Bitter Berry Bondage (கசக்கும் பழங்களும் கொத்தடிமைகளும்)

-இரு நூற்றாண்டு கால மலையகத்தின் முதல் நூற்றாண்டின் வரலாறு -

- மல்லியப்புசந்தி திலகர்

2023 ஆ ம் ஆண்டு ஆகுகையில் இலங்கை மலையகத் தமிழர் இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்டு இலங்கையில் குடியேற்றப்பட்டதன் இருநூறு ஆண்டுகால நிறைவை அனுஷ்டிக்க உள்ளனர். இந்த நிலையில் இந்த இருநூறு ஆண்டுகாலங்கள் இலங்கையில் அவர்கள் வாழ்ந்தனர், வாழவைக்கப்பட்டனர் அல்லது வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பதை மீட்டுப் பார்க்கும் தேவை எழுகிறது.

அந்த வகையில் மலையகத்தமிழர் வாழ்ந்து மடிந்த முதல் நூறு ஆண்டுகளான 19ம் நூற்றாண்டு வாழ்வை படம்பிடித்துக் காட்டும் ஆங்கில நூல் ‘Bitter Berry Bondage - The Nineteenth Century Coffee Workers of Sri Lanka’. ‘பத்தொன்பதாவது நூற்றாண்டின் இலங்கையின் கோப்பித் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை’ வரலாற்றை பதிவு செய்வதற்கு நூலாசிரியர் டொனவன் மொல்ரிச் ( Donovan Moldrich) தெரிவு செய்திருக்கும் தலைப்பே சான்று பகர்கிறது. Bitter Berry Bondage என்பதை ‘கசக்கும் பழங்களும் கொத்தடிமைகளும்’ என பொருள் கொள்ளலாம்.

1823 முதல் 1923 வரை வெளியுலகம் அறியாதவகையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த மக்கள் கூட்டம் பற்றிய தகவல்களை தேடி எடுப்பது என்பது இலகுவான காரியமல்ல. ஆனாலும் பத்திரிகையாளரான டொனவன் மொல்ரிச் இன் கடின உழைப்பும் தேடலும் இதனை சாத்தியமாக்கி இருக்கிறது. இந்த நூலுக்கு அவர் எழுதி இருக்கும் அறிமுகக் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"இந்த நூல் பொதுவான வாசகர்களுக்காகவும் புலமைத்துவ வாசகர்களுக்குமாக எழுதப்பட்டுள்ளது. அதனாலேயே அடிக்குறிப்புகளும் உசாத்துணைவுகளும் நூல்தரவுப்பட்டியல்களும் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடிக்குறிப்புகளே வரலாற்றின் விதைகள். ஆயிரம் பூக்கள் மலரட்டும்"

அடிக்குறிப்புகளை வரலாற்றின் விதைகளாக கருதும் நூலாசிரியர் மிகக் கவனமாக ஒவ்வொரு அத்தியாயத்திற்குமாக தனது தகவல்களுக்கான ஆதாரங்களை அடிக்குறிப்புகளாகக் குறிப்பிட்டுள்ளதுடன் தான் தகவல்களைப் பெற்றுக் கொண்ட சான்றாதாரங்களையும் குறிப்பிட்டு இந்த நூலின் விஞ்ஞானபூர்வ தன்மையை உறுதி செய்கிறார்.

1950 களில் Times of Ceylon எனும் ஆங்கில பத்திரிகையில் தொழில்சார் நிருபராக ( Labour Reporter ) பணியாற்றியவர் டொனவன் மொல்ரிச். இத்தகைய ஒரு நூலை எழுதும் தேவை எவ்வாறு எழுந்தது என அவர் பின்வருமாறு விபரித்துச் செல்கிறார்.

1950 களில் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளையான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இலங்கைப் பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்தது. அப்போதைய நாவலப்பிட்டிய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான கே.ராஜலிங்கம் இந்த இரண்டு அமைப்புகளுக்கும் தலைவராக இருந்தார்.

1954 ஆம் ஆண்டு இந்த அமைப்பு இரண்டாக பிளவடைந்ததுடன் ( ஜனநாயக தொழிலாளர் கால்கிரஸ்) பின்னர் தொழிலாளர் தேசிய சங்கம் என்றும் உருவாகி மூன்றானது. இருந்தாலும் 1950 களில் இருந்தே இந்த தொழிற்சங்கங்களில் இருந்த துடிப்பான தொழிற்சங்கவாதிகளுடன் எனக்கு நல்ல நட்பு நிலவியது. அவர்களுள் வி.கே.வெள்ளையன், சி.வி.வேலுப்பிள்ளை ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். பின்னாளில் இவர்களே தொழிலாளர் தேசிய சங்கத்தைத் தொடங்கினர்.

சி.வி.வேலுப்பிள்ளை பிரபல அரசியல்வாதி மட்டுமல்ல சிறந்த கவிஞரும் கூட. அவரது ஆழமான, கறுத்த, உயிரோட்டமும் நிறைந்த கண்களும் தெளிவான பார்வையும் ஆயிரம் சொற்களுக்கும் மேலானவை. அவரது ‘உழைக்கப் பிறந்தவர்கள்’ (Born to Labour) எனக்கு கண்ணீரை வரவழைத்தது. அவை கண்களை ஈரமாக்குவதுடன் இரத்தத்தை கூச்சமடையச் செய்வன.

'வெள்ஸ்' என செல்லமாக அழைக்கப்படும் வி.கே.வெள்ள்ளையன் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்களை நினைவுபடுத்தும் தோற்றம் கொண்டவர். அவரது வேண்டுகோளின் பேரில் அவருடன் ஹட்டனில் ஒரு விடுமுறையைக் கழிக்கச் சென்று இருந்தேன். அப்போது அவருடன் அண்மித்த தோட்டங்களுக்குச் செல்லக் கிடைத்தது. அங்கே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களது தொழிற்சங்க தலைவருக்கு கொடுத்த மரியாதையை கண்டுள்ளேன்.

நான் எழுதிய பல கட்டுரைகளில் வந்துபோன ஒரு மில்லியன் தோட்டத் தொழிலாளர்களை நேரடியாக கண்ட உணர்வைப் பெற்றேன். அப்போது குடியுரிமைப் பறிப்புக்கு எதிராக அவர்கள் போராடிக் கொண்டு இருந்தார்கள். அவர்களது மூதாதையர்கள் இந்தியாவில் இருந்து வந்து இலங்கைக்காக உழைத்தவர்கள். பின்னாளில் அவர்கள் இந்தியா செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டபொழுது ‘இந்தியாவில் சாவதற்காய் இலங்கையில் பிறந்தவர்கள்’ ( Born in Ceylon to Die in India) என எழுதினேன். அவர்களது வேர்கள் பற்றி தேட ஆரம்பித்த போது ஆரம்ப கால கோப்பித் தோட்டங்களுக்கு அவர்கள் இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்டார்கள் என்பதும் அவர்கள் இங்கே மாண்டு இருக்கிறார்கள் என்பதும் தெளிவானது. அதனை ‘இலங்கையில் சாவதற்காக இந்தியாவில் பிறந்தவர்கள்’ ( Born in India to Die in Ceylon) என்று எழுதினேன்.

