‘மரப்பாலம்’ - வாசிக்க வேண்டிய வரலாற்று புதினம்
- மல்லியப்புசந்தி திலகர்
இன்றைய கொரொனா பேரழிவுகளைக் கடந்தும் உலகம் எஞ்சும். எதிர்காலத்தில் இந்த பேரழிவுகளை உலகம் வரலாறாக வாசிக்கும். அந்த வரலாற்றை ஆய்வுக் கட்டுரையாகவோ அல்லது நாவலாகவோ யாரோ எழுதவும் கூடும். எதிர்கால சந்ததியினருக்கு அப்படித்தான் இந்த கொரொனா யுகம் கடத்தப்படும். அப்போது சுவாசத்துக்காக ஒக்சிஜன் விலைக்கு வாங்கத் தொடங்கிய காலம் 2021 என பதிவு பெறலாம். இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதனை மூன்றாம் உலகமகாயுத்தம் எனவும் எதிர்காலம் பெயரிடலாம்.
அப்படியாயின் இரண்டாம் உங்க யுத்தம் எந்த காலகட்டத்தில் நடந்தது? எவ்வாறு நிகழ்ந்தது? அதில் எம்மவர்கள் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பது பற்றிய வரலாற்றை பதிவு செய்யும் தமிழ் நூல்கள் உள்ளனவா எனக்கேட்டால் பரிந்துரைக்கக் கூடிய நூல்தான் 'மரப்பாலம்'.
இந்தியத் தமிழகத் தளத்தில் இருந்து இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னணியில் நடந்த சம்பவங்களின் கோர்வையாக, ஆய்வாகவும் புனைவாகவும் கலந்து தந்திருக்கிறார் நாவலாசிரியர் கரன் கார்க்கி.
எழுத்து சினமா இரண்டிலும் இயங்கும் கரன் கார்க்கி படைக்கும் காட்சிப் படிமங்கள் மனதில் நிற்பன. நிலைப்பன.
தமிழ் நாட்டில் இருந்து பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கொத்துக் கொத்தாக மக்களை அயல் நாடுகளுக்கு அழைத்துச்சென்றது ஏன் என இலங்கையர்கள் இலகுவாக புரிந்து கொள்ள 'மலையகத் தமிழர்களே' இன்றும் காட்சி தருகிறார்கள். சாட்சி பகர்கிறார்கள். இவ்வாறு மலேசிய தமிழர்கள், பர்மா தமிழர்கள், சிங்கப்பூர் தமிழர்கள் என சிதறுண்டு கிடக்கும் மக்கள் கூட்டம் சிதைந்த பதிவே 'மரப்பாலம்' நாவலின் மையம் எனலாம்.
ஹிட்லரின் பேராசையால் ஜேர்மனியில் ஆரம்பித்த இரண்டாம் உலக மகாயுத்தம் எப்படி இந்தியாவின் கிராமத்து தமிழர்களையும் பலிக்கடாவாக்கியது என்பதை மரப்பாலம் விபரித்துச் செல்கிறது.
இலங்கை மலையகத்தில் தேயிலை உற்பத்திக்கு முன்பதாகவே கோப்பி காலத்தில் புகையிரத பாதைகள் அமைக்க அழைத்துவரப்பட்ட மக்கள் எவ்வாறு செத்து மடிந்திருப்பார்கள் என்பதை 'மரப்பாலம்' அமைக்க போன தமிழர்களின் நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிகிறது. ஆனால் அங்கே அழைத்து போனவர்கள் , இந்திய தேச விடுதலையின் பேரில் என்பதுவும் அங்கே அவர்களை கொடுமைபடுத்தியவர்கள் ஜப்பானியர்கள் என்பதும் விரிவாக விபரிக்கப்படுகிறது.
