தொழிற்சங்கம் தவிர்ந்த வேறு துறையை நாடாதவர் செபஸ்தியன்

-அனுதாபச் செய்தியில் முன்னாள் எம்.பி.திலகர்

தொழிலாளர் தேசிய சங்கத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை இணைந்திருந்த இவர் தொழிற்சங்கம் தவிர்ந்த வேறு ஒரு துறையை தன் வாழ்நாளில் நாடாதவர். அத்தகைய அனுபவமிக்க ஒருவரின் இழப்பு மலையக தொழிற்சங்க இயக்கத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்து உள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் முதன்மை உறுப்பினர்களில் ஒருவருமான ஜே.எம்.செபஸ்தியன் அவர்களின் மறைவினை அடுத்து அவர் விடுத்திருக்கும் அனுதாபச் செய்மியிலேயே இவ்வாறு தெரிவித்து உள்ளார். அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச்செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய ஜே.எம். செஸ்தியன் பாடசாலைக்கல்வியை முடித்ததும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் தொழிற்சங்கத்துறை பயிலுனராக இணைந்தவர். அமரர் வி.கே.வெள்ளையன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்துவந்து தொழிலாளர் தேசிய சங்கத்தை உருவாக்கியபோது அவரோடு இணைந்து கொண்டவர்.

இவர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தினராக இல்லாமல் இருந்தாலோ அல்லது இவரது மருமகன் எனது நண்பன் ரொபர்ட் ( மொனரகலை பஸ் விபத்தில் காலமாகிவிட்டார்) தொழிலாளர் தேசிய சங்கத் தலைமைக் காரியாலயத்தில் தங்கி 92/93 காலப்பகுதியில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் என்னோடு சக மாணவனாக உயர்தரம் கற்றிருக்காவிட்டாலோ, எனக்கும் 'தொழிலளர் தேசிய சங்கத்துக்கும்' தொடர்பு ஏற்பட்டு இருக்காது.

அந்தவகையில் 1992 முதல் 2020 வரையான 28 ஆண்டு கால தொடர்பை தொழிலாளர் தேசிய சங்கத்துடன் ஏற்படுத்திய பெரியவர் செபஸ்டியன் அவர்களது இழப்பு எனக்கு பெரும் வேதனை அளிப்பது.

2007 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக நான் இணைந்து கொண்ட நாளில் இருந்து 2020 ஆண்டு ஒதுங்கிக் கொண்ட நாள் வரை பிரதிப் பொதுச் செயலாளர் பதவி வகித்தபோதும் உண்மையில் அந்த காலப்பகுதி முழுவதும் நிதிச் செயலாளராக பதவி வகித்த செபஸ்தியன் அவர்களுக்கு உதவியாளராகவே இருந்தேன்.

மாதாந்த கணக்காய்வு, வருடாந்த கணக்கு அறிக்கை சமர்ப்பிப்பு என கணக்காளர் கணேசனுடன் இணைந்து இவருடன் நெருங்கிப் பழகிய அனுபவம் எனக்கு உள்ளது. இப்போது அந்த இருவருமே மறைந்துவிட்டார்கள் என்பது பெரும் வேதனையானது.

செபஸ்தியன் அவர்களின் ஆங்கிலப்புலமையும் தொழிற்சங்க அனுபவங்களும் தொழிலாளர் தேசிய சங்க மீள் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தது. சங்கத்தின் வரலாறு குறித்த ஒரு நடமாடும் தகவல் களஞ்சியமாகவே அவர் செயற்பட்டிருந்தார். வி.கே வெள்ளையன் அவர்களுடன் இணைந்து தோட்டம் தோட்டமாக நடந்து திரிந்து தொழிற்சங்கம் அமைத்த அனுபவம் இவருக்கு உண்டு. அதனை அவ்வப்போது சுவாரஷ்யமாக பகிர்ந்து கொள்வார்.

தொழிற்சங்கம் தவிர்ந்த வேறு ஒரு துறையை தன் வாழ்நாளில் நாடாதவர் இவர் அத்தகைய அனுபவமிக்க ஒருவரின் இழப்பு மலையக தொழிற்சங்க இயக்கத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அன்னாருக்கு மலையக அரசியல் அரங்கத்தின் சார்பில் அஞ்சலியைப் பதிவு செய்வதுடன் அவரது பிரிவால் துயருற்று இருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொழிற்சங்க அங்கத்தினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.


அடுத்தத் தலைமுறைக்கான அரசியல் பாலமே 'மலையக அரசியல் அரங்கம்'

- தலைமை ஒருங்கிணைப்பாளர் திலகராஜ் கூறுகிறார்-

‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் பெயரில் கடந்த ஞாயிறு அமைப்பு ஒன்று தலவாக்கலை நகரில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ், உதயசூரியனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.

உரையாடல் : சதீஷ்குமார்.

மலையக அரசியல் அரங்கம் எனும் அமைப்பானது அரசியலோடு தொடர்பு பட்டதா?

அரசியல் தொடர்பில்லாத அமைப்பாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அமைப்பின் பெயரிலேயே ‘அரசியல்’ எனும் பதம் வரும் வகையில் வடிவமைத்தோம். நிச்சயமாக அரசியல் தொடர்புடையதுதான்.

 

அரங்கம் தொடர்பில் சற்று விளக்க முடியுமா?

1. மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் தளத்தை உரையாடல் வெளியை ஏற்படுத்துவது
2. மாவட்ட எல்லைகளைக் கடந்து மலையக அரசியலை முன்னெடுப்பது
3. ஆண்களுக்குச் சமனாக பெண்களுக்கும் அரசியலில் சம வாய்ப்பளிப்பதை வலியுறுத்துவது
4. மலையகத்தில் அடுத்த தலைமுறை அரசியலுக்கு பாலம் அமைப்பது
எனும் நான்கு இலக்குகளைப் பிரதானமாகக் கொண்டு மலையக அரசியல் அரங்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

உங்களுடைய அமைப்பின் இலட்ச்சினைகள் தொடர்பில் கூறமுடியுமா?

மலையகத் தமிழ் சமூகம் இலங்கையில் இருநூறு வருடங்களை நிறைவு செய்கிறது. அதில் சரியாக ஒரு நூற்றாண்டு காலமாக பிரதிநிதித்துவ அரசியலை முன்னெடுத்து 1921 முதல் சட்டவாக்கச் சபை ( Legislative Council) அரச பேரவை ( State Council ) நாடாளுமன்றம் ( Parliament ) மாகாண சபை ( Provincial Council) உள்ளூராட்சி சபை ( Local Authorities ) என அங்கத்துவம் கண்டுள்ளது.

இந்தப் பயணத்தை மலையகம் என்ற உணர்வோடு ஆரம்பித்து வைத்த மலையக தேச பிதா கோ.நடேசய்யர் அவர்களையும் அவரது துணைவியாரும் அரசியல் சமூக கலை இலக்கிய செயற்பாட்டாளருமான மீனாட்சியம்மை ஆகியோரின் உருவப் படங்களை இலட்சினையாகக் கொண்டுள்ளோம்.

இதன்மூலம் மலையகத் தமிழ்ச் சமூகத்தை கூலிச்சமூகமாகக் காட்ட முயல்வதற்கு மாறாக ஓர் அரசியல் சமூகமாக அடையாளப்படுத்தவும், ஆண்களைப் போலவே பெண்களும் மலையக அரசியலில் சம்பங்கு வகித்துள்ளார்கள் என்பதையும் வலியுறுத்துவதோடு பிரதிநிதித்துவ அரசியல் மாத்திரம் அன்றி சமூக அரசியலும் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அவசியமானது என்பதையும் வெளிப்படுத்துவதாக இலச்சினை அமைகிறது.

மலையக அரசியல் அரங்கம் எனும் அமைப்பானது மலையக பெருந்தோட்ட மக்களை பொருத்தவரையில் எந்நதளவில் பயன் தரும் ?
பெருந்தோட்டம் என்பது அருகிவரும் ஒரு பொருளாதார வலயம். இலங்கை சுதந்திரமடையும்போது 100% ஆக இருந்த பெருந்தோட்டக் கட்டமைப்பு 1972 ஆம் ஆண்டு ஆகும்போது 25 % சிறுதோட்டமாகவும் 75% பெருந்தோட்டங்களாகவும் இருந்தன. 1992 ல் இரண்டும் தலா 50% ஆக பதிவானது. ஆனால் , 2020 ல் சிறுதோட்டம் 75%ஆகவும் பெருந்தோட்டங்கள் 25 % ஆகவும் குறைந்துள்ளதோடு 2050 ஆம் ஆண்டு ஆகும்போது பெருந்தோட்டம் 1% ஆக குறைப்பதற்கு உத்மியோகபூர்வமாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

எனவே பெருந்தோட்டம் என்பதற்கு இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை.அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரியத் தொடங்கிவிட்டது. பெருந்தோட்டத்தைப் பாதுகாப்போம் எனும் கோஷத்தை முன்வைப்பவர்கள் இதனை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. தவிரவும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்தான் இற்றைநாள்வரை மலையக அரசியலின் வேர்களாக இருந்து வருகிறார்கள். தோட்டத் தொழிலாளர்கள் அல்லாதவர்கள் இன்னும் தங்களை ‘அரசியல் ரீதியாக’ அடையாளப்படுத்தாமை மலையக சமூகத்தின் பெரும் சாபக்கேடு. தொழிற்சங்கங்கள் இன்று திராணியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட நிலையில் தொழிற்சங்க அரசியலில் தங்கி இருப்பதானது திராணியற்ற அரசியல் பயணத்திற்கே இட்டுச் செல்கிறது.

இப்போதைய அவசியத்தேவை தோட்டத் தொழிலாளர் நலனில் அக்கறைகொண்ட தொழிலாளர் அல்லாத மலையகத் தரப்பினர் முன்னெடுக்கும் அரசியலே ஆகும். அத்தகைய அக்கறையாளர்களை வெவ்வேறு பெயர்களில் மலையகத் தளத்திலே காணக்கிடைக்கிறது.

அவர்கள் தம்மை அரசியல் ரீதியாக அடையாளப்படுத்த தவறவிடும்போது மலையகத் தமிழ் சமூகத்தின் விடுதலை தாமதமாகிறது என்பதே அர்த்தமாகும். அத்தகைய அக்கறை கொண்ட அமைப்புக்களை, தனிநபர்களை மாவட்ட எல்லைகள் கடந்து மலையக அரசியல் தளத்தில் ஒன்று சேர்ப்பது எமது அமைப்பின் பிரதான இலக்காகும்.

இந்த அமைப்பிற்கு மலையக அரசியல்வாதிகளால் எதிர்ப்புகள் வரகூடிய வாய்ப்புகள் உள்ளதா?

நான் மேலே கூறிய விடயங்கள் எந்தவொரு அரசியல் தரப்புக்கும் எதிரானது அல்ல. ஆனால் , மக்கள் சார்பானது, மக்களுக்கு அவசியமானது. எனவே இதனை யாரும் எதிர்க்கும் தேவை இருக்கும் என நான் நினைக்கவில்லை. மாறாக ஆதரவு தரலாம். அரங்கத்தில் வந்து தாராளமாக இணையலாம்.

தற்போது மலையகத்தில் உள்ள அரசியல்வாதிகளின் வாரிசுகள் எதிர்வரும் காலங்களில் அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன இது குறித்து தாங்களின் கருத்து என்ன?

‘வாரிசு அரசியல்’ மலையகத்துக்குப் புதியதல்ல. இலங்கையிலும், இந்தியா உள்ளிட்ட தென் ஆசிய பிராந்தியத்திலும் இந்த வாரிசு அரசியல் இருப்பதை எடுத்துக்காட்டி, வாரிசு அரசியலை தமக்கு சாதகமாக நியாயப்படுத்திக் கொள்ளும் போக்கு மலையகத்தில் காணப்படுவது துரதிஷ்ட்டவசமே. வாரிசு அரசியலுக்கு எதிராக பேசி மக்களிடம் வாக்குகளைச் சூறையாடியவர்களும் கூட இப்போது தமது வாரிசுகளைக் களத்தில் இறக்க முனைப்புக் காட்டுவது நகைப்புக்குரியது. அதே நேரம் அடுத்துவரும் ஐம்பது ஆண்டுகளுக்கான தலைவரை தமது கட்சிக்கு தேர்ந்து எடுத்துவிட்ட அரசியல் கட்சிகளையும் மலையகத்தில் காண்கிறோம். கட்சித்தலைமையில் அரைநூற்றாண்டு காலத்திற்கு மாற்றம் வராது எனத் தெரிந்த பின்னரும் மாற்று அரசியல் கலாசாரத்தையும் அரசியல் அமைப்புகளையும் கட்டியெழுப்ப மலையக இளந்தலைமுறையினர் சிந்திக்கத் தவறினால், கடந்த எண்பதாண்டு காலம் கண்ட அதே அவல நிலையை அடுத்த ஐம்பதாண்டு காலத்திற்கும் தொடரத் தயாராக வேண்டியதுதான்.

தற்பொழுது மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாளாந்தம்எதிர்நோக்குகின்ற பிரச்சினை தொடர்பில் உங்கள் மலையக அரசியல் அரங்க அமைப்பின் ஊடாக தீர்வினை பெற்றுகொள்ளும் வகையில் ஏதாவது வழிமுறைகள்உள்ளனவா?

மலையக அரசியல் அரங்கம் ஒரு தொழிற்சங்கம் அல்ல. தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் சந்தா வாங்கும் அமைப்பு அல்ல. எனவே அவர்களது நாளாந்த தொழில் பிரச்சினைகளை கையாள வேண்டியது அவர்களிடம் சந்தா வாங்கும் தொழிற்சங்கங்களின், அரசியல் கடசிகளின் கடப்பாடு ஆகும்.
அதே நேரம் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைசார்ந்த விடயங்களில் மலையக அரசியல் அரங்கம் நிச்சயம் பங்கேற்கும்.

எதிர்வரும் மாகாணசபை தேர்தலின் போது மலையக அரசியல் அரங்கம் என்ற அமைப்பின் ஊடாக தேர்தலில் களமிறக்கப்படுவார்களா?

அரசியல் ரீதியாக அமைப்பொன்றைத் தோற்றுவித்துவிட்டு தேர்தலில் பங்கேற்காதுவிட்டால், மன்றங்கள், விளையாட்டுக் கழகங்கள் போன்று செயற்பட்டுவிட்டுப் போகலாம். எனவே தேர்தல் ஒன்று வரும் போது அதற்குரிய வியூகத்தில் எமது அமைப்பினர் களம் இறங்குவார்கள்.அது கட்டாயமாக மலையக அரசியல் அரங்கம் என்ற பெயரில்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. வேறு கூட்டணி வடிவங்களையும் எடுக்கலாம். ஆனால், இப்போதைக்கு மாகாண சபை தேர்தல் அல்ல எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் மனநிலையில் அரசும் இல்லை மக்களும் இல்லை என்பதுதான் உண்மை நிலை. காலம் மிகப் பெரிய ஆசான். அது தீர்மானங்களை எடுக்கும் திசையை தீர்மானிக்க வல்லது.

தற்போதைய அரசாங்கத்தின் வரவுசெலுவு திட்டம் தொடர்பாக தாங்களின்கருத்து எவ்வாறு அமையும் என கூறுவீர்கலா?

ஐநூறு மில்லியன் நிதியில் மூன்று வருடத்தில் மலையகத்தில் எல்லா லயன்களையும் இல்லாமல் ஆக்கும் திட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். அவை குடும்பம். ஒன்றுக்கு பத்து பேர்ச்சஸ் நிலத்தைப் பெறுக்கொடுப்பதாயும் கூரைக்கு பதில் கொங்ரீட் தளமாக (ஸ்லப்) அமைந்து அடுத்த தலைமுறை வீடு கட்டும் ஏற்பாட்டையும் கொண்டிருக்கும் எனவும் எண்ணுகிறேன். அப்படித்தானே தேர்தல் அறிக்கைகள் கூறி இருந்தன.

மலையக அரசியல் அரங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?

2021 ஒக்டோபர் 30 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப்போது ஒரு மாதம் கடந்த நிலையில் இரண்டு செயற்குழு கூட்டத்தையும், ஒரு மெய்நிகர் உரை அரங்கத்தையும், ஒரு நாள் கருத்தரங்கையும், ஒரு ஊடகச்சந்திப்பையும், ஒரு மக்கள் சந்திப்பையும் நடாத்தி உள்ளோம். இதன்மூலம் வேறுபட்ட தளங்களில் எமது அரங்கம் விரிவாக்கம் பெற்றுள்ளது.