அந்த கோப்பிகால தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுத் தேடலே இந்த நூல். இந்த நூலை எழுத அத்திவாரமிட்ட வேலுப்பிள்ளை, வெள்ளையன் ஆகிய இருவரினதும் அர்ப்பணிப்பு மிக்க தொழிலாளர் வர்க்க பணிகளை நினைவுகூர்வதாக அமையும்.

நூலாசிரியர் டொனவன் மொல்ரிச் சின் இந்த அறிமுகம் இன்றைய தொழிற்சங்க வாதிகளுக்கு மாத்திரமல்ல பத்திரிகையாளர்களுக்கும் கூட பல படிப்பினைகளைத் தரவல்லது.

பதினான்கு அத்தியாயங்களைக் கொண்ட இந்தநூலினை தனக்கு உந்துதலாக இருந்த இவர்களோடு நூலாசிரியர் நன்றி தெரிவிக்கும் பெயர்பட்டியல் இந்த நூலின் கனதியை எடுத்துச் சொல்கிறது. கலாநிதி G.C. மென்டிஸ், பேராசிரியர் ஜஸ்டின் லெப்ரோய், கலாநிதி K.M. டி.சில்வா, கலாநிதி மைக்கல் ரொபர்ட்ஸ், கிங்ஸ்லி டி சில்வா, பேராதனைப் பல்கலைக் கழக நூலகர் H.A.I. குணத்திலக்க என நீளும் பெயர்பட்டியலுடன் பதினைந்து நிறுவனங்கள் அமைப்புகளையும் நினைவு கூர்கிறார்.

Times of Ceylon பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் தனக்கு ஏற்பட்ட தொடர்புகளைக் கொண்டு இந்த நூலுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் ஆதாரங்களுடன் பதிவு செய்கிறார்.

ஒவ்வொரு அத்தியாயங்களினதும் தலைப்பு இலக்கிய ரசணையுடனும் அடிக்குறிப்பாக அதன் உள்ளடக்கத்தை விளக்குவதுமாக அமைவது அவர் கூறுவதுபோல் பொதுவான வாசகர்களுக்கும் புலமைத்துவ வாசகர்களுக்குமானது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

முதலாவது அத்தியாயம், கோப்பி மன்னன் கண்டியை ஆட்சி செய்தபோது என தலைப்பிடப்படிருக்கும் அதேவேளை அடிக்குறிப்பாக கொப்பிக் கைத்தொழிலின் எழுச்சியும் வீழ்ச்சியும் என தரப்பட்டுள்ளது.

இவ்வாறு உள்ளூர் சோம்பேறிகளின் புராணம் (ஏன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள்), சீனக்காரனுக்கு ஒரு பாட்டு பாடுதல் ( இலங்கைக்கு சீன தொழிலாளர்களை இறக்குமதி செய்வதற்கான முயற்சி) இழுக்கும் காரணிகளும் தள்ளும் காரணிகளும் ( ஏன் லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இலங்கை வந்தார்கள்), வெள்ளிக் கீற்றின் மரணத் தண்டுகள் ( கடலில் ஏற்பட்ட அனர்த்தங்கள்), மெல்லிய பாம்புகளும் பசித்த சிறுத்தைகளும் ( தோட்டங்களை நோக்கிய 150 மைல் தொலைவு நடைபயணத்தின் ஆபத்துகள்), மனிதர்களிடையே முதலாளிகளும் தொழிலாளிகளும் ( கோப்பிக்கால தொழில் சட்டங்கள்), மகிழ்ச்சி, மகிழ்ச்சி ஆறு பென்ஸ்களும் சோறும் கறியும் (கோப்பி கால கூலி கட்டமைவு), எனது சாட்டையை எடு (கோப்பி கால அடக்குமுறையும் எதிர்ப்பும்), பெண்கள் இல்லாத ஆண்கள் ( இரத்தம் சிந்தும் புள்ளிவிபரங்கள்), பெருந்தோட்டங்களும் சமூக வாழ்வும் ( உணவு, வீடு, கல்வி, மதம், சாதி), மண்டைஓட்டு வண்டிகள் ( கோப்பிக் கைத்தொழில் வளர்ச்சி பெற்ற காலத்தில் மரணவீதம்), காரணம் தெரியாத மரணங்கள் ( கோப்பி உச்சம் பெற்ற காலத்தின் மரணங்கள்), மரணிப்பதற்காக வைத்தியசாலைக்கு ( கோப்பியின் அந்திம காலத்தில் மரணவீதம்) இவ்வாறு இலக்கிய முகத்துடன் தரவுகளையும் தகவல்களையும் பதிவு செய்யும் 14 தலைப்புகளும், முடிவுரை, உசாத்துணைவுகள், நூல்தரவு, குறியீடுகள் என எல்லாம் 306 பக்கங்களும் முன்னுரைப்பக்கத்தில் 36 பக்கங்களும் என 342 பக்கங்களைக் கொண்டது இந்த நூல்.

இந்த நூலைப் பதிப்பாக்கி வெளியீடு செய்வதில் கண்டு சத்யோதய நிறுவனத்தின் நிறுவுனர் அருட்பணி போல் கஷ்பர்ஸ் அவர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பும் போற்றுதற்கு உரியது. 1989 ஆம் ஆண்டு முதற்பதிப்பைக் கண்ட இந்த நூல் இரண்டாம் பதிப்பின் இரண்டாம் வெளியீட்டை 2021 இல் கண்டுள்ளது. நப்டியுன் பப்ளிஷர்ஸ் எனும் பதிப்பகம் இந்த நூலை இப்போது வெளியீடு செய்துள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டத்தின் கொத்தடிமை வாழ்க்கையை விபரிக்கும் விதத்தில் இருபத்தோராம் நூற்றாண்டிலும் அந்த கொத்தடிமை வாழ்க்கையை விபரிக்கும் விதத்தில் இருபத்தோராம் நூற்றாண்டிலும் அந்த கொத்தடிமை வாழ்க்கை முறைமையில் வைக்கப்பட்டுள்ள அதில் இருந்து வெளியே வருவதற்கு போராடிக் கொண்டிருக்கும் சமூகமும் அந்த சமூகத்தின்பால் அக்கறை கொண்ட தரப்பினரும் வாசிக்கவும் வைத்துப் பாதுகாக்கவும் வேண்டிய வரலாற்று நூல் இது.

இந்த நூலைத் தழுவியதாக சட்டத்தரணியும் எழுத்தாளருமான இரா.சடகோபன் கண்டிச் சீமையிலே எனும் நூலைத் தமிழில் தந்துள்ளபோதும், இந்த நூலின் விஞ்ஞானபூர்வ தன்மை மாறாது தமிழாக்கம் செய்யப்பட வேண்டிய தேவையுமுள்ளது.

 


'அந்திம காலத்தின் இறுதி நேசம்' எல்லா காலத்திலுமான சமூகத்திற்கான மொழிபெயர்ப்பு

மல்லியப்புசந்தி திலகர்

நாவலாக ஜனித்த ஆதிரை இன்று பதிப்பகமாக வளர்ந்து நிற்கிறது. சிறுகதை களில் ஆரம்பித்து நாவலுக்குள் வந்து தமிழ் வாசிப்பு வாசகர்களிடையே தன்னை நிலைநிறுத்திக் கொண்ட எழுத்தாளர் சயந்தன். தனது இரண்டாவது நாவலான ஆதிரை யின் பெயரிலேயே ஒரு பதிப்பகத்தையும் ஆரம்பித்துள்ள சயந்தன் இவ்வாறு எழுதுகிறார்.

