இலங்கையிலும் இந்தியாவிலும் இலக்கிய இயக்கம் கண்ட பெருமகனார் - சி.பன்னீர்செல்வம்

-மதி

இந்தியாவில் பிறந்து இலங்கை வந்த வம்சாவளியினர்தான் இன்று ‘மலையகத் தமிழர்கள்’ எனும் அடையாளத்துடன் இலங்கையில் வாழ்கிறார்கள். அவ்வாறு வந்தவர்களுள் லட்சக்கணக்கானோர் சிறிமா - சாஸ்த்திரி ஒப்பந்தத்தினால் திரும்பவும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இத்தகைய ஒரு சமூக நிகழ்வு நடந்து இன்று பல தலைமுறைகள் கடந்த நிலையில் அவ்வாறான ஒரு நிகழ்வை , ஒரு தனி நபருக்குள் அடையாளம் காணுவது சாத்தியமா?

அத்தகைய ஒரு வரலாற்றின் சாட்சியாக வாழும் ஒருவர்தான், இலங்கை - இந்திய எழுத்தாளராக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் இலக்கிய செயற்பாட்டாளர் சி.பன்னீர்செல்வம் எனும் அறிமுகத்தோடு இணைய வழி நடைபெற்ற ஒரு பாராட்டு நிகழ்வு தொடர்பான பதிவே இது.

இத்தகைய ஒரு அறிமுகத்துடன் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்து முன்னின்று நெறிப்படுத்தியவர் இலக்கியவாதியும் அரசியலாளரும் சமூக ஆய்வாளருமான மல்லியப்புசந்தி திலகர்.

தற்போதைய மலையக எழுத்தாளர்களில் மூத்தவரான 'சாகித்ய ரத்னா' தெளிவத்தை ஜோசப் அவர்களின் தொடக்கவுரையுடன் நிகழ்வு ஆரம்பமானது.

இந்தியாவில் இருந்து இலங்கை மலேஷியா போன்ற நாடுகளுக்கு மக்கள் தொழிலுக்கா குடிபெயர்ந்த போதும் அவர்களது வாழ்வியலை தனியான ஒரு இலக்கிய தொகுதியாக்கியதில் இலங்கை மலையகத் தமிழ் மக்கள் என மலேசிய மூத்த எழுத்தாளர்கள் குறித்துரைக்கின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கை வந்து மீண்டும் இந்தியாவுக்கு சென்ற சி.பன்னீர்செல்வம்  மலையக இலக்கியம்  எனும் மரபின் வழிவந்த ஒருவர் என்பது சிறப்பானது. அவர்களுடைய எழுத்துக்கள் மூலமாக மலையக வாழ்வியலையும் அவர் சென்று சேர்ந்த தமிழக வாழ்வியலையும் தனது எழுத்துக்களில் பதிவு செய்துள்ளார்.

'விரல்கள்' எனும் நாவல் மூலம் தமிழகத்தில் ' கலைமகள்' இதழ் நடாத்திய கி.வா.ஜகநாதன் நினைவு பரிசு பெற்று மலையக எழுத்தாளர்களுக்கு பெருமை சேர்த்தவர். மலையக இலக்கியம் என்கின்ற தொகுதி / துறை வாழுகின்றவரைக்கும் சி. பன்னீர்செல்வத்தின் பெயரும் புகழும் வாழும் என்று பாராட்டு விழாவைத் தொடங்கிவைத்தார் தெளிவத்தை ஜோசப்

பன்னீர்செல்வம் இந்தியா சென்ற பின்னரும் கூட அவரது எழுத்துக்களை இலங்கை ஊடகங்களில் பிரசுரித்தவர் பத்திரிகையாளரும் இலக்கியவாதியுமான அந்தனி ஜீவா.

பன்னீர்செல்வம் தமிழகத்தில் 'சென்றவாரம்' என்ற வார பத்திரிகையின் ஆசரியராக இருந்தார். அதே போல 'மனித உரிமைக் கங்காணி' எனும் இதழின் உதவி ஆசரியராக பணியாற்றினார். இந்தியாவில் கலைமகள், குமுதம் முதலான பத்திரிகையில் எழுதியவர். அவரைச் சந்தித்த நாட்களில் அவரது படைப்புகள் பல அச்சேராமல் இருந்தன.அவற்றை இலங்கைக்கு கொண்டுவந்து 'குன்றின் குரல்', பத்திரிகையில் பிரிசுரித்தேன். அவரது 'தேயிலைப்பூக்கள்' காவியத்தையும் இலங்கை 'சூரியகாந்தி' பத்திரிகையில் வெளியிட்டேன். இறுதியாக 'திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில்' இடம்பெற்ற 'மலையக ஆய்வரங்கிலும்' அவர் இணைந்திருந்தமை சிறப்பானது என வாழ்த்தினார் அந்தனி ஜீவா.

எழுதத் தொடங்கி நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர்தான் சி.பன்னீர்செல்வத்தின் எழுத்துக்கள் ( ஜென்மபூமி - சிறுகதைகள்) தொகுப்பாக வெளிவந்துள்ளமை தமிழ் பதிப்புத்துறையின் வறட்சியை காட்டி நிற்கிறது. இருந்தும் சி. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேரின் பங்குபற்றலுடன் உருவான 'எங்கெங்கும் அந்தியாமாக்கப்பட்டவர்கள்' தொகுப்பு மிக முக்கியமானது. இலங்கையில் இருந்து இந்தியா திரும்பிய மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் முக்கிய ஆவணம் அது.

மார்க்சிய கருத்தியலை தமது அரசியல் சிந்தனையாக கொண்ட பன்னீர்செல்வத்தின் எழுத்துகள் புனைபெயருக்குள் ஒளிந்தவையல்ல. தான் சார்ந்த மக்களின் மீட்சிக்காக அவர் கவிதை, சிறுகதை, நாவல் என பலவிதத்திலும் பங்கெடுத்தவர். பல சோகங்களுக்கும் தடங்கல்களுக்கும் மத்தியில் இந்த சமூகம் இப்படியே இருந்துவிட முடியாது என்ற ஓர்மம் அவரது எழுத்துப் பணியில் நிறைந்து இருக்கிறது என சி.பன்னீர்செல்வத்தின் தேயிலைப்பூக்கள் காவியத்துக்கு முன்னுரை எழுதிய மு.நித்தியானந்தன் ( லண்டன்) வாழ்த்தினார்.

பன்னீர்செல்வம் 60, 65 காலப்பகுதியில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற ஓர் எழுத்தாளர். மலையக மக்களின் தேசியம், அரசியல் , பொருளாதாரம் முதலான சமூகம் சார்ந்த விடயங்களை தனது எழுத்துக்களுக்குள் பதிவு செய்தவர். அவரது படைப்புகளின் தலைப்புகளே அவரது எழுத்தின் எண்ணத்தை வெளிப்படுத்தும். இதுவரை மலையக இலக்கியத்தில் பெரும் குறையாக இருந்த ஒரு காவியத்தை படைத்ததன் மூலம் சி. வி . வேலுப்பிள்ளைக்கு ( இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே) பிறகு வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் பன்னீர். 'தேயிலைப் பூக்கள்' எனும் அந்தக் காவியத்தில் தனது தந்தை இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே காட்டுவது சிறப்பு என புகழ்மாலை சூட்டினார் மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம்.

நான் மலையகத்தைச் சேர்ந்தவரல்ல. தமிழ் நாட்டைச் சேரந்தவள். மலையகத்தவரான நாதன் அவர்களை துணைவராக கொண்டதால் மலையகம் மீதான ஆர்வம் கொண்டவள். அந்த மக்கள் தாய்நாட்டின் என கருதி வந்த தமிழ் நாட்டில் மனோரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எவ்வாறு பாதிப்புற்றார்கள் என்பதைக் காட்டும் ஆய்வு நூலான 'எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள்' ஆய்வு, வெளியீட்டு பணியில் பன்னீர்செல்வத்துடனான குழுவாக இணைந்து செயற்பட்ட அனுபவம் முக்கியமானது. இந்த நூலை உருவாக்குவதில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது. இவரது எல்லா எழுத்துக்களிலும் மலையகத் தமிழர்களின் வலிகளை பதிவு செய்திருப்பார் என அவரோடு சேரந்தியங்கிய நாதன் அவர்களின் துணைவியார் தமிழகத்தில் சமூகப் பணியாற்றும் திருமதி உருசுலா நாதன் தெரிவித்தார்.

பாடசாலை காலத்திலேயே வாசிப்பில் ஆர்வம் காட்டியவர். பாடசாலை பயணத்துக்கான பஸ் பணத்தைச் சேமித்து இலக்கிய இதழ்களை வாங்கிப் படித்தவர். பாடசாலை மாணவராகவே 'அறிவுச்சுடர்' எனும் இதழை நடாத்தினார். சித்திரம் வரைதலிலும் ஆற்றல் நிறைந்தவர்.
'இளங்கோ நாடக மன்றம்' எனும் நாடக மன்றம் நடாத்தியவர். பாடசாலை மாணவராக இருந்த போதே சிறுகதைக்காக இலங்கை சாகித்திய மண்டல பரிசு பெற்றவர். கொட்டாங்கந்தை எனும் அவரது ஊரின் பெயரையே 'கொற்றகங்கை' என இலக்கிய சுவையுடன் மாற்றி அமைத்தவர். நாடற்றவன் என்ற நிலையில் அடிமை வாழ்வு வாழ விருப்பமில்லை என இந்தியாவுக்கு திரும்பி சென்றார் என அவரது பாடசாலை நண்பர் உமாபதி (கல்முனை) நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

ஜென்ம பூமியின் நினைவுகளை சுமப்பவர் மட்டுமல்ல அதனை எழுத்திலும் படைக்கும் நண்பர் பன்னீர்செல்வத்துடனான நட்பு 1963 ல் இருந்து தொடர்ந்து வருகிறது. அரசியல் , இலக்கியம், நாடகம் என இலங்கையில் ஒரே தோட்டப்பகுதியில் இணைந்து செயற்பட்டோம். அவரது சகோதரர் அரு சிவானந்தனோடு தமிழ் நாடு வந்தபோது அவரை சந்தித்து தொடர்ந்து இயங்கினோம். 1987 ஆம் அண்டு 'டெலோ' இயக்கத்தினர் எங்கள் தோழர் பி.எஸ்.நாதன் அவர்களை கடத்தியபோது போராட்டம் செய்து மீட்டு எடுத்தோம். அவரது எழுத்துப் பணி சிறப்பானவை என அவரது இலக்கிய தோழமை மு.சி.கந்தையா வாழ்த்தினார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த போது மாணவர் ஒன்றுகூடல் ஒன்றுக்கு பாடசாலை மாணவராக சாகித்ய பரிசு பெற்ற சி. பனலனீர்செல்வத்தை அழைத்துப் பாராட்டினோம். அந்த விழா கண்டி அசோக்கா மண்டபத்திலே நடைபெற்றது. பின்னர் அவர் தமிழகத்திற்கு சென்று அவரது குழுவினருடன் உணர்வுபூர்வமாக தயாரித்தளித்த 'எங்கெங்கும் அந்தியமாக்கப்பட்டவர்' நூல் எனது ஆய்வுக்கான உசாத்துணையாக இருந்தது. 'மலையக இலக்கியம்' எனும் தொகுதி அங்கீகாரம் பெற்றிருக்காத நிலையில் எங்களது ஆசிரியர் திருச்செந்தூரன் 'கல்கி' பத்திரிகை நடாத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்று கொண்டு வந்த அங்கீகாரத்தின் தொடர்ச்சியாக பன்னீர்செல்வம் 'கலைமகள்' இதழில் தனது 'விரல்கள்' நாவலுக்காக பரிசு பெற்றமை காட்டி நிற்கிறது.
மலையக இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த பெருமகனார் பன்னீர்செல்வம் என ஓய்வு நிலை அரச உத்தியோகத்தர் எம்.வாமதேவன் வாழ்த்தினார்.

