'மலைகளைப் பேசவிடுங்கள்' என்பதோடு ஒத்திசைவாக 'மலைகளை வரைதல்'

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக அரசியல் ஆய்வாளர், மும்மொழித் திறனாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முக ஆளுமை கொண்ட மல்லியப்புசந்தி திலகரின் 'மலைகளை வரைதல்' என்ற ஆங்கில நூல்கள் பற்றிய  அறிமுக நூல் ஒரு புதுவகையான முயற்சியாகும்.
இந்த நூலின் இருபது அத்தியாயங்களும் ஞாயிறு வீரகேசரி பத்திரிகையில் தொடர்ச்சியாக 2020 மே மாதம் முதல் செப்தெம்பர் இறுதிவரை கட்டுரைகளாக வெளிவந்தவையாகும். ஓரிரண்டைத் தவிர பெரும்பாலும் 1980-2019 ஆகிய காலப்பகுதியில் வெளிவந்த ஆங்கில நூல்கள் எழுந்தமானமாக தெரிவு செய்யப்பட்டுள்ள போதும், இவை ஆய்வு, கலை இலக்கியம், கவிதை, வரலாறு, நினைவுப்பகிர்வு என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.
இருபது அத்தியாங்களில் 19 நூல்கள், ஒருநூல் பக்கங்களின் எண்ணிக்கைக் காரணமாக இரு அத்தியாங்களை உள்ளடக்கியதாய், பன்னிரண்டு ஆய்வுகளாகவும், நான்கு கலை, இலக்கியம், கவிதை சார்ந்ததாகவும்,  இரண்டு வரலாறுகளாகவும் ஒன்று நினைவுப்பகிர்வாகவும் மிளிர்கின்றன. இவை பெரும்பாலும் மலையகத்தை மையப்படுத்தியவை என்பது குறிப்பிடப்படப்வேண்டியதொன்று.
இந்த ஆய்வு நூல்களில் எட்டு 2020 இல் வெளிவந்த 'இலங்கை மலையகத் தமிழரின் நூல் விபரப்பட்டியல்' என்ற நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் சோ.சந்திரசேகரன் கலாநிதி. இரா.ரமேஸ் ஆகியோரால் தொகுக்கப்பட்ட இந்நூல் மலையகம் சம்பந்தமான ஆய்வு நூல்களை மாத்திரம்ஆவணப்படுத்தும் நோக்கைக் கொண்டது. அந்த நூலில்  148 ஆங்கில நூல்களும், 70 தமிழ் நூல்களுமாக மொத்தமாக 218 நூல்களின் விபரப்பட்டியல் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அந்த நூலோடு  'மலைகளை வரைதலை' ஒப்பிட்டால், இது முழுக்க, முழுக்க ஆங்கில நூல்களை மாத்திரம் உள்ளடக்கியதாய் மலையகத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் பொதுவான சில நூல்களையும் உள்ளடக்கியுள்ளது.
 'நூல் விபரப்பட்டியல்' நூலானது  நூல் பற்றிய விபரங்களை ஒரு ஒழுங்கமைந்த முறையில் குறிக்கப்பட்ட சில தகவல்களை தருகின்ற வேளை, 'மலைகளை வரைதல்' வேறு ஒரு வகையில் நூல்களை அறிமுகஞ் செய்கின்றது. நூலின் 'உள்ளடக்கம்' மாத்திரமல்ல, நூலின் ஆசிரியர் பற்றிய விபரம், நூல் உருவான சூழல், நூலாசியர்களோடு திலகர் கொண்டுள்ள தொடர்புகள் போன்ற பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. இங்கு எடுத்துக்கொண்ட நோக்கம் ஆங்கில நூலை ஆங்கிலம் வாசிக்கக்கூடிய வாசகர்களுக்கு அறிமுகப்படுததுவது என்றால், திலகர் அறிமுகப்படுத்துகின்ற பாணி வாசகர்களை இந்த நூல்களை தேடி வாசிக்க தூண்டுகின்ற ஒன்றாகவே அமைந்துள்ளது. அந்த வகையில் திலகர் பாராட்டப்படவேண்டியவர்.
