‘புகைமூட்டத்துக்குள்ளே...’ களப்பணியாளர்களின் கற்பனையற்ற கதைகூறல்

  ’நான் முதன் முதலாக சுசிலாவையும் இஸ்ராவையும் சந்தித்த பொழுது அவர்கள் இருவரும் முதுநிலை சமூகப் பணி மாணவிகளாக இருந்தனர். வரம்புக்குட்பட்ட வளங்களுடன் இன்னொரு நாட்டுக்கு வந்து கல்வி கற்பதற்கு நிறைய துணிச்சல் வேண்டி இருந்தது. இவர்களின் அறிவுத்தாகம் என்னை வியப்புறச் செய்தது' என்று இந்த நூலின் பின்னட்டைக் குறிப்பில் எழுதுகிறார் பிந்து நாயர்.

யார் இந்த பிந்து நாயர்? என்பதற்கு முன்னதாக யார் இந்த சுசிலாவும் இஸ்ராவும் என்றால் அவர்கள் இருவரும்தான் இந்த 'புகைமூட்டத்துக்குள்ளே...' எனும் நூலின் தொகுப்பாசிரியர்கள். அவர்கள் பணியாற்றிய 'ஆரோ' ( AROH - Giving Hope) நிறுவனத்தின் முகாமையாளர்தான் இந்த பிந்து நாயர். பெயரைக் கொண்டு நோக்குகையில் அவர் ஒரு மலையாளியாக இருக்க வேண்டும்.

இந்த பிந்து நாயர் அறிமுகஞ் செய்யும் இரண்டு பெண்களான சுசிலா - இஸ்ரா இருவரையும் நான் (கட்டுரையாளர்) அறிமுகஞ் செய்திருந்தால்கூட இப்படித்தான் அறிமுகஞ் செய்திருப்பேன்.
இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாகித்யரத்ன தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு பிரபல இந்திய எழுத்தாளர் ஜெயமோகன் தலைமையில் இயங்கும் விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு 'விஷ்ணுபுரம்' விருதை அறிவித்தது. அதனைப் பெற்றுக்கொள்ள தெளிவத்தை தம்பதியரை கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றிருந்தேன். விருதுவிழா முடிந்த உடனேயே மேடையில் இருந்து கீழே இறங்கிவிட முடியாத அளவுக்கு வாசகர்கள் தெளிவத்தையாரை சூழத் தொடங்கிவிட்டனர். அவரிடம் கையெழுத்துப் பெறவும், நிற்படம் எடுக்கவும் என. விருதினை வழங்கி வைத்தவர்களில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி மேடையிலேயே பாதுகாப்பாக அமர்ந்துவிட்டார். 
திரை இயக்குனர் பாலா மேடையில் இருந்து இறங்கிச் சென்றார். சினமாகாரரான அவரைச் சூழ்ந்துகொள்ளாத கூட்டம் தெளிவத்தையாரைச் சூழ்ந்து கொண்டது. சூழ்ந்த கூட்டத்தினரிடம் இருந்து தெளிவத்தையாரை பாதுகாப்பாக மீட்கவேண்டியிருந்தது. ஏனெனில் அப்போதுதான் அவரது இருதயகோளாறுக்கான அறுவை சிகிச்சை செய்து ஆறுமாதங்களாகி இருந்தது. எனவே அவருக்கு அரணாக இருந்து முண்டியடிப்பவர்களிடம் இருந்து பாதுகாப்பாக மேடையில் இருந்து கீழே அழைத்து வருகிறேன்.
சபையில் அமர்ந்திருந்த எழுத்தாளர் கோவை ஞானியிடம் பேசுவதற்கு தெளிவத்தையார் ஆவல் கொண்டார். அப்போதும் கூட்டத்தினர் விடுவதாக இல்லை. இந்தக் கூட்டத்தினரிடையே இருந்து சிங்களத்தில் ஒரு குரல். முதலில் சாதாரணமாக உணர்ந்த எனக்கு இரண்டாவது முறையும் ஒலிக்கவே அந்த சிங்கள மொழிக்குரல் அசாதாரணமாக பட்டது. ஏனெனில் நான் நிற்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், கோயம்புத்தூரில்.
ஆச்சரியத்துடன் அதனை உணர்ந்தவனாக சிங்களக்குரல் வந்த திசையில் பார்க்கிறேன். அங்கே ஸ்ரீலங்கா முகத்துடன் இரண்டு இளம் பெண்கள். இப்போது இன்னும் கவனமாக சிங்களத்தில் என்னை நோக்கிப் பேசுகிறார்கள். 'தெளிவத்தை அய்யாவைப் பார்க்க தொலைவில் இருந்து வந்து இருக்கிறோம். நாங்கள் இலங்கை மலையகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கே முதுமாணி படிக்கிறோம். எங்களை அனுமதியுங்கள்'என மூச்சுவிடாமல் தூரத்தில் இருந்தே தகவல் தருகிறார் அந்த முக்காடு (ஹிஜாப் ) அணிந்த  பெண். 
 
ஆம் என்ற தொனியில்  தலையசைத்து ஆமோதிக்கிறார் அருகே நின்ற அசல் மலையகப் பெண். முதலில் சிரித்துவிட்டேன். 'என்ன ஒரு ராஜதந்திரம்' என்றெண்ணி. பிறகு சிங்களத்திலேயே பதில் சொன்னேன். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ஏற்பாடு செய்கிறேன் என.
எழுத்தாளர் கோவை ஞானி கண்பார்வை குறைந்த நிலையில் இருந்தார். அதன் காரணமாகவும் மரியாதை கருதியும் அவருடன் தெளிவத்தையார் உரையாடிய பொழுதில் கூட்ட முண்டியடிப்பு குறைந்திருந்தது. அந்த இடைவெளியில் சிங்களத்தில் அழைத்தேன். ஓடிவந்து தெளிவத்தையாரை வாழ்த்திவிட்டு எனக்கும் நன்றி சொன்னார்கள் அந்த இரண்டு இளம் பெண்களும்.
 
அந்த இரு மலையக இளம் பெண்களையும்தான் மலையாள பிந்து நாயர் இவ்வாறு எழுதி அறிமுகம் செய்கிறார்: 
'வரம்புக்குட்பட்ட வளங்களுடன் இன்னொரு நாட்டுக்கு வந்து கல்வி கற்பதற்கு நிறைய துணிச்சல் வேண்டி இருந்தது'. உண்மையாகவே இந்த இரண்டு பெண்களும் துணிச்சல் மிக்கவர்கள் என்பதற்கு என்னோடு அறிமுகமான காட்சியே சாட்சி. இந்தநூல் இரண்டாவது சாட்சி.
 
தாஹிர் நூருல் இஸ்ரா எனும் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் அசல் மலையகத்தவர். அதனைச் சொல்வதற்கும் அஞ்சாதவர். மலையகத்தின் முதல் கவிஞன் அருள்வாகி அப்துல் காதிருப் புலவர் வாழ்ந்த கலஹா, தெல்தோட்டைப் பகுதி தேயிலைத் தோட்டப் பெண் இஸ்ரா. சுசிலா யோகராஜன் தலவாக்கலை பகுதி தேயிலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த பெண்.
 
இருவருமே பேராதனைப் பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரிகள். பிந்து நாயர் சொல்வதுபோல வரம்புக்குட்பட்ட வளங்களுடன் இன்னொரு நாட்டுக்கு வந்து கல்வி கற்பதற்கு  துணிந்த இளம் பெண்மணிகள். இந்திய பல்கலைக்கழகமொன்றில் சமூக சேவை துறையில் தத்துவமாணிப் பட்டப்படிப்புக்காக (MPhil) தங்கியிருந்த போதே எங்களையும் சந்தித்திருக்கிறார்கள்.
வரம்புக்குட்பட்ட வளங்களுடன் இன்னொரு நாட்டுக்கு வந்து கல்வி கற்பதற்கு நிறைய துணிச்சல் தேவைப்பட்ட இவர்களுக்கு பொருளாதாரமும் தேவைப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியமில்லை.  படிப்பு நேரம்போக பகுதி நேரமாக தொண்டு நிறுவனங்களில் தொழில் செய்து இருக்கிறார்கள். அதுவும் அவர்களது முதுத்தத்துவமாணி பட்டப்படிப்போடு இணைந்த சமூக சேவைத் துறையில் இயங்கும் தொண்டு நிறுவனத்தில். அந்தத் தொண்டு நிறுவனந்தான் 'ஆரோ' ( AROH -Giving Hope). அதன் முகாமையாளர்தான் பிந்து நாயர்.
 
இந்த 'ஆரோ' நிறுவனம் புற்றுநோயினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு நம்பிக்கைதரும், அவர்களுக்கு உதவும் நிறுவனம். இஸ்ரா - சுசிலா இருவரும் இந்த தொண்டு நிறுவனத்தில் வேலை செய்த காலத்தில் சந்தித்த அனுபவங்களை கதைகளாக சொல்கிறார்கள்.
'ஒரு ரூபாயில் ஓர் உயிர்', 'ம்ம்...ம்ம.... பொம்மை கார்', 'அப்புச்சவுக்கு நல்ல இரண்டு செருப்பு', 'அக்கிணியில் அடைக்கலம்', 'இலைகள் துளிர்க்கத் தொடங்கின', 'கொத்தடிமை', 'இம்முட்டுப் பெரிய கேக்கா', 'என்பையன் காலேஜுக்குப் போகணும்', 'பேசுற நேரம் பேசிக்கோங்க', 'அம்மா நீ போ', என்பன இவர்கள் சொல்லும் கதைகளுக்கான தலைப்புகள். இவை சிறு கதைகள் அல்ல. பெருங்கதைகள்.
 
புற்றுநோய் வந்துவிட்ட ஒரு குழந்தைக்காய் ஓடாய்த் தேயும் குடும்பங்களின் பெருங்கதைகள். அந்த பெருங்கதைகளில் வரும் போராட்டங்களை, இழப்புகளை, சோதனைகளை, நம்பிக்கைகளை, நம்பிக்கையீனங்களை, ஏக்கங்களை, எதிர்பார்ப்புகளை எல்லா கோணங்களில் இருந்தும் கூறும் கதைகள் இவை. எல்லாமே உண்மைக் கதைகள். இந்தக் கதைகளின் கருவாக, கருகிப்போவதற்காகவே மலர்ந்த மொட்டுகளைப் போன்ற குழந்தைகளாக அமைவது கொடுமை. அந்தப் மொட்டுக்களைச் சுற்றி இலைகளாக, கிளைகளாக, மரமாக, செடியாக ஏன் முள்ளாகக் கூட கதை மாந்தர்கள்.
 
பெரும்பாலான கதைமாந்தர்கள் கரிசல் காட்டு கதாபாத்திரங்களாக விபரிக்கப்படுகின்றன. கதைத் தலைப்புக்களைத் தெரிவு செய்வதில் மிகுந்த கவனம், வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கமின்மை என்பன இந்த இஸ்ரா - சுசிலா ஆகிய இரண்டு கதைச் சொல்லிகளையும் பார்த்து எம்மை வியப்படையச் செய்கின்றன.
'எங்களுக்கு சிறுநீர் கழிக்கும் தேவை எழுந்தது சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பொறுமை காத்துக் கொண்டு கிராமத்தை அடைந்தோம்' என தங்களது களப்பணி அனுபவங்களை எழுத்தில் பதியும் துணிச்சல் இந்த இளம் பெண்களுக்கு இருக்கிறது.
 
'ஒரு வயதில் வாங்கிய சட்டையைத் தான் அவன் மூன்று வயதாகியும் போட்டிருந்தான். அவனது தொப்பை வயிறுக்கு மேலாகவே அது இருந்தது. சிப் ( Zip) இல்லாத  அவனது காற்சட்டைக்கு வெளியில் அவனது பிறப்புறுப்பு சற்று வெளியே எட்டிப் பார்த்தது'. என கூறும் இயல்பான கதை கூறல்.
 
குழந்தைகளின் உயிரைக்காக்க போராடும் அம்மா, அப்பாக்களுக்கு மத்தியில் அப்படியான ஒரு குழந்தையைப் பராமரிப்பதில் அக்கறை கொள்ளாமல் தன்னை தினமும் திருமணவீட்டுக்கு போவதுபோல அலங்கரித்துக் கொள்ளும் ஒரு அம்மாவையும் இந்த கதைச் சொல்லிகள் கண்டுபிடிக்கிறார்கள்.
 
ஒவ்வொரு கதையும் ஒரு Case Study ஆக உள்ளதை உள்ளபடியே ஆராய்கிறது.அதனை அப்படியே எடுத்தும் சொல்கிறது. இதனை ஏன் சொல்லவந்தோம் என தங்களது 'எமதுரையில்' சொல்கிறார்கள் இந்த இளம் பெண்கள்.
 
'இவ்வாறான நோயாளர்களைத் தொட்டால் பாவம் என்று எட்டடிக்கு அப்பால் விட்டென பறக்கும் மனிதர்களின் அறிமைக் கண்களைத் திறப்பது, சமூகத்தில் காணப்படும் சில மூட நம்பிக்கைகளையும் தவறான மனப்பாங்குகளையும் படம் பிடித்துக் காட்டுவது,
சாதாரண மக்கள் மத்தியில் அவர்களுக்கு புரியும் பாணியில் ஒரு வித்தியாசமான மொழிக்கூடாக சிறுவர் புற்று நோய் பற்றிய பரந்த அறிவைக் கொண்டு செல்வதனூடாக புற்று நோயால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்றவற்றை  முதல் நோக்கமாகவும்,
 
ஒரு சமூகப் பணியாளனின் வகிபாகத்தை வெளிக்காட்டுவதும் அதனுடன் இணைந்ததாக ஒரு சாதாரண மனிதனின் சமூகப் பொறுப்பை அதிகிரிக்க வைப்பதனையும் இன்னொரு நோக்கமாகவும் கொண்டு எழுதப்பட்டது என்கிறார்கள்.
 உண்மையில் இவர்களது இரண்டாவது நோக்கம் வெற்றிபெற வேண்டுமெனில் இந்த நூல் பரவலாக வாசிக்கப்பட வேண்டும்.
'புற்றுநோய் தொற்று நோய் அல்ல' என இவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். முன்னுரை எழுதி இருக்கும் மருத்துவரும் இலக்கியவாதியுமான எம்.கே. முருகானந்தனும் அதனை உறுதி செய்கிறார். 
 
அதே நேரம் ஒரே சமகாலத்தில் எனது (கட்டுரையாளர்) நண்பனுக்கும் அவரது மனைவிக்கும் புற்றுநோய் வந்து ஒரே சமயத்தில் அவர்கள் இருவரும் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நாழிகைகளை நினைக்கையில் என் மனது புற்று நோய் தொற்று நோய் அல்ல என ஏற்க மறுக்கவே செய்கிறது. எனினும் இது போன்ற களப்பணியாளர்களின் கற்பனையற்ற கதைகூறல்கள் எனக்கு நேர்ந்ததுபோல அசாதாரண அனுபவங்களையும் பதிவு செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தைத் தூண்டுவனவாக உள்ளன.
 
அத்தகைய அனுபவங்களை அதீத வர்ணனைகள் இன்றி இயல்பான போக்கில் எழுதி புனைவுப் பிரதிகளின் பாங்கான வடிவில் தந்திருப்பதாக கவிஞர் மேமன்கவி தனது கருத்துரையில் பதிவு செய்வது உண்மையான கூற்றாகிறது.
 
மொத்ததில் கற்பனைக் கதைகள் எழுதுவதில் இருந்து களப்பணியாளர்களின் எழுத்து என்பது வேறுபட்டது என்பதற்கு சாட்சியான அனுபவப் பதிவுகளாக அமைகின்றன.
எழுத்தாளர்கள் நூல்களை எழுதும்போது நூலாசரியர்கள் என அழைக்கப்படுவது அவர்கள் பாடங்களைக் கற்றுத் தருகிறார்கள் என்பதே. நிச்சயமாக இந்த இரண்டு நூலாசிரியர்களும் ஆசரியர்கள் என தகுதி பெறுகிறார்கள்.
இந்த கதைகளை தமிழ்- சிங்களம் - ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பதிப்பித்து வெளியிட்டு இருக்கும் கொடகே பதிப்பகமும் பாராட்டுக்குரியது.
 
இரண்டு இளம் பெண் ஆளுமைகள் தங்களது முதல் படைப்பையே மூன்று மொழிகளிலும் வெளியீடு செய்யும் தகைமையும் துணிச்சலும் பெற்றிருக்கிறார்கள் என்பதே நாளைய மகளிர் தினத்தில் நம்பிக்கை தரும் செய்தியாக பதிவு செய்ய வேண்டியுள்ளது.

'குன்றிலிருந்து கோட்டைக்கு' -இளையவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் ஆவணம் 

மலையகக் கல்வியாளரும் உயர் அரச பதவிகளை வகித்து ஓய்வு நிலையில் இருப்பவருமான எம்.வாமதேவன் தனது தன்வரலாற்று நினைவுப் பகிர்வாக எழுதி இருக்கும் நூல், குன்றிலிருந்து கோட்டைக்கு

மலையகமான குன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்து கோட்டை என அழைக்கப்படும் கொழும்புத் தலைநகரில் அரச நிர்வாகப்பணியில் அளப்பரிய சாதனைகளுடன் பணியாற்றி தற்போது ஓய்வு நிலையில் இருக்கும் எம். வாமதேவன், தான் கடந்து வந்த பாதையை சுவாரஷ்யமாக இந்த நூலிலே பதிவு செய்துள்ளார்.

இத்தகைய தனது  அனுபவங்களை நூலாக்க வேண்டும் என தன்னிடம் வேண்டுகோள் விடுத்ததாக எனது பெயரை ( கட்டுரையாளர்) எம்.வாமதேவன் இந்த நூலிலே குறிப்பிட்டு உள்ளார். அதற்கான காரணத்தை இங்கே பதிவு செய்வது அவசியம் என எண்ணுகிறேன்.

எனது பாடசாலை காலம். உயர்தர வகுப்பில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கற்றபோது இலங்கை மத்தியவங்கி தமது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்திருந்தது.

ஹட்டன் பிரதேச தமிழ், சிங்கள பாடசாலைகளின் உயர்தர மாணவர்கள் பங்கு கொண்டிருந்தோம். நிகழ்ச்சி முடிவடையும் வேளை மாணவர்கள் தரப்பில் இருந்து நன்றி உரை வழங்க அழைத்தார்கள். ஒரு சிங்கள மாணவர் நன்றி கூறிய பின்னர் தமிழில் உரையாற்ற எனலனை சைகை காட்டினார் எங்களை அழைத்துப் போன ஆசரியர். நான் நன்றியுரையோடு நிறுத்திக் கொள்ளாமல் சுவாரஷ்யத்துக்காக ஒரு விஷயத்தைச் சொன்னேன்.