இந்தியாவை கைப்பற்றி ஆட்சி செய்த பிரித்தானியர் பர்மாவில், சிங்கப்பூரில் தமிழர்களோடு சேர்ந்து செத்து மடிந்த கதையும் ஹிட்லருடன் சேர்ந்து இட்ட திட்டத்தில் இந்தியாவைக் கைப்பற்ற இந்தியர்களைக் கொண்டே ஜப்பானியர்கள் பாலம் அமைத்தார்கள் என்பதையும் 'மரப்பாலம்' விபரிக்கின்றது.
தமிழ் நாட்டு கிராமம் ஒன்றில் பிறக்கும் குழந்தை ஒருவன் தாயை இழந்தபின்னர் தந்தையினால் பாதிரியார் ஒருவரிடம் ஒப்படைக்க அவர் அவனை ஆங்கிலம் தெரிந்த ஜோர்ஜ் ஆக வளர்த்தெடுக்கவும் கிறார். அதனால் பிரித்தானிய காலத்தில் சென்னையில் ஏற்றுமதி வர்த்தகம் செய்த ஒரு இங்கிலாந்து காரரிடம் உதவியாளராக சேர்கிறான். அவன் நண்பனைப் போன்று பழகுவதுடன் தனது தொழில் காலம் முடிய இங்கிலாந்து செல்லும்போது ஜோர்ஜையும் அழைத்துச்செல்ல எண்ணுகிறான். ஜோர்ஜ் கற்பனையில் மிதக்கிறான்.
இங்கிலாந்தில் இருந்து வரும் கடிதம் ஒன்று தனது முதலாளி நண்பனான லூயிஸின் பயணத்தை திசை திருப்ப சிங்கப்பூர் நோக்கி கப்பலில் பயணத்தை ஆரம்பித்து சிங்கப்பூரில் இறங்கியதில் இருந்து திசைமாறிய பறவைகளாகும் நண்பர்களான ஜோர்ஜையும் லூயிசையும் இரண்டாம் உலக யுத்தம் எவ்வாறு சின்னாபின்னமாக்கி இணைக்கிறது என்பது கதை சுருக்கம். அதற்குள் நடக்கும் அத்தனை அட்டூழியங்களும் வரலாறாக வருகிறது. இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டமைத்த சுபாஷ் சந்திரபோஸின் அரசியலும் பேசப்படுகிறது. அவருக்கு என்ன நடந்தது என்பதும் எழுதப்படுகிறது. இந்த காட்சிகளில் இலங்கை உள்நாட்டுப்போரின் காட்சிகளையும் அரசியலையும் கூட இணைத்துப் பார்க்கும் அரசியல் வாசிப்பு எமக்குள் நிகழ்கிறது.
"இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் வாழ்க்கையின் அவலங்களையும் குரூரங்களையும் சித்திரித்த பிறிதொரு நாவல் தமிழில் எழுதப்படவில்லை.வரலாற்றின் கோர முகத்தை போரின் கொடூரங்களை மனம் நடுங்க இந்த நாவல் சித்திரிக்கிறது.உலகத் தரத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல் இது என நெஞ்சு நிமிர்த்தி உரைப்பேன். பல நூல்களை வாசிக்காமல் மரப்பாலம் சாத்தியமில்லை.ஜப்பானிய போர் விமானங்களின் உறுமல்களும் வன்முறைகளும் நெஞ்சை நிலைகுலைய வைக்கின்றன. கரன் கார்க்கி தன் எழுத்தாலும் உழைப்பாலும் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்துள்ளார்"
என பேராசிரியர் பா. ரவிக்குமார் எழுதியிருக்கும் மதிப்புரை நிச்சயமான உண்மை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
உயிர்மை பதிப்பகம் (2019. 'மரப்பாலம்' வாசிக்கவும் வைத்துப் பாதுகாக்கவும் வேண்டிய நூல்.