பன்னீர்செல்வம் பிறந்த அதே ஊரின் அடுத்த எல்லையில் பிறந்தவன் என்கிற வகையில் பன்னீர்செல்வம், அரு.சிவானந்தன், மு.சி.கந்தையா போன்ற இலக்கிய வழித்தோன்றல்களின் தொடர்ச்சியானவனாக என்னைப் பார்க்கிறேன். அடுத்த தலைமுறையினரான நான் மதுரையில் அவரை சந்திக்க கிடைத்த சந்தர்ப்பத்தின் போது அவர், 'கொற்றகங்கை'யில் நீர் ஓடுகின்றதா என கேட்டது என்னை நெகிழச்செயத்து.

அந்தக் கேள்வியின் ஊடே அந்த மண்மீதான அவரது பற்றுதலையும் அங்கு வாழும் மனிதர்கள் மீதான பரிவையும் காட்டுவதாகவும் அவை அவரது படைப்புகளில் வெளிப்படுவதாகவும் உள்ளது. அவரது படைப்பின் கனதியும் செழுமையும் வெளிப்படுத்திய கருத்து நிலை என்பவற்றால் மலையக, ஈழத்து இலக்கியத்தில் போலவே ஒட்டுமொத்தமாக தமிழ் இலக்கிய பரப்பிலும் தனித்துவமான ஒரு அடையாளத்தைத் கொண்டவையே.

2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு , திண்டுக்கல், காந்தி கிராம் கிராமிய பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற "மலையக இலக்கிய ஆய்வரங்கில்" இலக்கிய ஆளுமைகளுடன் நடுநாயகமாக சி.பன்னீர்செல்வம்.

மலையகத்தில் இருந்து தாயகம் திரும்பிய எழுத்தாளர்களுள் அந்த வாழ்வியலை அழகியல் கலந்து வெளிப்பாடாக தந்தவர்களில் பன்னீர்செல்வத்துக்கு தனியான ஓர் இடமுண்டு. உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து செல்ல நேர்ந்த மகலகளின் உள்ளக்குமுறல்களின் வெளிப்பாடுகளுக்கு சமாந்திரமாக மலையக மக்களின் புலப்பெயர்வு வாழ்வினைப் பதிவு செய்துள்ளார்.

980 களுக்கு முன்னரே இலங்கையில் புலம்பெயர் இலக்கிய வகைமையை முன்வைத்த முன்னோடிகளில் ஒருவராக பன்னீர்செல்வம் திகழ்கிறார். புலம்பெயர் கருத்தாடல்களின் போது பன்னீர்செல்வத்தின் படைப்புகள் தவிர்க்க முடியாத இடத்தினைப் பெறுகின்றது. பலவிதங்களில் இவர் மலையக முன்னணி படைப்பாளர்களில் ஒருவராகிறார். மானுட நேயத்துடன் இவர் வாழ்ந்த மண்ணையும் மக்களையும் தன் நெஞ்சில் சுமந்து படைப்பிலக்கியம் செய்த பன்னீர்செல்வம் இலக்கிய வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார் ‘பன்னீர் செல்வத்தின் படைப்புலகம்’ எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்திய பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஜெயசீலன் கருத்துரைத்தார்.

திண்டுக்கல் நகரில் 'சென்றவாரம்' பத்திரிகையில் பன்னீர் அண்ணனுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் மகத்தானது. அவருடைய இலக்கிய பார்வை, இடதுசாரி சிந்தனை, சமூகப் பார்வையை எனக்கு கற்றுக்கொடுத்த ஆசான். நாங்கள் லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுதும் வாழ்ந்தாலும் இலங்கை மலையகத்தைத் தான் ஜென்ம பூமியாக கருதுகிறோம்.

எங்களது சிந்தனைகள், பேச்சுகளில் அதுவே வெளிப்படுகிறது. அந்த தலைமுறையின முதன்மையானவராக பன்னீர்செல்வம் காணப்படுகிறார். சாதாரண மனிதரான பன்னீர்செல்வம் சாதாராண மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தியவர். பன்னீர்செல்வத்துக்கு இப்படி தேசெல்லைகள் கடந்து இலக்கிய உறவுகள் இணைந்து வாழங்கும் பாராட்டு முழு மலயைகத்திற்கும் பெருமை சேர்க்கும் விடயாமாகிறது என வழக்கறிஞர் தமிழகன் ( திருச்சி) நன்றி தெரிவித்தார்.

பன்னீர் அவர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வு இணையவழியூடாக இடம்பெற்ற போது மூத்த எழுத்தாளர்களான அந்தனி ஜீவா, மு.நித்தியானந்தன் - லன்டன் ஆகியோருடன் பன்னீர் அவர்கள்...

உரைகளின் இடையே பங்கு பற்றுனர்களாக கலந்து கொண்டிருந்த பலரினதும் வாழ்த்துக்களை எழுத்து வடிவில் பெற்று நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்டார் நெறியாளர் திலகர். அந்த வகையில் தமிழ் நாட்டில் இருந்து ராஜேந்திரன், ச.மோகன், கா.கணேசன்,( மதுரை) க.பூபாலன் ( மேட்டுப்பாளையம்), தோழர் ஜெயசிங் ( திருவனந்தபுரம்), டார்வின் ( திருச்சி), ஈழம் மலர்மன்னன் தம்பிராஜா ( தேவகோட்டை), ரவிச்சந்திரன் ( கன்னியாகுமரி) கார்த்திகேயன் ( மதுரை) வழக்கறிஞர் மாட்டின் (மதுரை )ஆகியோருடன் இலங்கையில் இருந்து கவிஞர் சு.முரளிதரன், விரிவுரையாளர்கள் ஜே.சற்குருநாதன், மூ. அகிலன், கவிஞர் இரத்னஜோதி, ஆசிரியர் கிறிஸ்தோபர், ஊடகவியலாளர்கள் ஜீவா சதாசிவம், ராம், சமூக ஆர்வலர் சண்முகராஜா என பலரது வாழ்த்துகளும் இணைத்துக் கொள்ளப்பட்டு இருந்தன.

இறுதியா எழுத்தாளர் சி.பன்னீர்செல்வத்தினது ஏற்புரையுடன் அவரது குடும்பத்தாரின் நன்றியறிதலுடன் விழா இனிதே நினைவேறியது. வாழ்நாள் முழுவதும் எழுத்திலேயே வாழ்ந்த நோய்வாப்பட்ட நிலையில் இருக்கும் எழுத்தாளருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது அறிவிக்கப்பட்டது அவருக்கு வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரும் கௌரவமாகும்.

நன்றி :- தமிழன் இலக்கிய சங்கமம்


இந்திய புலமைப்பரிசில் திட்டமும்  தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளும் 

மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் இருந்து மீண்டும் இந்தியா திரும்பி தேச விடுதலை போராட்டத்தை ஆரம்பித்த நாளை ( ஜனவரி 9) சிறப்பிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின விழா ஆண்டுதோறும் உலகெங்கிலும் உள்ள இந்திய உயர்ஸ்தாணிகர் காரியாலயங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் கண்டிக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் ( 19-01-2021) கண்டி மாவலி ரீச் விருந்தகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் செய்திக்குறிப்பு 
இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தின் ஊடாக கடந்த எழுபதாண்டுகளுக்கு மேலாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் ஆற்றி வரும் அளப்பரிய பணியை அதன் பயனாளிகளில் ஒருவனாக நன்றியுடன் நினைவு கூர்வதோடு, தொழிலாளர் பிள்ளைகளுக்கு என ஒதுக்கீடு செய்ய இந்திய அரசாங்கம்  முன்வரவேண்டும் என முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

2021 - கண்டியில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் தின விழாவில்
அவர் மேலும் உரையாற்றுகையில்,
மலையகத் தமிழர்களாகிய நாம் இந்திய வம்சாவளி யினர் என்பதுதான் எமது வரலாறு. அந்த வரலாற்றின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பதே இந்திய உயர்ஸ்தாணிகரகத்தின் கண்டி காரயாலயம்.  1947 ஆம் ஆண்டுமுதல் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகையாக மாதாந்தம் வழங்கி வரும் பங்களிப்பினை அதன் பயனாளிகளில் ஒருவனாக வரவேற்கின்றேன்.
2019 - இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்ற போது அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஶ்ரீமத் சுஷ்மா சுவராஜ் உடனான சந்திப்பின்போது....
அதே நேரம் அவ்வாறு வழங்கப்படும் உதவுதொகை உயர்தர மாணவர்களுக்கு ஐநூறு ரூபா, பல்கலைக் கழக மாணவர்களுக்கு 1500/- ரூபா என்ற அளவிலேயே நீண்டகாலமாக இருந்து வருகிறது. அதனை அதிகரிப்பதற்கு முன்னைய டெல்லி பயணங்களின்போது வெளிவிவகாரத்துறை அமைச்சராகவிருந்த மறைந்த சுஷ்மா சுவராஜ் அம்மையாரிடம் முன்மொழிவு செய்துள்ளேன்.
தவிரவும் இந்திய அரசாங்கத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்தியாவில் பட்டப்படிப்பு பெறுவதற்காக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு என ஒரு தொகையை ஒதுக்கீடு செய்வதிலும் அம்மையார் கொள்கை அளவில் இணங்கி இருந்தார். இந்த இரண்டு விடயங்களிலும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகரகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என எனது கோரிக்கையை வலியுறுத்த விரும்புகிறேன்.
2022 ஆம் ஆண்டு இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் 75 ஆண்டு நிறைவினை அடைகிறது. 1947 ஆம் ஆண்டு அமரர் அனி அவர்களினால் தாபிக்கப்பட்ட இந்த அமைப்பில் உதவி பெற்று கல்விகற்ற பலர் இன்று பல உயர்ந்த பதவிகளில் உள்ளனர். அவர்களது சாதனைகளைக் குறிக்கும் ஒரு நினைவு மலரை 75 வது ஆண்டு நிறைவாகக் கொண்டுவருவது மலையகக் கல்வி வளர்ச்சியின் ஓர் அடையாளமாகவும் இந்திய அரசாங்கத்தின் பணிகளின் ஒரு மீளாய்வாகவும் அமையக்கூடும். 1998 ஆம் ஆண்டு அத்தகைய ஒரு ஆவணம் வெளியிடப்பட்டுள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