 2019 இல் வெளியான ஒரு நூல் 'நூல் பட்டியல்' நூலில் இடம்பெறவில்லை. அது மலைநாட்டுத் தமிழர்கள் : இலங்கையில் ஒரு பதிய எதிர்காலத்தை வரைதல்' என்ற நூலாகும். இது டானியல் பாஸ், பா.ஸ்கந்தகுமார் ஆகியோர் தொகுத்த 11 ஆய்வு கட்டுரைகளைக்கொண்ட ஒரு நூல். இவர்களில் மூவினத்தவர்களைச் சேர்ந்த 5 பெண்கள், ஏனைய ஆறு பேரில் மூவர் மலையகத்தவர். ஏனைய மூவரும் பிற சமூகத்தவர்கள். இத்தகைய முக்கியத்துவமிக்க நூலின் உட்பொருளே இந்த நூலுக்கு தலைப்பாக அமைந்துள்ளது. அதன் சுருக்கமாக மலைநாட்டுத் தமிழர்களை மலைகள் என்று பூடகமாக சுட்டிக்காட்டி, அவர்களது எதிர்காலத்தை வரைதல் என்பதை உள்வாங்கி 'மலைகளை வரைதல்' என்று இந்த நூலுக்கு மகுடமிடப்பட்டுள்ளது.
திலகரின் முன்னைய நூலான 'மலைகளைப் பேசவிடுங்கள்' என்பதோடு ஒத்திசைவாக மலைகளை வரைதல் அமையப்பெற்றுள்ளது. ஊhயசவiபெ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு திலகர் தெரிவு செய்துகொண்ட 'வரைதல்' என்ற தமிழ்ப்பதம் பொருத்தமானதாகவும், அதில் எதிர்காலம் கருக்கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளலாம்.
ஆய்வு நூல்களில் மூன்று தமிழ் நாட்டில் தாயகம் திரும்பியோர் பற்றியது. அவற்றில் இரண்டு, 'நூல் விபரப்பட்டியலிலும்' காணப்படுகின்றது. 'செராக்' நிறுவனத்தின் 'எங்கெங்கும்  அந்நியமாக்கப்பட்டவர்கள்' என்ற தமிழ் நூல் 'நூல் விபரப்பட்டியலிலும்' அதன் ஆங்கில வடிவம், மலைகளை வரைதலிலும் இடம்பெற்றுள்ளன.
எம்.வாமதேவனின் 'தமிழ்நாட்டில் தாயகம் திரும்பியோர் புனர்வாழ்வும் ஒருங்கிணைப்பும்' என்ற நூல் இரண்டிலும் இடம் பெற்றிருக்கிறது. அத்தோடு சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் வி.சூரியநாராயணண் தொகுத்து வெளியிட்ட 'தாயகம் திரும்பியோரின் புனர்வாழ்வு' என்ற கட்டுரைத்  தொகுப்பு இந்த நூலிலே சேர்க்கப்பட்டுள்ளது.
இரண்டு வரலாற்று நூல்களில் ஒன்று பக்கங்களின் எண்ணிக்கை அதிகம் உயர்ந்த விலை என்பதோடு பலநூறு படங்களையும் கொண்டு இருப்பதால் அதன் முக்கியத்துவம் கருதி  நூலாசிரியர் இதனை இரண்டு அத்தியாங்களில்  அறிமுகப்படுத்தியுள்ளார். 'இந்தோ - இலங்கையர்' அவர்களின் 200 வருடகால சகாப்தம்' என்ற தலைப்பிலான நூல் பலருடைய உழைப்பைக்கொண்டு உருவானது என்றாலும் மறைந்த ஊடகவியலாளர் எஸ்.முத்தையா இதன் பதிப்பாளராகத் திகழ்கின்றார்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த எஸ்.நடேசனின் 'இலங்கை மலையகத் தமிழர்களின் வரலாறும்' ஒரு முழுமையான நூலாகும். இந்த வரலாற்றில் பல மூத்த தொழிற்சங்கவாதிகளின் அனுபவங்கள் பல பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசியல் அம்சங்களை சுமந்துள்ள ' தேயிலைக் காவியம்' என்ற நூல் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த தொழிற்சங்கவாதி ஏ.பி.கணபதிப்பிள்ளை எழுதியதாகும். வரலாற்றுப்பார்வை கொண்ட இந்த நூல் 'தென்னிந்தியாவில் இருந்து தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட போராட்ட வரலாற்றை உள்ளடக்கியதாகும்.