 

நூலாக்கப் பணி ஓர் அலாதியான அனுபவம். கடந்த ஐந்தாறு மாதங்களாக ஆதிரை வெளியீட்டின் புத்தகங்களான, என்ட அல்லாஹ், திருமதி பெரேரா, அஷேரா, அந்திமகாலத்தின் இறுதி நேசம் ஆகியவற்றின் தயாரிப்புக்களில் இணைந்திருந்தேன். தினமும் காலையில் நான்கு நான்கரையிலிருந்து, மூலப்பிரதிகளைப் படிப்பது, அவற்றில் திளைப்பதில் தொடங்கி, வடிவமைப்பில் எழுத்துப் பிழைகளைச் சரிசெய்து இறுதியாக்குவது வரை என இரண்டு மணி நேர உற்சாகமான பொழுதுகள்..

சயந்தனின் உற்சாகமான பொழுதுகளின் பணியாக உருப்பெற்றிருக்கும் அந்திம காலத்தின் இறுதி நேசம்  மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பினை அவரே தபாலில் சேர்த்திருந்தார். ஒரு பயணப் பொழுதில் வாசித்து முடிந்த அந்த அந்திம கால நேசம் பற்றிய கதைகள் எல்லா காலத்திற்குமான மொழி பெயர்ப்பு கதைகளாக மனதுக்குள் நுழைந்து ஊடுருவிக் கொண்டுள்ளது.

ரிஷான் ஷரீப் பின் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பல்லாத மூலப்பிரதியான உணர்வைத்தருகின்றன. ஆனாலும் நூல் முழுவதுமே மொழிபெயர்ப்பாளர் ரிஷான் தலைகாட்டாது கதையாசிரியர் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி உலாவருவது மொழிபெயர்ப்பின் வெற்றி. கதைச் சொல்லும் பாங்கில் தக்‌ஷிலா காட்டும் நுட்பம் மாறாது தமிழில் தந்திருக்கும் ரிஷான் ஷரீப் பாராட்டுக்குரியவர்.

கதைமாந்தர்கள், கதைக்களம், கதை நகர்வின் ஊடாக ஒரு காட்சி படிமத்தை வாசகர்களிடம் விரித்துவிடுவதில் தக்‌ஷிலா வெற்றிபெறுகிறார். தக்‌ஷிலா ஒரு சமூகவியல் முதுமாணி பட்டதாரி யாகவும் பள்ளி ஆசிரியராகவும் இருந்து கதை கூறுவது கதைகளின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்க்கிறது. கதையின் ஒரு பாத்திரமாக நூலாசிரியர் எழுதிச் செல்வது வாசகரை கைபிடித்து அழைத்துப் போவதான ஓர் உணர்வு.

கிராமங்களின் குறுக்கு வீதிகளும் கொழும்புத் தலைநகரின் சேரிகளும் பெருவீதிகளும், ஆள் அரவம் குறைந்த ரப்பர் மரக்காடுகளும் என கதை உலாவும் இடங்களெங்கும் வாசகனால் பயணிக்க முடிகிறது. எந்தக் கதையும் கற்பனையாகத் தெரியவில்லை. எந்தப் பாத்திரங்களும் விலகி நிற்கவில்லை.

வறிய மற்றும் மத்தியதர வகுப்பினரின் வாழ்க்கை பலவித அழுத்தங்களைக் கொண்டிருக்கும்.வெளியில் இருந்து பார்க்கும்போது பளபளப்பாகத் தென்படும் மத்தியதரப்பினரின் ஜீவிதங்கள் எப்போதும் மெல்லிய பதற்றத்தோடுதான் கழிந்து கொண்டிருக்கும்.பலவித காரணங்களால் அவை காயம்பட்டிருக்கும்.அவ்வாறான காயங்கள் எவற்றால் ஏற்பட்டிருக்கும் என ஆராய்ந்து பார்க்க அந்தத் தரப்பினருக்குள் வாழ்க்கை நடத்த மிகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் நபர்களின் ஆத்ம பாஷை மிகவும் உபயோகமாகும்.

அவ்வாறான வறிய மற்றும் மத்தியதர குடும்பங்களைச் சேர்ந்த ஒருவர் வழமைக்கு மாறாக தனது சமூக அந்தஸ்த்தையோ அடுத்தவர் என்ன நினைப்பார் என்பதைப் பற்றியோ சிறிதும் பொருட்படுத்தாமல் தனக்கு பிடித்தவர் மீது காட்டும் பாசத்தை, அவர்களது ஆத்ம பாஷையில் தக்‌ஷிலா இக் கதைகளில் எடுத்துக்கூறி இருக்கிறார் என கதைகளை மொழிபெயர்த்திருக்கும் எழுத்தாளர் ரிஷான் ஷரீப் அறிமுக குறிப்பில் எழுதி இருப்பது நிதர்சனம். வாழ்க்கை என்பதற்கு சிங்களத்தில் ‘ஜீவித்தய’ என்று பொருள். அதனைத் தமிழில் ஜீவிதம் என எழுதி அண்மிக்கிறார் ரிஷான்.

‘தெருவழியே’ எனும் முதலாவது கதையை வாசிக்கும்போதே இந்த உணர்வை வாசகர்களால் பெற்றுவிடமுடிகிறது. கிராமத்தில் இருந்து நகர்நோக்கிவந்து மத்தியர தட்டுக்குள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பிரயத்தனப்படும் அதேநேரம் தனது கிராமத்திற்கு செல்வதில் உள்ள அவஷ்த்தையை, நகர வாழ்வின் போலிகளை கிராமத்துக்குச் சுமந்து செல்வதில் உள்ள மனக்குழப்பங்கள் பதிவு பெறுகின்றன.

‘மாங்காய்ப்பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொருநாள் தொடங்கியது’ எனும் கதையில் திருமண வாழ்வின் எதிர்பார்ப்புகளும் அதன் பின்னதான எதிர்பார்ப்புகளும் மானுடவியல் கண்ணோட்டத்தில் உரையாடல் மொழியாகத் தொடர்கிறது.

அன்றைக்குப் பிறகு அவன்,அவளருகே வரவேயில்லை எனும் கதை அலுவலகத்தின் தன்னுடன் வேலை செய்யும் பெண் ஒருவரது வீட்டைத் தேடிச் செல்லும் ஆண் ஒருவன் ஊடாக வாசகர்களை கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறது. முச்சக்கரவண்டி குலுங்கிக் குலுங்கிச் சென்றது.கீழே விழுவதைப் போல உணரச் செய்தன குழிகள்.

இங்கே இன்னும் அபிவிருத்தி வரவில்லைப் போல  என சமிலுக்குத் தோன்றியது. என அந்த கிராமத்துக்கான பயணத்தை விபரிக்கும் கதையாசிரியர்  இங்கே இன்னும் அபிவிருத்தி வரவில்லைப் போல எனும் வார்த்தைகளுக்குக் இட்டிருக்கும் மேற்கோள்கள் ஊடாக முன்வைக்கும் அரசியல் ஏறக்குறைய எல்லாக்கதைகளிலும் வியாபகம் பெறுகின்றன.

ஒருவர் மரணித்த பிறகு அஞ்சலியுரையில், அனுதாபச் செய்தியில் வெளிக்காட்டப்படும் போலிப்புகழாரங்களை அடித்து நொறுக்குகிறது அந்திம காலத்தின் இறுதி நேசம்.

