு வானொலி நிகழ்ச்சி. அதில் இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற எம்.ஏ.சுமந்திரன் நேர்காணல் செய்யப்படுகிறார். அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் உங்கள் கருத்து நிலைப்பாடு என்ன? என்பதாக இருந்தது.அதற்கான அவரது பதில்; அதற்கு ‘கூட்டு ஒப்பந்தம்’ மூலமாக தீர்வு காண்பதே சரியானதாகும். அங்கே தோட்டங்கள் தனியார் கம்பனிகளிடமே வழங்கப்பட்டுள்ளன. எனவே அவர்களோடு பேரம்பேசி கூட்டு ஒப்பந்தம் மூலம் தீர்வு காண்பதே சரி என நினைக்கிறேன்.அரசாங்கம் தலையீடு செய்வதில் எந்த பிரயோசனமும் இல்லை என்பதாக அமைந்தது.

இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கூறிய எந்த பதில் ஒரு சட்டத்தரணியின் பதிலாக, சரியானதாகவும் இருந்ததுவே அன்றி அரசியல்வாதியுடைய பதிலாக இருக்கவில்லை. அதுவும் ‘இலங்கைத் தமிழரசு கட்சியின்’ பேச்சாளராக, நாடாளுமன்ற உறுப்பினராக அந்த பதில் ஏற்புடையதாக இருக்கவில்லை.

இலங்கைத் தமிழரசு கட்சிக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்ததோடு உருவான அந்த கட்சிக்கு 70 ஆண்டுகால வரலாறு உண்டு. அந்த வரலாற்றின் ஆரம்பமே மலைநாட்டுத் தமிழர் தொடர்பானது என்பதுதான் இங்கே குறித்துரைக்கத்தக்கது.

சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் முதல் பத்து மாதங்களுக்குள் கொண்டுவரப்பட்டச் சட்டம் இந்திய வம்சாவளி மக்களின் ( மலைநாட்டுத் தமிழர் உள்ளடங்களாக) இலங்கைக் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம். இதற்கு ஆதரவாக எதிராக வாக்களிப்பது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சிக்குள்ளே ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ். ஜே.வி.செல்வநாயகம் ஆகியோரிடையே கருத்து முரண்பாடு ஏற்படவே, எஸ். ஜே.வி.செல்வநாயகம் ( தந்தை செல்வா) பிரிந்து சென்று ‘இலங்கைத் தமிழரசு கட்சி’ யை உருவாக்கினார் என்பது தொடக்க வரலாறு. அதற்குப் பின் அந்த கட்சிக்கு இற்றைவரையான நீண்ட வரலாறு இருக்கலாம்.

இது நடந்தது 1948, 1949 களில். அப்போதிருந்து 20 ஆண்டுகள் கழித்து இன்னுமொரு அரசியல் நிகழ்வு ஒன்று நடந்தது. அதுதான் ‘தமிழர் கூட்டணியின்’ உருவாக்கம். இந்தக் கூட்டணியில் அன்று பிரிந்து சென்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசும், இலங்கைத் தமிழரசு கட்சியும் இணைந்ததோடு, தாம் எதற்காகப் பிரிந்தார்களோ, அதாவது மலையகத் தமிழர்களின் வாக்குரிமைப் பறிப்புக்காக சண்டையிட்டுப் பிரிந்து கொண்டவர்கள் அதே மக்களின் அரசியல் தொழிற்சங்க அமைப்பான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும் இந்த தமிழர் கூட்டணியில் இணைத்துக் கொண்டார்கள்.

சௌமியமூர்த்தி தொண்டமானையும் சேர்த்து மூன்று தலைவர்களுமே கூட்டணியின் இணைத் தலைவர்களாகவும் இருந்தார்கள். 1976 ஆம் ஆண்டு இந்தக் கூட்டணி தமிழர் ( ஐக்கிய ) விடுதலைக் கூட்டணியாக உருப்பெற்றதோடு, வட்டுக்கோட்டையில் மாநாடு கூட்டி தனித் தமிழ் ஈழம் ஒன்றே தமிழர் விடுதலைக்கு தீர்வு என ‘வட்டுக்கோட்டை தீர்மானம்” நிறைவேற்றினார்கள். எனினும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இந்த கூட்டணியில் இருந்தும் அந்தத் தீர்மானத்தில் இருந்தும் தம்மை விலக்கிக் கொண்டது. அது சரியான முடிவும் கூட.

இந்த 1950 க்கும் 1970 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியானது ‘ இலங்கைத் தொழிலாளர் கழகம்’ என்ற தொழிற்சங்கத்தை 1962 ஆம் ஆண்டு உருவாக்கி மலையகப் பெருந்தோட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.

இவ்வாறு தமது கட்சியின் உருவாக்கத்திற்கான அடிப்படையாகவும், தாம் உருவாக்கிய கூட்டணியில் பங்காளியாகவும் மலையகத் தமிழர்களை தம்மோடு இணைத்துக் கொண்டதோடு தோட்டத் தொழிலாளர்களுக்கு என தொழிற்சங்க இயக்கமும் நடாத்திய இலங்கைத் தமிழரசு கட்சி இப்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத் தலையீடு அவசியமற்றது என்ற நிலைப்பாட்டை எடுக்குமானால் அதுவே இங்கு விசித்திரமான விடயமாக உள்ளது.

இந்த நிலையிலேயே 1976 க்குப் பின் வடக்கு கிழக்கில் தமிழர் விடுதலைக்காகத் தோற்றம் பெற்ற இளைஞர் (விடுதலை) இயக்கங்கள், மலையகத் தமிழர்கள் தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன என்பது பற்றிய பார்வை அவசியமாகிறது. அவற்றுள் ஈரோஸ் இயக்கம் தமது ‘ஈழம்’ சிந்தனைக்குள் மலையகத்தையும் சேர்த்து வரைந்திருந்தார்கள் ( Sketch ). நாம் ஈழவர், நமது மொழி தமிழ், நம்நாடு ஈழம் என்பது அவர்களது கோஷமாக இருந்தது. இது குறித்த நூல்களும் உள்ளன.

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ( புளோட்), அப்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து வெளியேறியிருந்த பெரியசாமி சந்திரசேகரனையும் ( பின்னரே மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரானார்) இணைத்துக் கொண்டு களம் இறங்கி இருந்தது. அந்த ‘புளோட்’ ( தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) மலையகத் தமிழர் தொடர்பில் எத்தகைய நிலைப் பாட்டைக் கொண்டிருந்தது என்பதை விளக்குவதே இந்த நூல்.

26 பக்கங்பளைக் கொண்ட இந்தச் சிறிய ஆங்கில நூல் அந்த அமைப்பின் பெயரிலேயே தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. அதுவும் இந்தியாவில் ( சென்னையில்) வெளிவந்துள்ளது என்பது அவதானத்துக்கு உரியது. வெளிவந்த ஆண்டு குறித்த தெளிவான பதிவு ஒன்று இல்லாதபோதும் 1983, 1985 ஆம் ஆண்டுகளில் அமைப்பின் தலைவர் உமா மகேஷ்வரன் கூறியதான இரண்டு கருத்துகள் ( Messages) நூலில் ஆண்டுகளுடன் குறிப்பிடப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. எனவே இந்த நூல் வெளிவந்திருக்கக் கூடிய ஆண்டு 1986 ஆக இருக்கலாம்.

இந்த நூலில் உமா மகேஷ்வரன் கூறும் இரண்டு கருத்துக்களை இங்கே சுருக்கமாகச் சொல்லாம்.

“வவுனியா, கிளிநொச்சி, மலையகத்தில் வாழும் தொழிலாளர்கள்( Workers), விவசாயத் தொழிலாளர்களுடன் ( Peasants) மட்டக்களப்பில் வாழும் மீனவர் சமூகமும் பாதுகாப்பும் அரணும் வேண்டி நிற்கிறார்கள்” (1983 - உரை - அண்ணாமலைப் பல்கலைக் கழகம்).

“ தோழர்களே நாம் மொழியாலும் பௌதிகமாகவும் பிரிந்து நின்றாலும் நம்மை ஒடுக்கும் ஏகாதிபத்தியம் ஒன்றுதான். அந்த எதிரியை எதிர்கொள்ள கரம் கோர்ப்பொம்” ( 1985 மேதினச் செய்தியில் சிங்கள மக்களை நோக்கி)

இவை எல்லாம் நடைமுறைச் சாத்தியம் கண்டனவா என்பதற்கு அப்பால் மலையகத் தமிழர் சமூகம் குறித்த புளோட் டின் வாசிப்பு எப்படியானதாக இருந்தது என்பதற்கு இந்த நூல் நல்ல ஆதாரமாக உள்ளது.

மலையகத் தமிழர்களின் வரலாற்றை 1842 இல் இருந்தே அணுகுவது
1947 ஆம் ஆண்டு தேர்தலில் மலையகத் தமிழர்கள் ஏழு நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றதோடு அவர்கள் மேலதிக 13 தொகுதிகளின் உறுப்புரிமையை அப்போதைய அரசுக்கு எதிராக உருவாக்கியமை
1930 களில் இருந்து மலையகத் தமிழர் எதிர்ப்பு சிங்களத் தரப்பில் தலை தூக்கியமை
1948 ஆம் ஆண்டு வடக்குத் தமிழர் தரப்பு மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்புக்கு ஆதரவாக வாக்களித்த துரதிஷ்ட்டம்.

1964 ஆம் ஆண்டு மலையகத் தமிழர்களை நாடு கடத்துவதற்கு இலங்கை - இந்திய அரசுகள் செய்து கொண்ட ‘சிறிமா சாஸ்த்திரி’ ஒப்பந்தம் ஆகியவற்றோடு இணைத்து அவர்களின் வரலாற்றை அணுகி நோக்கி இருக்கிறது. மறுபுறமாக இலங்கையில் மலையகத் தமிழர்களது,
வீடமைப்பு
நாட்கூலி
கல்வி
சுகாதாரம்
முதலான விடயங்களையும் ஆராய்ந்து தமது பார்வையை ஆழப்படுத்திக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

150 வருடகாலமாக மலையகத்தமிழர்களுக்காக உள்ள வீடமைப்பு முறைமையில் உள்ள ‘லைன்’ வீட்டு அமைப்பு முறை தொடர்பிலும் அங்கு இருக்கக் கூடிய மலசலகூட வாய்ப்புகள் ஏகாதிபத்தியவாதிகளின் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்பனவும் பதிவு பெற்றிருக்கின்றன.இதன்போது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த என்.சண்முகதாசனின் நூலில் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது எதிர்காலமும் எனும் அத்தியாயம் பற்றியும் மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ளது.

நாட்கூலி தொடர்பில் ஆராயும்போது 1984 ஆம் ஆண்டு வில்மட் பெரேரா ஆணைக்குழுவின் பரிந்முரைப்பான ஒரு நாளைக்கு 5 ரூபா 20 சதம் எனவும் மாதாந்தம் அது 135/= ஆக அமைய வேண்டும் என்ற பரிந்துரைப்பையும் சுட்டிக்காட்டி அதில் இருந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் நாட்கூலி தொடர்பிலும் அது ஏனைய தொழிலாளர்களிடத்மில் இருந்து எவ்வாறெல்லாம் வேறுபடுகின்றது என்பதாகவும் ஆய்வு செய்துள்ளது.

Master plan for Tea என அப்போது மேற்கொண்ட மாதிரி கணக்கெடுப்பு ஆய்வு ஒன்றில், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளடங்களாக மாதச்சம்பளமாக சராசரியாக 200/= வழங்கபடுதல் வேண்டும் என்ற சராசரி பரிந்துரைப்புப் பற்றியும் கூட பதிவு செய்கிறது. அந்த காலத்தில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டங்களும் ஆய்வறிக்கைகள் குறித்தும் கூட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கல்வி நிலை குறித்த ஆய்வுகளின் போது ஐந்தாம் வகுப்பு வரை மாத்திரமே கொண்ட தோட்டப் பாடசாலை முறைமை தொடர்பாக விவாதிக்கப்படுவதுடன், அப்போதைய Economic Review சஞ்சிகையில் அது குறித்து வெளிவந்த ஆய்வுக் கட்டுரையும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

சுகாதாரம் தொடர்பாக கருத்துரைக்கும் போது, அங்குள்ள குறைந்த மட்ட கூலி வழங்குதலை வெளிப்படுத்தும் ‘நிலைக் கண்ணாடியாக’ அங்குள்ள சுகாதார நிலை நிலவுவதாக கருத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் மிக முக்கிய தகவலாக ஒரு விடயம் பதிவாகி உள்ளது. அதாவது நாடு முழுவதும் இலவச சுகாதார சேவை நடைமுறையில் உள்ளபோது தோட்டத் தொழலாளர்கள் அந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ள தோட்ட நிர்வாகம் வருடாந்தம் ஒரு தொழிலாளிக்கு 3 ரூபா 50 சதம் வீதம் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தாமல் விடுவதனால் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவையான சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்ள அரச மருத்துவ மனைகளுக்கு தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை அனுப்புவதில்லை. தாம் நடாத்தும் தோட்ட வைத்திய நிலையங்களில் ஏதாவது ஒரு மருந்தைக் கொடுத்து சமாளித்து விடுவார்கள்.

அப்படியே தோட்ட நிர்வாகம் அரசுக்கு ஆண்டுதோறும் 3 ரூபா ஐம்பது சதம் செலுத்துவதாக இருந்தாலும் அவை தொழிலாளியின் உழைப்பில் இருந்தே கழிக்கப்பட்டு செலுத்தப்படும். எனவே எல்லோருக்கும் இலவச சுகாதார சேவை என இந்த நாட்டில் இருக்க தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் (தோட்ட நிர்வாகம் ஊடாக ) பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.

இந்த முறைமை அவர்களது நாட்கூலியைக் குறைக்கும் என்பதையும் அதாவது இதனை அரசாங்கத்துக்கு செலுத்தும் தோட்ட நிர்வாகம் அதனை தொழிலாளிக்கான சேவையின் ஒரு பகுதியாக சேர்ப்பதனால் நாட் கூலியை உயர்த்த தயங்கிவருகின்றன.