தட்டப்பாறை- வெளிகளைத் திறந்துவிடும் புதினம்
முன்பின் அறியாத முகநூல் நண்பர் முஹம்மது யூசுப். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இப்போது மத்திய கிழக்கு நாட்டில் தொழில் புரிவதாக கூறினார். என்ன தொழில் என்று எங்கும் எழுதவில்லை ஆயினும் இவர் எந்த தொழிலும் செய்யக்கூடிய ஒருவராக இருப்பார் என ஊகிக்க முடிகிறது. பழங்குடிகளின் வரலாறு, மதங்கள் பற்றிய மதிப்பீடு, பூகோளவியல், புவியியல், தொல்லியல், தொல்பொருளியல், மானுடவியல், சமூகவியல், அறிவியல், மொழியியல் என பல தளங்களில் நின்று ஒரு புதினத்தை தருவதற்கு முயற்சித்துள்ளார்; முஹம்மது யூசுப். அதுவே தட்டப்பாறை.
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களாக தமிழ்நாடு சென்ற ஒரு குடும்பத்தில் தந்தையும் தாயும் ஒரு மகனும். அந்த மகன் இலங்கையை விட்டுப் போகும்போது 12 வயது. இலங்கையில் ஜெயசீலனாக பிறந்த அந்த சிறுவன் இந்தியாவில் தேவசகாயம் ஆகிறான். ஆனாலும் அவனது கையில் ‘சீலன்’ என பச்சைக் குத்தப்பட்டுள்ளது. அந்த சீலன், ஜெயசீலன் என்பதை மட்டுமல்ல அவன் ‘சிலோன்’ காரன் என்பதை நினைவுறுத்தியபடி நிலைக்கிறது.
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை பயணங்கள் ஊடாக புவியியல் தோற்றப்பட்டு அடிப்படையில் பூகோள பிராந்தியத்தை ஒருங்கிணைத்துப் பார்க்கும் முயற்சி, அல்பிரட் வெக்னரின் கண்ட நகர்வு கொள்கைவரை யான பார்வைகள் சில சமயங்களில் புனைவு நாவல் அல்லாத அபுனைவு ஆய்வு நூலை அல்லது பாடப்புத்தகம் ஒன்றை வாசிப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தாமல் இல்லை. ஆனால் அடுத்த அத்தியாயத்தை வெகு சாதாரண உரையாடல்கள் சம்பவங்கள் ஊடாக புதினத்தின் இயல்புக்கு கொண்டு வந்து அதனைச் சரி செய்து விடுகிறார் நாவலாசிரியர்.
“எல்லோரும் வாசிக்கும் புத்தகங்களை மட்டுமே நீங்களும் வாசித்தால் எல்லோரும் சிந்திப்பதுபோல மட்டுமே உங்களாலும் சிந்திக்க இயலும்” என ஹாருகி முரகாமியில் கூற்றை எழுதி தனது முன்னுரையை ஆரம்பித்திருக்கும் நாவலாசிரியர், “உலகெங்கும் உள்ள இலங்கைச் சார்ந்த மலைவாழ் இந்தியத் தமிழர்களுக்கும், என தமிழ் சொந்தங்களுக்கும் இந்த நூல் சமர்ப்பணம்” என நிறைவு செய்துள்ளார்.

இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்
மல்லியப்புசந்தி திலகர்
இலங்கை மலையக வரலாற்றில் கோ.நடேசய்யருக்கு என்று தனித்துவமான இடமுண்டு. 1920 களிலேயேமலையகப் பெருந்தோட்ட தொழிலாளர் மக்களிடையே தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்கி அவர்களைஅமைப்பாக்கம் செய்தவர். அத்தகைய அமைப்பாக்கத்தின் தொடர்ச்சியாகவே அந்த மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டனர்.
அதன்விளைவாக அப்போதைய நாடாளும் சபையான அரச பேரவையிலும் அந்தமக்களின் பிரிதிநிதியாக அங்கம் வகித்தார். இந்த அமைப்பாக்கத்தை அரசியல், தொழிற்சங்கசெயற்பாட்டுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளாமல், அடிப்படையில் ஒரு பத்திரிகையாளரான நடேசய்யர்தனது பத்திரிகைப் பணியையும் தொடர்ந்தார்.