எப்போதும் மேரி நினைவில் வருகிறாள்’ எனும் கதையில் வரும் மேரி எனும் இளமைக் காலங்களும் அந்திம காலங்களும் அதற்கான காரணங்களும் சமூகம் மீதான பல கேள்வியை எழுப்புவன. இந்தக் கதையை வாசிக்கும்போது பல மேரி கள் எமது நினைவில் வருகிறார்கள்.

‘நந்தியாவட்டைப் பூக்கள்’ பூக்கள் கதையில் வரும் பெரியம்மா கூட அத்தகைய ஒரு ஆள்தான், கதைமாந்தர்தான்.

பொட்டு  எனும் தலைப்பு சிங்கள மொழி கதாசிரியரின் தலைப்பாக வரும்போது வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது. தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘பொட்டு’ எனும் சிறுகதை யில் பொட்டு என்பதன் குறியீட்டில் இருந்து ஸ்வர்ணமாலியின் குறியீடு வேறுபட்டு நிறகிறது.

தெளிவத்தை ஜோசப்பின் கதையில் வரும் தமிழ்ப்பெண் வைக்கத் தயங்கும், வைப்பதனால் வரக்கூடிய பிரச்சினைகளைப் பேசுகிறது. ஆனால், ஸ்வர்ணமாலி யின் பொட்டு சிங்களப் பெண் ஒருவர் வைக்கலாமா என ஏக்கம் கொள்ளும் பொட்டு பற்றியது. கதையின் இறுதிப்பாகம் வாசகனை உலுக்கிப் போடுகிறது. இனக்குழுமச் சண்டையில் எந்தவொரு நியாயமான காரணமுமில்லாது மரணித்துப் போன சிங்கள சாதாரண மக்கள் பற்றிய கவனத்தை வேண்டி நிற்கிறது. பெண்மன உணர்வுகள் மெல்லியதாக பதிவு பெறுகின்றன.

விவாகரத்துப் பெற்ற தம்பதியர் இடையே இடம்பெறும் உரையாடல் ஊடாக விரியும் கதை இப்போதும் இருவரும் இடைக்கிடையே சந்தித்துக் கொள்கிறோம். மாங்காய்ப்பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொருநாள் தொடங்கியது’ எனும் கதையில் திருமண வாழ்வின் எதிர்பார்ப்புகளும் அதன் பின்னதான எதிர்பார்ப்புகளும் இந்த கதையிலும் இன்னுமொரு கண்ணோட்டத்தில் உரையாடல் மொழியாகத் தொடர்கிறது.

ஒரே திடல் போன்ற கதைகளை எழுதுவதற்கு கடினமான உழைப்புத் தேவை. நிச்சயமாக ஸ்வர்ணமாலி இந்தக் காட்சிகளை நிஜத்தில் கண்டிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இத்தகைய கற்பனைகளை இலகுவாகக் கண்டடைந்துவிடமுடியாது. இந்தக் கதையில் வரும் சித்தப்பா எப்போதும் வாசகர் இடத்தில் வாழ்வார்.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க அலையும் அவலம் தமிழ்ச்சூழலில் மட்டுமல்ல சிங்கள சமூகச் சூழலிலும் கூட நிகழ்ந்து கொண்டிருப்பவைதான் என்பதை நினைவுபடுத்திச் செல்லும் கதை ‘தங்கையைத் தேடித்தேடி அவன் அலைந்தான்’. அதிகார வர்க்கம் தமது நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள இன,மத,மொழி பேதங்களைக் கடந்து பயணிக்கும். அதிகார மோகத்தின் முன்னே அவை எல்லாம் வெறி மட்டுமே என்பதை எழுதிச் செல்லும் கதை இது.

தனிமனித உணர்வுகளின் ஊடே சமூகவியல் பதிவுகளை இயல்பான மொழி நடை காட்சிப்படிமங்கள் ஊடாக எழுதி எம்மை வியக்கவைக்கிறார் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி.களனி பல்கலைக் கழகத்தில் சமூகவியல்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ள ஆசிரியையான இவர் இலக்கிய உலகில் கவிதை, சிறுகதை, நாவல் எனும் படைப்புகள் வழியே அறியப்படுபவர். இந்தச் சிறுகதைத் தொகுப்பு கூட ஒரு நாவலை வாசிப்பதுபோன்ற ஒரே வகையான சமூகச் சூழலின் மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது.

“நீங்களும் நானும் மண்ணில் பிறந்து, மண்ணில் வாழ்ந்து மண்ணிலேயே மரணித்துக் கொள்கிறோம்.இந்த மண்ணில்தான் சந்தித்து இருக்கிறோம்.இப்போதும் இந்த மண்ணை நேசிக்கிறோம். எம்மைச் சூழவும் கட்டி எழுப்பப்பட்டுள்ள வர்த்தக வாணிபக் கொண்டாட்டங்கள், எமது பிள்ளைகளை இந்த மண்ணில் மூடி மறைக்கப்பட்டுள்ள உண்மைகளைவிட்டுத் தொலைவாகியுள்ளன....

எப்போதும் தமிழ் எழுத்துக்களைக் காண்கையில் அவற்றுள், இம்மண்ணில் கலைந்துபோன விடுதலையின் கனவு தவிர்க்கவே முடியாமல் எனக்குத் தென்படுகிறது.தமிழ் எழுத்துக்களை வாசிக்கும,எழுதும், தமிழ் மொழியால் சிந்திக்கும் உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்... எந்த மொழியைப் பேசுபவராகிலும் துயருற்ற மக்களுக்காகப் போரிட்ட அனைத்துத் தோழர்களையும் சகோதரர்களையும் நான் மிகவும் மதிப்பதையும் எழுதி வைக்கிறேன்” என தனது முன்குறிப்பில் எழுதி வைக்கிறார் நூலாசிரியர் ஸ்வர்ணமாலி.

இனம்,மதம்,மொழிகடந்து மானுட வாழ்வை தரிசித்து சிறுகதைகள் ஊடாக அதனை சமூகத்திடம் முன்வைத்து பரஸ்ப்பர புரிந்துணர்வை உருவாக்க முனையும் ஸ்வர்ணமாலி போன்ற உள்ளங்கள் வாசிக்கப்பட வேண்டியது. வாய்ப்பினை உருவாக்கிய ரிஷான், சயந்தன் உள்ளிட்ட இலக்கிய உள்ளங்களின் உழைப்பும் நினைப்பும் போற்றுதற்குரியது.

 


‘புகைமூட்டத்துக்குள்ளே...’ களப்பணியாளர்களின் கற்பனையற்ற கதைகூறல்

  ’நான் முதன் முதலாக சுசிலாவையும் இஸ்ராவையும் சந்தித்த பொழுது அவர்கள் இருவரும் முதுநிலை சமூகப் பணி மாணவிகளாக இருந்தனர். வரம்புக்குட்பட்ட வளங்களுடன் இன்னொரு நாட்டுக்கு வந்து கல்வி கற்பதற்கு நிறைய துணிச்சல் வேண்டி இருந்தது. இவர்களின் அறிவுத்தாகம் என்னை வியப்புறச் செய்தது' என்று இந்த நூலின் பின்னட்டைக் குறிப்பில் எழுதுகிறார் பிந்து நாயர்.