2011- டில்லியில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் தின விழாவில் உரையாற்றிய தருணம்
இத்தகைய உதவிகளைப் பெற்று கல்வி கற்றோர் இன்று கல்வியாளர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, வெளிநாட்டு தூதுவர்களாக, பேராசிரியர்களாக, உயர் தொழில் துறையினராக,  வளர்ந்திருக்கக் கூடிய பலரது சாதனைகள் பதிவு பெறுவது அவசியமாகும். அதுவே அவர்களது ஒன்று கூடல் நிகழ்வாக அமையுமெனில் மேலும் சக்தி மிக்கதாக இருக்கும் இது ஒரு வகையில் இந்த நிதியத்தினை மேலும் சக்தி மயப்படுத்துவதற்கும் எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமையும்  இந்திய வெளிவிவகார அமைச்சரின் அண்மைய விஜயத்தின்போது இந்தியாவில் வாழும் அகதிகளை திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு வட கிழக்கு அரசியல் தலைமைகள் கோரிக்கை விடுத்ததாக அறிந்தேன்.
ஆனால் இந்தியாவில் வாழும் அகதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் மலையகத்தில் இருந்து வன்னி சென்று அங்கிருந்து அகதியாகப் போன இந்தியா வம்சாவளி தமிழர்கள் என்றவகையில் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கடந்த வருடம் ஆவணங்களுடன் விடுத்த வேண்டுகோளை நினைவுபடுத்த விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளின் இந்திய புலமைப்பரிசில் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் (வீரகேசரி 21-01-2021)


பெருந்தோட்டத்துறை சுகாதார நிலை

ஒரு கொள்கை  மீள்பார்வை  

- மல்லியப்புசந்தி திலகர்
இலங்கையின் பெருந்தோட்டத்துறைசார்ந்து கடந்த அரை தசாப்த காலமாக பேசப்படும் பிரச்சினை ஆயிரம் ரூபா நாட்சம்பளம். எனினும் அதனைத் தாண்டிய பல பிரச்சினைகள் உண்டு என அரசியல் களத்தில் பேசப்படுவதுண்டு.
அத்தகையப் பிரச்சினைகளை அடையாளம் காண்பதும் அதனைப் பேசு பொருளாக்குவதும் அவற்றுக்கான தீர்வுத்தடங்களைத் தேடுவதும் குறித்த பிரச்சினைகளில் இருந்து மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதற்கான வழிமுறையாகும்.
அவ்வாறான ஒரு பிரச்சினையாக அடையாளம் காணப்படக்கூடிய பெருந்தோட்ட சுகாதார முறைமை பற்றிய கொள்கை மீள்நோக்கு கற்கையாக வெளிவந்திருப்பது Policy Review on the Status of Health in the Plantation Sector (பெருந்தோட்டத்துறை சுகாதார நிலை சார்ந்த நிலை பற்றிய கொள்கை நோக்கு )எனும் ஆங்கில நூல்.
கண்டியில் அமைந்துள்ள மனித அபிவிருத்தித் தாபன வெளியீடாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் தொகுத்தளித்திருக்கும் இந்த நூலுக்கான ஆய்வினை வைத்தியர் நிதர்ஷனி பெரியசாமி, சட்டத்தரணி துலானி லியனஹெட்டி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். நூலின் ஆவண மதிப்பீட்டாளராக வைத்தியர் நூரி கிறேஸ் ஒமாலின், நூலாக்க இணைப்பாளர்களாக HJ பர்ஹானா, சட்டத்தரணி அ.செல்வராஜ் ஆகியோரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
“இலங்கை வெற்றிகரமான இலவச சுகாதார முறைமையைக் கொண்ட நாடாக சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. எனினும் இந்த முறைமையில் வாய்ப்பினைப் பெறாத ஒரு மக்கள் குழும்மாக பெருந்தோட்ட சமூகத்தினர் இருப்பது துரதிஷ்டமானது. மிகக் குறைந்த சுகாதார குறிகாட்டிகளின் அளவு மட்டத்தைக் கொண்டவர்களாக, மிகக் குறைவான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் பிரிவினராக பெருந்தோட்ட மக்கள் காணப்படுகின்றனர்.
தோட்ட சுகாதார முறைமை முழுமையாக தேசிய சுகாதார முறைமைக்குள் உள்வாங்கப்படாமையின் விளைவுகளே இவையாகும்” என தனது முகவுரையில் தோட்ட சுகாதார முறைமயின் நிலை பற்றிய ஓர் அறிமுகத்தைத் தருகிறார் தொகுப்பாசிரியர் பி.பி.சிவப்பிரகாசம்.
“தோட்டத்துறையில் வாழும் மக்கள் தொடர்பான தனித்துவமான சட்டங்களும் ஒழுங்
கு விதிகளும் உள்ளன. அவற்றுள் சுகாதார சேவைகளுக்கான சட்டங்களும் அடக்கம். கிராமப்புற மக்களுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்டப் பகுதியில் மிகவும் குறைவான தரமுடைய சுகாதார சேவைகளையே பெறுகின்றனர்.
பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனங்களும் நிர்வகிக்கும் தோட்டங்களில் அந்த நிர்வாகமே தோட்ட மருத்துவ உதவியாளர்களை நியமித்து சுகாதார சேவைகளுக்கு பொறுப்பாக உள்ளது. மருத்துவர் தகைமை பெற்ற அதிகாரிகளை தோட்டப் பகுதி சுகாதாரத்துக்காகப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண எத்தனித்தபோதும் அதன் செயற்பாடுகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றது

 

. இந்த கொள்கை மீள்நோக்கு அறிக்கையானது தோட்ட மருத்துவ முறைமையை தேசிய முறைமைக்குள் கொண்டு வருவதில் காணப்படும் இடைவெளிகளை இனங்கான விளைகிறது” என இத்தகைய ஆய்வறிக்கையின் தேவைப்பாடு குறித்தும் விளக்குகிறார்.
மலையகப் பெருந்தோட்டத்துறையில் அமுலில் உள்ள தோட்ட சுகாதார முறைமையை அரசாங்கம் பொறுப்பேற்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்க உள்ள தாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கடந்தவாரம் (7/1/2021) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

 

அப்படியாயின் தோட்ட சுகாதார முறைமை என்ற ஒன்று நடைமுறையிலுள்ளது என்பதும் இதுவரையில் அரசாங்கத்தின் பொறுப்பில் மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் சுகாதார நடைமுறைகள் இல்லை என்பதும் தெளிவு.

 

2006 ஆம் ஆண்டு நிமல் சிறிபால டி சில்வா சுகாதார அமைச்சராகவும் வடிவேல் சுரேஷ் பிரதி சுகாதார அமைச்சராகவும் இருந்த காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்தின் பேரிலேயே 44 தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. அவற்றுள் சுமார் 22 வைத்திய நிலையங்களே இப்போது இயங்குகின்றன. ஏனையவை கைவிடப்பட்டுள்ளன.
2018   ராஜித்த சேனரத்ன சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அபிப்பிராயம் கோரலுக்காக ஏனைய அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்டபோது அந்தத் திட்டத்தை மறுத்த அமைச்சுக்களும் இருந்தன.
இந்த நிலையிலேயே சுகாதரம் தொடர்பிலான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் உறுப்பினராகவும், பின்னாளில் தலைவராகவும் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா செயற்பட்ட காலத்தில், தோட்ட சுகாதார முறைமையை தேசிய சுகாதார முறைமைக்குள் கொண்டுவருவதற்கு பாராளுமன்ற மேற்பார்வை உப குழு ஒன்றை உருவாக்கி, திட்டத்துடன் தொடர்புடைய ஐந்து அமைச்சுக்களையும் இணைத்து பெறப்பட்ட உடன்பாட்டு அறிக்கை 2020 பெப்வரி 19 இலங்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அதே நேரம் முதலாவது அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்த காலத்தில் பிரதி சுகாதார அமைச்சராக இருந்த, தற்போதைய பதுளை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேள்வி- பதில்  நேரத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தோட்ட சுகாதார முறைமை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படும்  என  சபையில் கூறியுள்ளார்.
இந்த கட்டத்திலேயே அமைச்சுக்களை இணைத்து தயாரிக்கப்பட்ட சுகாதார மேற்பார்வைக் குழுவின் அறிக்கையின் அவசியத்தை  அமைச்சர் பவித்திரா வனலனியாரச்சியின் உரையில் அவதானிக்க முடிகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது வைத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்ய காணிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல்களை அமைச்சர் விபரக்கிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா ( கட்டுரையாளர்) தான் சுகாதார மேற்பார்வைக் குழுவாக செயற்பட்ட காலத்தில் 500 தோட்ட வைத்திய நிலையங்களையும்  அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர  நிர்வாக மட்டத்தில் ஏற்பாடுகள் சீர் செய்யப்பட்டுள்ளன. திட்டத்துடன் தொடர்புடைய சுகாதார அமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு, காணி அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, மாகாண சபைகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்ட அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிகள் சுகாதார அமைச்சின் ' தோட்ட நகர சுகாதார பிரிவு' பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த கொள்கை மீளாய்வு அறிக்கையைத் தொகுத்தளிக்கும் மனித அபிவிருத்தித் தாபன ( கண்டி) அதிகாரிகள் செயற்பாட்டாளர்களை , பாராளுமன்ற சுகாதார மேற்பார்வைக் குழுவினருடன் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா இணைத்து செயற்படுத்தியிருந்தமை அவதானத்துக்குரியது. மேலும், கடந்த 2020 செப்தெம்பர் மாதம் சுகாதார அமைச்சுன் தோட்ட சுகாதார பிரிவின் பணிப்பாளரையும் சிவில் சமூகங்களையும் இணைத்த கலந்துரையாடல் ஒன்றும் மனித அபிவிருத்தித் தாபனத்தின் அனுசரணையில் நுவரெலியாவில் நடைபெற்று உள்ளது.
அத்தகைய கலந்துரையாடல்களின் பிரகாரம் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அதனை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளதாகவே தெரிகிறது. அதற்கான அங்கீகாரத்தை புதிய அமைச்சரவைப் பத்திரம் வழங்கினாலே போதுமானது.
அத்தகைய நடைமுறைப்படுத்தலை இலகுவாக்க இத்தகைய கொள்கை விளக்க மீளாய்வு அறிக்கைகள், நாடாளுமன்ற அறிக்கைகள் இந்த காலகட்டத்தில் அவதானத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மனித அபிவிருத்தித் தாபனத்தின் இந்த கொள்கை மீளாய்வு அறிக்கை நான்கு அலகுகளாக தொகுக்கப்பட்டுள்ளது. அலகு 1 அறிமுகம், நோக்கம், ஆய்வுக்கான கேள்வி, முறையியல் பற்றி விளக்குகிறது. அலகு 2 இலங்கை பெருந்மோட்ட சமூக வரலாறு, அதன் ஒழுங்கிலான தோட்ட சுகாதார முறைமை வழங்கல், தோட்ட சுகாதார முறைமையில் உள்ள பிரச்சினைகளும் காரணங்களும், பெருந்தொட்ட சுகாதார கட்டமைப்பை தேசிய சுகாதார முறைமைக்குள் கொண்டுவரவேண்டியதன் தேவை, பெருந்தோட்ட சமூகத்தின் சுகாதார உரிமைகள் தொடர்பாக விளக்குகிறது.
அலகு 3 ல் இன்றைய கொள்கைகள், சட்ட முரண்பாடுகள், பெருந்தோட்டப்பகுதி இனவிருத்தி சுகாதாரம், தோட்டத்துறைக் கல்வி தேசிய மயமும் சாதகமான மாற்றமும் ( ஒப்பீட்டாய்வு) போன்ற விடயங்களும் அலகு 4 முடிவுரைகளும் பரிந்துரைப்புகளும் என 70 பக்கங்களைக் கொண்ட இந்த ஆய்வறிக்கை 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
தோட்ட சமூகம் இடையீடற்ற திருப்திகரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்யும் முகமாக அவர்களின் தேவைகளை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான வலுவான மூலோபாய பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என இந்த கொள்கை மீளாய்வு அறிக்கை பரிந்துரைப்பாக வலியுறுத்துகிறது.
“இந்த அறிக்கை உள்நாட்டு , தேசிய மட்ட சுகாதார அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதுடன், பெருந்தோட்டத்துறை தொடர்பான கொள்கைகளில் திருத்தங்களைக் கோரும் பரப்புரைகளை நியாயப்படுத்தும் சாட்சியங்களைக் கொண்டது” என இவ்வெளியீட்டிற்கு அனுசரணை வழங்கி இருக்கும் MDM France நினுவனத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி எலெனா கிறிஸ்டினி தனது முன்னுரையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Virakesari 17/01/2021