இந்த நூல் 1980 களின் நடுப்பகுதியில் வெளிவந்த போது இருந்த நிலைமையே இப்போதும் தொடர்வது எத்தனை துரதிஷ்டமானது. கடந்த 2021-01-20 ஆம் திகதி Daily Mirror ஊடகத்துக்கு கருத்துத் தெரிவித்து இருக்கும் முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை இவ்வாறு கூறுகிறார்:

“தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் முதல் சுகாதார சேவை அரசாங்கம் பெற்றுக் கொடுப்பதில்லை. தோட்டக் கம்பனிகளே பெற்றுக் கொடுக்கின்றன. அந்த தொழில் துறையின் பலம் பலவீனத்தை அதனை செய்பவர்களே அறிவோம். உண்மையில் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தலையிடக்கூடாது” ( ரொஷான ராஜதுரை - முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் -

“The Government does not provide for these workers. From salaries to medical facilities, it is the tea companies that are looking after these plantation workers. First of all, the government really should not get involved in wage setting because it is only those who are in the business know the strengths and weaknesses of the sector. Anyone can give political promises. But, when practically speaking, fulfilling such promises is not possible at the moment,” Mr. Rajadurai said.( Daily Mirror 20-01.2021)

இந்தக் கருத்து தோட்டப் பகுதி சுகாதார துறையில் அரசாங்கம் ஈடுபடவில்லை என்பதைக் காரணம் காட்டி எவ்வாறு கூலி உயர்வு மறுக்கப்படுகிறது என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும்.எனவே கூலி உயர்வு விடயத்தில் அரசாங்கம் தலையிடக் கூடாது என முதலாளிமார் சம்மேளனம் கேட்பது போலவே, இந்த மக்களும் இலங்கை நாட்டின் பிரஜைகள் எங்களுக்கு அரச சுகாதார சேவையை வழங்கு, அதற்காக தோட்டக் கம்பனிகள் கழித்துக் கொள்ளும் தொழிலாளர்களின் ஊதியத்தின் ஒரு பகுதியை நட்கூலியில் சேர்த்துக் கொடுத்தல் அவர்களது சம்பளமும் கூடும் கம்பனிகளிடம் அடிமையாக வாழும் நிலைமையும் மாறும் என்பதற்காகவே அரசாங்கத்தின் தலையீடு வேண்டப்படுகிறது என்பதனை அரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும் இன்றைய நிலையில் கம்பனிகளின் பிரதிநிதிகளைப் போலவே அரசியல் பிரதிநிதிகளும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியமில்லை என்ற மனப்பாங்கைக் கொண்டிருப்பது துரதிஷ்டவசமானது.

எம்.ராமலிங்கம் ( ராகலை) - ஈரோஸ் சார்பாக மலையகத்துக்கு என தேசிய பட்டியல் நிமனம் பெற்றவர்.

இந்த நூலைப் பொறுத்தவரை புளோட் இயக்கத்தின் பிரசார ஏடாக மலையகத் தமிழர்களை தமது அமைப்பு சார்ந்து கவர்வதற்கான அதுவும் இந்திய வம்சாவளியினரான அவர்கள் பற்றி இந்தியாவில் வெளியிட்ட நூல் என்பதன் அடிப்படையிலேயே நோக்க வேண்டி இருக்கிறது. இந்த நூலில் மலையகத் தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகளைச் சுட்டுக்காட்டும் புளோட் அமைப்பு ஒன்றில் அவர்கள் மலையகத்தில் தொடர்ந்து வாழலாம் அன்றில் வடக்கில் வன்னியில் வந்து குடியேறலாம் அதற்கு தாம் உறுதுணையாக இருப்போம் என்பதாக தெரிவித்துள்ளது. அத்தகைய தெரிவை மேற்கொண்ட மலையகத் தமிழர்களின் வன்னி, கிளிநொச்சி வாழ்க்கை அவலம் குறித்து தனியாக ஒரு நூல் எழுதலாம்.

ஆனாலும் மலையகத் தமிழர்கள் குறித்த அரசியல் உரையாடலைச் செய்வதற்கு அந்த மக்கள் குறித்த வரலாற்று பூர்வமானதும் தத்துவார்த்த ரீதியுமான ஆய்வுகள் அவசியம் என்பதற்கு இந்த நூல் ஆதாரமான ஒரு சான்றாக அமைந்துள்ளது எனலாம்.

(முற்றும்)


ஆறாவடுவின் தொடர்ச்சியாக அஷேரா

 - மல்லியப்புசந்தி திலகர்
1990 களில்தான் ஐரோப்பிய நாட்டில் வாழும் இலங்கையர் ஒருவர் இலங்கை வந்திருந்தபோது முதன் முறையாக புலம்பெயர்ந்த ஒருவரை சந்தித்த அல்லது பார்த்ததாக நினைவு. அப்போது அவரை வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் என்றுதான் அழைத்தோம். புலம்பெயர்ந்தவர் என்ற சொல்லே அப்போது தெரியாது. அவர் அழகாக இருந்தார். அவர் ஆங்கிலம் பேசும் அழகே தனியாக இருந்தது. அவரது நடை, உடை பாவனை, இலங்கை குறித்த பார்வை ( ஏளனமாக என்றுகூட கொள்ளலாம்) புலம்பெயர்ந்தவர்கள் ஒரு வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள், அவர்கள் எல்லோருமே இப்படித்தான் இருப்பார்கள் எனும் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி இருந்தது என்னவோ உண்மைதான்.

2010 க்குப்பிறகு சந்திக்க்கிடைத்த அந்த ‘வெளிநாட்டுக்காரர்களில்’ வேறு விதமானவர்களும் இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளும் அளவுக்கு பலருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்படியானவர்கள் பலரைப் பார்த்து, பழகியபின் 90 களின் பார்வை மாறியதும் உண்மையே.

ஆனால் 2018 ல் சுவிஸ் - பேர்ன் நகரில் சந்திக்கக் கிடைத்த அல்லது பார்க்கக் கிடைத்த புலம் பெயர்ந்த ஒருவரைப் போல அதற்கு முன்னரோ அல்லது பின்னர் இலங்கையிலோ வெளிநாட்டிலோ காணக்கிடைக்கவில்லை. சயந்தனின் ‘அஷேரா’ வில் வரும் அற்புதம் எனக்கு அந்த ‘பேர்ன்’ ஈழத்தமிழர் போலவே தெரிந்தார்.

முதல் தடவையும் மூன்றாவது தடவையும் சுவிஸ் சென்றிருந்த பொழுதுகளில் சுவிஸ் மலைகளைத் தரிசிக்க என்னை அழைத்துப் போயிருந்தார் சயந்தன். அவர்தான் அஷேரா எனும் இந்த நாவலின் ஆசிரியர். அந்த மலைகள் பற்றி அல்லது ஏரிகள் பற்றி எனக்கு விளக்கிச் சொல்வார் சயந்தன். அந்த வரலாறுகள் பெரிதாக புரியாதபோதும் சாராம்சத்தைப் புரிந்து கொள்வேன்.அப்படித்தான் அஷேரா என்ற பாத்திரப் பெயர் பற்றிய புரிதல் எனக்குள் நிகழ்ந்திருக்கிறது எனலாம். ஆனால் அந்த பின்னணியில் தமிழீழ போராட்ட அரசியலை முன்வைத்து முன்னகரும் நாவலின் பிரதான பாத்திரமாக வரும் அருள்குமரன் சயந்தனைப் போல தோற்றம் கொண்ட ஒருவராகவே வாசிப்பின்போது என்னோடு உலாவந்தார்.

இரண்டாவது சுவிஸ்பயணத்தில் அந்த அற்புதம் போன்ற ஈழத்தமிழரைச் சந்தித்த காசு மாற்றும் கடையின, (Exchange ) கவுண்டரில் உட்காரந்திருந்த பெண் பெயர் அபர்ணாவாக இருக்குமோ என எண்ணினேன். நாவலில் வரும் அபர்ணா அப்படித்தான் கொழும்பில் இருந்து புலம்பெயர்ந்த யாழ்ப்பாண பெண். ஈழப்பிரச்சினையை கொழும்பில் இருந்து பத்தரிகையில் பார்த்தே பிரச்சினையாகி சுவிஸ் அகதியாகியிருந்தார். அருள்குமரனும், அபர்ணாவும் நடந்து திரியும் வீதிகள் நானும் சயந்தனும் நடந்து திரிந்த வீதிகளாக அந்நியமின்றி இருந்தன.

‘கந்தன் கருணைப் படுகொலை’ என்றால் என்னவெற தெரிந்தாலும், அது எப்படி நடந்தது என அண்மையில் ஒரு முகநூல் பதிவில் வாசிக்க கிடைத்தது. அந்தப் பதிவு அதில் இருந்து தப்பிய ஒரு தைரியமான ஒருவரால் வழங்கப்பட்ட வாக்குமூலமாக பதிவாகி இருந்தது. அது அற்புதமெனும் எனும் பின்னாளில் தைரியம் குன்றிப்போன ஒருவரின் வாக்குமூலமாக அஷேராவில் பதிவாக்கம்பெறுகிறது. கந்தன் கருணைப் படுகொலைக்கு அகப்பட்டவர்களில் 80 களில் உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்விகற்று சித்திபெற்ற மருத்துவ பீடத்துக்கு தெரிவான மலையக இளைஞர்கள் ஓரிருவரும் இருந்தனர் என மிக அண்மையில் உறுதியான தகவல்கள் கிடைத்திருந்தன. புலிகள் அவர்களைக் கொல்லும் காட்சிகள் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்.

சுவிஸ் ரவி எழுதிய ‘குமிழி’ நாவலில் வரும் ‘புளோட்’ கதைகள் பல அஷேராவிலும் வருகின்றன. அந்த தமிழகப் பண்ணையார் வீட்டுக்குத் தப்பிப்போன நிலையில் வந்த காட்சிகளை குமிழியிலும் வாசித்த போதும் அஷேராவில் பண்ணையாரையும் சுட்டுக் கொன்ற போது, இந்த ஈழப்போர் இந்தியாவில் ராஜீவ் காந்தியை மட்டும் கொல்லவில்லை எனும் எண்ணத்தைத் தந்தது. தனது சொந்தங்களையே உப்புக்கண்டம் போடும் அளவுக்கு கொடூரமான பயிற்சி பாசறைகள் தமிழ் இயக்கங்களில் இருந்தன என்பதை எத்தனை பேர் நம்புவார்கள்.குமிழி, அஷேரா போன்ற நாவல்கள் இதனைப் பதிவு செய்கின்றன.

 அஜித் போயகொட வின் ‘நீண்ட காத்திருப்பு’ எனும் நினைவுப் பதிகையை அண்மையில்தான் வாசிக்க கிடைத்தது. இலங்கையின் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட இராணுவத்தரப்பின் அட்டூழியங்களையே படிக்கும் தமிழர்தரப்பு வாசிக்க வேண்டிய நூல் அது.அந்த அஜித் எனும் கப்டன் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்த சூழலின் ஒரு பாத்திரமாக அஷேராவில் வந்து போகிறார். அந்தச் சூழலில் அவரது சிங்களத்தை தமிழுக்கு மொழிபெயர்க்கும் அவந்தி சிங்களத் தாய்க்கும் மலையகத்தமிழ் தந்தைக்கும் பிறந்தவள். அவள் பின்னாளில் வாழும் ஒருகொடவத்தை சேரி, தக்‌ஷிலா சுவர்ணமாலி எழுதியுள்ள ‘பொட்டு’ சிறுகதைச் சூழலில் வரும் சேரியை மனதுக்குள் கொண்டு வருகிறது. கொழும்பு 7 குண்டுவெடிப்புகளுக்கு அப்பாவிகளின் சேரிகளை அபகரித்துக் கொண்ட அரசியலை ‘பொட்டு’ போலவே அஷேராவும் பேசுகிறது. அதேபோல மருதானை பொலீஸ் நிலையம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பும், அருகே சென்ற வாகனத்தில் பயணித்த பாலர் பள்ளி சிறுவர்களின் கதறல்களும் அப்போது கொழும்பில் வாழ்ந்த என்னைப் போன்றவர்களுக்கு அந்நியமாகத் தெரியவில்லை.

கொழும்பு நூலக ஆவணவாக்கல் சபை பகுதியில் ஏதோ ஆவணங்களைத் தேடச் சென்ற வேளை வாசிக்க கிடைத்த கட்டுரை, வி.டி.தர்மலிங்கம் எழுதிய ‘மலையகம் எழுகிறது’ எனும் நூலுக்காக இர.சிவலிங்கம் எழுதிய முன்னுரை. வெளிவராத அந்த நூலின் முன்னுரை நூலினை வெளியிடத் தூண்டியது. அந்தப் பணியை சயந்தன் உள்ளிட்ட ‘எழுநா’ நண்பர்கள் சில காலத்தில் செய்து இருந்தார்கள். அதன் பிரதிகளைப் பெற்றுக் கொள்ள தமிழகம் சென்ற போது பதிப்பக பொறுப்பாளர் வேடியப்பன் இதனையும் கொடுக்கச் சொன்னார் கொடுத்த ஒரு பிரதி ‘ஆறாவடு’.

ஆறாவடு சயந்தனின் முதல் நாவல். கொடைக்கானல் தொடங்கி ஊட்டி போகும் பஸ் பயணத்தில் வாசித்து முடித்த அதே வேகத்தில் என்னால் அஷேராவையும் வாசிக்க முடிந்தது. இடையில் வெளியான ‘ஆதிரை’ இந்த வேகத்தில் செல்லவில்லைதான். ஆனாலும் பல விமானப் பயணங்களில் வாசிக்க முடிந்தது. ஆதிரை வன்னி வாழ் மலையகத் தமிழர்களையும் இணைத்த புதினம். அஷேராவிலும்கூட ‘தமிழ்நாட்டின் சிலோன்காரர்களை’ நினைவுபடுத்திச் செல்கிறார் சயந்தன்; அருள்குமரன் ஊடாக.
ஆறாவடுவின் தொடர்ச்சியாக அஷேராவைப் பார்க்கவும் முடிகிறது. ஈழப்பிரச்சினையோடு

அகதிகளாக ஐரோப்பாவில் தஞ்சம் கோரி நிற்கும் ஏனைய நாட்டினரையும் குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டவரையும் அஷேராவில் வாசிக்க முடிகிறது. ஆறாவடு இத்ரிஸ் கிழவனையும் நினைவுறுத்தியபடி.

நாவல் கூறும் நுட்பத்தில் புதுமை செய்யும் சயந்தனின் அஷேரா, நாடக காடசிகள் போல மாறி மாறி வருகிறது. வாசகன் நிதானித்து காட்சிகளை கட்டமைத்துக் கொள்ளவும் முன்பின் அத்தியாயங்களைத் தொகுத்துக் கொள்ளவும் வேண்டிய தேவை இருக்கிறது.ஆதிரையில் சயந்தனுக்கு வர மறுத்த தூஷண வார்த்தைகளை அஷேராவில் வலுக்கட்டாயமாக இழுத்து வரும் சயந்தனில் (அந்த விடயத்தில்) தடுமாற்றமே தெரிகிறது. ஆனால் காமத்தை பேச முனைவதில் அவருக்கு இருந்த தயக்கத்தை உடைத்துக் கொண்டு வர முயற்சிக்கிறார். இது காலத்தால் வந்த மாற்றம் என்கிறார் சயந்தன்.