செயற்குழு கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராக நானும், செயலாளராக என்.கிருஷ்ணகுமாரும், பிரதான அமைப்பாளராக இராமன் செந்தூரனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவை தவிர மாவட்ட வாரியாக செயற்குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களுக்குச் செல்லும்போது அதன் விபரங்கள் தெரியவரும். மாதாந்த உரை நிகழ்வை மறைந்த மலையக அரசியல் தலைவர்களின் பெயரில் நினைவுப் பேருரையாக நிகழ்த்த உள்ளோம்.முதலாவது உரையை அரசியல் ஆய்வாளர் பி.ஏ.காதர் ‘இருநூற்றாண்டு கால மலையகமும் அதன் நூற்றாண்டு கால அரசியல் பிரதிநிதித்துவமும்’ எனும் தலைப்பில் மலையகத் தேச பிதா கோ.நடேசய்யர் நினைவுப் பேருரையாக ஆற்றினார். அதனை சிறுபிரசுரமாக வெளியிட்டு விநியோகிக்க உள்ளோம்.

அடுத்த உரை டிசம்பர் மாத இறுதி சனியன்று ‘தேர்தல் முறைமை மாற்றமும் மலையகப் பிரதிந்தித்துவத்தில் அதன் தாக்கமும்’ எனும் தலைப்பில் மலையக காந்தி கே.ராஜலிங்கம் நினைவுப் பேருரையாக இடம்பெறவுள்ளது. இவ்வாறு இருநூற்றாண்டு மலையக ஞாபகார்த்தமாக 24 உரைகளை நிகழ்த்தி அவற்றைப் பிரசுரமாக வெளியிட்டு விநியோகம் செய்ய உள்ளோம்.

மாதம் ஒரு மாவட்டம் என மலையக மாவட்டங்கள் தோறும் மக்கள் சந்திப்புகளை நடாத்தத் திட்டமிட்டு உள்ளோம். கொவிட் முடக்கம் வராதவிடத்து அதனை முறையாகச் செயற்படுத்த உள்ளோம். மாவட்ட ரீதியாக செயற்பட முன்வருவோரை இணைத்து அரங்கத்தை மலையக சமூக அரசியல் தளமாகக் கட்டி எழுப்பத் திட்டமிட்டுள்ளோம்.


மலையகத் தமிழர் : அர்த்தமுள்ள குடியுரிமையை நோக்கி

மயில்வாகனம் திலகராஜ்- மு.பா.உ

(இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரினரின் இலங்கைக் குடியுரிமை பறிக்கப்பட்ட நவம்பர் 15 ம் திகதியை நினைவு கூர்ந்து மலையக அரசியல் விழிப்புணர்வுக் கழகம் ஒழுங்கு செய்த உரையரங்கத்தில் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் ஆற்றிய உரையின் தொகுப்பு)

இலங்கை சுதந்திரமடைந்ததோடு பிரித்தானியர்கள் இலங்கையை விட்டு வெளியேற, யாரெல்லாம் இலங்கைப் பிரஜைகள் என தீர்மானிப்பதற்காக இலங்கையின்  முதலாவது நாடாளுமன்றம் '1948 ஆம் ஆண்டு 18 ஆம்இலக்க குடியுரிமைச் சட்டத்தை' நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட நிபந்தனைகளின் பிரகாரம் லட்சக்கணக்கான  இந்திய வம்சாவளியினர் இலங்கைக் குடியுரிமையை இழந்தனர்.

இதனை அடுத்து 1949 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில்  குடியுரிமை இல்லாதவர்கள் வாக்குரிமையை இழப்பார்கள் என்ற சர்த்துச் சேர்க்கப்பட்டதால் அதற்கு முந்தைய 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் வாக்களித்து 7 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தமது வாக்குரமையையும் இழந்தனர். இந்த இரண்டு சட்டங்களும் 'குடியுரிமைச் சட்டம்', 'பாராளுமன்றத் தேர்தல் சட்டம்' எனும் பெயர்களில் இந்திய வம்சாவளியினரின் 'பிரஜா உரிமையைப்' பறிப்பதற்கான சட்டங்களாகவே அதைந்தன என்பது தெளிவு.

இந்த இரண்டு சட்ட ஏற்பாடுகளின்போதும் மேல்தட்டு இந்தியர்களினதும் பாகிஸ்தானியர்களினதும்  ( இந்தியாவுடன் பாகிஸ்தான் சேர்ந்து இருந்த போது இலங்கை வந்தவர்கள்) பிரஜாவுரைமையும் பறிபோனதால் அவர்களுக்கு மீளவும் வழங்கும் வகையில், அதே 1949 ஆம் ஆண்டு 3 ஆம்இலக்க இந்திய - பாகிஸ்தான் பிரஜைகளுக்கான குடியுரிமைச்  சட்டத்தினைக் கொண்டுவந்து, அதன் ஊடாக விண்ணப்பித்து குடியுரிமையைப் பெறலாம் எனும் மாயையை உருவாக்கி,  இந்திய மேல்தட்டு வர்க்கத்துக்கும்   மீளவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் இந்திய வம்சாவளியினரில் தோட்டத் தொழிலாளர்களான பாட்டாளி வர்க்கத்தினரின் குடியுரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் இந்தியர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அங்கேயே திருப்பி அனுப்புதல் என முடிவுக்கு வந்தது இலங்கை அரசு.

இதன்படி 1954 ( நேரு - கொத்லாவல ), 1964 (சிறிமா - சாஸ்த்திரி ) 1974 (சிறிமா - இந்திராகாந்தி )  ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன்மூலம் இவர்கள் இலங்கையர்கள் இல்லை என்ற வாதமும் அவர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவது என்ற திட்டமும் நடைமுறைக்கு  வந்தது.  1983 ஆம் ஆண்டு கலவரங்களுடன் இலங்கை உள்நாட்டு யுத்தம் உக்கிரமடைய, ராமானுஜம் கப்பல் சேவை நிறுத்தப்பட்டதால் சிறிமா - சாஸ்த்திரி ஒப்பந்தத்துக்கு அமைவாக இந்தியா ( தாயகம் ) திரும்புதல் தடைபட்டது.

இலங்கையில் ஏற்பட்டிருந்த இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியாக  இந்திய மத்தியஸ்த்தத்துடன் பூட்டான் நாட்டின் தலைநகரமான ‘திம்பு’ வில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 'நாடற்ற தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்' எனும் தமிழர் தரப்பின்  கோரிக்கையின் பயனாக  ( மலையகத் தமிழர்களுக்கு என நேரடியாக குறித்துரைக்காதபோதும் ) '1986 ஆம் ஆண்டு ஐந்தாம் இலக்க நாடற்றவர்களுக்கான குடியுரிமை சட்டம்' நிறைவேற்றப்பட்டது.

இதுவரை, மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது எனும்  எண்ணத்திலேயே   இருந்த அரசு, இந்தச் சட்டத்தில் இந்த மக்கள் 'நாடற்றவர்கள்'  ( Stateless) எனும் அடையாளத்தை சுமத்தி, இலங்கைக் குடியுரிமை வழங்கியது. இதன் பின்னணியில் மலையகத்தையும் தளமாக இணைத்து இயங்கிய ஈரோஸ் அமைப்பின் கருத்து நிலையே காரணம் என்பது நன்றியுடன் நினைவுகூரப்படல் வேண்டும். இந்தச் சட்டத்தின் தொடர்ச்சியாக 1988 ஆம் ஆண் டு திருத்தம் ஒன்றை முன்வைத்து ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு  வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் அப்போதைய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு வேட்டைக்கு இவர்களின் வாக்குகள் அவசியமாக இருந்தது என்பதே உண்மையான காரணமாகும்.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த  இந்தியாவுக்கு திரும்பிச்செல்லல் பட்டியலில்  இந்திய கடவுச்சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டதால் இலங்கையிலேயே வாழ நேர்ந்த  91000 பேருக்கான குடியுரிமையை வழங்குவதற்காக  2003 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இந்திய வம்சாவளியினருக்கான குடியுரிமை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்போதும் இந்த மக்களை இந்திய வம்சாவளியினர் என அடையாளப்படுத்தவே இலங்கை அரசு முனைப்பு காட்டியுள்ளது.

இந்தச் சட்டத்திற்கான ஒரு திருத்தமாகவே 2009 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்கச்சட்டம் கொண்டுவரப்பட்டு,  நாடற்றவர் நிலையில் மலைநாட்டுப் பகுதியில் இருந்து வன்னி, கிளிநொச்சி  மாவட்டங்களுக்குக் குடியேறி,  அங்கிருந்து யுத்தம் காரணமாக அகதியாக தமிழ்நாட்டுக்குள் அகதிகளாகச்  சென்று சேர்ந்த  28459 பேருக்கு, இலங்கைத் திரும்பினால் இலங்கைக் குடியுரிமை வழங்கப்படும் என்ற ‘ஏற்பாடு’ செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் மலையகத் தமிழரின் குடியுரிமை சம்பந்தமான சட்டம் ஒன்றுக்கான தேவை எழவில்லை.

ஆனாலும்  1948 ல் பறிக்கப்பட்ட குடியுரிமை வெவேறு கட்டங்களில் வெவ்வேறு பெயரிலான வேறுபட்ட நோக்கங்களிலான சட்டங்களின் ஊடாக திரும்ப வழங்கப்பட்டதே தவிர,  இவர்களிடம் பறிக்கப்பட்ட குடியுரிமைக்காக மன்னிப்புக் கோரலுடன், உண்மையில் பிரஜாவுரிமையை வழங்க வேண்டும் உந்துதலுடன் உள்நோக்கத்துடன் எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை 1949 முதல் 2009 வரையான குடியுரிமையை மீள் வழங்கிய சட்டங்களின் பெயர்களைக் கொண்டே இதனை உறுதி செய்ய முடியும்.

எனவே 2009 என்பது ஏதோ ஒரு வகையில் தீர்க்கப்பட்ட மலையகத் தமிழர் குடியஉரிமைப் பிரச்சினை நிறைவுக்கு வந்த ஆண்டு எனலாம். அதேநேரம், இலங்கையில் இரண்டு தமிழ் தரப்புகள் ( இலங்கைத் தமிழர் - மலையகத் தமிழர்) மேற்கொண்டிருந்த நாட்டுரிமைக்கான போராட்டங்கள் முடிவுக்கு  வந்த ஆண்டு 2009 என்றும் கூறலாம். இந்தக் கட்டத்தில் இன்னுமொரு வரலாற்று வடிவையும் பதிவு செய்து செல்வது நல்லது.  இந்திய வம்சாவளி மலையகப் பெருந்தோட்டத் தமிழ் சமுதாயத்தினரை  இலங்கையின் உள்நாட்டவர்களாக இலங்கை  ஏற்றுக் கொள்வது இல்லை எனும் ஒரு நிலைப்பாடு குறித்த பிறிதொரு அம்சத்தையும் சுட்டிக் காட்டுவது பொருத்தமானது.

 

1). 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழு ஏற்பாட்டில் ‘சர்வஜன வாக்குரிமை’ இலங்கையின் ஏனைய இன மக்களைப் போலவே இந்திய வம்சாவளி மக்களுக்கும் கிடைத்த போதும் அது பிரித்தானியர்களின் ‘இலங்கையில்’ வழங்கப்பட்டதாக எண்ணிக்கொண்ட உள் நாட்டு சக்திகள், இந்த மக்களை உள்நாட்டு நிர்வாகத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது.
2). 1987 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டபோது அதற்கு உதவும் அடுத்த படிநிலையாக (Tier), அதுவரை நடைமுறையில் இருந்த கிராமசபை (கம்சபா) முறைமையை பிரதேச சபையாக மாற்றியமைக்க  தீர்மானம் எடுக்கப்பட்டே பிரதேச சபைகள் சட்டம் உருவாக்கப்பட்டது.

அதற்கு முன்பதான கிராமசபை (கம்சபா) முறைமைக்குள்  மலையகப் பெருந்தோட்டத்துறை மக்களை ஆரம்பத்தில் இருந்தே உள்வாங்கிக்கொள்ளாத  அதே நேரம் ‘கிராம சபை’ முறைமை மாற்றப்பட்டு, 1987 ஆம் ஆண்டு  பிரதேச சபைகள் முறையாக மாற்றப்பட்டுச்  சட்டம் இயற்றப்பட்டபோது அந்தச் சட்டத்திலேயும்  ( 33 வது பிரிவு ) தோட்டப் பகுதிகளுக்கு ‘பிரதேச சபைகள்’ சேவை வழங்க முடியாது என இருந்த கிராம சபை முறைமையில் இருந்த அந்த பாரபட்சம் அப்படியே எழுதப்பட்டது.

மாகாண சபைகள் மூலம் தமக்கு அதிகார பகிர்வைப் பெற்றுக் கொள்ள முனைந்த வடகிழக்கு தரப்பு,  மறுபக்கமாக மாற்றமுறும் கிராம சபை முறைமையில்  ஏற்கனவே உள்வாங்கப்பட்டிருக்காத  மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகத்தினருக்கு  பிரதேச சபைச் சட்டத்தில் இருந்தும் விலக்களிக்கப்படுகின்றது என்பதையும்  அதிகார பகிர்வில் அவர்கள் துண்டிக்கப்படுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவில்லை. ஒருபக்கம் 'மாகாண சபை மூலம்' தமக்கு அதிகாரப் பகிர்வை பெறும் அதே பொறிமுறைக்குள் சகோதர மலையகத் தமிழ் சமூகத்துக்கு 'பிரதேச சபையில்' கூட அதிகாரப் பகிர்வு மறுக்கப்படுகின்றது என்பது வடக்கு கிழக்கு தமிழர் தரப்பு கிஞ்சித்தும் கவனிக்கவில்லை. வடகிழக்குத் தரப்பு மாத்திரமல்ல,  அப்போது  அமைச்சுப்பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருந்த மலையகத் தலைமைகளும் வாளாவிருந்துள்ளன என்பது  மலையக அரசியலின் மிகமிக துரதிஷ்ட்டமான வரலாற்று வடுவாகும்.

இறுதியாக 2018 ஆம் ஆண்டே பிரதேச சபைகள் சட்டம் திருத்தப்பட்டு, தோட்டப் பகுதிக்கும் சேவையாற்றலாம் எனும் நிலைமை உருவாக்கப்பட்டது. சுருங்கச் சொன்னால் மலையகப் பெருந்தோட்டச் சமூகம் இலங்கையின் உள்நாட்டு நிர்வாகத்தில் அதிகாரம் பெற்ற ஆண்டு 2018 தான் என்பதுவே உண்மை.

இப்படியாக 1948 முதல் 2018 வரை வெவ்வேறு வடிவங்களில் பெற்றுக் கொள்ளப்பட்ட, பறிக்கப்பட்ட குடியுரிமையானது பல்வேறு காலகட்டங்களில் மீளக்கிடைக்க கிடைக்கப்பெற்றாலும் அவை அர்ததமுள்ள குடியுரிமையாக அல்லாமல் வாக்களிக்கும் உரிமையை மாத்திரம் வழங்கும் ஒரு பிரஜா உரிமை வடிவமாகவே வழங்கப்பட்டுள்ளது என்பதே இன்றைய மலையகத்தின் இக்கட்டான நிலைக்கு பிரதான காரணமாகும.

சுமார் நாற்பது வருடங்களாக நாடற்றவர்களாக வைக்கப்பட்டு இருந்தவர்கள் நாட்டின் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் தேசிய நிர்வாகப் பொறிமுறைக்குள் இன்னும் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. கிராமசேவகர் பிரிவுகள் முறையாக வழங்கப்படவில்லை. இன்னுமே கூட தனியா கம்பனிகளின் தோட்ட  நிர்வாகத்தால் அவர்களது சமூக நிர்வாகம் கட்டுப்படுத்தப்படுகின்றது.

