பாய்ச்சல் காட்ட மாட்டேன் - முன்னாள் எம்.பி திலகர்

 மலையகத்திற்கு உரிமைசார் அரசியலுக்கு முகவரி கொடுத்தவர் நீங்கள் அந்த வகையில் நீங்கள் உங்கள் பாராளுமன்ற பதவி காலத்தில் எதை சாதனையாக கருதுகின்றீர்கள் சாதிக்க முடியாது போனதாக எதை நினைக்கின்றிர்கள்?

1987 ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரதேச சபைச் சட்டத்தில் இருந்து மலையகப் பெருந்தோட்ட மக்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலைமை இருந்தும் அதனை திருத்தம் செய்யக் கோரி அன்று முதல் 2015 வரை பாராளுமன்றம் சென்ற எந்தவொரு உறுப்பினரும் பாராளுமன்ற பிரேரணை ஒன்றைமுன்வைத்திருக்கவில்லை. 2015 ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி பாராளுமன்றம் சென்ற நான் டிசம்பர் முதலாம் திகதி அதனை முன்வைத்தேன். அதன் அடிப்படையிலேயே 2018 செப் 18 பிரதேச சபைச் சட்டம் திருத்தப்பட்டது. இதனைச் செய்வேன் என கூறியே நான் நாடாளுமன்றம் சென்றேன்.அதனை நிறைவேற்றியது சாதனையாகவே கருதுகிறேன்.

அதேபோல மலையக உரிமைசார்ந்த்  கல்வி, வீதி, நிர்வாகம், (பிரதேச செயலகம் ) , காணி, சம்பளவிடயத்தில் அரச தலையீடு, சிறுதோட்ட உடைமையாக்குதல், திறந்த பல்கலைக்கழகம், தபால் முதலான  9 பிரேரணைகளையும்  தோட்ட சுகாதாரத்தை தேசிய மயமாக்கும் உத்தியோகபூர்வ அறிக்கையாகவும் சமர்ப்பித்து உரையாற்றி உள்ளேன். இதுவும் ஒரு சாதனையே. இவற்றை தீர்வை நோக்கி நகர்த்துவது அவசியம்.

இதற்கு மேலாக " இந்தியத் தமிழர்" என்பதை "மலையகத் தமிழர்" என சனத்தொகைக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்படல் வேண்டும் எனும் எனது தனிநபர் பிரேரணை சபைக்கு கொண்டு வருவதற்கு சமர்ப்பித்தும் அதனை தாமதமாக்குவதில் 'தமிழ் முற்போக்கு கூட்டணி' உறுப்பினர்களே காட்டிக் கொடுப்புச் செய்ததால் முடியாது போனது.

பாராளுமன்ற காலத்தில் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தீர்கள் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லை எப்படி உணர்கின்றீர்கள்?

அதே சுறுசறுப்போடு இயங்கிக் கொண்டு இருக்கிறேன். பாராளுமன்றம் உள்ளே நான் போவதில்லையே தவிர வெளியே நான் மக்கள் பிரிதிநிதியே.அதனால் தான் இப்போதும் என்னை நேர்காணல் செய்வதற்கு உங்கள் வசம் கேள்விகள் இருக்கின்றன.

   உண்மையில் திகாவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை?

தனிப்பட்ட எந்த பிரச்சினையும் இல்லை. அவருக்கு வழமையாகவே ஒரு தாழ்வுச் சிக்கல் ( inferiority complex) இருந்து வந்தது. அதனை ஊதிப் பெருக்க அருகில் ஓரிருவர் இருக்கின்றனர். அதனால் அவரது சிக்கல்  கூடிக் கொண்டு போகிறது. அவ்வளவுதான். சிக்கல் முற்றும் நாளில் அவர் அதனை உணர்வார்.

    உதயா விலகியதற்கும் பின்னர் ராஜதுரை விலகியதற்கும் நீங்கள் தான் காரணம் என இப்போது குற்றம் சாட்டுகின்றார்களே அதுபற்றி?

2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் எனக்கு தேசிய பட்டியல் தருவதாக அறிவித்து அது தலைமைத்துவத்தால் முடியாது போன நிலையில், 2011 ஆம் ஆண்டு உள் ஊராட்சி மன்ற தேர்தல் வரை எனது பணிகளைச் செய்து கொடுத்து விட்டு, தொழிலாளர் தேசிய சங்கத்தில் இருந்து தற்காலிகமாக விலகி இருப்பதாக நான் 2012ஆம் ஆண்டு மேதினத்தன்று அதன் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் அவர்களிடம் கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டேன். (அந்தக் கடிதம் இப்போதும் அவரிடம் இருக்கும்) அதற்கு பிறகு 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொதுத் தேர்தல் வேட்பாளராக கையொப்பம்  இட்ட பின்னரே நான் தலைமை காரியாலயத்துக்கு வந்தேன்.

இந்த மூன்று வருட காலப்பகுதியில்தான் உதயகுமார் வெளியேறியதும் ராஜதுரை வந்து போனதும் நடந்தேறியது. ஆக நான் பதவியில் இல்லாத காலத்தில் நடந்த சம்பவத்தை என்னோடு சேர்த்து பேசுவது எந்தளவு காழ்ப்புணர்ச்சி மிக்கது. நான் 2015 மீண்டும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் மீண்டும் இணையும் போது அவர்கள் இருவரும் அங்கே இருக்கவில்லை. அவர்கள் மீது இத்தனைப் பாசம் இருப்பவர்கள் விலகி இருந்து என்னை அழைத்து ஏன் தேர்தலில் போட்டியிடச் செய்யவேண்டும். அவர்கள் இருவரும் அப்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சி யானைச் சின்னத்தில் தானே போட்டி இட்டார்கள். அப்போதே அவர்களை தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைத்து போட்டியிடச் செய்து இருக்கலாமே.

25/02/2021 உதயசூரியன்

எனவே அவர்களது வெளியேற்றத்துக்கு பின்னால்  தலைமை பொறுப்பாக இருந்திருக்க முடியுமா அல்லது விலகி இருந்த நான் இருந்திருக்க முடியுமா என்பதை அந்த இருவருக்கும் எதிராக பத்திரிகை  அறிக்கைகளை யார் விடுத்து இருக்கிறார்கள் என்பதை ஊடகவியலாளர்களாகிய நீங்கள் தேடினால் விடை கிடைக்கும். தலைவருக்காக அந்த அறிக்கைகளை எழுதியவர் இப்போதும் அங்கேதான் உள்ளார். அப்போது அவரது வேலையே அதுதான்.

 நீங்கள் தொ.தே.ச தலைமை கட்டிடத்தை உதயாவிற்கு விற்று விட்டதாக குற்றம் சாட்டுகின்றீர்கள் ஆனால் அது வாடகை கட்டிடம் எனவும் அதனை சொந்தமாக வாங்கி வாடகை இன்றி இலவசமாக உதயா வழங்கியதாகவும் ,உதயா கட்டிடத்தை வாங்கிய போது அதற்கு சாட்சி கையெழுத்து போட்டது நீங்கள் எனவும் பீலிப் சொல்கின்றாறே அது பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

நான் சாட்சியாக கையெழுத்து இட்டதால்தான் தானே இந்த விடயத்தை உறுதியாகவும் தெளிவாகவும் சொல்கிறேன். நான் சொன்னது 'விற்றுவட்டார்கள்' என்று அல்ல. உதயகுமார் " கையகப்படுத்திக் கொண்டார்" என்பதே.

இதன் மூலம் சொல்ல வருவது என்ன?

1965 ஆம் ஆண்டு முதல் 2010 வரை 45 ஆண்டுகள் நிரந்தர வாடகையில் தொழிலாளர் தேசிய சங்கம் அந்தக் கட்டடத்தில் இருந்ததானால், அதன் உரிமையாளர்கள் 3 கொடி பெறுமதியான கட்டடத்தை 30 லட்சத்துக்கு தருவதற்கு சம்மதித்தார்கள்.எனக்கு அவர்கள் அறிமுகமானவர்கள் ஆதலால் மேலதிக மாக 10 வீதம் கழித்து 27 லட்சத்துக்கு தந்தார்கள். அதனை அப்போது உதயகுமார் தான் வாங்குவது என்றும் பின்னர் சங்கம் அதனைத் திருப்பிச் செலுத்தி சங்கத்தின் பெயரில் எழுதுவது என்பது உடன்பாடு. எனவே இங்கு தொழிலாளர் தேசிய சங்க நன்மதிப்பு குடியிருப்பு பெறுமதி 2 கோடி 70 லட்சம். அதன்படி அது தொழிலாளர் தேசிய சங்கத்தின் சொத்தா அல்லது 27 லட்சம் வழங்கிய உதயகுமாரின் சொத்தா? இப்போது சொல்லுங்கள் அட்டன் பிரதான இடத்தில அமைந்த அந்த இடத்தை 27 லட்சத்துக்கு "அமுக்கிக்" கொண்டுள்ளார் என்பது தெளிவாகி இருக்கும். எனது வெளிப்படுத்தலினால்தான் இந்த விடயம் அம்பலமாகி உள்ளது. இப்போது உதயா பெயரில் அட்டன் தொழிற்சங்க தலைமையகம் இருப்பதை அவர்கள் ஒத்துக் கொண்டது எனக்கு வெற்றி. உறுப்பினர்கள் அதனை மீட்க முன்வரவேண்டும். இதற்கு சாட்சியாகவே நான் கையொப்பம் இட்டுள்ளேன். எனது கோரிக்கை அந்த கட்டடம் "தொழிலாளர் தேசிய சங்கம்" எனும் மக்கள் அமைப்பின் பெயரில் அதனை எழுத வேண்டும் என்பதே. இதெல்லாம் பிலிப் அவர்களுக்கு தெரியும். இப்போது அவர் சூழ் நிலைக் கைதியாக அவரது பெயரில் எழுதப்பட்ட அறிக்கைக்கு பொறுப்பாகி உள்ளார். அதில் உள்ள கருத்துக்கு அவர் பொறுப்பாளி இல்லை.

 தொ.தே.சங்கத்திற்கு புத்துயிர் கொடுத்து கட்டியெழுப்பியதில் பிரதான பங்குதார் ஒருவர் நீங்கள் ஆக அந்த கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருப்பதை விலகியிருப்பதை எப்படி உணர்கின்றீர்கள்?

நேர்வழியில்பயணிக்காது குறுக்கு வழி தேடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் ஒதுங்கிச் சென்று விடுவது உண்டு. அப்படியான சந்தர்ப்பத்தில் இது மூன்றாவது. அரசியலை கட்டிப்பிடித்துக் கொண்டு ஈ ஓட்டும் அரசியல் என்னிடம் இல்லை. காத்திரமாக முன்னெடுப்பதே எனது இலக்கு. இதேபோல 2012 நான் விலகி இருந்த போதும் எனது அரசியலைக் கைவிடவில்லை. அதனால்தான் 2010 ல் எனக்கு தேசிய பட்டியல் தருவதாக ஏமாற்றியவர்களுக்கு எதிராக  2015 ல் போட்டியிட்டு தெரிவானேன். 2010 ல் என்ன செய்தார்களோ யாரெல்லாம் சேர்ந்து செயதார்களோ அதனையே 2020 லும் செய்தார்கள். இந்த சவால்களான சந்தர்ப்பங்களில் எல்லாம் நான் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு எதிரான ஒரு அமைப்பிடம் ஓடி அடைக்கலம் தேடியவனல்ல என நீங்கள் ஏற்கனவே கேட்ட உதயகுமார், ராஜதுரை போன்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் மூத்த உறுப்பினர்களை ஓரம் கட்டி முன்னுக்கு வர எத்தணிக்கும் உதயகுமார், நகுலேஸ்வரன், நந்தகுமார், ராம் என்ற வரிசை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இருந்து 2013 க்குப் பிறகு தான் வந்தார்கள். நான் 1992 ல் இருந்து அங்கே தொடர்பிலே இருப்பவன். இன்றைய திகதி வரை வேறு சங்கத்தில் கட்சியில் உறுப்புரிமை பெறாத தொழிலாளர் தேசிய சங்கத்தைத் தூற்றாத பண்பைப் கொண்டுள்ளவன். அதனை மலையகமே அறியும். இனியும் கூட தூற்ற மாட்டேன். எனது கருத்து நிலையில் வந்த அரசியல் வி.கே. வெள்ளையன், சி.வி. வேலுப்பிள்ளை போன்றவர்களின் சிந்தனையுடன் இணைந்து பயணிப்பது. அவர்களை மீளவும் மீளவும் வலியுறுத்தி அந்த அரசியலை வளர்த்து எடுத்தவன். ஆனால் "தொண்டமான்" தாசர்கள் "திகாம்பரம்" தாசர்களாக மாறி இப்போது பிழைப்பு நடாத்துகிறார்கள். அதில் திகாம்பரம் அற்ப சந்தோஷம் அடைகிறார் அவ்வளவுதான் நடக்கிறது.

முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தை தெ.தே.சங்கத்திற்கு கொண்டுவந்நது நீங்கள் என்கின்றீர்கள்,அவரை அழைத்துவர காரணம் என்ன?