சிறுதோட்ட உடைமை என்பது;மலையக தலைமுறையின் நாகரீகமான அரசியல், சமூக இருப்புக்கான கோரிக்கை

- முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்

இலங்கையில் இருநூறு வருடகால வரலாற்றைக் கொண்ட மலையகத் தமிழர் சமூகத்தினர் மத்தியில்  பேசுபொருளாகி இருக்கும் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உடமையாளர்களாக்க வேண்டும் எனும் கோரிக்கை தனியே தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கான தீர்வு மாத்திரமல்ல, அது ஐந்தாவது தலைமுறையான இன்றைய மலையக தலைமுறையின் நாகரீகமான அரசியல், சமூக இருப்புக்கான கோரிக்கையாகும் என்பதைப் புரிந்து கொண்டு இன்றைய இளைய தலைமுறை அதனை உரையாடவும் வென்றெடுக்கவும் முன்வரவேண்டும் என முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் சமூக ஆய்வாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

மலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் ஏற்பாட்டில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜீவன் ராஜேந்திரனின் நெறிப்படுத்தலில் இணைய வழி கருத்தாடல் களம் கடந்த சனிக்கிழமை மாலை 7 மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளருமான மு.சிவலிங்கம், முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் சமூக ஆய்வாளருமான மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் உரையாளர்களாக கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.


கருத்தாடல் களத்தின் கேள்வியாக “தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை கூலி உயர்வா? சிறுதோட்ட உடமையா ? அமைய வேண்டும் என்பதாக இருந்தது. அதற்கு பதில் அளித்து கருத்துரையாற்றிய மு.சிவலிங்கம் கூறியதாவது,இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும்போது அத்தகைய ஒரு கேள்வியுடன் தொடர்புடைய மூன்று தரப்பினரை நாம் அடையாளம் காணவேண்டியுள்ளது. அரசாங்கம், தோட்டக் கம்பனிகள், மக்கள் பிரதிநிதிகள் எனும் இந்த மூன்று தரப்பினர் மீதான விமர்சனங்களை முன்வைக்காது இந்த கருத்தாடலை முன்கொண்டு செல்ல முடியாது. குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் என்போர் தொழிற்சங்கத்தை தமது அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான கருவியாக கையாளத் தொடங்கியவுடன் அரசாங்கத்தின் மடியில் தவழும் செல்லப் பிள்ளைகளாகி எதனையும் தட்டிக் கேட்க முடியாதவர்களாக மாறிவிடுவது வேதனைக்குரியது. 1000/= என்பது சம்பளம் இல்லை.
அது கூலி. எனவே அந்தக் கோரிக்கையை தொடர்ச்சியாக கம்பனிகளிடம் வேண்டி நிற்பதானது நாங்கள் ‘கூலிகளாக’ தொடர்ந்து இருக்கத் தயார் என்ற அடிமை நிலைக் கோரிக்கையாகவும் அவலநிலை நிலைத் தொகையாகவும் மாறியுள்ளது. அதில் இருந்து விடுபட சுயாதீன உழைப்பாளர்களாக மாறும் தேவை உள்ளது. அதற்கு காணி என்பது மிக அவசியமான ஒன்று. எனவே காணியை அடிப்படையாகக் கொண்ட சிறுதோட்ட உடமையே கூலிச்சமூகம் எனும் அடிமைச் சமூக நிலையில் இருந்து மலையக சமூகத்தை மீட்டெடுக்க வழிகோலும் என தெரிவித்தார்.
கருத்தாடலில் பங்கு கொண்ட மயில்வாகனம் திலகராஜ் கூறுகையில்,
இலங்கை வந்து 200 வருடங்களை எட்டிப்பிடிக்கும் மலையகத் தமிழர் சமூகம் முதல் நூறு ஆண்டு காலமும் முற்று முழுதான கொத்தடிமைச் சமூகமாக வைக்கப்பட்டிருந்த வரலாறும் அதற்கடுத்த நூறு ஆண்டுகளில்  அடைந்திருக்கக் கூடிய அரசியல், சமூக, பண்பாட்டு பரிமான மாற்றங்களையும் அவதானத்தில் எடுத்து இன்றைய கோரிக்கை என்னவாக இருக்கவேண்டும் எனும் தீர்மானத்துக்கு வரவேண்டும்.

1820 முதல  1920 வரையான முதல் நூறு ஆண்டுகாலத்தில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்ட தலைமுறையினரை முதலாம் தலைமுறையினராகக் கொண்டால், அதற்கடுத்த ஒவ்வொரு முப்பதாண்டுகளிலும் வாழ்ந்த ஒவ்வொரு தலைமுறையும் மைன்கொண்டு சென்ற ஒரு அரசியல் தீர்மானம் பற்றிய ஆய்வு இங்கே வேண்டத்தக்கது.
1920 முதல் 1950 வரையான முப்பதாண்டு காலத்தில் அடிமைகளாக இருந்து அரசவையில் அங்கத்துவம் பெற்ற அரசியல் பரிமாணத்தை தொழிற்சங்க கட்டமைப்பின் ஊடாக இரண்டாந் தலைமுறை கண்டடைந்தது.
அதற்கடுத்த 1950 க்கும் 1980 க்குமான பகுதியில் பறிக்கப்பட்ட குடியுரிமையை மீளப்பெறும் போராட்டத்தில் மூன்றாம் தலைமுறை இயங்கியது. அதாவது இரண்டாந்  தலைமுறை கண்டைந்த வெற்றி பறிக்கப்பட்டபோது அதனை மீளப் பெறுவதில்  மூன்றாம் தலைமுறை இயங்கி இருக்கிறது. அதில் வெற்றியும் கண்டது.
அதற்கடுத்த 1980 முதல் 2010 வரையான நான்காம் தலைமுறையினர் மீளப்பெற்ற வாக்குரிமையைக் கொண்டு அரசியல் பிரதிநிதித்துவம் பெறுதல் அமைச்சரவையில் அங்கம் வகித்தல் எனும் அபிவிருத்திக்கான இலக்கினை ஒரு தலைமுறைக் கோரிக்கையாக முன்னெடுத்தது.

இப்போது 2010 க்குப் பின்னான ஐந்தாம் தலைமுறையின் தமது இலக்காக கோரிக்கையாக முன்கொண்டு செல்லவேண்டிய விடயம் என்ன என நோக்கும்கோது அது தொழிலாளர்களை சிறு தோட்ட உடமையாக்குதல் என்பதே சரியான தெரிவாக அமைகிறது.

ஏனெனில் முதலாம் தலைமுறையே தன்னை தியாகம் செய்து உருவாக்கிய இரண்டாம் தலைமுறை காலத்தில் 1940 ல் முல்லோயா  கோவிந்தன் எனும் தியாகியின் வீர மரணத்தின் ஊடாக கூலி உயர்வு கோரிக்கை முன்னிறுத்தப்பட்டுள்ளது.  அடுத்த மூன்றாம் தலைமுறை காலத்தில் சிவனு லட்சுமணன் எனும் தியாகியின் வீர மரணத்தின் ஊடாக காணி உரிமை கோரிக்கை முன்னிறுத்தப்பட்டது.

 நான்காம் தலைமுறை காலத்தில் அபிவிருத்தியை இலக்காக கொண்டு இந்த கூலி உயர்வும், காணி உரிமையும் இரண்டு கோரிக்கைகளும் மக்கள் போராட்டம் என்ற நிலையில் இருந்து கைநழுவி சென்றது. இதே சமகாலத்தில் காலனித்துவ வாதிகளிடம் இருந்து தோட்டங்களை அரசு பொறுப்பேற்று இருபதாண்டு ( 1972-1992) காலப்பகுதிக்குள்ளாகவே சிங்கள மக்களை சிறு தோட்ட உடமையாளர்களாகவும் மலையகத் தமிழரை தனியார் பெருந்தோட்டங்களின் கூலித் தொழிலாளர்களாக அதுவும் ஒப்பந்த அடிப்படை கூலிகளாக மாற்றி விட்டுள்ளது.