ஒவ்வொரு நாவலும் எழுதப்பட்ட கால இடைவெளிகளுக்குள்ளும் இலக்கியம், வாழ்க்கை, அரசியல் பற்றிய புரிதல்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வந்திருக்கின்றன. என்னால் (தன்னால்) உணரக்கூடிய பெரிய மாற்றம் என்பது, ஆதிரை நாவலை எழுதும் போது, இனத்தின் கதையை,சமூகத்தின் கதையை, நியாயத்தைச் சொல்லவேண்டும் என்ற உந்துதல் அதிகம் இருந்தது. இன்று தனிமனிதர்களின் கதையை, நியாயத்தைச் சொல்வதில் கரிசனை’ என்பது சயந்தனின் முன்வைப்ப அல்லது வாக்குமூலம்.

இந்த மாற்றத்துக்கு சயந்தனுக்குள் நடந்திருப்பது வாசிப்பு. அது தனிநபர் உளவியல், சமூவியல், சமூக உளவியல் என பலதரப்பட்ட தாக்கத்தை சயந்தனுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்தத் தனிமனிதக் கரிசனையில் காம உணர்வுகளின் பக்கம் கவனம் அதிகம் போனது அல்லது எல்லா பாத்திரத்திலும் அதனைப் பொருத்திப் பார்க்க முனைவது சில இடங்களில் அபத்தமாகவும் தெரிகிறது.

அற்புதத்தின் உளவியலைச் சொல்வதில் வரும் பரிவு அருள்குமரனில் மாறுபட்டு நிற்கிறது. பெண்களின் பாலியல் சார் உளவியலைச் சொல்லவரும்போதும் ஆண்மனது எட்டிப்பார்க்கிறது.

ஒட்டுமொத்தமாக, ஈழப்போராட்டம் எனப்புறப்பட்டவர்களினதும் அதனால் பாதிக்கப்பட்டவர்களினதும் தனிமனித உளவியல், சமூக உளவியல் தாக்கங்களின் ஊடே ஈழப்போராட்டத்தின் சமூகவியலைப் பதிவு செய்ய முனைகிறது அஷேரா. அருள்குமரன்தான் கதை முழுதும் வந்தாலும் அவருடன் கூடவே வரும் அற்புதம் மனதில் ஒட்டிக் கொள்கிறார்.

அந்த அற்புதம் சுவிஸ் - பேர்ன் நகரில் காசு மாற்றும் கடையில் கண்ட ஒருவரின் உருவத்தை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார். அவர் 90 களில் கண்ட வெளிநாட்டுத் தமிழரைப் போல ஆடம்பரமாக இல்லை. ஆங்கிலத்திலும் பேசவில்லை. தமிழில்தான் தானாக பேசிக் கொண்டு திரிந்தார் . ஆடைகளில் ஏதேதோ லேபல்களை ஒட்டியிருந்தார். அதில் ஈழ வரைபடமும் இருந்தது.தாடி வளர்த்து இருந்தார்.கையில் ஒரு கொடியை தோளில் சாய்த்தபடி வைத்து இருந்தார். முதிய தோற்றமும் வேறு. எப்போதோ ஒரு இயக்கத்தில் இருந்திருக்க வேண்டும். சுவிஸ் - பேர்ன் நகரில் இப்படி தலைவிரிகோலமாய் சுயநினைவிழந்து சுற்றித்திரிவதை பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது.அவரை நான் பரிதாபமாக பார்ப்பதை நக்கலாகப் பார்த்த அபர்ணா போன்ற தோற்றத்துடன் கவுண்டரில் அமர்ந்திருந்த அந்த இளவயது ஈழ அகதியான சுவிஸ் ஈழப்பெண் அற்புத்த்தையும் கூட அப்படியே பார்த்தாள்.

அஷேரா - ஆறாவடுவின் தொடர்ச்சி என சொல்வது நாவலின் தொடர்ச்சி என்ற பொருளில் மட்டுமல்ல. வாசிக்க வேண்டிய நாவல் அஷேரா. 2021 சனவரியில் ஆதிரை பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘அஷேரா’ இலங்கையில் பரவலாக கிடைக்கிறது.

 


நாடற்ற - நிலமற்ற - அதிகாரமற்ற இலங்கை பெருந்தோட்ட சமூகத்தின் காணி உரிமையும் வீட்டு உரிமையும்

மல்லியப்புசந்தி திலகர்
நிலம், சமூக பொருளாதார இருப்புக்கான அடிப்படையாக அங்கீகரிக்கப்படும் நிலைமை அதிகரித்துவரும் நிலையில் இலங்கையில் நிலம் தொடரான ஒரு பிரச்சினையாகவே இருந்துவருகிறது. குடும்ப மட்டத்தில் மாத்திரமல்லாது சமூக மட்டத்திலும் நிலம் பிரச்சினைக்குரிய ஒரு விடயமாகவே அமைந்துள்ளது. அது உணர்வுபூர்வமானதும் அரசியல் சார்ந்தமுமான பிரச்சினையாகவும் கூட இருக்கிறது. அரசாளுவோர் தங்களின் அதிகாரத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் கருவியாகவும் இதனைக் கையாள்கின்றனர்.
நிலமானது வீடு, வேலை, உணவு உள்ளிட்ட இன்னும் பல மனித உரிமைகளுடன் பிணைக்கப்பட்ட ஒரு விடயமும் ஆகும். நிலத்தைக்கான உரிமை என்பது, ஒரு குழுவினரின் அடையாளமாக, வாழ்வாதாரமாக, ஏன் பிழைத்துவாழ்தலுக்கான அடிப்படையாகக்கூட அமைகிறது. ஏனைய மனித உரிமையை அனுபவிப்பதற்கான முன் நிபந்தனையாக நிலவுரிமை அமைதல் வேண்டும்.ஆனாலும் நிலவுரிமை சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளூரிலும், உள்நாட்டிலும் , சர்வதேசத்திலுமே போதியளவு பேசுபொருளாவதில்லை. ஏனெனில் நிலம் சார் பிரச்சினைகள் சிக்கலானவையானதாகும்.
மேற்படி குறிப்பினை பின்னட்டையில் தாங்கியவாறு இலங்கை மலையகப் பெருந்தோட்ட மக்களின் காணிப் பிரச்சினைகளையும் அதனோடுனைந்த வீட்டுப்பிரச்சினையையும் உள்நாட்டு , சர்வேச சட்டங்கள், மனித உரிமை வாசகங்கள், ஐ.நா பொது உடன்மாடுகள் என பலகோணங்களில் நின்று ஆராயும் ஆய்வறிக்கை ‘நாடற்ற - நிலமற்ற - அதிகாரமற்ற இலங்கை பெருந்தோட்ட சமூகத்தின் காணி உரிமையும் வீட்டு உரிமையும்’ ( Stateless,Landless, Powerless - Land & Housing Rights of Plantation Community in Sri Lanka )
கண்டி, மனித அபிவிருத்தித் தாபனம் 2012 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கை இன்றைய திகதிக்கும் கூட பொருத்தமானதே. நிறுவனத்தின் தலைவர் பி.பி.சிவப்பிரகாசம் எழுதியுள்ள இந்த ஆய்வறிக்கை அறுபது பக்க சிறு நூலாக நான்கு அத்தியாயங்களைக் கொண்டதாக தொகுக்கப்பட்டுள்ளது.
முதலாவது அத்தியாயத்தில் அறிமுக குறிப்பாக காணி உரிமையும் மனித உரிமையும், உள்நாட்டு - சர்வதேச காணிச் சட்டங்கள், காணி உரிமைகள்தொடர்பான சர்வதேச சட்ட கட்டமைப்புகள், வீட்டுக்கான உரிமை, பெருந்தோட்ட சமூகத்தின் காணி உரிமை, வீட்டுரிமை பிரச்சினைகள், இந்த கற்கைக்கான அடிப்படைகள், நோக்கங்கள், முறைமை தொடர்பாக விபரிக்கப்படுகிறது.
இரண்டாவது அத்தியாயம் இலங்கைப் பெருந்தோட்டத் துறையின் திகில்நிலையும் எழுவினாக்களும், இலங்கைப் பெருந்தோட்டச் சமூகம், காணிப்பிரச்சினைகள், நிலநீக்கஞ்செய்யப்பட்ட பெருந்தோட்ட சமூகம், பெண்கள்- காணி- வீட்டு உரிமைகள், பிரஜாவுரிமையும் காணி மறுசீரமைப்பும், பெருந்தோட்டங்களின் தனியார் மயமாக்கம், பெருந்தோட்ட சமூகமும் காணி சார்ந்த பிரச்சினைகளும் முதலான விடயங்கள் ஆராயப்படுகின்றன.
மூன்றாவது அத்தியாயத்தில் சமகால பெருந்தோட்ட காணி பிரச்சினைகள், காணியும் அபிவிருத்தியும் தொடர்பான பிரச்சினைகள், மேல்கொத்மலை நீர்மின் திட்டம், பிரதேச சபைகளின் சேவைகள், கானல்நீராகிப் போயுள்ள காணியும் அபிவிருத்தியும் போன்ற விடயங்கள் ஆராயப்படுகின்றது.
நான்காம் அத்தியாயம் எதிர்காலத்திட்டம் பற்றியும் பரிந்துரைபளையும் வழங்குகிறது. இந்த ஆய்வினைப் பொருத்தவரையில் நான்காம் அத்தியாயம் முக்கியமான அம்சங்களைத் தாங்கி வந்துள்ளது எனலாம்.இலங்கை சர்வதேச மனித உரிமை சமவாயங்களில் கையெழுத்திட்டுள்ள CERD ( இனப்பாகுபாட்டை ஒழித்தல்), ICCPR ( சர்வதேச அரசியல் குடியியல் உரிமை), ICESCR ( சர்வதேச சமூக பொருளாதார கலாசார பண்பாட்டு உரிமைகள்) CRC ( குந்தை நல உரிமைகள்), MWC ( புலம்பெயர் தொழிலாளர்கள்) CEDAW ( பெண்களுக்கு எதிரான பேதப்படுத்தலுத்தலை ஒழித்தல்) முதலான சமவாயங்களின்படி மலையகப் பெருந்தோட்ட காணி - வீட்டு உரிமைகளை அணுகும் மூலோபாயங்களை முன்வைக்கிறது.
இதற்கு தற்போதைய தொழிற்சங்க - அரசியல் தளத்திற்கு அப்பால் சென்ற மக்கள் நோக்கிய அரசியல் முன்வைப்பு ஒன்றையும் வேண்டி நிற்கிறது. சமூக பொருளாதார அரசியல் அதிகாரங்கள் மக்களுக்கு கிடைக்கத்தக்கதான பணிகளை நோக்கியதாக அரசியல், தொழிறசங்க, சிவில் சமூக, அரச்சார்பற்ற நிறுவனங்களின் இயக்கம் அமைதல் வேண்டும். பெருந்தோட்ட சமூகமானது சமத்துவமான சமூகநீதி மிக்க நிலைபேறான அபிவிருத்தியை அடையும் இலக்கினைக் கொள்ளுதல் வேண்டும்.
இந்த ஆய்வறிக்கையானது பின்வரும் பரிந்துரைகளையும் முன்வைக்கிறது.
  • இலங்கை அரசும் அரசாங்கமும் காணி, காணி பயன்பாடு தொடர்பில் பொதுக் கொள்கை ஒன்றை வகுத்தல் வேண்டும்.அரச காணிகள் மாத்திரமின்றி தனியார் காணிகள் தொடர்பிலும் உள்ளூர், மாகாண, தேசிய மட்ட கலந்துரையாடல்கள் அவசியமானது.

  • இலங்கை அரசானது சுயாதீன காணி ஆணைக்குழு ( காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு அப்பால்) ஒன்றை அமைப்பதுடன் அதன் மாகாண கிளைக் காரியாலயங்களும் அமைக்கப்பட்டு வினைத்திறனான காணிப் பயன்பாடும் கொள்கையும் நிகழ்ச்சிநிரலும் கொண்டதாக மக்களின் காணி உரிமை உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

  • காணி தொடர்பிலான மக்களிடையே சமூகங்களிடையே ஏற்பட்டிருக்கக்கூடிய முரண்பாடுகளுக்கு தீர்வு காணக்கூடிய மூலோபாய திட்டங்கள் வகுக்கப்படுதல் வேண்டும்.

  • காணி தொடர்பான கொள்கையாக்கம்,காணி வரைபு, காணி அளவீடு, காணிப்பகிர்வு காணி குறித்தான தகவல்கள் உள்ளூர்,மாகாண,தேசிய மட்டத்தில் சமுதாய சிவில் சமூக கலந்துரையாடல் ஊடாக வெளிப்படைத் தன்மையுடன் பகிரப்படுதல் வேண்டும்.

  • பொதுவசதிகள் உடனான வீடமைப்புக்கும் மேலதிக வருமான மீட்டலுக்கும் ஏற்றதாக பெருந்தோட்ட சமூகத்தினருக்காக உருவாக்கப்படுதல் வேண்டும்.

  • தற்போதைய காலங்கடந்த லயன் வாழ்க்கை முறை மாற்றப்பட்டு அரச, பெருந்தோட்ட,தனியார்தோட்டங்களில் வதியும் அனைத்து குடும்பங்களுக்கும் வீடமைப்பு காணிகளாக 20 பேர்ச்சர்ஸ் வழங்கப்படுதல் வேண்டும்.

  • ஒவ்வொரு பெருந்தோட்ட குடும்பம் ஒன்றுக்கும் இரண்டு ஏக்கர் காணி வாழ்வாதார தேவைக்காக வழங்கப்படுதல் வேண்டும்.