அவரை தலைமைத்துவ பண்பு கொண்ட மலையக இளைஞராக நான் பல்கலைக் கழக மாணவராக இருந்த காலத்தில் அவதானித்தேன்.  அப்போது அவரது அரசியல் நாட்டமும் புரிந்தது. அவரது பெற்றோர் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தார்கள். . தோட்டத் தொழிலாளர்களிடத்தில் மாத்திரம் தங்கியிருந்த மலையக அரசியலின் அடுத்த படிமமாக கொழும்பில் தொழில் புரியம் மலையக இளைஞர்கள் இறங்க வேண்டும் என்ற சிந்தனையின் தெரிவே அவர். அவருக்குள் அந்த அவா அப்போது இருந்தது.எனவே 2004 மாகாண சபை தேர்தல் முதல் அவரை மலையக அரசியலில் ஆற்றுப்படுத்தினேன்.(அவரை எவ்வாறு மலையக அரசியலுக்கு நான் ஆற்றுப்படுத்தினேன் என்பதை இப்போது அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதில் இருந்து உலகம் அறியும்)

என்னுடைய ஆலோசனைகளையும் மீறி தொழிலாளர் விடுதலை முன்னணி எனும் அமைப்பில் அவர் சேர்ந்தார். அதற்கு நான் உடன்படாமல் ஒதுங்கி இருந்ததால்  சில காலம் சென்ற பின்னர் இவரிடம் ஏதும் இல்லை என தொழிலாளர் விடுதலை முன்னணி யினரால் நிதிச் செயலாளர் பதவியில் இருந்து தூக்கி வீசினர். அப்போது தனது அடுத்த கட்டம் என்ன என்று தெரியாமல் எனது வத்தளை வீட்டு வாசலில் நின்றார். அப்போது தொழிலாளர் தேசிய சங்கத்துடனான எனது தொடர்புகளின் அடிப்படையில் தொழிலாளர் தேசிய சங்க உயர்பீடத்தினரை அதே வீட்டுக்கு அழைத்து திகாம்பரத்தை தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைத்துக் கொண்டு செயற்படுமாறு ஆலோசனை வழங்கி இணைத்து வைத்தேன். அப்போது தலைவராக இருந்த புண்ணியமூர்த்தி ( மஸ்கெலிய ) சட்டத்தரணி ( இப்போது ) செல்வராஜா ( பொகவந்தலாவை) ரட்ணசாமி ( மஸ்கெலிய ) பிலிப் (  பொதுச் செயலாளர்) எல்லோருமே எனது வீட்டில் அமர்ந்து பேசியே திகாம்பரம் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். இவ்வாறு பெயர்,திகதி, இடம், சம்பவம், தொடர்புபட்ட நபர்கள்  என இருபது வருட கால எனது அரசியல் பங்களிப்பை ஒரு குறிப்பும் இல்லாமல் என்னால் உரையாக கூட ஆற்ற முடியும்.

-​திகாம்பரம் தற்போது உங்கள் அரசியல் எதிரியா?

எனக்கு நிச்சயமாக இல்லை. என்னை அவர் எதிரியாக்கிக் கொண்டால் அதற்காக அனுதாப்படுகிறேன். இயற்கை நீதி என்ற ஒன்று இருக்கிறதல்லவா? நாக்கை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப  மாற்றி பேசலாம். மனசாட்சியை மாற்ற முடியாது. அது உள்ளே இருந்து குடையும்.

 உங்களுக்கும் திகாம்பரத்திற்கும் இடையில் முரன்பாடு ஏற்பட பின்புலத்தில் யாராவது இருக்கின்றார்காள?

சில அடிவருடிகள் அவரைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்கள் திகம்பரத்தை காட்டிக் கொடுக்கும் நாளில் அவர்கள் யார் என அவர் அறிவார்.

 உங்களுக்கு என மலையகத்தில் தனியான ஆதரவு தளம் இருக்கின்றது ஆக நீங்கள் புது கட்சி ஆரம்பிப்பீர்களா?அல்லது ஏதாவது கட்சியில் இணைவீர்களா?

நான் எப்போதும் நிதானமாக முடிவுகளை எடுத்து செயற்படுத்துபவன்.அதனால் தான் சூழ்ச்சிகள் நிறைந்த அரசியல் சூழலில் என்னை அடையாளப் படுத்த முடிந்தது. எனவே எனது அரசியல் தீர்மானங்களை நிதானமாக எடுப்பேன். பாய்ச்சல் காட்ட மாட்டேன்.

- உங்கள் ஆதரவாளர்கள் உட்பட மலையக மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.

மாவட்ட எல்லைகளைக் கடந்து மலையக மக்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். அவர்களும் என்னை நேசிக்கிறார்கள். என்னைப் போன்றவர்களை அவமானப்படுத்தி விடுவதனால், என்மீது அவதூறுகளை எழுதி விடுவதால் என்னை ஓரம் கட்ட நினைப்பவர்களுக்கு மத்தியில் என்னை நேசிக்கும் மக்களின் ஆன்ம பலம் என்னை தொடர்ச்சியாக இயங்கச் செய்கிறது. நான் தொடர்ந்து இயங்குவேன். திலகர் திரும்பவும் பாராளுமன்றம் போனால் என்ன செய்வேன் என மலையக மக்களுக்கு மாத்திரமல்ல தமிழ் பேசும் சமூகத்துக்கு தெரியும். சிங்கள சமூகம் கூட இனவாதமல்லாத எனது அரசியலைப் புரிந்து கொண்டுள்ளார்கள்.

இப்போது எனது இலக்கு எப்படியாவது நாடாளுமன்ற கதிரையில் அமர்ந்து விடவேண்டும் என்பதல்ல. அடுத்த தலைமுறை அரசியலை எவ்வாறு முன்வைப்பது என்பதுதான். 2000 ஆம் ஆண்டுகளில் இளைஞர்களாக நாங்கள் முன்வைத்த அரசியல் மாற்றுப் பார்வையின் விளைவுகளே 2015 ல் வெளித் தெரிய ஆரம்பித்ததே தவிர அது தற்செயல் நிகழ்வல்ல. எனவே 2020 ல் நாங்கள் எத்தகைய சிந்தனைகளை முன்வைக்கிறோம் என்பதிலேயே 2030 ல் மலையகம் எதனை அடையப் போகிறது என்பது தங்கியுள்ளது. அதற்கேற்ற வியூகங்களை இளைய தலைமுறையினருடன் இணைந்து முன்வைப்பதில் பங்களிப்புச் செய்வேன். பொறுமையாக. நிதானமாக. காத்திருங்கள். காலம் எல்லோரையும் விட பெரியவன்.

நன்றி எஸ்.மோகன் (உதய சூரியன்)

 


சம்பள நிர்ணய சபைத் தீர்மானம்:முறைமை மாற்றத்துக்கான முதற்படி

இதுவரை காலம் ஆயிரம் ரூபாதான் பிரச்சினை என பேசிவந்த அரசியல், தொழிற்சங்க பிரதிநிதிகள் இப்போது அதற்கு அப்பால்சென்று வேலை நாட்கள் குறித்து பேசத் தலைப்பட்டுள்ளனர்.எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினை உக்கிரமடையும்போது முறைமை மாற்றம் குறித்து ஆயிரம் ரூபாவுக்கு வெளியே சென்று பேசும் பல திறப்புகள் வெளிப்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே சம்பள சபை மூலமான தீர்மானம், முறைமை மாற்றம் ஒன்றுக்கான முதற்படியாகும் என்கிறார் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் .

தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் சம்பள நிர்ணய சபை ஊடாக எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து கேசரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

அவருடனான உரையாடல் :

கேள்வி : தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் 1000/= ஆக தீர்மானித்திருப்பது பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில் : முதலில் அரசாங்கம் உறுதி அளித்தவாறு அடிப்படைச் சம்பளம் 1000/= வழங்கப்படவில்லை.அது 900/= ஆகவே உள்ளது. அடுத்தது, இதற்கு முன்னதான 700/= அடிப்படைச் சம்பளத்தின்போது மூன்று தொழிற்சங்கங்களில் ஒன்று கைச்சாத்திடாதபோதும் ஏனைய இரண்டு தொழில் சங்கங்களும் கம்பனிகளின் பிரதிநிதியும் கையொப்பம் இட்டு ஏற்றுக் கொண்டதால் நடைமுறைக்கு வந்தது. அப்போது அரசாங்கத்தின் ஒப்புதல் அவசியமாகி இருக்கவில்லை. ஆனால், இப்போது தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் ஒரு தொகைக்கு உடன்பட்டு வந்துள்ள போதும் கம்பனிகள் அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் எதிர்த்தும் வாக்களித்துள்ளன. எனவே அறிவிக்கப்பட்ட இந்த தொகையை வழங்க வேண்டிய கம்பனி உடன்படாமல் இருப்பது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமான முடிவு எனும் கேள்வியையே உருவாக்குகிறது.

கேள்வி : தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கையில் வெற்றி அடைந்துள்ளதாக கொண்டாடுகின்றனவே..

பதில் : அப்படி அறிவிக்கும் தேவைப்பாடு ஒன்று ஒரு தொழிற்சங்கங்கத்துக்கும் அரசாங்கத்துக்கும் உள்ளது. சம்பள நிர்ணய சபை தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட எல்லாத் தொழிற்சங்கங்களும் ஒரே நிலைப்பாட்டில் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். நாளுக்குரிய கூலித் தொகையில் அவர்களிடையே இணக்கப்பாடு தெரிந்தாலும் மாதத்தில் வழங்கப்படும் வேலைநாட்கள் தொடர்பில் அவர்களுக்குள் கருத்து முரண்பாடுகளும் ஐமிச்சங்களும் நிலவுவதை அவதானிக்கலாம். மாதத்தில் 25 நாள் வேலை வழங்கப்படல் வேண்டும் என எதிர்கட்சிசார்பு தொழிற்சங்கம் வலியுறுத்துகிறது. மறுபுறத்தில் அதனை சம்பள நிர்ணய சபை தீர்மானிக்க முடியாது என ஆளுங்கட்சி சார்பு தொழிற்சங்கம் தெரிவிக்கிறது.
தாங்கள் 1000/= நாட்சம்பளத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டதாக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கொண்டாடினாலும் அடுத்துவரும் மாதங்களில் அந்த சம்பளத்தை மாதாந்தம் பெறும் தொழிலாளர்களின் சம்பளப் பட்டியல் வாயிலாக அதன் உண்மைத் தன்மை வெளிப்படும். அப்போதுதான் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும்.

கேள்வி : இத்தனை வருடகாலம் இல்லாத சம்பளசபை முறைமை இப்போது திடீரென எப்படி வந்தது ?

பதில் : சம்பள நிர்ணய சபை ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தைத் தீர்மானிக்கும் முறைமை புதியதல்ல. ஆனாலும், கூட்டு ஒப்பந்தம் மூலம் தீர்மானிப்பதான ஒரு முறைமை வந்தவுடன் அந்த முறைமை கிடப்பில் போடப்பட்டது. இப்போது அதனைத் தூசுதட்டும் தேவைப்பாடு நடப்பு அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கொத்தபய ராஜபக்‌ஷ சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரமும், ஆண்டின் இறுதியில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ வரவு செலவுத் திட்டத்தில் விடுத்த அறிவிப்பும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரவில்லை. அது அரசாங்கத்துக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்த நிலையிலேயே சம்பளநிர்ணய சபையின் ஊடாக தீர்மானிப்பதற்கு தொழில் அமைச்சர் நிமால் சிறிபால சில்வா அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து சம்பள நிர்ணய சபைக்குச் செல்ரும் தீர்மானத்தை எடுத்தார்.

சம்பள நிர்ணய சபையில் அடிப்படை நாட்சம்பளம் 900/= எனவும் வரவுசெலவுத்திட்டபடி 100/= எனவும் வழங்க வேண்டும் எடுத்த முடிவுக்கு கம்பனிகள் இணங்கவில்லை என்பது அவர்கள் அதனை எதிர்த்து வாக்களித்ததில் இருந்தே தெளிவாக தெரிகிறது.

இங்கே தொடர்புபடும் மூன்று தரப்பினர்களில் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தை நிறைவேற்றும் பொறுப்பு அதனை மறுக்கும் கம்பனிகள் சார்ந்தது என்றவகையில் இனிவரும் காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை மாற்றுவடிவம் எடுக்க வாய்ப்புகள் உள்ளன.

கேள்வி : முதலாளிமார் சம்மேளனம் இணங்காவிட்டால் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் ?

பதில் : தோட்டக் கம்பனிகள் தமது ஆட்சேபனையைத் தெரிவிக்க 14 நாட்கள் கால அவகாசம் உண்டு. அது குறித்து தாம் கவனம் செலுத்த உள்ளதாக முதலாளிமார் சம்மேளனப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்து உள்ளார். அதற்குள் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை வெளியிட்டு, அதனை ஏற்று நடைமுறைப்படுத்த கம்பனிகள் நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர்கள் வழங்கும் வேலை நாட்களைக் குறைக்க வாயப்பு உள்ளது. அது தொழிலாளர்களின் மாத வருமானத்தைக் குறைக்க வல்லது.

எனவேதான் இதுவரை காலம் ஆயிரம் ரூபாதான் பிரச்சினை என பேசிவந்த அரசியல், தொழிற்சங்க பிரதிநிதிகள் இப்போது அதற்கு அப்பால்சென்று வேலை நாட்கள் குறித்து பேசத் தலைப்பட்டுள்ளனர்.எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினை உக்கிரமடையும்போது முறைமை மாற்றம் குறித்து ஆயிரம் ரூபாவுக்கு வெளியே சென்று பேசும் பல திறப்புகள் வெளிப்பட வாய்ப்புகள் உள்ளன.

கேள்வி : இப்போதைய புதிய முனைப்புகளினால் இதுவரை நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமை என்னவாகும் ?

நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமையில் மாற்றம் வேண்டுமென கடந்த காலங்களில் தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டு வந்துள்ளது. இப்போது சம்பள நிர்ணய சபை மூலம் தீர்மானிக்கப்பட்ட ஒரு தொகையை கம்பனிகள் வழங்க வேண்டும் அரசினால் நிர்ப்பந்திக்கப்படும் நிலையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமையின் இறுக்கம் தளர்ந்துள்ளது என்பதனைக் காட்டுகிறது. கம்பனிகளின் அறிக்கைகளில் அதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன.