யார் இந்த பிந்து நாயர்? என்பதற்கு முன்னதாக யார் இந்த சுசிலாவும் இஸ்ராவும் என்றால் அவர்கள் இருவரும்தான் இந்த 'புகைமூட்டத்துக்குள்ளே...' எனும் நூலின் தொகுப்பாசிரியர்கள். அவர்கள் பணியாற்றிய 'ஆரோ' ( AROH - Giving Hope) நிறுவனத்தின் முகாமையாளர்தான் இந்த பிந்து நாயர். பெயரைக் கொண்டு நோக்குகையில் அவர் ஒரு மலையாளியாக இருக்க வேண்டும்.

இந்த பிந்து நாயர் அறிமுகஞ் செய்யும் இரண்டு பெண்களான சுசிலா - இஸ்ரா இருவரையும் நான் (கட்டுரையாளர்) அறிமுகஞ் செய்திருந்தால்கூட இப்படித்தான் அறிமுகஞ் செய்திருப்பேன்.
இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாகித்யரத்ன தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு பிரபல இந்திய எழுத்தாளர் ஜெயமோகன் தலைமையில் இயங்கும் விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு 'விஷ்ணுபுரம்' விருதை அறிவித்தது. அதனைப் பெற்றுக்கொள்ள தெளிவத்தை தம்பதியரை கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றிருந்தேன். விருதுவிழா முடிந்த உடனேயே மேடையில் இருந்து கீழே இறங்கிவிட முடியாத அளவுக்கு வாசகர்கள் தெளிவத்தையாரை சூழத் தொடங்கிவிட்டனர். அவரிடம் கையெழுத்துப் பெறவும், நிற்படம் எடுக்கவும் என. விருதினை வழங்கி வைத்தவர்களில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி மேடையிலேயே பாதுகாப்பாக அமர்ந்துவிட்டார். 
திரை இயக்குனர் பாலா மேடையில் இருந்து இறங்கிச் சென்றார். சினமாகாரரான அவரைச் சூழ்ந்துகொள்ளாத கூட்டம் தெளிவத்தையாரைச் சூழ்ந்து கொண்டது. சூழ்ந்த கூட்டத்தினரிடம் இருந்து தெளிவத்தையாரை பாதுகாப்பாக மீட்கவேண்டியிருந்தது. ஏனெனில் அப்போதுதான் அவரது இருதயகோளாறுக்கான அறுவை சிகிச்சை செய்து ஆறுமாதங்களாகி இருந்தது. எனவே அவருக்கு அரணாக இருந்து முண்டியடிப்பவர்களிடம் இருந்து பாதுகாப்பாக மேடையில் இருந்து கீழே அழைத்து வருகிறேன்.
சபையில் அமர்ந்திருந்த எழுத்தாளர் கோவை ஞானியிடம் பேசுவதற்கு தெளிவத்தையார் ஆவல் கொண்டார். அப்போதும் கூட்டத்தினர் விடுவதாக இல்லை. இந்தக் கூட்டத்தினரிடையே இருந்து சிங்களத்தில் ஒரு குரல். முதலில் சாதாரணமாக உணர்ந்த எனக்கு இரண்டாவது முறையும் ஒலிக்கவே அந்த சிங்கள மொழிக்குரல் அசாதாரணமாக பட்டது. ஏனெனில் நான் நிற்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், கோயம்புத்தூரில்.
ஆச்சரியத்துடன் அதனை உணர்ந்தவனாக சிங்களக்குரல் வந்த திசையில் பார்க்கிறேன். அங்கே ஸ்ரீலங்கா முகத்துடன் இரண்டு இளம் பெண்கள். இப்போது இன்னும் கவனமாக சிங்களத்தில் என்னை நோக்கிப் பேசுகிறார்கள். 'தெளிவத்தை அய்யாவைப் பார்க்க தொலைவில் இருந்து வந்து இருக்கிறோம். நாங்கள் இலங்கை மலையகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கே முதுமாணி படிக்கிறோம். எங்களை அனுமதியுங்கள்'என மூச்சுவிடாமல் தூரத்தில் இருந்தே தகவல் தருகிறார் அந்த முக்காடு (ஹிஜாப் ) அணிந்த  பெண். 
 
ஆம் என்ற தொனியில்  தலையசைத்து ஆமோதிக்கிறார் அருகே நின்ற அசல் மலையகப் பெண். முதலில் சிரித்துவிட்டேன். 'என்ன ஒரு ராஜதந்திரம்' என்றெண்ணி. பிறகு சிங்களத்திலேயே பதில் சொன்னேன். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ஏற்பாடு செய்கிறேன் என.
எழுத்தாளர் கோவை ஞானி கண்பார்வை குறைந்த நிலையில் இருந்தார். அதன் காரணமாகவும் மரியாதை கருதியும் அவருடன் தெளிவத்தையார் உரையாடிய பொழுதில் கூட்ட முண்டியடிப்பு குறைந்திருந்தது. அந்த இடைவெளியில் சிங்களத்தில் அழைத்தேன். ஓடிவந்து தெளிவத்தையாரை வாழ்த்திவிட்டு எனக்கும் நன்றி சொன்னார்கள் அந்த இரண்டு இளம் பெண்களும்.
 
அந்த இரு மலையக இளம் பெண்களையும்தான் மலையாள பிந்து நாயர் இவ்வாறு எழுதி அறிமுகம் செய்கிறார்: 
'வரம்புக்குட்பட்ட வளங்களுடன் இன்னொரு நாட்டுக்கு வந்து கல்வி கற்பதற்கு நிறைய துணிச்சல் வேண்டி இருந்தது'. உண்மையாகவே இந்த இரண்டு பெண்களும் துணிச்சல் மிக்கவர்கள் என்பதற்கு என்னோடு அறிமுகமான காட்சியே சாட்சி. இந்தநூல் இரண்டாவது சாட்சி.
 
தாஹிர் நூருல் இஸ்ரா எனும் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் அசல் மலையகத்தவர். அதனைச் சொல்வதற்கும் அஞ்சாதவர். மலையகத்தின் முதல் கவிஞன் அருள்வாகி அப்துல் காதிருப் புலவர் வாழ்ந்த கலஹா, தெல்தோட்டைப் பகுதி தேயிலைத் தோட்டப் பெண் இஸ்ரா. சுசிலா யோகராஜன் தலவாக்கலை பகுதி தேயிலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த பெண்.
 
இருவருமே பேராதனைப் பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரிகள். பிந்து நாயர் சொல்வதுபோல வரம்புக்குட்பட்ட வளங்களுடன் இன்னொரு நாட்டுக்கு வந்து கல்வி கற்பதற்கு  துணிந்த இளம் பெண்மணிகள். இந்திய பல்கலைக்கழகமொன்றில் சமூக சேவை துறையில் தத்துவமாணிப் பட்டப்படிப்புக்காக (MPhil) தங்கியிருந்த போதே எங்களையும் சந்தித்திருக்கிறார்கள்.
வரம்புக்குட்பட்ட வளங்களுடன் இன்னொரு நாட்டுக்கு வந்து கல்வி கற்பதற்கு நிறைய துணிச்சல் தேவைப்பட்ட இவர்களுக்கு பொருளாதாரமும் தேவைப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியமில்லை.  படிப்பு நேரம்போக பகுதி நேரமாக தொண்டு நிறுவனங்களில் தொழில் செய்து இருக்கிறார்கள். அதுவும் அவர்களது முதுத்தத்துவமாணி பட்டப்படிப்போடு இணைந்த சமூக சேவைத் துறையில் இயங்கும் தொண்டு நிறுவனத்தில். அந்தத் தொண்டு நிறுவனந்தான் 'ஆரோ' ( AROH -Giving Hope). அதன் முகாமையாளர்தான் பிந்து நாயர்.
 