எனவே ஐந்தாம் தலைமுறையினரான இன்றைய தலைமுறையினர் தமது பிரதான கோரிக்கையாக எதனைக் கொள்ளவேண்டும் என நோக்கும்போது இரண்டாம் தலைமுறை கூலி கோரிக்கையா? மூன்றாந்தலைமுறை காணி கோரிக்கையா?  என சிந்திக்குமிடத்து இரண்டுக்கும் தீர்வைத் தரக்கூடிய சிறுதோட்ட உடமை எனும் கருத்தியலைத் துணிந்து ஏற்பவர்களாதல் வேண்டும். துரதிஷ்டவசமாக ஐந்தாம் தலைமுறையினர் இரண்டாம் தலைமுறையினர் நின்ற இடத்தில் நிற்கும் பலவீனத்தையே பார்க்க முடிகிறது.

சிறுதோட்ட உடைமையாளர் எனும் இலக்கு தனியே  தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கான தீர்வு மாத்திரமல்ல, அது ஐந்தாவது தலைமுறையான இன்றைய மலையக தலைமுறையின் நாகரீகமான அரசியல், சமூக இருப்புக்கான கோரிக்கையாகும் என்பதைப் புரிந்து கொண்டு இன்றைய இளைய தலைமுறை அதனை உரையாடவும் வென்றெடுக்கவும் முன்வரவேண்டும் என்றார்.


( நன்றி வீரகேசரி )


தோட்ட சுகாதாரம் : தொடரும் உரையாடல்கள்

  - மயில்வாகனம் திலகராஜா

அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் அமைச்சரவை பத்திரத்தினூடாக அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது. அதே நேரம் அமைச்சரவைப் பத்திரத்தினைத் தாண்டி தோட்ட சுகாதார முறைமையை தேசிய மயமாக்குவதற்கு பல பணிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அதற்கு சுகாதார மேற்பார்வைக் குழு அறிக்கையை கையில் எடுக்க  வேண்டும்.

தோட்ட சுகாதார முறைமை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சபையில் வழங்கிய உறுதிப்பாட்டை அடுத்து தோட்ட சுகாதார முறைமையை தேசிய சுகாதார முறைமையாக்குவதற்கு கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வழிமுறைகளையும் அவை வெற்றியளிக்காத நிலையில் எதிர்வரும் காலத்தில் அதனை வென்றெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராய்வதாக ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையோடு இணைந்ததாக இந்தக் கட்டுரை அமைகிறது. கூடவே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் சுகாதார துறை நாடாளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவராக சபைக்கு சமர்ப்பிக்கட்ட அறிக்கையும் இந்த கட்டுரையோடு இணைக்கப்பட்டுள்ளது.

தோட்ட சுகாதார முறைமையை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் பொருட்டு இதற்கு முன்னரும் இரண்டு அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

2006 ஆம் ஆண்டு நிமல் சிறிபால டி சில்வா சுகாதார அமைச்சராகவும் வடிவேல் சுரேஷ் பிரதி சுகாதார அமைச்சராகவும் இருந்த காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்தின் பேரிலேயே 44 தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. எனினும் அதில் 22 அளவே இப்போது செயற்பாட்டில் உள்ளபோதும் ஏனையவை செயலற்று முடங்கின. அதற்கு பின்னர் வேறு வைத்திய நிலையங்களுக்காக அந்த அமைச்சரவைப் பத்திர தீர்மானம் பயன்படுத்தப்படாததோடு அந்த பத்திரமும் மாயமாகிவிட்டது.

அதன் பின்னர் 2018   ராஜித்த சேனரத்ன காலத்தில் ஒரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அபிப்பிராயம் கோரலுக்காக ஏனைய அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்டபோது அந்தத் திட்டத்தை மறுத்த அமைச்சுக்களும் உள்ளன.

இந்த நிலையிலேயே சுகாதரம் தொடர்பிலான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவராக நான் செயற்பட்ட காலத்தில்  திட்டத்துடன் தொடர்புடைய ஐந்து அமைச்சுக்களையும் இணைத்து பெறப்பட்ட உடன்பாட்டு அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. எட்டாவது பாராளுமன்றில் அங்கம் வகித்த நான் எனது இறுதி உரை என அறிவித்து 2020 பெப்ரவரி 19 ம் திகதி அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தின் ஊடாக அமைச்சரவை கவனத்துக்கு சமர்ப்பித்து விட்டு வந்தேன்.

இப்போது  நாடாளுமன்றத்தில் வாய்மொழி வினா நேரத்தில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேள்வி எழுப்பியமை வரவேற்கத்தக்கது.  சுகாதார அமைச்சரின் பதிலும் வரவேற்கத்தக்கது.

அதே நேரம் கடந்த கால அமைச்சரவைப் பத்திரங்களுக்கு  என்ன ஆனது என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நன்கு அறிவார்.

நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையிலே உடன்பட்டவாறு அனைத்து அமைச்சுக்களையும் இணைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். 500 தோட்ட வைத்திய நிலையங்களையும்  அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர  நிர்வாக மட்டத்தில் ஏற்பாடுகள் சீர் செய்யப்பட்டுள்ளன.

திட்டத்துடன் தொடர்புடைய சுகாதார அமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு, காணி அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, மாகாண சபைகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்ட அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிகள் சுகாதார அமைச்சின் ' தோட்ட, நகர சுகாதார பிரிவு' பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அதனை அதனை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள நிலையில் அதற்கான  அங்கீகாரத்தை புதிய அமைச்சரவைப் பத்திரம் வழங்கினாலே போதுமானது

நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத காலத்திலும் கூட கடந்த செப்டெம்பர் (2020) மாதம் அமைச்சு அதிகாரிகளுக்கும் சிவில் சமூகத்தினருக்குமான கலந்துரையாடல் நுவரெலியவில் நடாத்தியிருந்தோம். சிவில் சமூக மட்டத்தில் தோட்ட சுகாதார முறைமையை தேசிய மயப்படுத்தும் கொள்கை உருவாக்க செயற்பாடுகளிலும் பரப்புரைகளிலும்  ஈடுபட்டு வரும் மனித உரிமைத் தாபனத்தையும் ( HDO - Kandy) இந்தக் கலந்துரையாடலில் இணைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்சி, அரசியல் பேதங்களுக்கு அப்பால் தோட்ட சுகாதார முறைமையை தேசிய சுகாதார முறைமைக்குள்  கொண்டு வர அனைவரும் ஓரணியாக குரல் கொடுக்க முன்வர வேண்டும். செயற்படவும் வேண்டும்.

 


இருமொழி புலமைமையுடன் இலக்கிய வலம்வரும் கே. எஸ்

மல்லியப்புசந்தி திலகர்

1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு, புளியந்தீவு எனும் ஊரில் பிறந்தவர் கைலாயர் செல்லநய்னார் சிவகுமாரன். தனது பெயர் சிவகுமார் அல்ல சிவகுமாரன் என்பதில் அவர் அதிக அக்கறை காட்டுவதை பல தடவை அவதானித்து இருக்கிறேன்.

ஆரம்பக்கல்வியை ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலை, சென்மேரிஸ் பயிற்சி பாடசாலை, புனித. மைக்கல் கல்லூரி, அரசாங்க கல்லூரி என மட்டக்களப்பு பிரதேசத்திலேயே பல பள்ளிகளில் கற்றவர், 1953 ஆம் ஆண்டு தமது குடும்பம் தலைநகர்- கொழும்பு நோக்கி குடிபெயர்ந்துடன் கொழும்பு இந்து கல்லூரியிலும், கொழும்பு சென். ஜோசப் கல்லூரியிலும் பல்கலைக்கழக புதுமுக வகுப்புகள் வரை ( HSC) கற்றுள்ளார்.

தொடர்ந்து வெளிவாரி மாணவராக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், தமிழ்,மேலைத்தேய கலாசாரம் ஆகிய பாடங்களைக் கற்றுக் கலைப் பட்டதாரியானார். மேலதிகமாக மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தில் முதுமாணிப் பட்டமும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தில் தகவல் உதவியாளராக பணி செய்தவாறே சுயாதீன ஊடகவியலாளராகவும் பணியாற்றியுள்ளார். முதன் முதலாக இவர் இணைந்தது வணிகத்துறைசார்ந்த இதழ் ஒன்றில் செய்திகளை எழுதவே.

ஒர் எழுத்தாளராக, ஊடகவியலளராக, ஆங்கில ஆசிரியராக அறியப்படும் இவர் ஒலிபரப்பாளரும், ஒளிபரப்பாளரும் கூட.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆங்கில சேவையில் செய்தி ஆசிரியராகவும் செய்திவாசிப்பாளராகவும், தமிழில் செய்தி வாசிப்பாளராகவும் கூட பணியாற்றியுள்ளார். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

இலங்கையின் பிரதான இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளான வீரகேசரி ( உதவி ஆசிரியர்) , நவமணி (பிரதம ஆசிரியர்) ஆகியவற்றின் ஆசிரிய பீடத்தில் மட்டுன்றி 'த ஐலன்ட்' , 'டெயிலி நிவ்ஸ்' என இரண்டு ஆங்கில பத்திரிகையிலும் கூட பணியாற்றி இருக்கிறார்.

மாலைதீவுகள், ஓமான் போன்ற வெளிநாடுகளிலும், உள்நாட்டில் சர்வதேச பாடசாலைகளிலும் ஆங்கில ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவிலும் இரண்டு ஆண்டு காலம் வாழ்ந்துள்ளார்.

1953 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக பத்தி எழுத்துத் துறையில் (Coloumn writing ) ஆங்கிலம் - தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதிக்கொண்டிருப்பவர் கே.எஸ். சிவகுமாரன்.

இவரது திறனாய்வு பத்தி எழுத்துக்களும், சிறுகதைகளும், சினமா பற்றியதான பார்வைகளுமாக பல நூலாக்கம் பெற்றுள்ளன.

30 தமிழ் நூல்களை எழுதி உள்ளதுடன், Tamil Writing in Sri Lanka Tamil Writing in Sri Lanka

– 1974(Kumaran Publishers), Aspects of Culture in Shri Lanka- 1992- (Chamara printers), Gleanings - A Lankan's Views as a Columnist -2019 ( Anamika Alphabet Chennai) ஆகிய மூன்று ஆங்கில நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

சிறுகதைகள் சிலவற்றையும் எழுதியுள்ள இவர் அதனை தொகுப்பாக்கியும் உள்ளார். பிற மொழி சிறுகதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு தந்தும் உள்ளார்.

சினமா பற்றிய அவரது பார்வை அபூர்வமானது. தமிழ் சினமா எல்லைகளைக் கடந்து ஒரு கலை வடிவமாக சர்வதேச சினமா குறித்த அவரது பார்வையை எழுத்தில் முன்வைத்து வருபவர். சிறுபராயத்தில் மட்டக்களப்பில் பாலு மகேந்திராவுடன் நட்பு கொண்டிருந்தவர் எனவும் அறியக்கிடக்கிறது.

இவரது பெருமளவான நூல்களை மீரா பதிப்பகமும், மனிமேகலைப் பிரசுரமும் வெளியீடு செய்துள்ளன.