அவர் ‘தேசநேசன்’, ‘தேசபக்தன்’,’உரிமைப்போர்’, ‘ The Citizen’, ‘ The Forward’, உட்பட 11 பத்திரிகைகளையும் வெளியிட்டவர். அந்தப் பத்திரிகை ஒன்றில் அவர்எழுதிய ‘ ராமசாமி சேர்வையின் சரிதம்’ என்ற கதை மலையகத்தின் முதலாவது சிறுகதையாகவும் பதிவாகிறது.
இவ்வாறு தொழிற்சங்க, அரசியல், ஊடகவியல், இலக்கியம் ( சிறுகதை), வரிசையில் நாடகத்துறையிலும்ஈடுபட்டுள்ள இவர் நூல்களை அச்சிட்டு வெளியிட்டதன் மூலம் ஒரு பதிப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்தியமலையக நிர்மாண சிற்பி கோ.நடேசய்யர்.
தனதுபதிப்பு முயற்சிபள் மூலம் ‘வெற்றியுனதே’, ‘நீ மயங்குவதேன்’, ‘ புபேந்திரன் சிங்கன் அல்லதுநரேந்திரபதியின் நகர வாழ்க்கை’, ‘ இந்தியா - இலங்கை ஒப்பந்தம்’, ‘ தொழிலாளர் சட்ட புஸ்த்தகம்’, ‘ The Planter Raj’, ‘The Ceylon & Indian Critics’ ‘கணக்குப்பதிவு நூல்’, ‘ கணக்குப் பரிசோதனை’, ‘ ஆபில் எஞ்சின்’, போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டவர்.
அந்த வரிசையில் 1937 ஆம் அவர் வெளியிட்ட நூல்களில் ஒன்று ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர்அந்தரப் பிழைப்பு நாடகம்’. இந்த நாடகத்தில் வரும் பாடல்களை எழுதியவர் ஶ்ரீமதி கோ.ந.மீனாட்சிம்மாள்என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நூலினை கோ.நடேசய்யர் யாருக்கு உரிமையாக்கியுள்ளார் என்பதுஉணர்ச்சிகரமானது.
“அந்நியர் லாபம் பெற அந்திய நாட்டில் நெற்றி வியர்வை நிலத்தில் வீழ உழைத்துப் போதிய ஊதியமும் பெறாதுஉழலும் எனது இந்திய சகோதர சகோதரிகளுக்கு இந்தூல் உரிமையாக்கப்பெற்றது” எனக்குறிக்கின்றார்கோ.நடேசய்யர். இந்த நாடக நூல் மலையகப் பெருந்தோட்ட மக்களின் வரலாற்று ஆவணம் என்றவகையில் இதனை 2018 ஆண்டு மறுபதிப்பு செய்துள்ளார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அந்தனிஜீவா.
1937 ஆம் ஆண்டுகொழும்பு கமலா அச்சகத்தில் முதற்பதிப்பாக அச்சிடப்பட்டுள்ள இந்த நூலை கொழும்பு, குமரன் பதிப்பகம் ( புத்தக இல்லம்) மறுபதிப்பு செய்துள்ளது.
இலக்கியப் பயணியான ( Literary Traveler) அந்தனிஜீவா இந்தியா சென்றிருந்த சமயம் சென்னையில்நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் பற்றிய சிறப்பிதழாகவெளிவந்திருந்த ‘மாற்றுவெளி’ இதழில் ஆங்கில விரிவுரையாளரும் நாடக செயற்பாட்டாளருமானதிருமதி.அ.மங்கை எழுதியிருந்த கட்டுரையில் இந்த நடேசய்யரின் நாடக நூலைப் படித்ததாககுறிப்பிட்டிருந்ததை அறிந்து, ரோஜா முத்தையா நூலகத்துக்குச் சென்று அந்தப் பிரதியினைப் பெற்று இந்தமறுபதிப்பைக் கொண்டுவந்துள்ளார்.