இதனால், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை மாற்றுவடிவில் வெளிவரும். இதன்போது அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் மேலும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கும் தேவை எழும். அதன்போது முறைமை மாற்றம் ஒன்றிற்கான அழுத்தம் அதிகரிக்கும். சமூக மட்டத்திலும் ஆயிரம் ரூபாதான் பிரச்சினை என்கிற நிலையைக் கடந்து தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையை, மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினையைப் பார்க்கும் சூழ்நிலை ஏற்படும். இதனை அரசியல் ரீதியான ஒரு முன்னகர்வு என கொள்ளுதல் வேண்டும். அதே நேரம் அந்த அரசியலை கவனமாக முன்னகர்த்தவும் வேண்டும்.

கடந்த ஐந்து, ஆறு வடிவங்களாக பாராளுமன்றில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்ததன் விளைவாகவே, கடந்த கால் நூற்றாண்டு காலமாக கண்டு கொள்ளாமல் இருந்த அரசும் அரசாங்கமும் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பள விடயத்தில் தலையிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அரசாங்கம் இப்போதுதான் இந்த சுமையை சுமக்க ஆரம்பித்துள்ளது.

இதன் பிரதிபலிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன சபையில் தெரிவிக்கிறார். கம்பனிகள் மறுத்தால் தோட்டத்தை அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டுப் போகலாம் என தொழில் அமைச்சர் சபையிலே பகிரங்கமாக கூறியுள்ளார். எனவே, இந்த கால் நூற்றாண்டு காலமும் கம்பனிகளுக்கு 99 வருட குத்தகைக்குக் கொடுத்திருப்பதான கதை பொய்யானது என்பது தெளிவாகிறது. அரசுக்கே நிலம் சொந்தம்.அரசே தங்கப்பங்குடமையாளர். அதனால்தான் இத்தனை உறுதியாக கம்பனிகள் வெளியேறட்டும் என சொல்ல முடிகிறது.

1972 ஆம் ஆண்டு அரசாங்கம் பிரித்தானிய கம்பனிகளிடம் இருந்து தோட்டங்களைப் பொறுப்பெடுத்ததன் பின்னரே தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு அவை சிறுதொட்டங்களாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவையே இன்று தேயிலை ஏற்றுமதியில் 75 சதவீத வருமானத்தைப் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றன.

பெருந்தோட்டங்கள் தோல்வியடைந்த 25 ஆண்டுகளில் சிறுதோட்டங்கள் வெற்றியடைந்த வரலாற்றை வலியுறுத்தி தனியார் கம்பனிகளிடம் இருந்து தோட்டங்களைப் பெற்று அவற்றை தொழிலாளர்களுக்கு பகிர்ந்து அளிப்பதன் மூலமே, கூட்டு ஒப்பந்தம், சம்பள நிர்ணய சபை முதலான குழப்பகரமான சூழல்களைத் தவிர்க்கலாம். எனவே இன்றைய சூழலை முறைமை மாற்றத்திற்கான முதற்படியாக கொள்ளுதல் வேண்டும்.

15/02/2021 - Virakesari

ஆயிரம் ; தொகையல்ல குறியீடு 

-மல்லியப்புசந்தி திலகர்

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி சரியாக ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வரையான நாட்சம்பளம் வழங்கப்படும் என வரவு செலவுத்திட்டத்தில் அறிவித்த நிலையிலும் 2021 ஜனவரி 15 ல  அதற்கான பதிலாக கிடைத்திருப்பது 1105/= நாட்சம்பளம் என்ற முதலாளிமார் சம்மேளனத்தின் முன்மொழிவு .

 

கபடக்கணக்கு

அடடே ... ஆயிரம் ரூபா கேட்டவர்களுக்கு அதற்கும் மேலதிகமாக 105/= சேர்த்து கொடுத்துவிட்டோம் என கணக்கு விடும் கம்பனிகளின் கபடத்தனமே இது.
இந்த 1105/= ரூபா எவவாறு கணக்கிடப்படுகிறது என்பதில் இருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம். முதலில் 105/= ரூபாவை எடுத்துக்கொள்வோம்.

105/- எப்படி வருகிறது ?

தொழிலாளி ஒருவரின் அடிப்படை நாட்சம்பளத்தில் 12 % ஐ தொழில் வழங்குனர் மாதாந்தம் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ( EPF) செலுத்த வேண்டும் என்பது ஊழியர் சேமலாப நிதிய நியதிச் சட்டம். இந்த நிதியத்துக்கு தொழிலாளர்களும் தமது பங்கிற்கு 10% செலுத்த வேண்டும் என்பதும் சட்டத்தில் உள்ளது. மேலதிகமாக 3 % ஐ ஊழியர் நம்பிக்கை நிதியத்துக்காக தொழில் வழங்குனர் வழங்குதல் வேண்டும் என்பதுவும் தனியான நியதிச் சட்டம்.

இதன் பிரகாரம் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 15 % தொழில் வழங்குனரும் 10 % வீதம் தொழிலாளர்களும் நிதியத்துக்கு செலுத்திவைக்க வேண்டியது, அவர்கள் வயோதிப காலத்தில் வேலையை விட்டு விலகிச்செல்லும்போது அதற்குப் பின்னான வாழ்க்கைக்கான சமூக பாதுகாப்புத் தொகையாகும். இது ஒரு வகையில் சேமிப்பு ஆகிறது. இதனை தொழிலாளி ஒருவர் 55 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வேலையைவிட்டு நீங்கியபிறகு வட்டியுடன் மீளப்பெற்றுக்கொள்ளக்கூடியது.

ஆனால், தற்போது கம்பனிகள் முன்வைத்துள்ள முன்மொழிவில் தாம் நிதியத்துக்கு செலுத்தும் 15% ஐயும் ( EPF 12%+ETF3%) கணக்கிட்டு நாள் சம்பளத்தில் சேர்க்கின்றன. அதாவது இன்றைய நாள்சம்பளத்தை 25-30 வருடங்கள் கழித்து தொழிலாளி பெறவேண்டும் என்கிற புதுவிதமான ஒரு (அ)நியாயம்.

இப்போது இவர்களின் 1105/= ரூபா தொகையில் இந்த 105/= இப்படித்தான் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே அடிப்படைச்சம்பளம் நாள் ஒன்றுக்கு 700/= தான் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. 12+3/100x700 = 105 என்பதே அந்தக் கணிப்பீடு.

 

தொழில் வழங்குனரின் பங்களிப்பை நாள் சம்பளத்துடன் கூட்டிப் பார்த்தால் தொழிலாளர்களின் பங்களிப்பை கழித்துப் பார்க்க வேண்டுமே என ஒரு வாதத்திற்கு இப்படி ஒரு கணிப்பீடு செய்தால்,  அதாவது தொழிலாளியின் பங்களிப்பு 10 சதவீதமும் இப்போது அவர்களது கைக்கு கிடைப்பதில்லை. எனவே 10/100x 700 = 70 எனப்பார்த்தால் அடிப்படைச் சம்பளமாக தொழிலாளி கைக்கு கிடைப்பது 630/- மட்டுமே

 

எனவே அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட 1000/= அடிப்படைச்சம்பளம், ‘தைப்பிறந்தால் வழிபிறக்கும்’ என்ற தத்துவம் எல்லாமே தவிடுபொடியாகியுள்ளது.

விலைசகாய படி நீக்கம்

கூடவே 700/= அடிப்படைக்கு மேலதிகமாக இப்போது நடைமுறையில் உள்ள விலை சகாயப்படி (PSS - Price Share Supplement) 50/= முற்றாக புதிய முன்மொழிவில் நீக்கப்பட்டுள்ளது. இது 700/= அடிப்படைக்கு மேலதிகமாக நிரந்தரமாக கடந்த இரண்டு ஆண்டுகளும் கொடுக்கப்பட்டு வந்தது.

 

வரவுக் கொடுப்பனவு 150/-

இதற்கு மாற்றமாக இனி வரவுக் கொடுப்பனவு 150/= எனும் முன்மொழிவைப் பார்ப்போம். மாதம் ஒன்றில் கம்பனிகள் வழங்கும் வேலை 25 நாட்களாக இருந்தால் (வருடாந்தம் வழங்கப்படும் வேலைநாட்கள் 300 ஆக இருக்க வேண்டும் என மூல கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு சரத்து உண்டு. ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவது இல்லை) அதில் 19 (18.75) நாட்கள் வேலைக்குச் சென்றிருந்தால் மாத்திரமே ஒரு நாளைக்கு 150/= வீதம் 19 நாட்களுக்கும் கிடைக்கும். தற்செயலாக 18 நாட்கள்தான் ஒரு தொழிலாளி சமூகமளித்திருந்தால் ஒட்டுமொத்த 18 நாட்களுக்குமான அந்த 150/= கிடைக்காது. எனவே 19 நாள் வேலைசெய்தால் 19x150=2850/= கிடைக்கும்.

18 நாட்கள் அல்லது அதற்கு குறைவாக வேலை செய்திருந்தால் 18x0=0 வரவுக் கொடுப்பனவு அறவே கிடைக்காது. எனவே மாத த்தில் வேலை செய்ய நாட்கள் முழுவதற்குமாக நாளுக்கான அடிப்படைச் சம்பளம் 700/= மட்டுமே கிடைக்கும். மழையும் குளிரும் நிறைந்த காலநிலையில் மலையேறி, குளிரில் நடுங்கி வேலை செய்யும் தொழிலாளி சுகவீனத்தினாலோ அல்லது வேறு காரணத்திற்காகவோ வழங்கும் வேலை நாட்களில் 75 சதவீமான அளவுக்கு குறைவாக சமுமளித்திருந்தால் இந்த சம்பளம் அவர்களைச் சென்றடையாது. எனவே நிபந்தனை அடிப்படையிலான இந்த வரவுக் கொடுப்பனவு முறைமையை நாட்சம்பள அதிகரிப்பாகக் கருத முடியாது.

உற்பத்தித்திறன் கொடுப்பனவு 150/- 

உற்பத்தித் திறன் கொடுப்பனவு 150/= என்பதும் இதேபோன்ற ஒரு நிபந்தனைத் தொகைதான். ஒரு நாளைக்கு 20 கிலோ கொழுந்துக்கு மேலதிகமாக எடுத்தால்தான்( இந்த கிலோ அளவு மாறுபடலாம். இரப்பருக்பும் ஒரு அளவு உண்டு ) இந்த 150/= கிடைக்கும். தேயிலை உற்பத்தி வறட்சியினால் வீழ்ச்சி அடைந்தால் அல்லது ஒரு தொழிலாளி தனது சாதாரண உழைப்பால் அதனை அடைய முடியாது போனால் இந்தத் தொகைக் கிடைக்காது.

எப்போதாவது ஒரிரு தொழிலாளிகள்  எடுத்த இந்த நிறையளவைக் காரணம் காட்டி கம்பனிகள் இதனை ஒரு கணக்காக் காட்டுகின்றன. ஆனால் ஒரு நாளைக்கு 14 கிலோ கொழுந்து தான் சாதாரண உழைப்பாளி ஒருவரால் எடுக்க முடியும் என்பதே இதுவரையான சராசரி ஓர் ஆய்வு அளவாகும்.

இந்த சுமையை அவர்கள் சுமந்தபடி நிலுவை செய்யும் மத்திய இடத்திற்கு வரவேண்டும். அதிலும் தண்ணீர் சேர்த்த பாரம் என்றும், தட்டுப்பாரம் ( தராசில் தேயிலையைக் கொட்டும் தட்டு) என்றும், தரக்குறைப்புக்கான கழிவு என்றும் மொத்த கிலோவில் 2 முதல் 3 கிலோ கணக்கில் சேர்ப்பதில்லை. இப்படியாக இந்த உற்பத்தித் திறன் கொடுப்பனவு தொழிலாளிக்கு சென்று சேராமல் இருப்பதற்கான ஏற்பாடுகளே அதிகம்.


மேலும் இவை இரண்டும் புத்தம் புதிய முன்மொழிவுகளும் கூட இல்லை. இந்த இரண்டு நடைமுறைகளும் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் கூட்டு ஒப்பந்த சரத்துகளாகச் சேர்க்கப்பட்டு பிறகு சிக்கல்களை உணர்ந்து அகற்றப்பட்ட முறைமைகள்தான்.

இப்படியாகக் கபடத்தனமான கணக்கு காட்டுதல் மூலமாக 1105/= நாட்சம்பளம் என முன்மொழிவில் காட்டப்பட்டாலும் 700/= மட்டுமே நிரந்தரமானது. இருந்த நிரந்தர 50/= தொகையும் இல்லாமல் ஆக்கப்படுகிறது.

தோல்வியடைந்த முறைமை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள இங்கே உள்ள பிரச்சினை 1000/= அல்ல. ஆயிரம் என்பது ஒரு குறியீடு எனக் கொள்ளுதல் வேண்டும். அது இப்போது நடைமுறையில் உள்ள குறைபாடு என கொள்ளுதல் வேண்டும். கடந்த 25 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் இந்தத் முறைமை ‘தோல்வி’ கரமான ஒரு முறைமை என்பதன் குறிகாட்டியாக பின்வருவனவற்றைக் கொள்ளலாம்.
தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும் 1000/= அடிப்படை சம்பளம் என்பதை பெற்றுக் கொள்ள முடியாத தொழிலாளர்கள் பக்கமும் தோல்வி
தொடர்ச்சியாக தாம் நட்டத்தில் இயங்குவதாகக் கூறும தோட்டக் கம்பனிகளால் ‘நட்டம்’ என்ற சொல்லினால் உணர்த்தப்படுவது தோல்வி. ஏனெனில் 25 ஆண்டுகளில் பயிர்ச்செய்கை பரப்பளவு நிலம் வெகுவாக குறைந்துள்ளது. தொழிலாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. உற்பத்தி அளவு குறைவடைந்துள்ளது. ஏற்றமதி வருமானம் ‘ பெருந்தோட்டத்துறையில்’ இருந்து குறைவடைந்துள்ளது.எனவே தொழில் தருனர் பக்கத்திலும் தோல்வி.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் அரச மானியமாக நாளாந்தம் 50/ பெற்றுக் கொடுக்க பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு (ஒன்றுக்கு இரண்டு தடவைகள் ) பெறுக் கொடுக்க எடுத்த முயற்சிகள் தோல்வி.