இத்தகைய பரிந்துரைகளைச் செய்யும் அதேவேளை அதற்கான நியாயப்பாடுகளையும் அறிக்கை ஆதாரபூர்வமான தகவல்களுடன் முன்வைக்கிறது.
மலையகத் தமிழர் சமூகமானது தேசிய நீரோட்டத்தில் இருந்து நீண்டகாலமாகவே விலக்கி வைக்கப்பட்டுள்ளது. அடிமைக்கூலி முறைமை போன்று வைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் காணி முதல் பல்வேறுபட்ட விதங்களில் அந்நியமாக்கப்பட்டுள்ளார்கள். 2009/2010 கணக்கெடுப்புகளின்படி 1.1 மில்லியன் சனத்தொகை சராசரி 4.3 குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையில் அண்ணளவாக 255813 குடும்பங்கள் பெருந்தோட்டப் பகுதியில் வாழ்கின்றனர்.
அரச, பெருந்தோட்ட பிராந்திய கம்பனிகள் வசம் சுமார் 250320 ஹெக்டேயர் காணிகள் காணப்படும் அதேவேளை 178092 ஹெக்டேயர் காணிகளே பயிர் பயன்பாட்டில் உள்ளது. ஏறக்குறைய 70000 ஹெக்டேயர் காணிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. அவை பிராந்திய கம்பனிகள் மட்டத்தில் 57442, ஜனவசம 6000, அரச பெருந்தோட்ட யாக்கங்கள் 5000 ஹெக்டேயர்கள் என ஏறக்குறைய மொத்த பயிர் காணிகளில் 25 சதவீதம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
பயன்படுத்தப்படாமல் உள்ள காணிகளை பகிர்நதளிக்கப்பட உள்ளதாக தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அறிவிக்கின்ற போதும் அவை பெருந்தோட்ட சமூகம் சார்ந்து நடைமுறைக்கு வரவில்லை. இரண்டுலட்சம் குடும்பங்கள் என சராசரியாக்க் கொண்டு தலா குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் எனக் கொண்டாலும் அது 40 லட்சம் பேர்ச்சஸ் ஆக அமையும். அதாவது சுமார் 10 ஆயிரம் ஹெக்டேயர்களே ஆகும்.. எனவே சுமார் 70 ஆயிரம் ஹெக்டேயர் பயன்படுத்தப்படாத நிலத்தில் ஏழில் ஒரு பங்கு நிலத்தைப் பகிர்ந்து அளித்தாலே தலா ஒரு குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் காணி என்ற அடிப்படையில் வீடமைப்புக்காக ஒதுக்க முடியும்.
இருநூற்றாண்டு காலமாக உழைக்கும் வர்க்கமாக நிலமற்ற சமூகமாக வாழும் மலையகப் பெருந்தொட்ட சமூகத்திற்கு காணி அல்லது நிலம் ஏன் அடிப்படை உரிமையாக அமைதல் வேண்டும் என்பதனை மனித உரிமை கண்ணோட்டத்துடன் முன்வைக்கும் இந்த நூல் அரசியல் கொள்கை வகுப்பாளர்கள், அரசியல் சமூக ஆர்வல்களின் வாசிப்புக்கு உள்ளாவது அவசியம்.

சிந்தனா மொழியை எழுத்துப்பிரதிகளாக்க முனையும் 'மந்திரிக்கப்பட்ட சொற்கள்'

மல்லியப்புசந்தி திலகர்

மனிதர்கள் ஒவ்வொருவரும் தனக்கான சிந்தனா மொழி ஒன்றை கொண்டே இயங்குகின்றனர். அதனை, தான் கற்றுக் கொள்ளும் மொழிகளால் வெளிப்படுத்துகின்றனர். தனது தாய்மொழியே பெரும்பாலும் சிந்தனா மொழியாக அமைவதுண்டு. அல்லது சிறு வயதுமுதலே தாய்மொழி அல்லாத வேறு மொழியில் பரிச்சயம் பெறும் ஒருவர் அதே மொழியிலேயே சிந்திக்கவும் கூடும். சிந்தனா மொழியில் இருந்து தான் கற்றுக்கொண்டுள்ள வேறு மொழியில் பேசும்போது தனக்குள்ளேயே ஒரு மொழிபெயர்ப்பு இடம்பெறுகின்றது.

அந்த மொழி பெயர்ப்பின் திறமையே சரளமாக ( fluent) பேசுவதன் அளவிடையாகிறது. சில சந்தர்ப்பங்களில் தான் சிந்திக்கும் தாய்மொழியையே தாய்மொழியிலேயே மொழிபெயர்ப்பு செய்து மற்றைவர்களுக்கு புரியும் படியாக எழுதும்போது அல்லது பேசும்போது அதனை புனைவு அல்லது அபுனைவு எனலாம். புனைவு அல்லது அபுனைவு அல்லாது தான் சிந்திக்கிற அதே மொழிதலை அப்படியே எழுத்துரு ஆக்கி, வெளியே அடுத்தவர் வாசிக்க வெளியீடாக ( Out put ) தர முடியுமெனில் அத்தகைய எழுத்துப்பிரதிகள் மிகவும் வித்தியாசமான தன்மையைக் கொண்டிருக்கும். அத்தகைய வித்தியாசமான ஒரு பிரதியே இமாம் அத்னான் எழுதி இருக்கும் ‘மந்திரிக்கப்பட்ட சொற்கள்’.

அப்படியான ஒரு தொகுப்பொன்று ஈழத்திலிருந்து தமிழ்ச்சூழலுக்கு வருவதையிட்டு சந்மோஷமாக உள்ளது என இந்த நூலிக்கான பின்னுரையை எழுதி இருக்கும் கவிஞர் ரியாஸ் குரானா குறிப்பிடுகிறார்.

சில பிரதிகளுக்கான குறிப்புகளை முன்னீடுகளாக அல்லாது பின்னீடுகளாக எழுதவேண்டும்.குறிப்புகள் வாசகனை பிரதி நோக்கி ஆற்றுப்படுத்துபவனவாக அல்லாமல் வாசித்த பின்னர் அல்லது நுகர்ந்த பின்னர் வாசகனுடனான அனுபவத்தை கலந்துரையாடுவதாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் கா.சிவத்தம்பி ( மல்லியப்புசந்தி - (2007) பின்னுரை). அவ்வாறு வாசகனுடனான கலந்துரையாடலாக அமையும் ரியாஸ் குரானாவின் பின்னுரையுடனேயே இந்தப் பிரதி நூலாக்கம் பெற்றிருப்பது இன்னுமொரு சிறப்பு. உண்மையில் இந்த நூலை வாசித்து முடிக்கும் வாசகனுடன் ஒரு கலந்துரையாடல் இடம்பெறுவதை பின்னுரை உறுதி செய்கிறது.

மொத்தமாக 88 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஈழத்துத் தமிழ் இலக்கிய சூழலில் புதுவரவுதான். 2018 ஆம் வெளிவந்த இந்த நூல் குறித்து பொதுவெளியில் உரையாடப்பட்ட அளவு குறைவாக இருக்கலாம். இந்த நூல் குறித்து உரையாட முனையும்போதும் அந்த உரையாடல் மொழியும் கூட சிந்தனாமுறை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாக அமைதல் வேண்டும் அல்லது அமைந்து விடும்.

ஏனெனில் இவை கதைகள்,சிறுகதைகள், குறுங்கதைகள், கவிதை என மரபுசார்ந்த அமைப்பு வடிவங்களில் இருந்து வேறுபட்டு நிற்கின்றன. கதைபோல தெரியும் ஒரு பிரதி கவிதையாகவும் பார்க்கப்படும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. உரையாடல்மொழியில் மட்டுமே அல்லது விவரண வடிவில் மட்டுமே அவை முழுமையான ஒரு கதை நிகழ்வாக அல்லது கவிதை நிகழ்வாக அமையப் பெறுகின்றன. சுருங்கச் சொன்னால் தனது சிந்தனா மொழியை அவ்வாறே எழுத்தில் பதிவு செய்யவும் அதனை தமிழில் தருவதற்கும் முயற்சித்துள்ளார் நூலாசிரியர்.

நூலாசிரியர் இமாம் அத்னான் உடன் உரையாடும்போது இந்த உணர்வைப் பெற முடியும். அவர் உரையாற்றும்போது கூட அதனை உணர முடியும். உரையாற்றும்போது அத்னான் உட்கார்ந்திருக்கிறார் என புறநிலையில் அவதானிக்கும ஒருவர் அவரது உரையின் உண்மையான சாரத்தைப் புரிந்துகொள்ள எத்தனித்தால் அத்னான் உட்கார்ந்துகொண்னு மட்டும்இல்லை அவர் நடக்கவும் செய்கிறார் என்கிற உணர்வை அவதானிப்பார்.

இளம்பருவ சிந்தனையாளராக, எழுத்தாளராக எனக்குள் ( கட்டுரையாளர்) இந்த ஆச்சர்யத்தை நிகழ்த்திக் காட்டியவர் அத்னான். நிந்தவூரில் நடைபெற்ற ஒரு இலக்கிய உரையாடலிலேயே (2017) இந்த நிகழ்வு நடந்தது. அப்போதே அத்னான் ஒரு நூலை எழுதினால் எப்படி இருக்கும் என எண்ணிப்பார்த்ததுண்டு.

அந்த விடயம் 2018 ல் நடந்தேறி 2019 ஆம் ஆண்டு நடைபெற இருந்த வெளியீட்டு நிகழ்வில் நூல் குறித்து உரையாற்ற அழைத்துருந்தாலும் ஏனோ அந்த நிகழ்வு இடம்பெறாத நிலையில் 2021 ல் நடந்த நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் சந்தித்த இமாம் அத்னான் தந்த மந்திரிக்கப்பட்ட சொற்கள் குறித்து இன்று உங்களோடு உரையாட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

கிழக்கிலங்கையப் பிறப்பிடமாகக் கொண்ட இலக்கியச் செயற்பாட்டாளர் இமாம் அத்னான். புனைவின் புதுவகைச் சாத்தியங்களை பரிசோதித்தல், பிரதிகள் மீதான மாறுபட்ட வாசிப்புகளை முன்னெடுத்தல், இலக்கிய கலந்துரையாடல் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல், பொதுப்போக்கினை இடையீடு செய்தல் என்பதாக இயங்கி வருபவர். சமூகப் பணி கற்கையில் இளமாணிப் பட்டம் பெற்றிருக்கும் இவரது இரண்டாவது நூல் ‘மந்திக்கப்பட்ட சொற்கள் . ஏற்கனவே  மொழியின் மீது சத்தியமாக (2017) எனும் கவிதைத் தொகுதியை வெளியிட்டு உள்ளதாகவும் அறிமுகக் குறிப்பில் அறியமுடிகிறது.

மந்திரிக்கப்பட்ட சொற்களாக முப்பது தலைப்புகளில் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் அத்னான் அதற்கு நிச்சயமான வடிவங்கள் எதனையும் திட்டமிட்டு திணிக்காமல் அதனை அப்படியே பதிவு செய்ய எத்தனிக்கிறார்.மூன்றாம், பதினோறாம் நிகழ்வுகளைப் பதிவு செய்ய முனைகையில் தான் அதற்கான தலைப்பை உணராதபோது அதனை அப்படியே விடுகிறார். அந்த பதினோறாவது கதை இவ்வாறு முடிவுறுகிறது:

கழுகுகளை அன்பாக வளர்ப்பது எப்படி என்பதை வழிகாட்டக்கூடிய புத்தகங்களோ பாடத்திட்டங்களோ நம்மிடமில்லை என்பது பெரும் அவலம் என விம்மி முழங்கிய அறிஞர் பெருந்தகையோடு பலரும் வாஞ்சையுடன் கைலாகு செய்து பாராட்ட தயாகிறார்கள்.

மூன்றாவது பதிவின் இறுதி வரிகள் இவ்வாறு அமைகின்றன: புனையப்பட்ட கதைகள் தங்களைத் தக்கவைத்துக் கொள்ள குருவிகளை ராட்சத நச்சுயிர்களாக பரிணமிக்க செய்து விடுகின்றன.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ‘கழுகுகளை அன்பாக வளர்ப்பது ‘, ‘குருவிகளை ராட்சத நச்சுயிர்களாக’ பரணமிக்கச் செய்வது போன்றன குறித்து வாசகர் தனக்குள் கலந்நதுரையாட முனைந்தால் சிந்தனா மொழியின் பதிவுப் பிரதிகள் குறித்த பிரக்ஞையைப் பெறலாம்.

ஏனைய 29 நிகழ்வுகளுக்கும் தலைப்பிடும் அத்னான் தனது சிந்தனையில் வந்தவாறே எழுத்தில் தருகிறார் எனலாம். ஜெமோசுவின் அடையாளம், ஒற்றைத் தாளில் ஆகாயம் தொடும் தொழுவங்கள், சூறத்துல் நானும் என் எதிர்த்தலும், Always Yes for Mona Lisa, அவளுக்கான காதல் கடிதம், புனைவில் பன்மித்து மிதக்கும் மதுப்புட்டிகள், அப்போதும் எஞ்சியிருக்கும் சொற்களில் அடங்கும் முயல், சூறத்துல் நானும் என் எதிர்த்தலும்-2, அறிவிப்பாளரின் தடங்கலுக்கு வருந்துகிறோம், பல்பக்லி, ஆ.Terms and conditions of the novel, ஏக பிரம்மையைப் பேயோட்டுதல், பெரும் கதை, திருமண மேடையில் பெற்றோர்கள் கைது...!  பெற்றோரை விடுவிக்கக் கோரி மாணவர்கள் ஆர்ம்பாட்டம், மூஸாவின் கோல்கள், வேண்டுவதெல்லாம், நாக்கோட்டி நயத்தல், ஆதிப்புனைவு, மூத்தம்மாவின் விரல்கள், கற்களின் வழியாய், பெருகிக் கொதுகொதுப்பது, கதகதப்பு, மரி என்னும் இன்னொரு பெண், நூலறுந்து சாத்மியமாகும் ஜாலங்கள், ஜனாஸா அறிவித்தலொன்று, சொல்லிப்பார்த்தல், வரைபடத்தில் ஒரு யுவதி, ஆசிரியர் வராதபோது என எழுதிச் செல்கிறார்.

இந்தப் பிரதிகளை இலக்கிய குடும்பத்திற்குள் இதுவரை அடையாளப்படுத்தும் எந்தப் பெயரைக் குறித்து அழைப்பது ? என ஒரு கேள்வியை முன்வைத்து விவாதிக்கிறார் பின்னுரையில் ர்ரியாஸ் குரானா.

இவை இந்த புனை பிரதியின் தொடர்பில் மேலோட்டமாக கூறக்கூடிய விசயங்கள் மாத்திரமே. ஆனால், எப்படியான அம்சங்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது, அது எப்படி புனை பிரதியாக உருப்பெறுகிறது, அதற்குக் கையாளப்பட்டிருக்கும் புனைவுத்திகள் எவை, என்று விரிவாக பேச நமக்கு அதிக வாய்ப்பை இந்தப் பிரதிகள் கொண்டிருக்கின்றன  எனும் கவிஞர் ரியாஸ் குரானாவின் பின்னுரைக் குறிப்பு உணர்த்தும் உண்மையை, மந்திரிக்கப்பட்ட சொற்களை வாசிப்பதனால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் அல்லது விவாதிக்க முடியும்.