Gleanings நூலை சென்னை அனாமிக்கா அல்பாபெட்ஸ் எனும் பதிப்பகத்திற்காக லதா ராமகிருஷ்ணன் வெளியீடு செய்துள்ளார். (2019).

தமிழ் மொழிமூலமான ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களை மாத்திரம் அன்றி சிங்கள மொழிபேசும் ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளையும் இவர் ஆங்கிலத்தில் அறிமுகஞ் செய்தும் இரசனைக் குறிப்புகளை எழுதியும் வருபவர். இந்தச் செயற்பாட்டின் ஊடே இனங்களுக்கிடையே நிலவும் இடைவெளியைக் குறைக்க முடியும் என தனது Gleanings நூலின் முன்னுரைக் குறிப்பில் குறித்துரைக்கிறார் கே.எஸ்.சிவகுமாரன்.

அறுபதாண்டுக்கு மேற்பட்ட இவரது இலக்கிய பயணத்தில் கே.எஸ் சிவகுமாரன் எந்த அணி சார்ந்தும் செயற்பட்டதாக, அமைப்புகள் சார்ந்தும் இயங்கியதாக எந்தப் பதிவுகளும் இல்லை. அவர் இலக்கியத்தில் இரசனையின் பக்கம் நின்றவர் எனலாம்.

Challenges and Importance of Identifying and establishing a tradition for Writing English by Thamils ( Drum of a Herald) எனும் கலாநிதி சி. ஜெய்சங்கரின் தலைப்பில் கூறியுள்ளது போல ஆங்கிலத்தில் எழுதும் தமிழர்களை அடையாளம் காணும் அந்த மரபை ஊக்குவிப்பதில் உள்ள சவால்களை எண்ணிப்பார்க்கையில், ஈழத்து இலக்கிய பரப்பில் எழுத்து, அச்சுஊடகம், ஒலி ஊடகம், ஒளி ஊடகம் என பல பரிமாணங்களில் ஆக்க இலக்கியமாகவும், ஆய்வு இலக்கியமாகவும் ஆங்கிலத்திலும் தமிழிலும் என இருமொழிகளில் பணியாற்றியவரும் கே.எஸ். சிவகுமாரனின் ஆளுமை வரலாற்றுப்பதிவாகும் என்பது திண்ணம்.


இலங்கை சீனர்கள்

தம்மாதீன தேரர் தரும் தகவல்கள்

-மல்லியப்புசந்தி திலகர்

இலங்கை - சீன என்றதும் இப்போது பல்வேறு பார்வைக் கோணங்கள் வளர்ந்துவிட்டிருக்கிற சூழநிலையில் பேராசிரியர் சங்கைக்குரிய நெதாலகமுவே தம்மாதீன தரும் தகவல்கள் இலங்கை சீனர்கள் பற்றிய ஆய்வாக அமைகிறது ‘இலங்கை சீனர்கள்’ ( Sri Lankan Chinese) எனும் ஆங்கில நூல்.

இலங்கையில் வாழும் சீன சமுதாயத்தினர் பற்றியும் சீன மொழி பற்றியும் குறைந்தளவான அக்கறையே காட்டப்படுகிறது. பண்டைய கால பட்டுப்பாதைத் திட்டத்தின் ஊடாக இலங்கை - சீன நாடுகள் பல வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்தனர்.பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்தே இலங்கையில் சீனர்கள் வாழ்கின்றனர். காலனித்துவ காலத்தில் சீனர்களின் வருகை அபரிமிதமாக அதிகரித்தது. இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் வணிக நோக்கத்தில் சீனர்கள் இலங்கை வந்துள்ளனர்.

இந்த நூல் கவனிப்பாரற்று இருக்கும் இலங்கை சீனர்கள் வரலாற்றினை பதிவு செய்யும் ஆய்வினை செய்யும் அறிக்கையாகக் கொள்ளலாம் எனும் பின்னட்டைக்குறிப்புடன் சமயவர்தன புத்தகாலய வெளியீடாக 2018 ஆம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

எழுபத்திரண்டு பக்கங்களைக் கொண்ட இந்த நூலின் ஆசிரியர் ஒரு பௌத்த துறவியும் களனி பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியரும் ஆவார்.

ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் முதலாவது அத்தியாயத்தில் ஹான் வம்சம் முதல் இன்று வரையான இலங்கை - சீன உறவுபற்றி பேசப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் சுவாரஷ்யமான விடயமாக அமைவது இலங்கைக்கான பண்டைய சீன பெயர்கள் பற்றிய தகவலாகும்.

செரண்டிப், தப்ரோபன் போன்ற பெயர்கள் குறித்து பரவலாக அறியப்பட்டுள்ளது. ஈழம் என்பது கூட இலங்கைக்கான மறுபெயர்தான் என்னாலும் இன்று அதனை வேறு அர்த்தத்தில் நோக்குவோரும் உளர். சிலோன் என்பதை இன்றும் கூட ஐரோப்பாவில் சைலோன் என்றே நினைவில் வைத்துள்ளனர். சைலோன் டீ ( Ceylon Tea) ஐராப்பிய நாடுகளில் பிரபலம்.


இப்படி சீனர்கள் இலங்கையை எப்படி எல்லாம் அழைத்து இருக்கிறார்கள் என்பது சுவாரஷ்யமாகவே உள்ளது. ‘சி ச்செங் பூ’ - இதற்கு சிங்க(ள) தீப்ப என்று சிங்களத்தில் பொருளாம். ‘சி டியாவ் குவா’ அல்லது சி டியாவ் சுவா என்பதும் கூட அதே அர்த்தம்தானாம். பொதுவாக அழைக்கப்பட்ட பெயராக ‘ஷி ஸி குவோ’ இருந்துள்ளது. இதன் அர்த்தம் சிங்க நாடு என்பதாகும்.

இதே முதலாம் அத்தியாயத்தில் இலங்கை - சீன பௌத்த தொடர்புகள் பற்றியும் பேசப்பட்டுள்ளது.இரண்டாம் அத்தியாயத்தில் இலங்கை சீனர்களின் சனத்தொகை பற்றி விவாதிக்கப்படுகிறது. 1816 ஆம் ஆண்டு 80 முதல் 100 ஆண்கள் என்று இருந்து, 1881 ஆம் ஆண்டு 35 ஆண்கள், 14 பெண்கள் என்பதாக பதிவாகிறது. 1963 ஆம் ஆண்டு 238 ஆண்கள் 159 பெண்கள் 1981 ஆம் ஆண்டு 448 ஆண்கள், 128 பெண்கள் என பதிவு பெறுகிறது.

மூன்றாவது அத்தியாயம் நவீன இலங்கையின சீனர்களின் பல்வேறு பரிமாணங்களை ஆராய்கிறது. இதில் அவர்கள் பிரஜா உரிமைப் பெற்ற காலம், கல்வி நிலை, பெயர்கள், திருமண பந்தம், தொழில் முதலான விடயங்களுடன் அவர்களது வாழ்க்கைக் கோலம் பற்றியும் ஆராயப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு சீன வம்சாவளியினருக்கான பிரஜாவுரிமை வழங்கும் சட்டம் இலங்கைப் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (2009 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க சட்டமே இந்திய முகாம்களில் வாழும் இந்திய வம்சாவளியினரான இலங்கை அகதிகளுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கும் சட்டம் நிறை ஏற்றப்பட்டது)

2016 ஆம் ஆண்டில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட சீன மக்கள் இலங்கையில் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தைப் ( Working Permit ) பெற்றுக் கொண்டுள்ளதாகவும் புத்தகம் பதிவு செய்கிறது.

நான்காவது அத்தியாயம் இலங்கையில் சீன மொழி கற்றல் கற்பித்தல் பற்றியானது. 1954 ஆம் ஆண்டிலேயே கொழும்பில் சீன மொழி கற்பிக்க பாடசாலை உருவாக்கம் பெற்றுள்ளது. 1970 களில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் வித்யாலங்கார வளாகத்தில் சீன மொழிக் கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகள் சான்றிதழ் கற்கை நெறியாக தமிழ் , ஹிந்தி, ஜப்பான்,ஆங்கிலம் , பிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்யா என்பவற்றோடு சீன மொழியும் கற்பிக்கப்பட்டுள்ளது.

1972 ஆம் ஆண்டு பேலியகொட வளாகத்திலும் ( களனி பல்கலைக் கழகம்) இதே முறைமையில் சீன மொழிக் கற்கைகளை ஆரம்பித்துள்ளது. 1980 ஆம் இலங்கையின் உயர்தர பாடவிதானத்திலும் சீன மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

2008 க்குப்பின் களனிப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியன கன்பூசியஸ் நிறுவகம் என்ற பெயரிலும்,சப்ரகமுவ பல்கலைக் கழகம் லும்பினி கல்லூரி போன்றனவும் சீன மொழி சான்றிதழ் கற்கை நெறியாக உள்வாரி, வெளிவாரி பாடநெறிகளைக் கொண்டுள்ளன.

அத்தியாயம் ஐந்து இலங்கை சீனர்களின் இலக்கியம் பற்றி ஆய்வு செய்கிறது. அவை பெரும்பாலும் இலக்கிய படைப்புகளாக அன்றி பாடப்புத்தகங்களாக, மொழிபெயர்ப்புகளாக, கதைப் புத்தகங்களாக வெளிவந்துள்ளமை பதிவாகிறது. ஆறாவது அத்தியாயம் சீன மொழியில் உள்ள வேறுபாடுகள் அவை இலங்கையில் பிரதிபலிக்கும் விதம் பற்றி ஆராய்கிறது.சீன மொழி பேசும் பலர் இலங்கையில் நிரந்தரமாக வாழ்வது சிறப்பம்சம் என்றும் ஆய்வு கூறுகிறது.

இலங்கையில் அமையப்பெற்றுள்ள சீன வியாபார நிலையங்கள், சீன குடும்பங்கள், சீன மொழி புத்தகங்கள முதலான படங்களும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.

சீன மொழி சிறப்புப் பட்டம் பெற்ற பேராசிரியர் சங்கைக்குரிய நெதாலகமுவே தம்மாதீன தேரர் 1999 ஆம் ஆண்டு களனிப் பல்கலைக் கழகத்தில் இணைந்ததுடன் 2007 ஆம் ஆண்டு சங்காய் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளார். எங்கள் சீனம், இலங்கை சுற்றுலாத்துறைக்கான சீன மொழி உள்ளடங்களாக பல நூல்களை எழுதி உள்ளார். இலங்கை ஒரு பன்மொழி, பல்லின, பல்கலாசார பண்பாட்டு அம்சங்களைக் கொண்ட நாடு எனவும் நூலாசிரியர் வலியுறுத்துகின்றார்.

இந்த ஆய்வின் அவதானிப்புகள் இலங்கை சீன மக்களினதும் அவர்தம் மொழியிலும் நவீன இலங்கையில் ஏற்பட்டிருக்கக் கூடிய துரித முன்னேற்றங்களை சுட்டி நிற்பதாக பின்னட்டைக் குறிப்பை நிறைவு செய்கிறார் நூலாசிரியர்.