தற்போதைய அரசாங்கம் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெறுக் கொடுக்க 2020 ஜனவரியில் அனுமதித்த அமைச்சலவைப் பத்திரம் தோல்வி.அதுவும் ‘நிறைவேற்றதிகார ஜனாதிபதி’ சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் தோல்வி.
தற்போதைய அரசாங்கம் 2021 ஜனவரி முதல் ஆயிரம் ரூபா நாள் சம்பளம் வழங்குவதாக வரவுசெலவுத்திட்டத்தில், அதுவும் நாட்டின் பிரதமரே அறிவித்த தொகை தோல்வி.

இவ்வாறு தொழிலாளர் - தொழில் வழங்குனர் - பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு- பிரதமர் ( வரவு செலவுத்திட்டம் , பாராளுமன்றம்) - நிறைவேற்றதிகார ஜனாதிபதி, அமைச்சரவை என எல்லாத்தரப்பு முயற்சிகளும் தோல்வி அடைந்த ஒரு தோல்வி முறைமையே இப்போது பெருந்தோட்டப் பொருளாதாரத்தில் நடைமுறையில் உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

 

அரசாங்கம் தோட்டங்களைப் பொறுப்பேற்றால்... ?

இதற்கான மாற்று வழிகளாக அரசாங்கம் தோட்டங்களைப் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதில் எந்த முன்னேற்றமும் நிகழப்போவதில்லை. ஏற்கனவே 200 வருட கால பெருந்தோட்ட வரலாற்றில் பத்துசதவீதமான காலப்பகுதியில் ( 1972 முதல் 1992 வரையான இருபது ஆண்டுகள்) மட்டுமே அரசாங்கம் பொறுப்பேற்று நடாத்தியது. அப்போது தாம் நட்டமடைந்ததாக கூறியே, 1992 ஆம் ஆண்டு மீண்டும் ( உள்நாட்டு) தனியாருக்கு ஒப்படைத்தார்கள். எனவே அரசாங்கம் ஏற்று நடாத்தினாலும் தோல்வி.

ஆனால், அரசு வெற்றிபெற்ற புள்ளியும் இங்கேதான் இருக்கிறது. 1972 ஆண்டு காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் பிரித்தானிய கம்பனிகளிடம் இருந்து பெருந்தோட்டங்களைப் பொறுப்பேற்ற அரசு, 1992 ஆம் ஆண்டு மீளவும் உள்நாட்டு தனியாருக்கு தோட்டங்களை முகாமிக்க பகிரந்தளித்தபோது மேல்நிலைத் தேயிலையின் ( High grown tea) 98 சதவீதப் பகுதியையும் , மத்திய நிலத் தேயிலையின் ( Mid grown tea ) 25 சதவீத பகுதியையும், தாழ்நிலத் தேயிலையின் ( low grown) 5 சதவீதப் பகுதியையும் வழங்கியது. மறுபக்கமாக சொன்னால் தாழ்நிலத்தேயிலையின் 95 சதவீதமான பகுதியை அங்கு வாழும் மக்களுக்கு பகிரந்தளித்துவிட்டது. மத்திய நிலத்தேயிலையின் 75 சதவீத்த்தை அங்கு வாழும் மக்களுக்குப் பகிரந்தளித்து விட்டது. எஞ்சிய உயர்நிலத் தேயிலையின் 98 சதவீத்தை தனியார் பிராந்திய கம்பனிகளுக்கும் ( RPC) ஏனைய 2 சதவீத்த்தை அரசும் நடாத்தி நட்டத்தில் இயங்க வைத்துள்ளது.

தேயிலை வகையும் ஏற்றுமதி நிலையும்

இப்போதைய புள்ளிவிபரங்களின்படி மக்களுக்கு பகிரந்தளிக்கப்பட்ட தாழ்நில, மத்திநில ( lowgrown and mid grown) தேயிலை உற்பத்தியில் இருந்தே 72 சதவீதமான ஏற்றுமதி இடம்பெறுகிறது. எனவே வெற்றிபெற்ற முறைமை என்பது மக்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்ட பகுதியில் இருந்தே கிடைந்துள்ளது. இத்தனைக்கும் அங்கு மொத்த தேயிலை உற்பத்தி நிலத்தின் 30 சதவீதமான பகுதியே உள்ளது. அவை மக்களின் ( சிறு தோட்ட )உடமையாக உள்ளது. அதில் இருந்து 72 சதவீதமான ஏற்றுமதி கிடைக்கிறது. அந்த மக்கள் ஆயிரம் ரூபா வேண்டும் என கோஷம் எழுப்புவதில்லை. தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்படும் 98 சதவீத ஆய்வுகள் சிறு தோட்டங்களை முன்னேற்றும் நோக்கம் கொண்டன.


மாறாக மொத்த தேயிலை உற்பத்தி நிலத்தில் 70 சதவீத்த்தை உயர் தேயிலை நிலங்கள் ( high grown ) கொண்டுருக்கின்றன. அவை கம்பனிகள், அரச கூட்டுத்தாபனங்கள் வசமே உள்ளன. 28 சதவீத ஏற்றுமதியையே செய்கின்றன. நட்டத்தில் இயங்குவதாகவும் சொல்கின்றன. நிலத்தை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கத் தயங்குகின்றன.அவர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக்குவதற்கு பதிலாக ‘அவுட்குரோவர் முறைமை’ ( உற்பத்தித் திறன் முறை என்பது இதுதான்) என கம்பனிகளே அரசின் நிலத்தை வைத்துக் கொண்டு தொழிலாளர்களை அதில் கூலிகளாக வைப்பதற்கே முயற்சிக்கின்றன.

( இந்த முறைமை முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் EPF / ETF முற்றாக இல்லாமல் செய்யப்படும் அபாயம் உள்ளது) தொழிலாளர்கள் தொடர்ந்தும் 1000/= என கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கின்றனர்.

 

இந்தக் கதைத் தொடரின் முக்கிய திருப்பம் இனித்தான் வரப்போகிறது. உயர்நிலத் தேயிலை உற்பத்தியில் 99.9 சதவீதம் "தமிழ் தொழிலாளர்களும்", மத்திய மற்றும் தாழ் நிலத்தேயிலையில் 99சதவீதம் "சிங்கள  சிறுதோட்ட உடமையாளர்களும் " உள்ளனர்.

 

1000 தொகையல்ல குறியீடு

எனவே 1000 என்பது தொகை அல்ல ஒரு குறியீடு என்பது இப்போது புரிந்திருக்கும். இங்கே சிங்கள மக்களை குறை சொல்வதற்கு இல்லை. அவர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக இருப்பதில் எமக்கு ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அந்த உரிமையை தமிழ் தொழிலாளர்களுக்கு ( அல்லது மலையகத் தமிழ் மக்களுக்கு ) வழங்க முடியாது என்கிற 'தத்துவார்த்தமே' இந்த 1000/- பிரச்சினையின் அடிப்படையாகும்.

இலங்கை அரசு ( அது எந்த அரசாங்கமாக இருந்தபோதும்)  மலையகத் தமிழ் மக்களுக்கு காணியைப் பெற்றுக் கொடுக்க திறந்த மனதோடு முன்வரவில்லை என்பதே இந்த பிரச்சினையின் பிரதான மையப் புள்ளி ஆகும்.

இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு எடுக்க இலங்கையை பௌத்த தேசமாக நிறுவுவதற்கு தத்துவார்த்தத்தை வழங்கிய அநகாரிக்க தர்மபாலவின் கருத்து நிலை ஆழ வேரூன்றி உள்ளது. பிரித்தானியருக்கு எதிரான கருத்து நிலையில்  இலங்கை மண்ணை மீட்டு பௌத்த அரசை நிறுவும் அவரது கோட்பாட்டில், அந்த பிரத்தானியரால் அழைத்து வரப்பட்ட இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள்களுக்கு இலஙலகையில் இடம் இருக்கவில்லை. எனவேதான்

1. 1948 ல் அவர்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கியிருந்த குடியுரிமை சுதேச அரசினால் பறிக்கப்பட்டது
2. 1964 ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து நாடு கடத்தப்பட்டது
3. பிரஜாவுரிமை என்ற பெயரில் வாக்குரிமை மாத்திரம் வழங்கப்பட்டது
4.1972-  1992 காலப்பகுதியில் சிங்கள மக்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக மாற்றப்படும்போது தமிழ்த் தொழிலாளர்கள் தொடர்ந்தும் கூலகளாகவே வைக்கப்பட்டுள்ளார்கள்.
5. குறைந்தபட்சம் அவர்களின் வீடமைப்புக்கான 7 பேர்ச் காணி கூட கொள்கை அடிப்படை அல்லாது தற்காலிகமான அமைச்சரவைப் பத்திரங்களால் அவ்வப்போது அனுமதிக்கப்படுகிறது. அதுவும் தற்போதைய தொழிலாளர்க்கு மாத்திரம்.

6. தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகளே தோட்ட மக்களின் சேம நலன்களை கவனிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்கிறது ( பிரித்தானியர் காலத்தில் அந்தக் கம்பனிகளும், 72-92 காலப்பகுதியில் அரசின் சார்பாக நிர்வகித்த கூட்டுத்தாபனஙலகளும், 1992 க்குப் பின்னர் தனியார் கம்பனிகளின் பங்களிப்பில் நாடத்தப்படும் PHDT (TRUST ) நிறுவனமும் அதற்கு பொறுப்பாக இருந்தன / இருக்கின்றன.

இதன் உச்சகட்டமாக "தோட்ட மக்களின் சுகாதாரம் முதல் சகல சேமநலன்களையும் நாங்களே கவனிக்கிறோம். அவர்களின் சம்பளவிடயத்தில் தலையிடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை " என முதலாளிமார் சம்மேளன பேச்சாளர் ரொஷான் ராஜதுரை ஊடகங்களுக்கு (20-01-2021 Daily mirror) தெரிவிக்கும் அளவுக்கு மலையகத் தமிழ் மக்கள் இலங்கை அரசில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள்.

தலைவர்கள் நிலை

எனவே, மலையகத் தமிழ் மக்களை காணி உரிமையுடன்  கூடிய அர்த்தமுள்ள குடிகளாக, அரச சேவைகளைப் பெற உரித்துடுவர்களாக ஆக்கும் வரை 1000/- 2000/- என ஆண்டுகள் மாறி கோரிக்கைகள் தொடரும். அவை 1105/- போன்றதொகைகளால் கபடத்தனமாகக் கண்க்குக் காட்டப்பட்டு நகர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கும்.

எனவே 1000/- ஒரு தொழிற்சங்க பிரச்சினை இல்லை. அது கம்பனிகளுடன் நடாத்தும் பேச்சுவார்த்தையில் / கூட்டு ஒப்பந்தத்தில் தீர்க்கப்படும் பிரசரசனையுமில்லை. அதனை ஆஜானுபாகுவாக தீர்த்துவைக்கும் அரசியல் தொழிற்சங்க தலைவர்களும் இல்லை .

இது ஒரு தலைமுறை சார்ந்த பிரச்சினை.

மலையகத்தின் முதலாம் தலைமுறை கொத்தடிமை நிலையில் இருந்தது. இரண்டாம் தலைமுறை அந்த சமூகத்தை அரசியல் மயப்படுத்தி  நாடாளும் சபைக்கு வந்தது, அதனைத் தடுக்க குடியுரிமையைப் பறித்த போது மூன்றாந்தலைமுறை அதனை போராடி மீளவும் பெற்றது. மீளப்பெற்ற வாக்குரிமையைக் கொண்டு மீண்டும் நாடாளுமன்றம் வந்த நான்காம் தலைமுறை அபிவிருத்தி அரசியலை கையில் எடுத்தது. அதுவரை இருந்த உரிமை அரசியலை கைவிட்டது. அந்தப் பாரமே இப்போது ஐந்தாம் தலைமுறையினரின் கைக்கு வந்துள்ளது.

நீண்டதூர அரசியல் பார்வையும் வரலாற்று ஆய்வுப்புலமும் கொண்ட அரசியல் செயற்பாட்டினால் மட்டுமே மலையகத் தமிழர் அர்த்தமுள்ள குடிகளாக இலஙலகை மண்ணில் வாழ வழி சமைக்க முடியும். அதனையே அடுத்த மலையகத் தலைமுறையினர் தமது அரசியல் செயற்பாடாக கொள்ள வேண்டும்.


மலைநாட்டுத் தமிழர்கள்- புளொட் அமைப்பின் அரசியற் பார்வை

 -மல்லியப்புசந்தி திலகர் 

தோட்டத் தமிழரகள், இந்திய வம்சாவளி தமிழர்கள், மலைநாட்டுத் தமிழர்கள், நாடற்றவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் எனும் பல பெயர்களில் இலங்கையின் பெருந்தோட்டங்களில், தேயிலை ரப்பர் தொழில்துறைகளில் அடிமைகள் போன்று தலைமுறை தலைமுறையாக வாழவைக்கப்பட்டிருக்கும் ‘ஒரு தமிழ்ச்சமூகம்’ பற்றிய தனது புரிதலாக, உமா மகேஸ்வரன் தலைமையில் இயங்கிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வெளியீடாக கொண்டு வந்திருக்கக் கூடியதே THE UPCOUNTRY TAMILS - The Wretched of the Earth (மலைநாட்டுத் தமிழர்கள் உலகின் மோசமான பக்கத்தினர்) எனும் இந்த ஆங்கில நூல்.