இந்த 'ஆரோ' நிறுவனம் புற்றுநோயினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு நம்பிக்கைதரும், அவர்களுக்கு உதவும் நிறுவனம். இஸ்ரா - சுசிலா இருவரும் இந்த தொண்டு நிறுவனத்தில் வேலை செய்த காலத்தில் சந்தித்த அனுபவங்களை கதைகளாக சொல்கிறார்கள்.
'ஒரு ரூபாயில் ஓர் உயிர்', 'ம்ம்...ம்ம.... பொம்மை கார்', 'அப்புச்சவுக்கு நல்ல இரண்டு செருப்பு', 'அக்கிணியில் அடைக்கலம்', 'இலைகள் துளிர்க்கத் தொடங்கின', 'கொத்தடிமை', 'இம்முட்டுப் பெரிய கேக்கா', 'என்பையன் காலேஜுக்குப் போகணும்', 'பேசுற நேரம் பேசிக்கோங்க', 'அம்மா நீ போ', என்பன இவர்கள் சொல்லும் கதைகளுக்கான தலைப்புகள். இவை சிறு கதைகள் அல்ல. பெருங்கதைகள்.
 
புற்றுநோய் வந்துவிட்ட ஒரு குழந்தைக்காய் ஓடாய்த் தேயும் குடும்பங்களின் பெருங்கதைகள். அந்த பெருங்கதைகளில் வரும் போராட்டங்களை, இழப்புகளை, சோதனைகளை, நம்பிக்கைகளை, நம்பிக்கையீனங்களை, ஏக்கங்களை, எதிர்பார்ப்புகளை எல்லா கோணங்களில் இருந்தும் கூறும் கதைகள் இவை. எல்லாமே உண்மைக் கதைகள். இந்தக் கதைகளின் கருவாக, கருகிப்போவதற்காகவே மலர்ந்த மொட்டுகளைப் போன்ற குழந்தைகளாக அமைவது கொடுமை. அந்தப் மொட்டுக்களைச் சுற்றி இலைகளாக, கிளைகளாக, மரமாக, செடியாக ஏன் முள்ளாகக் கூட கதை மாந்தர்கள்.
 
பெரும்பாலான கதைமாந்தர்கள் கரிசல் காட்டு கதாபாத்திரங்களாக விபரிக்கப்படுகின்றன. கதைத் தலைப்புக்களைத் தெரிவு செய்வதில் மிகுந்த கவனம், வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கமின்மை என்பன இந்த இஸ்ரா - சுசிலா ஆகிய இரண்டு கதைச் சொல்லிகளையும் பார்த்து எம்மை வியப்படையச் செய்கின்றன.
'எங்களுக்கு சிறுநீர் கழிக்கும் தேவை எழுந்தது சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பொறுமை காத்துக் கொண்டு கிராமத்தை அடைந்தோம்' என தங்களது களப்பணி அனுபவங்களை எழுத்தில் பதியும் துணிச்சல் இந்த இளம் பெண்களுக்கு இருக்கிறது.
 
'ஒரு வயதில் வாங்கிய சட்டையைத் தான் அவன் மூன்று வயதாகியும் போட்டிருந்தான். அவனது தொப்பை வயிறுக்கு மேலாகவே அது இருந்தது. சிப் ( Zip) இல்லாத  அவனது காற்சட்டைக்கு வெளியில் அவனது பிறப்புறுப்பு சற்று வெளியே எட்டிப் பார்த்தது'. என கூறும் இயல்பான கதை கூறல்.
 
குழந்தைகளின் உயிரைக்காக்க போராடும் அம்மா, அப்பாக்களுக்கு மத்தியில் அப்படியான ஒரு குழந்தையைப் பராமரிப்பதில் அக்கறை கொள்ளாமல் தன்னை தினமும் திருமணவீட்டுக்கு போவதுபோல அலங்கரித்துக் கொள்ளும் ஒரு அம்மாவையும் இந்த கதைச் சொல்லிகள் கண்டுபிடிக்கிறார்கள்.
 
ஒவ்வொரு கதையும் ஒரு Case Study ஆக உள்ளதை உள்ளபடியே ஆராய்கிறது.அதனை அப்படியே எடுத்தும் சொல்கிறது. இதனை ஏன் சொல்லவந்தோம் என தங்களது 'எமதுரையில்' சொல்கிறார்கள் இந்த இளம் பெண்கள்.
 
'இவ்வாறான நோயாளர்களைத் தொட்டால் பாவம் என்று எட்டடிக்கு அப்பால் விட்டென பறக்கும் மனிதர்களின் அறிமைக் கண்களைத் திறப்பது, சமூகத்தில் காணப்படும் சில மூட நம்பிக்கைகளையும் தவறான மனப்பாங்குகளையும் படம் பிடித்துக் காட்டுவது,
சாதாரண மக்கள் மத்தியில் அவர்களுக்கு புரியும் பாணியில் ஒரு வித்தியாசமான மொழிக்கூடாக சிறுவர் புற்று நோய் பற்றிய பரந்த அறிவைக் கொண்டு செல்வதனூடாக புற்று நோயால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்றவற்றை  முதல் நோக்கமாகவும்,
 
ஒரு சமூகப் பணியாளனின் வகிபாகத்தை வெளிக்காட்டுவதும் அதனுடன் இணைந்ததாக ஒரு சாதாரண மனிதனின் சமூகப் பொறுப்பை அதிகிரிக்க வைப்பதனையும் இன்னொரு நோக்கமாகவும் கொண்டு எழுதப்பட்டது என்கிறார்கள்.
 உண்மையில் இவர்களது இரண்டாவது நோக்கம் வெற்றிபெற வேண்டுமெனில் இந்த நூல் பரவலாக வாசிக்கப்பட வேண்டும்.
'புற்றுநோய் தொற்று நோய் அல்ல' என இவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். முன்னுரை எழுதி இருக்கும் மருத்துவரும் இலக்கியவாதியுமான எம்.கே. முருகானந்தனும் அதனை உறுதி செய்கிறார். 
 
அதே நேரம் ஒரே சமகாலத்தில் எனது (கட்டுரையாளர்) நண்பனுக்கும் அவரது மனைவிக்கும் புற்றுநோய் வந்து ஒரே சமயத்தில் அவர்கள் இருவரும் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நாழிகைகளை நினைக்கையில் என் மனது புற்று நோய் தொற்று நோய் அல்ல என ஏற்க மறுக்கவே செய்கிறது. எனினும் இது போன்ற களப்பணியாளர்களின் கற்பனையற்ற கதைகூறல்கள் எனக்கு நேர்ந்ததுபோல அசாதாரண அனுபவங்களையும் பதிவு செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தைத் தூண்டுவனவாக உள்ளன.
 
அத்தகைய அனுபவங்களை அதீத வர்ணனைகள் இன்றி இயல்பான போக்கில் எழுதி புனைவுப் பிரதிகளின் பாங்கான வடிவில் தந்திருப்பதாக கவிஞர் மேமன்கவி தனது கருத்துரையில் பதிவு செய்வது உண்மையான கூற்றாகிறது.
 