Bitter Berry Bondage (கசக்கும் பழங்களும் கொத்தடிமைகளும்)

-இரு நூற்றாண்டு கால மலையகத்தின் முதல் நூற்றாண்டின் வரலாறு -

- மல்லியப்புசந்தி திலகர்

2023 ஆ ம் ஆண்டு ஆகுகையில் இலங்கை மலையகத் தமிழர் இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்டு இலங்கையில் குடியேற்றப்பட்டதன் இருநூறு ஆண்டுகால நிறைவை அனுஷ்டிக்க உள்ளனர். இந்த நிலையில் இந்த இருநூறு ஆண்டுகாலங்கள் இலங்கையில் அவர்கள் வாழ்ந்தனர், வாழவைக்கப்பட்டனர் அல்லது வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பதை மீட்டுப் பார்க்கும் தேவை எழுகிறது.

அந்த வகையில் மலையகத்தமிழர் வாழ்ந்து மடிந்த முதல் நூறு ஆண்டுகளான 19ம் நூற்றாண்டு வாழ்வை படம்பிடித்துக் காட்டும் ஆங்கில நூல் ‘Bitter Berry Bondage - The Nineteenth Century Coffee Workers of Sri Lanka’. ‘பத்தொன்பதாவது நூற்றாண்டின் இலங்கையின் கோப்பித் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை’ வரலாற்றை பதிவு செய்வதற்கு நூலாசிரியர் டொனவன் மொல்ரிச் ( Donovan Moldrich) தெரிவு செய்திருக்கும் தலைப்பே சான்று பகர்கிறது. Bitter Berry Bondage என்பதை ‘கசக்கும் பழங்களும் கொத்தடிமைகளும்’ என பொருள் கொள்ளலாம்.

1823 முதல் 1923 வரை வெளியுலகம் அறியாதவகையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த மக்கள் கூட்டம் பற்றிய தகவல்களை தேடி எடுப்பது என்பது இலகுவான காரியமல்ல. ஆனாலும் பத்திரிகையாளரான டொனவன் மொல்ரிச் இன் கடின உழைப்பும் தேடலும் இதனை சாத்தியமாக்கி இருக்கிறது. இந்த நூலுக்கு அவர் எழுதி இருக்கும் அறிமுகக் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"இந்த நூல் பொதுவான வாசகர்களுக்காகவும் புலமைத்துவ வாசகர்களுக்குமாக எழுதப்பட்டுள்ளது. அதனாலேயே அடிக்குறிப்புகளும் உசாத்துணைவுகளும் நூல்தரவுப்பட்டியல்களும் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடிக்குறிப்புகளே வரலாற்றின் விதைகள். ஆயிரம் பூக்கள் மலரட்டும்"

அடிக்குறிப்புகளை வரலாற்றின் விதைகளாக கருதும் நூலாசிரியர் மிகக் கவனமாக ஒவ்வொரு அத்தியாயத்திற்குமாக தனது தகவல்களுக்கான ஆதாரங்களை அடிக்குறிப்புகளாகக் குறிப்பிட்டுள்ளதுடன் தான் தகவல்களைப் பெற்றுக் கொண்ட சான்றாதாரங்களையும் குறிப்பிட்டு இந்த நூலின் விஞ்ஞானபூர்வ தன்மையை உறுதி செய்கிறார்.

1950 களில் Times of Ceylon எனும் ஆங்கில பத்திரிகையில் தொழில்சார் நிருபராக ( Labour Reporter ) பணியாற்றியவர் டொனவன் மொல்ரிச். இத்தகைய ஒரு நூலை எழுதும் தேவை எவ்வாறு எழுந்தது என அவர் பின்வருமாறு விபரித்துச் செல்கிறார்.

1950 களில் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளையான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இலங்கைப் பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்தது. அப்போதைய நாவலப்பிட்டிய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான கே.ராஜலிங்கம் இந்த இரண்டு அமைப்புகளுக்கும் தலைவராக இருந்தார்.

1954 ஆம் ஆண்டு இந்த அமைப்பு இரண்டாக பிளவடைந்ததுடன் ( ஜனநாயக தொழிலாளர் கால்கிரஸ்) பின்னர் தொழிலாளர் தேசிய சங்கம் என்றும் உருவாகி மூன்றானது. இருந்தாலும் 1950 களில் இருந்தே இந்த தொழிற்சங்கங்களில் இருந்த துடிப்பான தொழிற்சங்கவாதிகளுடன் எனக்கு நல்ல நட்பு நிலவியது. அவர்களுள் வி.கே.வெள்ளையன், சி.வி.வேலுப்பிள்ளை ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். பின்னாளில் இவர்களே தொழிலாளர் தேசிய சங்கத்தைத் தொடங்கினர்.

சி.வி.வேலுப்பிள்ளை பிரபல அரசியல்வாதி மட்டுமல்ல சிறந்த கவிஞரும் கூட. அவரது ஆழமான, கறுத்த, உயிரோட்டமும் நிறைந்த கண்களும் தெளிவான பார்வையும் ஆயிரம் சொற்களுக்கும் மேலானவை. அவரது ‘உழைக்கப் பிறந்தவர்கள்’ (Born to Labour) எனக்கு கண்ணீரை வரவழைத்தது. அவை கண்களை ஈரமாக்குவதுடன் இரத்தத்தை கூச்சமடையச் செய்வன.

'வெள்ஸ்' என செல்லமாக அழைக்கப்படும் வி.கே.வெள்ள்ளையன் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்களை நினைவுபடுத்தும் தோற்றம் கொண்டவர். அவரது வேண்டுகோளின் பேரில் அவருடன் ஹட்டனில் ஒரு விடுமுறையைக் கழிக்கச் சென்று இருந்தேன். அப்போது அவருடன் அண்மித்த தோட்டங்களுக்குச் செல்லக் கிடைத்தது. அங்கே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களது தொழிற்சங்க தலைவருக்கு கொடுத்த மரியாதையை கண்டுள்ளேன்.

நான் எழுதிய பல கட்டுரைகளில் வந்துபோன ஒரு மில்லியன் தோட்டத் தொழிலாளர்களை நேரடியாக கண்ட உணர்வைப் பெற்றேன். அப்போது குடியுரிமைப் பறிப்புக்கு எதிராக அவர்கள் போராடிக் கொண்டு இருந்தார்கள். அவர்களது மூதாதையர்கள் இந்தியாவில் இருந்து வந்து இலங்கைக்காக உழைத்தவர்கள். பின்னாளில் அவர்கள் இந்தியா செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டபொழுது ‘இந்தியாவில் சாவதற்காய் இலங்கையில் பிறந்தவர்கள்’ ( Born in Ceylon to Die in India) என எழுதினேன். அவர்களது வேர்கள் பற்றி தேட ஆரம்பித்த போது ஆரம்ப கால கோப்பித் தோட்டங்களுக்கு அவர்கள் இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்டார்கள் என்பதும் அவர்கள் இங்கே மாண்டு இருக்கிறார்கள் என்பதும் தெளிவானது. அதனை ‘இலங்கையில் சாவதற்காக இந்தியாவில் பிறந்தவர்கள்’ ( Born in India to Die in Ceylon) என்று எழுதினேன்.

அந்த கோப்பிகால தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுத் தேடலே இந்த நூல். இந்த நூலை எழுத அத்திவாரமிட்ட வேலுப்பிள்ளை, வெள்ளையன் ஆகிய இருவரினதும் அர்ப்பணிப்பு மிக்க தொழிலாளர் வர்க்க பணிகளை நினைவுகூர்வதாக அமையும்.

நூலாசிரியர் டொனவன் மொல்ரிச் சின் இந்த அறிமுகம் இன்றைய தொழிற்சங்க வாதிகளுக்கு மாத்திரமல்ல பத்திரிகையாளர்களுக்கும் கூட பல படிப்பினைகளைத் தரவல்லது.

பதினான்கு அத்தியாயங்களைக் கொண்ட இந்தநூலினை தனக்கு உந்துதலாக இருந்த இவர்களோடு நூலாசிரியர் நன்றி தெரிவிக்கும் பெயர்பட்டியல் இந்த நூலின் கனதியை எடுத்துச் சொல்கிறது. கலாநிதி G.C. மென்டிஸ், பேராசிரியர் ஜஸ்டின் லெப்ரோய், கலாநிதி K.M. டி.சில்வா, கலாநிதி மைக்கல் ரொபர்ட்ஸ், கிங்ஸ்லி டி சில்வா, பேராதனைப் பல்கலைக் கழக நூலகர் H.A.I. குணத்திலக்க என நீளும் பெயர்பட்டியலுடன் பதினைந்து நிறுவனங்கள் அமைப்புகளையும் நினைவு கூர்கிறார்.

Times of Ceylon பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் தனக்கு ஏற்பட்ட தொடர்புகளைக் கொண்டு இந்த நூலுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் ஆதாரங்களுடன் பதிவு செய்கிறார்.

ஒவ்வொரு அத்தியாயங்களினதும் தலைப்பு இலக்கிய ரசணையுடனும் அடிக்குறிப்பாக அதன் உள்ளடக்கத்தை விளக்குவதுமாக அமைவது அவர் கூறுவதுபோல் பொதுவான வாசகர்களுக்கும் புலமைத்துவ வாசகர்களுக்குமானது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

முதலாவது அத்தியாயம், கோப்பி மன்னன் கண்டியை ஆட்சி செய்தபோது என தலைப்பிடப்படிருக்கும் அதேவேளை அடிக்குறிப்பாக கொப்பிக் கைத்தொழிலின் எழுச்சியும் வீழ்ச்சியும் என தரப்பட்டுள்ளது.

இவ்வாறு உள்ளூர் சோம்பேறிகளின் புராணம் (ஏன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள்), சீனக்காரனுக்கு ஒரு பாட்டு பாடுதல் ( இலங்கைக்கு சீன தொழிலாளர்களை இறக்குமதி செய்வதற்கான முயற்சி) இழுக்கும் காரணிகளும் தள்ளும் காரணிகளும் ( ஏன் லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இலங்கை வந்தார்கள்), வெள்ளிக் கீற்றின் மரணத் தண்டுகள் ( கடலில் ஏற்பட்ட அனர்த்தங்கள்), மெல்லிய பாம்புகளும் பசித்த சிறுத்தைகளும் ( தோட்டங்களை நோக்கிய 150 மைல் தொலைவு நடைபயணத்தின் ஆபத்துகள்), மனிதர்களிடையே முதலாளிகளும் தொழிலாளிகளும் ( கோப்பிக்கால தொழில் சட்டங்கள்), மகிழ்ச்சி, மகிழ்ச்சி ஆறு பென்ஸ்களும் சோறும் கறியும் (கோப்பி கால கூலி கட்டமைவு), எனது சாட்டையை எடு (கோப்பி கால அடக்குமுறையும் எதிர்ப்பும்), பெண்கள் இல்லாத ஆண்கள் ( இரத்தம் சிந்தும் புள்ளிவிபரங்கள்), பெருந்தோட்டங்களும் சமூக வாழ்வும் ( உணவு, வீடு, கல்வி, மதம், சாதி), மண்டைஓட்டு வண்டிகள் ( கோப்பிக் கைத்தொழில் வளர்ச்சி பெற்ற காலத்தில் மரணவீதம்), காரணம் தெரியாத மரணங்கள் ( கோப்பி உச்சம் பெற்ற காலத்தின் மரணங்கள்), மரணிப்பதற்காக வைத்தியசாலைக்கு ( கோப்பியின் அந்திம காலத்தில் மரணவீதம்) இவ்வாறு இலக்கிய முகத்துடன் தரவுகளையும் தகவல்களையும் பதிவு செய்யும் 14 தலைப்புகளும், முடிவுரை, உசாத்துணைவுகள், நூல்தரவு, குறியீடுகள் என எல்லாம் 306 பக்கங்களும் முன்னுரைப்பக்கத்தில் 36 பக்கங்களும் என 342 பக்கங்களைக் கொண்டது இந்த நூல்.

இந்த நூலைப் பதிப்பாக்கி வெளியீடு செய்வதில் கண்டு சத்யோதய நிறுவனத்தின் நிறுவுனர் அருட்பணி போல் கஷ்பர்ஸ் அவர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பும் போற்றுதற்கு உரியது. 1989 ஆம் ஆண்டு முதற்பதிப்பைக் கண்ட இந்த நூல் இரண்டாம் பதிப்பின் இரண்டாம் வெளியீட்டை 2021 இல் கண்டுள்ளது. நப்டியுன் பப்ளிஷர்ஸ் எனும் பதிப்பகம் இந்த நூலை இப்போது வெளியீடு செய்துள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டத்தின் கொத்தடிமை வாழ்க்கையை விபரிக்கும் விதத்தில் இருபத்தோராம் நூற்றாண்டிலும் அந்த கொத்தடிமை வாழ்க்கையை விபரிக்கும் விதத்தில் இருபத்தோராம் நூற்றாண்டிலும் அந்த கொத்தடிமை வாழ்க்கை முறைமையில் வைக்கப்பட்டுள்ள அதில் இருந்து வெளியே வருவதற்கு போராடிக் கொண்டிருக்கும் சமூகமும் அந்த சமூகத்தின்பால் அக்கறை கொண்ட தரப்பினரும் வாசிக்கவும் வைத்துப் பாதுகாக்கவும் வேண்டிய வரலாற்று நூல் இது.

இந்த நூலைத் தழுவியதாக சட்டத்தரணியும் எழுத்தாளருமான இரா.சடகோபன் கண்டிச் சீமையிலே எனும் நூலைத் தமிழில் தந்துள்ளபோதும், இந்த நூலின் விஞ்ஞானபூர்வ தன்மை மாறாது தமிழாக்கம் செய்யப்பட வேண்டிய தேவையுமுள்ளது.

 


'அந்திம காலத்தின் இறுதி நேசம்' எல்லா காலத்திலுமான சமூகத்திற்கான மொழிபெயர்ப்பு

மல்லியப்புசந்தி திலகர்

நாவலாக ஜனித்த ஆதிரை இன்று பதிப்பகமாக வளர்ந்து நிற்கிறது. சிறுகதை களில் ஆரம்பித்து நாவலுக்குள் வந்து தமிழ் வாசிப்பு வாசகர்களிடையே தன்னை நிலைநிறுத்திக் கொண்ட எழுத்தாளர் சயந்தன். தனது இரண்டாவது நாவலான ஆதிரை யின் பெயரிலேயே ஒரு பதிப்பகத்தையும் ஆரம்பித்துள்ள சயந்தன் இவ்வாறு எழுதுகிறார்.