இந்த நூல் குறித்த பார்வைக்கு வருவதற்கு முன் நடைமுறை அரசியலுடன் தொடர்புபடுத்திய விடயம் ஒன்றைப் பார்த்துவிட்டு வருவது பொருத்தமானது.

கடந்தவாரம் (23/01/2021)ஒரு வானொலி நிகழ்ச்சி. அதில் இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற எம்.ஏ.சுமந்திரன் நேர்காணல் செய்யப்படுகிறார். அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் உங்கள் கருத்து நிலைப்பாடு என்ன? என்பதாக இருந்தது.அதற்கான அவரது பதில்; அதற்கு ‘கூட்டு ஒப்பந்தம்’ மூலமாக தீர்வு காண்பதே சரியானதாகும். அங்கே தோட்டங்கள் தனியார் கம்பனிகளிடமே வழங்கப்பட்டுள்ளன. எனவே அவர்களோடு பேரம்பேசி கூட்டு ஒப்பந்தம் மூலம் தீர்வு காண்பதே சரி என நினைக்கிறேன்.அரசாங்கம் தலையீடு செய்வதில் எந்த பிரயோசனமும் இல்லை என்பதாக அமைந்தது.

இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கூறிய எந்த பதில் ஒரு சட்டத்தரணியின் பதிலாக, சரியானதாகவும் இருந்ததுவே அன்றி அரசியல்வாதியுடைய பதிலாக இருக்கவில்லை. அதுவும் ‘இலங்கைத் தமிழரசு கட்சியின்’ பேச்சாளராக, நாடாளுமன்ற உறுப்பினராக அந்த பதில் ஏற்புடையதாக இருக்கவில்லை.

இலங்கைத் தமிழரசு கட்சிக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்ததோடு உருவான அந்த கட்சிக்கு 70 ஆண்டுகால வரலாறு உண்டு. அந்த வரலாற்றின் ஆரம்பமே மலைநாட்டுத் தமிழர் தொடர்பானது என்பதுதான் இங்கே குறித்துரைக்கத்தக்கது.

சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் முதல் பத்து மாதங்களுக்குள் கொண்டுவரப்பட்டச் சட்டம் இந்திய வம்சாவளி மக்களின் ( மலைநாட்டுத் தமிழர் உள்ளடங்களாக) இலங்கைக் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம். இதற்கு ஆதரவாக எதிராக வாக்களிப்பது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சிக்குள்ளே ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ். ஜே.வி.செல்வநாயகம் ஆகியோரிடையே கருத்து முரண்பாடு ஏற்படவே, எஸ். ஜே.வி.செல்வநாயகம் ( தந்தை செல்வா) பிரிந்து சென்று ‘இலங்கைத் தமிழரசு கட்சி’ யை உருவாக்கினார் என்பது தொடக்க வரலாறு. அதற்குப் பின் அந்த கட்சிக்கு இற்றைவரையான நீண்ட வரலாறு இருக்கலாம்.

இது நடந்தது 1948, 1949 களில். அப்போதிருந்து 20 ஆண்டுகள் கழித்து இன்னுமொரு அரசியல் நிகழ்வு ஒன்று நடந்தது. அதுதான் ‘தமிழர் கூட்டணியின்’ உருவாக்கம். இந்தக் கூட்டணியில் அன்று பிரிந்து சென்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசும், இலங்கைத் தமிழரசு கட்சியும் இணைந்ததோடு, தாம் எதற்காகப் பிரிந்தார்களோ, அதாவது மலையகத் தமிழர்களின் வாக்குரிமைப் பறிப்புக்காக சண்டையிட்டுப் பிரிந்து கொண்டவர்கள் அதே மக்களின் அரசியல் தொழிற்சங்க அமைப்பான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும் இந்த தமிழர் கூட்டணியில் இணைத்துக் கொண்டார்கள்.

சௌமியமூர்த்தி தொண்டமானையும் சேர்த்து மூன்று தலைவர்களுமே கூட்டணியின் இணைத் தலைவர்களாகவும் இருந்தார்கள். 1976 ஆம் ஆண்டு இந்தக் கூட்டணி தமிழர் ( ஐக்கிய ) விடுதலைக் கூட்டணியாக உருப்பெற்றதோடு, வட்டுக்கோட்டையில் மாநாடு கூட்டி தனித் தமிழ் ஈழம் ஒன்றே தமிழர் விடுதலைக்கு தீர்வு என ‘வட்டுக்கோட்டை தீர்மானம்” நிறைவேற்றினார்கள். எனினும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இந்த கூட்டணியில் இருந்தும் அந்தத் தீர்மானத்தில் இருந்தும் தம்மை விலக்கிக் கொண்டது. அது சரியான முடிவும் கூட.

இந்த 1950 க்கும் 1970 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியானது ‘ இலங்கைத் தொழிலாளர் கழகம்’ என்ற தொழிற்சங்கத்தை 1962 ஆம் ஆண்டு உருவாக்கி மலையகப் பெருந்தோட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.

இவ்வாறு தமது கட்சியின் உருவாக்கத்திற்கான அடிப்படையாகவும், தாம் உருவாக்கிய கூட்டணியில் பங்காளியாகவும் மலையகத் தமிழர்களை தம்மோடு இணைத்துக் கொண்டதோடு தோட்டத் தொழிலாளர்களுக்கு என தொழிற்சங்க இயக்கமும் நடாத்திய இலங்கைத் தமிழரசு கட்சி இப்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத் தலையீடு அவசியமற்றது என்ற நிலைப்பாட்டை எடுக்குமானால் அதுவே இங்கு விசித்திரமான விடயமாக உள்ளது.

இந்த நிலையிலேயே 1976 க்குப் பின் வடக்கு கிழக்கில் தமிழர் விடுதலைக்காகத் தோற்றம் பெற்ற இளைஞர் (விடுதலை) இயக்கங்கள், மலையகத் தமிழர்கள் தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன என்பது பற்றிய பார்வை அவசியமாகிறது. அவற்றுள் ஈரோஸ் இயக்கம் தமது ‘ஈழம்’ சிந்தனைக்குள் மலையகத்தையும் சேர்த்து வரைந்திருந்தார்கள் ( Sketch ). நாம் ஈழவர், நமது மொழி தமிழ், நம்நாடு ஈழம் என்பது அவர்களது கோஷமாக இருந்தது. இது குறித்த நூல்களும் உள்ளன.

இதேபோல ‘புளோட்’ ( தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) எத்தகைய நிலைப் பாட்டைக் கொண்டிருந்தது என்பதை விளக்குவதே இந்த நூல்.

26 பக்கங்களைக் கொண்ட இந்தச் சிறிய ஆங்கில நூல் அந்த அமைப்பின் பெயரிலேயே தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. அதுவும் இந்தியாவில் ( சென்னையில்) வெளிவந்துள்ளது என்பது அவதானத்துக்கு உரியது. வெளிவந்த ஆண்டு குறித்த தெளிவான பதிவு ஒன்று இல்லாதபோதும் 1983, 1985 ஆம் ஆண்டுகளில் அமைப்பின் தலைவர் உமா மகேஷ்வரன் கூறியதான இரண்டு கருத்துகள் ( Messages) நூலில் ஆண்டுகள்ளுடன் குறிப்பிடப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. எனவே இந்த நூல் வெளிவந்திருக்கக் கூடிய ஆண்டு 1986 ஆக இருக்கலாம்.

1988 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தலில் வடகிழக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி, மலையகத்தில் மத்திய மாகாண சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ( புளோட்), அப்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து வெளியேறிய பெரியசாமி சந்திரசேகரனையும் ( பின்னரே மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரானார்) இணைத்துக் கொண்டு களம் இறங்கி இருந்தது.

இந்த நூலில் உமா மகேஷ்வரன் கூறும் இரண்டு கருத்துக்களை இங்கே சுருக்கமாகச் சொல்லாம். “வவுனியா, கிளிநொச்சி, மலையகத்தில் வாழும் தொழிலாளர்கள்( Workers), விவசாயத் தொழிலாளர்களுடன் ( Peasants) மட்டக்களப்பில் வாழும் மீனவர் சமூகமும் பாதுகாப்பும் அரணும் வேண்டி நிற்கிறார்கள்” (1983 - உரை - அண்ணாமலைப் பல்கலைக் கழகம்).

“ தோழர்களே நாம் மொழியாலும் பௌதிகமாகவும் பிரிந்து நின்றாலும் நம்மை ஒடுக்கும் ஏகாதிபத்தியம் ஒன்றுதான். அந்த எதிரியை எதிர்கொள்ள கரம் கோர்ப்பொம்” ( 1985 மேதினச் செய்தியில் சிங்கள மக்களை நோக்கி)

இவை எல்லாம் நடைமுறைச் சாத்தியம் கண்டனவா என்பதற்கு அப்பால் மலையகத் தமிழர் சமூகம் குறித்த புளோட் டின் வாசிப்பு எப்படியானதாக இருந்தது என்பதற்கு இந்த நூல் நல்ல ஆதாரமாக உள்ளது.

மலையகத் தமிழர்களின் வரலாற்றை 1842 இல் இருந்தே அணுகுவது
1947 ஆம் ஆண்டு தேர்தலில் மலையகத் தமிழர்கள் ஏழு நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றதோடு அவர்கள் மேலதிக 13 தொகுதிகளின் உறுப்புரிமையை அப்போதைய அரசுக்கு எதிராக உருவாக்கியமை

1930 களில் இருந்து மலையகத் தமிழர் எதிர்ப்பு சிங்களத் தரப்பில் தலை தூக்கியமை
1948 ஆம் ஆண்டு வடக்குத் தமிழர் தரப்பு மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்புக்கு ஆதரவாக வாக்களித்த துரதிஷ்ட்டம்.

1964 ஆம் ஆண்டு மலையகத் தமிழர்களை நாடு கடத்துவதற்கு இலங்கை - இந்திய அரசுகள் செய்து கொண்ட ‘சிறிமா சாஸ்த்திரி’ ஒப்பந்தம் ஆகியவற்றோடு இணைத்து அவர்களின் வரலாற்றை அணுகி நோக்கி இருக்கிறது. மறுபுறமாக இலங்கையில் மலையகத் தமிழர்களது,

i. வீடமைப்பு
ii. நாட்கூலி
iii. கல்வி
iv. சுகாதாரம்

முதலான விடயங்களையும் ஆராய்ந்து தமது பார்வையை ஆழப்படுத்திக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

150 வருடகாலமாக மலையகத்தமிழர்களுக்காக உள்ள வீடமைப்பு முறைமையில் உள்ள ‘லைன்’ வீட்டு அமைப்பு முறை தொடர்பிலும் அங்கு இருக்கக் கூடிய மலசலகூட வாய்ப்புகள் ஏகாதிபத்தியவாதிகளின் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்பனவும் பதிவு பெற்றிருக்கின்றன.இதன்போது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த என்.சண்முகதாசனின் நூலில் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது எதிர்காலமும் எனும் அத்தியாயம் பற்றியும் மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ளது.

நாட்கூலி தொடர்பில் ஆராயும்போது 1984 ஆம் ஆண்டு வில்மட் பெரேரா ஆணைக்குழுவின் பரிந்முரைப்பான ஒரு நாளைக்கு 5 ரூபா 20 சதம் எனவும் மாதாந்தம் அது 135/= ஆக அமைய வேண்டும் என்ற பரிந்துரைப்பையும் சுட்டிக்காட்டி அதில் இருந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் நாட்கூலி தொடர்பிலும் அது ஏனைய தொழிலாளர்களிடத்மில் இருந்து எவ்வாறெல்லாம் வேறுபடுகின்றது என்பதாகவும் ஆய்வு செய்துள்ளது.

Master plan for Tea என அப்போது மேற்கொண்ட மாதிரி கணக்கெடுப்பு ஆய்வு ஒன்றில், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளடங்களாக மாதச்சம்பளமாக சராசரியாக 200/= வழங்கபடுதல் வேண்டும் என்ற சராசரி பரிந்துரைப்புப் பற்றியும் கூட பதிவு செய்கிறது. அந்த காலத்தில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டங்களும் ஆய்வறிக்கைகள் குறித்தும் கூட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கல்வி நிலை குறித்த ஆய்வுகளின் போது ஐந்தாம் வகுப்பு வரை மாத்திரமே கொண்ட தோட்டப் பாடசாலை முறைமை தொடர்பாக விவாதிக்கப்படுவதுடன், அப்போதைய Economic Review சஞ்சிகையில் அது குறித்து வெளிவந்த ஆய்வுக் கட்டுரையும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

சுகாதாரம் தொடர்பாக கருத்துரைக்கும் போது, அங்குள்ள குறைந்த மட்ட கூலி வழங்குதலை வெளிப்படுத்தும் ‘நிலைக் கண்ணாடியாக’ அங்குள்ள சுகாதார நிலை நிலவுவதாக கருத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் மிக முக்கிய தகவலாக ஒரு விடயம் பதிவாகி உள்ளது. அதாவது நாடு முழுவதும் இலவச சுகாதார சேவை நடைமுறையில் உள்ளபோது தோட்டத் தொழலாளர்கள் அந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ள தோட்ட நிர்வாகம் வருடாந்தம் ஒரு தொழிலாளிக்கு 3 ரூபா 50 சதம் வீதம் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும்.