மொத்ததில் கற்பனைக் கதைகள் எழுதுவதில் இருந்து களப்பணியாளர்களின் எழுத்து என்பது வேறுபட்டது என்பதற்கு சாட்சியான அனுபவப் பதிவுகளாக அமைகின்றன.
எழுத்தாளர்கள் நூல்களை எழுதும்போது நூலாசரியர்கள் என அழைக்கப்படுவது அவர்கள் பாடங்களைக் கற்றுத் தருகிறார்கள் என்பதே. நிச்சயமாக இந்த இரண்டு நூலாசிரியர்களும் ஆசரியர்கள் என தகுதி பெறுகிறார்கள்.
இந்த கதைகளை தமிழ்- சிங்களம் - ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பதிப்பித்து வெளியிட்டு இருக்கும் கொடகே பதிப்பகமும் பாராட்டுக்குரியது.
 
இரண்டு இளம் பெண் ஆளுமைகள் தங்களது முதல் படைப்பையே மூன்று மொழிகளிலும் வெளியீடு செய்யும் தகைமையும் துணிச்சலும் பெற்றிருக்கிறார்கள் என்பதே நாளைய மகளிர் தினத்தில் நம்பிக்கை தரும் செய்தியாக பதிவு செய்ய வேண்டியுள்ளது.

'குன்றிலிருந்து கோட்டைக்கு' -இளையவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் ஆவணம் 

மலையகக் கல்வியாளரும் உயர் அரச பதவிகளை வகித்து ஓய்வு நிலையில் இருப்பவருமான எம்.வாமதேவன் தனது தன்வரலாற்று நினைவுப் பகிர்வாக எழுதி இருக்கும் நூல், குன்றிலிருந்து கோட்டைக்கு

மலையகமான குன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்து கோட்டை என அழைக்கப்படும் கொழும்புத் தலைநகரில் அரச நிர்வாகப்பணியில் அளப்பரிய சாதனைகளுடன் பணியாற்றி தற்போது ஓய்வு நிலையில் இருக்கும் எம். வாமதேவன், தான் கடந்து வந்த பாதையை சுவாரஷ்யமாக இந்த நூலிலே பதிவு செய்துள்ளார்.

இத்தகைய தனது  அனுபவங்களை நூலாக்க வேண்டும் என தன்னிடம் வேண்டுகோள் விடுத்ததாக எனது பெயரை ( கட்டுரையாளர்) எம்.வாமதேவன் இந்த நூலிலே குறிப்பிட்டு உள்ளார். அதற்கான காரணத்தை இங்கே பதிவு செய்வது அவசியம் என எண்ணுகிறேன்.

எனது பாடசாலை காலம். உயர்தர வகுப்பில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கற்றபோது இலங்கை மத்தியவங்கி தமது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்திருந்தது.

ஹட்டன் பிரதேச தமிழ், சிங்கள பாடசாலைகளின் உயர்தர மாணவர்கள் பங்கு கொண்டிருந்தோம். நிகழ்ச்சி முடிவடையும் வேளை மாணவர்கள் தரப்பில் இருந்து நன்றி உரை வழங்க அழைத்தார்கள். ஒரு சிங்கள மாணவர் நன்றி கூறிய பின்னர் தமிழில் உரையாற்ற எனலனை சைகை காட்டினார் எங்களை அழைத்துப் போன ஆசரியர். நான் நன்றியுரையோடு நிறுத்திக் கொள்ளாமல் சுவாரஷ்யத்துக்காக ஒரு விஷயத்தைச் சொன்னேன்.

மத்திய வங்கி மக்களோடு தொடர்புகளைப் பேணாது. வங்கிகளுடனேயே பேணும் என்றே படித்து இருகலகிறோம். ஆனால் இன்று இலங்கை மத்திய வங்கி மக்களாகிய எங்களோடு நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது. அதற்காக நன்றிகள் என்றேன். சபையில் ஒரு சலசலப்பும் கைதட்டலும். நிகழ்ச்சி  முடிந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வளவாளராக வந்திருந்த ஒருவர் என்னை அழைத்து எந்தப் பாடசாலை? ஹைலன்ஸ் கல்லூரியா ? எனக் கேட்டார். ஆம் என்றேன். நானும் ஹைலன்ஸ்தான். இப்படி முன்வந்து பேசுவது முக்கிய பண்பு. நல்ல பேச்சு என பாராட்டிவிட்டு கொழும்பு வந்தால் என்னை வந்து சந்திக்கலாம் என தனது விசிட்டிங் கார்ட்டைத் தந்தார். அதில்  எம். வாமதேவன் மேலதிகப் பணிப்பாளர் நிதி திட்டமிடல் திணைக்களம்  என்று இருந்தது.

இப்படியாக அவருடனான அறிமுகத்தை அடுத்து உயர்தரம் முடிய கொழும்பு வந்த நாள் ஒன்றில் இப்போதைய ஜனாதிபதி செயலகத்தில் இருந்த அவரது அலுவலகத்தில் அவரைச் சந்திக்கச் சென்றேன். அதனையும் பாராட்டிய அவர் அடுத்து வீட்டுக்கு வருமாறு முகவரி கூறினார். முதலாவது சந்திப்பிலேயே எனக்கு விருந்தளித்தார். ஊக்கமூட்டினார் இவ்வாறு எனக்கும் அவருக்குமான நட்பு இறுக்கமானது. 2000 ஆம் ஆண்டு நான் நடாத்திய கல்வியக பரிசளிப்பு விழாவுக்கு இவரையே பிரதம விருந்தினராக அழைத்து மாணவர்கள் மத்தியில் பேச வைத்தேன். இவ்வாறு நட்பு பலவாறாக தொடர்ந்தது.

2014 ஆம் ஆண்டு எனது பாக்யா பதிப்பகத்தின் ஊடாக  வாமதேவன் அவர்கள் எழுதிய மலையகம்  சமத்துவ அபிவிருத்தியை நோக்கி எனும் நூலை  வெளியிடும் முயற்சிகளில் இருந்த காலத்தில் மீரியபெத்தை மண்சரிவு இடம் பெற்றது.

அதன்போது எல்லோரும் நிவாரணப் பணியில் இறங்கியபோது நாங்கள் அங்கே பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சிகளைச் செய்தோம். அதன்போது இத்தகைய அனுபவத்தை தன் இளமைக் காலத்தில் அனுபவிக்க நேர்ந்த வாமதேவன் அவர்களை உதாரணம் காட்டி நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று அந்த மாணவர்களை ஆற்றுப்படுத்த முடிந்தது. அதற்கு வெளியிடுவதற்கு தயாராக இருந்த அவரது நூல் பெரும் துணையாக இருந்தது.

எனினும், அவரது வாழ்க்கைக் குறிப்புகள் அந்த நூலில் இல்லை. அதனை உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தெரியச் செய்வதற்காக கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் அற்றைத் திங்கள் நிகழ்வில் அவரது அனுபவப் பகிர்வு ஒன்றை ஒழுங்கு செய்தேன்.  கூடவே வசந்தம் தொலைக்கா ட்சியில் தூவானம் எனும் இலக்கிய   நிகழ்ச்சியில் அந்த நூலை முன்னிறுத்தி அவரைப் பேச வைப்பதற்கான முயற்சி ஒன்றையும் ஒழுங்கு செய்தேன்.