மத்திய வங்கி மக்களோடு தொடர்புகளைப் பேணாது. வங்கிகளுடனேயே பேணும் என்றே படித்து இருகலகிறோம். ஆனால் இன்று இலங்கை மத்திய வங்கி மக்களாகிய எங்களோடு நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது. அதற்காக நன்றிகள் என்றேன். சபையில் ஒரு சலசலப்பும் கைதட்டலும். நிகழ்ச்சி  முடிந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வளவாளராக வந்திருந்த ஒருவர் என்னை அழைத்து எந்தப் பாடசாலை? ஹைலன்ஸ் கல்லூரியா ? எனக் கேட்டார். ஆம் என்றேன். நானும் ஹைலன்ஸ்தான். இப்படி முன்வந்து பேசுவது முக்கிய பண்பு. நல்ல பேச்சு என பாராட்டிவிட்டு கொழும்பு வந்தால் என்னை வந்து சந்திக்கலாம் என தனது விசிட்டிங் கார்ட்டைத் தந்தார். அதில்  எம். வாமதேவன் மேலதிகப் பணிப்பாளர் நிதி திட்டமிடல் திணைக்களம்  என்று இருந்தது.

இப்படியாக அவருடனான அறிமுகத்தை அடுத்து உயர்தரம் முடிய கொழும்பு வந்த நாள் ஒன்றில் இப்போதைய ஜனாதிபதி செயலகத்தில் இருந்த அவரது அலுவலகத்தில் அவரைச் சந்திக்கச் சென்றேன். அதனையும் பாராட்டிய அவர் அடுத்து வீட்டுக்கு வருமாறு முகவரி கூறினார். முதலாவது சந்திப்பிலேயே எனக்கு விருந்தளித்தார். ஊக்கமூட்டினார் இவ்வாறு எனக்கும் அவருக்குமான நட்பு இறுக்கமானது. 2000 ஆம் ஆண்டு நான் நடாத்திய கல்வியக பரிசளிப்பு விழாவுக்கு இவரையே பிரதம விருந்தினராக அழைத்து மாணவர்கள் மத்தியில் பேச வைத்தேன். இவ்வாறு நட்பு பலவாறாக தொடர்ந்தது.

2014 ஆம் ஆண்டு எனது பாக்யா பதிப்பகத்தின் ஊடாக  வாமதேவன் அவர்கள் எழுதிய மலையகம்  சமத்துவ அபிவிருத்தியை நோக்கி எனும் நூலை  வெளியிடும் முயற்சிகளில் இருந்த காலத்தில் மீரியபெத்தை மண்சரிவு இடம் பெற்றது.

அதன்போது எல்லோரும் நிவாரணப் பணியில் இறங்கியபோது நாங்கள் அங்கே பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சிகளைச் செய்தோம். அதன்போது இத்தகைய அனுபவத்தை தன் இளமைக் காலத்தில் அனுபவிக்க நேர்ந்த வாமதேவன் அவர்களை உதாரணம் காட்டி நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று அந்த மாணவர்களை ஆற்றுப்படுத்த முடிந்தது. அதற்கு வெளியிடுவதற்கு தயாராக இருந்த அவரது நூல் பெரும் துணையாக இருந்தது.

எனினும், அவரது வாழ்க்கைக் குறிப்புகள் அந்த நூலில் இல்லை. அதனை உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தெரியச் செய்வதற்காக கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் அற்றைத் திங்கள் நிகழ்வில் அவரது அனுபவப் பகிர்வு ஒன்றை ஒழுங்கு செய்தேன்.  கூடவே வசந்தம் தொலைக்கா ட்சியில் தூவானம் எனும் இலக்கிய   நிகழ்ச்சியில் அந்த நூலை முன்னிறுத்தி அவரைப் பேச வைப்பதற்கான முயற்சி ஒன்றையும் ஒழுங்கு செய்தேன்.

அதில் அவர் பகிர்ந்து கொண்ட நினைவுகளைத் தொகுப்பாக்கி பத்திரிகைகளுக்கு எழுதியதுடன் இந்த அனுபவங்கள் நூல் உருப்பெறவேண்டும் என்ற எனது அவாவையும் முன்வைத்தேன். இன்று ஆறு ஆண்டுகள் கழித்து அந்த அவா நிறைவேறி இருக்கிறது.

இந்தப் பின்னணிகளை இங்கே எழுதக் காரணம் எம். வாமதேவன் இளைஞர்களை வழிநாடத்தக் கூடிய பண்புகளைக் கொண்டுள்ளமையைச் சுட்டிகள் காட்டவும், இந்த  நூல் பலரை ஆற்றுப்படுத்தும் பண்புகளைக் கொண்டது என்பதைக் எடுத்து காட்டுவதற்குமாகவே.

தான் பிறந்த கொட்டகலை பகுதியில் ஆரம்பித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தான் கல்வி கற்ற விதம் குறித்தும் அதற்காக அவர் எதிர் கொண்ட சவால்கள் குறித்தும் விரிவாக எழுதி உள்ளார். அத்துடன் தனது மாணவர் காலத்தில் தன்னை வழிநடத்திய ஆசரியர்கள் தொடர்பில் எழுதி உள்ளார்.

ஒரு நீரோடை பொல ஏறும் அவரது நினைவுகள் சீராக வாசகர்கள் இதயத்தைச் சென்றடைகிறது. ஆடம்பரமில்லாத எடுத்தியம்பும் முறைமை இயல்பாக அவரது அனுபவங்களை வாசகருக்கு சென்று சேர்க்கின்றன. பல இடங்களில் மனதைத் தொடும் சோகம் இழையோடும் அதேவேளை வாய்விட்டுச் சிரிக்க நல்ல சுவையான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார்.

தனது சாதனைகளை மாத்திரம் பட்டியல் இடாமல் தான் சந்தித்த சவால்களை அடைந்த தோல்விகளை பதிவு செய்கிறார்.

ஐம்பதாண்டுகால தன்வரலாற்று அனுபவங்களை அந்தந்த கால கட்ட அரசியல், தொழிற்சங்க, கல்விப்பின்புல, கலை இலக்கிய ஆளுமகளையும் சம்பவங்களையும் கூட தொட்டுக் காட்டிக் கொண்டே செல்வதனால் தன்வரலாறாக மட்டுமன்றி ஒரு கால கட்ட மலையக வரலாற்றுப் பதிவாகவும் கூட அனையாளப்படுத்த முடிகிறது.

தமது கல்லூரியின் மாணவர் சங்கமான தமிழ்ச் சங்கத்தில் செயலாளராக செயற்பட்ட காலத்தில் கவிஞர் சக்தீ பால அய்யா அவர்களை அழைத்து அவரது தலைமையில் கவியரங்கம்  ஒன்றை நடாத்தினோம். இன்று எத்தனை மலையகப் பாடசாலைகள் இத்தகைய நிகழ்வுகளை ஒழுங்கு செய்கின்றன எனும் கேள்வியை எமக்குள் எழுப்புகிறது. தொழிற்சங் கவாதி  வி.கே. வெள்ளையன் அவர்களின் ரஷ்ய பயணத்தின் பின்னதாக அவரை பாடசாலைக்கு அழைத்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்தோம் என பதிவு செய்கிறார்.

இன்று அவ்வாறு பயணம் மேற்கொண்ட ஒரு தொழிற்சங்க தலைவரை அழைத்துப் பேசவைக்க மலையகப் பாடசாலைகளால் முடியுமா ? அல்லது அத்தகைய தொழிற்சங்க தலைவர்கள்தான் உள்ளனரா என்ற கேள்வியையும் இந்தப் பதிவுகள் ஏற்படுத்துகின்றன.

அதேபோல ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சரான தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மலையக மக்களை வடக்கில் வந்து குடியேறுமாறு அழைப்பு விடுத்தபோது, அதற்கடுத்து மாணவராக உரையாற்றிய எம். வாமதேவன், அமைச்சரின் கருத்தை மறுதலித்ததுடன் மலையகம் எங்கள் மண்.

எங்கள் தாயகம். அதனை விட்டு நாங்கள் வெளியேற முடியாது' எனும் பொருள்பட பேசி பாராட்டைப் பெற்றுள்ளார். இவ்வாறு மாணவர்களை அமைச்சர்களுடன் விவாதம் செய்யும் வகையிலாக உரையாற்றச் செய்யும் நிலைமைகள் இன்றைய மலையக பாடசாலை சூழலில் காணப்படுகின்றனவா?என்ப ன போன்ற நினைவலைகளை உருவாக்கி விடும் நூலாக இது உள்ளது.

தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவர்கள்  வெளிநாடுகளுக்குச் சென்று ஆங்கில மொழி மூலத்தில் கல்வி கற்பதில் இருக்கக்கூடிய தயக்கத்தை தனது அனுபவங்கள் ஊடாக தகர்த்தெரிவதையும் அவதானிக்க முடிகிறது.

February/ 28/2021

மலையகத் தமிழர் சமூகம் அமைச்சு செயலாளர்  எனும் உயர் அரச பதவியை அடைவது சாதாரணமானதல்ல. ஏனெனில் இலங்கை பிரஜை அந்தஸ்த்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட மலையகத் தமிழர் சமூகம் அரசாங்க பாடசாலை கல்வி மறுக்கப்பட்டு தோட்டப் பாடசாலைகளில் கற்று அரச பணிகளில் சேர்வதே சிம்ம சொப்பனமாக இருந்த நிலையில், அந்தச் சூழலில் இருந்து வந்து அத்தகைய அரச உயர் பதவியைப் பெற்ற இரண்டாமவராக எம். வாமதேவன் திகழ்கிறார்.

மற்றையவர் பிரதாப் ராமானுஜம்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமானுஜம் அவர்களின் புதல்வர் ). அந்தப் பயணம் நோக்கிய அனுபவங்கள் இளைய மலையகத்தவர் மத்தியில் ஒரு உந்ததுதலைத் தரவல்லது.

இதற்கும் அப்பால் தனது இலக்கிய முயற்சிகள், விளையாட்டுத் துறை ஈடுபாடுகள் என அனைத்தையும் பதிவாக்கி உள்ளார். இந்தப் பதிவுகள் தனியே எழுத்துக்களால் மட்டுமன்றி படங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய படங்கள் சொல்லும் செய்திகள் இன்னுமொரு வரலாற்றுக் காட்சிப்படுத்தலை வாசகர் இடையே நிகழ்த்துகிறது.

இவ்வாறு இந்த தன்வரலாற்று நூல் ஒன்றை எழுதத் தூண்டுதலாக இருந்தும், படங்களையும் சேர்த்து வெளியிட பரிந்துரை செய்தும், அட்டைப் படத்தில் சேர்க்கப்பட்டுள்ள எம்.வாமதேவன் அவர்களது அழகிய புகைப்படத்தை எடுத்தும் பங்களிப்பு செய்யக் கிடைத்தமை எனக்குள் உள்ளூற மகிழ்ச்சி தருகிறது.

குமரன் பதிப்பக வெளியீடாக 251 பக்கங்களினாலான இந்த நூல் இளைய சமூகத்தினரால் வாசிக்கப்பட வேண்டியது.


மலைநாட்டுத் தமிழர்கள்- புளொட் அமைப்பின் அரசியற் பார்வை

 -மல்லியப்புசந்தி திலகர் 

தோட்டத் தமிழரகள், இந்திய வம்சாவளி தமிழர்கள், மலைநாட்டுத் தமிழர்கள், நாடற்றவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் எனும் பல பெயர்களில் இலங்கையின் பெருந்தோட்டங்களில், தேயிலை ரப்பர் தொழில்துறைகளில் அடிமைகள் போன்று தலைமுறை தலைமுறையாக வாழவைக்கப்பட்டிருக்கும் ‘ஒரு தமிழ்ச்சமூகம்’ பற்றிய தனது புரிதலாக, உமா மகேஸ்வரன் தலைமையில் இயங்கிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வெளியீடாக கொண்டு வந்திருக்கக் கூடியதே THE UPCOUNTRY TAMILS - The Wretched of the Earth (மலைநாட்டுத் தமிழர்கள் உலகின் மோசமான பக்கத்தினர்) எனும் இந்த ஆங்கில நூல்.

இந்த நூல் குறித்த பார்வைக்கு வருவதற்கு முன் நடைமுறை அரசியலுடன் தொடர்புபடுத்திய விடயம் ஒன்றைப் பார்த்துவிட்டு வருவது பொருத்தமானது.

கடந்தவாரம் (23/01/2021)ஒரு வானொலி நிகழ்ச்சி. அதில் இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற எம்.ஏ.சுமந்திரன் நேர்காணல் செய்யப்படுகிறார். அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் உங்கள் கருத்து நிலைப்பாடு என்ன? என்பதாக இருந்தது.அதற்கான அவரது பதில்; அதற்கு ‘கூட்டு ஒப்பந்தம்’ மூலமாக தீர்வு காண்பதே சரியானதாகும். அங்கே தோட்டங்கள் தனியார் கம்பனிகளிடமே வழங்கப்பட்டுள்ளன. எனவே அவர்களோடு பேரம்பேசி கூட்டு ஒப்பந்தம் மூலம் தீர்வு காண்பதே சரி என நினைக்கிறேன்.அரசாங்கம் தலையீடு செய்வதில் எந்த பிரயோசனமும் இல்லை என்பதாக அமைந்தது.

இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கூறிய எந்த பதில் ஒரு சட்டத்தரணியின் பதிலாக, சரியானதாகவும் இருந்ததுவே அன்றி அரசியல்வாதியுடைய பதிலாக இருக்கவில்லை. அதுவும் ‘இலங்கைத் தமிழரசு கட்சியின்’ பேச்சாளராக, நாடாளுமன்ற உறுப்பினராக அந்த பதில் ஏற்புடையதாக இருக்கவில்லை.

இலங்கைத் தமிழரசு கட்சிக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்ததோடு உருவான அந்த கட்சிக்கு 70 ஆண்டுகால வரலாறு உண்டு. அந்த வரலாற்றின் ஆரம்பமே மலைநாட்டுத் தமிழர் தொடர்பானது என்பதுதான் இங்கே குறித்துரைக்கத்தக்கது.

சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் முதல் பத்து மாதங்களுக்குள் கொண்டுவரப்பட்டச் சட்டம் இந்திய வம்சாவளி மக்களின் ( மலைநாட்டுத் தமிழர் உள்ளடங்களாக) இலங்கைக் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம். இதற்கு ஆதரவாக எதிராக வாக்களிப்பது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சிக்குள்ளே ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ். ஜே.வி.செல்வநாயகம் ஆகியோரிடையே கருத்து முரண்பாடு ஏற்படவே, எஸ். ஜே.வி.செல்வநாயகம் ( தந்தை செல்வா) பிரிந்து சென்று ‘இலங்கைத் தமிழரசு கட்சி’ யை உருவாக்கினார் என்பது தொடக்க வரலாறு. அதற்குப் பின் அந்த கட்சிக்கு இற்றைவரையான நீண்ட வரலாறு இருக்கலாம்.

இது நடந்தது 1948, 1949 களில். அப்போதிருந்து 20 ஆண்டுகள் கழித்து இன்னுமொரு அரசியல் நிகழ்வு ஒன்று நடந்தது. அதுதான் ‘தமிழர் கூட்டணியின்’ உருவாக்கம். இந்தக் கூட்டணியில் அன்று பிரிந்து சென்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசும், இலங்கைத் தமிழரசு கட்சியும் இணைந்ததோடு, தாம் எதற்காகப் பிரிந்தார்களோ, அதாவது மலையகத் தமிழர்களின் வாக்குரிமைப் பறிப்புக்காக சண்டையிட்டுப் பிரிந்து கொண்டவர்கள் அதே மக்களின் அரசியல் தொழிற்சங்க அமைப்பான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும் இந்த தமிழர் கூட்டணியில் இணைத்துக் கொண்டார்கள்.

சௌமியமூர்த்தி தொண்டமானையும் சேர்த்து மூன்று தலைவர்களுமே கூட்டணியின் இணைத் தலைவர்களாகவும் இருந்தார்கள். 1976 ஆம் ஆண்டு இந்தக் கூட்டணி தமிழர் ( ஐக்கிய ) விடுதலைக் கூட்டணியாக உருப்பெற்றதோடு, வட்டுக்கோட்டையில் மாநாடு கூட்டி தனித் தமிழ் ஈழம் ஒன்றே தமிழர் விடுதலைக்கு தீர்வு என ‘வட்டுக்கோட்டை தீர்மானம்” நிறைவேற்றினார்கள். எனினும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இந்த கூட்டணியில் இருந்தும் அந்தத் தீர்மானத்தில் இருந்தும் தம்மை விலக்கிக் கொண்டது. அது சரியான முடிவும் கூட.

இந்த 1950 க்கும் 1970 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியானது ‘ இலங்கைத் தொழிலாளர் கழகம்’ என்ற தொழிற்சங்கத்தை 1962 ஆம் ஆண்டு உருவாக்கி மலையகப் பெருந்தோட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.

இவ்வாறு தமது கட்சியின் உருவாக்கத்திற்கான அடிப்படையாகவும், தாம் உருவாக்கிய கூட்டணியில் பங்காளியாகவும் மலையகத் தமிழர்களை தம்மோடு இணைத்துக் கொண்டதோடு தோட்டத் தொழிலாளர்களுக்கு என தொழிற்சங்க இயக்கமும் நடாத்திய இலங்கைத் தமிழரசு கட்சி இப்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத் தலையீடு அவசியமற்றது என்ற நிலைப்பாட்டை எடுக்குமானால் அதுவே இங்கு விசித்திரமான விடயமாக உள்ளது.

இந்த நிலையிலேயே 1976 க்குப் பின் வடக்கு கிழக்கில் தமிழர் விடுதலைக்காகத் தோற்றம் பெற்ற இளைஞர் (விடுதலை) இயக்கங்கள், மலையகத் தமிழர்கள் தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன என்பது பற்றிய பார்வை அவசியமாகிறது. அவற்றுள் ஈரோஸ் இயக்கம் தமது ‘ஈழம்’ சிந்தனைக்குள் மலையகத்தையும் சேர்த்து வரைந்திருந்தார்கள் ( Sketch ). நாம் ஈழவர், நமது மொழி தமிழ், நம்நாடு ஈழம் என்பது அவர்களது கோஷமாக இருந்தது. இது குறித்த நூல்களும் உள்ளன.

இதேபோல ‘புளோட்’ ( தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) எத்தகைய நிலைப் பாட்டைக் கொண்டிருந்தது என்பதை விளக்குவதே இந்த நூல்.