அதனைச் செலுத்தாமல் விடுவதனால் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவையான சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்ள அரச மருத்துவ மனைகளுக்கு தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை அனுப்புவதில்லை. தாம் நடாத்தும் தோட்ட வைத்திய நிலையங்களில் ஏதாவது ஒரு மருந்தைக் கொடுத்து சமாளித்து விடுவார்கள்.

அப்படியே தோட்ட நிர்வாகம் அரசுக்கு ஆண்டுதோறும் 3 ரூபா ஐம்பது சதம் செலுத்துவதாக இருந்தாலும் அவை தொழிலாளியின் உழைப்பில் இருந்தே கழிக்கப்பட்டு செலுத்தப்படும். எனவே எல்லோருக்கும் இலவச சுகாதார சேவை என இந்த நாட்டில் இருக்க தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் (தோட்ட நிர்வாகம் ஊடாக ) பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.

இந்த முறைமை அவர்களது நாட்கூலியைக் குறைக்கும் என்பதையும் அதாவது இதனை அரசாங்கத்துக்கு செலுத்தும் தோட்ட நிர்வாகம் அதனை தொழிலாளிக்கான சேவையின் ஒரு பகுதியாக சேர்ப்பதனால் நாட் கூலியை உயர்த்த தயங்கிவருகின்றன.

இந்த நூல் 1980 களின் நடுப்பகுதியில் வெளிவந்த போது இருந்த நிலைமையே இப்போதும் தொடர்வது எத்தனை துரதிஷ்டமானது. கடந்த 2021-01-20 ஆம் திகதி Daily Mirror ஊடகத்துக்கு கருத்துத் தெரிவித்து இருக்கும் முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை இவ்வாறு கூறுகிறார்:
“தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் முதல் சுகாதார சேவை அரசாங்கம் பெற்றுக் கொடுப்பதில்லை. தோட்டக் கம்பனிகளே பெற்றுக் கொடுக்கின்றன. அந்த தொழில் துறையின் பலம் பலவீனத்தை அதனை செய்பவர்களே அறிவோம். உண்மையில் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தலையிடக்கூடாது” ( ரொஷான ராஜதுரை - முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் -

“The Government does not provide for these workers. From salaries to medical facilities, it is the tea companies that are looking after these plantation workers. First of all, the government really should not get involved in wage setting because it is only those who are in the business know the strengths and weaknesses of the sector. Anyone can give political promises. But, when practically speaking, fulfilling such promises is not possible at the moment,” Mr. Rajadurai said.( Daily Mirror 20-01.2021)

இந்தக் கருத்து தோட்டப் பகுதி சுகாதார துறையில் அரசாங்கம் ஈடுபடவில்லை என்பதைக் காரணம் காட்டி எவ்வாறு கூலி உயர்வு மறுக்கப்படுகிறது என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும்.எனவே கூலி உயர்வு விடயத்தில் அரசாங்கம் தலையிடக் கூடாது என முதலாளிமார் சம்மேளனம் கேட்பது போலவே, இந்த மக்களும் இலங்கை நாட்டின் பிரஜைகள் எங்களுக்கு அரச சுகாதார சேவையை வழங்கு, அதற்காக தோட்டக் கம்பனிகள் கழித்துக் கொள்ளும் தொழிலாளர்களின் ஊதியத்தின் ஒரு பகுதியை நட்கூலியில் சேர்த்துக் கொடுத்தல் அவர்களது சம்பளமும் கூடும் கம்பனிகளிடம் அடிமையாக வாழும் நிலைமையும் மாறும் என்பதற்காகவே அரசாங்கத்தின் தலையீடு வேண்டப்படுகிறது என்பதனை அரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும் இன்றைய நிலையில் கம்பனிகளின் பிரதிநிதிகளைப் போலவே அரசியல் பிரதிநிதிகளும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியமில்லை என்ற மனப்பாங்கைக் கொண்டிருப்பது துரதிஷ்டவசமானது.

இந்த நூலைப் பொறுத்தவரை புளோட் இயக்கத்தின் பிரசார ஏடாக மலையகத் தமிழர்களை தமது அமைப்பு சார்ந்து கவர்வதற்கான அதுவும் இந்திய வம்சாவளியினரான அவர்கள் பற்றி இந்தியாவில் வெளியிட்ட நூல் என்பதன் அடிப்படையிலேயே நோக்க வேண்டி இருக்கிறது. இந்த நூலில் மலையகத் தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகளைச் சுட்டுக்காட்டும் புளோட் அமைப்பு ஒன்றில் அவர்கள் மலையகத்தில் தொடர்ந்து வாழலாம் அன்றில் வடக்கில் வன்னியில் வந்து குடியேறலாம் அதற்கு தாம் உறுதுணையாக இருப்போம் என்பதாக தெரிவித்துள்ளது. அத்தகைய தெரிவை மேற்கொண்ட மலையகத் தமிழர்களின் வன்னி, கிளிநொச்சி வாழ்க்கை அவலம் குறித்து தனியாக ஒரு நூல் எழுதலாம்.

ஆனாலும் மலையகத் தமிழர்கள் குறித்த அரசியல் உரையாடலைச் செய்வதற்கு அந்த மக்கள் குறித்த வரலாற்று பூர்வமானதும் தத்துவார்த்த ரீதியுமான ஆய்வுகள் அவசியம் என்பதற்கு இந்த நூல் ஆதாரமான ஒரு சான்றாக அமைந்துள்ளது எனலாம்.


தரவுப் புத்தகம்- இலங்கையின் ஆட்சிமுறை மீதான பிரஜைகளின் நம்பிக்கைக் கணக்கெடுப்பு

ஆட்சி முறை என்பது காலத்துக்கு காலம் மாறி வந்திருக்கிறது. மன்னராட்சி முறைமையில் இருந்த இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரத்துக்குப் பின் இப்போது ஜனாநாயக ஆட்சிமுறையைத் தெரிவு செய்து கொண்டுள்ளனர்.

இந்த ஜனநாயக ஆட்சி முறை என்பது மக்கள் தமது வாக்களிப்பு மூலம் தெரிவு செய்து கொள்கிற ஒரு முறை. அதனால்தான் ஜன ( சனம் - மக்கள்) நாயகம் ( தலைமை) எனப் பொருள்பட அழைக்கிறோம்.

இந்த ஜனாநாயகம் குறித்த விமர்சனபூர்வமான கேள்விகள், சந்தேகங்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது. உலகளாவிய ரீதியில் ஒரு பிரதான பேசு பொருளாகக் கூட அது மாறியிருக்கிறது. அண்மைய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரும் கூட ஆட்சியில் இருந்த ஜனாதிபதி தான் அந்த முடிவை ஏற்கப் போவதில்லை என வழக்குத் தொடர்ந்தமை, அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்துக் கொண்டமை போன்றன ‘ஜனநாயகம்’ மீதான விமர்சனங்களை வலுப்படுத்துவதாகவே உள்ளது.

இலங்கையிலும் கூட சிவில் நிர்வாக முறைமைக்குள் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவது நாளாந்த நிகழ்வாகிவிட்ட நிலையில், இது போன்ற தருணங்களில் மக்களின் மனநிலையை அளவிடக்கூடி யதான ஏமேனும் வழிமுறைகள் உள்ளனவா என்ற சிந்தனை பலருக்கும் எழும்புவதுண்டு.

மக்களிடையே இடம்பெறும் பொதுவான உரையாடல்கள், கருத்தாடல்களில் இதனை அவதானிக்க முடிந்தாலும் ஒரு விஞ்ஞான ரீதியான முறைமையில் அந்தக் கருத்துக் கணிப்பை முன்னெடுப்பது ஒரு கலை. ஒரு படிப்பு.

அத்தகைய ஒரு விஞ்ஞான பூர்வமான முயற்சியாக இலங்கையின் ஆட்சிமுறை மீதான பிரஜைகளின் நம்பிக்கைக் கணக்கெடுப்பினைத் தரும் நூல் ‘தரவுப் புத்தகம்’ ( Data Book)

பேராதனைப் பல்கலைக் கழகத்தின் அரசியல் விஞ்ஞான பிரிவு ‘ பொதுக் கொள்கைகளும் ஆட்சிமுறையும்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்து பிரசுரித்திருக்கும் இந்த நூல் பல ஆய்வுக்குரிய ஆரம்பத் தரவுகளைத் தருகின்றது.

ஜி.டி.ஆர்.யு. அபேரத்ன, எம்.டபிள்யு.ஏ.ஜி. வித்தானவசம், டி.ஐ.ஜே.சமரநாயக்க ஆகியோரினால் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூலுக்கு அதனையுந்தாண்டிய பலரது பங்களிப்பு இருந்துள்ளது. அவர்களின் பட்டியலையும் கூட இந்த நூல் தந்துள்ளது.

பொதுவான பார்வையில் புத்தகம் முழுவதும் அட்டவணைகளாக அமைந்த ஒரு தோற்றப்பாடு தெரிந்தாலும், அந்த அட்டவணை தரும் புள்ளிவிபரங்கள் எதனை அடிப்படையாக கொண்டன, எவ்வாறு அந்த புள்ளிவிபரக் கணிப்பீடுகள் பெறப்பட்டுள்ளன என்கிற கோணத்தில் இருந்து பார்க்குமிடத்து பல சுவாரஷ்யமான முடிவுகள் கிடைக்கப்பெறுகின்றன.

இந்த நூலின் உள்ளடக்கத்தை விளங்கிக் கொள்வதற்காக இரண்டு அனுபவங்களையும் அதனோடிணைந்த தகவல்களையும் பகிரந்து கொள்வது உகந்தது.

2017 ஆம் ஆண்டு சார்க் நாடுகளின் ஒன்றான பூட்டான் நாட்டிற்கு சென்றிருந்தபோது கிடைக்கப்பெற்ற தகவல்தான் அந்த நாட்டில் மொத்த தேசிய வருமானத்தின் ( Gross National Income ) மூலமாக அல்லாது மொத்த தேசிய மகிழ்ச்சி (Gross National Happiness) ஊடாகவே மக்களின் திருப்தி மதிப்பீடு அல்லது கணக்கெடுப்பு செய்யப்படுகிறது என்பது. இந்த தகவலை அடுத்து மனதில் எழக்கூடிய முதல் கேள்வி, மகிழ்ச்சியை அளவீடு செய்ய முடியுமா ? என்பது, இரண்டாவது கேள்வி அப்படியே மகிழ்ச்சியை அளவீடு செய்யும் வழிமுறைகளைக் கையாண்டாலும் அதனை தேசிய மட்டத்தில் அளவீடு செய்வதற்கும் அமிவிருத்திக் குறிகாட்டியாக கொள்வதற்கும் அரசாங்கம் தயாராகுமா ? என்பது. இவை இரண்டும் பூட்டான் நாட்டில் சாத்தியமாகியிருக்கிறது என்பதுதான் சத்தியம்.

எப்படி அந்த மகிழ்ச்சியை அளவீடு செய்கிறீர்கள் ? எனக் கேட்டபோது கிடைத்த இன்னுமோர் ஆச்சரியந்தான் அந்த நாட்டில் அதற்கென ஓர் ஆணைக குழுவே உள்ளது. அதுதான ‘தேசிய மகிழ்ச்சி ஆணைக்குழு’ ( National Happiness Commission ). இந்த ஆணைக்குழு ஆண்டுதோறும் மக்களிடையே கணக்கெடுப்புச் செய்கிறார்கள். அந்தக் கணக்கெடுப்பில் அரசு மக்களுக்கு வழங்கும் சேவைகள் தொடர்பில் மக்கள் திருப்தி கொள்கிறார்களா ? அதன் மூலம் மகிழ்ச்சி அடைகிறார்களா ? என கேட்டு அறிகிறார்கள்.

உதாரணமாக, அரசு உங்களுக்கு பெற்றுக்கொடுக்கும் கல்வி வாய்ப்புகள் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என ஒரு கேள்வியை மக்களிடம் முன்வைத்து அதற்கு விடையளிக்க ஆம், இல்லை, ஓரளவு, திருப்தி, மிக திருப்தி, திருப்தி இல்லை என்பதுபோன்ற பதில்களைப் பெற்று திருப்தி குறைவாக இருப்பதற்கான காரணங்களைக் கேட்டறிந்து, அதனை மதிப்பாய்வு ( Evaluation ) செய்து அடுத்துவரும் ஆண்டுகளில் பொது கொள்கை வகுப்பு, திட்டமிடல் திணைக்களங்களுக்கு தரவுகளாகத் தருகிறார்கள். அதற்கேற்ப கொள்கை வகுப்பாளர்கள் ( Policy makers ) அடுத்தடுத்த ஆண்டுத் திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து மக்களை மகிழ்ச்சிபடுத்துவதை இலக்காக் கொண்டு செயற்பட முனைகிறார்கள். இதுபோன்ற மக்களின் தேவைகள் என உணரும் சுகாதாரம், போக்குவரத்து, வீடு என பல தரப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் கேள்விகளை எழுப்பி கணக்கெடுப்புகளைச் செய்து அபிவிருத்திக் கொள்கை வகுப்புக்கும் மக்களுக்கான ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் பூட்டான் நாடு முயற்சி மேற்கொள்கிறது. பூட்டானின் இந்த முன்மாதிரி திட்டத்தை பல மேலைத்தேய நாடுகள் கூட பின்பற்றத் தொடங்கியுள்ளன.