இரண்டு பெண் ஆய்வாளர்கள்- ஒருவர் மலையகத்தைச் சார்ந்தவர்.  இங்கிலாந்தில் வசிக்கின்ற யோகேஸ்வரி விஜயபாலன். மற்றையவர் மலையகத்தைச் சாராதவர். மைத்ரி ஜெகதீஷன் அமெரிக்காவில் வாழ்கிறவர். மலையகம் சம்பந்தமான தமது ஆய்வுகளை நூலாக்கியுள்ளார். யோகேஸ்வரியின் 'முடிவில்லா சமத்துவமின்மை' சட்டரீதியான அம்சங்களை உள்ளிடக்கியுள்ள வேளை, மைத்ரியினது மானிடவியல் சம்பந்தமானதாக அமைந்துள்ளது. இரண்டும், நிச்சயமாக ஆய்வுப்பரப்பில் புதிய பரிமாணங்கள் ஆகும்.
ஏனைய இரண்டு ஆய்வுகள் மலையக மக்களின் பொருளாதாரம், வறுமை நிலை பற்றியது. பேராசிரியர் எஸ்.சந்திரபோஸ் அவர்களின் தற்போது அதிகம் பேசப்படுகின்ற 'வெளியகப்பயிரிடல் முறைமைப்' பற்றிய ஆய்வறிக்கை. மற்றையது மறைந்த ஆய்வாளர் வண. கீத பொன்கலனின் 'இலங்கையின் தோட்டப்பகுதிகளின் சமூக அபிவிருத்தியும் வறுமையும்' என்ற தலைப்பிலான நூல். இந்த இருவரும்  மலையக சமூகப் பொருளதார நிலை பற்றி நிறையவே எழுதியுள்ளவர்கள். எனவே இவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.
ஆய்வு நூல்களுக்கு  அப்பால்,  கலை  இலக்கியம், நினைவப்பகிர்வு போன்ற நூல்கள் பலவித ரசணைகளை வெளிப்படுத்தி சாதாரண பொது வாசகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியவை. மொத்தத்தில்  உள்ளடக்கப்பட்ட நூல்கள் எழுந்தமானமாக தெரிவு செய்யப்ட்டு இருந்தாலும் அவை இலக்கியப்பரப்பின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை (  ஊசழளள ஊரவவiபெ) தந்து பல்வகை அம்சத்தை வெளிப்படுததுவதாக உள்ளது.
ஆங்கில வாசிப்பு அறிவுள்ளவர்கள் இவற்றைத் தற்போதைய தொழில்நுட்ப வசதிக்கேற்ப ழடெiநெ முறையில் வாசிக்கலாம். நூலாசிரியர் விதந்துரைத்துள்ளவாறு பல நூல்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படலாம். மொழிபெயர்ப்புத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இது குறித்து கவனம் செலுத்தலாம்.
இறுதியில் ஆங்கில நூல்களை ஆவணப்படுத்துவதற்கு அப்பால் ஆங்கில வாசிப்பு திறனுள்ளவர்கள் வாசிக்க் தூண்டுவதாய் அமைந்துள்ளதோடு  நூல்கள் மட்டுமல்லாது அதன் ஆசிரியர்கள், அவர்களது பின்புலம் இப்படிப்பல அம்சங்களை இந்த நூல் தந்துள்ளது.
 தமிழ் மொழியில் திறனுள்ள நூலாசிரியர் ஆங்கில மொழியிலும் அத்தகைய திறனைப்பெற்று கடினமான ஆங்கில நூல்களை வாசித்து உள்வாங்கி அதைத் தமிழிலே தந்திருப்பது மிகவும் போற்றுதற்குரியது.
அவரது இந்தப் பணி மேலும் பயனுறுமுறையில் தொடர எனது வாழ்த்துகள்
 எம்.வாமதேவன்
கொழும்பு
23.09.2020