26 பக்கங்களைக் கொண்ட இந்தச் சிறிய ஆங்கில நூல் அந்த அமைப்பின் பெயரிலேயே தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. அதுவும் இந்தியாவில் ( சென்னையில்) வெளிவந்துள்ளது என்பது அவதானத்துக்கு உரியது. வெளிவந்த ஆண்டு குறித்த தெளிவான பதிவு ஒன்று இல்லாதபோதும் 1983, 1985 ஆம் ஆண்டுகளில் அமைப்பின் தலைவர் உமா மகேஷ்வரன் கூறியதான இரண்டு கருத்துகள் ( Messages) நூலில் ஆண்டுகள்ளுடன் குறிப்பிடப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. எனவே இந்த நூல் வெளிவந்திருக்கக் கூடிய ஆண்டு 1986 ஆக இருக்கலாம்.

1988 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தலில் வடகிழக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி, மலையகத்தில் மத்திய மாகாண சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ( புளோட்), அப்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து வெளியேறிய பெரியசாமி சந்திரசேகரனையும் ( பின்னரே மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரானார்) இணைத்துக் கொண்டு களம் இறங்கி இருந்தது.

இந்த நூலில் உமா மகேஷ்வரன் கூறும் இரண்டு கருத்துக்களை இங்கே சுருக்கமாகச் சொல்லாம். “வவுனியா, கிளிநொச்சி, மலையகத்தில் வாழும் தொழிலாளர்கள்( Workers), விவசாயத் தொழிலாளர்களுடன் ( Peasants) மட்டக்களப்பில் வாழும் மீனவர் சமூகமும் பாதுகாப்பும் அரணும் வேண்டி நிற்கிறார்கள்” (1983 - உரை - அண்ணாமலைப் பல்கலைக் கழகம்).

“ தோழர்களே நாம் மொழியாலும் பௌதிகமாகவும் பிரிந்து நின்றாலும் நம்மை ஒடுக்கும் ஏகாதிபத்தியம் ஒன்றுதான். அந்த எதிரியை எதிர்கொள்ள கரம் கோர்ப்பொம்” ( 1985 மேதினச் செய்தியில் சிங்கள மக்களை நோக்கி)

இவை எல்லாம் நடைமுறைச் சாத்தியம் கண்டனவா என்பதற்கு அப்பால் மலையகத் தமிழர் சமூகம் குறித்த புளோட் டின் வாசிப்பு எப்படியானதாக இருந்தது என்பதற்கு இந்த நூல் நல்ல ஆதாரமாக உள்ளது.

மலையகத் தமிழர்களின் வரலாற்றை 1842 இல் இருந்தே அணுகுவது
1947 ஆம் ஆண்டு தேர்தலில் மலையகத் தமிழர்கள் ஏழு நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றதோடு அவர்கள் மேலதிக 13 தொகுதிகளின் உறுப்புரிமையை அப்போதைய அரசுக்கு எதிராக உருவாக்கியமை

1930 களில் இருந்து மலையகத் தமிழர் எதிர்ப்பு சிங்களத் தரப்பில் தலை தூக்கியமை
1948 ஆம் ஆண்டு வடக்குத் தமிழர் தரப்பு மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்புக்கு ஆதரவாக வாக்களித்த துரதிஷ்ட்டம்.

1964 ஆம் ஆண்டு மலையகத் தமிழர்களை நாடு கடத்துவதற்கு இலங்கை - இந்திய அரசுகள் செய்து கொண்ட ‘சிறிமா சாஸ்த்திரி’ ஒப்பந்தம் ஆகியவற்றோடு இணைத்து அவர்களின் வரலாற்றை அணுகி நோக்கி இருக்கிறது. மறுபுறமாக இலங்கையில் மலையகத் தமிழர்களது,

i. வீடமைப்பு
ii. நாட்கூலி
iii. கல்வி
iv. சுகாதாரம்

முதலான விடயங்களையும் ஆராய்ந்து தமது பார்வையை ஆழப்படுத்திக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

150 வருடகாலமாக மலையகத்தமிழர்களுக்காக உள்ள வீடமைப்பு முறைமையில் உள்ள ‘லைன்’ வீட்டு அமைப்பு முறை தொடர்பிலும் அங்கு இருக்கக் கூடிய மலசலகூட வாய்ப்புகள் ஏகாதிபத்தியவாதிகளின் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்பனவும் பதிவு பெற்றிருக்கின்றன.இதன்போது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த என்.சண்முகதாசனின் நூலில் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது எதிர்காலமும் எனும் அத்தியாயம் பற்றியும் மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ளது.

நாட்கூலி தொடர்பில் ஆராயும்போது 1984 ஆம் ஆண்டு வில்மட் பெரேரா ஆணைக்குழுவின் பரிந்முரைப்பான ஒரு நாளைக்கு 5 ரூபா 20 சதம் எனவும் மாதாந்தம் அது 135/= ஆக அமைய வேண்டும் என்ற பரிந்துரைப்பையும் சுட்டிக்காட்டி அதில் இருந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் நாட்கூலி தொடர்பிலும் அது ஏனைய தொழிலாளர்களிடத்மில் இருந்து எவ்வாறெல்லாம் வேறுபடுகின்றது என்பதாகவும் ஆய்வு செய்துள்ளது.

Master plan for Tea என அப்போது மேற்கொண்ட மாதிரி கணக்கெடுப்பு ஆய்வு ஒன்றில், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளடங்களாக மாதச்சம்பளமாக சராசரியாக 200/= வழங்கபடுதல் வேண்டும் என்ற சராசரி பரிந்துரைப்புப் பற்றியும் கூட பதிவு செய்கிறது. அந்த காலத்தில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டங்களும் ஆய்வறிக்கைகள் குறித்தும் கூட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கல்வி நிலை குறித்த ஆய்வுகளின் போது ஐந்தாம் வகுப்பு வரை மாத்திரமே கொண்ட தோட்டப் பாடசாலை முறைமை தொடர்பாக விவாதிக்கப்படுவதுடன், அப்போதைய Economic Review சஞ்சிகையில் அது குறித்து வெளிவந்த ஆய்வுக் கட்டுரையும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

சுகாதாரம் தொடர்பாக கருத்துரைக்கும் போது, அங்குள்ள குறைந்த மட்ட கூலி வழங்குதலை வெளிப்படுத்தும் ‘நிலைக் கண்ணாடியாக’ அங்குள்ள சுகாதார நிலை நிலவுவதாக கருத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் மிக முக்கிய தகவலாக ஒரு விடயம் பதிவாகி உள்ளது. அதாவது நாடு முழுவதும் இலவச சுகாதார சேவை நடைமுறையில் உள்ளபோது தோட்டத் தொழலாளர்கள் அந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ள தோட்ட நிர்வாகம் வருடாந்தம் ஒரு தொழிலாளிக்கு 3 ரூபா 50 சதம் வீதம் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும்.

அதனைச் செலுத்தாமல் விடுவதனால் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவையான சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்ள அரச மருத்துவ மனைகளுக்கு தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை அனுப்புவதில்லை. தாம் நடாத்தும் தோட்ட வைத்திய நிலையங்களில் ஏதாவது ஒரு மருந்தைக் கொடுத்து சமாளித்து விடுவார்கள்.

அப்படியே தோட்ட நிர்வாகம் அரசுக்கு ஆண்டுதோறும் 3 ரூபா ஐம்பது சதம் செலுத்துவதாக இருந்தாலும் அவை தொழிலாளியின் உழைப்பில் இருந்தே கழிக்கப்பட்டு செலுத்தப்படும். எனவே எல்லோருக்கும் இலவச சுகாதார சேவை என இந்த நாட்டில் இருக்க தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் (தோட்ட நிர்வாகம் ஊடாக ) பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.

இந்த முறைமை அவர்களது நாட்கூலியைக் குறைக்கும் என்பதையும் அதாவது இதனை அரசாங்கத்துக்கு செலுத்தும் தோட்ட நிர்வாகம் அதனை தொழிலாளிக்கான சேவையின் ஒரு பகுதியாக சேர்ப்பதனால் நாட் கூலியை உயர்த்த தயங்கிவருகின்றன.

இந்த நூல் 1980 களின் நடுப்பகுதியில் வெளிவந்த போது இருந்த நிலைமையே இப்போதும் தொடர்வது எத்தனை துரதிஷ்டமானது. கடந்த 2021-01-20 ஆம் திகதி Daily Mirror ஊடகத்துக்கு கருத்துத் தெரிவித்து இருக்கும் முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை இவ்வாறு கூறுகிறார்:
“தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் முதல் சுகாதார சேவை அரசாங்கம் பெற்றுக் கொடுப்பதில்லை. தோட்டக் கம்பனிகளே பெற்றுக் கொடுக்கின்றன. அந்த தொழில் துறையின் பலம் பலவீனத்தை அதனை செய்பவர்களே அறிவோம். உண்மையில் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தலையிடக்கூடாது” ( ரொஷான ராஜதுரை - முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் -

“The Government does not provide for these workers. From salaries to medical facilities, it is the tea companies that are looking after these plantation workers. First of all, the government really should not get involved in wage setting because it is only those who are in the business know the strengths and weaknesses of the sector. Anyone can give political promises. But, when practically speaking, fulfilling such promises is not possible at the moment,” Mr. Rajadurai said.( Daily Mirror 20-01.2021)

இந்தக் கருத்து தோட்டப் பகுதி சுகாதார துறையில் அரசாங்கம் ஈடுபடவில்லை என்பதைக் காரணம் காட்டி எவ்வாறு கூலி உயர்வு மறுக்கப்படுகிறது என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும்.எனவே கூலி உயர்வு விடயத்தில் அரசாங்கம் தலையிடக் கூடாது என முதலாளிமார் சம்மேளனம் கேட்பது போலவே, இந்த மக்களும் இலங்கை நாட்டின் பிரஜைகள் எங்களுக்கு அரச சுகாதார சேவையை வழங்கு, அதற்காக தோட்டக் கம்பனிகள் கழித்துக் கொள்ளும் தொழிலாளர்களின் ஊதியத்தின் ஒரு பகுதியை நட்கூலியில் சேர்த்துக் கொடுத்தல் அவர்களது சம்பளமும் கூடும் கம்பனிகளிடம் அடிமையாக வாழும் நிலைமையும் மாறும் என்பதற்காகவே அரசாங்கத்தின் தலையீடு வேண்டப்படுகிறது என்பதனை அரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும் இன்றைய நிலையில் கம்பனிகளின் பிரதிநிதிகளைப் போலவே அரசியல் பிரதிநிதிகளும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியமில்லை என்ற மனப்பாங்கைக் கொண்டிருப்பது துரதிஷ்டவசமானது.

இந்த நூலைப் பொறுத்தவரை புளோட் இயக்கத்தின் பிரசார ஏடாக மலையகத் தமிழர்களை தமது அமைப்பு சார்ந்து கவர்வதற்கான அதுவும் இந்திய வம்சாவளியினரான அவர்கள் பற்றி இந்தியாவில் வெளியிட்ட நூல் என்பதன் அடிப்படையிலேயே நோக்க வேண்டி இருக்கிறது. இந்த நூலில் மலையகத் தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகளைச் சுட்டுக்காட்டும் புளோட் அமைப்பு ஒன்றில் அவர்கள் மலையகத்தில் தொடர்ந்து வாழலாம் அன்றில் வடக்கில் வன்னியில் வந்து குடியேறலாம் அதற்கு தாம் உறுதுணையாக இருப்போம் என்பதாக தெரிவித்துள்ளது. அத்தகைய தெரிவை மேற்கொண்ட மலையகத் தமிழர்களின் வன்னி, கிளிநொச்சி வாழ்க்கை அவலம் குறித்து தனியாக ஒரு நூல் எழுதலாம்.

ஆனாலும் மலையகத் தமிழர்கள் குறித்த அரசியல் உரையாடலைச் செய்வதற்கு அந்த மக்கள் குறித்த வரலாற்று பூர்வமானதும் தத்துவார்த்த ரீதியுமான ஆய்வுகள் அவசியம் என்பதற்கு இந்த நூல் ஆதாரமான ஒரு சான்றாக அமைந்துள்ளது எனலாம்.


தரவுப் புத்தகம்- இலங்கையின் ஆட்சிமுறை மீதான பிரஜைகளின் நம்பிக்கைக் கணக்கெடுப்பு

ஆட்சி முறை என்பது காலத்துக்கு காலம் மாறி வந்திருக்கிறது. மன்னராட்சி முறைமையில் இருந்த இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரத்துக்குப் பின் இப்போது ஜனாநாயக ஆட்சிமுறையைத் தெரிவு செய்து கொண்டுள்ளனர்.

இந்த ஜனநாயக ஆட்சி முறை என்பது மக்கள் தமது வாக்களிப்பு மூலம் தெரிவு செய்து கொள்கிற ஒரு முறை. அதனால்தான் ஜன ( சனம் - மக்கள்) நாயகம் ( தலைமை) எனப் பொருள்பட அழைக்கிறோம்.

இந்த ஜனாநாயகம் குறித்த விமர்சனபூர்வமான கேள்விகள், சந்தேகங்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது. உலகளாவிய ரீதியில் ஒரு பிரதான பேசு பொருளாகக் கூட அது மாறியிருக்கிறது. அண்மைய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரும் கூட ஆட்சியில் இருந்த ஜனாதிபதி தான் அந்த முடிவை ஏற்கப் போவதில்லை என வழக்குத் தொடர்ந்தமை, அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்துக் கொண்டமை போன்றன ‘ஜனநாயகம்’ மீதான விமர்சனங்களை வலுப்படுத்துவதாகவே உள்ளது.

இலங்கையிலும் கூட சிவில் நிர்வாக முறைமைக்குள் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவது நாளாந்த நிகழ்வாகிவிட்ட நிலையில், இது போன்ற தருணங்களில் மக்களின் மனநிலையை அளவிடக்கூடி யதான ஏமேனும் வழிமுறைகள் உள்ளனவா என்ற சிந்தனை பலருக்கும் எழும்புவதுண்டு.

மக்களிடையே இடம்பெறும் பொதுவான உரையாடல்கள், கருத்தாடல்களில் இதனை அவதானிக்க முடிந்தாலும் ஒரு விஞ்ஞான ரீதியான முறைமையில் அந்தக் கருத்துக் கணிப்பை முன்னெடுப்பது ஒரு கலை. ஒரு படிப்பு.

அத்தகைய ஒரு விஞ்ஞான பூர்வமான முயற்சியாக இலங்கையின் ஆட்சிமுறை மீதான பிரஜைகளின் நம்பிக்கைக் கணக்கெடுப்பினைத் தரும் நூல் ‘தரவுப் புத்தகம்’ ( Data Book)

பேராதனைப் பல்கலைக் கழகத்தின் அரசியல் விஞ்ஞான பிரிவு ‘ பொதுக் கொள்கைகளும் ஆட்சிமுறையும்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்து பிரசுரித்திருக்கும் இந்த நூல் பல ஆய்வுக்குரிய ஆரம்பத் தரவுகளைத் தருகின்றது.

ஜி.டி.ஆர்.யு. அபேரத்ன, எம்.டபிள்யு.ஏ.ஜி. வித்தானவசம், டி.ஐ.ஜே.சமரநாயக்க ஆகியோரினால் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூலுக்கு அதனையுந்தாண்டிய பலரது பங்களிப்பு இருந்துள்ளது. அவர்களின் பட்டியலையும் கூட இந்த நூல் தந்துள்ளது.

பொதுவான பார்வையில் புத்தகம் முழுவதும் அட்டவணைகளாக அமைந்த ஒரு தோற்றப்பாடு தெரிந்தாலும், அந்த அட்டவணை தரும் புள்ளிவிபரங்கள் எதனை அடிப்படையாக கொண்டன, எவ்வாறு அந்த புள்ளிவிபரக் கணிப்பீடுகள் பெறப்பட்டுள்ளன என்கிற கோணத்தில் இருந்து பார்க்குமிடத்து பல சுவாரஷ்யமான முடிவுகள் கிடைக்கப்பெறுகின்றன.

இந்த நூலின் உள்ளடக்கத்தை விளங்கிக் கொள்வதற்காக இரண்டு அனுபவங்களையும் அதனோடிணைந்த தகவல்களையும் பகிரந்து கொள்வது உகந்தது.

2017 ஆம் ஆண்டு சார்க் நாடுகளின் ஒன்றான பூட்டான் நாட்டிற்கு சென்றிருந்தபோது கிடைக்கப்பெற்ற தகவல்தான் அந்த நாட்டில் மொத்த தேசிய வருமானத்தின் ( Gross National Income ) மூலமாக அல்லாது மொத்த தேசிய மகிழ்ச்சி (Gross National Happiness) ஊடாகவே மக்களின் திருப்தி மதிப்பீடு அல்லது கணக்கெடுப்பு செய்யப்படுகிறது என்பது. இந்த தகவலை அடுத்து மனதில் எழக்கூடிய முதல் கேள்வி, மகிழ்ச்சியை அளவீடு செய்ய முடியுமா ? என்பது, இரண்டாவது கேள்வி அப்படியே மகிழ்ச்சியை அளவீடு செய்யும் வழிமுறைகளைக் கையாண்டாலும் அதனை தேசிய மட்டத்தில் அளவீடு செய்வதற்கும் அமிவிருத்திக் குறிகாட்டியாக கொள்வதற்கும் அரசாங்கம் தயாராகுமா ? என்பது. இவை இரண்டும் பூட்டான் நாட்டில் சாத்தியமாகியிருக்கிறது என்பதுதான் சத்தியம்.

எப்படி அந்த மகிழ்ச்சியை அளவீடு செய்கிறீர்கள் ? எனக் கேட்டபோது கிடைத்த இன்னுமோர் ஆச்சரியந்தான் அந்த நாட்டில் அதற்கென ஓர் ஆணைக குழுவே உள்ளது. அதுதான ‘தேசிய மகிழ்ச்சி ஆணைக்குழு’ ( National Happiness Commission ). இந்த ஆணைக்குழு ஆண்டுதோறும் மக்களிடையே கணக்கெடுப்புச் செய்கிறார்கள். அந்தக் கணக்கெடுப்பில் அரசு மக்களுக்கு வழங்கும் சேவைகள் தொடர்பில் மக்கள் திருப்தி கொள்கிறார்களா ? அதன் மூலம் மகிழ்ச்சி அடைகிறார்களா ? என கேட்டு அறிகிறார்கள்.