காலம் தாழ்த்தி 'இலவசக் கல்வி' அவர்களுக்கு வழங்கப்பட்டாலும் பெருந்தோட்டப் பாடசாலை அலகு எனும் ஓர் அலகினால் பாரபட்சமாகவே அதன் நிர்வாகம் இன்றும்கூட மேற்கொள்ளப்படுகின்றது. அவர்கள் வாழும் பகுதிகளின் வீதிகள் ‘தோட்ட வீதிகள்’ என கணக்கிடப்பட்டு உள்நாட்டு நிர்வாக வீதி கட்டமைப்பில்  சேர்க்கப்படாமல் உள்ளது. ஆபத்தான முறைமையில்  பழைய லயன் குடியிருப்புகளுக்குமின்சாரம் வழங்கப்பட்டு அடிக்கடி அவை பற்றி தீபற்றி எரியும் ஆபத்தை எதிர் கொண்டு உள்ளன.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றாக தோட்ட சுகாதார முறைமை என ஒரு முறைமையின் கீழ் தேசிய சுகாதார முறைமைக்குள் உள்வாங்கப்படாத சமூகமாகவே வைக்கப்பட்டுள்ளனர். அதனை மாற்றுவதற்கான முழுமையான உத்தியோகபூர்வ அறிக்கை 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளபோதும் அதனை அடுத்து ஓர் அடியும் நகராமல் உள்ளது. இந்தச் சுகாதார முறைமை மாற்ற விடயம் உச்சகட்டமாக பாராளுமன்றிலும் குழு அறையிலும் பேசப்பட்டுவந்த 2015 - 2020 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார கொத்தணிகளை உருவாக்க்குவதற்கான தேசிய கொள்கை வகுப்பின்போது தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தில்,  "இந்த ஆரம்ப சுகாதார கொத்தணி முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் பெருந்தோட்டப்பகுதி யில் வாழும் குடிபெயர்ந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பமும் (Plantation ‘migrant Workers’ and their families) நன்மையடைவார்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே கொள்கை வகுப்பாளர்களின் பார்வையில் இன்னும் இலங்கையின் குடிமக்களாக அல்லாது குடிபெயர்ந்த (இந்தியாவில் இருந்து) வந்த தொழிலாளர் களாகவே (Migrant Workers ) தெரிகிறார்கள் என்பது இந்த மக்கள் இன்னும் இந்த நாட்டில் அர்த்தமுள்ள குடிமக்களாக மாற்றப்படவில்லை என்பதன் அடையாளத்துக்கான ஒரு சான்றாகும். இதனை மனதில் கொண்டு  2020 ஆண்டுக்குப் பின்னரும் நிவாரண அரசியலில்  தங்கியிருக்காது,  தமது 'அர்த்தமுள்ள குடியுரிமையைப்' ( Meaningful Citizenship) பெறுவதற்கான அரசியல் நகர்வை முன்கொண்டு செல்லவேண்டிய ஒரு யுகத்தை மலையக அரசியல் களம் வேண்டி நிற்கிறது.


தொ. தே. சங்கத்தையும் என்னையும் இணைத்து கதையாடல்கள் இடம்பெறுவது தவிர்க்க இயலாதது

 

- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ்

உரையாடல் : சாம்பசிவம் சதீஷ்குமார்.

கடந்த பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த நீங்கள் இப்போது அமைதியாக இருப்பதன் காரணம் என்ன?

நான் அமைதியாக இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்களாக வரப்பிரசாதம் பெற்றுக் கொண்டு சம்பளம் வாங்கிக் கொண்டு அங்கே செல்லாது இருப்பவர்களைவிட அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு சம்பிரதாய உரைகளை ஆற்றுபவர்களைவிட அதிகளவில் சமூகத்தளத்தில் பேசிக்கொண்டு இருக்கிறேன். அவை வெறும் வாய்ச் சவடால்களாகவோ அல்லது அவசரத்தில் ரயிலைப் பிடிக்க ஓடுவது போன்றோ அல்லாமல் நிதானமான ஆய்வுப் பதிவுகளாக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகத்தளத்திலும் உரையாடல் தளத்திலும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன. மலையக சமூகத்தின் அரசியல், சமூக, கல்விக், கலை கலாசாரம் பண்பாடு , பொருளாதாரம் சார்ந்த ஆய்வு ரீதியான எழுத்துக்களாகவும் உரைகளாகவும் அவை அமைகின்றன. நான் எப்போதும் போலவே மலையக விடயங்களில் இற்றைப்படுத்தலுடன் (Update )இருக்கிறேன்.

இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?

2006 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த எனது ஆலோசனை சேவை நிறுவனம் கடந்த ஐந்தாண்டு காலமாக அரசியல் பணிகள் காரணமாக செயற்படாமல் இருந்தது. அதனை மீண்டும் இயங்கச் செய்து பணி செய்து வருகிறேன். ஊடகங்களில் பல கட்டுரைகளை எழுதி வருகிறேன். கொவிட் சூழல் காரணமாக எழுந்திருக்கும் இணைய வழி கலந்துரையாடல்களில் வாரந்தோறும் ஒரு தளத்தில் பேசுகின்றேன். அவற்றில் சிலவற்றை நானே ஒழுங்கும் செய்கிறேன்.

தொழிலாளர் தேசிய சங்கத்தில் மீண்டும் இணையப் போவதாக செய்திகள் கசிகின்றனவே...

அது பற்றி நான் உங்கள் உதயசூரியன் பத்திரிகைக்கே இதற்கு முன்னர் தெளிவாக எனது நிலைப்பாட்டைத் தெரிவித்து உள்ளேன். பாய்ச்சல் காட்ட மாட்டேன் என. தொழிலாளர் தேசிய சங்கத்தின் இரண்டாம் எழுச்சி எனபது திலகர் இல்லாவிட்டால் நிகழ்ந்தே இருக்காது. எனவே என்னையும் சங்கத்தையும் இணைத்து கதையாடல்கள் இடம்பெறுவது தவிர்க்க இயலாதது. நான் இப்போது நாகரீகமாக அதில் இருந்து விலகி இருக்கும் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டு ஒதுங்கி இருக்கிறேன். அந்த நாகரீகம் கருதியே சங்கத்தில் உள்ள பலரும் என்னோடு உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் தோட்டக் கமிட்டி தலைவர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள், அமைப்பாளர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், உயர்பீட உத்தியோகத்தர்கள் என எல்லோரும் அடங்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் 5 முதல் பத்துப் பேர்வரையான ஒரு குழுவினர் மாத்திரமே என்னோடு நேரடியாக பேசுவதில்லை.

ஆனால், அவர்கள் சதா என்னைப் பற்றி சிந்தித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவருகிறது. அந்த உரையாடலில் கலந்து கொள்ளும் யாராயினும் ஒருவர் எனக்கு அதனை அறிவிக்கிறார். இது எப்படியோ நடந்து விடுகிறது. இது தவிர நானாக யாரிடமும் எந்த விசயத்துக்ககவும் பேசவும் இல்லை அணுகவும் இல்லை. அதற்கான எந்தத் தேவையும் இப்போது எழவில்லை.

அப்படியாயின் நீங்கள் மீளவும் வந்தால் சிலர் விலகுவதாக தலைமைக்கு அறிவித்து உள்ளதாக தகவல் வந்துள்ளதே...

அந்த ஒரு சிலரைத்தான் நான் முன்னர் குறிப்பிட்டேன். அவர்களை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் தங்களது எதிர்ப்பை தன் பெயர் கொண்டு வெளிப்படுத்த முடியாத கோழைகள். ஏனெனில், 'இப்படி ஒரு செய்தி வந்துள்ளது. நான் எதிர்ப்பு இல்லை' என பலர் எனக்கு அழைப்பு எடுத்துப் பேசினார்கள். அவர்களிடம் நான் சொன்னது, 'இப்படி என்னிடம் பேசுவதற்கே உங்களிடம் நேர்மை இருக்கிறது. அதனால் நீங்கள் நிச்சயம் அந்தப் பட்டியலில் இல்லை' என்பதுதான். அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் கடைசிவரை அவர்கள் பெயரை வெளியே சொல்லாமல் செய்திகளைக் கசியவிடும் கோழைகள்.

அந்தக் கோழைகளை தலைமைக்கே கூட அடையாளம் காண முடியாது. அத்தகைய கோழைகள் நிச்சயமாக தொழிலாளர் தேசிய சங்க நித்திய உறுப்பினர்களாக இருந்திருக்க மாட்டார்கள். உண்மையான தொழிலாளர் தேசிய சங்கப் பற்றுக் கொண்ட யாரும் எனக்கு எதிர்நிலையில் இருக்க மாட்டார்கள் என்பது எனது பூரண நம்பிக்கை. ஏனெனில் சங்கத்தின் வளர்ச்சியில் எனது பங்களிப்பை அவர்கள் அறிவார்கள். எப்போதும் சங்கம் உடைந்து செல்வதை நான் விரும்பியவனல்ல. அதனால்தான் நான் ஒதுங்கி வந்தபோதும் கூட ஒருவரையும் கூட அழைத்து வரவில்லை. பெருந்திரளாக விலகி வரவிருந்த பலரையும் நான் தடுத்து நிறுத்தினேன் என்பதை அங்கே மனசாட்சியுடையவர்கள் அறிவார்கள். இப்போது கூட சங்கம் உடைந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். ஏனெனில் அதனை மீளக்கட்டமைக்க பட்ட சிரமங்களை நானே அறிவேன்.

சங்கத்தில் நீங்கள் இல்லாத இடைவெளி உணரப்படுவதாக நீங்கள் அறிவீர்களா?

ஓராண்டு கடக்கும் நிலையிலும் நீங்கள் ஊடகவியலாளராக என்னோடு இது குறித்து உரையாடுவதே சங்கத்தில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியின் குறியீடு தானே.

மலையக அரசியலிலும் இந்த இடைவெளி தெரிகிறது என நான் கூறினால்...

நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன். உள்நாட்டில் , வெளிநாட்டில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு உரையாடும் பலர் இந்த இடைவெளி குறித்து என்னுடன் பேசுகிறார்கள். அது நிரப்பப்பட வேண்டியது என்பதையும் நான் உணராமல் இல்லை. இடைவெளி உணரப்படும்போதே எழுச்சி உண்டாகும். இந்த இடைவெளியை உணர்ந்து எழும் எழுச்சியே அடுத்த கட்ட அரசியல் செல்நெறியாக வேண்டும் என்பதில் நான் தெளிவாக உள்ளேன்..அதற்கேற்ப எனது உரையாடல் வெளியை மேற்கொண்டு வருகிறேன்.

உங்களது அடுத்தத் திட்டம் என்ன ?

அரசியலில் 5 வருடங்கள் என்பது ஒரு யுகத்திற்கு ஒப்பானது. கடந்த தேர்தலுக்குப் பின்னர் ஒரு ஆண்டு கூட இன்னும் கடந்து விடவில்லை. கடந்த ஆண்டு இந்த நேரம் தீவிர பிரச்சாரம் இடம்பெற்ற காலம். அப்போது என்பெயரைக் கூறி தமக்கு வாக்குக் கேட்டுக் கொண்டவர்களும் இந்த பாராளுமன்றில்தான் இருக்கிறார்கள். ஓராண்டு ஆவதற்குள் என்னென்ன நடந்துள்ளது என்பதை மக்கள் அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு எதிராக எந்தக் காலத்திலும் செயற்பட்டவனும் இல்லை. செயற்படப் போவதும் இல்லை. காலம் வரும்போது எனது வகிபாகம் என்ன என்பது தெரியவரும். நான் ஒப்புக்கு பாராளுமன்ற அமர்வுகளுக்குப் போவதுமில்லை, அங்கே ஒப்புக்குப் பேசுவதும் இல்லை. எனது உரைகளுக்கும், பணிகளுக்கும், மக்களுக்கும் ஒரு இடைத்தொடர்பு இருந்தது. மக்கள் ஒவ்வொருவரும் அதனைத் தமது குரலாக உணர்ந்தார்கள். ஏனெனில் எனது வார்த்தைகள் இதயத்தில் இருந்து வரும். உதட்டில் இருந்து வந்து உளறாது.

இறுதியாக பாராளுமன்ற உறுப்பினர் பழநி திகாம்பரம் எப்போது உங்களோடு பேசினார்? என்ன பேசினார் ?

ஆறுமுகன் தொண்டமான் இறந்து விட்டதாக தொலைபேசியில் எனக்கு கூறியது அவர்தான். அதற்கு அடுத்த நாள் பாராளுமன்ற முன்றலுக்கு ஆறுமுகன் தொண்டமானின் தேகம் கொண்டு வந்தபோது ஓரிரண்டு வார்த்தைகள். அதுதான் அவரும் நானும் பேசிக் கொண்டதும் சந்தித்துக் கொண்டதுமான கடைசி தருணம் என்பது எனக்குத் தெளிவாக நினைவில் உள்ளது.

நன்றி - உதயசூரியன் / 12.08.2021

'சமூக நீதி' கோரிக்கையாக மாற வேண்டிய நீதிக்கான கோஷங்கள்

மயில்வாகனம் திலகராஜா (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

கடந்த இரண்டு வாரங்களும் மலையகத்தில் மட்டுமல்லாது மலையகத்துக்கு வெளியேயும் இலங்கையில் 'நீதி' கோரிய கோஷங்கள் எழுந்திருந்தன. அந்த கோஷத்தை முன்னிறுத்தச் செய்தது ஒரு சிறுமியின் உயிர். அந்த சிறுமியின் துர்பாக்கிய நிலை மரணத்துக்கு நீதி வேண்டிய கோஷங்களுக்கு மத்தியில் 'அரசியல்' நிகழ்ச்சி நிரல்களும் தம்மைப் பிணைத்துக்கொண்டன என்பது வெளிப்படை. ஆனால், அதனையும் தாண்டிய சமூக 'உணர்ச்சி' நிலை மலையகத்தில் ஆத்மார்த்தமாக மேம்பட்டு நின்றது.

மலையகத்தில் மக்களால் முன்வைக்கப்பட்ட 'நீதி வேண்டும்' கோஷம், அரசியல் - பணபலங்களைக் கொண்டு மறைக்கப்பட்டிருக்கக்கூடிய மரணத்தை நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்தி இருக்கிறது. சம்பவம் நடந்து பத்து நாட்களாக உயிருக்குப் போராடிய குழந்தையை வைத்தியசாலைக்குச் சென்று பார்க்கத் துணியாத, அப்போது விசாரணையைத் துரிதப்படுத்துங்கள் என காவல் துறையைத் தூண்டத் துணியாத, மரணத்துக்குப் பின் நீதி கேட்டாலும் அதற்காக பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பாக சட்டத்தரணிகளை நியமிக்காத மலையக அரசியல் பிரதிநிதிகள் மத்தியில் அந்த சிறுமிக்காக தன்னார்வமாக முன்வந்து மன்னறில் ஆஜரான மலையக சட்டத்தரணிகள், இந்த வழக்கிற்கு வெளியே ஒன்றை ஆழமாக உணர்த்தி நிற்கிறார்கள்.

அது மலையகம் எனும் 'உணர்வு'. உணர்ச்சி நிலையில் ஓங்கி நிற்கும் சமூகத்தை உணர்வுநிலையில் புரிந்து கொண்டு செயற்படும் தலைமைக்கான வெற்றிடம் தாராளமாகவே வெளிப்பட்ட தருணம் இது.

இந்தப் பிரச்சினைகளின் பின்னணிகளை நீதிமன்றம் ஆராய்வதற்கு முன்னமே தீர்ப்பெழுதிய தனிநபர்கள், நிறுவனங்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு, பிரச்சினைக்கு பின்னணியாக இருந்திருக்கக் கூடியதான காரணங்களைக் கண்டறிவதும் அவற்றுக்கான தீர்வைத் தேடுவதன் ஊடாக இது போன்றதோர் இன்னுமொரு அவலமும், மரணமும் மலையகத்தில் நேராதிருப்பது எவ்வாறு என சிந்திப்பதே சமூகத்தின் பொறுப்பாகிறது.

ஒட்டு மொத்த இலங்கையுமே சிறுவர் தொழிலாளர்களை அனுமதித்துக் கொண்டிருப்பதாக பல புள்ளிவிபரங்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக வெளி வந்து கொண்டிருக்கிறது. அவற்றை இங்கே அலசி ஆராயாவிட்டாலும் அந்த புள்ளி விபரங்கள் சொல்லும் தகவல் முக்கியமானது.
மலையகத்தில் மட்டுமல்ல மலையகத்துக்கு வெளியேயும் இலங்கையில் இத்தகைய பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது அந்தச் செய்தி.

மலையகத்தில், இப்போது நடந்திருப்பதுதான் முதலாவது சம்பவமும் அல்ல. இதற்கு முன்னர் நடந்தபோது 'நீதி வேண்டும்' கோஷங்கள் மலையகத்தில் எழும்பாமலும் இல்லை. இப்போது மலையகம் நிற்கும் புள்ளியும் அப்போது நின்ற புள்ளியும் ஒன்று தான். இது மலையகம் நிற்க வேண்டிய புள்ளியல்ல, அசைய வேண்டிய புள்ளி என்ற நிலையில் இருந்து விடயங்களை அலசி ஆராய வேண்டியது சமூகக் கடமையாகிறது.