காலத்தின் தேவையுடன் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.

 


Testing

jkjdkfdsjfkdfdjfld djfldj fdslfjldsfjldf dfjldj flslfjlsdjfu89jer  lshdfosjg y9erof kjhvs ohya fiasyhfokfl jshfoas fupasjf iasuyfosjfhsifuosjfouf0pfjsifodsjfo dshfiu spo pfupsjfoasfy sfosfus0 ujfosufospf skyf0osjfp ashifyupsf syhfpokfksgf0isfjasofup[skfisjf op usfjsifhjsofksohf9sufjp;efnisjfopsdjf p sufojspfjlsodjf os jfp;s fospf lsjfo usfjasfuosif


பூசணி பிடுங்குதல்

 இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கிய படைப்புகள் ஆங்கிலத்தில்

 - மல்லியப்புசந்தி திலகர்

1950 களில் இருந்தே இலங்கை சமூகம் பல எழுச்சிகளையும் அரசியல் அமைதியின்மையும் பரவலாக எதிர்கொண்டே வந்துள்ளது. இதனூடு புதிய பரிட்சார்த்த எழுத்துக்களும் உருப்பெற்றன. அவை ஈழத்திலும் வெளிநாடுகளிலுமான தமிழர் வாழ்க்கையின் கூட்டான வேதனைகளினதும் கவலைகளினதும் குரலாக பதிவு பெற்றன.

இலங்கை தமிழ் சமூகத்தின் ஒரு காலகட்ட போராட்டமானது உயிரஇழப்புகளையும், அழிவுகளையும், இடப்பெயர்வுகளையும் தோற்றுவித்தன. அவை கவிதைகளாக, சிறு கதைகளாக,நாடகங்களாக பதிவு பெற்ற விதத்தை இந்த தொகுப்பு பதிவு செய்ய முனைகிறது என்ற பின்னட்டைக் குறிப்பு இந்த நூலை வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

1952 ஆம் ஆண்டு பிறந்து 2014 இல் இவ்வுலகைவிட்டுப் பிரிந்த பேராசிரியர் செல்வா கனகநாயகம் தொகுத்திருக்கும் நூல் Uprooting the Pumpkin.

‘பூசணி பிடுங்குதல்’ என தமிழாக்கம் செய்து கொண்டாலும், இந்த பூசணி எப்போதுமே ஒரு ஆச்சரியம் தரும் தாவரவகைதான். சிலநேரம் ஊரின் நடுநாயகமாக அமைந்துவிடும் ஆலமரம் எனும் பெரு விருட்சம் தரும் ஆலங்காய் யார் கண்ணிலும் படுவதில்லை. அத்தனைச் சிறியது. பெரும்பாலும் பயன்பாட்டுக்கும் உள்ளாவதில்லை. ஆனால், வேலி ஓரமாக வளைந்து ஓடி வளரும் விரல் மொத்த கொடியில் காய்க்கும் பூசணிக்காயின் அளவோ அந்த கொடிக்கு எந்தத் தொடர்பும் இல்லாத மொத்தத்தில் இருக்கும். நன்கு முற்றிய பூசணிக் காயை கொடியில் இருந்து பிடுங்கியவுடன் அதன் சுமையைத் தூக்கிப் பார்த்தால் வரும் ஆச்சரியம்தான்; இத்தனைப் பாரத்தை எப்படி இந்த சின்னக் கொடி தாங்கி நின்றது என்பது !

இத்தகைய சூக்குமத்தை இலக்கிய இரசணையோடு எடுத்துச் சொல்லவோ என்னவோ ஈழத்து தமிழ் எழுத்தாளர்களின் 40 படைப்புகளை ஆங்கிலவாக்கம் செய்து தொகுத்திருக்கும் பேராசிரியர் செல்வா கனகநாயகம் இந்த தொகுப்புக்கு ‘பூசணி பிடுங்குதல்’ என தலைப்பிட்டிருக்கிறார்.

உள்ளடக்கத்தை விளக்கும் பக்கத்துக்கு முன்னமே Let No one Uproot the Pumpkin- Okot P’Bitek’, song of Lawino என்ற குறிப்பையும் தந்துவிடுகிறார்.

1932 ஆம் ஆண்டு பிறந்து 1982 ஆம் ஆண்டு மறைந்த ஆபிரிக்க கவிஞரான P’Bitek’ இன் அரசியல் சாரம் மிக்க அந்த கவிதையின் ‘யாரையும் பூசணிக்காயை பிடுக்க அனுமதிக்க வேண்டாம்’ எனும் கருத்திலான வரிகளை இட்டு பூசணிக்காய் பிடுங்குதல் எனும் தலைப்பில் நூலைத் தொகுத்திருப்பதும் ஓர் அரசியல்தான்.

236 பக்கங்களைக் கொண்ட இந்த நூலானது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பதிப்பாக 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளிவந்திருக்கிறது. ஈழத்து தமிழ் படைப்பாளிகள் நாற்பது பேரின் தெரிவு செய்யப்பட்ட படைப்புகளை அவர்கள் பிறந்த கால ஒழுங்கில் தெரிவு செய்து 24 கவிதைகள், 15 சிறுகதைகள் , ஒரு நாடகம் என ஒட்டுமொத்தத் தொகுப்பாக ஆங்கிலத்தில் தந்துள்ளார் செல்வா கனகநாயகம்.

1927 ஆம் ஆண்டு பிறந்த (1971 ல் மறைந்துவிட்டார்) மகாகவி - உருத்தி

ரமூர்த்தி யின் கவிதை, கவிதைப் பட்டியலில் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. மகா கவியின் அகலிகை, தேரும் திங்களும் ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ‘அகலிகை’ கவிதையை தொகுப்பாளர் செல்வா கனகநாயகமும், ‘தேரும் திங்களும்’ கவிதையை கவிஞர் சோ. பத்மநாதனும் தமிழாக்கம் செய்துள்ளனர்.

பென்குயின் வெளியீடாக 2013 ஆண்டு institute of Pondicherry வெளிக்கொணர்ந்த Time will write a song for you (காலம் உனக்கொரு பாட்டெழுதும்) எனும் சமகால இலங்கைத் தமிழ் எழுத்துக்கள் எனும் தொகுப்பிலும் முதல் ஆக்கமாக இடம்பெற்றது, மகாகவியின் ‘தேரும் திங்களும்’ கவிதைதான். அதில் Temple Car and the Moon என மொழிமாற்றம் செய்யப்பட்டிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நூலில் அது The Chariot and the Moon என தலைப்பிடப்பட்டு திருப்தியைத் தருவதாக உள்ளது.

சிறுகதைகளின் வரிசையில் 1934 ஆம் ஆண்டு பிறந்த தெளிவத்தை ஜோசப்பின் ‘கூனல்’ சிறுகதை முதலாவதாக பதிவு பெற்றுள்ளது. “கூனல்” என்று ஒரு சிறுகதை. உலகப் பெருமைமிகு சிறுகதையாகவே அதை உணர்ந்தேன். ஏழையைக் கண்டு வருந்துவதைவிட ஏழ்மை குறித்து வருந்துவது கூடுதல் சுமை ஏற்றக்கூடியது. அதுபோன்ற சிறுகதைகளை, நாவல்களை கவனிக்காமல் விட்டது நமது பிழையா ? விரும்பியோ விரும்பாமலோ சிலரது படைப்புகள் அறியப்படாமலும், அறியப்படுத்தப்படாமலேயும் போய்விடுகிறது என ஆதங்கப்பட்டிருந்தார் மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி.(விஷ்ணுபுரம் விருது விழா தலைமையுரை - கோவை 2013-12-22)

இந்திரா பார்த்தசாரதியின் அந்த ஆதங்கத்தினை உணர்ந்தவராக 2014 ஆம் ஆண்டு தான் இறப்பதற்கு முன்பதாக இந்த தொகுப்பில் ‘கூனல்’ சிறுகதையை ஆங்கிலவாக்கமாக Deformity என பதிவு செய்ய எண்ணியுள்ளார் செல்வா கனகநாயகம். கதையை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் ஏ.ஜே.கனகரத்னா என்பது இன்னுமொரு பெருமிதம்.

இந்த கதையை இந்தத் தொகுப்பில் சேர்ப்பதற்கான காரணமாக தனது முன்னுரையிலே இவ்வாறு எழுதுகிறார் செல்வா கனகநாயகம்:

 

இலங்கைத் தமிழ் சமூகங்கள் அரிதாகவே ஒரே விதமானவையாக இருக்கும் . மதமும் பிரதேசமும் ( Religion and region ) அவர்களின் எழுத்தின் போக்கினை வேறுபடுத்தும் காரணிகளாகின்றன. வடபகுதியில் இருந்துவரும் எழுத்துக்களில் இருந்து குறிப்பிடத்தக்க வேறுபட்ட தன்மைகளைக் கொண்டதாக கிழக்கில் இருந்து வரும் எழுத்துக்களில் பிரதிபலிக்கும். மலைநாட்டில் வரும் தமிழ் எழுத்தாளர்களிடத்தில் முற்றிலும் வேறுபட்ட முன்னோக்கங்கள் காணப்படும்....

கிழக்கிழங்கையிலும் மத்திய மலைநாட்டிலும் வாழும் தமிழர்கள் தாம் சொல்வதற்கு என தனியான கதைக்களங்களைக் கொண்டுள்ளனர்.மலைநாட்டுத் தமிழர்களைப் பொறுத்தவரை காலனித்துவதக்கு முன்பிருந்த அதே ஒடுக்குமுறை பின்காலனித்துவ காலத்திலும் தொடர்வதைக் காணலாம். வேறுபட்ட வடிவங்களில் அவர்கள் சுரண்டலுக்கு உள்ளாகி விளிம்பு நிலைச்சமூகமாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தோன்றிய பல எழுத்தாளர்கள் அவற்றை வெளிப்படுத்தி உள்ளனர். தெளிவத்தை ஜோசப்பின் ‘கூனல்’ எனும் கதை இதற்கு ஓர் உதாரணமாகும் எனக் குறிக்கின்றார்.

இதே தொகுப்பில் வரும் எஸ்.ஶ்ரீதரனின் ‘ராமசாமி’ எனும் கதையையும் கூட தொகுப்பாசிரியர் இங்கே நினைவுபடுத்திச் செல்கின்றார். அந்தக் கதையில் வடபகுதிக்குச் சென்ற மலையகத்தவர்க்கு அங்கே நிகழக்கூடிய ஒடுக்குமுறைகளை வடபிரதேச எழுத்தாளரான ஶ்ரீதரன் விபரித்து இருப்பார்.