உதாரணமாக, அரசு உங்களுக்கு பெற்றுக்கொடுக்கும் கல்வி வாய்ப்புகள் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என ஒரு கேள்வியை மக்களிடம் முன்வைத்து அதற்கு விடையளிக்க ஆம், இல்லை, ஓரளவு, திருப்தி, மிக திருப்தி, திருப்தி இல்லை என்பதுபோன்ற பதில்களைப் பெற்று திருப்தி குறைவாக இருப்பதற்கான காரணங்களைக் கேட்டறிந்து, அதனை மதிப்பாய்வு ( Evaluation ) செய்து அடுத்துவரும் ஆண்டுகளில் பொது கொள்கை வகுப்பு, திட்டமிடல் திணைக்களங்களுக்கு தரவுகளாகத் தருகிறார்கள். அதற்கேற்ப கொள்கை வகுப்பாளர்கள் ( Policy makers ) அடுத்தடுத்த ஆண்டுத் திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து மக்களை மகிழ்ச்சிபடுத்துவதை இலக்காக் கொண்டு செயற்பட முனைகிறார்கள். இதுபோன்ற மக்களின் தேவைகள் என உணரும் சுகாதாரம், போக்குவரத்து, வீடு என பல தரப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் கேள்விகளை எழுப்பி கணக்கெடுப்புகளைச் செய்து அபிவிருத்திக் கொள்கை வகுப்புக்கும் மக்களுக்கான ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் பூட்டான் நாடு முயற்சி மேற்கொள்கிறது. பூட்டானின் இந்த முன்மாதிரி திட்டத்தை பல மேலைத்தேய நாடுகள் கூட பின்பற்றத் தொடங்கியுள்ளன.

இரண்டாவது அனுபவப் பகிர்வுக்கு முன் இந்த ‘தரவுப் புத்தகம்’ எனும் நூல் தர முனையும் விடயங்களைப் பார்த்துவிட்டு வரலாம். இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் மேல்மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இருந்து குறைந்தது ஒரு மாவட்டம் எனும் அடிப்படையில் 12 மாவட்டங்களைத் தெரிவு செய்து மக்களை இன, மத,வயது,பால்நிலை, அடிப்படையில் இனங்கண்டு அவர்களிடம் பல விதமான கேள்விகளைக் கேட்டு அதற்கான பதிற்குறியைப் பெற்றுத் தொகுத்திருக்கிறார்கள். அந்தக் கேள்விகளுக்காக கிடைக்கப்பெற்ற பதில்களே அட்டவணைகளாக புத்தகத்தை நிறைத்திருக்கிறது. அதனைக் கொண்டு ஆய்வுகளையும் அர்த்தப்படுத்தல்களைச் செய்து கொள்வதும் அதனை கொள்கை வகுப்புக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்வதும் அடுத்த கட்டம்.

ஆனால், இந்த ஆய்வின் உப தலைப்பான ‘இலங்கையின் ஆட்சிமுறை மீதான பிரஜைகளின் நம்பிக்கைக் கணக்கெடுப்பு’ என்பதுவும் அதனை அளவீடு செய்வதற்காக மக்களிடம் முன்வைத்த கேள்விகளும் இங்கே முன்வைக்கப்படும் கேள்விகளும் முக்கியத்துவமானது.

மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த நூலின் முதலாம் பாகத்தில. (Part A ) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோர் அல்லது பதிலளித்தோர் பற்றிய விபரங்களைத் தருகிறது. அவர்களது பால், வயது, இனம், மதம், பிறந்த இடம், தற்போதைய வசிப்பிடம், வதிவிட மாகாணம், கல்விமட்டம், தொழில் நிலை, தொழில்துறை, குடும்ப உறுப்பினர் விபரம், மாதாந்த வருமான பங்கீடு, சிவில் சமூக அங்கத்துவம்- பங்குபற்றல், மத நம்பிக்கைகள் முதலான விடயங்களின் அடிப்படையிலேயே தரவுகள் திரட்டப்பட்டு இருக்கின்றன.

இரண்டாவது பாகத்தில் ( Part B) ‘திருப்தி’ எனும் அடிப்படையில் அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகள் அல்லது விடயங்கள் குறித்தான பதிற்குறிகளைத் தொகுத்துத் தருகின்றது. உதாரணமாக அரசியல், சமூக, பொருளாதார குடும்ப நிலைகளில் நீங்கள் அடைந்து இருக்கக்கூடிய திருப்தி, தற்போதைய ஆட்சி முறை மீதான திருப்தி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆட்சி முறையில் எதிர்பார்க்கும் மாற்றம், இலங்கையில் ஜனநாயகத்தின் அபிவிருத்தி குறித்த திருப்தி, அதிகாரப் பிரயோகங்கள் மீதான மனப்பாங்கு ( பெற்றோர் - அரச சார்பற்ற நிறுவனங்கள்- குடும்பப் பின்னணிகள்) போன்ற விடயங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தரவுகள் இதில் அடங்குகின்றன.

மூன்றாவது பாகத்தில் ( Part C) பொது நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள் மீதான பிரஜைகளின் நம்பிக்கை எவ்வாறு உள்ளது என்பதனை அறியும் கேள்விகளும் அதற்கான பதிற்குறிகளும் தரவுகளாக தொகுப்பட்டுள்ளன. இதன் கீழ் பாராளுமன்றம், மத்திய அரசு, உள்ளூராட்சி சபைகள், சிவில் சேவைகள், அரசியல் கட்சிகள், உச்ச நீதிமன்றம், பொலீஸ், இராணுவம், அரச்சார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், பாடசாலைகள், கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள், தேர்தல் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு, மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம சேவகர்கள், வேறு நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை எவ்வாறு உள்ளன என்பதை ஆய்வு செய்து தரவுகளைத் தருவதாக உள்ளது.

மேலும் தொழிலாண்மை அல்லது உத்தியோகம் குறித்த அபிப்பிராயம் எவ்வாறு உள்ளது என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் அரச ஊழியர்கள், மத்திய அரசியல்வாதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள்,பொலிஸார்,நீதிபதி, வைத்தியர்,தாதி, சுற்றாடல், இராணுவ அதிகாரிகள், மாணவர்கள், அரச சார்பற்ற நிறுவன செயற்பாடுகள், வர்த்தகர்கள் ,தனியார்துறை நிறுவனங்கள்,பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், பிற உத்தியோகத்தில் உள்ளோர் தொடர்பில் மக்களின் எண்ணம் எவ்வாறு உள்ளது என தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல பொறுப்புக்கூறல் ( Accountability ) விடயத்தில் தேசிய அரசாங்கம், மாகாண அரசாங்கம்,உள்ளூராட்சி அரசாங்கம்,மாவட்ட செயலகம்,பிரதேச செயலகம்,கிராம உத்தோயுகத்தர் பிரிவுகள்,பொலீஸ்,அரச சார்பற்ற நிறுவனங்கள்,தனியார் துறை, வங்கி போன்றன எவ்வாறு செயற்படுகின்றன என்பதும், ‘வெளிப்படைத்தன்மை’ ( Transparency) . சட்டத்தின் ஆட்சி ( Rule of Law), பிரஜைகளின் பங்குபற்றுதல் ( Citizens’ Participation) முதலான விடயங்களில் இந்த அமைப்புகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதும் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு தரவுகள் தொகுக்கப்படுகின்றன.

பேராதனைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கக்கூடிய இந்த நூல் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிவந்த நூலாக இருப்பதற்கான சான்றுகள் அதன் உள்ளடக்கத்தில் தெரிகிறது. ஆனால் எந்த இடத்திலும் வெளிவந்த ஆண்டு குறித்த நிச்யமான பதிவு இல்லாமல் இருப்பது ஒரு குறைபாடு ஆகும்.இந்த ஆய்வின் நிறைவேற்றுச் சுருக்கத்தை எழுதியிருக்கும் மாலினி பாலமயூரன் எழுதி உள்ளார். அவரது குறிப்பின் இறுதியில் 29 நவம்பர் எனக்குறுப்பிட்டு 201 என்று மட்டுமே உள்ளது. எனவே வெளிவந்த ஆண்டு குறித்த சரியான தகவலை 978-955-589-245-2 என்ற ISBN இலக்கத்தைக் கொண்டே அறியமுடியும். இந்தத் திகதி அல்லது ஆண்டு குறித்து இங்கே வலியுறுத்த காரணம் இந்த நூலின் நோக்கம் ஒரு காலகட்டத்தின் தரவுகளையும், மக்கள் அபிப்பிராயங்களையும் பதிவு செய்வதாக இருப்பதனாலாகும்.

மாலினி பாலமயூரனின் நிறைவேற்றுச் சுருக்கத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் முக்கியமானவை. 2009 ஆம் ஆண்டு புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு அமையப் பெற்ற நல்லாட்சி அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை குறிப்பாக 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் 19 வது திருத்தம் காரணமாக அதிகரித்திருந்தமையை சுட்டிக் காட்டுவதாக தரவுகள் அமைந்துள்ளனவாக விளக்குகிறார்.

எனினும. முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் சிங்கள மக்கள் மத்தியில் பொலிஸாரை விட இராணுவத்தினர் மீது ஏற்பட்டிருப்பதாகவும் தமிழ் மக்களிடத்தில் அவர்களுக்கு எதிரான மனநிலை இருப்பதாகவும் தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் குறித்துரைக்கிறார்.

இதுபோல பல விடயங்கள் தொடர்பிலும் தரவுகளைத் தரும் 89 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் ஆய்வாளர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் சிறந்த கைநூலாக அமைகிறது. அதேநேரம் காலத்துக்குக் காலம் இந்தத் தரவுகளும் மனநிலைகளும் மாற்றமுறும் நிலையில் ஆண்டுதோறும் இத்தகைய ஆய்வுகளை இன்னும் எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் மேற்கொள்ளும் ஒரு தேவைக்கான அடிப்படையை இந்த நூல் தருகிறது. நேபாள நாட்டில் செய்யப்பட்ட ஆய்வு முறையின் அடிப்படையில் நோர்வே நாட்டின் ‘நொரெட்’ அமைப்பின் நிதி உதவியுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அரசாங்கமே தனது பொறுப்பில் ஆண்டுதோறும் அல்லது நிச்சயிக்கப்பட்ட கால இடைவெளியில் சனத்தொகை கணக்கெடுப்பு செய்வதைப்போல அல்லது அதன்போதே நூறு சதவீதம் மக்களிடத்தில் செய்யப்பட்டு அதனூடாக பெறப்படும் தரவுகள் அடுத்து வரும் காலப்பகுதிக்கான கொள்கை வகுப்புக்கும் ஆட்சி முறை வடிவமைப்புக்கும் பயன்படுத்தப்படுவதாக இருத்தலே பூட்டான் போன்று அடிப்படையான பயன்பாடுகளுக்கு உதவக்கூடும்.

இந்த நூலின் ஆய்வுப் பரப்பான ‘இலங்கையின் ஆட்சிமுறை மீதான பிரஜைகளின் நம்பிக்கைக் கணக்கெடுப்பு’ என்பதாக கடந்த நல்லாட்சி காலத்தில் செய்யப்பட்ட ஆய்வு தற்போது செய்யப்படுமாக இருந்தால் அது எவ்வாறனாதாக இருக்கும் என்பதே சுவாரஷ்யமாக அமையலாம். அதனை எனது இரண்டாவது அனுபவத்தோடு ஒப்பிட்டுப்பார்க்க எண்ணுகிறேன்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்ட்டர் தாக்குதலுக்குப் பின்னர் மலேஷியாவில் இடம்பெற்ற ஒரு மாநாட்டின் பேசுபொருள் ‘உலகளாவிய ரீதியில் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டு இருக்கக்கூடிய கேள்விக் குறியும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளும்’ என்பதாக இருந்தது. இந்த மாநாட்டில் முக்கியமான ஒரு தரவு பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதுதான், உலகில் தற்போது 53 சதவீதமான மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இல்லை என்பது. அப்போது அங்கே இருந்த ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு நாட்டுப் பிரதிநிதியிடமும் ஒரு கேள்வியை கேட்டனர்.

மலேஷியாவில் எத்தனை சதவீதமான மக்கள் ஜனநாயகம் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதற்கு பதிலாக அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னது; புள்ளிவிபர ரீதியாக கூற முடியாவிட்டாலும் மலேஷிய மக்களிடத்தில் அப்படியொரு மனநிலை இருப்பதை உணரமுடிகிறது என்பதாகும்.இலங்கைப் பிரதிநிதியாக என்னிடம் ( கட்டுரையாளர்) கேட்டபோது, 100% மக்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை என்றுதான் கருத வேண்டி இருக்கிறது என்றேன்.

ஏன் அப்படி கூறுகிறீர்கள் என்றபோது, ஈஸ்ட்டர் தாக்குதலை அடுத்து இலங்கை நாடாளுமன்றத்தை 225 உறுப்பினர்களையும் தகர்க்க வேண்டும் என சமூகவலத்தளங்களில் அவ்வாறு கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. அந்த 225 பேரும் மக்கள் பிரதிந்திகள் என்றால் 100 வீதம. ஜனநாயகம் மீதான எதிர்ப்பு என்றுதானே கொள்ள வேண்டும் என்றேன்.

ஒரு சுவாரஷ்யம் கருதி அந்த பதில் அவ்வாறு அமைந்தாலும் இலங்கை மக்கள் இப்போதைய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை. அத்தகைய ஜனநாயகம் மீதான நம்பிக்கை இழப்பு, பொது நிர்வாகம் மீதான திருப்தி இன்மை போன்ற விடயங்களை கொள்கை வகுப்பாளர்கள் உணரவும், அடுத்த கொள்கைகளை மக்கள் சார்ந்து உருவாக்கவும் அதிலும் குறிப்பாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கத் தலைப்படும் இலங்கை ஆட்சிமுறை சூழலில் இத்தகைய ஆய்வு நூல்கள் வாசிப்புக்கும் பயன்பாட்டுக்கும் வேண்டப்படுகின்றன.

24/01/2021- Virakesari

 


இலங்கையிலும் இந்தியாவிலும் இலக்கிய இயக்கம் கண்ட பெருமகனார் - சி.பன்னீர்செல்வம்

-மதி

இந்தியாவில் பிறந்து இலங்கை வந்த வம்சாவளியினர்தான் இன்று ‘மலையகத் தமிழர்கள்’ எனும் அடையாளத்துடன் இலங்கையில் வாழ்கிறார்கள். அவ்வாறு வந்தவர்களுள் லட்சக்கணக்கானோர் சிறிமா - சாஸ்த்திரி ஒப்பந்தத்தினால் திரும்பவும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இத்தகைய ஒரு சமூக நிகழ்வு நடந்து இன்று பல தலைமுறைகள் கடந்த நிலையில் அவ்வாறான ஒரு நிகழ்வை , ஒரு தனி நபருக்குள் அடையாளம் காணுவது சாத்தியமா?

அத்தகைய ஒரு வரலாற்றின் சாட்சியாக வாழும் ஒருவர்தான், இலங்கை - இந்திய எழுத்தாளராக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் இலக்கிய செயற்பாட்டாளர் சி.பன்னீர்செல்வம் எனும் அறிமுகத்தோடு இணைய வழி நடைபெற்ற ஒரு பாராட்டு நிகழ்வு தொடர்பான பதிவே இது.

இத்தகைய ஒரு அறிமுகத்துடன் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்து முன்னின்று நெறிப்படுத்தியவர் இலக்கியவாதியும் அரசியலாளரும் சமூக ஆய்வாளருமான மல்லியப்புசந்தி திலகர்.

தற்போதைய மலையக எழுத்தாளர்களில் மூத்தவரான 'சாகித்ய ரத்னா' தெளிவத்தை ஜோசப் அவர்களின் தொடக்கவுரையுடன் நிகழ்வு ஆரம்பமானது.

இந்தியாவில் இருந்து இலங்கை மலேஷியா போன்ற நாடுகளுக்கு மக்கள் தொழிலுக்கா குடிபெயர்ந்த போதும் அவர்களது வாழ்வியலை தனியான ஒரு இலக்கிய தொகுதியாக்கியதில் இலங்கை மலையகத் தமிழ் மக்கள் என மலேசிய மூத்த எழுத்தாளர்கள் குறித்துரைக்கின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கை வந்து மீண்டும் இந்தியாவுக்கு சென்ற சி.பன்னீர்செல்வம்  மலையக இலக்கியம்  எனும் மரபின் வழிவந்த ஒருவர் என்பது சிறப்பானது. அவர்களுடைய எழுத்துக்கள் மூலமாக மலையக வாழ்வியலையும் அவர் சென்று சேர்ந்த தமிழக வாழ்வியலையும் தனது எழுத்துக்களில் பதிவு செய்துள்ளார்.

'விரல்கள்' எனும் நாவல் மூலம் தமிழகத்தில் ' கலைமகள்' இதழ் நடாத்திய கி.வா.ஜகநாதன் நினைவு பரிசு பெற்று மலையக எழுத்தாளர்களுக்கு பெருமை சேர்த்தவர். மலையக இலக்கியம் என்கின்ற தொகுதி / துறை வாழுகின்றவரைக்கும் சி. பன்னீர்செல்வத்தின் பெயரும் புகழும் வாழும் என்று பாராட்டு விழாவைத் தொடங்கிவைத்தார் தெளிவத்தை ஜோசப்

பன்னீர்செல்வம் இந்தியா சென்ற பின்னரும் கூட அவரது எழுத்துக்களை இலங்கை ஊடகங்களில் பிரசுரித்தவர் பத்திரிகையாளரும் இலக்கியவாதியுமான அந்தனி ஜீவா.

பன்னீர்செல்வம் தமிழகத்தில் 'சென்றவாரம்' என்ற வார பத்திரிகையின் ஆசரியராக இருந்தார். அதே போல 'மனித உரிமைக் கங்காணி' எனும் இதழின் உதவி ஆசரியராக பணியாற்றினார். இந்தியாவில் கலைமகள், குமுதம் முதலான பத்திரிகையில் எழுதியவர். அவரைச் சந்தித்த நாட்களில் அவரது படைப்புகள் பல அச்சேராமல் இருந்தன.அவற்றை இலங்கைக்கு கொண்டுவந்து 'குன்றின் குரல்', பத்திரிகையில் பிரிசுரித்தேன். அவரது 'தேயிலைப்பூக்கள்' காவியத்தையும் இலங்கை 'சூரியகாந்தி' பத்திரிகையில் வெளியிட்டேன். இறுதியாக 'திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில்' இடம்பெற்ற 'மலையக ஆய்வரங்கிலும்' அவர் இணைந்திருந்தமை சிறப்பானது என வாழ்த்தினார் அந்தனி ஜீவா.