இவ்வாறு சிறுவர்கள், பெண்கள் வீட்டு வேலைக்குச் செல்லும் நிலை ஏன் உருவாகிறது என்பதற்கு பொதுவானதும் உண்மையானதுமான ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அது வறுமை. மலையகப் பெருந்மோட்டப் பகுதிகளில் வறுமை நிலவுகிறது என்பதற்கான குறிகாட்டியாக சிறுமியின் மரணம் இருந்துவிட முடியாது. இலங்கைத் தொகை மதிப்பு புள்ளிவிபரத்திணைக்களம், மத்தியவங்கி அறிக்கைகள் தமது விபரப்பட்டியலை துறைசார்ந்து மூன்றாக வகுத்துக்கொண்டுள்ளன. அவை நகரம் (Urban), கிராமம் (Rural), தோட்டம் (Estate) என்பதாகும்.

இதில் பொருளாதார பிரதிகள் தோட்டத்துறையில் உயர்வான பதிவுகளைச் செய்ய சமூகக் குறிகாட்டிகள் மோசமான பிரதிகளைச் சுட்டிக்காட்டுவதனை அவதானித்தல் வேண்டும். நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் சுதந்திரத்துக்கு முன்பு இருந்த காலம் தொட்டே உயர்வான பதிவுகளைக் காட்டிவரும் தோட்டத்துறை தேயிலை ஏற்றுமதி இன்றுவரை கணிசமான பெறுமதியைக் கொண்டே காணப்படுகிறது. இலங்கைத் தேயிலை ஏற்றுமதி 2021 இல் 650 மில்லியன் அமெரிக்க டொலர் என பதிவாவதுடன், இலங்கையின் விவசாய ஏற்றுமதிப் பொருட்களில் 52வீதத்துக்கும் அதிகமாக தேயிலையே இடம்பெறுகிறது. இவை சிறுதோட்டம், பெருந்தோட்டம் இரண்டும் கலந்த ஏற்றுமதிப் பெறுமதிதான் என்றாலும் இலங்கையில் இன்று சிறுதோட்டங்களாக பகிரந்தளிக்கப்பட்டவையும் பெருந்தோட்டங்களாக இருந்தவையே. அதுவும் இந்த இருநூறு வருடகால வரலாற்றின் பகுதிதான்.

இலங்கைக்கு இலவசக்கல்வி, இலவச சுகாதாரம், ரயில்போக்குவரத்து, பாதை வலையமைப்பு, வங்கிக் காப்புறுதி துறை அபிவிருத்தி வலைபின்னல், உட்கட்டுமான அபிவிருத்தி என காலனித்துவ காலத்தில் இருந்தே அதற்கான அடிப்படையைக் கொடுத்தது பெருந்தோட்டத் துறையே என்பதனை யாராலும் மறுக்க முடியாது. விவசாயத்துறை தொழிற்படையில் 62.6 வீதம் தோட்டத்துறை உழைப்பாளர்களே உள்ளனர் என்றும் பதிவாகிறது.

இந்த தொழிற்படையின் இருநூறு வருடகால உழைப்புக்கு மாற்றீடாக பெருந்தோட்டத் துறை உழைப்பாளர் சமூகத்துக்கு இலங்கை வழங்கியுள்ள பரிசு வறுமையில் உயர் இடத்தில் இருக்கிறார்கள் என்பதே. தலைக்கான வறுமைச் சுட்டி எனும் தரவுகளில் நகரத்துறை 1.9 ஆகவும் கிராமத்தில் 4.3 ஆகவும் உள்ள தகவல்கள் தோட்டத்துறையில் 8.8 புள்ளியாக அமைந்து தோட்டத்துறையில் வறுமை உச்சம் என காட்டி நிற்கிறது. எனவே தோட்டத்துறை என்பதை பொருளாதார 'செழுமையும்' சமூக 'வறுமையும்' கொண்ட துறையாக பேணுவதில் இலங்கை அரசு இருநூறு வருட காலத்தில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.

இந்த பின்னணியில், சிறுமியின் மரணத்தில் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜராக்கியபோது சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக ஆஜரான பிரதி மன்றாடிகள் நாயகம் கூறியுள்ள விடயம் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. 'பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வீட்டு வேலைக்கு சிறுவர்களைக் கொண்டுவருவது ஒரு ஆட்கடத்தல் வியாபாரம் போலவே நடைபெற்று வருகிறது'.

இந்தக் கூற்று யாரால் யாருக்குச் சொல்லப்பட்டது என்பது வரலாற்று முக்கித்துவத்துமிக்கது. இலங்கையின் சட்ட வழிகாட்டலுக்கு பொறுப்பான சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு மலையகச் சிறுவர்கள் ஆள்கடத்தல் முறையில் தலை நகருக்கு அழைத்து வருவது தெளிவாகத் தெரிந்தும் அதனைத் தடுப்பதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்காமலேயே இருந்து வருகிறது என தெளிவான பொருள் கொள்ளலாம்.

இப்படி அரசின்பக்கம் கவனிப்பாரற்ற சமூகமாக மலையகத் தோட்ட சமூகம் காலங்காலமாக இருந்துவரும் நிலையில், இந்த மக்களுக்காக முன்வைக்கப்படும் அரசியல் நிலைப்பாடு தோட்டத் தொழிலாளர்களுக்கு வெளியே தனது கவனத்தை பெரிதாக திருப்பாத நிலையிலேயே இயங்கி வந்துள்ளது.

தொழிற்சங்க அங்கத்தவர்களின் பலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் அரசியலாகவே அந்தக் கட்டமைப்பு இயங்கி வந்த நிலையில் அந்தத் தொழிற்சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனையோடு அரசியல் கட்சியைக் கட்டமைப்பதில் தாமதித்தே வந்துள்ளது.

1992 ஆம் ஆண்டுக்குப்பின்னரான தோட்டத் தொழில் கட்டமைப்பு மாறி வந்துள்ள நிலையில் அப்போதிருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆறு லட்சமாக இருந்து 2020 ஆம் ஆண்டு ஆகும் போது ஒரு லட்சம் எனும் அளவுக்கு குறைந்துள்ளது. ஆனாலும் பெருந்தோட்ட நிறுவனங்களும் கட்டமைப்பும் அவ்வாறே செயற்பட்டு வருகின்றன. அப்படியாயின் அந்த தொழிற்படையில் சேரந்திருக்க வேண்டிய தோட்ட சமூகப்பிரிவினர் ஆண்டுக்கு சராசரியாக 15,000 வீதம் வேறு துறைகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அடுத்த தலைமுறையினர் தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை என வாதிட்டாலும் அந்த வாதம் சரி என்றாலும் கூட அவ்வாறு தோட்டத் தொழிலில் இணையாத அல்லது இணைய வாய்ப்பு வழங்கப்படாத எல்லோரும் கல்வித்துறையில் சாதித்தவர்களாக உயர் தொழிலுக்கு சென்றவர்கள் இல்லை. அதன் வீதாசாரம் குறைவானது. அவர்களில் முறைசாராத தொழில்களுக்கு சென்றவர்களின் எண்ணிக்கையே அதிகம். இந்த காலப்பகுதியில்தான் வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைப் பணிகளுக்கும், தலைநகர் கொழும்பில் வீட்டு வேலைப் பணிகளுக்கும் என பெண்கள் படை எடுக்கலாயினர். அதேபோல கடைச்சிப்பந்திகளாகவும் (இந்தத் துறையில் ஏற்கனவே ஒரு நாட்டம் மலையக இளைஞர்களிடையே இருந்துவந்தது) இன்னோரன்ன உடல் உழைப்பாளர்களாகவும் மலையக இளைஞர்கள் வெளியேறத் தொடங்கினர்.

இவர்கள் தமது பெற்றோருடன் தொடர்ந்தும் வாழ வகையற்றவர்களாக வீடுகளில் இருந்து வெளியேற நேர்ந்தது. சிறுக சிறுக ஆரம்பித்த இந்த முறைசாரா துறையில் ( informal sector) தொழில் செய்வோர் முறைசார் தோட்டத்துறையில் (formal Estate sector) தொழில் செய்வோர் எண்ணிக்கையை விட அதிகமாகும். அந்த அதிமான தொகையை ஒரு மதிப்பீட்டின் மூலம் ஊகிக்கலாமே தவிர அதன் சரியான தரவுகளைப் பெற்றுக்கொள்ள எந்த ஒரு பொறிமுறையும் இல்லை.

அதனால்தான் கொரொனா பரவல் தொடங்கியதும் 7000 பேர் லொறிகளில் ஏறி மலையகத்துக்கு வந்துவிட்டனர் என அரசியல் பிரதிநிதிகளால் கற்பனை கணக்கு காட்ட முடிந்தது அல்லது ஒட்டுமொத்த மலையக சனத்தொகையில் ஒரு லட்சமே தொழிலாளர்கள் ஏனையோர் தொழிலாளர்கள் இல்லை என வாய்ச்சவடால் விட முடிந்தது.

அந்த மிச்சம் பேர் என்ன செய்கின்றனர் என அறிய முடியாத கட்சிக் கட்டமைப்பைக் கொண்ட தலைவர்களால் அந்த வகுதியில் ஒருவராக இவ்வாறு அவலமாக இறந்துபோன சிறுமிகளுக்காக நியாயமான விசாரணையைக் கோர முடியுமே தவிர நல்வாழ்வுக்கான திட்டங்களைத் தீட்ட முடியாது. தரகர்களை கண்டால் தாக்கச் சொல்ல முடியுமே தவிர, அதனால் வரக்கூடிய விளைவுகளை உணரமுடியாது.

தரகர்கள் உருவாகாமல் இருக்க வழி சொல்லவும் தெரியாது. வீதியில் இறங்கிப் போராடுவதற்கு மக்களே தலைவர்களுக்கு வழிகாட்டுகின்றனர் என்பதனை நன்கு அவதானித்தால் புரியும். மாறாக மக்களுக்கு வழிகாட்டும் தலைமைக்காக மலையகத் தமிழ் மக்கள் காத்திருக்கும் நிலையே உள்ளது. மலையகத்துக்கு வெளியே வந்த 'நீதி வேண்டும்' கோஷங்கள் எல்லாமே மலையக சமூகம் மீதான அக்கறையில் வந்ததில்லை என்ற கசப்பான உண்மையை உணர்ந்தவர்களாக மலையகத்துக்கு வெளியேயான நேச சக்திகளை சரியாக அடையாளம் காணுதலும் அத்தகைய தலைமையின் தகைமைகளில் ஒன்றாயிருத்தல் வேண்டும்.

இந்த நிலையிலேயே இறந்துபோன சிறுமிக்காக 'நீதி வேண்டும்' கோஷம் எழுப்பும் மலையகத்தின் இளைய தலைமுறையினர் 'சமூக நீதிக்கான கோரிக்கையாக' அதனை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை இலக்கு வைத்து செயற்படுபவர்களாக மாற வேண்டிய காலம் எழுந்துள்ளது.

சிறுமியின் அவல மரணத்துக்கு வறுமைதான் காரணமெனில் அந்த வறுமையை சரியாக அடையாளம் கண்டு அதற்கு தீர்வு தேடும் அரசியல் தலைமைத்துவத்தின் அவசியம் குறித்து சிந்தித்தல் வேண்டும். மலையகத்தில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமை எல்லையைக் கடந்தும் தோட்ட எல்லையைக் கடந்தும் வெளியேறிவிட்டனர். அவர்களின் எண்ணிக்கை சுமார் லட்சம் அளவினைக் கொண்டது. மலையகத் தோட்டப் பகுதியில் வாழ்வோர் எண்ணிக்கை 9 இலட்சம் அளவாக உள்ளது.

அவர்களுள் வறுமையின் எல்லையைக் கடந்து வெளியேறுவோர் 10 சதவீதமாகவும் வறுமைக்கு மத்தியிலும் போராடி முன்நகர்வோர் 30 சதவீமாகவும் வறுமை நிலையில் சமாளித்து வாழ்க்கை நடாத்துவோர் 40 சதவீதமாகவும் உள்ளநிலையில் வறுமையில் இருந்து மீளமுடியாத நிலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டோர் வீதம் 10 சதவீதம் மாத்திரமே (இது ஒரு தோட்டப்பிரிவு மட்டத்தில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு பொதுவாக பொருந்திவரக்கூடிய முடிவும் கூட).

ஆனால், இந்த பத்து சதவீத பகுதியையே ஒட்டமொத்த மலையகத் தோட்டத் துறைச் சமூகமாக சித்திரிக்கப்படுகிறது. இந்த பத்து சதவீத்தில் இருந்தே சிறுவர் தொழிலாளர்களும், முதியோர் தொழிலாளர்களும், என இக்கட்டான தொழில்களுக்குச் செல்லத் தள்ளப்படுகின்றனர்.

அவர்களை அடையாளம் காணவும் உதவிகள் செய்யவும் ஒரு பொறிமுறை தேவை அவ்வளவுதான். இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இன்றைய 'நீதி வேண்டும்' கோஷம் ஒரே ஒரு சிறுமிக்காக எழுந்ததாக இருந்துவிடக் கூடாது. இதுபோன்ற இன்னுமொரு சிறுமிக்கு நேர்ந்துவிடாத 'சமூக நீதிக்கான' அரசியல் களம் குறித்த சிந்தனையும் செயற்பாடுகளுமே மலையகத்தின் அடுத்த கட்ட அரசியலாதல் வேண்டும். அதனை முன்னெடுக்கும் பாரிய பொறுப்பினை மலையக இளையத் தலைமுறையினர் தமது தலையில் சுமக்கத் தயாராதல் வேண்டும்.


மலையக சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் விசேடமாக உறுதி செய்யப்படல் வேண்டும்:

- தேர்தல் மறுசீரமைப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கோரிக்கை

இலங்கை சுதந்திரம் அடைந்த போது குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்ட 1948 ஆம் ஆண்டிலேயே ஏழு பாராளுமன்ற உறுப்புரிமையை கொண்டிருந்த மலையக தமிழர் சமூகம் 1980 க்குப் பின்னர் தமக்கு மீளவும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி விகிதாசார பிரதிநிதித்துவத்தை தொடர்ச்சியாக தக்க வைத்து கொண்டுள்ளது. அது உரிய எண்ணிக்கை அல்லாத போதும் இயலுமான எண்ணிக்கையை எல்லா தேர்தல்களிலும் பாராளுமன்றம், மாகாண சபை , உள்ளூராட்சி சபைகளில் பிரதிநிதித்துவம் இடம்பெற்று வந்தது. இந்த நிலைமையில் தேர்தல் முறைமை மாற்றம் பெறுமானால் மலையக சமூகம் மீண்டும் 1948 - 1977 காலப்பகுதிக்கு செல்ல நேரிடும் அச்சம் மலையக மக்கள் மத்தியில் நிலவுகிறது.

நாடு தவிர்க்க முடியாத வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் இருந்து கலப்பு முறைக்கு செல்லும் நிலை வந்தால் , ஆக குறைந்தது தற்போதைய அரசியல் பிரதிநிதித்துவ எண்ணிக்கையில் குறைவு ஏற்படுத்தாத முறைமை குறித்து குழு கவனம் செலுத்துதல் வேண்டும். மலையக மக்கள் மீண்டும் அரசியல் உரிமை இழக்கும்

நிலையை உருவாக்க முடியாமல் குடியுரிமை பறிப்பு தவறை ஏற்று அதற்கு பொறுப்பு கூறும் வகையில் சிறு தேர்தல் தொகுதிகளை பாராளுமன்ற தேர்தலுக்காக உருவாக்கி மலையக சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் விசேடமாக உறுதி செய்யப்படல் வேண்டும் எனவும் கருத்து பதிவு செய்யப்பட்டது.

இலங்கையில் தேர்தல் முறைமை மறுசீரமைப்பு நோக்கத்தில் பாராளுமன்றத்தில் தெரிவுக் குழு அமைக்கப்பட்டு பொதுமக்களிடத்தில் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ள நிலையில் அந்தக் குழுவுக்கு மலையகம் தழுவிய முன்மொழிவுகள் பலவற்றை பல்வேறு தரப்பினரும் பல எண்ணிக்கையில் அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், தூய அரசியல் கலாசாரத்தை கட்டி எழுப்புவதற்கான மார்ச் 12 தேசிய இயக்கத்துடன் இணைந்து நடாத்திய இணைய வழிகலந்துரையாடலிலேயே மேற்படி விடயம் பதிவு செய்யப்பட்டது.

நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை, மொனராகலை, குருநாகல் உள்ளிட்ட பெருதோட்ட மாவட்டங்களும் கொழும்பு, கம்பஹா,வன்னி என பெருந்தோட்டம் சாராத மாவட்டங்களிலும் என பரந்து விரிந்து வாழும் மலையகத் தமிழ் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் முன்மொழிவை தயார் செய்யும் நோக்கோடு இந்த நிகழ்வு ஒழுங்கு செய்ப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தொடக்கவுரையில் தெரிவித்தார்.

அவ்வாறே அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சிவில் சமூக பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தமது கருத்துகளை முன்வைத்தனர். பிரதான உரையை மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளரும் அரசியல் ஆய்வாளருமான அ. லோரன்ஸ் வழங்கினார். பவரல் அமைப்பின் சார்பில் அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சார்பில் மஞ்சுளா கஜநாயக்க, ட்ரான்ஸ்பெரன்ஷி, இன்ரநெஷனல் நிறுவனம் சார்பில் கௌரீஸ்வரன் கலாநிதி ஜெஹான் பெரேரா ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

தமது முன் மொழிவுகளில் மலையக மக்களின் அபிலாஷைகளையும் உள்ளடக்குவதற்கு உறுதி தெரிவித்தனர்.

 


ஆயிரமும் அதற்கு பின்னான பிரச்சினைகளும்:

மலையகப் பெருந்தோட்டங்களை முன்நிறுத்திய பார்வை

- மல்லியப்புசந்தி திலகர்

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சமகால (2015-2020) கோரிக்கையாகக் காட்டப்பட்டுவந்த 1000/- அடிப்படை நாட்சம்பள கோரிக்கை தற்போது நிறைவுக்கு வந்ததான தோற்றப்பாடு எழுந்துள்ளது. அதாவது அரசாங்கம் சம்பள நிர்ணய முறைமையினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக (900 அடிப்படையும் 100 நாளாந்த மேலதிக கொடுப்பனவும்) வழங்கவேண்டும் என பெருந்தோட்ட கம்பனிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

எனினும் இந்த 1000 ரூபா நாளாந்த வேதனத்தைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இணக்கம் தெரிவித்த பெருந்தோட்ட கம்பனிகள் பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

1. 1992 தனியார்மயமாக்கலுக்கு பின்னதாக 1998 முதல் நடைமுறையில் இருந்து வந்த கூட்டு ஒப்பந்த நடைமுறையில் இருந்து விலகிக் கொள்ளுதல்

2. சம்பளநிர்ணய முறைமை ஏற்புடையதல்ல என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருத்தல் (வழக்கு நீதிமன்றத்தில் தொடர்கிறது)

3. தோட்டத் தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 20 கிலோ தேயிலை கட்டாயம் பறிக்க வேண்டும் எனும் நிபந்தனையின் அடிப்படையில் வேலை வழங்க முன்வருதல்

4. மாதம் ஒன்றுக்கு 13 நாட்கள் மாத்திரம் வேலை வழங்குதல்

இந்த நடவடிக்கைகள் காரணமாக தோட்டத் தொழிலாளர்களிடையே சுமார் ஐந்தாண்டு கால கோரிக்கையாக இருந்த ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிக்கை மாற்று வடிவம் எடுத்திருக்கிறது என்பதனை அவதானிக்க முடிகிறது. அதுதான் நாள் ஒன்றுக்கு 20 கிலோகிராம் கொழுந்து பறிக்க வேண்டும் எனும் நிபந்தனையை ஏற்க மறுத்தும் மாதமொன்றுக்கு 13 நாள் வேலை மட்டுமே வழங்கப்படுவதை எதிர்த்தும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தப்போராட்டம் ஆயிரம் ரூபா போராட்டம் போல வீரியம் பெறுவற்கு தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத மலையகம் மற்றும் மலையகம் சாசரா சமூகங்களின் தரப்பில் இருந்தும் தோழமை குரல்கள் எழும்புதல் வேண்டும். இப்போதைக்கு அப்படியான குரல்கள் குறைவாகவே எழும்புவதனையும் அவதானிக்க முடிகின்றது.

அதற்கான காரணம்,

1. கொவிட் 19 நோய்ப்பரவல் சூழல் 2021 ஏப்பிரல், மே மாதங்களில் உயர்வான அளவில் பரவலடைகின்றமை.

2. சும்பள நிர்ணய முறை தீர்மானங்கள், 20 கிலோ விவகாரம் 13 நாள் வேலை தொடர்பில் இன்னும் பரவலாக வெளி உலகம் அறியாமை.

ஆயிரம் ரூபா பிரச்சினை தீர்ந்துவிட்டது என்ற அடிப்படையில் அரசாங்கமும் அதனோடு இணைந்திருக்கும் பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிற்சங்கங்களும் (அரசியல் கட்சிகளும்) அறிக்கைகளை வெளியிட்டாலும் அந்தப்பிரச்சினை வடிவம் மாற்றம் அடைந்து மீண்டும் உருவெடுக்கிறது என்பதே உண்மையாகும்.

இந்த உண்மையை அரசாங்கம் விளங்கிக்கொள்ளத் தலைப்படாது. விளங்கியும் விளங்காததும்போல இருக்கும். ஏனெனில் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட பிரச்சினையும் அவர்கள் உறுதியளித்த விடயமும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பது என்பதுதான்.

இப்போது அதனை நிறைவேற்றியதாக பாசாங்கு செய்து சர்வதேச தொழிலாளர் தினத்தில் அரசாங்கம் தனது வெற்றிப்பட்டியலிலும் சேர்த்துக்கொண்டுள்ளது. அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடுகளை நன்றி தெரிவித்து அங்கீகரிக்க வேண்டிய அரச ஆதரவு அரசியல் தொழிற்சங்க அமைப்புகள், எழுகின்ற 20 கிலோ , 13 நாள் வேலை போன்றவற்றை புதுப்பிரச்சினையாக கையாள்வதற்கே எத்தனிக்கிறது.

ஆனால், உண்மை என்னவெனில் ஆயிரம் ரூபா பிரச்சினை வடிவம் மாறி தொடர்கிறது என்பதைப் புரிந்து கொள்வதேயாகும்.

அது எவ்வாறு நிகழ்ந்துள்ளது எனில்,

1. சம்பள நிர்ணய சபையின் ஊடாக ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க அரசாங்கம் கம்பனிகள் மீது அழுத்தத்தை பிரயோகித்ததுடன் அவை ஏற்றுக்கொண்டன.

2. அதே நேரம் அரசாங்கத்தினால் சம்பள நிர்ணய சபையின் ஊடாக அழுத்தம் கொடுக்க முடியாத விடயங்களை தமக்கு சாதகமாக அமைத்துக்கொண்டன.

கம்பனிகளுக்கு சாதகமான அத்தகைய விடயங்களாக பின்வருவன அமைகின்றன

1. மாதத்தில் நாள் ஒன்றுக்கு வழங்கும் நாள் சம்பளத்தை 1000 ஆக வழங்க வேண்டும் என சம்பள நிர்ணய சபை தீர்மானித்தாலும் மாதம் ஒன்றுக்கு குறித்த நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும் என எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எனவே கூட்டு ஒப்பந்த நடைமுறையில் 25 வேலை நாட்கள் குறைந்த பட்சம் மாதத்தில் வழங்க வேண்டும் (வருடத்தில் 300 வேலை நாட்கள் வழங்கப்படல் வேண்டும் என கூட்டு ஒப்பந்தத்தில் குறப்பிடப்பட்டிருந்ததது. அதன்படி கம்பனிகள் நடைமுறையில் செயற்படாவிட்டாலும் ஒரு ஒப்பந்த கடப்பாடு இருந்தது) என்ற நிபந்தனையை மீறி கம்பனிகளால் செயற்பட முடிகிறது. இதனால் ஒரு தொழிலாளியின் சம்பளத்திற்காக செலவிடப்படும் மொத்தத் தொகையை மாற்றாமல் சம்பள நிர்ணய சபையின் உத்தரவையும் நிறைவேற்ற முடிகிறது.

நாட்சம்பளம் 750 ரூபாவாக இருந்தபோது 25 நாட்கள் வேலை செய்த ஒரு தொழிலாளிக்கு மாதம் (25x750) 18750 ரூபா செலவிட்டு இருக்கும். அதே 18750 ரூபாவையே குறித்த தொழிலாளிக்கு செலவிட நாள் ஒன்றின் சம்பளத்தை ஆயிரம் ஆக்குகின்றபோது வேலை நாட்களை 19 நாட்களாக குறைத்தால் கம்பனிக்கு சம்பள நிர்ணய சபை அழுத்தத்தால் எந்த விதமான பொருளாதார தாக்கமும் ஏற்படப்போவதில்லை.

ஆனால், 750 ரூபா சம்பளம் அடிப்படைச் சம்பளம் வழங்கிய காலத்தில் 700/- அடிப்படைக்கு ஊழியர் சேமலாப நிதியாக 12 வீதமும் ஊழியர் நம்பிக்கை நிதியாக 3 வீதமும் செலுத்த 105 ரூபாவை மாதாந்தம் தனது கையில் கம்பனிகள் செலுத்த வேண்டி இருந்ததது. எனவே குறித்த தொழிலாளி 25 நாள் வேலை செய்திருந்தால் கம்பனி 2625 ரூபா செலுத்த வேண்டும்.

இப்போது 25 நாட்கள் வேலைக்கு 1000 ரூபாவுக்கு (900+100 இரண்டுக்குமாக ஊழியர் சேமலாப நிதி கணக்கிடப்படும் என சம்பள நிர்ணய சபையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது) 3750 ரூபா செலவிடல் வேண்டும். இங்கே ஏற்படும் மேலதிக செலவினைக் குறைத்துக் கொள்ள மேலதிகமாக வேலை வழங்கும் நாட்களைக் கம்பனிகளை குறைத்துக்கொள்கிறது.

முன்பு 25 நாட்கள் என இருந்தாலும் 75 வீத நாட்கள் வேலைக்கு சமூகமளித்தால் வரவுக்கொடுப்பனவு ஒன்று வழங்கும் நடைமுறை இருந்தபோது அதனைப் பூர்த்தி செய்யும் நோக்கில் 19 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில் தொடர்ச்சியாகாவும் 19 நாட்கள் குறைந்த பட்சம் வேலை வழங்கப்பட்டு வந்ததது. இப்போது அந்த அவசியம் இல்லை . ஆகையால், இப்போது 19 நாட்கள் வேலைக்கான மாதாந்த சம்பளத்தொகையை தற்போதைய சம்பளத்தொகைக்கு ஏற்ப சரிசெய்து கொள்ளவும் அதற்கேற்ப ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பற்றை சரி செய்து கொள்ளவும் 13 அல்லது 14 நாட்கள் வேலை வழங்கினால் போதுமானது எனும் நிலைப்பாட்டை கம்பனிகள் எடுத்து இருக்கின்றன.

எனவே கம்பனிகள் சராசரியாக மாதம் ஒன்றுக்கு தொழிலாளி ஒருவருக்கு செலவிடும் மாதாந்த தொகை 14x1000 = 14000 உடன் அதற்கான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியப் பங்களிப்பு 2100 உள்ளடங்களாக 16,100 ரூபா என்பதாக பேணிக்கொள்வதன் ஊடாக கூலிச்செலவாக (Wages Cost) பொருளதார சிக்கனத்தை (Economy) கடைப்பிடிக்கும் ஒரு கைங்கரியத்தை கம்பனிகள் கையாள்கின்றன.

மறுபுறத்தில் தொழிலாளர்கள் முன்பு பெற்றுவந்த குறைந்த பட்ச வேலை நாள் எண்ணிக்கை 19 என்ற அடிப்படையில் 750 நாட்சம்பளம் என்ற அடிப்டையில் 14750 அதில் 700 ரூபாவுக்கான EPF /ETF 105 படி 1995 ரூபா எனப்பாரத்தால் 14750+1995 = 16745 என்ற தொகையை விட குறைந்த தொகையே (16100) நாளாந்தம் பெற நேர்கிறது.

எனவே கம்பனிகள் தொழிலாளி ஒருவருக்காக மாதாந்தம் செலவிடக் கூடியதான தனது பாதீடு (Budget) அடிப்படையில் சம்பளத்திட்டத்தை தொழிலாளி ஒருவருக்காக மாதாந்தம் 16,000 முதல் 17,000 என்ற அளவிற்குள் மாற்றமின்றி வைத்துக்கொண்டுள்ளன.

இதனைவிட கூடுதலான சம்பளச்சிட்டையை (Pay sheet) காட்டி கம்பனிகள் தமது தந்திரோபாயத்தை நியாயப்படுத்தலாம். அது மேலதிக கொழுந்து என்பதன் ஊடாக நிகழ்வது. அதனால் தான் 20 கிலோ விவகாரம் மேல் எழுகின்றது.

2. நாள் ஒன்றுக்கு 20 கிலோ கொழுந்து எழுக்க வேண்டும் எனும் நிபந்தனை

இந்த 20 கிலோ கோரிக்கை என்பது கம்பனிகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்த எண்ணி கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு மாற்று முறையாக / முன்மொழிவாக செய்து வந்த வெளியகப்பயிரிடல் (அவுட்குரோவர்) முறைமையின் வெளிப்பாடு ஆகும். அதன்படி தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 20 கிலோ கெழுந்து பறித்தால் ஒரு கிலோவுக்காக விலை 50 ரூபா என்பதன் அடிப்படையில் (முன்பு மேலதிகமாக பறிக்கும் கொழுந்துக்கு 50 ரூபா வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது) 50ரூபா x 20 கிலோ எனும் அடிப்படையில் நாட்சம்பளம் 1000 என்பதை சமன் செய்ய அல்லது சரிசெய்து கொள்ள எடுக்கும் முயற்சியாகும்.

இதன் படி ஒரு தொழிலாளி 20 கிலேவை சராசரியாக பறித்துக்கொடுத்தால் கம்பனிகள் நாட்கூலிக்காக செலவிடும் 1000 ரூபாவுக்கான உற்பத்தி அளவைப் பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சியாகும். இது உற்பத்தித்திறன் அடிப்படையிலான கம்பனிகளின் தந்திரோபாயம்.

இதனைத் தொழிலாளர்கள் மறுக்கும்போது அவர்களது உற்பத்தி பெறுமதி குறைவடையும். எனவே அவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியாது. எனவே நாள் ஒன்றுக்கு ஒரு தொழிலாளியிடம் இருந்து இருபது கிலோவைப் பெற்றுக்கொள்வதற்கு ‘தொழிற்சங்கங்கள்’ மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வகையில் கம்பனிகள் செயற்படுகின்றன.

தொழிற்சங்கங்கள் மீதான அழுத்தம்

கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது (அதற்கு முன்பிருந்தும்) புரிந்துணர்வு அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத்துக்கான மாதாந்த சந்தா தொகையை நாட் சம்பளத்தில் கழித்து தொழிற்சங்கத்துக்கு அனுப்பும் வேலையை கம்பனிகள் செய்து வந்தன.

2021 ஏப்பிரல் மாதத்துடன் சில கம்பனிகள் அந்த நடைமுறையை கைவிட்டுள்ளன. இது தொழிற்சங்கங்களுக்கு நிர்வாக ரீதியான அழுத்தங்களைக் கொடுத்துள்ளன. இந்த அழுத்தம் 20 கிலோ நாளாந்தம் எனும் கோரிக்கையை தொழிற்சங்கங்கள் ஏற்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். (இந்த சந்தா சேகரிப்பு முறைமை இதன் அரசியல் தாக்கம் குறித்து தனியாக பார்க்கலாம்.)

அரசாங்கம் மீதான கம்பனிகளின் அழுத்தம்

கம்பனிகள் மீது அரசாங்கம் அழுத்தம் கொடுத்து ஆயிரம் ரூபாவை கொடுக்கச் செய்ததுபோல கம்பனிகளும் அரசாங்கம் மீது அழுத்தத்தைக் கொடுக்கும் கைங்கரியங்களை ஆரம்பித்துள்ளன. குறிப்பாக தொழிலாளர்களின் சுகாதார துறையை தமது கட்டுப்பாட்டிலும் நிர்வாகத்திலும் வைத்திருக்கும் கம்பனிகள் அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் ஆளணியினரையும் அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இது குறித்த பிரச்சினைகள் எதிர்வரும் காலங்களில் வெளிப்படும். கூடவே தொழிலாளர்களின் சேமநலன் விடயங்களுக்கு பொறுப்பான ‘ட்ரஸட்’நிறுவனத்துக்கு ஒதுக்கும் தொகையையும் அதற்கான கொடுப்பனவுகளையும் கம்பனிகள் குறைக்க வாய்ப்புகள் உள்ளது. இது அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை எதிர்காலத்தில் அதிகரிக்கச் செய்யும் (இது குறித்தும் தனியான பார்வை அவசியம்)

எது எவ்வாறு எனினும் பெருந்தோட்ட முறைமையினை இல்லாமல் செய்யும் நீண்டகால நிகழ்ச்சி நிரலின் அம்சங்களே இவை என்பதை ஆய்வுகளின் ஊடாக புரிந்து கொள்ள வேண்டும். அதனிடையே பெருந்தோட்டங்கள் இல்லாமல் ஆகும்போது அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம், வாழிடம் குறித்த அரசியல் இந்த ‘ஆயிரம்’ பிரச்சினைகளின் ஆதாரமாகும்.