 

நூலாக்கப் பணி ஓர் அலாதியான அனுபவம். கடந்த ஐந்தாறு மாதங்களாக ஆதிரை வெளியீட்டின் புத்தகங்களான, என்ட அல்லாஹ், திருமதி பெரேரா, அஷேரா, அந்திமகாலத்தின் இறுதி நேசம் ஆகியவற்றின் தயாரிப்புக்களில் இணைந்திருந்தேன். தினமும் காலையில் நான்கு நான்கரையிலிருந்து, மூலப்பிரதிகளைப் படிப்பது, அவற்றில் திளைப்பதில் தொடங்கி, வடிவமைப்பில் எழுத்துப் பிழைகளைச் சரிசெய்து இறுதியாக்குவது வரை என இரண்டு மணி நேர உற்சாகமான பொழுதுகள்..

சயந்தனின் உற்சாகமான பொழுதுகளின் பணியாக உருப்பெற்றிருக்கும் அந்திம காலத்தின் இறுதி நேசம்  மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பினை அவரே தபாலில் சேர்த்திருந்தார். ஒரு பயணப் பொழுதில் வாசித்து முடிந்த அந்த அந்திம கால நேசம் பற்றிய கதைகள் எல்லா காலத்திற்குமான மொழி பெயர்ப்பு கதைகளாக மனதுக்குள் நுழைந்து ஊடுருவிக் கொண்டுள்ளது.

ரிஷான் ஷரீப் பின் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பல்லாத மூலப்பிரதியான உணர்வைத்தருகின்றன. ஆனாலும் நூல் முழுவதுமே மொழிபெயர்ப்பாளர் ரிஷான் தலைகாட்டாது கதையாசிரியர் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி உலாவருவது மொழிபெயர்ப்பின் வெற்றி. கதைச் சொல்லும் பாங்கில் தக்‌ஷிலா காட்டும் நுட்பம் மாறாது தமிழில் தந்திருக்கும் ரிஷான் ஷரீப் பாராட்டுக்குரியவர்.

கதைமாந்தர்கள், கதைக்களம், கதை நகர்வின் ஊடாக ஒரு காட்சி படிமத்தை வாசகர்களிடம் விரித்துவிடுவதில் தக்‌ஷிலா வெற்றிபெறுகிறார். தக்‌ஷிலா ஒரு சமூகவியல் முதுமாணி பட்டதாரி யாகவும் பள்ளி ஆசிரியராகவும் இருந்து கதை கூறுவது கதைகளின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்க்கிறது. கதையின் ஒரு பாத்திரமாக நூலாசிரியர் எழுதிச் செல்வது வாசகரை கைபிடித்து அழைத்துப் போவதான ஓர் உணர்வு.

கிராமங்களின் குறுக்கு வீதிகளும் கொழும்புத் தலைநகரின் சேரிகளும் பெருவீதிகளும், ஆள் அரவம் குறைந்த ரப்பர் மரக்காடுகளும் என கதை உலாவும் இடங்களெங்கும் வாசகனால் பயணிக்க முடிகிறது. எந்தக் கதையும் கற்பனையாகத் தெரியவில்லை. எந்தப் பாத்திரங்களும் விலகி நிற்கவில்லை.

வறிய மற்றும் மத்தியதர வகுப்பினரின் வாழ்க்கை பலவித அழுத்தங்களைக் கொண்டிருக்கும்.வெளியில் இருந்து பார்க்கும்போது பளபளப்பாகத் தென்படும் மத்தியதரப்பினரின் ஜீவிதங்கள் எப்போதும் மெல்லிய பதற்றத்தோடுதான் கழிந்து கொண்டிருக்கும்.பலவித காரணங்களால் அவை காயம்பட்டிருக்கும்.அவ்வாறான காயங்கள் எவற்றால் ஏற்பட்டிருக்கும் என ஆராய்ந்து பார்க்க அந்தத் தரப்பினருக்குள் வாழ்க்கை நடத்த மிகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் நபர்களின் ஆத்ம பாஷை மிகவும் உபயோகமாகும்.

அவ்வாறான வறிய மற்றும் மத்தியதர குடும்பங்களைச் சேர்ந்த ஒருவர் வழமைக்கு மாறாக தனது சமூக அந்தஸ்த்தையோ அடுத்தவர் என்ன நினைப்பார் என்பதைப் பற்றியோ சிறிதும் பொருட்படுத்தாமல் தனக்கு பிடித்தவர் மீது காட்டும் பாசத்தை, அவர்களது ஆத்ம பாஷையில் தக்‌ஷிலா இக் கதைகளில் எடுத்துக்கூறி இருக்கிறார் என கதைகளை மொழிபெயர்த்திருக்கும் எழுத்தாளர் ரிஷான் ஷரீப் அறிமுக குறிப்பில் எழுதி இருப்பது நிதர்சனம். வாழ்க்கை என்பதற்கு சிங்களத்தில் ‘ஜீவித்தய’ என்று பொருள். அதனைத் தமிழில் ஜீவிதம் என எழுதி அண்மிக்கிறார் ரிஷான்.

‘தெருவழியே’ எனும் முதலாவது கதையை வாசிக்கும்போதே இந்த உணர்வை வாசகர்களால் பெற்றுவிடமுடிகிறது. கிராமத்தில் இருந்து நகர்நோக்கிவந்து மத்தியர தட்டுக்குள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பிரயத்தனப்படும் அதேநேரம் தனது கிராமத்திற்கு செல்வதில் உள்ள அவஷ்த்தையை, நகர வாழ்வின் போலிகளை கிராமத்துக்குச் சுமந்து செல்வதில் உள்ள மனக்குழப்பங்கள் பதிவு பெறுகின்றன.

‘மாங்காய்ப்பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொருநாள் தொடங்கியது’ எனும் கதையில் திருமண வாழ்வின் எதிர்பார்ப்புகளும் அதன் பின்னதான எதிர்பார்ப்புகளும் மானுடவியல் கண்ணோட்டத்தில் உரையாடல் மொழியாகத் தொடர்கிறது.

அன்றைக்குப் பிறகு அவன்,அவளருகே வரவேயில்லை எனும் கதை அலுவலகத்தின் தன்னுடன் வேலை செய்யும் பெண் ஒருவரது வீட்டைத் தேடிச் செல்லும் ஆண் ஒருவன் ஊடாக வாசகர்களை கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறது. முச்சக்கரவண்டி குலுங்கிக் குலுங்கிச் சென்றது.கீழே விழுவதைப் போல உணரச் செய்தன குழிகள்.

இங்கே இன்னும் அபிவிருத்தி வரவில்லைப் போல  என சமிலுக்குத் தோன்றியது. என அந்த கிராமத்துக்கான பயணத்தை விபரிக்கும் கதையாசிரியர்  இங்கே இன்னும் அபிவிருத்தி வரவில்லைப் போல எனும் வார்த்தைகளுக்குக் இட்டிருக்கும் மேற்கோள்கள் ஊடாக முன்வைக்கும் அரசியல் ஏறக்குறைய எல்லாக்கதைகளிலும் வியாபகம் பெறுகின்றன.

ஒருவர் மரணித்த பிறகு அஞ்சலியுரையில், அனுதாபச் செய்தியில் வெளிக்காட்டப்படும் போலிப்புகழாரங்களை அடித்து நொறுக்குகிறது அந்திம காலத்தின் இறுதி நேசம்.

எப்போதும் மேரி நினைவில் வருகிறாள்’ எனும் கதையில் வரும் மேரி எனும் இளமைக் காலங்களும் அந்திம காலங்களும் அதற்கான காரணங்களும் சமூகம் மீதான பல கேள்வியை எழுப்புவன. இந்தக் கதையை வாசிக்கும்போது பல மேரி கள் எமது நினைவில் வருகிறார்கள்.

‘நந்தியாவட்டைப் பூக்கள்’ பூக்கள் கதையில் வரும் பெரியம்மா கூட அத்தகைய ஒரு ஆள்தான், கதைமாந்தர்தான்.

பொட்டு  எனும் தலைப்பு சிங்கள மொழி கதாசிரியரின் தலைப்பாக வரும்போது வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது. தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘பொட்டு’ எனும் சிறுகதை யில் பொட்டு என்பதன் குறியீட்டில் இருந்து ஸ்வர்ணமாலியின் குறியீடு வேறுபட்டு நிறகிறது.

தெளிவத்தை ஜோசப்பின் கதையில் வரும் தமிழ்ப்பெண் வைக்கத் தயங்கும், வைப்பதனால் வரக்கூடிய பிரச்சினைகளைப் பேசுகிறது. ஆனால், ஸ்வர்ணமாலி யின் பொட்டு சிங்களப் பெண் ஒருவர் வைக்கலாமா என ஏக்கம் கொள்ளும் பொட்டு பற்றியது. கதையின் இறுதிப்பாகம் வாசகனை உலுக்கிப் போடுகிறது. இனக்குழுமச் சண்டையில் எந்தவொரு நியாயமான காரணமுமில்லாது மரணித்துப் போன சிங்கள சாதாரண மக்கள் பற்றிய கவனத்தை வேண்டி நிற்கிறது. பெண்மன உணர்வுகள் மெல்லியதாக பதிவு பெறுகின்றன.

விவாகரத்துப் பெற்ற தம்பதியர் இடையே இடம்பெறும் உரையாடல் ஊடாக விரியும் கதை இப்போதும் இருவரும் இடைக்கிடையே சந்தித்துக் கொள்கிறோம். மாங்காய்ப்பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொருநாள் தொடங்கியது’ எனும் கதையில் திருமண வாழ்வின் எதிர்பார்ப்புகளும் அதன் பின்னதான எதிர்பார்ப்புகளும் இந்த கதையிலும் இன்னுமொரு கண்ணோட்டத்தில் உரையாடல் மொழியாகத் தொடர்கிறது.

ஒரே திடல் போன்ற கதைகளை எழுதுவதற்கு கடினமான உழைப்புத் தேவை. நிச்சயமாக ஸ்வர்ணமாலி இந்தக் காட்சிகளை நிஜத்தில் கண்டிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இத்தகைய கற்பனைகளை இலகுவாகக் கண்டடைந்துவிடமுடியாது. இந்தக் கதையில் வரும் சித்தப்பா எப்போதும் வாசகர் இடத்தில் வாழ்வார்.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க அலையும் அவலம் தமிழ்ச்சூழலில் மட்டுமல்ல சிங்கள சமூகச் சூழலிலும் கூட நிகழ்ந்து கொண்டிருப்பவைதான் என்பதை நினைவுபடுத்திச் செல்லும் கதை ‘தங்கையைத் தேடித்தேடி அவன் அலைந்தான்’. அதிகார வர்க்கம் தமது நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள இன,மத,மொழி பேதங்களைக் கடந்து பயணிக்கும். அதிகார மோகத்தின் முன்னே அவை எல்லாம் வெறி மட்டுமே என்பதை எழுதிச் செல்லும் கதை இது.

தனிமனித உணர்வுகளின் ஊடே சமூகவியல் பதிவுகளை இயல்பான மொழி நடை காட்சிப்படிமங்கள் ஊடாக எழுதி எம்மை வியக்கவைக்கிறார் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி.களனி பல்கலைக் கழகத்தில் சமூகவியல்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ள ஆசிரியையான இவர் இலக்கிய உலகில் கவிதை, சிறுகதை, நாவல் எனும் படைப்புகள் வழியே அறியப்படுபவர். இந்தச் சிறுகதைத் தொகுப்பு கூட ஒரு நாவலை வாசிப்பதுபோன்ற ஒரே வகையான சமூகச் சூழலின் மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது.

“நீங்களும் நானும் மண்ணில் பிறந்து, மண்ணில் வாழ்ந்து மண்ணிலேயே மரணித்துக் கொள்கிறோம்.இந்த மண்ணில்தான் சந்தித்து இருக்கிறோம்.இப்போதும் இந்த மண்ணை நேசிக்கிறோம். எம்மைச் சூழவும் கட்டி எழுப்பப்பட்டுள்ள வர்த்தக வாணிபக் கொண்டாட்டங்கள், எமது பிள்ளைகளை இந்த மண்ணில் மூடி மறைக்கப்பட்டுள்ள உண்மைகளைவிட்டுத் தொலைவாகியுள்ளன....

எப்போதும் தமிழ் எழுத்துக்களைக் காண்கையில் அவற்றுள், இம்மண்ணில் கலைந்துபோன விடுதலையின் கனவு தவிர்க்கவே முடியாமல் எனக்குத் தென்படுகிறது.தமிழ் எழுத்துக்களை வாசிக்கும,எழுதும், தமிழ் மொழியால் சிந்திக்கும் உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்... எந்த மொழியைப் பேசுபவராகிலும் துயருற்ற மக்களுக்காகப் போரிட்ட அனைத்துத் தோழர்களையும் சகோதரர்களையும் நான் மிகவும் மதிப்பதையும் எழுதி வைக்கிறேன்” என தனது முன்குறிப்பில் எழுதி வைக்கிறார் நூலாசிரியர் ஸ்வர்ணமாலி.

இனம்,மதம்,மொழிகடந்து மானுட வாழ்வை தரிசித்து சிறுகதைகள் ஊடாக அதனை சமூகத்திடம் முன்வைத்து பரஸ்ப்பர புரிந்துணர்வை உருவாக்க முனையும் ஸ்வர்ணமாலி போன்ற உள்ளங்கள் வாசிக்கப்பட வேண்டியது. வாய்ப்பினை உருவாக்கிய ரிஷான், சயந்தன் உள்ளிட்ட இலக்கிய உள்ளங்களின் உழைப்பும் நினைப்பும் போற்றுதற்குரியது.

 


‘புகைமூட்டத்துக்குள்ளே...’ களப்பணியாளர்களின் கற்பனையற்ற கதைகூறல்

  ’நான் முதன் முதலாக சுசிலாவையும் இஸ்ராவையும் சந்தித்த பொழுது அவர்கள் இருவரும் முதுநிலை சமூகப் பணி மாணவிகளாக இருந்தனர். வரம்புக்குட்பட்ட வளங்களுடன் இன்னொரு நாட்டுக்கு வந்து கல்வி கற்பதற்கு நிறைய துணிச்சல் வேண்டி இருந்தது. இவர்களின் அறிவுத்தாகம் என்னை வியப்புறச் செய்தது' என்று இந்த நூலின் பின்னட்டைக் குறிப்பில் எழுதுகிறார் பிந்து நாயர்.