எழுதத் தொடங்கி நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர்தான் சி.பன்னீர்செல்வத்தின் எழுத்துக்கள் ( ஜென்மபூமி - சிறுகதைகள்) தொகுப்பாக வெளிவந்துள்ளமை தமிழ் பதிப்புத்துறையின் வறட்சியை காட்டி நிற்கிறது. இருந்தும் சி. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேரின் பங்குபற்றலுடன் உருவான 'எங்கெங்கும் அந்தியாமாக்கப்பட்டவர்கள்' தொகுப்பு மிக முக்கியமானது. இலங்கையில் இருந்து இந்தியா திரும்பிய மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் முக்கிய ஆவணம் அது.

மார்க்சிய கருத்தியலை தமது அரசியல் சிந்தனையாக கொண்ட பன்னீர்செல்வத்தின் எழுத்துகள் புனைபெயருக்குள் ஒளிந்தவையல்ல. தான் சார்ந்த மக்களின் மீட்சிக்காக அவர் கவிதை, சிறுகதை, நாவல் என பலவிதத்திலும் பங்கெடுத்தவர். பல சோகங்களுக்கும் தடங்கல்களுக்கும் மத்தியில் இந்த சமூகம் இப்படியே இருந்துவிட முடியாது என்ற ஓர்மம் அவரது எழுத்துப் பணியில் நிறைந்து இருக்கிறது என சி.பன்னீர்செல்வத்தின் தேயிலைப்பூக்கள் காவியத்துக்கு முன்னுரை எழுதிய மு.நித்தியானந்தன் ( லண்டன்) வாழ்த்தினார்.

பன்னீர்செல்வம் 60, 65 காலப்பகுதியில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற ஓர் எழுத்தாளர். மலையக மக்களின் தேசியம், அரசியல் , பொருளாதாரம் முதலான சமூகம் சார்ந்த விடயங்களை தனது எழுத்துக்களுக்குள் பதிவு செய்தவர். அவரது படைப்புகளின் தலைப்புகளே அவரது எழுத்தின் எண்ணத்தை வெளிப்படுத்தும். இதுவரை மலையக இலக்கியத்தில் பெரும் குறையாக இருந்த ஒரு காவியத்தை படைத்ததன் மூலம் சி. வி . வேலுப்பிள்ளைக்கு ( இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே) பிறகு வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் பன்னீர். 'தேயிலைப் பூக்கள்' எனும் அந்தக் காவியத்தில் தனது தந்தை இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே காட்டுவது சிறப்பு என புகழ்மாலை சூட்டினார் மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம்.

நான் மலையகத்தைச் சேர்ந்தவரல்ல. தமிழ் நாட்டைச் சேரந்தவள். மலையகத்தவரான நாதன் அவர்களை துணைவராக கொண்டதால் மலையகம் மீதான ஆர்வம் கொண்டவள். அந்த மக்கள் தாய்நாட்டின் என கருதி வந்த தமிழ் நாட்டில் மனோரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எவ்வாறு பாதிப்புற்றார்கள் என்பதைக் காட்டும் ஆய்வு நூலான 'எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள்' ஆய்வு, வெளியீட்டு பணியில் பன்னீர்செல்வத்துடனான குழுவாக இணைந்து செயற்பட்ட அனுபவம் முக்கியமானது. இந்த நூலை உருவாக்குவதில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. இவரது எல்லா எழுத்துக்களிலும் மலையகத் தமிழர்களின் வலிகளை பதிவு செய்திருப்பார் என அவரோடு சேரந்தியங்கிய நாதன் அவர்களின் துணைவியார் தமிழகத்தில் சமூகப் பணியாற்றும் திருமதி உருசுலா நாதன் தெரிவித்தார்.

பாடசாலை காலத்திலேயே வாசிப்பில் ஆர்வம் காட்டியவர். பாடசாலை பயணத்துக்கான பஸ் பணத்தைச் சேமித்து இலக்கிய இதழ்களை வாங்கிப் படித்தவர். பாடசாலை மாணவராகவே 'அறிவுச்சுடர்' எனும் இதழை நடாத்தினார். சித்திரம் வரைதலிலும் ஆற்றல் நிறைந்தவர்.
'இளங்கோ நாடக மன்றம்' எனும் நாடக மன்றம் நடாத்தியவர். பாடசாலை மாணவராக இருந்த போதே சிறுகதைக்காக இலங்கை சாகித்திய மண்டல பரிசு பெற்றவர். கொட்டாங்கந்தை எனும் அவரது ஊரின் பெயரையே 'கொற்றகங்கை' என இலக்கிய சுவையுடன் மாற்றி அமைத்தவர். நாடற்றவன் என்ற நிலையில் அடிமை வாழ்வு வாழ விருப்பமில்லை என இந்தியாவுக்கு திரும்பி சென்றார் என அவரது பாடசாலை நண்பர் உமாபதி (கல்முனை) நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

ஜென்ம பூமியின் நினைவுகளை சுமப்பவர் மட்டுமல்ல அதனை எழுத்திலும் படைக்கும் நண்பர் பன்னீர்செல்வத்துடனான நட்பு 1963 ல் இருந்து தொடர்ந்து வருகிறது. அரசியல் , இலக்கியம், நாடகம் என இலங்கையில் ஒரே தோட்டப்பகுதியில் இணைந்து செயற்பட்டோம். அவரது சகோதரர் அரு சிவானந்தனோடு தமிழ் நாடு வந்தபோது அவரை சந்தித்து தொடர்ந்து இயங்கினோம். 1987 ஆம் அண்டு 'டெலோ' இயக்கத்தினர் எங்கள் தோழர் பி.எஸ்.நாதன் அவர்களை கடத்தியபோது போராட்டம் செய்து மீட்டு எடுத்தோம். அவரது எழுத்துப் பணி சிறப்பானவை என அவரது இலக்கிய தோழமை மு.சி.கந்தையா வாழ்த்தினார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த போது மாணவர் ஒன்றுகூடல் ஒன்றுக்கு பாடசாலை மாணவராக சாகித்ய பரிசு பெற்ற சி. பனலனீர்செல்வத்தை அழைத்துப் பாராட்டினோம். அந்த விழா கண்டி அசோக்கா மண்டபத்திலே நடைபெற்றது. பின்னர் அவர் தமிழகத்திற்கு சென்று அவரது குழுவினருடன் உணர்வுபூர்வமாக தயாரித்தளித்த 'எங்கெங்கும் அந்தியமாக்கப்பட்டவர்' நூல் எனது ஆய்வுக்கான உசாத்துணையாக இருந்தது. 'மலையக இலக்கியம்' எனும் தொகுதி அங்கீகாரம் பெற்றிருக்காத நிலையில் எங்களது ஆசிரியர் திருச்செந்தூரன் 'கல்கி' பத்திரிகை நடாத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்று கொண்டு வந்த அங்கீகாரத்தின் தொடர்ச்சியாக பன்னீர்செல்வம் 'கலைமகள்' இதழில் தனது 'விரல்கள்' நாவலுக்காக பரிசு பெற்றமை காட்டி நிற்கிறது.
மலையக இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த பெருமகனார் பன்னீர்செல்வம் என ஓய்வு நிலை அரச உத்தியோகத்தர் எம்.வாமதேவன் வாழ்த்தினார்.

பன்னீர்செல்வம் பிறந்த அதே ஊரின் அடுத்த எல்லையில் பிறந்தவன் என்கிற வகையில் பன்னீர்செல்வம், அரு.சிவானந்தன், மு.சி.கந்தையா போன்ற இலக்கிய வழித்தோன்றல்களின் தொடர்ச்சியானவனாக என்னைப் பார்க்கிறேன். அடுத்த தலைமுறையினரான நான் மதுரையில் அவரை சந்திக்க கிடைத்த சந்தர்ப்பத்தின் போது அவர், 'கொற்றகங்கை'யில் நீர் ஓடுகின்றதா என கேட்டது என்னை நெகிழச்செயத்து.

அந்தக் கேள்வியின் ஊடே அந்த மண்மீதான அவரது பற்றுதலையும் அங்கு வாழும் மனிதர்கள் மீதான பரிவையும் காட்டுவதாகவும் அவை அவரது படைப்புகளில் வெளிப்படுவதாகவும் உள்ளது. அவரது படைப்பின் கனதியும் செழுமையும் வெளிப்படுத்திய கருத்து நிலை என்பவற்றால் மலையக, ஈழத்து இலக்கியத்தில் போலவே ஒட்டுமொத்தமாக தமிழ் இலக்கிய பரப்பிலும் தனித்துவமான ஒரு அடையாளத்தைத் கொண்டவையே.

2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு , திண்டுக்கல், காந்தி கிராம் கிராமிய பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற "மலையக இலக்கிய ஆய்வரங்கில்" இலக்கிய ஆளுமைகளுடன் நடுநாயகமாக சி.பன்னீர்செல்வம்.

மலையகத்தில் இருந்து தாயகம் திரும்பிய எழுத்தாளர்களுள் அந்த வாழ்வியலை அழகியல் கலந்து வெளிப்பாடாக தந்தவர்களில் பன்னீர்செல்வத்துக்கு தனியான ஓர் இடமுண்டு. உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து செல்ல நேர்ந்த மகலகளின் உள்ளக்குமுறல்களின் வெளிப்பாடுகளுக்கு சமாந்திரமாக மலையக மக்களின் புலப்பெயர்வு வாழ்வினைப் பதிவு செய்துள்ளார்.

980 களுக்கு முன்னரே இலங்கையில் புலம்பெயர் இலக்கிய வகைமையை முன்வைத்த முன்னோடிகளில் ஒருவராக பன்னீர்செல்வம் திகழ்கிறார். புலம்பெயர் கருத்தாடல்களின் போது பன்னீர்செல்வத்தின் படைப்புகள் தவிர்க்க முடியாத இடத்தினைப் பெறுகின்றது. பலவிதங்களில் இவர் மலையக முன்னணி படைப்பாளர்களில் ஒருவராகிறார். மானுட நேயத்துடன் இவர் வாழ்ந்த மண்ணையும் மக்களையும் தன் நெஞ்சில் சுமந்து படைப்பிலக்கியம் செய்த பன்னீர்செல்வம் இலக்கிய வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார் ‘பன்னீர் செல்வத்தின் படைப்புலகம்’ எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்திய பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஜெயசீலன் கருத்துரைத்தார்.

திண்டுக்கல் நகரில் 'சென்றவாரம்' பத்திரிகையில் பன்னீர் அண்ணனுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் மகத்தானது. அவருடைய இலக்கிய பார்வை, இடதுசாரி சிந்தனை, சமூகப் பார்வையை எனக்கு கற்றுக்கொடுத்த ஆசான். நாங்கள் லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுதும் வாழ்ந்தாலும் இலங்கை மலையகத்தைத் தான் ஜென்ம பூமியாக கருதுகிறோம்.

எங்களது சிந்தனைகள், பேச்சுகளில் அதுவே வெளிப்படுகிறது. அந்த தலைமுறையின முதன்மையானவராக பன்னீர்செல்வம் காணப்படுகிறார். சாதாரண மனிதரான பன்னீர்செல்வம் சாதாராண மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தியவர். பன்னீர்செல்வத்துக்கு இப்படி தேசெல்லைகள் கடந்து இலக்கிய உறவுகள் இணைந்து வாழங்கும் பாராட்டு முழு மலயைகத்திற்கும் பெருமை சேர்க்கும் விடயாமாகிறது என வழக்கறிஞர் தமிழகன் ( திருச்சி) நன்றி தெரிவித்தார்.

பன்னீர் அவர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வு இணையவழியூடாக இடம்பெற்ற போது மூத்த எழுத்தாளர்களான அந்தனி ஜீவா, மு.நித்தியானந்தன் - லன்டன் ஆகியோருடன் பன்னீர் அவர்கள்...

உரைகளின் இடையே பங்கு பற்றுனர்களாக கலந்து கொண்டிருந்த பலரினதும் வாழ்த்துக்களை எழுத்து வடிவில் பெற்று நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்டார் நெறியாளர் திலகர். அந்த வகையில் தமிழ் நாட்டில் இருந்து ராஜேந்திரன், ச.மோகன், கா.கணேசன்,( மதுரை) க.பூபாலன் ( மேட்டுப்பாளையம்), தோழர் ஜெயசிங் ( திருவனந்தபுரம்), டார்வின் ( திருச்சி), ஈழம் மலர்மன்னன் தம்பிராஜா ( தேவகோட்டை), ரவிச்சந்திரன் ( கன்னியாகுமரி) கார்த்திகேயன் ( மதுரை) வழக்கறிஞர் மாட்டின் (மதுரை )ஆகியோருடன் இலங்கையில் இருந்து கவிஞர் சு.முரளிதரன், விரிவுரையாளர்கள் ஜே.சற்குருநாதன், மூ. அகிலன், கவிஞர் இரத்னஜோதி, ஆசிரியர் கிறிஸ்தோபர், ஊடகவியலாளர்கள் ஜீவா சதாசிவம், ராம், சமூக ஆர்வலர் சண்முகராஜா என பலரது வாழ்த்துகளும் இணைத்துக் கொள்ளப்பட்டு இருந்தன.

இறுதியா எழுத்தாளர் சி.பன்னீர்செல்வத்தினது ஏற்புரையுடன் அவரது குடும்பத்தாரின் நன்றியறிதலுடன் விழா இனிதே நினைவேறியது. வாழ்நாள் முழுவதும் எழுத்திலேயே வாழ்ந்த நோய்வாப்பட்ட நிலையில் இருக்கும் எழுத்தாளருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது அறிவிக்கப்பட்டது அவருக்கு வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரும் கௌரவமாகும்.

நன்றி :- தமிழன் இலக்கிய சங்கமம்


பெருந்தோட்டத்துறை சுகாதார நிலை

ஒரு கொள்கை  மீள்பார்வை  

- மல்லியப்புசந்தி திலகர்
இலங்கையின் பெருந்தோட்டத்துறைசார்ந்து கடந்த அரை தசாப்த காலமாக பேசப்படும் பிரச்சினை ஆயிரம் ரூபா நாட்சம்பளம். எனினும் அதனைத் தாண்டிய பல பிரச்சினைகள் உண்டு என அரசியல் களத்தில் பேசப்படுவதுண்டு.
அத்தகையப் பிரச்சினைகளை அடையாளம் காண்பதும் அதனைப் பேசு பொருளாக்குவதும் அவற்றுக்கான தீர்வுத்தடங்களைத் தேடுவதும் குறித்த பிரச்சினைகளில் இருந்து மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதற்கான வழிமுறையாகும்.
அவ்வாறான ஒரு பிரச்சினையாக அடையாளம் காணப்படக்கூடிய பெருந்தோட்ட சுகாதார முறைமை பற்றிய கொள்கை மீள்நோக்கு கற்கையாக வெளிவந்திருப்பது Policy Review on the Status of Health in the Plantation Sector (பெருந்தோட்டத்துறை சுகாதார நிலை சார்ந்த நிலை பற்றிய கொள்கை நோக்கு )எனும் ஆங்கில நூல்.
கண்டியில் அமைந்துள்ள மனித அபிவிருத்தித் தாபன வெளியீடாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் தொகுத்தளித்திருக்கும் இந்த நூலுக்கான ஆய்வினை வைத்தியர் நிதர்ஷனி பெரியசாமி, சட்டத்தரணி துலானி லியனஹெட்டி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். நூலின் ஆவண மதிப்பீட்டாளராக வைத்தியர் நூரி கிறேஸ் ஒமாலின், நூலாக்க இணைப்பாளர்களாக HJ பர்ஹானா, சட்டத்தரணி அ.செல்வராஜ் ஆகியோரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
“இலங்கை வெற்றிகரமான இலவச சுகாதார முறைமையைக் கொண்ட நாடாக சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. எனினும் இந்த முறைமையில் வாய்ப்பினைப் பெறாத ஒரு மக்கள் குழும்மாக பெருந்தோட்ட சமூகத்தினர் இருப்பது துரதிஷ்டமானது. மிகக் குறைந்த சுகாதார குறிகாட்டிகளின் அளவு மட்டத்தைக் கொண்டவர்களாக, மிகக் குறைவான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் பிரிவினராக பெருந்தோட்ட மக்கள் காணப்படுகின்றனர்.
தோட்ட சுகாதார முறைமை முழுமையாக தேசிய சுகாதார முறைமைக்குள் உள்வாங்கப்படாமையின் விளைவுகளே இவையாகும்” என தனது முகவுரையில் தோட்ட சுகாதார முறைமயின் நிலை பற்றிய ஓர் அறிமுகத்தைத் தருகிறார் தொகுப்பாசிரியர் பி.பி.சிவப்பிரகாசம்.
“தோட்டத்துறையில் வாழும் மக்கள் தொடர்பான தனித்துவமான சட்டங்களும் ஒழுங்
கு விதிகளும் உள்ளன. அவற்றுள் சுகாதார சேவைகளுக்கான சட்டங்களும் அடக்கம். கிராமப்புற மக்களுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்டப் பகுதியில் மிகவும் குறைவான தரமுடைய சுகாதார சேவைகளையே பெறுகின்றனர்.
பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனங்களும் நிர்வகிக்கும் தோட்டங்களில் அந்த நிர்வாகமே தோட்ட மருத்துவ உதவியாளர்களை நியமித்து சுகாதார சேவைகளுக்கு பொறுப்பாக உள்ளது. மருத்துவர் தகைமை பெற்ற அதிகாரிகளை தோட்டப் பகுதி சுகாதாரத்துக்காகப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண எத்தனித்தபோதும் அதன் செயற்பாடுகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றது

 

. இந்த கொள்கை மீள்நோக்கு அறிக்கையானது தோட்ட மருத்துவ முறைமையை தேசிய முறைமைக்குள் கொண்டு வருவதில் காணப்படும் இடைவெளிகளை இனங்கான விளைகிறது” என இத்தகைய ஆய்வறிக்கையின் தேவைப்பாடு குறித்தும் விளக்குகிறார்.
மலையகப் பெருந்தோட்டத்துறையில் அமுலில் உள்ள தோட்ட சுகாதார முறைமையை அரசாங்கம் பொறுப்பேற்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்க உள்ள தாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கடந்தவாரம் (7/1/2021) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

 

அப்படியாயின் தோட்ட சுகாதார முறைமை என்ற ஒன்று நடைமுறையிலுள்ளது என்பதும் இதுவரையில் அரசாங்கத்தின் பொறுப்பில் மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் சுகாதார நடைமுறைகள் இல்லை என்பதும் தெளிவு.