18.07.2021 அன்று ஞாயிறு வீகேசரி பத்திரிகையில் வெளியான கட்டுரை


பிரதேச செயலகங்களை அதிகரித்துக் கொள்வது கனவல்ல; அர்ப்பணிப்பு

- மயில்வாகனம் திலகராஜ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

நுவரெலிய மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை ஐந்தில் இருந்து பத்தாக உயர்த்திக் கொள்வது தொடர்பில் உள்ள தாமதம் அல்லது அக்கறையின்மைக் குறித்த கேள்வியை எழுப்பி கடந்த வாரம் வீரகேசரி ஞாயிறு வாரவெளியீட்டில் ஊடகவியலாளர் சிவலிங்கம் சிவகுமாரன் எழுதிய கட்டுரையில், குறித்த பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைத்தவன் என்ற வகையில் எனது பெயரையும் பிரேரணைப் பிரதியையும் பிரஸ்தாபித்திருந்தார். அதனடிப்படையில் பத்து பிரதேச செயலகங்களைச் சாத்தியமாக்குவது குறித்து என்ன செய்யலாம் என்பது தொடர்பான பதிவாக இந்தக் கட்டுரை அமைகிறது.

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?

நுவரெலியா மாவட்டத்தின் சனத்தொகை இன அடிப்படையில் மலையகத் ( இந்திய வம்சாவளி) தமிழ் மக்களை அதிகளவாகக் கொண்ட பிரதேசம் என்பதும், மொத்த சனத்தொகையில் 52 % அளவு தமிழர்களாக உள்ளனர் என்பதும் புள்ளிவிபரம். இந்த மக்கள் இலங்கை சுதந்திரமடைந்தது முதல் குடியுரிமைப் பறிக்கப்பட்டு அரச பொது நிர்வாக முறைமையில் இணைக்கப்படாமல் இருந்ததன் காரணமாக அந்த நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ‘பிரதேச செயலகங்களின்’ தேவைப்பாடு அதிகம் இருக்கவில்லை. 'கிராம சேவகர் பிரிவுகளின்’ தேவையும் அதிகம் எழவில்லை. இவை இரண்டுமே அடிப்படை அரச பொது நிர்வாக சேவைகளை அடிமட்டத்தில் உறுதி செய்கின்ற அரச நிர்வாக அமைப்புகள்.

இவை ஆற்றியிருக்க வேண்டிய பணியினை தோட்டப்பகுதி மக்களுக்கு ‘தோட்ட நிர்வாகங்களே’ வழங்கின. தோட்ட மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரை தோட்டங்களில் உள்ள ‘செக்ரோல்’ மூலமாகவே பதிவுகள் இடம்பெற்று வந்தன. தோட்டத்தில் வதியும் தொழிலாளர் அல்லாத விபரங்கள் கூட ‘செக்ரோலில்’ இருந்த காலம் ஒன்று இருந்தது. தோட்டங்களை 1972 ஆம் ஆண்டுவரை நிர்வகித்த பிரித்தானிய கம்பனிகளும், அதன்பின்னர் 1992 வரை அவற்றை நிர்வகித்த அரச கூட்டுத்தாபனங்களும் இந்த செக்ரோல் நடைமுறைகளை முறையாகப் பேணி வந்தன. ( நுவரெலியா - மஸ்கெலியா பெரும் சனத்தொகை- வாக்காளர் கொண்ட தொகுதியாக இன்றும் அடையாளப்படுத்தப்படுவதன் காரணம் கூட சுவாரஷ்யமானது.அதனைப் பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்).

கிராம சேவகர் பிரிவுகளுக்குள் உள்வாங்கப்படுதல்.

காலப்போக்கில் பிரஜாவுரிமை எனும் பெயரில் வாக்குரிமைப் படிப்படியாக கிடைக்கப் பெற்ற அதே நேரம் அரச கூட்டுத்தாபனங்கள் வசமிருந்த தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதும், கிராம சேவகர் பிரிவுகளின் கீழ் தோட்டங்கள் கொண்டுவரப்பட்டமையும் அரச பொதுநிர்வாகத்திற்குள் தோட்டப்பகுதி மக்களை உள்வாங்க வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தின. 90 களில் மாற்றம் கண்ட இந்த நடைமுறை 2000 ஆம் ஆண்டு ஆகும்போது அதிகளவில் இடம்பெறத் தொடங்கியது. இதனால் ஏற்கனவே செயற்பட்டுக் கொண்டிருந்த பிரதேச செயலகங்களைக் கொண்டு நிர்வாகத்தை முன்னெடுப்பது என்பது சிக்கலான பணியானது. அம்பகமுவ, நுவரெலியா ஆகிய பிரதேச செயலகங்கள் மாத்திரம் தலா இரண்டுலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் நிர்வாகத்தை ஏற்க நேர்ந்தது. அதேபோல வலப்பனை, கொத்மலை ஆகிய பிரதேச செயலகங்கள் தலா ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களையும் ஹங்குரங்கத்தை பிரதேச செயலகம் சுமார் எண்பதினாயிரம் அளவான சனத்தோகையினரின் நிர்வாகத்தையும் ஏற்க நேர்ந்தது. தோட்டங்களில் இருந்த 'செக்ரோல்' நடைமுறைகளில் தொழிலாளர் மாத்திரம் அதுவும் தொழில் விபரங்கள் மாத்திரம் பதியும் நிலை மாறியது. பிறப்பு சான்றிதழ் முதலான விடயங்களைப் பதிவு செய்வதில் இருந்து தோட்ட நிர்வாகம் விடுபட தொடங்கியது. ஒரு கிராம சேவகர் பிரிவின் கீழ் ‘ஒரு தோட்டம் ஒரு அலகாக’ பார்க்கப்பட்ட நிலை மாறி அந்த ஒரு அலகினுள் ( unit) வாழும் ஒவ்வொரு பிரஜையையும் கிராம அதிகாரி பதிவு செய்யும் நிலை எழுந்தது. இந்த நிலைமைகள் கிராம சேவகர் பிரிவுகளின் தேவையை அதிகரிக்க 1994 சந்திரிக்கா அரசாங்கத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. போதுமான அளவில் அவை இடம்பெறாதபோதும் ‘கிராம சேவகர் முறைமை’க்குள் தோட்டங்களின் உள்வாங்கல் ஆரம்பமானது.

வலுப்பெற்ற கோரிக்கை

2000 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்தே பிரதேச செயலகங்களின் அதிகரிப்புக்கான கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது. சிவில் சமூக அமைப்புகள் அஇது குறித்து அதிகம் பேச ஆரம்பித்தன. ஆங்காங்கே கலந்துரையாடல்கள் இடம்பெறத் தொடங்கின.அப்போது மாவட்ட மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதில் நடந்த நன்மை என்னவெனில் தமது பணிச் சுமை தாங்காது மாவட்டச் செயலாளர்களும், பிரதேச செயலாளர்களும் கூட இந்தக் கோரிக்கையை ஏற்றமையாகும்.

ஆனாலும் மாவட்ட காரியாலயத்தில் அரசியல் பிரதிந்திகளுடன் நடைபெற்ற கூட்டங்களில் இனவாதப் பூனைகள் எட்டிப்பார்த்தன. அதனால் நியாயமான அடிப்படையில் 12-13 ஆகப் பிரிக்கப்படக்கூடிய பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை பத்தாக மாத்திரம் அதிகரிக்க மாவட்ட செயலகம் அறிக்கை தயார் செய்தது. உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட அந்த அறிக்கையின்படி இப்போதைய ஐந்து பிரதேச செயலகங்களையும் இவ்விரண்டாக பிரிப்பதான அந்த அறிக்கை நாளை அளவிலும் நியாயம் அற்றது என்பதே உண்மை.

ஏனெனில் 2 லட்சத்து 30 ஆயிரம் அளவான சனத்தொகை கொண்ட அம்பகமுவ பிரதேச செயலகமும் இரண்டாக பிரிக்கப்பட 86 ஆயிரம் சடத்தொகைக் கொண்ட ஹங்குரங்கத்தை பிரதேச செயலகமும் இரண்டாகப் பிரிக்கப்பட முன்மொழிவு செய்யப்பட்டது. அப்படி பார்த்தால் இப்போதைய அம்பகமுவை பிரதேச செயலகத்தை மாத்திரம் ஐந்தாக பிரிக்கலாம்.

பாராளுமன்ற பிரேரணை

இந்த நிலையிலேயே 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்தமாக நுவரெலிய மாவட்டத்தில் 15 பிரதேச செயலகங்கள் அமையப் பெறுவதற்கான போதுமான விஞ்ஞான பூர்வமான நியாயங்களை முன்வைத்து சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைத்தேன். அந்த உரையின் போது அப்போது மாவட்ட செயலாளரால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முன்மொழிவில் பத்து பிரதேச செயலகங்கள் கோரப்பட்டு இருப்பதனையும் சுட்டிக் காட்டி, இது மாவட்ட பொது மக்களின் கோரிக்கை மாத்திரம் அல்ல அதிகாரிகளும் இதனைக் கோரி நிற்கின்றனர் எனும் எனது வாதத்தை முன்வைத்தேன்.

எனது பிரேரணைக்கு ஆதரவாக அப்போது நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே. கே. பியதாச வும் உரையாற்றியிருந்தார். இதன் மூலம் தமிழ் மக்களின் கோரிக்கை மாத்திரமல்ல மாவட்டத்தின் சிங்கள மக்களதும் பிரச்சினை என்பதும் வெளிப்பட்டது. பிரேரணைக்கு பதில் வழங்கி உரையாற்றிய விடயத்துக்கு பொறுப்பாகவிருந்த அமைச்சர் வஜிர அபேவர்தன 10 பிரதேச செயலகங்களை ( மேலதிக 5) தற்போதைக்கு நிறுவ முடியும் என்றும் அதற்கு மேலதிகமான கோரிக்கைகளை எல்லை மீள் நிர்ணயத்தின் பின்னரே தீர்மானிக்க முடியும் எனவும் பதில் அளித்தார்.

அமைச்சர்கள் இவ்வாறு பதில் அளிப்பது பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்காவும் அமைந்து விடுவதுண்டு. ஆனாலும் அந்த அமைச்சரைக் காணும் போதெல்லாம் இதனைச் செய்யுமாறு வலியுறுத்துவது ( குறிப்பாக வேண்டுமென்றே அமைச்சருடன் மின்தூக்கி யில் பயணித்து நச்சரிப்பது ) பாராளுமன்றத்தில் அவரது அறைப்பக்கம் சென்று பேசுவது இப்படி இரண்டு வருடங்கள் ஓடியது. ஒரு முறை தமிழ் முற்போக்கு கூட்டணி உயர்பீட கூட்டத்தில் இதனை பிரஸ்தாபித்து 'எமது அமைச்சர்களும்' அமைச்சர்கள் என்ற வகையில் அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என விடுத்த வேண்டுகோளின் பேரில் ஒரு முறை அமைச்சர் வஜிர அபேவர்தன அலுவலகத்துக்கு சென்று கோவையைக் கொடுத்து படத்தைப் பிடித்து 'அழுத்தத்தை' கொடுத்து விட்டு வந்தோம். பாராளுமன்ற பிரேரணைகளுக்கு மேலதிகமாக இந்தப் 'படப்பிடிப்பு அழுத்தங்களும்' அரசியலில் வேண்டப்படுவது உண்டு. அமைச்சில் நடைபெற்ற அனைத்திலங்கை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் கூட அப்போது எங்களை ( ஏதேட்சையாக) அமரவைத்து அமைச்சர் ஒரு காட்சி நடாத்தினார்.

இத்தகைய வேண்டுகோள்களுக்கு அப்பால் மாவட்டத்தின் அனைத்துக்கட்சி உறுப்பினர்களை, ( பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் ) மாவட்ட அரச அதிகாரிகளைக் கொண்ட கூட்டம் ஒன்றும் அமைச்சரின் பாராளுமன்ற அறையில் 'இட நெருக்கடியுடன்' நடைபெற்றது. அதன்போதும் இந்த அமைச்சரவைப் பத்திரத்தை ( குறைந்த பட்சம் புதிதான 5 செயலகங்களை உருவாக்கி கொள்வது ) சாத்தியமாக்கிக் கொள்ள உரையாடல்களில் எனது ஆளுமையைப் பயன்படுத்தி இருந்தேன். ( அதில் கலந்து கொண்ட மாற்றுக்கட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள் இதனை அறிவார்கள்)

அமைச்சரவைப் பத்திரமும் வர்த்தமானியும்

ஒருவாறு அமைச்சரவைக்கு இந்த விடயம் அமைச்சரவைக்கு வந்தபோதுதான் அதுவரையான தாமதத்திற்கு காரணம் தெரிந்தது. அமைச்சர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது பங்கிற்கு காலி மாவட்டத்திற்கும் சில பிரதேச செயலகங்களை உருவாக்கி கொள்ளும் அரசியல் ராஜதந்திரத்தை அவர் மேற்கொண்டு அதனையும் இந்த பத்திரத்தோடு சேர்த்து சமர்ப்பித்து விட்டார்.

எப்படியோ நுவரெலிய மாவட்ட மட்டத்தில் இருந்த கோரிக்கை, பாராளுமன்ற உறுதிப்பாடு ( ஹன்சாட்), அமைச்சரவை அனுமதி ( பத்திரம்) என ஆவணவாக்கம் பெற்றது. இவை எல்லாம் உயர்பீட அனுமதிகள் மாத்திரமே. இதனை நடைமுறைப்படுத்த இன்னுமொரு முக்கியமான ஆவணம் தான் அந்த தீர்மானங்களை 'பிரகடனம்' செய்யும் 'வர்த்தமானி'. அதனைச் செய்யுமாறும் கோரி அடிக்கடி அமைச்சருடன் 'மின்தூக்கி' பயணம் செய்து இருக்கிறேன். ( சபையில் இருக்கும் அமைச்சர் வெளியேறும் போது நாமும் வெளியேறி அவருடன் பேச்சு கொடுப்பது. இது ஒரு நச்சரிப்பு உபாயம்)

இப்படியான இன்னொரன்ன நச்சரிப்புகளின் பேரில் 2019 ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபற்றுக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் வர்த்தமானி வெளிவந்தது. ( அடுத்து ஆளும் கட்சியில் இருக்க மாட்டோம் என தெளிவாக தெரிந்த நிலையில் எனது வலியுறுத்தலை இறுக்கமாக்கத் தொடங்கி இருந்தேன். அமைச்சரும் அதனை உணர்ந்தவராக வர்த்தமானியை வெளியிட்டார்)

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள்

அடுத்த நவம்பர் மாதம் நாங்கள் எதிரணியில் இருந்தோம். ஆனாலும் நுவரெலிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்த நான், வர்த்தமானி பிரகடனம் வெளிவந்து விட்டதால் அதனை அமைக்கும் பணியை துரிதமாக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தினேன். வாடகைக் கட்டடங்களில் பணியை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட செயலாளரை வலியுறுத்தினேன். ( இதற்கான ஆதாரங்களை கூட்டக் குறிப்புகளில் பெறலாம்). இதன்படி 2020 மார்ச் முதலாம் திகதி ஐந்து புதிய பிரதேச செயலகங்களை ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்டு நடவடிக்கைக்கள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த நாள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

எனினும் புதிதாக பதவிக்கு வந்த அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தும் என உறுதி கூறப்பட்டது. வலப்பனை புதிய பிரதேச செயலகத்தை ராகலை நகரில் அல்லாது இப்போது அமையப் பெற்றுள்ள வலப்பனை நில்தண்டஹேன பகுதியில் அதனை அமைப்பது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களும் எழுந்திருந்தன.