இரண்டாவது அனுபவப் பகிர்வுக்கு முன் இந்த ‘தரவுப் புத்தகம்’ எனும் நூல் தர முனையும் விடயங்களைப் பார்த்துவிட்டு வரலாம். இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் மேல்மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இருந்து குறைந்தது ஒரு மாவட்டம் எனும் அடிப்படையில் 12 மாவட்டங்களைத் தெரிவு செய்து மக்களை இன, மத,வயது,பால்நிலை, அடிப்படையில் இனங்கண்டு அவர்களிடம் பல விதமான கேள்விகளைக் கேட்டு அதற்கான பதிற்குறியைப் பெற்றுத் தொகுத்திருக்கிறார்கள். அந்தக் கேள்விகளுக்காக கிடைக்கப்பெற்ற பதில்களே அட்டவணைகளாக புத்தகத்தை நிறைத்திருக்கிறது. அதனைக் கொண்டு ஆய்வுகளையும் அர்த்தப்படுத்தல்களைச் செய்து கொள்வதும் அதனை கொள்கை வகுப்புக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்வதும் அடுத்த கட்டம்.

ஆனால், இந்த ஆய்வின் உப தலைப்பான ‘இலங்கையின் ஆட்சிமுறை மீதான பிரஜைகளின் நம்பிக்கைக் கணக்கெடுப்பு’ என்பதுவும் அதனை அளவீடு செய்வதற்காக மக்களிடம் முன்வைத்த கேள்விகளும் இங்கே முன்வைக்கப்படும் கேள்விகளும் முக்கியத்துவமானது.

மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த நூலின் முதலாம் பாகத்தில. (Part A ) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோர் அல்லது பதிலளித்தோர் பற்றிய விபரங்களைத் தருகிறது. அவர்களது பால், வயது, இனம், மதம், பிறந்த இடம், தற்போதைய வசிப்பிடம், வதிவிட மாகாணம், கல்விமட்டம், தொழில் நிலை, தொழில்துறை, குடும்ப உறுப்பினர் விபரம், மாதாந்த வருமான பங்கீடு, சிவில் சமூக அங்கத்துவம்- பங்குபற்றல், மத நம்பிக்கைகள் முதலான விடயங்களின் அடிப்படையிலேயே தரவுகள் திரட்டப்பட்டு இருக்கின்றன.

இரண்டாவது பாகத்தில் ( Part B) ‘திருப்தி’ எனும் அடிப்படையில் அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகள் அல்லது விடயங்கள் குறித்தான பதிற்குறிகளைத் தொகுத்துத் தருகின்றது. உதாரணமாக அரசியல், சமூக, பொருளாதார குடும்ப நிலைகளில் நீங்கள் அடைந்து இருக்கக்கூடிய திருப்தி, தற்போதைய ஆட்சி முறை மீதான திருப்தி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆட்சி முறையில் எதிர்பார்க்கும் மாற்றம், இலங்கையில் ஜனநாயகத்தின் அபிவிருத்தி குறித்த திருப்தி, அதிகாரப் பிரயோகங்கள் மீதான மனப்பாங்கு ( பெற்றோர் - அரச சார்பற்ற நிறுவனங்கள்- குடும்பப் பின்னணிகள்) போன்ற விடயங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தரவுகள் இதில் அடங்குகின்றன.

மூன்றாவது பாகத்தில் ( Part C) பொது நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள் மீதான பிரஜைகளின் நம்பிக்கை எவ்வாறு உள்ளது என்பதனை அறியும் கேள்விகளும் அதற்கான பதிற்குறிகளும் தரவுகளாக தொகுப்பட்டுள்ளன. இதன் கீழ் பாராளுமன்றம், மத்திய அரசு, உள்ளூராட்சி சபைகள், சிவில் சேவைகள், அரசியல் கட்சிகள், உச்ச நீதிமன்றம், பொலீஸ், இராணுவம், அரச்சார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், பாடசாலைகள், கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள், தேர்தல் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு, மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம சேவகர்கள், வேறு நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை எவ்வாறு உள்ளன என்பதை ஆய்வு செய்து தரவுகளைத் தருவதாக உள்ளது.

மேலும் தொழிலாண்மை அல்லது உத்தியோகம் குறித்த அபிப்பிராயம் எவ்வாறு உள்ளது என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் அரச ஊழியர்கள், மத்திய அரசியல்வாதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள்,பொலிஸார்,நீதிபதி, வைத்தியர்,தாதி, சுற்றாடல், இராணுவ அதிகாரிகள், மாணவர்கள், அரச சார்பற்ற நிறுவன செயற்பாடுகள், வர்த்தகர்கள் ,தனியார்துறை நிறுவனங்கள்,பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், பிற உத்தியோகத்தில் உள்ளோர் தொடர்பில் மக்களின் எண்ணம் எவ்வாறு உள்ளது என தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல பொறுப்புக்கூறல் ( Accountability ) விடயத்தில் தேசிய அரசாங்கம், மாகாண அரசாங்கம்,உள்ளூராட்சி அரசாங்கம்,மாவட்ட செயலகம்,பிரதேச செயலகம்,கிராம உத்தோயுகத்தர் பிரிவுகள்,பொலீஸ்,அரச சார்பற்ற நிறுவனங்கள்,தனியார் துறை, வங்கி போன்றன எவ்வாறு செயற்படுகின்றன என்பதும், ‘வெளிப்படைத்தன்மை’ ( Transparency) . சட்டத்தின் ஆட்சி ( Rule of Law), பிரஜைகளின் பங்குபற்றுதல் ( Citizens’ Participation) முதலான விடயங்களில் இந்த அமைப்புகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதும் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு தரவுகள் தொகுக்கப்படுகின்றன.

பேராதனைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கக்கூடிய இந்த நூல் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிவந்த நூலாக இருப்பதற்கான சான்றுகள் அதன் உள்ளடக்கத்தில் தெரிகிறது. ஆனால் எந்த இடத்திலும் வெளிவந்த ஆண்டு குறித்த நிச்யமான பதிவு இல்லாமல் இருப்பது ஒரு குறைபாடு ஆகும்.இந்த ஆய்வின் நிறைவேற்றுச் சுருக்கத்தை எழுதியிருக்கும் மாலினி பாலமயூரன் எழுதி உள்ளார். அவரது குறிப்பின் இறுதியில் 29 நவம்பர் எனக்குறுப்பிட்டு 201 என்று மட்டுமே உள்ளது. எனவே வெளிவந்த ஆண்டு குறித்த சரியான தகவலை 978-955-589-245-2 என்ற ISBN இலக்கத்தைக் கொண்டே அறியமுடியும். இந்தத் திகதி அல்லது ஆண்டு குறித்து இங்கே வலியுறுத்த காரணம் இந்த நூலின் நோக்கம் ஒரு காலகட்டத்தின் தரவுகளையும், மக்கள் அபிப்பிராயங்களையும் பதிவு செய்வதாக இருப்பதனாலாகும்.

மாலினி பாலமயூரனின் நிறைவேற்றுச் சுருக்கத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் முக்கியமானவை. 2009 ஆம் ஆண்டு புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு அமையப் பெற்ற நல்லாட்சி அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை குறிப்பாக 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் 19 வது திருத்தம் காரணமாக அதிகரித்திருந்தமையை சுட்டிக் காட்டுவதாக தரவுகள் அமைந்துள்ளனவாக விளக்குகிறார்.

எனினும. முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் சிங்கள மக்கள் மத்தியில் பொலிஸாரை விட இராணுவத்தினர் மீது ஏற்பட்டிருப்பதாகவும் தமிழ் மக்களிடத்தில் அவர்களுக்கு எதிரான மனநிலை இருப்பதாகவும் தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் குறித்துரைக்கிறார்.

இதுபோல பல விடயங்கள் தொடர்பிலும் தரவுகளைத் தரும் 89 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் ஆய்வாளர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் சிறந்த கைநூலாக அமைகிறது. அதேநேரம் காலத்துக்குக் காலம் இந்தத் தரவுகளும் மனநிலைகளும் மாற்றமுறும் நிலையில் ஆண்டுதோறும் இத்தகைய ஆய்வுகளை இன்னும் எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் மேற்கொள்ளும் ஒரு தேவைக்கான அடிப்படையை இந்த நூல் தருகிறது. நேபாள நாட்டில் செய்யப்பட்ட ஆய்வு முறையின் அடிப்படையில் நோர்வே நாட்டின் ‘நொரெட்’ அமைப்பின் நிதி உதவியுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அரசாங்கமே தனது பொறுப்பில் ஆண்டுதோறும் அல்லது நிச்சயிக்கப்பட்ட கால இடைவெளியில் சனத்தொகை கணக்கெடுப்பு செய்வதைப்போல அல்லது அதன்போதே நூறு சதவீதம் மக்களிடத்தில் செய்யப்பட்டு அதனூடாக பெறப்படும் தரவுகள் அடுத்து வரும் காலப்பகுதிக்கான கொள்கை வகுப்புக்கும் ஆட்சி முறை வடிவமைப்புக்கும் பயன்படுத்தப்படுவதாக இருத்தலே பூட்டான் போன்று அடிப்படையான பயன்பாடுகளுக்கு உதவக்கூடும்.

இந்த நூலின் ஆய்வுப் பரப்பான ‘இலங்கையின் ஆட்சிமுறை மீதான பிரஜைகளின் நம்பிக்கைக் கணக்கெடுப்பு’ என்பதாக கடந்த நல்லாட்சி காலத்தில் செய்யப்பட்ட ஆய்வு தற்போது செய்யப்படுமாக இருந்தால் அது எவ்வாறனாதாக இருக்கும் என்பதே சுவாரஷ்யமாக அமையலாம். அதனை எனது இரண்டாவது அனுபவத்தோடு ஒப்பிட்டுப்பார்க்க எண்ணுகிறேன்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்ட்டர் தாக்குதலுக்குப் பின்னர் மலேஷியாவில் இடம்பெற்ற ஒரு மாநாட்டின் பேசுபொருள் ‘உலகளாவிய ரீதியில் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டு இருக்கக்கூடிய கேள்விக் குறியும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளும்’ என்பதாக இருந்தது. இந்த மாநாட்டில் முக்கியமான ஒரு தரவு பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதுதான், உலகில் தற்போது 53 சதவீதமான மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இல்லை என்பது. அப்போது அங்கே இருந்த ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு நாட்டுப் பிரதிநிதியிடமும் ஒரு கேள்வியை கேட்டனர்.

மலேஷியாவில் எத்தனை சதவீதமான மக்கள் ஜனநாயகம் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதற்கு பதிலாக அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னது; புள்ளிவிபர ரீதியாக கூற முடியாவிட்டாலும் மலேஷிய மக்களிடத்தில் அப்படியொரு மனநிலை இருப்பதை உணரமுடிகிறது என்பதாகும்.இலங்கைப் பிரதிநிதியாக என்னிடம் ( கட்டுரையாளர்) கேட்டபோது, 100% மக்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை என்றுதான் கருத வேண்டி இருக்கிறது என்றேன்.

ஏன் அப்படி கூறுகிறீர்கள் என்றபோது, ஈஸ்ட்டர் தாக்குதலை அடுத்து இலங்கை நாடாளுமன்றத்தை 225 உறுப்பினர்களையும் தகர்க்க வேண்டும் என சமூகவலத்தளங்களில் அவ்வாறு கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. அந்த 225 பேரும் மக்கள் பிரதிந்திகள் என்றால் 100 வீதம. ஜனநாயகம் மீதான எதிர்ப்பு என்றுதானே கொள்ள வேண்டும் என்றேன்.

ஒரு சுவாரஷ்யம் கருதி அந்த பதில் அவ்வாறு அமைந்தாலும் இலங்கை மக்கள் இப்போதைய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை. அத்தகைய ஜனநாயகம் மீதான நம்பிக்கை இழப்பு, பொது நிர்வாகம் மீதான திருப்தி இன்மை போன்ற விடயங்களை கொள்கை வகுப்பாளர்கள் உணரவும், அடுத்த கொள்கைகளை மக்கள் சார்ந்து உருவாக்கவும் அதிலும் குறிப்பாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கத் தலைப்படும் இலங்கை ஆட்சிமுறை சூழலில் இத்தகைய ஆய்வு நூல்கள் வாசிப்புக்கும் பயன்பாட்டுக்கும் வேண்டப்படுகின்றன.

24/01/2021- Virakesari

 


இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் பொதுவானதாக அரசியலமைப்பு அமையவேண்டும்

- சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் கலந்துரையாடலில் திலகராஜ்

இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சி மீண்டும் பேசுபொருளாகி இருக்கும் நிலையில் உத்தேச அரசியல மைப்பானது எந்தவொரு இனத்தினருக்கோ, மதத்தினருக்கோ அல்லது குறித்த மொழிசார்ந்தவருக்கோ ஆனது என்ற உணர்வைத்தராத வகையில் அமைவதாக, இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் பொதுவானதாக உணரக்கூடியதான அடிப்படைகளைக் கொண்டிருத்தல் வேண்டும் என முன்னாள் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் அமைப்பு நிபுணர்களும் அரசியல் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் இணைத்ததான கருத்தாடல், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் இணைய வழியூடாக நடைபெற்றது.

திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அத்துலசிரி சமரநாயக்கவின் நெறிப்படுத்தலில் பேராதனைப் பல்கலைக்கழக சட்டபீடத் தலைவரும் முன்னாள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவியுமான பேராசிரியை தீப்பிக்கா உடுகம, சட்டத்தரணி மீரா மொஹிதீன் பாஹீஜ், முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

இந்த கருத்துரையின்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது முழுமையான உரை பின்வருமாறு:

அடிப்படைத் தத்துவம்

அரசியலமைப்புக்கான அடிப்படைத்தத்துவமானது, அரசியலமைப்பானது இன, மத, மொழி சார்ந்ததாக அமையப் பெறாது இலங்கைப் பிரஜை என்ற அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வகுக்கப்படுதல் வேண்டும். பிரஜை என்போர் எவ்வித பேதப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படமாட்டார் என்பது அடிப்படைக் கொள்கையாதல் வேண்டும். தேசிய கொள்கைகள் காலத்துக்கு காலம் மதிப்பாய்வு (Policy Evaluation) செய்யப்படுதல் வேண்டும். குறிப்பாக அபிவிருத்தி விடயங்கள் சார்ந்த தேசிய கொள்கைகள் காலத்துக்கு காலம் கண்காணிப்பு (Scrutinizing) செய்யப்படுவதுடன் புதுப்பிக்கப்படும் கொள்கைகள் நாட்டு மக்களின் இறைமையை பாதிப்பதாக இல்லாமல் அமைவதை அரசியலமைப்பு உறுதி செய்தல் வேண்டும்.

மக்களின் இறையாண்மை என்பது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அத்தகைய இறையாண்மை நிர்வாக அதிகாரங்களையும், அடிப்படை உரிமைகளையும், வாக்குரிமையையும் உறுதி செய்வதாக அமைதல் வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ஏற்றுக் கொண்ட சிவில், அரசியல் உரிமைகள், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள், இனப்பாகுபாட்டை அகற்றுவதற்கான உடன்படிக்கை ,பெண்களுக்கு எதிரான அனைத்துவகை பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான உடன்படிக்கை, குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை, சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் பற்றிய உடன்படிக்கை, கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை போன்ற உடன்படிக்கைகளும் மரபுரிமைகளும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படுவது அடிப்படையாக கொள்ளப்படுதல் வேண்டும்.

அரசின் தன்மை

இலங்கை ஒரு மதச்சார்பற்ற, பல்லினங்கள் வாழும், பல்கலாசார ஜனநாயக நாடு என அரசியலமைப்பில் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

எனினும் சுதந்திரந்துக்குமுன் இருந்து 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கம் வரை பௌத்த மதத்தை அரசியலமைப்பு போஷிப்பதாக இருக்கவேண்டும் என்ற நிலை உருவானதால் அத்தகைய ஒரு சரத்தினை மாற்றிக் கொள்வதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை நாம் யதார்த்தமாக உணர்ந்தவர்களாக உள்ளோம். கடந்த நல்லாட்சிகால முன்மொழிவுகளில் அத்தகைய முயற்சி எடுக்கப்பட்டபோது அதற்கு பாரிய எதிர்ப்பலை வந்ததோடு அதற்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட யோசனைகளில் பௌத்தத்திற்கு முன்னுரிமை என்ற கருத்தே பரவலாகக் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே பௌத்தத்திற்கு முன்னுரிமை என அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட வேண்டியது பெரும்பாலானவர்களின் அபிலாஷையெனில், ஏனைய மதங்களும் நம்பிக்கைகளும் சுதந்திரமாக இயங்குவதனையும் அரசியலமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுதல் வேண்டும். அத்துடன் பிரஜையொருவர் மதம் ஒன்றை பின்பற்றாதிருப்பதற்கு உள்ள உரிமையும் அரசியலமைப்பு உறுதி செய்தல் வேண்டும்.

இலங்கை நாட்டின் பெயர், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என்பதாகவே இருக்கலாம். தற்போதைய தேசிய கொடியின் மீது சிறுபான்மை தேசிய இனங்களுக்கு விமர்சனம் உள்ளபோதும் அதில் வழங்கப்பட்டிருக்கக்கூடிய குறைந்தபட்ச அங்கீகாரத்தையும் தனிநபரோ அல்லது அமைப்புகளோ தன்னிச்சையாக நீக்குவதான சந்தர்ப்பங்களை அரசியலமைப்பு தடைசெய்யும் ஏற்பாடுகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

இந்த நாட்டில் சிறுபான்மை தேசிய இனம் என்றவகையில் மலையகத்தவனாக அரசியல் உரிமை நீக்கம் செய்யப்பட்ட சமூகத்தில் இருந்து அதன் வலியை உணர்ந்து வந்தவன் என்றவகையில் எங்களது அடையாளம் இன்னும் இந்தியத் தமிழர் என இலங்கையில் பதிவு செய்யப்படுவது எங்களை இலங்கை தேசத்தில் இருந்து அந்நியப்படுத்தி வைப்பதான உணர்வு என்னிடத்தில் உண்டு.

இந்தியாவில் இருந்துவந்து இருநூறு வருடங்களை அடையும் மலையகத் தமிழர்கள், இப்போதாவது இலங்கை அரசியலமைப்பில் முழுமையான இலங்கை பிரஜையாக உணரும் ஏற்பாடுகளை எதிர்பார்க்கின்றேன்.

அந்தவகையில், மலையகத் தமிழ் இனத்தைக் குறிக்கும் நிற அடையாளமும் தேசிய கொடியில் மேலதிகமாக சேர்க்கப்படுதல் வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

தேசியகீதம் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பாடப்படுவதை அரசியலமைப்பு உறுதி செய்தல் வேண்டும்.

பாகுபாடு அற்ற குடியுரிமை உறுதி செய்யப்படல் வேண்டும். பதிவுப் பிரஜை எனும் வகுதி அகற்றப்படுதல் வேண்டும். பிறப்புச் சான்றிதழ் சகலருக்கும் ஒரே வடிவமைப்பிலானதாக மும்மொழிகளிலும் எழுதப்பட்டதாக இருத்தல் வேண்டும். (புதிய தேசிய அடையாள அட்டையில் உள்ளது போன்று).

இலங்கையில் தொடர்ச்சியாக ஐந்தாண்டு காலம் வாழ்ந்த ஒருவர் நிரந்தர வதிவிட (PR) வாய்ப்பு பெறவும், தொடர்ந்து பத்து ஆண்டுகள் வாழ்ந்த ஒருவர் குடியுரிமை பெறவும் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.

இலங்கையில் பிறந்தவராயினும் அவர் வேறு ஒரு நாட்டின் பிரஜைக்குரிய அந்தஸ்த்தை பெற்றிருக்கும் பட்சத்தில் இலங்கையில் அரசியல், நிர்வாக, பாதுகாப்பு துறைகளில் பதவியைப் பெறுபவராயின் பிறநாட்டு பிரஜாவுரிமை கைவிடல் வேண்டும்.

உரிமைகள்

அடிப்படை உரிமையாக மனசாட்சி சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், மத சுதந்திரம் , மதமற்று இருப்பதற்கான சுதந்திரம், வாழ்வதற்கான சுதந்திரம், காணி உடமைச் சுதந்திரம் - (வீட்டுக்கும் வாழ்வாதாரத்துக்குமான காணி ) சகல பிரஜைகளுக்கும் உறுதி செய்தல் வேண்டும்.

தனி நபர் பாதுகாப்புக்கான உரிமை, தொழில்உரிமை, தொழிற்சங்க உரிமை, சமத்துவமான கல்விக்கான உரிமை, பொது சுகாதார சேவைகளைப் பெறும் உரிமை, உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை ( இதனை உபசட்டங்களைக் கொண்டு தடுக்க முடியாத வகையில்) உறுதி செய்யப்படுதல் வேண்டும்

ஜனநாயக உரிமைகளாக கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், அமைதியாக ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், தகவல் அறியும் சுதந்திரம், சகல பிரஜைகளுக்கும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கும், போட்டியிடுவதற்கும், சேவையாற்றுவதற்குமான சுதந்திரம் ஆகியனவும், நடமாடுவதற்கான உரிமைகளாக இலங்கையில் எப்பகுதிலும் வாழ்வதற்கான சுதந்திரமும், இலங்கையை விட்டு வெளியேறுவதற்கான சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

சட்ட உரிமைகள் எனும் வகையில் நீதியையும் சட்டத்தையும் நியாமாக அமுலாக்குவதன் ஊடாக அனுபவிக்கும் சுதந்திரம். சட்டத்துக்கு முன் சமமாகவும் நியாயமாகவும் நடத்தக் கோருவதற்கான உரிமை, தடுப்புக் காவலில் வைக்க நேரிடும் இடத்து சட்ட உதவிகளைப் பெறும் உரிமை, சட்ட ஆலோசனை சேவை பெறும் உரிமை ஆள்கொண்ரவு மனுவுக்கான உத்தரவாதம், சட்டத்தின் முன் கைதான ஒருவர் அதனது தாய்மொழியில் வாக்குமூலம் வழங்கவும், தாய்மொழி தவிர்ந்த மொழிகளில் வாக்குமூலம் வழங்க மறுக்கவோ அல்லது தாய்மொழி தவிர்ந்த மொழி ஒன்றில் தயாரிக்கப்பட்ட எழுத்து மூல வாக்கு மூலத்தில் கையொப்பம் இடாமல் மறுப்பதற்கான உரிமை, நீதிமன்ற நடவடிக்கைகளின்போது தனது தாய்மொழியில் மொழிபெயர்ப்பைக் கோரும் உரிமை, நீதியும் நியாயமானதுமான விசாரணையைக் கோரி நிற்பதற்கான உரிமை, குற்றம் நிரூபிக்கப்படும்வரை நிரபராதி ஆக கருதப்படுவதற்கான உரிமை உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

சமத்துவ உரிமைகள் எனும் வகையில் இலங்கை ஒரு பல்லினத்துவ நாடு என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு இனமும் தேசிய அடையாளத்தை உறுதி செய்ய வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும். இனம் / பால்/ மதம் / வம்சாவளி / மொழி சார்ந்த தேசியங்களை சமத்துவமாக நடாத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

இலங்கை நாட்டிற்குள் 'இந்திய தமிழர்' எனும் இன அடையாளம் நீக்கப்பட்டு இந்திய வம்சாவளியினரான அந்த மக்கள் தமது பண்பாட்டு அடையாளமாக வளர்த்தெடுத்துள்ள 'மலையகத் தமிழர்' எனும் அடையாளம் சனத்தகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படுதல் வேண்டும். தேசிய சிறுபான்மை இனத்தேசிய பண்பாட்டு அடையாளங்கள், மரபுரிமைகள், தொல்லியல் சிறப்பியல்புகள், கலை, கலாசாரங்கள், இலக்கியம், அரங்கம் போன்றனவற்றை பேணுவதற்கும் பாதுகாப்பதற்குமான உரிமை.

தனிநபர் உரிமைகளாக சட்டப்பாகுபாட்டில் இருந்து பாதுகாப்பு, இலவச கல்வியை அனுபவிப்பதற்கான உரிமை, இலவச பொது சுகாதாரத்தைப் பெறும் உரிமை, அந்தரங்க வாழ்க்கை பாதுகாப்பு உரிமை, பால் (Gender) ரீதியான உரிமை, மாற்றுப்பாலின உரிமை, இன, மத, சாதி பாகுபாட்டுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான உரிமை மாற்றுத்திறனாளிக்கான, மாற்றுப்பாலின பொதுவசதிகள் பெறும் உரிமைகள் அரசியலமைப்பில் உறுதிசெய்யப்படுவதுடன் குழு உரிமைகளாக இனத்தேசியமாகவும், சமூகக் குழுமமாகவும் அடையாளத்தைப் பேணும் உரிமை உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

கூட்டு உரிமைகளாக நிலைபேறான இயற்கை சூழல் பேணப்படுதல், இயற்கை வளம் சூறையாடப்படாமல் இருப்பதற்கான உரிமை, சமூக நீதியைப் பெறுவதற்கான உரிமை, அரச பொது நிர்வாக சேவையை நியாயமான முறையில் பெறுவதற்கான உரிமை, நுகர்வோர் உரிமைகள் போன்றவற்றுடன், பிரிக்கப்படமுடியாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வினை உறுதிசெயவதாகவும் இருத்தல் வேண்டும்.

ஏக்கிய, எக்சத் - ஒற்றையாட்சி, ஒருமித்த போன்ற சொல்லாடல் குழப்பங்களை தவிர்த்து அதிகாரபகிர்வின் ஊடாக மக்களை சக்திமயப்படுத்தும் ஆட்சி முறைமை குறித்த அவதானமே அவசியமானதாகும்.

'அரசியலமைப்புக்கான அடிப்படைத் தத்துவங்களும், அரசின் தன்மையும்' எனும் தலைப்பில் உரைகள் அமைந்தபோதும் உரையாடல்களின் போது அரசியலமைப்பு தயாரிப்பு முறைமை குறித்த இரண்டு முக்கிய விடயங்கள் அவதானத்தைப் பெற்றன.

மாற்றப்பட முடியாத அரசியலமைப்பு அடிப்படைத் தத்துவங்களை உருவாக்கிக் கொள்ள முடியுமா ? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஜயம்பத்தி விக்ரமரட்ண முன்வைத்த கேள்வியும், கலாநிதி சுஜாத்தா கமகே முன்வைத்த அரசியலமைப்பு பேரவை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அரசியலமைப்பு உருவாக்க பணிகளை முன்னெடுத்தல் என்பது அரசியலமைப்பு சபை ஒன்றுக்காக தனியான தேர்தலை நடாத்தி உறுப்பினர்களைத் தெரிவு செய்துகொள்வதன் மூலம் ஆளும் அரசாங்கங்களுக்குத் தேவையான நிபுணர்களை நியமித்து அரசியலமைப்பை உருவாக்க முனையும் கைங்கரியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் கருத்தாடல் இடம்பெற்றது.

கூடவே புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவைப்பாட்டுக்கான தூரநோக்கம் பற்றிய ஆய்வும் கலந்துரையாடலும்கூட அடுத்தடுத்த உரையாடல்களில் மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் உடன்பாடு எட்டப்பட்டது.

22/01/2021- Virakesari