 

2006 ஆம் ஆண்டு நிமல் சிறிபால டி சில்வா சுகாதார அமைச்சராகவும் வடிவேல் சுரேஷ் பிரதி சுகாதார அமைச்சராகவும் இருந்த காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்தின் பேரிலேயே 44 தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. அவற்றுள் சுமார் 22 வைத்திய நிலையங்களே இப்போது இயங்குகின்றன. ஏனையவை கைவிடப்பட்டுள்ளன.
2018   ராஜித்த சேனரத்ன சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அபிப்பிராயம் கோரலுக்காக ஏனைய அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்டபோது அந்தத் திட்டத்தை மறுத்த அமைச்சுக்களும் இருந்தன.
இந்த நிலையிலேயே சுகாதரம் தொடர்பிலான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் உறுப்பினராகவும், பின்னாளில் தலைவராகவும் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா செயற்பட்ட காலத்தில், தோட்ட சுகாதார முறைமையை தேசிய சுகாதார முறைமைக்குள் கொண்டுவருவதற்கு பாராளுமன்ற மேற்பார்வை உப குழு ஒன்றை உருவாக்கி, திட்டத்துடன் தொடர்புடைய ஐந்து அமைச்சுக்களையும் இணைத்து பெறப்பட்ட உடன்பாட்டு அறிக்கை 2020 பெப்வரி 19 இலங்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அதே நேரம் முதலாவது அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்த காலத்தில் பிரதி சுகாதார அமைச்சராக இருந்த, தற்போதைய பதுளை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேள்வி- பதில்  நேரத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தோட்ட சுகாதார முறைமை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படும்  என  சபையில் கூறியுள்ளார்.
இந்த கட்டத்திலேயே அமைச்சுக்களை இணைத்து தயாரிக்கப்பட்ட சுகாதார மேற்பார்வைக் குழுவின் அறிக்கையின் அவசியத்தை  அமைச்சர் பவித்திரா வனலனியாரச்சியின் உரையில் அவதானிக்க முடிகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது வைத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்ய காணிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல்களை அமைச்சர் விபரக்கிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா ( கட்டுரையாளர்) தான் சுகாதார மேற்பார்வைக் குழுவாக செயற்பட்ட காலத்தில் 500 தோட்ட வைத்திய நிலையங்களையும்  அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர  நிர்வாக மட்டத்தில் ஏற்பாடுகள் சீர் செய்யப்பட்டுள்ளன. திட்டத்துடன் தொடர்புடைய சுகாதார அமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு, காணி அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, மாகாண சபைகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்ட அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிகள் சுகாதார அமைச்சின் ' தோட்ட நகர சுகாதார பிரிவு' பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த கொள்கை மீளாய்வு அறிக்கையைத் தொகுத்தளிக்கும் மனித அபிவிருத்தித் தாபன ( கண்டி) அதிகாரிகள் செயற்பாட்டாளர்களை , பாராளுமன்ற சுகாதார மேற்பார்வைக் குழுவினருடன் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா இணைத்து செயற்படுத்தியிருந்தமை அவதானத்துக்குரியது. மேலும், கடந்த 2020 செப்தெம்பர் மாதம் சுகாதார அமைச்சுன் தோட்ட சுகாதார பிரிவின் பணிப்பாளரையும் சிவில் சமூகங்களையும் இணைத்த கலந்துரையாடல் ஒன்றும் மனித அபிவிருத்தித் தாபனத்தின் அனுசரணையில் நுவரெலியாவில் நடைபெற்று உள்ளது.
அத்தகைய கலந்துரையாடல்களின் பிரகாரம் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அதனை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளதாகவே தெரிகிறது. அதற்கான அங்கீகாரத்தை புதிய அமைச்சரவைப் பத்திரம் வழங்கினாலே போதுமானது.
அத்தகைய நடைமுறைப்படுத்தலை இலகுவாக்க இத்தகைய கொள்கை விளக்க மீளாய்வு அறிக்கைகள், நாடாளுமன்ற அறிக்கைகள் இந்த காலகட்டத்தில் அவதானத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மனித அபிவிருத்தித் தாபனத்தின் இந்த கொள்கை மீளாய்வு அறிக்கை நான்கு அலகுகளாக தொகுக்கப்பட்டுள்ளது. அலகு 1 அறிமுகம், நோக்கம், ஆய்வுக்கான கேள்வி, முறையியல் பற்றி விளக்குகிறது. அலகு 2 இலங்கை பெருந்மோட்ட சமூக வரலாறு, அதன் ஒழுங்கிலான தோட்ட சுகாதார முறைமை வழங்கல், தோட்ட சுகாதார முறைமையில் உள்ள பிரச்சினைகளும் காரணங்களும், பெருந்தொட்ட சுகாதார கட்டமைப்பை தேசிய சுகாதார முறைமைக்குள் கொண்டுவரவேண்டியதன் தேவை, பெருந்தோட்ட சமூகத்தின் சுகாதார உரிமைகள் தொடர்பாக விளக்குகிறது.
அலகு 3 ல் இன்றைய கொள்கைகள், சட்ட முரண்பாடுகள், பெருந்தோட்டப்பகுதி இனவிருத்தி சுகாதாரம், தோட்டத்துறைக் கல்வி தேசிய மயமும் சாதகமான மாற்றமும் ( ஒப்பீட்டாய்வு) போன்ற விடயங்களும் அலகு 4 முடிவுரைகளும் பரிந்துரைப்புகளும் என 70 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வறிக்கை 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
தோட்ட சமூகம் இடையீடற்ற திருப்திகரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்யும் முகமாக அவர்களின் தேவைகளை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான வலுவான மூலோபாய பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என இந்த கொள்கை மீளாய்வு அறிக்கை பரிந்துரைப்பாக வலியுறுத்துகிறது.
“இந்த அறிக்கை உள்நாட்டு , தேசிய மட்ட சுகாதார அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதுடன், பெருந்தோட்டத்துறை தொடர்பான கொள்கைகளில் திருத்தங்களைக் கோரும் பரப்புரைகளை நியாயப்படுத்தும் சாட்சியங்களைக் கொண்டது” என இவ்வெளியீட்டிற்கு அனுசரணை வழங்கி இருக்கும் MDM France நினுவனத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி எலெனா கிறிஸ்டினி தனது முன்னுரையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Virakesari 17/01/2021

இருமொழி புலமைமையுடன் இலக்கிய வலம்வரும் கே. எஸ்

மல்லியப்புசந்தி திலகர்

1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு, புளியந்தீவு எனும் ஊரில் பிறந்தவர் கைலாயர் செல்லநய்னார் சிவகுமாரன். தனது பெயர் சிவகுமார் அல்ல சிவகுமாரன் என்பதில் அவர் அதிக அக்கறை காட்டுவதை பல தடவை அவதானித்து இருக்கிறேன்.

ஆரம்பக்கல்வியை ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலை, சென்மேரிஸ் பயிற்சி பாடசாலை, புனித. மைக்கல் கல்லூரி, அரசாங்க கல்லூரி என மட்டக்களப்பு பிரதேசத்திலேயே பல பள்ளிகளில் கற்றவர், 1953 ஆம் ஆண்டு தமது குடும்பம் தலைநகர்- கொழும்பு நோக்கி குடிபெயர்ந்துடன் கொழும்பு இந்து கல்லூரியிலும், கொழும்பு சென். ஜோசப் கல்லூரியிலும் பல்கலைக்கழக புதுமுக வகுப்புகள் வரை ( HSC) கற்றுள்ளார்.

தொடர்ந்து வெளிவாரி மாணவராக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், தமிழ்,மேலைத்தேய கலாசாரம் ஆகிய பாடங்களைக் கற்றுக் கலைப் பட்டதாரியானார். மேலதிகமாக மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தில் முதுமாணிப் பட்டமும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தில் தகவல் உதவியாளராக பணி செய்தவாறே சுயாதீன ஊடகவியலாளராகவும் பணியாற்றியுள்ளார். முதன் முதலாக இவர் இணைந்தது வணிகத்துறைசார்ந்த இதழ் ஒன்றில் செய்திகளை எழுதவே.

ஒர் எழுத்தாளராக, ஊடகவியலளராக, ஆங்கில ஆசிரியராக அறியப்படும் இவர் ஒலிபரப்பாளரும், ஒளிபரப்பாளரும் கூட.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆங்கில சேவையில் செய்தி ஆசிரியராகவும் செய்திவாசிப்பாளராகவும், தமிழில் செய்தி வாசிப்பாளராகவும் கூட பணியாற்றியுள்ளார். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

இலங்கையின் பிரதான இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளான வீரகேசரி ( உதவி ஆசிரியர்) , நவமணி (பிரதம ஆசிரியர்) ஆகியவற்றின் ஆசிரிய பீடத்தில் மட்டுன்றி 'த ஐலன்ட்' , 'டெயிலி நிவ்ஸ்' என இரண்டு ஆங்கில பத்திரிகையிலும் கூட பணியாற்றி இருக்கிறார்.

மாலைதீவுகள், ஓமான் போன்ற வெளிநாடுகளிலும், உள்நாட்டில் சர்வதேச பாடசாலைகளிலும் ஆங்கில ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவிலும் இரண்டு ஆண்டு காலம் வாழ்ந்துள்ளார்.

1953 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக பத்தி எழுத்துத் துறையில் (Coloumn writing ) ஆங்கிலம் - தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதிக்கொண்டிருப்பவர் கே.எஸ். சிவகுமாரன்.

இவரது திறனாய்வு பத்தி எழுத்துக்களும், சிறுகதைகளும், சினமா பற்றியதான பார்வைகளுமாக பல நூலாக்கம் பெற்றுள்ளன.

30 தமிழ் நூல்களை எழுதி உள்ளதுடன், Tamil Writing in Sri Lanka Tamil Writing in Sri Lanka

– 1974(Kumaran Publishers), Aspects of Culture in Shri Lanka- 1992- (Chamara printers), Gleanings - A Lankan's Views as a Columnist -2019 ( Anamika Alphabet Chennai) ஆகிய மூன்று ஆங்கில நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

சிறுகதைகள் சிலவற்றையும் எழுதியுள்ள இவர் அதனை தொகுப்பாக்கியும் உள்ளார். பிற மொழி சிறுகதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு தந்தும் உள்ளார்.

சினமா பற்றிய அவரது பார்வை அபூர்வமானது. தமிழ் சினமா எல்லைகளைக் கடந்து ஒரு கலை வடிவமாக சர்வதேச சினமா குறித்த அவரது பார்வையை எழுத்தில் முன்வைத்து வருபவர். சிறுபராயத்தில் மட்டக்களப்பில் பாலு மகேந்திராவுடன் நட்பு கொண்டிருந்தவர் எனவும் அறியக்கிடக்கிறது.

இவரது பெருமளவான நூல்களை மீரா பதிப்பகமும், மனிமேகலைப் பிரசுரமும் வெளியீடு செய்துள்ளன.

Gleanings நூலை சென்னை அனாமிக்கா அல்பாபெட்ஸ் எனும் பதிப்பகத்திற்காக லதா ராமகிருஷ்ணன் வெளியீடு செய்துள்ளார். (2019).

தமிழ் மொழிமூலமான ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களை மாத்திரம் அன்றி சிங்கள மொழிபேசும் ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளையும் இவர் ஆங்கிலத்தில் அறிமுகஞ் செய்தும் இரசனைக் குறிப்புகளை எழுதியும் வருபவர். இந்தச் செயற்பாட்டின் ஊடே இனங்களுக்கிடையே நிலவும் இடைவெளியைக் குறைக்க முடியும் என தனது Gleanings நூலின் முன்னுரைக் குறிப்பில் குறித்துரைக்கிறார் கே.எஸ்.சிவகுமாரன்.

அறுபதாண்டுக்கு மேற்பட்ட இவரது இலக்கிய பயணத்தில் கே.எஸ் சிவகுமாரன் எந்த அணி சார்ந்தும் செயற்பட்டதாக, அமைப்புகள் சார்ந்தும் இயங்கியதாக எந்தப் பதிவுகளும் இல்லை. அவர் இலக்கியத்தில் இரசனையின் பக்கம் நின்றவர் எனலாம்.

Challenges and Importance of Identifying and establishing a tradition for Writing English by Thamils ( Drum of a Herald) எனும் கலாநிதி சி. ஜெய்சங்கரின் தலைப்பில் கூறியுள்ளது போல ஆங்கிலத்தில் எழுதும் தமிழர்களை அடையாளம் காணும் அந்த மரபை ஊக்குவிப்பதில் உள்ள சவால்களை எண்ணிப்பார்க்கையில், ஈழத்து இலக்கிய பரப்பில் எழுத்து, அச்சுஊடகம், ஒலி ஊடகம், ஒளி ஊடகம் என பல பரிமாணங்களில் ஆக்க இலக்கியமாகவும், ஆய்வு இலக்கியமாகவும் ஆங்கிலத்திலும் தமிழிலும் என இருமொழிகளில் பணியாற்றியவரும் கே.எஸ். சிவகுமாரனின் ஆளுமை வரலாற்றுப்பதிவாகும் என்பது திண்ணம்.


இலங்கை சீனர்கள்

தம்மாதீன தேரர் தரும் தகவல்கள்

-மல்லியப்புசந்தி திலகர்

இலங்கை - சீன என்றதும் இப்போது பல்வேறு பார்வைக் கோணங்கள் வளர்ந்துவிட்டிருக்கிற சூழநிலையில் பேராசிரியர் சங்கைக்குரிய நெதாலகமுவே தம்மாதீன தரும் தகவல்கள் இலங்கை சீனர்கள் பற்றிய ஆய்வாக அமைகிறது ‘இலங்கை சீனர்கள்’ ( Sri Lankan Chinese) எனும் ஆங்கில நூல்.

இலங்கையில் வாழும் சீன சமுதாயத்தினர் பற்றியும் சீன மொழி பற்றியும் குறைந்தளவான அக்கறையே காட்டப்படுகிறது. பண்டைய கால பட்டுப்பாதைத் திட்டத்தின் ஊடாக இலங்கை - சீன நாடுகள் பல வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்தனர்.பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்தே இலங்கையில் சீனர்கள் வாழ்கின்றனர். காலனித்துவ காலத்தில் சீனர்களின் வருகை அபரிமிதமாக அதிகரித்தது. இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் வணிக நோக்கத்தில் சீனர்கள் இலங்கை வந்துள்ளனர்.

இந்த நூல் கவனிப்பாரற்று இருக்கும் இலங்கை சீனர்கள் வரலாற்றினை பதிவு செய்யும் ஆய்வினை செய்யும் அறிக்கையாகக் கொள்ளலாம் எனும் பின்னட்டைக்குறிப்புடன் சமயவர்தன புத்தகாலய வெளியீடாக 2018 ஆம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

எழுபத்திரண்டு பக்கங்களைக் கொண்ட இந்த நூலின் ஆசிரியர் ஒரு பௌத்த துறவியும் களனி பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியரும் ஆவார்.

ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் முதலாவது அத்தியாயத்தில் ஹான் வம்சம் முதல் இன்று வரையான இலங்கை - சீன உறவுபற்றி பேசப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் சுவாரஷ்யமான விடயமாக அமைவது இலங்கைக்கான பண்டைய சீன பெயர்கள் பற்றிய தகவலாகும்.

செரண்டிப், தப்ரோபன் போன்ற பெயர்கள் குறித்து பரவலாக அறியப்பட்டுள்ளது. ஈழம் என்பது கூட இலங்கைக்கான மறுபெயர்தான் என்னாலும் இன்று அதனை வேறு அர்த்தத்தில் நோக்குவோரும் உளர். சிலோன் என்பதை இன்றும் கூட ஐரோப்பாவில் சைலோன் என்றே நினைவில் வைத்துள்ளனர். சைலோன் டீ ( Ceylon Tea) ஐராப்பிய நாடுகளில் பிரபலம்.


இப்படி சீனர்கள் இலங்கையை எப்படி எல்லாம் அழைத்து இருக்கிறார்கள் என்பது சுவாரஷ்யமாகவே உள்ளது. ‘சி ச்செங் பூ’ - இதற்கு சிங்க(ள) தீப்ப என்று சிங்களத்தில் பொருளாம். ‘சி டியாவ் குவா’ அல்லது சி டியாவ் சுவா என்பதும் கூட அதே அர்த்தம்தானாம். பொதுவாக அழைக்கப்பட்ட பெயராக ‘ஷி ஸி குவோ’ இருந்துள்ளது. இதன் அர்த்தம் சிங்க நாடு என்பதாகும்.

இதே முதலாம் அத்தியாயத்தில் இலங்கை - சீன பௌத்த தொடர்புகள் பற்றியும் பேசப்பட்டுள்ளது.இரண்டாம் அத்தியாயத்தில் இலங்கை சீனர்களின் சனத்தொகை பற்றி விவாதிக்கப்படுகிறது. 1816 ஆம் ஆண்டு 80 முதல் 100 ஆண்கள் என்று இருந்து, 1881 ஆம் ஆண்டு 35 ஆண்கள், 14 பெண்கள் என்பதாக பதிவாகிறது. 1963 ஆம் ஆண்டு 238 ஆண்கள் 159 பெண்கள் 1981 ஆம் ஆண்டு 448 ஆண்கள், 128 பெண்கள் என பதிவு பெறுகிறது.

மூன்றாவது அத்தியாயம் நவீன இலங்கையின சீனர்களின் பல்வேறு பரிமாணங்களை ஆராய்கிறது. இதில் அவர்கள் பிரஜா உரிமைப் பெற்ற காலம், கல்வி நிலை, பெயர்கள், திருமண பந்தம், தொழில் முதலான விடயங்களுடன் அவர்களது வாழ்க்கைக் கோலம் பற்றியும் ஆராயப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு சீன வம்சாவளியினருக்கான பிரஜாவுரிமை வழங்கும் சட்டம் இலங்கைப் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (2009 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க சட்டமே இந்திய முகாம்களில் வாழும் இந்திய வம்சாவளியினரான இலங்கை அகதிகளுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கும் சட்டம் நிறை ஏற்றப்பட்டது)

2016 ஆம் ஆண்டில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட சீன மக்கள் இலங்கையில் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தைப் ( Working Permit ) பெற்றுக் கொண்டுள்ளதாகவும் புத்தகம் பதிவு செய்கிறது.

நான்காவது அத்தியாயம் இலங்கையில் சீன மொழி கற்றல் கற்பித்தல் பற்றியானது. 1954 ஆம் ஆண்டிலேயே கொழும்பில் சீன மொழி கற்பிக்க பாடசாலை உருவாக்கம் பெற்றுள்ளது. 1970 களில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் வித்யாலங்கார வளாகத்தில் சீன மொழிக் கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகள் சான்றிதழ் கற்கை நெறியாக தமிழ் , ஹிந்தி, ஜப்பான்,ஆங்கிலம் , பிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்யா என்பவற்றோடு சீன மொழியும் கற்பிக்கப்பட்டுள்ளது.