இப்போது ராகலையில் மட்டுமல்ல நுவரெலிய மாவட்டத்தில் எங்குமே எந்த புதிய செயலகம் பற்றிய பேச்சையும் காணவில்லை.இந்த பத்து பிரிக்கப்பட்டுள்ள முறைமை தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் உண்டு . எனினும் இப்போதைக்கு இதனை நிறுவிக்கொண்டால் அடுத்து வரும் காலங்களில் அவற்றை மேலும் பிரிப்பது தொடர்பில் புதிதான கோரிக்கைகளை எழுப்பலாம். ஏனெனில், இந்த மட்டத்துக்கு இதனைக் கொண்டுவருவதில் இருந்த சிக்கல் நிலைமைகளை இங்கே பதிவு செய்து வைப்பதன் நோக்கம் அதுதான்.

"இல்லை நாங்கள் பதினைந்து கொண்டு வரப்போகிறோம் நமது மக்கள் வாழும் பகுதிகளிலே அதனை அமைக்கப் போகிறோம்" என யாராவது கிளம்பினால், இந்த நடைமுறைகள் அனைத்தையும் கடந்து வரவேண்டும் என்பதை 2000 ஆம் ஆண்டுகளுக்கு பின்னரான சிவில் சமூக, மாவட்ட செயலக கலந்துரையாடல்கள், பாராளுமன்ற பிரேரணை முன்வைப்பு, அமைச்சர்களுடனான தொடர்பாடல், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உபதலைவர் முதலான விடயங்களிலும் பங்கு கொண்டவன் என்ற அனுபங்களின் அடிப்படையில் இதனை பொது வெளியில் பதிவு செய்வது கடமை என எண்ணுகிறேன்.

சிலநேரம் இப்போதைய மேலதிக ஐந்து புதிய செயலகங்களை அமைத்துக் கொண்டாலும் கூட அவற்றை மேலும் பிரிப்பதற்கு அடுத்த பத்து ஆண்டுகளில் தேவை எழும். அதற்கும் இந்த அனுபவம் அவசியப்படும்.

முடிவாக,

இது நுவரெலிய மாவட்டம் தமிழ் மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல. அனைத்து மக்களுக்குமான பிரசரசனை என்பதையும் , பொது நிர்வாக அணுகலை இலகு செய்கின்ற அரச அதிகாரிகளுக்கு உதவுகின்ற திட்டம் என்பதை புரிந்து கொண்டு அந்த நோக்கத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும். இது ஒரு 'கனவு' திட்டம் கிடையாது. காத்திரமாக அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய தலைமத்துவ ஆற்றல் கொண்டவர்களால் சாத்தியப்படுத்தக்கூடிய திட்டமே.

நன்றி : வீரகேசரி வாரவெளியீடு (20/06/2021)


பாய்ச்சல் காட்ட மாட்டேன் - முன்னாள் எம்.பி திலகர்

 மலையகத்திற்கு உரிமைசார் அரசியலுக்கு முகவரி கொடுத்தவர் நீங்கள் அந்த வகையில் நீங்கள் உங்கள் பாராளுமன்ற பதவி காலத்தில் எதை சாதனையாக கருதுகின்றீர்கள் சாதிக்க முடியாது போனதாக எதை நினைக்கின்றிர்கள்?

1987 ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரதேச சபைச் சட்டத்தில் இருந்து மலையகப் பெருந்தோட்ட மக்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலைமை இருந்தும் அதனை திருத்தம் செய்யக் கோரி அன்று முதல் 2015 வரை பாராளுமன்றம் சென்ற எந்தவொரு உறுப்பினரும் பாராளுமன்ற பிரேரணை ஒன்றைமுன்வைத்திருக்கவில்லை. 2015 ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி பாராளுமன்றம் சென்ற நான் டிசம்பர் முதலாம் திகதி அதனை முன்வைத்தேன். அதன் அடிப்படையிலேயே 2018 செப் 18 பிரதேச சபைச் சட்டம் திருத்தப்பட்டது. இதனைச் செய்வேன் என கூறியே நான் நாடாளுமன்றம் சென்றேன்.அதனை நிறைவேற்றியது சாதனையாகவே கருதுகிறேன்.

அதேபோல மலையக உரிமைசார்ந்த்  கல்வி, வீதி, நிர்வாகம், (பிரதேச செயலகம் ) , காணி, சம்பளவிடயத்தில் அரச தலையீடு, சிறுதோட்ட உடைமையாக்குதல், திறந்த பல்கலைக்கழகம், தபால் முதலான  9 பிரேரணைகளையும்  தோட்ட சுகாதாரத்தை தேசிய மயமாக்கும் உத்தியோகபூர்வ அறிக்கையாகவும் சமர்ப்பித்து உரையாற்றி உள்ளேன். இதுவும் ஒரு சாதனையே. இவற்றை தீர்வை நோக்கி நகர்த்துவது அவசியம்.

இதற்கு மேலாக " இந்தியத் தமிழர்" என்பதை "மலையகத் தமிழர்" என சனத்தொகைக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்படல் வேண்டும் எனும் எனது தனிநபர் பிரேரணை சபைக்கு கொண்டு வருவதற்கு சமர்ப்பித்தும் அதனை தாமதமாக்குவதில் 'தமிழ் முற்போக்கு கூட்டணி' உறுப்பினர்களே காட்டிக் கொடுப்புச் செய்ததால் முடியாது போனது.

பாராளுமன்ற காலத்தில் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தீர்கள் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லை எப்படி உணர்கின்றீர்கள்?

அதே சுறுசறுப்போடு இயங்கிக் கொண்டு இருக்கிறேன். பாராளுமன்றம் உள்ளே நான் போவதில்லையே தவிர வெளியே நான் மக்கள் பிரிதிநிதியே.அதனால் தான் இப்போதும் என்னை நேர்காணல் செய்வதற்கு உங்கள் வசம் கேள்விகள் இருக்கின்றன.

   உண்மையில் திகாவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை?

தனிப்பட்ட எந்த பிரச்சினையும் இல்லை. அவருக்கு வழமையாகவே ஒரு தாழ்வுச் சிக்கல் ( inferiority complex) இருந்து வந்தது. அதனை ஊதிப் பெருக்க அருகில் ஓரிருவர் இருக்கின்றனர். அதனால் அவரது சிக்கல்  கூடிக் கொண்டு போகிறது. அவ்வளவுதான். சிக்கல் முற்றும் நாளில் அவர் அதனை உணர்வார்.

    உதயா விலகியதற்கும் பின்னர் ராஜதுரை விலகியதற்கும் நீங்கள் தான் காரணம் என இப்போது குற்றம் சாட்டுகின்றார்களே அதுபற்றி?

2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் எனக்கு தேசிய பட்டியல் தருவதாக அறிவித்து அது தலைமைத்துவத்தால் முடியாது போன நிலையில், 2011 ஆம் ஆண்டு உள் ஊராட்சி மன்ற தேர்தல் வரை எனது பணிகளைச் செய்து கொடுத்து விட்டு, தொழிலாளர் தேசிய சங்கத்தில் இருந்து தற்காலிகமாக விலகி இருப்பதாக நான் 2012ஆம் ஆண்டு மேதினத்தன்று அதன் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் அவர்களிடம் கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டேன். (அந்தக் கடிதம் இப்போதும் அவரிடம் இருக்கும்) அதற்கு பிறகு 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொதுத் தேர்தல் வேட்பாளராக கையொப்பம்  இட்ட பின்னரே நான் தலைமை காரியாலயத்துக்கு வந்தேன்.

இந்த மூன்று வருட காலப்பகுதியில்தான் உதயகுமார் வெளியேறியதும் ராஜதுரை வந்து போனதும் நடந்தேறியது. ஆக நான் பதவியில் இல்லாத காலத்தில் நடந்த சம்பவத்தை என்னோடு சேர்த்து பேசுவது எந்தளவு காழ்ப்புணர்ச்சி மிக்கது. நான் 2015 மீண்டும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் மீண்டும் இணையும் போது அவர்கள் இருவரும் அங்கே இருக்கவில்லை. அவர்கள் மீது இத்தனைப் பாசம் இருப்பவர்கள் விலகி இருந்து என்னை அழைத்து ஏன் தேர்தலில் போட்டியிடச் செய்யவேண்டும். அவர்கள் இருவரும் அப்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சி யானைச் சின்னத்தில் தானே போட்டி இட்டார்கள். அப்போதே அவர்களை தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைத்து போட்டியிடச் செய்து இருக்கலாமே.

25/02/2021 உதயசூரியன்

எனவே அவர்களது வெளியேற்றத்துக்கு பின்னால்  தலைமை பொறுப்பாக இருந்திருக்க முடியுமா அல்லது விலகி இருந்த நான் இருந்திருக்க முடியுமா என்பதை அந்த இருவருக்கும் எதிராக பத்திரிகை  அறிக்கைகளை யார் விடுத்து இருக்கிறார்கள் என்பதை ஊடகவியலாளர்களாகிய நீங்கள் தேடினால் விடை கிடைக்கும். தலைவருக்காக அந்த அறிக்கைகளை எழுதியவர் இப்போதும் அங்கேதான் உள்ளார். அப்போது அவரது வேலையே அதுதான்.

 நீங்கள் தொ.தே.ச தலைமை கட்டிடத்தை உதயாவிற்கு விற்று விட்டதாக குற்றம் சாட்டுகின்றீர்கள் ஆனால் அது வாடகை கட்டிடம் எனவும் அதனை சொந்தமாக வாங்கி வாடகை இன்றி இலவசமாக உதயா வழங்கியதாகவும் ,உதயா கட்டிடத்தை வாங்கிய போது அதற்கு சாட்சி கையெழுத்து போட்டது நீங்கள் எனவும் பீலிப் சொல்கின்றாறே அது பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

நான் சாட்சியாக கையெழுத்து இட்டதால்தான் தானே இந்த விடயத்தை உறுதியாகவும் தெளிவாகவும் சொல்கிறேன். நான் சொன்னது 'விற்றுவட்டார்கள்' என்று அல்ல. உதயகுமார் " கையகப்படுத்திக் கொண்டார்" என்பதே.

இதன் மூலம் சொல்ல வருவது என்ன?

1965 ஆம் ஆண்டு முதல் 2010 வரை 45 ஆண்டுகள் நிரந்தர வாடகையில் தொழிலாளர் தேசிய சங்கம் அந்தக் கட்டடத்தில் இருந்ததானால், அதன் உரிமையாளர்கள் 3 கொடி பெறுமதியான கட்டடத்தை 30 லட்சத்துக்கு தருவதற்கு சம்மதித்தார்கள்.எனக்கு அவர்கள் அறிமுகமானவர்கள் ஆதலால் மேலதிக மாக 10 வீதம் கழித்து 27 லட்சத்துக்கு தந்தார்கள். அதனை அப்போது உதயகுமார் தான் வாங்குவது என்றும் பின்னர் சங்கம் அதனைத் திருப்பிச் செலுத்தி சங்கத்தின் பெயரில் எழுதுவது என்பது உடன்பாடு. எனவே இங்கு தொழிலாளர் தேசிய சங்க நன்மதிப்பு குடியிருப்பு பெறுமதி 2 கோடி 70 லட்சம். அதன்படி அது தொழிலாளர் தேசிய சங்கத்தின் சொத்தா அல்லது 27 லட்சம் வழங்கிய உதயகுமாரின் சொத்தா? இப்போது சொல்லுங்கள் அட்டன் பிரதான இடத்தில அமைந்த அந்த இடத்தை 27 லட்சத்துக்கு "அமுக்கிக்" கொண்டுள்ளார் என்பது தெளிவாகி இருக்கும். எனது வெளிப்படுத்தலினால்தான் இந்த விடயம் அம்பலமாகி உள்ளது. இப்போது உதயா பெயரில் அட்டன் தொழிற்சங்க தலைமையகம் இருப்பதை அவர்கள் ஒத்துக் கொண்டது எனக்கு வெற்றி. உறுப்பினர்கள் அதனை மீட்க முன்வரவேண்டும். இதற்கு சாட்சியாகவே நான் கையொப்பம் இட்டுள்ளேன். எனது கோரிக்கை அந்த கட்டடம் "தொழிலாளர் தேசிய சங்கம்" எனும் மக்கள் அமைப்பின் பெயரில் அதனை எழுத வேண்டும் என்பதே. இதெல்லாம் பிலிப் அவர்களுக்கு தெரியும். இப்போது அவர் சூழ் நிலைக் கைதியாக அவரது பெயரில் எழுதப்பட்ட அறிக்கைக்கு பொறுப்பாகி உள்ளார். அதில் உள்ள கருத்துக்கு அவர் பொறுப்பாளி இல்லை.

 தொ.தே.சங்கத்திற்கு புத்துயிர் கொடுத்து கட்டியெழுப்பியதில் பிரதான பங்குதார் ஒருவர் நீங்கள் ஆக அந்த கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருப்பதை விலகியிருப்பதை எப்படி உணர்கின்றீர்கள்?

நேர்வழியில்பயணிக்காது குறுக்கு வழி தேடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் ஒதுங்கிச் சென்று விடுவது உண்டு. அப்படியான சந்தர்ப்பத்தில் இது மூன்றாவது. அரசியலை கட்டிப்பிடித்துக் கொண்டு ஈ ஓட்டும் அரசியல் என்னிடம் இல்லை. காத்திரமாக முன்னெடுப்பதே எனது இலக்கு. இதேபோல 2012 நான் விலகி இருந்த போதும் எனது அரசியலைக் கைவிடவில்லை. அதனால்தான் 2010 ல் எனக்கு தேசிய பட்டியல் தருவதாக ஏமாற்றியவர்களுக்கு எதிராக  2015 ல் போட்டியிட்டு தெரிவானேன். 2010 ல் என்ன செய்தார்களோ யாரெல்லாம் சேர்ந்து செயதார்களோ அதனையே 2020 லும் செய்தார்கள். இந்த சவால்களான சந்தர்ப்பங்களில் எல்லாம் நான் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு எதிரான ஒரு அமைப்பிடம் ஓடி அடைக்கலம் தேடியவனல்ல என நீங்கள் ஏற்கனவே கேட்ட உதயகுமார், ராஜதுரை போன்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் மூத்த உறுப்பினர்களை ஓரம் கட்டி முன்னுக்கு வர எத்தணிக்கும் உதயகுமார், நகுலேஸ்வரன், நந்தகுமார், ராம் என்ற வரிசை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இருந்து 2013 க்குப் பிறகு தான் வந்தார்கள். நான் 1992 ல் இருந்து அங்கே தொடர்பிலே இருப்பவன். இன்றைய திகதி வரை வேறு சங்கத்தில் கட்சியில் உறுப்புரிமை பெறாத தொழிலாளர் தேசிய சங்கத்தைத் தூற்றாத பண்பைப் கொண்டுள்ளவன். அதனை மலையகமே அறியும். இனியும் கூட தூற்ற மாட்டேன். எனது கருத்து நிலையில் வந்த அரசியல் வி.கே. வெள்ளையன், சி.வி. வேலுப்பிள்ளை போன்றவர்களின் சிந்தனையுடன் இணைந்து பயணிப்பது. அவர்களை மீளவும் மீளவும் வலியுறுத்தி அந்த அரசியலை வளர்த்து எடுத்தவன். ஆனால் "தொண்டமான்" தாசர்கள் "திகாம்பரம்" தாசர்களாக மாறி இப்போது பிழைப்பு நடாத்துகிறார்கள். அதில் திகாம்பரம் அற்ப சந்தோஷம் அடைகிறார் அவ்வளவுதான் நடக்கிறது.

முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தை தெ.தே.சங்கத்திற்கு கொண்டுவந்நது நீங்கள் என்கின்றீர்கள்,அவரை அழைத்துவர காரணம் என்ன?