அதில் அவர் பகிர்ந்து கொண்ட நினைவுகளைத் தொகுப்பாக்கி பத்திரிகைகளுக்கு எழுதியதுடன் இந்த அனுபவங்கள் நூல் உருப்பெறவேண்டும் என்ற எனது அவாவையும் முன்வைத்தேன். இன்று ஆறு ஆண்டுகள் கழித்து அந்த அவா நிறைவேறி இருக்கிறது.

இந்தப் பின்னணிகளை இங்கே எழுதக் காரணம் எம். வாமதேவன் இளைஞர்களை வழிநாடத்தக் கூடிய பண்புகளைக் கொண்டுள்ளமையைச் சுட்டிகள் காட்டவும், இந்த  நூல் பலரை ஆற்றுப்படுத்தும் பண்புகளைக் கொண்டது என்பதைக் எடுத்து காட்டுவதற்குமாகவே.

தான் பிறந்த கொட்டகலை பகுதியில் ஆரம்பித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தான் கல்வி கற்ற விதம் குறித்தும் அதற்காக அவர் எதிர் கொண்ட சவால்கள் குறித்தும் விரிவாக எழுதி உள்ளார். அத்துடன் தனது மாணவர் காலத்தில் தன்னை வழிநடத்திய ஆசரியர்கள் தொடர்பில் எழுதி உள்ளார்.

ஒரு நீரோடை பொல ஏறும் அவரது நினைவுகள் சீராக வாசகர்கள் இதயத்தைச் சென்றடைகிறது. ஆடம்பரமில்லாத எடுத்தியம்பும் முறைமை இயல்பாக அவரது அனுபவங்களை வாசகருக்கு சென்று சேர்க்கின்றன. பல இடங்களில் மனதைத் தொடும் சோகம் இழையோடும் அதேவேளை வாய்விட்டுச் சிரிக்க நல்ல சுவையான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார்.

தனது சாதனைகளை மாத்திரம் பட்டியல் இடாமல் தான் சந்தித்த சவால்களை அடைந்த தோல்விகளை பதிவு செய்கிறார்.

ஐம்பதாண்டுகால தன்வரலாற்று அனுபவங்களை அந்தந்த கால கட்ட அரசியல், தொழிற்சங்க, கல்விப்பின்புல, கலை இலக்கிய ஆளுமகளையும் சம்பவங்களையும் கூட தொட்டுக் காட்டிக் கொண்டே செல்வதனால் தன்வரலாறாக மட்டுமன்றி ஒரு கால கட்ட மலையக வரலாற்றுப் பதிவாகவும் கூட அனையாளப்படுத்த முடிகிறது.

தமது கல்லூரியின் மாணவர் சங்கமான தமிழ்ச் சங்கத்தில் செயலாளராக செயற்பட்ட காலத்தில் கவிஞர் சக்தீ பால அய்யா அவர்களை அழைத்து அவரது தலைமையில் கவியரங்கம்  ஒன்றை நடாத்தினோம். இன்று எத்தனை மலையகப் பாடசாலைகள் இத்தகைய நிகழ்வுகளை ஒழுங்கு செய்கின்றன எனும் கேள்வியை எமக்குள் எழுப்புகிறது. தொழிற்சங் கவாதி  வி.கே. வெள்ளையன் அவர்களின் ரஷ்ய பயணத்தின் பின்னதாக அவரை பாடசாலைக்கு அழைத்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்தோம் என பதிவு செய்கிறார்.

இன்று அவ்வாறு பயணம் மேற்கொண்ட ஒரு தொழிற்சங்க தலைவரை அழைத்துப் பேசவைக்க மலையகப் பாடசாலைகளால் முடியுமா ? அல்லது அத்தகைய தொழிற்சங்க தலைவர்கள்தான் உள்ளனரா என்ற கேள்வியையும் இந்தப் பதிவுகள் ஏற்படுத்துகின்றன.

அதேபோல ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சரான தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மலையக மக்களை வடக்கில் வந்து குடியேறுமாறு அழைப்பு விடுத்தபோது, அதற்கடுத்து மாணவராக உரையாற்றிய எம். வாமதேவன், அமைச்சரின் கருத்தை மறுதலித்ததுடன் மலையகம் எங்கள் மண்.

எங்கள் தாயகம். அதனை விட்டு நாங்கள் வெளியேற முடியாது' எனும் பொருள்பட பேசி பாராட்டைப் பெற்றுள்ளார். இவ்வாறு மாணவர்களை அமைச்சர்களுடன் விவாதம் செய்யும் வகையிலாக உரையாற்றச் செய்யும் நிலைமைகள் இன்றைய மலையக பாடசாலை சூழலில் காணப்படுகின்றனவா?என்ப ன போன்ற நினைவலைகளை உருவாக்கி விடும் நூலாக இது உள்ளது.

தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவர்கள்  வெளிநாடுகளுக்குச் சென்று ஆங்கில மொழி மூலத்தில் கல்வி கற்பதில் இருக்கக்கூடிய தயக்கத்தை தனது அனுபவங்கள் ஊடாக தகர்த்தெரிவதையும் அவதானிக்க முடிகிறது.

February/ 28/2021

மலையகத் தமிழர் சமூகம் அமைச்சு செயலாளர்  எனும் உயர் அரச பதவியை அடைவது சாதாரணமானதல்ல. ஏனெனில் இலங்கை பிரஜை அந்தஸ்த்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட மலையகத் தமிழர் சமூகம் அரசாங்க பாடசாலை கல்வி மறுக்கப்பட்டு தோட்டப் பாடசாலைகளில் கற்று அரச பணிகளில் சேர்வதே சிம்ம சொப்பனமாக இருந்த நிலையில், அந்தச் சூழலில் இருந்து வந்து அத்தகைய அரச உயர் பதவியைப் பெற்ற இரண்டாமவராக எம். வாமதேவன் திகழ்கிறார்.

மற்றையவர் பிரதாப் ராமானுஜம்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமானுஜம் அவர்களின் புதல்வர் ). அந்தப் பயணம் நோக்கிய அனுபவங்கள் இளைய மலையகத்தவர் மத்தியில் ஒரு உந்ததுதலைத் தரவல்லது.

இதற்கும் அப்பால் தனது இலக்கிய முயற்சிகள், விளையாட்டுத் துறை ஈடுபாடுகள் என அனைத்தையும் பதிவாக்கி உள்ளார். இந்தப் பதிவுகள் தனியே எழுத்துக்களால் மட்டுமன்றி படங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய படங்கள் சொல்லும் செய்திகள் இன்னுமொரு வரலாற்றுக் காட்சிப்படுத்தலை வாசகர் இடையே நிகழ்த்துகிறது.

இவ்வாறு இந்த தன்வரலாற்று நூல் ஒன்றை எழுதத் தூண்டுதலாக இருந்தும், படங்களையும் சேர்த்து வெளியிட பரிந்துரை செய்தும், அட்டைப் படத்தில் சேர்க்கப்பட்டுள்ள எம்.வாமதேவன் அவர்களது அழகிய புகைப்படத்தை எடுத்தும் பங்களிப்பு செய்யக் கிடைத்தமை எனக்குள் உள்ளூற மகிழ்ச்சி தருகிறது.

குமரன் பதிப்பக வெளியீடாக 251 பக்கங்களினாலான இந்த நூல் இளைய சமூகத்தினரால் வாசிக்கப்பட வேண்டியது.