யார் இந்த பிந்து நாயர்? என்பதற்கு முன்னதாக யார் இந்த சுசிலாவும் இஸ்ராவும் என்றால் அவர்கள் இருவரும்தான் இந்த 'புகைமூட்டத்துக்குள்ளே...' எனும் நூலின் தொகுப்பாசிரியர்கள். அவர்கள் பணியாற்றிய 'ஆரோ' ( AROH - Giving Hope) நிறுவனத்தின் முகாமையாளர்தான் இந்த பிந்து நாயர். பெயரைக் கொண்டு நோக்குகையில் அவர் ஒரு மலையாளியாக இருக்க வேண்டும்.

இந்த பிந்து நாயர் அறிமுகஞ் செய்யும் இரண்டு பெண்களான சுசிலா - இஸ்ரா இருவரையும் நான் (கட்டுரையாளர்) அறிமுகஞ் செய்திருந்தால்கூட இப்படித்தான் அறிமுகஞ் செய்திருப்பேன்.
இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாகித்யரத்ன தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு பிரபல இந்திய எழுத்தாளர் ஜெயமோகன் தலைமையில் இயங்கும் விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு 'விஷ்ணுபுரம்' விருதை அறிவித்தது. அதனைப் பெற்றுக்கொள்ள தெளிவத்தை தம்பதியரை கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றிருந்தேன். விருதுவிழா முடிந்த உடனேயே மேடையில் இருந்து கீழே இறங்கிவிட முடியாத அளவுக்கு வாசகர்கள் தெளிவத்தையாரை சூழத் தொடங்கிவிட்டனர். அவரிடம் கையெழுத்துப் பெறவும், நிற்படம் எடுக்கவும் என. விருதினை வழங்கி வைத்தவர்களில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி மேடையிலேயே பாதுகாப்பாக அமர்ந்துவிட்டார். 
திரை இயக்குனர் பாலா மேடையில் இருந்து இறங்கிச் சென்றார். சினமாகாரரான அவரைச் சூழ்ந்துகொள்ளாத கூட்டம் தெளிவத்தையாரைச் சூழ்ந்து கொண்டது. சூழ்ந்த கூட்டத்தினரிடம் இருந்து தெளிவத்தையாரை பாதுகாப்பாக மீட்கவேண்டியிருந்தது. ஏனெனில் அப்போதுதான் அவரது இருதயகோளாறுக்கான அறுவை சிகிச்சை செய்து ஆறுமாதங்களாகி இருந்தது. எனவே அவருக்கு அரணாக இருந்து முண்டியடிப்பவர்களிடம் இருந்து பாதுகாப்பாக மேடையில் இருந்து கீழே அழைத்து வருகிறேன்.
சபையில் அமர்ந்திருந்த எழுத்தாளர் கோவை ஞானியிடம் பேசுவதற்கு தெளிவத்தையார் ஆவல் கொண்டார். அப்போதும் கூட்டத்தினர் விடுவதாக இல்லை. இந்தக் கூட்டத்தினரிடையே இருந்து சிங்களத்தில் ஒரு குரல். முதலில் சாதாரணமாக உணர்ந்த எனக்கு இரண்டாவது முறையும் ஒலிக்கவே அந்த சிங்கள மொழிக்குரல் அசாதாரணமாக பட்டது. ஏனெனில் நான் நிற்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், கோயம்புத்தூரில்.
ஆச்சரியத்துடன் அதனை உணர்ந்தவனாக சிங்களக்குரல் வந்த திசையில் பார்க்கிறேன். அங்கே ஸ்ரீலங்கா முகத்துடன் இரண்டு இளம் பெண்கள். இப்போது இன்னும் கவனமாக சிங்களத்தில் என்னை நோக்கிப் பேசுகிறார்கள். 'தெளிவத்தை அய்யாவைப் பார்க்க தொலைவில் இருந்து வந்து இருக்கிறோம். நாங்கள் இலங்கை மலையகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கே முதுமாணி படிக்கிறோம். எங்களை அனுமதியுங்கள்'என மூச்சுவிடாமல் தூரத்தில் இருந்தே தகவல் தருகிறார் அந்த முக்காடு (ஹிஜாப் ) அணிந்த  பெண். 
 
ஆம் என்ற தொனியில்  தலையசைத்து ஆமோதிக்கிறார் அருகே நின்ற அசல் மலையகப் பெண். முதலில் சிரித்துவிட்டேன். 'என்ன ஒரு ராஜதந்திரம்' என்றெண்ணி. பிறகு சிங்களத்திலேயே பதில் சொன்னேன். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ஏற்பாடு செய்கிறேன் என.
எழுத்தாளர் கோவை ஞானி கண்பார்வை குறைந்த நிலையில் இருந்தார். அதன் காரணமாகவும் மரியாதை கருதியும் அவருடன் தெளிவத்தையார் உரையாடிய பொழுதில் கூட்ட முண்டியடிப்பு குறைந்திருந்தது. அந்த இடைவெளியில் சிங்களத்தில் அழைத்தேன். ஓடிவந்து தெளிவத்தையாரை வாழ்த்திவிட்டு எனக்கும் நன்றி சொன்னார்கள் அந்த இரண்டு இளம் பெண்களும்.
 
அந்த இரு மலையக இளம் பெண்களையும்தான் மலையாள பிந்து நாயர் இவ்வாறு எழுதி அறிமுகம் செய்கிறார்: 
'வரம்புக்குட்பட்ட வளங்களுடன் இன்னொரு நாட்டுக்கு வந்து கல்வி கற்பதற்கு நிறைய துணிச்சல் வேண்டி இருந்தது'. உண்மையாகவே இந்த இரண்டு பெண்களும் துணிச்சல் மிக்கவர்கள் என்பதற்கு என்னோடு அறிமுகமான காட்சியே சாட்சி. இந்தநூல் இரண்டாவது சாட்சி.
 
தாஹிர் நூருல் இஸ்ரா எனும் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் அசல் மலையகத்தவர். அதனைச் சொல்வதற்கும் அஞ்சாதவர். மலையகத்தின் முதல் கவிஞன் அருள்வாகி அப்துல் காதிருப் புலவர் வாழ்ந்த கலஹா, தெல்தோட்டைப் பகுதி தேயிலைத் தோட்டப் பெண் இஸ்ரா. சுசிலா யோகராஜன் தலவாக்கலை பகுதி தேயிலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த பெண்.
 
இருவருமே பேராதனைப் பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரிகள். பிந்து நாயர் சொல்வதுபோல வரம்புக்குட்பட்ட வளங்களுடன் இன்னொரு நாட்டுக்கு வந்து கல்வி கற்பதற்கு  துணிந்த இளம் பெண்மணிகள். இந்திய பல்கலைக்கழகமொன்றில் சமூக சேவை துறையில் தத்துவமாணிப் பட்டப்படிப்புக்காக (MPhil) தங்கியிருந்த போதே எங்களையும் சந்தித்திருக்கிறார்கள்.
வரம்புக்குட்பட்ட வளங்களுடன் இன்னொரு நாட்டுக்கு வந்து கல்வி கற்பதற்கு நிறைய துணிச்சல் தேவைப்பட்ட இவர்களுக்கு பொருளாதாரமும் தேவைப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியமில்லை.  படிப்பு நேரம்போக பகுதி நேரமாக தொண்டு நிறுவனங்களில் தொழில் செய்து இருக்கிறார்கள். அதுவும் அவர்களது முதுத்தத்துவமாணி பட்டப்படிப்போடு இணைந்த சமூக சேவைத் துறையில் இயங்கும் தொண்டு நிறுவனத்தில். அந்தத் தொண்டு நிறுவனந்தான் 'ஆரோ' ( AROH -Giving Hope). அதன் முகாமையாளர்தான் பிந்து நாயர்.
 
இந்த 'ஆரோ' நிறுவனம் புற்றுநோயினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு நம்பிக்கைதரும், அவர்களுக்கு உதவும் நிறுவனம். இஸ்ரா - சுசிலா இருவரும் இந்த தொண்டு நிறுவனத்தில் வேலை செய்த காலத்தில் சந்தித்த அனுபவங்களை கதைகளாக சொல்கிறார்கள்.
'ஒரு ரூபாயில் ஓர் உயிர்', 'ம்ம்...ம்ம.... பொம்மை கார்', 'அப்புச்சவுக்கு நல்ல இரண்டு செருப்பு', 'அக்கிணியில் அடைக்கலம்', 'இலைகள் துளிர்க்கத் தொடங்கின', 'கொத்தடிமை', 'இம்முட்டுப் பெரிய கேக்கா', 'என்பையன் காலேஜுக்குப் போகணும்', 'பேசுற நேரம் பேசிக்கோங்க', 'அம்மா நீ போ', என்பன இவர்கள் சொல்லும் கதைகளுக்கான தலைப்புகள். இவை சிறு கதைகள் அல்ல. பெருங்கதைகள்.
 
புற்றுநோய் வந்துவிட்ட ஒரு குழந்தைக்காய் ஓடாய்த் தேயும் குடும்பங்களின் பெருங்கதைகள். அந்த பெருங்கதைகளில் வரும் போராட்டங்களை, இழப்புகளை, சோதனைகளை, நம்பிக்கைகளை, நம்பிக்கையீனங்களை, ஏக்கங்களை, எதிர்பார்ப்புகளை எல்லா கோணங்களில் இருந்தும் கூறும் கதைகள் இவை. எல்லாமே உண்மைக் கதைகள். இந்தக் கதைகளின் கருவாக, கருகிப்போவதற்காகவே மலர்ந்த மொட்டுகளைப் போன்ற குழந்தைகளாக அமைவது கொடுமை. அந்தப் மொட்டுக்களைச் சுற்றி இலைகளாக, கிளைகளாக, மரமாக, செடியாக ஏன் முள்ளாகக் கூட கதை மாந்தர்கள்.
 
பெரும்பாலான கதைமாந்தர்கள் கரிசல் காட்டு கதாபாத்திரங்களாக விபரிக்கப்படுகின்றன. கதைத் தலைப்புக்களைத் தெரிவு செய்வதில் மிகுந்த கவனம், வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கமின்மை என்பன இந்த இஸ்ரா - சுசிலா ஆகிய இரண்டு கதைச் சொல்லிகளையும் பார்த்து எம்மை வியப்படையச் செய்கின்றன.
'எங்களுக்கு சிறுநீர் கழிக்கும் தேவை எழுந்தது சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பொறுமை காத்துக் கொண்டு கிராமத்தை அடைந்தோம்' என தங்களது களப்பணி அனுபவங்களை எழுத்தில் பதியும் துணிச்சல் இந்த இளம் பெண்களுக்கு இருக்கிறது.
 
'ஒரு வயதில் வாங்கிய சட்டையைத் தான் அவன் மூன்று வயதாகியும் போட்டிருந்தான். அவனது தொப்பை வயிறுக்கு மேலாகவே அது இருந்தது. சிப் ( Zip) இல்லாத  அவனது காற்சட்டைக்கு வெளியில் அவனது பிறப்புறுப்பு சற்று வெளியே எட்டிப் பார்த்தது'. என கூறும் இயல்பான கதை கூறல்.
 
குழந்தைகளின் உயிரைக்காக்க போராடும் அம்மா, அப்பாக்களுக்கு மத்தியில் அப்படியான ஒரு குழந்தையைப் பராமரிப்பதில் அக்கறை கொள்ளாமல் தன்னை தினமும் திருமணவீட்டுக்கு போவதுபோல அலங்கரித்துக் கொள்ளும் ஒரு அம்மாவையும் இந்த கதைச் சொல்லிகள் கண்டுபிடிக்கிறார்கள்.
 
ஒவ்வொரு கதையும் ஒரு Case Study ஆக உள்ளதை உள்ளபடியே ஆராய்கிறது.அதனை அப்படியே எடுத்தும் சொல்கிறது. இதனை ஏன் சொல்லவந்தோம் என தங்களது 'எமதுரையில்' சொல்கிறார்கள் இந்த இளம் பெண்கள்.
 
'இவ்வாறான நோயாளர்களைத் தொட்டால் பாவம் என்று எட்டடிக்கு அப்பால் விட்டென பறக்கும் மனிதர்களின் அறிமைக் கண்களைத் திறப்பது, சமூகத்தில் காணப்படும் சில மூட நம்பிக்கைகளையும் தவறான மனப்பாங்குகளையும் படம் பிடித்துக் காட்டுவது,
சாதாரண மக்கள் மத்தியில் அவர்களுக்கு புரியும் பாணியில் ஒரு வித்தியாசமான மொழிக்கூடாக சிறுவர் புற்று நோய் பற்றிய பரந்த அறிவைக் கொண்டு செல்வதனூடாக புற்று நோயால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்றவற்றை  முதல் நோக்கமாகவும்,
 
ஒரு சமூகப் பணியாளனின் வகிபாகத்தை வெளிக்காட்டுவதும் அதனுடன் இணைந்ததாக ஒரு சாதாரண மனிதனின் சமூகப் பொறுப்பை அதிகிரிக்க வைப்பதனையும் இன்னொரு நோக்கமாகவும் கொண்டு எழுதப்பட்டது என்கிறார்கள்.
 உண்மையில் இவர்களது இரண்டாவது நோக்கம் வெற்றிபெற வேண்டுமெனில் இந்த நூல் பரவலாக வாசிக்கப்பட வேண்டும்.
'புற்றுநோய் தொற்று நோய் அல்ல' என இவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். முன்னுரை எழுதி இருக்கும் மருத்துவரும் இலக்கியவாதியுமான எம்.கே. முருகானந்தனும் அதனை உறுதி செய்கிறார். 
 
அதே நேரம் ஒரே சமகாலத்தில் எனது (கட்டுரையாளர்) நண்பனுக்கும் அவரது மனைவிக்கும் புற்றுநோய் வந்து ஒரே சமயத்தில் அவர்கள் இருவரும் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நாழிகைகளை நினைக்கையில் என் மனது புற்று நோய் தொற்று நோய் அல்ல என ஏற்க மறுக்கவே செய்கிறது. எனினும் இது போன்ற களப்பணியாளர்களின் கற்பனையற்ற கதைகூறல்கள் எனக்கு நேர்ந்ததுபோல அசாதாரண அனுபவங்களையும் பதிவு செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தைத் தூண்டுவனவாக உள்ளன.
 
அத்தகைய அனுபவங்களை அதீத வர்ணனைகள் இன்றி இயல்பான போக்கில் எழுதி புனைவுப் பிரதிகளின் பாங்கான வடிவில் தந்திருப்பதாக கவிஞர் மேமன்கவி தனது கருத்துரையில் பதிவு செய்வது உண்மையான கூற்றாகிறது.
 