அவரை தலைமைத்துவ பண்பு கொண்ட மலையக இளைஞராக நான் பல்கலைக் கழக மாணவராக இருந்த காலத்தில் அவதானித்தேன்.  அப்போது அவரது அரசியல் நாட்டமும் புரிந்தது. அவரது பெற்றோர் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தார்கள். . தோட்டத் தொழிலாளர்களிடத்தில் மாத்திரம் தங்கியிருந்த மலையக அரசியலின் அடுத்த படிமமாக கொழும்பில் தொழில் புரியம் மலையக இளைஞர்கள் இறங்க வேண்டும் என்ற சிந்தனையின் தெரிவே அவர். அவருக்குள் அந்த அவா அப்போது இருந்தது.எனவே 2004 மாகாண சபை தேர்தல் முதல் அவரை மலையக அரசியலில் ஆற்றுப்படுத்தினேன்.(அவரை எவ்வாறு மலையக அரசியலுக்கு நான் ஆற்றுப்படுத்தினேன் என்பதை இப்போது அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதில் இருந்து உலகம் அறியும்)

என்னுடைய ஆலோசனைகளையும் மீறி தொழிலாளர் விடுதலை முன்னணி எனும் அமைப்பில் அவர் சேர்ந்தார். அதற்கு நான் உடன்படாமல் ஒதுங்கி இருந்ததால்  சில காலம் சென்ற பின்னர் இவரிடம் ஏதும் இல்லை என தொழிலாளர் விடுதலை முன்னணி யினரால் நிதிச் செயலாளர் பதவியில் இருந்து தூக்கி வீசினர். அப்போது தனது அடுத்த கட்டம் என்ன என்று தெரியாமல் எனது வத்தளை வீட்டு வாசலில் நின்றார். அப்போது தொழிலாளர் தேசிய சங்கத்துடனான எனது தொடர்புகளின் அடிப்படையில் தொழிலாளர் தேசிய சங்க உயர்பீடத்தினரை அதே வீட்டுக்கு அழைத்து திகாம்பரத்தை தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைத்துக் கொண்டு செயற்படுமாறு ஆலோசனை வழங்கி இணைத்து வைத்தேன். அப்போது தலைவராக இருந்த புண்ணியமூர்த்தி ( மஸ்கெலிய ) சட்டத்தரணி ( இப்போது ) செல்வராஜா ( பொகவந்தலாவை) ரட்ணசாமி ( மஸ்கெலிய ) பிலிப் (  பொதுச் செயலாளர்) எல்லோருமே எனது வீட்டில் அமர்ந்து பேசியே திகாம்பரம் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். இவ்வாறு பெயர்,திகதி, இடம், சம்பவம், தொடர்புபட்ட நபர்கள்  என இருபது வருட கால எனது அரசியல் பங்களிப்பை ஒரு குறிப்பும் இல்லாமல் என்னால் உரையாக கூட ஆற்ற முடியும்.

-​திகாம்பரம் தற்போது உங்கள் அரசியல் எதிரியா?

எனக்கு நிச்சயமாக இல்லை. என்னை அவர் எதிரியாக்கிக் கொண்டால் அதற்காக அனுதாப்படுகிறேன். இயற்கை நீதி என்ற ஒன்று இருக்கிறதல்லவா? நாக்கை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப  மாற்றி பேசலாம். மனசாட்சியை மாற்ற முடியாது. அது உள்ளே இருந்து குடையும்.

 உங்களுக்கும் திகாம்பரத்திற்கும் இடையில் முரன்பாடு ஏற்பட பின்புலத்தில் யாராவது இருக்கின்றார்காள?

சில அடிவருடிகள் அவரைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்கள் திகம்பரத்தை காட்டிக் கொடுக்கும் நாளில் அவர்கள் யார் என அவர் அறிவார்.

 உங்களுக்கு என மலையகத்தில் தனியான ஆதரவு தளம் இருக்கின்றது ஆக நீங்கள் புது கட்சி ஆரம்பிப்பீர்களா?அல்லது ஏதாவது கட்சியில் இணைவீர்களா?

நான் எப்போதும் நிதானமாக முடிவுகளை எடுத்து செயற்படுத்துபவன்.அதனால் தான் சூழ்ச்சிகள் நிறைந்த அரசியல் சூழலில் என்னை அடையாளப் படுத்த முடிந்தது. எனவே எனது அரசியல் தீர்மானங்களை நிதானமாக எடுப்பேன். பாய்ச்சல் காட்ட மாட்டேன்.

- உங்கள் ஆதரவாளர்கள் உட்பட மலையக மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.

மாவட்ட எல்லைகளைக் கடந்து மலையக மக்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். அவர்களும் என்னை நேசிக்கிறார்கள். என்னைப் போன்றவர்களை அவமானப்படுத்தி விடுவதனால், என்மீது அவதூறுகளை எழுதி விடுவதால் என்னை ஓரம் கட்ட நினைப்பவர்களுக்கு மத்தியில் என்னை நேசிக்கும் மக்களின் ஆன்ம பலம் என்னை தொடர்ச்சியாக இயங்கச் செய்கிறது. நான் தொடர்ந்து இயங்குவேன். திலகர் திரும்பவும் பாராளுமன்றம் போனால் என்ன செய்வேன் என மலையக மக்களுக்கு மாத்திரமல்ல தமிழ் பேசும் சமூகத்துக்கு தெரியும். சிங்கள சமூகம் கூட இனவாதமல்லாத எனது அரசியலைப் புரிந்து கொண்டுள்ளார்கள்.

இப்போது எனது இலக்கு எப்படியாவது நாடாளுமன்ற கதிரையில் அமர்ந்து விடவேண்டும் என்பதல்ல. அடுத்த தலைமுறை அரசியலை எவ்வாறு முன்வைப்பது என்பதுதான். 2000 ஆம் ஆண்டுகளில் இளைஞர்களாக நாங்கள் முன்வைத்த அரசியல் மாற்றுப் பார்வையின் விளைவுகளே 2015 ல் வெளித் தெரிய ஆரம்பித்ததே தவிர அது தற்செயல் நிகழ்வல்ல. எனவே 2020 ல் நாங்கள் எத்தகைய சிந்தனைகளை முன்வைக்கிறோம் என்பதிலேயே 2030 ல் மலையகம் எதனை அடையப் போகிறது என்பது தங்கியுள்ளது. அதற்கேற்ற வியூகங்களை இளைய தலைமுறையினருடன் இணைந்து முன்வைப்பதில் பங்களிப்புச் செய்வேன். பொறுமையாக. நிதானமாக. காத்திருங்கள். காலம் எல்லோரையும் விட பெரியவன்.

நன்றி எஸ்.மோகன் (உதய சூரியன்)

 


சம்பள நிர்ணய சபைத் தீர்மானம்:முறைமை மாற்றத்துக்கான முதற்படி

இதுவரை காலம் ஆயிரம் ரூபாதான் பிரச்சினை என பேசிவந்த அரசியல், தொழிற்சங்க பிரதிநிதிகள் இப்போது அதற்கு அப்பால்சென்று வேலை நாட்கள் குறித்து பேசத் தலைப்பட்டுள்ளனர்.எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினை உக்கிரமடையும்போது முறைமை மாற்றம் குறித்து ஆயிரம் ரூபாவுக்கு வெளியே சென்று பேசும் பல திறப்புகள் வெளிப்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே சம்பள சபை மூலமான தீர்மானம், முறைமை மாற்றம் ஒன்றுக்கான முதற்படியாகும் என்கிறார் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் .

தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் சம்பள நிர்ணய சபை ஊடாக எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து கேசரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

அவருடனான உரையாடல் :

கேள்வி : தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் 1000/= ஆக தீர்மானித்திருப்பது பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில் : முதலில் அரசாங்கம் உறுதி அளித்தவாறு அடிப்படைச் சம்பளம் 1000/= வழங்கப்படவில்லை.அது 900/= ஆகவே உள்ளது. அடுத்தது, இதற்கு முன்னதான 700/= அடிப்படைச் சம்பளத்தின்போது மூன்று தொழிற்சங்கங்களில் ஒன்று கைச்சாத்திடாதபோதும் ஏனைய இரண்டு தொழில் சங்கங்களும் கம்பனிகளின் பிரதிநிதியும் கையொப்பம் இட்டு ஏற்றுக் கொண்டதால் நடைமுறைக்கு வந்தது. அப்போது அரசாங்கத்தின் ஒப்புதல் அவசியமாகி இருக்கவில்லை. ஆனால், இப்போது தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் ஒரு தொகைக்கு உடன்பட்டு வந்துள்ள போதும் கம்பனிகள் அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் எதிர்த்தும் வாக்களித்துள்ளன. எனவே அறிவிக்கப்பட்ட இந்த தொகையை வழங்க வேண்டிய கம்பனி உடன்படாமல் இருப்பது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமான முடிவு எனும் கேள்வியையே உருவாக்குகிறது.

கேள்வி : தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கையில் வெற்றி அடைந்துள்ளதாக கொண்டாடுகின்றனவே..

பதில் : அப்படி அறிவிக்கும் தேவைப்பாடு ஒன்று ஒரு தொழிற்சங்கங்கத்துக்கும் அரசாங்கத்துக்கும் உள்ளது. சம்பள நிர்ணய சபை தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட எல்லாத் தொழிற்சங்கங்களும் ஒரே நிலைப்பாட்டில் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். நாளுக்குரிய கூலித் தொகையில் அவர்களிடையே இணக்கப்பாடு தெரிந்தாலும் மாதத்தில் வழங்கப்படும் வேலைநாட்கள் தொடர்பில் அவர்களுக்குள் கருத்து முரண்பாடுகளும் ஐமிச்சங்களும் நிலவுவதை அவதானிக்கலாம். மாதத்தில் 25 நாள் வேலை வழங்கப்படல் வேண்டும் என எதிர்கட்சிசார்பு தொழிற்சங்கம் வலியுறுத்துகிறது. மறுபுறத்தில் அதனை சம்பள நிர்ணய சபை தீர்மானிக்க முடியாது என ஆளுங்கட்சி சார்பு தொழிற்சங்கம் தெரிவிக்கிறது.
தாங்கள் 1000/= நாட்சம்பளத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டதாக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கொண்டாடினாலும் அடுத்துவரும் மாதங்களில் அந்த சம்பளத்தை மாதாந்தம் பெறும் தொழிலாளர்களின் சம்பளப் பட்டியல் வாயிலாக அதன் உண்மைத் தன்மை வெளிப்படும். அப்போதுதான் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும்.

கேள்வி : இத்தனை வருடகாலம் இல்லாத சம்பளசபை முறைமை இப்போது திடீரென எப்படி வந்தது ?

பதில் : சம்பள நிர்ணய சபை ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தைத் தீர்மானிக்கும் முறைமை புதியதல்ல. ஆனாலும், கூட்டு ஒப்பந்தம் மூலம் தீர்மானிப்பதான ஒரு முறைமை வந்தவுடன் அந்த முறைமை கிடப்பில் போடப்பட்டது. இப்போது அதனைத் தூசுதட்டும் தேவைப்பாடு நடப்பு அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கொத்தபய ராஜபக்‌ஷ சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரமும், ஆண்டின் இறுதியில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ வரவு செலவுத் திட்டத்தில் விடுத்த அறிவிப்பும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரவில்லை. அது அரசாங்கத்துக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்த நிலையிலேயே சம்பளநிர்ணய சபையின் ஊடாக தீர்மானிப்பதற்கு தொழில் அமைச்சர் நிமால் சிறிபால சில்வா அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து சம்பள நிர்ணய சபைக்குச் செல்ரும் தீர்மானத்தை எடுத்தார்.

சம்பள நிர்ணய சபையில் அடிப்படை நாட்சம்பளம் 900/= எனவும் வரவுசெலவுத்திட்டபடி 100/= எனவும் வழங்க வேண்டும் எடுத்த முடிவுக்கு கம்பனிகள் இணங்கவில்லை என்பது அவர்கள் அதனை எதிர்த்து வாக்களித்ததில் இருந்தே தெளிவாக தெரிகிறது.

இங்கே தொடர்புபடும் மூன்று தரப்பினர்களில் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தை நிறைவேற்றும் பொறுப்பு அதனை மறுக்கும் கம்பனிகள் சார்ந்தது என்றவகையில் இனிவரும் காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை மாற்றுவடிவம் எடுக்க வாய்ப்புகள் உள்ளன.

கேள்வி : முதலாளிமார் சம்மேளனம் இணங்காவிட்டால் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் ?

பதில் : தோட்டக் கம்பனிகள் தமது ஆட்சேபனையைத் தெரிவிக்க 14 நாட்கள் கால அவகாசம் உண்டு. அது குறித்து தாம் கவனம் செலுத்த உள்ளதாக முதலாளிமார் சம்மேளனப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்து உள்ளார். அதற்குள் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை வெளியிட்டு, அதனை ஏற்று நடைமுறைப்படுத்த கம்பனிகள் நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர்கள் வழங்கும் வேலை நாட்களைக் குறைக்க வாயப்பு உள்ளது. அது தொழிலாளர்களின் மாத வருமானத்தைக் குறைக்க வல்லது.

எனவேதான் இதுவரை காலம் ஆயிரம் ரூபாதான் பிரச்சினை என பேசிவந்த அரசியல், தொழிற்சங்க பிரதிநிதிகள் இப்போது அதற்கு அப்பால்சென்று வேலை நாட்கள் குறித்து பேசத் தலைப்பட்டுள்ளனர்.எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினை உக்கிரமடையும்போது முறைமை மாற்றம் குறித்து ஆயிரம் ரூபாவுக்கு வெளியே சென்று பேசும் பல திறப்புகள் வெளிப்பட வாய்ப்புகள் உள்ளன.

கேள்வி : இப்போதைய புதிய முனைப்புகளினால் இதுவரை நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமை என்னவாகும் ?

நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமையில் மாற்றம் வேண்டுமென கடந்த காலங்களில் தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டு வந்துள்ளது. இப்போது சம்பள நிர்ணய சபை மூலம் தீர்மானிக்கப்பட்ட ஒரு தொகையை கம்பனிகள் வழங்க வேண்டும் அரசினால் நிர்ப்பந்திக்கப்படும் நிலையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமையின் இறுக்கம் தளர்ந்துள்ளது என்பதனைக் காட்டுகிறது. கம்பனிகளின் அறிக்கைகளில் அதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன.

இதனால், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை மாற்றுவடிவில் வெளிவரும். இதன்போது அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் மேலும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கும் தேவை எழும். அதன்போது முறைமை மாற்றம் ஒன்றிற்கான அழுத்தம் அதிகரிக்கும். சமூக மட்டத்திலும் ஆயிரம் ரூபாதான் பிரச்சினை என்கிற நிலையைக் கடந்து தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையை, மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினையைப் பார்க்கும் சூழ்நிலை ஏற்படும். இதனை அரசியல் ரீதியான ஒரு முன்னகர்வு என கொள்ளுதல் வேண்டும். அதே நேரம் அந்த அரசியலை கவனமாக முன்னகர்த்தவும் வேண்டும்.

கடந்த ஐந்து, ஆறு வடிவங்களாக பாராளுமன்றில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்ததன் விளைவாகவே, கடந்த கால் நூற்றாண்டு காலமாக கண்டு கொள்ளாமல் இருந்த அரசும் அரசாங்கமும் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பள விடயத்தில் தலையிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அரசாங்கம் இப்போதுதான் இந்த சுமையை சுமக்க ஆரம்பித்துள்ளது.

இதன் பிரதிபலிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன சபையில் தெரிவிக்கிறார். கம்பனிகள் மறுத்தால் தோட்டத்தை அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டுப் போகலாம் என தொழில் அமைச்சர் சபையிலே பகிரங்கமாக கூறியுள்ளார். எனவே, இந்த கால் நூற்றாண்டு காலமும் கம்பனிகளுக்கு 99 வருட குத்தகைக்குக் கொடுத்திருப்பதான கதை பொய்யானது என்பது தெளிவாகிறது. அரசுக்கே நிலம் சொந்தம்.அரசே தங்கப்பங்குடமையாளர். அதனால்தான் இத்தனை உறுதியாக கம்பனிகள் வெளியேறட்டும் என சொல்ல முடிகிறது.

1972 ஆம் ஆண்டு அரசாங்கம் பிரித்தானிய கம்பனிகளிடம் இருந்து தோட்டங்களைப் பொறுப்பெடுத்ததன் பின்னரே தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு அவை சிறுதொட்டங்களாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவையே இன்று தேயிலை ஏற்றுமதியில் 75 சதவீத வருமானத்தைப் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றன.

பெருந்தோட்டங்கள் தோல்வியடைந்த 25 ஆண்டுகளில் சிறுதோட்டங்கள் வெற்றியடைந்த வரலாற்றை வலியுறுத்தி தனியார் கம்பனிகளிடம் இருந்து தோட்டங்களைப் பெற்று அவற்றை தொழிலாளர்களுக்கு பகிர்ந்து அளிப்பதன் மூலமே, கூட்டு ஒப்பந்தம், சம்பள நிர்ணய சபை முதலான குழப்பகரமான சூழல்களைத் தவிர்க்கலாம். எனவே இன்றைய சூழலை முறைமை மாற்றத்திற்கான முதற்படியாக கொள்ளுதல் வேண்டும்.

15/02/2021 - Virakesari