1972 ஆம் ஆண்டு பேலியகொட வளாகத்திலும் ( களனி பல்கலைக் கழகம்) இதே முறைமையில் சீன மொழிக் கற்கைகளை ஆரம்பித்துள்ளது. 1980 ஆம் இலங்கையின் உயர்தர பாடவிதானத்திலும் சீன மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

2008 க்குப்பின் களனிப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியன கன்பூசியஸ் நிறுவகம் என்ற பெயரிலும்,சப்ரகமுவ பல்கலைக் கழகம் லும்பினி கல்லூரி போன்றனவும் சீன மொழி சான்றிதழ் கற்கை நெறியாக உள்வாரி, வெளிவாரி பாடநெறிகளைக் கொண்டுள்ளன.

அத்தியாயம் ஐந்து இலங்கை சீனர்களின் இலக்கியம் பற்றி ஆய்வு செய்கிறது. அவை பெரும்பாலும் இலக்கிய படைப்புகளாக அன்றி பாடப்புத்தகங்களாக, மொழிபெயர்ப்புகளாக, கதைப் புத்தகங்களாக வெளிவந்துள்ளமை பதிவாகிறது. ஆறாவது அத்தியாயம் சீன மொழியில் உள்ள வேறுபாடுகள் அவை இலங்கையில் பிரதிபலிக்கும் விதம் பற்றி ஆராய்கிறது.சீன மொழி பேசும் பலர் இலங்கையில் நிரந்தரமாக வாழ்வது சிறப்பம்சம் என்றும் ஆய்வு கூறுகிறது.

இலங்கையில் அமையப்பெற்றுள்ள சீன வியாபார நிலையங்கள், சீன குடும்பங்கள், சீன மொழி புத்தகங்கள முதலான படங்களும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.

சீன மொழி சிறப்புப் பட்டம் பெற்ற பேராசிரியர் சங்கைக்குரிய நெதாலகமுவே தம்மாதீன தேரர் 1999 ஆம் ஆண்டு களனிப் பல்கலைக் கழகத்தில் இணைந்ததுடன் 2007 ஆம் ஆண்டு சங்காய் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளார். எங்கள் சீனம், இலங்கை சுற்றுலாத்துறைக்கான சீன மொழி உள்ளடங்களாக பல நூல்களை எழுதி உள்ளார். இலங்கை ஒரு பன்மொழி, பல்லின, பல்கலாசார பண்பாட்டு அம்சங்களைக் கொண்ட நாடு எனவும் நூலாசிரியர் வலியுறுத்துகின்றார்.

இந்த ஆய்வின் அவதானிப்புகள் இலங்கை சீன மக்களினதும் அவர்தம் மொழியிலும் நவீன இலங்கையில் ஏற்பட்டிருக்கக் கூடிய துரித முன்னேற்றங்களை சுட்டி நிற்பதாக பின்னட்டைக் குறிப்பை நிறைவு செய்கிறார் நூலாசிரியர்.

காலத்தின் தேவையுடன் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.

 


பூசணி பிடுங்குதல்

 இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கிய படைப்புகள் ஆங்கிலத்தில்

 - மல்லியப்புசந்தி திலகர்

1950 களில் இருந்தே இலங்கை சமூகம் பல எழுச்சிகளையும் அரசியல் அமைதியின்மையும் பரவலாக எதிர்கொண்டே வந்துள்ளது. இதனூடு புதிய பரிட்சார்த்த எழுத்துக்களும் உருப்பெற்றன. அவை ஈழத்திலும் வெளிநாடுகளிலுமான தமிழர் வாழ்க்கையின் கூட்டான வேதனைகளினதும் கவலைகளினதும் குரலாக பதிவு பெற்றன.

இலங்கை தமிழ் சமூகத்தின் ஒரு காலகட்ட போராட்டமானது உயிரஇழப்புகளையும், அழிவுகளையும், இடப்பெயர்வுகளையும் தோற்றுவித்தன. அவை கவிதைகளாக, சிறு கதைகளாக,நாடகங்களாக பதிவு பெற்ற விதத்தை இந்த தொகுப்பு பதிவு செய்ய முனைகிறது என்ற பின்னட்டைக் குறிப்பு இந்த நூலை வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

1952 ஆம் ஆண்டு பிறந்து 2014 இல் இவ்வுலகைவிட்டுப் பிரிந்த பேராசிரியர் செல்வா கனகநாயகம் தொகுத்திருக்கும் நூல் Uprooting the Pumpkin.

‘பூசணி பிடுங்குதல்’ என தமிழாக்கம் செய்து கொண்டாலும், இந்த பூசணி எப்போதுமே ஒரு ஆச்சரியம் தரும் தாவரவகைதான். சிலநேரம் ஊரின் நடுநாயகமாக அமைந்துவிடும் ஆலமரம் எனும் பெரு விருட்சம் தரும் ஆலங்காய் யார் கண்ணிலும் படுவதில்லை. அத்தனைச் சிறியது. பெரும்பாலும் பயன்பாட்டுக்கும் உள்ளாவதில்லை. ஆனால், வேலி ஓரமாக வளைந்து ஓடி வளரும் விரல் மொத்த கொடியில் காய்க்கும் பூசணிக்காயின் அளவோ அந்த கொடிக்கு எந்தத் தொடர்பும் இல்லாத மொத்தத்தில் இருக்கும். நன்கு முற்றிய பூசணிக் காயை கொடியில் இருந்து பிடுங்கியவுடன் அதன் சுமையைத் தூக்கிப் பார்த்தால் வரும் ஆச்சரியம்தான்; இத்தனைப் பாரத்தை எப்படி இந்த சின்னக் கொடி தாங்கி நின்றது என்பது !

இத்தகைய சூக்குமத்தை இலக்கிய இரசணையோடு எடுத்துச் சொல்லவோ என்னவோ ஈழத்து தமிழ் எழுத்தாளர்களின் 40 படைப்புகளை ஆங்கிலவாக்கம் செய்து தொகுத்திருக்கும் பேராசிரியர் செல்வா கனகநாயகம் இந்த தொகுப்புக்கு ‘பூசணி பிடுங்குதல்’ என தலைப்பிட்டிருக்கிறார்.

உள்ளடக்கத்தை விளக்கும் பக்கத்துக்கு முன்னமே Let No one Uproot the Pumpkin- Okot P’Bitek’, song of Lawino என்ற குறிப்பையும் தந்துவிடுகிறார்.

1932 ஆம் ஆண்டு பிறந்து 1982 ஆம் ஆண்டு மறைந்த ஆபிரிக்க கவிஞரான P’Bitek’ இன் அரசியல் சாரம் மிக்க அந்த கவிதையின் ‘யாரையும் பூசணிக்காயை பிடுக்க அனுமதிக்க வேண்டாம்’ எனும் கருத்திலான வரிகளை இட்டு பூசணிக்காய் பிடுங்குதல் எனும் தலைப்பில் நூலைத் தொகுத்திருப்பதும் ஓர் அரசியல்தான்.

236 பக்கங்களைக் கொண்ட இந்த நூலானது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பதிப்பாக 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளிவந்திருக்கிறது. ஈழத்து தமிழ் படைப்பாளிகள் நாற்பது பேரின் தெரிவு செய்யப்பட்ட படைப்புகளை அவர்கள் பிறந்த கால ஒழுங்கில் தெரிவு செய்து 24 கவிதைகள், 15 சிறுகதைகள் , ஒரு நாடகம் என ஒட்டுமொத்தத் தொகுப்பாக ஆங்கிலத்தில் தந்துள்ளார் செல்வா கனகநாயகம்.

1927 ஆம் ஆண்டு பிறந்த (1971 ல் மறைந்துவிட்டார்) மகாகவி - உருத்தி

ரமூர்த்தி யின் கவிதை, கவிதைப் பட்டியலில் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. மகா கவியின் அகலிகை, தேரும் திங்களும் ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ‘அகலிகை’ கவிதையை தொகுப்பாளர் செல்வா கனகநாயகமும், ‘தேரும் திங்களும்’ கவிதையை கவிஞர் சோ. பத்மநாதனும் தமிழாக்கம் செய்துள்ளனர்.

பென்குயின் வெளியீடாக 2013 ஆண்டு institute of Pondicherry வெளிக்கொணர்ந்த Time will write a song for you (காலம் உனக்கொரு பாட்டெழுதும்) எனும் சமகால இலங்கைத் தமிழ் எழுத்துக்கள் எனும் தொகுப்பிலும் முதல் ஆக்கமாக இடம்பெற்றது, மகாகவியின் ‘தேரும் திங்களும்’ கவிதைதான். அதில் Temple Car and the Moon என மொழிமாற்றம் செய்யப்பட்டிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நூலில் அது The Chariot and the Moon என தலைப்பிடப்பட்டு திருப்தியைத் தருவதாக உள்ளது.

சிறுகதைகளின் வரிசையில் 1934 ஆம் ஆண்டு பிறந்த தெளிவத்தை ஜோசப்பின் ‘கூனல்’ சிறுகதை முதலாவதாக பதிவு பெற்றுள்ளது. “கூனல்” என்று ஒரு சிறுகதை. உலகப் பெருமைமிகு சிறுகதையாகவே அதை உணர்ந்தேன். ஏழையைக் கண்டு வருந்துவதைவிட ஏழ்மை குறித்து வருந்துவது கூடுதல் சுமை ஏற்றக்கூடியது. அதுபோன்ற சிறுகதைகளை, நாவல்களை கவனிக்காமல் விட்டது நமது பிழையா ? விரும்பியோ விரும்பாமலோ சிலரது படைப்புகள் அறியப்படாமலும், அறியப்படுத்தப்படாமலேயும் போய்விடுகிறது என ஆதங்கப்பட்டிருந்தார் மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி.(விஷ்ணுபுரம் விருது விழா தலைமையுரை - கோவை 2013-12-22)

இந்திரா பார்த்தசாரதியின் அந்த ஆதங்கத்தினை உணர்ந்தவராக 2014 ஆம் ஆண்டு தான் இறப்பதற்கு முன்பதாக இந்த தொகுப்பில் ‘கூனல்’ சிறுகதையை ஆங்கிலவாக்கமாக Deformity என பதிவு செய்ய எண்ணியுள்ளார் செல்வா கனகநாயகம். கதையை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் ஏ.ஜே.கனகரத்னா என்பது இன்னுமொரு பெருமிதம்.

இந்த கதையை இந்தத் தொகுப்பில் சேர்ப்பதற்கான காரணமாக தனது முன்னுரையிலே இவ்வாறு எழுதுகிறார் செல்வா கனகநாயகம்:

 

இலங்கைத் தமிழ் சமூகங்கள் அரிதாகவே ஒரே விதமானவையாக இருக்கும் . மதமும் பிரதேசமும் ( Religion and region ) அவர்களின் எழுத்தின் போக்கினை வேறுபடுத்தும் காரணிகளாகின்றன. வடபகுதியில் இருந்துவரும் எழுத்துக்களில் இருந்து குறிப்பிடத்தக்க வேறுபட்ட தன்மைகளைக் கொண்டதாக கிழக்கில் இருந்து வரும் எழுத்துக்களில் பிரதிபலிக்கும். மலைநாட்டில் வரும் தமிழ் எழுத்தாளர்களிடத்தில் முற்றிலும் வேறுபட்ட முன்னோக்கங்கள் காணப்படும்....

கிழக்கிழங்கையிலும் மத்திய மலைநாட்டிலும் வாழும் தமிழர்கள் தாம் சொல்வதற்கு என தனியான கதைக்களங்களைக் கொண்டுள்ளனர்.மலைநாட்டுத் தமிழர்களைப் பொறுத்தவரை காலனித்துவதக்கு முன்பிருந்த அதே ஒடுக்குமுறை பின்காலனித்துவ காலத்திலும் தொடர்வதைக் காணலாம். வேறுபட்ட வடிவங்களில் அவர்கள் சுரண்டலுக்கு உள்ளாகி விளிம்பு நிலைச்சமூகமாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தோன்றிய பல எழுத்தாளர்கள் அவற்றை வெளிப்படுத்தி உள்ளனர். தெளிவத்தை ஜோசப்பின் ‘கூனல்’ எனும் கதை இதற்கு ஓர் உதாரணமாகும் எனக் குறிக்கின்றார்.

இதே தொகுப்பில் வரும் எஸ்.ஶ்ரீதரனின் ‘ராமசாமி’ எனும் கதையையும் கூட தொகுப்பாசிரியர் இங்கே நினைவுபடுத்திச் செல்கின்றார். அந்தக் கதையில் வடபகுதிக்குச் சென்ற மலையகத்தவர்க்கு அங்கே நிகழக்கூடிய ஒடுக்குமுறைகளை வடபிரதேச எழுத்தாளரான ஶ்ரீதரன் விபரித்து இருப்பார்.

பிற கவிதைகளின் வரிசையில் கவிஞர்களான நீலாவணன், த.இராமலிங்கம், ஆர்.முருகையன், சண்முகம் சிவலிங்கம், எஸ்.சிவசேகரம், எம்.ஏ.நுஹ்மான், வ.ஐ.ச.ஜெயபாலன்,அ.யேசுராசா, மு.புஷ்பராஜன், புதுவை இரத்தினதுரை, சு.வில்வரத்தினம், கி.பி.அரவிந்தன், திருமாவளவன், சோளைக்கிளி, ஆர்.சேரன், செழியன், எஸ்.கருணாகரன், வினோதினி சச்சிதானந்தன், ப.அகிலன், பஹீமா ஜெஹான், நட்சத்திரன் செவ்விந்தியன், அ.றஷ்மி, அனார் ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

சிறுகதைகள் வரிசையில் அ.முத்துலிங்கம், எஸ்.கதிர்காமநாதன், செ.யோகநாதன், எம்.எல்.எம்.மன்சூர், ரஞ்சகுமார், உமா வரதராஜன், குந்தவை, அ.ரவி, சித்தார்த்த சேகுவேரா, பார்த்தீபன், குமார் மூர்த்தி, சந்திரா ரவீந்திரன், ஷோபா சக்தி ஆகிய சிறுகதையாளர்களின் கதைகளும் இடம்பெற்றுள்ளன.

குழந்தை எம்.சண்முகலிங்கத்தின் ‘எமது பெற்றோரின் நிலம்’ எனும் நாடகப்பிரதியும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

ஏ.ஜே.கனகரத்னா, காஞ்சனா தாமோதரன், லக்‌ஷ்மி ஹோம்ஸரோம், ஆர்.முருகையன், பத்மா நாராயணனன், சோ.பத்மநாதன், எஸ்.ராஜசிங்கம், கோவர்த்தணன் ராமச்சந்திரன், எஸ்.சிவசேகரம் ஆகியோருடன் தொகுப்பாளர் செல்வா கனகநாயகம் அவர்களுமாக, தமிழில் வெளிவந்த படைப்புக்களை ஆங்கிலவாக்கம் செய்து தமது பங்களிப்பைச் செய்துள்ளனர்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராக  இருந்தவரும் 'தமிழ் இலக்கிய வரலாறு' நூலை எழுதியவருமான பேராசிரியர் செல்வநாயகம் அவர்களின் மகனான தொகுப்பாளர் செல்வா கனகநாயகம், கனடா - டொரொண்டோ பல்கலைக் கழகத்தில் ஆங்கில துறையில் பேராசிரியராக பணியாற்றியவர்.அத்தோடு தென் ஆசிய கற்கை துறையில் பின்காலனிய இலக்கிய ஆய்வுகளை மேற்கொண்டவர். பல தமிழ் இலக்கிய ன படைப்புகளை ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பு செய்தவர். இந்த நூலை தொகுப்பதற்கு அவர் முயற்சி மேற்கொண்டிருந்த போதே 2014 ஆம் ஆண்டு காலமானார். அவரது மறைவின் பின்னரே 2016 ஆண்டு வெளிவந்திருக்கிறது.

பின்னட்டைக் குறிப்பில் எழுதப்பட்டிருப்பதுபோல காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ள இந்த எழுத்துக் களஞ்சியம், இலங்கை தமிழ் அடையாளத்தின் ஊடாக எழுந்த கருத்துக்களை இலக்கிய வடிவத்தில் பதிவு செய்துவைப்பதுபோல தனது செழுமையான இலக்கிய பணியால், குறிப்பாக இறக்கும் தறுவாயிலும் இத்தகைய தொகுப்பைத் தந்துவிட்டுப் போயிருக்கும் செல்வா கனகநாயகம் அவர்களும் இலங்கைத் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வார்.

***


மலையகத்தின் புதிய பரிமாணமாக….

ஈழம் என்று சொன்னால் நாம் எல்லாம் அதில் உணர்வுபூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் இணைந்திருக்கிறோம் . அதற்கு காரணம் 1983க்குப் பிறகு ஈழத்தில் சிங்களத்-தமிழ் இனக்கலவரத்தோடு ஏற்பட்ட போர்ச்சூழல். அதையொட்டி தமிழகத்தில் ஈழம் தொடர்பான ஒரு ஆதரவுக் குரல்கள் வெளிப்பட்டு இன்றுவரை அதனை வெவ்வேறு வடிவங்களில் அதனைத் தாங்கியவர்களாக உள்ளோம்.

அரசியல் களம் தாண்டி ஈழத்திற்கு இன்று இன்னொரு முகம் இருக்கிறது. ஒரு காலத்தில் தமிழ் இலக்கியம் தமிழ்ப்பண்பாடு என்பது தமிழகம் அளவினதாக  இருந்தது. ஆனால் இன்று தமிழ்ப் பண்பாடு என்பதும் தமிழ் இலக்கியம் என்பதும் தமிழகம் தாண்டி ஈழத்தில் வாழக்கூடிய மக்கள் சார்ந்ததாகவும் அதனையும் தாண்டி உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பண்பாடு சார்ந்ததாகவும் மாறி இருக்கிறது. ஏறக்குறைய தமிழ் இலக்கியமே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை எனும் ஐந்திணைகள் வகுத்தது இன்றைக்கு கடல்வழியாகவும், வான்வழியாகவும் புலம்பெயர்ந்து சென்று நாடற்றவர்களாக, தங்களது மனோபாவங்களைத் தேசத்தைத் தாண்டியவர்களாக  கொண்டு வாழ்வோரின், அவர்களது வாழ்நிலப்பரப்பை  ஆறாம் திணையாக வேண்டி நிற்கிறது.