மொத்ததில் கற்பனைக் கதைகள் எழுதுவதில் இருந்து களப்பணியாளர்களின் எழுத்து என்பது வேறுபட்டது என்பதற்கு சாட்சியான அனுபவப் பதிவுகளாக அமைகின்றன.
எழுத்தாளர்கள் நூல்களை எழுதும்போது நூலாசரியர்கள் என அழைக்கப்படுவது அவர்கள் பாடங்களைக் கற்றுத் தருகிறார்கள் என்பதே. நிச்சயமாக இந்த இரண்டு நூலாசிரியர்களும் ஆசரியர்கள் என தகுதி பெறுகிறார்கள்.
இந்த கதைகளை தமிழ்- சிங்களம் - ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பதிப்பித்து வெளியிட்டு இருக்கும் கொடகே பதிப்பகமும் பாராட்டுக்குரியது.
 
இரண்டு இளம் பெண் ஆளுமைகள் தங்களது முதல் படைப்பையே மூன்று மொழிகளிலும் வெளியீடு செய்யும் தகைமையும் துணிச்சலும் பெற்றிருக்கிறார்கள் என்பதே நாளைய மகளிர் தினத்தில் நம்பிக்கை தரும் செய்தியாக பதிவு செய்ய வேண்டியுள்ளது.

'குன்றிலிருந்து கோட்டைக்கு' -இளையவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் ஆவணம் 

மலையகக் கல்வியாளரும் உயர் அரச பதவிகளை வகித்து ஓய்வு நிலையில் இருப்பவருமான எம்.வாமதேவன் தனது தன்வரலாற்று நினைவுப் பகிர்வாக எழுதி இருக்கும் நூல், குன்றிலிருந்து கோட்டைக்கு

மலையகமான குன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்து கோட்டை என அழைக்கப்படும் கொழும்புத் தலைநகரில் அரச நிர்வாகப்பணியில் அளப்பரிய சாதனைகளுடன் பணியாற்றி தற்போது ஓய்வு நிலையில் இருக்கும் எம். வாமதேவன், தான் கடந்து வந்த பாதையை சுவாரஷ்யமாக இந்த நூலிலே பதிவு செய்துள்ளார்.

இத்தகைய தனது  அனுபவங்களை நூலாக்க வேண்டும் என தன்னிடம் வேண்டுகோள் விடுத்ததாக எனது பெயரை ( கட்டுரையாளர்) எம்.வாமதேவன் இந்த நூலிலே குறிப்பிட்டு உள்ளார். அதற்கான காரணத்தை இங்கே பதிவு செய்வது அவசியம் என எண்ணுகிறேன்.

எனது பாடசாலை காலம். உயர்தர வகுப்பில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கற்றபோது இலங்கை மத்தியவங்கி தமது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்திருந்தது.

ஹட்டன் பிரதேச தமிழ், சிங்கள பாடசாலைகளின் உயர்தர மாணவர்கள் பங்கு கொண்டிருந்தோம். நிகழ்ச்சி முடிவடையும் வேளை மாணவர்கள் தரப்பில் இருந்து நன்றி உரை வழங்க அழைத்தார்கள். ஒரு சிங்கள மாணவர் நன்றி கூறிய பின்னர் தமிழில் உரையாற்ற எனலனை சைகை காட்டினார் எங்களை அழைத்துப் போன ஆசரியர். நான் நன்றியுரையோடு நிறுத்திக் கொள்ளாமல் சுவாரஷ்யத்துக்காக ஒரு விஷயத்தைச் சொன்னேன்.

மத்திய வங்கி மக்களோடு தொடர்புகளைப் பேணாது. வங்கிகளுடனேயே பேணும் என்றே படித்து இருகலகிறோம். ஆனால் இன்று இலங்கை மத்திய வங்கி மக்களாகிய எங்களோடு நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது. அதற்காக நன்றிகள் என்றேன். சபையில் ஒரு சலசலப்பும் கைதட்டலும். நிகழ்ச்சி  முடிந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வளவாளராக வந்திருந்த ஒருவர் என்னை அழைத்து எந்தப் பாடசாலை? ஹைலன்ஸ் கல்லூரியா ? எனக் கேட்டார். ஆம் என்றேன். நானும் ஹைலன்ஸ்தான். இப்படி முன்வந்து பேசுவது முக்கிய பண்பு. நல்ல பேச்சு என பாராட்டிவிட்டு கொழும்பு வந்தால் என்னை வந்து சந்திக்கலாம் என தனது விசிட்டிங் கார்ட்டைத் தந்தார். அதில்  எம். வாமதேவன் மேலதிகப் பணிப்பாளர் நிதி திட்டமிடல் திணைக்களம்  என்று இருந்தது.

இப்படியாக அவருடனான அறிமுகத்தை அடுத்து உயர்தரம் முடிய கொழும்பு வந்த நாள் ஒன்றில் இப்போதைய ஜனாதிபதி செயலகத்தில் இருந்த அவரது அலுவலகத்தில் அவரைச் சந்திக்கச் சென்றேன். அதனையும் பாராட்டிய அவர் அடுத்து வீட்டுக்கு வருமாறு முகவரி கூறினார். முதலாவது சந்திப்பிலேயே எனக்கு விருந்தளித்தார். ஊக்கமூட்டினார் இவ்வாறு எனக்கும் அவருக்குமான நட்பு இறுக்கமானது. 2000 ஆம் ஆண்டு நான் நடாத்திய கல்வியக பரிசளிப்பு விழாவுக்கு இவரையே பிரதம விருந்தினராக அழைத்து மாணவர்கள் மத்தியில் பேச வைத்தேன். இவ்வாறு நட்பு பலவாறாக தொடர்ந்தது.

2014 ஆம் ஆண்டு எனது பாக்யா பதிப்பகத்தின் ஊடாக  வாமதேவன் அவர்கள் எழுதிய மலையகம்  சமத்துவ அபிவிருத்தியை நோக்கி எனும் நூலை  வெளியிடும் முயற்சிகளில் இருந்த காலத்தில் மீரியபெத்தை மண்சரிவு இடம் பெற்றது.

அதன்போது எல்லோரும் நிவாரணப் பணியில் இறங்கியபோது நாங்கள் அங்கே பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சிகளைச் செய்தோம். அதன்போது இத்தகைய அனுபவத்தை தன் இளமைக் காலத்தில் அனுபவிக்க நேர்ந்த வாமதேவன் அவர்களை உதாரணம் காட்டி நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று அந்த மாணவர்களை ஆற்றுப்படுத்த முடிந்தது. அதற்கு வெளியிடுவதற்கு தயாராக இருந்த அவரது நூல் பெரும் துணையாக இருந்தது.

எனினும், அவரது வாழ்க்கைக் குறிப்புகள் அந்த நூலில் இல்லை. அதனை உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தெரியச் செய்வதற்காக கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் அற்றைத் திங்கள் நிகழ்வில் அவரது அனுபவப் பகிர்வு ஒன்றை ஒழுங்கு செய்தேன்.  கூடவே வசந்தம் தொலைக்கா ட்சியில் தூவானம் எனும் இலக்கிய   நிகழ்ச்சியில் அந்த நூலை முன்னிறுத்தி அவரைப் பேச வைப்பதற்கான முயற்சி ஒன்றையும் ஒழுங்கு செய்தேன்.

அதில் அவர் பகிர்ந்து கொண்ட நினைவுகளைத் தொகுப்பாக்கி பத்திரிகைகளுக்கு எழுதியதுடன் இந்த அனுபவங்கள் நூல் உருப்பெறவேண்டும் என்ற எனது அவாவையும் முன்வைத்தேன். இன்று ஆறு ஆண்டுகள் கழித்து அந்த அவா நிறைவேறி இருக்கிறது.

இந்தப் பின்னணிகளை இங்கே எழுதக் காரணம் எம். வாமதேவன் இளைஞர்களை வழிநாடத்தக் கூடிய பண்புகளைக் கொண்டுள்ளமையைச் சுட்டிகள் காட்டவும், இந்த  நூல் பலரை ஆற்றுப்படுத்தும் பண்புகளைக் கொண்டது என்பதைக் எடுத்து காட்டுவதற்குமாகவே.

தான் பிறந்த கொட்டகலை பகுதியில் ஆரம்பித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தான் கல்வி கற்ற விதம் குறித்தும் அதற்காக அவர் எதிர் கொண்ட சவால்கள் குறித்தும் விரிவாக எழுதி உள்ளார். அத்துடன் தனது மாணவர் காலத்தில் தன்னை வழிநடத்திய ஆசரியர்கள் தொடர்பில் எழுதி உள்ளார்.

ஒரு நீரோடை பொல ஏறும் அவரது நினைவுகள் சீராக வாசகர்கள் இதயத்தைச் சென்றடைகிறது. ஆடம்பரமில்லாத எடுத்தியம்பும் முறைமை இயல்பாக அவரது அனுபவங்களை வாசகருக்கு சென்று சேர்க்கின்றன. பல இடங்களில் மனதைத் தொடும் சோகம் இழையோடும் அதேவேளை வாய்விட்டுச் சிரிக்க நல்ல சுவையான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார்.

தனது சாதனைகளை மாத்திரம் பட்டியல் இடாமல் தான் சந்தித்த சவால்களை அடைந்த தோல்விகளை பதிவு செய்கிறார்.

ஐம்பதாண்டுகால தன்வரலாற்று அனுபவங்களை அந்தந்த கால கட்ட அரசியல், தொழிற்சங்க, கல்விப்பின்புல, கலை இலக்கிய ஆளுமகளையும் சம்பவங்களையும் கூட தொட்டுக் காட்டிக் கொண்டே செல்வதனால் தன்வரலாறாக மட்டுமன்றி ஒரு கால கட்ட மலையக வரலாற்றுப் பதிவாகவும் கூட அனையாளப்படுத்த முடிகிறது.

தமது கல்லூரியின் மாணவர் சங்கமான தமிழ்ச் சங்கத்தில் செயலாளராக செயற்பட்ட காலத்தில் கவிஞர் சக்தீ பால அய்யா அவர்களை அழைத்து அவரது தலைமையில் கவியரங்கம்  ஒன்றை நடாத்தினோம். இன்று எத்தனை மலையகப் பாடசாலைகள் இத்தகைய நிகழ்வுகளை ஒழுங்கு செய்கின்றன எனும் கேள்வியை எமக்குள் எழுப்புகிறது. தொழிற்சங் கவாதி  வி.கே. வெள்ளையன் அவர்களின் ரஷ்ய பயணத்தின் பின்னதாக அவரை பாடசாலைக்கு அழைத்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்தோம் என பதிவு செய்கிறார்.

இன்று அவ்வாறு பயணம் மேற்கொண்ட ஒரு தொழிற்சங்க தலைவரை அழைத்துப் பேசவைக்க மலையகப் பாடசாலைகளால் முடியுமா ? அல்லது அத்தகைய தொழிற்சங்க தலைவர்கள்தான் உள்ளனரா என்ற கேள்வியையும் இந்தப் பதிவுகள் ஏற்படுத்துகின்றன.

அதேபோல ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சரான தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மலையக மக்களை வடக்கில் வந்து குடியேறுமாறு அழைப்பு விடுத்தபோது, அதற்கடுத்து மாணவராக உரையாற்றிய எம். வாமதேவன், அமைச்சரின் கருத்தை மறுதலித்ததுடன் மலையகம் எங்கள் மண்.

எங்கள் தாயகம். அதனை விட்டு நாங்கள் வெளியேற முடியாது' எனும் பொருள்பட பேசி பாராட்டைப் பெற்றுள்ளார். இவ்வாறு மாணவர்களை அமைச்சர்களுடன் விவாதம் செய்யும் வகையிலாக உரையாற்றச் செய்யும் நிலைமைகள் இன்றைய மலையக பாடசாலை சூழலில் காணப்படுகின்றனவா?என்ப ன போன்ற நினைவலைகளை உருவாக்கி விடும் நூலாக இது உள்ளது.

தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவர்கள்  வெளிநாடுகளுக்குச் சென்று ஆங்கில மொழி மூலத்தில் கல்வி கற்பதில் இருக்கக்கூடிய தயக்கத்தை தனது அனுபவங்கள் ஊடாக தகர்த்தெரிவதையும் அவதானிக்க முடிகிறது.

February/ 28/2021

மலையகத் தமிழர் சமூகம் அமைச்சு செயலாளர்  எனும் உயர் அரச பதவியை அடைவது சாதாரணமானதல்ல. ஏனெனில் இலங்கை பிரஜை அந்தஸ்த்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட மலையகத் தமிழர் சமூகம் அரசாங்க பாடசாலை கல்வி மறுக்கப்பட்டு தோட்டப் பாடசாலைகளில் கற்று அரச பணிகளில் சேர்வதே சிம்ம சொப்பனமாக இருந்த நிலையில், அந்தச் சூழலில் இருந்து வந்து அத்தகைய அரச உயர் பதவியைப் பெற்ற இரண்டாமவராக எம். வாமதேவன் திகழ்கிறார்.

மற்றையவர் பிரதாப் ராமானுஜம்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமானுஜம் அவர்களின் புதல்வர் ). அந்தப் பயணம் நோக்கிய அனுபவங்கள் இளைய மலையகத்தவர் மத்தியில் ஒரு உந்ததுதலைத் தரவல்லது.

இதற்கும் அப்பால் தனது இலக்கிய முயற்சிகள், விளையாட்டுத் துறை ஈடுபாடுகள் என அனைத்தையும் பதிவாக்கி உள்ளார். இந்தப் பதிவுகள் தனியே எழுத்துக்களால் மட்டுமன்றி படங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய படங்கள் சொல்லும் செய்திகள் இன்னுமொரு வரலாற்றுக் காட்சிப்படுத்தலை வாசகர் இடையே நிகழ்த்துகிறது.

இவ்வாறு இந்த தன்வரலாற்று நூல் ஒன்றை எழுதத் தூண்டுதலாக இருந்தும், படங்களையும் சேர்த்து வெளியிட பரிந்துரை செய்தும், அட்டைப் படத்தில் சேர்க்கப்பட்டுள்ள எம்.வாமதேவன் அவர்களது அழகிய புகைப்படத்தை எடுத்தும் பங்களிப்பு செய்யக் கிடைத்தமை எனக்குள் உள்ளூற மகிழ்ச்சி தருகிறது.

குமரன் பதிப்பக வெளியீடாக 251 பக்கங்களினாலான இந்த நூல் இளைய சமூகத்தினரால் வாசிக்கப்பட வேண்டியது.