பிற கவிதைகளின் வரிசையில் கவிஞர்களான நீலாவணன், த.இராமலிங்கம், ஆர்.முருகையன், சண்முகம் சிவலிங்கம், எஸ்.சிவசேகரம், எம்.ஏ.நுஹ்மான், வ.ஐ.ச.ஜெயபாலன்,அ.யேசுராசா, மு.புஷ்பராஜன், புதுவை இரத்தினதுரை, சு.வில்வரத்தினம், கி.பி.அரவிந்தன், திருமாவளவன், சோளைக்கிளி, ஆர்.சேரன், செழியன், எஸ்.கருணாகரன், வினோதினி சச்சிதானந்தன், ப.அகிலன், பஹீமா ஜெஹான், நட்சத்திரன் செவ்விந்தியன், அ.றஷ்மி, அனார் ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

சிறுகதைகள் வரிசையில் அ.முத்துலிங்கம், எஸ்.கதிர்காமநாதன், செ.யோகநாதன், எம்.எல்.எம்.மன்சூர், ரஞ்சகுமார், உமா வரதராஜன், குந்தவை, அ.ரவி, சித்தார்த்த சேகுவேரா, பார்த்தீபன், குமார் மூர்த்தி, சந்திரா ரவீந்திரன், ஷோபா சக்தி ஆகிய சிறுகதையாளர்களின் கதைகளும் இடம்பெற்றுள்ளன.

குழந்தை எம்.சண்முகலிங்கத்தின் ‘எமது பெற்றோரின் நிலம்’ எனும் நாடகப்பிரதியும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

ஏ.ஜே.கனகரத்னா, காஞ்சனா தாமோதரன், லக்‌ஷ்மி ஹோம்ஸரோம், ஆர்.முருகையன், பத்மா நாராயணனன், சோ.பத்மநாதன், எஸ்.ராஜசிங்கம், கோவர்த்தணன் ராமச்சந்திரன், எஸ்.சிவசேகரம் ஆகியோருடன் தொகுப்பாளர் செல்வா கனகநாயகம் அவர்களுமாக, தமிழில் வெளிவந்த படைப்புக்களை ஆங்கிலவாக்கம் செய்து தமது பங்களிப்பைச் செய்துள்ளனர்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராக  இருந்தவரும் 'தமிழ் இலக்கிய வரலாறு' நூலை எழுதியவருமான பேராசிரியர் செல்வநாயகம் அவர்களின் மகனான தொகுப்பாளர் செல்வா கனகநாயகம், கனடா - டொரொண்டோ பல்கலைக் கழகத்தில் ஆங்கில துறையில் பேராசிரியராக பணியாற்றியவர்.அத்தோடு தென் ஆசிய கற்கை துறையில் பின்காலனிய இலக்கிய ஆய்வுகளை மேற்கொண்டவர். பல தமிழ் இலக்கிய ன படைப்புகளை ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பு செய்தவர். இந்த நூலை தொகுப்பதற்கு அவர் முயற்சி மேற்கொண்டிருந்த போதே 2014 ஆம் ஆண்டு காலமானார். அவரது மறைவின் பின்னரே 2016 ஆண்டு வெளிவந்திருக்கிறது.

பின்னட்டைக் குறிப்பில் எழுதப்பட்டிருப்பதுபோல காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ள இந்த எழுத்துக் களஞ்சியம், இலங்கை தமிழ் அடையாளத்தின் ஊடாக எழுந்த கருத்துக்களை இலக்கிய வடிவத்தில் பதிவு செய்துவைப்பதுபோல தனது செழுமையான இலக்கிய பணியால், குறிப்பாக இறக்கும் தறுவாயிலும் இத்தகைய தொகுப்பைத் தந்துவிட்டுப் போயிருக்கும் செல்வா கனகநாயகம் அவர்களும் இலங்கைத் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வார்.

***


மலையகத் தமிழர்களை அர்த்தமுள்ள குடிகளாக அரசியலமைப்பில் உறுதி செய்யவேண்டும் - திலகர்

 

இலங்கையில் மூன்றாவது குடியரசு அரசியல் அமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்காக பொதுமக்களிடமும் அமைப்புகளிடமும் இருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன.

நீதி அமைச்சின் அறிவித்தலின்படி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கும் கால எல்லை 2020 டிசம்பர் 31 ம் திகதியுடன் முடிவுற்றது.

அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழுவின் ‘அ’ முதல் ‘ஓ’ வரையான பிரமாணங்களில் முன்மொழியப்பட்டுள்ள விடயதானங்களுக்கு மேலாக ‘ஔ’ பிரமாணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘அக்கறையுள்ள வேறு ஏதேனும் விடயங்கள்’ எனும் பிரிவின் கீழ் பினவரும் விடயங்கள் மலையகத் தமிழ் மக்கள் சார்ந்ததாககவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.

சுதந்திர இலங்கையின் முதலாவது ஆண்டிலேயே சட்டத்தின் பிரகாரம் இலங்கைக் குடியுரிமைப் பறிக்கப்பட்ட இந்தியவம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் இப்போது குடியுரிமை என்கிற பெயரில் வாக்குரிமை மாத்திரமே வழங்கப்பட்டு உள்ளனர். அதனை குடியுரிமை அந்தஸ்த்து எனக் கொண்டாலும் அவை அர்த்தபூர்வாமானதாக இல்லை.

எனவே இலங்கையில் மூன்றாவது குடியரசு அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுமிடத்து மலையகத் தமிழர்களை அர்த்தபூர்வமான இலங்கைக் குடிமக்களாக அங்கீகரிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும் எனும் எனது முன்மொழிவுகளின் சிறப்பு பகுதி இது.

 

மயில்வாகனம் திலகராஜா

இலங்கை சுதந்திரமடைந்ததோடு குடியுரிமைப் பறிக்கப்பட்டு நாற்பது வருடங்களின் பின்னர் சிறுக சிறுக மீள வழங்கப்பட்ட இலங்கைக் குடியுரிமையை அர்த்தமுள்ளதாக்க பின்வரும் ஏற்பாடுகளை சிறப்பு ஏற்பாடுகளாக ( Affirmative action) குடியுரிமை மறுககப்பட்டிருந்த இந்தியத் தமிழ் வம்சாவளியினருக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.

1. ‘இந்தியத் தமிழர்’ எனும் பதிவு நீக்கப்பட்டு மூன்று மொழிகளிலுமே அவர்கள் ‘மலையகத் தமிழர்கள்’ ( Malayagath Thamils) என பதிவு செய்யப்படுதல் வேண்டும்.இந்த ஏற்பாடு இலங்கைத் தேசியத்தில் இருந்து ( Sri Lankan Nationality ) இந்த மக்களை அந்நியப்படுத்துவதில் இருந்து தவிர்க்க உறுதி செய்யும்.

2. சனத்தொகைக் கணக்கெடுப்பில் இந்திய அடையாளத்தை விரும்புவோர் வசதிக்காக ‘மலையகத் தமிழர்’ என்பதற்கு மேலதிகமாக ‘இந்திய வம்சாவளியினர்’ ( Indian origins ) எனும் வகுதி சேர்க்கப்படலாம். அதனை விரும்புகிற தமிழரும், தமிழர் அல்லாத இந்திய வம்சாவளியினரும் கூட அதனைத் தெளிவாகக் கொள்ளலாம்.

3. பதிவுப் பிரஜகளாக அன்றி இலங்கை நாட்டின் முழுமையான பிரஜைகளாக மலையகத் தமிழர்கள் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அரச பிரகடனம் செய்யப்படுதல் வேண்டும்.

4. தோட்டத் தொழிலாளர்களாக காலனித்துவ காலத்தில் அவர்கள் குடியமர்த்தப்பட்ட பிரதேசங்கள் ‘கிராமங்களாக’ பிரகடனம் செய்யப்படுதல் வேண்டும். அந்த கிராமங்கள் அரச பொது நிர்வாக முறைமைக்குள் கொண்டுவர ஆவண செய்யப்படுதல் வேண்டும்.

5. சுகாதாரம், போக்குவரத்து பாதை, போக்குவரத்து சேவை, தபால் சேவைகள், மின்சார வசதிகள், தொலைத் தொடர்பு வசதிகள் போன்றன தோட்ட நிர்வாக தலையீடுகள் இன்றி அரச பொது நிர்வாக சேவைகள் ஊடாக கிடைக்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும், பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகள் என்ற வகையில் அடங்கும் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் குறைந்த பட்சம் இரண்டு ஏக்கர் காணிகள் அரசினால் வழங்கப்படுதல் வேண்டும்.

6. ‘ லயம்’ (Line Rooms) எனும் குடியிருப்பு முறைமையில் இருந்து அவர்களுக்கு தனிவீடுகள் அமைப்பதற்கான வீடமைப்பு காணிகள் அரசினால் இலவசமாக வழங்கப்படுதல் வேண்டும். அந்த வீடமைப்பு காணியின் பரப்பளவு குறைந்தபட்சம் 7 பேர்ச்சஸாக அமைவதுடன் அவர்களுக்கான வாழ்வாதார நிலம் புறம்பாக வழங்கப்படுதல் வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில் வீடமைப்பு காணி பரப்பளவு 20 பேர்ச்சஸ் ஆக அமைதல் வேண்டும்.

7. பெருந்தோட்ட நிர்வாக முறைமை மாற்றப்பட்டு சகலரும் சிறுதோட்ட உடமையாளர்களாக்கப்படல் வேண்டும். கம்பனிகள் தொழிற்சாலைகளுக்கு பொறுப்பாக இருந்து சுயாதீன விவசாயிகளிடம் இருந்து தேயிலை, ரப்பரை கொளவனவு செய்து உற்பத்தி நடவடிக்கைககளில் ஈடுபடலாம். தென்னிலங்கையில் நடைமுறையில் உள்ள அதே நடைமுறை உயர் நிலப்பகுதியிலும் பின்பற்றப்படல் வேண்டும்.

8. இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசியலமைப்பு மாற்றம் செய்யப்படுமிடத்து “மலையகத் தமிழர்” தனியான தேசிய இனம் என்ற அடிப்படையில் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் உள்ளீர்க்கபடல் வேண்டும்.

9. இலங்கைத் தமிழ், முஸ்லிம் இன மக்களுக்கு சிறுபான்மைத் தேசிய இனம் என்றவகையில் ‘தனியான நிர்வாக அலகு’ எனும் தீர்மானம் எட்டப்படுமிடத்து “பெருந்தோட்டப் பிராந்தியங்கள்” அமைந்த பகுதிகள் நிலத்தொடர்ச்சியற்ற அதிகார அலகாக ‘மலையகத் தமிழர்கள்’ எனும் தேசிய இனத்துக்காக உருவாக்கப்படுதல் வேண்டும். ( 2018 ஆம் ஆண்டு 30,32 ஆம் இலக்கச் சட்டங்களின் பிரகாரம் ‘பெருந்தோட்ட பிராந்தியங்கள்’ வியாக்கியானம் பின்பற்றப்படுதல் வேண்டும்)