 

ஏறக்குறைய 1983 க்குப் பின்னாளில் ஈழத்தில் இடம்பெற்ற சூடான நினைவுகளை தமிழகத்தில் வைத்திருப்பது அரசியல் மட்டுமல்ல அதற்கு அங்கிருந்து வெளிவந்த படைப்புகளும் மிக  முக்கியமான பங்கை வகிக்கின்றது. குறிப்பாக சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் உள்ளிட்டோர் ஈழப்பிரச்சினை குறித்து எழுதிய கவிதைகள் அந்தப் பிரச்சினையை தமிழ்நாட்டில் புரிந்துகொள்வதற்கு பெரும் உதவியாக இருந்தது.

இப்படி ஈழம் பற்றிய ஒரு பார்வை இருக்கின்ற நிலையில், ஈழம் பற்றி நாம் யோசிக்கும்போது பெரும்பாலும் நம் கவனத்துக்கு வராத ஒரு பகுதி இருக்கிறது. அது ஈழம் என்ற பொது அடையாளம் எந்த அளவுக்கு கவனத்துக்கு வந்து இருக்கிறதோ அதற்கு இணையாக வந்திருக்க வேண்டிய ஒரு அடையாளம். ஒரு பேசுபொருள்.

ஆனால், துரதிஸ்டவசமாக அது அந்தளவுக்கு வரவில்லை. அது என்னவன்றால் ஈழத்தில் வாழக்கூடிய தமிழ் மக்கள் என்றால் அது ஒரு பகுதியைசார்ந்தவர்கள் இல்லை. அங்கு வடபகுதியில் யாழ்ப்பாணத்தில், கிழக்கில் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழ்வதைப்போலவே தெற்கில் மலையகத் தமிழர்கள் எனும் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்பதுதான். ஈழத்தில் மலையகத் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்பதை அறியாத ஒரு தலைமுறையினரே கூட இப்போது இங்கே தமிழகத்தில் இருக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் என்று சொன்னால் அதில் மலையகத் தமிழர்களும் அடங்கியுள்ளார்கள் எனும் புரிந்துகொள்ளக்கூடிய ஓர் ஓர்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டிய ஓர் அவசியத்தில் நாம் இப்போது இருக்கிறோம்.

அத்தகைய ஒரு விழிப்புணர்வை, மலையகம் எனும் தனி அடையாளத்தை உருவாக்கி வளர்த்து வந்ததில் ஒரு பெரிய ஒரு மரபு இருக்கிறது. அந்த மரபின் தொடர்ச்சியாக ஒரு எழுத்தாளராகவும் அரசியல் செயற்பாட்hளராகவும் மலையகத்தை சர்வதேச மட்டத்திற்கும் கொண்டு சென்றதில் மல்லியப்புசந்தி திலகர் எனும் இந்த நூலாசியருக்கு ஒரு பங்கு இருக்கிறது.

ஏறக்குறைய 150 முதல் 200 வருட காலத்திற்கு முன்பு கோப்பி, தேயிலை முதலான பயிர்சார்ந்து பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் உழைப்பதற்காக தமிழகத்தில் இருந்து கொத்துக் கொத்தாக தமிழர்கள் இடம்பெயர்நது சென்றார்கள். இந்த 150-200 வருடகால வரலாற்றில் அவர்கள் தமிழக அடையாளங்களில் இருந்து முற்றிலும் விலகி ஈழத்தில் தனித்துவ அடையாளம் பெற்றவர்களாக அந்த வாழ்வாதாரத்தின் பின்னணியில் வாழக்கூடியவர்களாக பழகிப்போனர்கள். இப்போது அவர்களின் சொந்த நாட்டோடு எந்த தொடர்பும் இருக்க முடியாது.

அதேநேரம் ஈழத்தில் பாரம்பரியமாக  வாழ்ந்துவருகிற  தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாகவும் ஆகிப்போனார்கள். இப்படி பண்பாட்டு அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் தனித்துவமான, தனித்து நடாத்தப்புடுவதனால் அதுசார்ந்த தனித்த அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்களாக மலையகத் தமிழர்கள் உருவானார்கள். அவர்களுடடைய பிரச்சினைகள், போராட்டம் அனைத்து ஈழத்தமிழர்கள் எதிர்கொள்கின்ற அடையாளங்களை ஒத்ததாக இருந்த அதேநேரம் அவர்களுக்கென்றே தனித்துவமான பிரச்சினைகளைக் கொண்டதாகவும் இருந்தது.

பெருமளவு தோட்டத் தொழிலாளிகளாக, உடல் உழைப்பாளர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களுடைய உழைப்பு அவர்களுடைய  வாழ்வியல் முறை என்பது வேறாக இருந்தது. அவர்கள் மத்தியில் பணியாற்றுவதற்கு, தொழிற்சங்கங்களும், அந்த தொழிற்சங்கம் சார்ந்த அமைப்புகளும் அதன் தலைவர்களும் உருவாக வேண்டிய அவசியம் எழுந்தது

. இந்த நிலையில்தான் மலையகத் தமிழர்களின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்ட ஒரு தனித்த இலக்கிய மரபு உருவானது. அந்த தனித்த இலக்கிய மரபு என்பது ஈழத்து தமிழர்கள் மத்தியிலான எழுத்துசார்ந்த மரபுபோல் அல்லாமல் வாய்மொழி பாடல்களாக, கீர்த்தனைகளாக, சிந்துகளாக இங்கிருந்து இடம்பெயரந்து சென்ற மக்கள், தாங்கள் இடம்பெயர்ந்துசென்ற அந்த வழிநடையின் துயரத்தை பாடல்களாக மாற்றினார்கள்.

அங்கே தோட்டத் துரைமார் எவ்வாறு அவர்களை நடாத்தினார்கள் அதற்காக எவ்வாறு, போராடினார்கள் என்பதை ஆரம்பத்தில் வாய்மொழியாகவும் பின்னாளில் எழுத்துருவிலும் இலக்கியங்களாக உருவாக்கியிருக்கிறார்கள். எந்தவகையிலும் மலையகத்தவர்கள் யாழ்ப்பாணத்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லக்கூடிய வகையிலே மலையத்தவர்கள் இலக்கியத்திலே ஒரு பொது அடையாளத்தை உருவாக்கியிருககிறார்கள். ‘மiகைளைப் பேசவிடுங்கள்’ எனும் தலைப்பே கூட வ.செல்வராஜா எழுதிய ஒரு நாடகத்தினதும்  தலைப்பு என்றே நூலாசிரியர் தன்னுரையிலே குறிப்பிடடுள்ளார்.

மல்லியப்புசந்தி என்பதே கூட அவர் முதலாவாக வெளியிட்ட கவிதைத் தொகுப்பின் பெயர்தான். அது மலையககத்திலே ஹட்டனிலே அமைந்திருக்கக்கூடிய மக்கள் சந்திக்கின்ற ஒரு இடத்தின் பெயர்   அது வெறும் இடமல்ல. அது ஒரு அடையாளம்.  அது அவர்களின் வாழ்வியலோடு இணைந்த விடயங்களைச் சொல்லுகின்றபோது ஒரு இடத்தின் பெயராக அல்லாமல் ஓர் வாழ்வின்  அடையாளமாகவே அமைந்துவிடுகின்றது. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் முன்னுரையோடு நூலிசியரே உருவாக்கிய பதிப்பகத்தின் ஊடாக ‘மல்லியப்புசந்தி’ எனும் நூலை அவரே வெளியிட்டு இருக்கிறார்.

மலையக இலக்கியம் தொடர்பான ஒரு ஆய்வரங்கம் இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கல், காந்தி கிராமிய பல்கலைக்கழகத்திலே நடைபெற்றது. இலங்கை மலையகத்pல் இருந்து பல இலக்கிய ஆய்வறிஞர்கள் எழுத்தாளர்கள் அங்கே உரையாற்ற வந்திருந்தார்கள். அதன்போது ஈழத்தின் மிக முக்கிய எழுத்தாளுமையான தெளிவத்தை ஜோசப் அவர்களும் வந்திருந்தார். அவரின் வயதின் காரணமாக அவருடன் கூட வந்திருந்த இளையவரான  அவரது  உதவியாளர் என்றுதான்  மல்லியப்புசந்தி திலகரை நான் கணித்தேன். பின்புதான் தன்னை முன்னிலைப்படுத்தாத மூத்தவருக்கு உதவுகின்ற எளிமையான மக்கள் பிரதிநிதியாக நான் அவரை அறிந்துகொண்டேன். அதன் பின்னர் சமூகவலைதளத்தின் ஊடாக அவரை பின்தொடரந்தபோதுதான் அவரது முக்கியத்துவத்தை உணரக்கூடியதாக இருந்தது.

சமகாலத்தில் மலையகத் தமிழர்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்பவர்களில் திலகர் தனித்துவமானவராக விளங்குகிறார். அவர் கல்விப்புலமிக்கவமராக் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழி பேசுபவராக இருப்பது, இதழ்களில் எழுதுபவராக, கவிதை இயற்றுபவராக, மலையக இலக்கிய முன்னோடிகளைத்  தேடிச்சென்று ஒரு தொடர்பை உருவாக்கிக்கொள்பவராக, மலையகத்தின் வரலாறு பற்றிய ஓர் ஓர்மையை உள்வாங்கி அதனடிப்படையில் மலையக மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்பவராக இருப்பதை இவரிடத்தில் காண்கிறேன்.

இவற்றுக்கு மேலாக அதிகாரப்பகிர்வு விடயத்தில் மலையகத்துக்கு இருக்க வேண்டிய பக்கத்தை பிச்சினைகளை தனது அரசியல் முன்னோடிகளான மனோகணேசன், திகாம்பரம் போன்றவர்களின் வரிசையிலே இணைந்து முன்வைப்பவராக, மலையக மக்களின் பிரச்சினைகளை  சர்வதேச அரங்குகளிலும் பேசுபவராக பல்வேறு நாடுகளுக்கு பயணிப்பவராகவும் உள்ளார்.

சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் பிரச்சினை என்பது ஒன்று அல்ல அங்கு வாழ்கின்ற மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறானதாக இருக்கின்றது என்பதை  இணைத்துச் சொல்பவராகவவும் எடுத்துச் செல்லக்கூடியவராகவும் இவரை அடையாளம் காண முடியும்.  இது அவரது முன்னோடிகளுக்கு இல்லாத வாய்ப்பு.

அந்த வாய்ப்பினை மலையகத் தமிழர்களின் மாற்றத்துக்காக முன்னேற்றத்துக்காக இவர் செயற்படுத்திக்கொண்டிருபதை செலவிட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த வளரந்த ஒருவரான   திலகர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வந்திருக்கிறார் என்பது இங்கு கவனத்துக்குரியது. அந்த அனுபவம் அவருக்கு பெருமளவிலே உதவியிருக்கிறது.

ஆங்கிலேயர்கள் உருவாக்கிய பள்ளிக்கூடங்கள், சிறைச்சாலைகள் போன்றனவும் தொழிற்துறைகளில் உருவாக்கிய குடியிருப்புகள் அவர்களின் கண்காணிப்புக்கு ஏதுவாகவே அமைக்கப்பட்டுள்ளது. மலையகத்திலே அவை லைன் வீடுகள் என அழைக்கப்படுகின்றன. அத்தகைய லைன் வீடுபகளில் பிறந்து வளர்ந்த திலகர் அத்தகைய லைன் வீடுகளை மாற்றி தனித்தனியான வீடுகளை அமைக்கும் எண்ணக்கருவை வலுப்படுத்துதல், அந்த பிரதேசங்களை கிராமங்களாக மாற்றுவதற்கான திறவுகோலாக மலையக அதிகார சபை ஒன்றை நிறுவுதல் முதலான விடயங்களில் அதிக அக்கறை காட்டியுளளார்.

அவ்வாறு உருவாக்கப்பட்ட அதிகார சபை சம்பந்தமாக இந்த நூலிலே விரிவாக எழுதியுள்ளார். அரசியல் செயற்பாட்டாளரான திலகர் ஒரு எழுத்தாளராக இருப்பதன் காரணமாக தினசரிகளில், வார இதழ்களில் மலையக மக்களின் வரலாற்றையும் கடந்தகால அனுபவங்களையும் ஏறிட்டு அதில் இருந்து அவர்களின் தேவை என்ன என்பதையும் அது எவ்வாறு நிறுவப்பட்டிருக்கிறது என்பதையும் அடையாளம் கண்டு தொடராக பல கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். அத்தகைய கட்டுரைகளில் ‘அரங்கம்’, ‘ஞாயிறு தினக்குரல்’ ஆகிய பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

இந்த நூலினைப் படிக்கும்போது இரண்டு செய்திகளை நாம் அறிந்துகொள்ள முடியம். ஒன்று மலையகத் தமிழர் எனும் அடையாளம் எவ்வாறு உருவானது? அதற்கு முன்னர் அவர்களைச் சுட்டிய பெயர்கள் என்ன என்பன போன்ற விடயங்கள். மலையகத் தமிழர்கள் தொடர்ச்சியாக நடாத்திவந்திருக்ககூடிய போராட்டங்களுக்கு ஒரு ‘ஏஜன்ஸி இருக்கிறது. ஏஜன்ஸி என்றால்  இன்று அவர்களுக்கு கிடைத்துpருக்கக்கூடிய உரிமைகளுக்காக அவர்களே நடாத்தியிருக்கக்கூடிய போராட்டங்களை இந்த நூல் எடுத்துக்காட்ட முனைகிறது. ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட சமூகத்துக்கு இரண்டு விதமான போராட்டங்கள் அமையப்பெறுவதுண்டு.

ஒன்று வெளியில் இருந்து அவர்கள் மீதான அரசியல் பரிவுணர்ச்சியின் காரணமாக இரக்கப்பட்டோ அல்லது தார்மீக உணரச்சியின் அடிப்படையிலோ வெளியில் இருந்து அவர்களுக்காக போராடக்கூடிய ஒரு பகுதி. உலகாளவிய ரீதியில் அவ்வாறான போராட்டங்களே அதிகம் பேசப்படுவதாக இருக்கின்றது. இன்னொன்று அந்த சமூகமே தனக்கான உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டம். ஒரு சமூகம் தமக்குத் தாமே நடாத்திக்கொள்ளும் போராட்டம் பெரும்பாலும் சொல்லப்படுவதில்லை. எழுதப்படுவதுமில்லை. திலகர் இந்த நூலை எழுதிச்செல்லுகின்றபோது மலையகம் ஏனும் அடையாளததை உருவாக்குவதில் இருந்து இன்று தமக்கான அதிகாரசபை சட்டத்தை  நிறைNவுற்றியது வரையாக தாங்கள் தன்னிச்சையாக நடாத்திவந்த போராட்டங்களை மிக ஏதுவாக தொகுத்துக்காட்டியிருக்கிறார்.

அதற்கான பொருள் அவர்களுக்காக மற்றவர்கள் பாடுபட்டார்கள் என்பதை புறக்கிணப்பதோ மறுப்பதோ அல்ல. ஒரு சமூகம் எப்Nபுhதும் வாய் மூடி கிடப்பதில்லை. அவர்களு;காக மற்றவர்கள் பாடுபடுவதுபோலவே, அவர்கள் அடக்கப்பட்டதற்காக அவர்களே கிளரந்ந்தெழுந்து போராடக்கூடிய ஒருவகைப் போராட்டம் ஒன்று இருக்கிறது. இந்த நூலில் என்னைக் கவர்ந்த அம்சமே, எங்களுக்கு ஒரு ஏஜன்ஸி இருக்கிறது. எங்களது முன்னோடிகள் கோ.நடேசய்யர் முதல் சிவலிங்கம் முதலானர்வகள்  எவ்வாறு அதனை முன்னகர்த்தி வந்துள்ளார்கள் என்பதை அவர் சொல்லமுனைவதுதான்.

மலையகத் தமிழர் வாழ்விலே இரண்டு விடயங்கள் ; பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒன்று 1948 குடியுரிமைப்பறிப்புச் சட்டம். இந்தச் சட்டம் அவர்களின் இலங்கைக் குடியுரிமையை மறததது. அதற்க காரணம் அவர்கள் கொண்டிருந்த இந்திய அடையாளம். இரண்டாவது 1964 ஆம் ஆண்டு செய்யப்பட்ட சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தம். இந்த ஒப்பபந்தத்தின் அடிப்படையிலே இந்தியாவில் இருந்து இலங்கை சென்று அங்கு பல ஆண்டுகாலம் வாழ்ந்து தலைமுறைகளைக் கடந்தவர்கள்; திடீரெண இரண்டு அரசாங்கங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்கு நீங்கள் திரும்புங்கள் என்று சொல்லக்கூடிய ஒரு நிலை.

இந்த இரண்டு சட்ட விடயங்களினால் இந்த மக்களின் நிலை இலங்கையில் இந்தியர்கள் என்றும் இந்தியாவில் சிலோன்காரர்கள் என்றும் அந்நியப்படுத்தப்படுவதை இந்த நூலிலே தெளிவாக விளக்குகிறார். இந்த இரண்டுமே அவர்களது அடையாளத்தை மறுப்பதாகவே தெரிகிறது. மறுபுறம் மலையகத்தில் இருந்து சமவெளிப் பகுதியான வன்னியிலே சென்று ஒரு பகுதியினர் குடியேறியது பற்றியும் அவர்களுக்கு அங்கு என்ன நடந்தது என்புது பற்றியும் விரிவாக குறிப்பிடுகின்றார்.

அதில் அந்தனி என்பவரைப் பற்றிய விரிவான ஒரு பதிவை இந்த நூலிலே பதிவு செய்துள்ளார். பெரியவர்களாக அல்லாமல் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் மகத்தான காரியங்கரளச் செய்கின்றபோது அவர்களது வரலாற்று அடையாளங்களைத் தேடித்தரவேண்டியது நமது கடமை. அத்தகைய ஒருவராக அந்தனி என்பவர் திகழ்ந்திருக்கிறார். அவருக்குரிய அடையாளததைத் தந்தமைக்காக திலகர் மிகுந்த பாராட்டுக்குரியவராகிறார்.

இந்த நூல் இலங்கை மலையகம் தொடர்பாக அறியாமல் இருப்பவர்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டக்கூடியதாக இருக்கும். அறிந்திருப்பார்களானால் அவர்களுக்கு  ஒரு புதிய பரிமாணத்தை வழங்கக்கூடும். அதற்காகவே இருசாராரும் வாசிக்க வேண்டிய நூல். நூலாசிரியர் திலகருக்கு எனது வாழ்த்துக்கள்.

முனைவர் ஸ்டாலின் ராஜாங்கம்

பேராசிரியர்- அமெரிக்கன் கல்லூரி

மதுரை  08-11-2019