அத்துடன் அ.மங்கை எழுதிய ‘மாற்றுவெளி’ ( 2010) கட்டுரையையும் இந்தநூலில் இணைத்துள்ளார். அதில் ‘நான் அறிந்தவரையில் தமிழில் அரசியல் அரங்கம் குறித்த வரலாற்றைஎழுதுகையில் தொழிற்சங்கவாதியாகவும் அரசியலில் தீவிரமாகவும் பணியாற்றிய ஒருவரின் நாடக முயற்சியாகஇந்நாடகத்தைக் காணலாம்’ என அ.மங்கை பதிவு செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கேசரி தகவல் களஞ்சியத்தில்’ ஆய்வறிஞர் மு.நித்தியானந்தன்எழுதியுள்ள கட்டுரையை இந்த நூலுக்கான முன்னுரையாகவும் இணைத்துள்ளார் பதிப்பாசிரியர் அந்தனிஜீவா.
அந்த கட்டுரையில் அற்புதமான பல தகவல்களைத் தரும் அது.நித்தியானந்தன் இறுதியாக இவ்வாறு நிறைவுசெய்கிறார்:
‘இந்த நாடகத்திற்கு நடேசய்யர் எழுதியிருக்கும் முகவுரை இலங்கையில் வாழும் இந்தியத் தொழிலாளர்களின்நிலைமை பற்றிய அரசியல் பிரகடனமாகும்.இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் தோட்டத்தொழிலாளர்கள் ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றப்பட்டு கடத்தப்பட்டுவருபவர்கள்தானே தவிர, தமதுசுயவிருப்பின் தெரிவில் வருபவர்கள் அல்லர் என்பதை நடேசய்யர் இந்நாடகநூலில் ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். இந்தத் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்கள் என்பதுதான்நடேசய்யர் இந்நூலில் உணர்த்த விரும்பும் உண்மையாகும்’.
இந்த மறுபதிப்பு நூலின் வெளியீட்டினை 2017 செப்தெம்பரில் பிரான்சில் இடம்பெற்ற உலகத்தமிழ் நாடகவிழாவில் நடாத்த பதிப்பாசிரியர் அந்தனிஜீவா எண்ணியிருந்தாலும் அது சாத்தியமற்றுப் போகவே, அதே ஆண்டுதமிழ்நாடு திண்டுக்கல் காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற மலையக இலக்கியஆய்வரங்கில் கட்டுரையாளரால் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு வெளியிட்டு வைக்கப்பட்டது.
அதனை அடுத்து 2018 ஆம் ஆண்டுகொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் அறிமுகவிழாவினை நடாத்தி இருந்தார்.
இதன்போது கிழக்குப்பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராசா ‘ஈழத்தின் முதலாவது அரசியல் நாடக நூல்’ கோ.நடேசய்யரின் ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்’ எனஆதாரபூர்வமாக உரையாற்றி இருந்தார். இந்த நாடகம் எவ்வாறு மேடையேற்றப்பட வேண்டும் என்பதனை மிகுந்த கரிசணையுடன் நூலில் குறிப்பிடுகிறார் கோ.நடேசய்யர்.
இந்த மறுபதிப்பைச் செய்து வெளியிட்ட அந்தனிஜீவா அனைவரதும் பாராட்டுக்குரியவர். அதேநேரம் இந்தநூலின் பிரதிகளை வாங்கி வாசித்து இந்த நாடகத்தை மேடையேற்றுவதே பதிப்பாசிரியருக்கும் நூலாசிரியர் கோ.நடேசய்யருக்கும் வழங்கும் கௌரவமாகும்.