சகவாழ்வியம் -இலங்கையை மையப்படுத்திய உரையாடல்

- மல்லியப்புசந்தி திலகர்

தனது சிந்தனைத் தளத்தை மொழிப்புலமையோடு கலந்து இலக்கியப் பிரதியாக்கி இறக்கி வைக்கும் புதிய முயற்சியாக வெளிவந்திருக்கும் நூல் 'சகவாழ்வியம்'.

பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் ஊடகவியலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர் எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத், 'இலங்கையை மையப்படுத்திய உரையாடல்' எனும் உப தலைப்போடு எழுதியிருக்கும் இந்த நூலை , முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மையம் வெளியீடு செய்துள்ளது. பெற்றோருக்குப் பின் தன்னை வளர்த்த மாமாவுக்கும் சித்திக்கும், தனது தூண்டல் புள்ளிகளான நண்பர்களுக்கும் இந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார் நூலாசிரியர்.

ஒற்றைத் தன்மை, பன்மைத்தன்மை, பல்லினத்தன்மை முதலான விடயங்கள் தத்துவஞானிகள், கல்வியியலாளர்கள், சிந்தனையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள காலகட்டம் ஒன்றில், இலங்கையை மையப்படுத்தியதாக இத்தகைய நூல் ஒன்றை எழுதுவது வரவேற்கத்தக்கது.

பிஸ்ரின் பேசப்படாத விஷயங்களைப் பேசத்துணியும் ஓர் ஊடகவியலாளர். பெண்களின் விருத்தச் சேதனம் தொடர்பிலும், இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பது பற்றியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையே தயாரித்து நெறிப்படுத்தியவர். வயோதிப ஆண்கள் ஏன் பாலியல் வன்புணர்வு நோக்கி உந்தப்படுகிறார்கள் என்பதையும் பொது வெளியில் உரையாடத் துணிந்தவர்.

அவரது துணிச்சலான முயற்சிகளில் ஒன்று இந்த சகவாழ்வியம். அவரது இரண்டாவது நூல்.106 பக்கங்களைக் கொண்ட இந்தச் சிறியநூலில் 10 தலைப்புகளில் இலங்கையின் சகவாழ்வியம் பற்றி உரையாட முனைகிறார்.

ஒற்றைத் தன்மையும் பன்மைத்துவமும், பன்மைத்துவமும் மனிதனும், இனம், மதம், சாதியம் கலாசாரம் என்பவற்றுள்ளான பன்மைத்துவ புரிதல், இலங்கையின் சூழல் அமைவிடம் மற்றும் இனம்சார் பன்மைத்துவம், இலங்கைச் சூழலும் பண்பாட்டு பன்மைத்துவமும், இலங்கையின் இன முரண்பாடு, இலங்கையின் அரசியல் பன்மைத்துவத்தின் 51 நாள் செயற்பாடு , சகவாழ்வு, சகவாழ்வியம், இலங்கையின் சகவாழ்வு பற்றிய விமர்சனங்களும் முன்மொழிவுகளும் எனும் பத்து தலைப்புகளில் 'சகவாழ்வியம்' குறித்த உரையாடலைப் பதிவு செய்ய முனைகிறார் நூலாசிரியர்.

உலகம் நிறங்களால் அற்றதாக, முழுவதுமே கருப்பு நிறமாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என வாசகர்களைக் கற்பனச் செய்யக் கோரி, அதனூடே ஏற்படும் மன உணர்வில் இருந்து பன்மைத்துவம் என்பதனை அழகியல் உணர்வோடு உணரச் செய்கிறார். நிறங்களால் பல வண்ணங்களால் ஆன உலகுதானே அழகாய்த் தெரிகிறது. எனவே பன்மைத்துவமே அழகானதாக இருக்கும் என வித்தியாசங்களின் முக்கியத்துவத்தை உணரச் செய்வதன் ஊடே ஆரம்பமாகிறது நூல்.

வித்தியாசங்களினாலேயே உலகம் அமையப் பெற்றுள்ளது. பன்மைத்துவம் என்பது இயற்கையில் இயல்பாகவே தோற்றம்பெற்ற ஒரு விடயமாகவுள்ளது.எனவே பன்மைத்துவம் என்ற கதையாடல் உலகின் இயங்கியலின் எல்லாத்தளங்களிலும் ஊடுருவியுள்ள பல கோணங்களில் நின்று கதைக்கப்படவேண்டிய நீண்ட உரையாடலுக்கான விடயமாக உள்ளது என்கிறார்.

மனிதனின் பன்மைத்துவத்தை உரையாட வரும்போது, உயிரினம் ஒன்றாயினும் அவை வாழும் சூழல், இட அமைவு என்பவற்றுக்கு ஏற்ப பல்வகைத்தனமைப் பெறுவதை, ஒரே உயிரினம் உலகின் இரண்டு பிரதேசங்களில் எவ்வாறு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளன என்பதைக் கொண்டு விளக்குகிறார்.

மனித இனமானது இயற்கை அமைவியல், காலநிலை, சூழல், மரபணு என்பவற்றால் வேறுபடுவதையும் அதனால் மானிடவியல் ஆய்வாளர்கள், மனிதனின் தோற்றம், தோல்,கண்ணின் நிறம், மண்டையோட்டு அமைப்பு இரத்தத்தொகுதி என்பவற்றின் அடிப்படையில் மங்கோலிய இனம், காக்கேஷியஸ் இனம், நீக்ரோ இனம் என மூன்று வகையாக வகுத்துள்ளனர் என்கிறார்.

மனிதனின் தோற்றம் முதற்கொண்டு மனிதப்பரவல் பூமியில் ஆரம்பமான காலத்தில் இருந்தே இனம், மதம், சாதியம், கலாச்சாரம், பண்பாடு என்ற புரிதல், வித்தியாசமான தளங்களில் இருந்து தோற்றம் பெற்றுள்ளதைப் போலவே, கருத்தியல், சிந்தனைசார் புதுமைகளையும் ஏற்படுத்தியுள்ளன.

நவீன தொழிநுட்ப வளர்ச்சியை அடுத்து மதங்கள் மீது மனிதர்கள்கொண்ட ஆதிக்கம் குறைந்து, இயற்கையில் பொதிந்த ரகசியங்கள் விஞ்ஞானத்தின் ஊடாகக் கட்டுடைப்புச் செய்யப்பட்டதால், மத்த்தின் மீது மனிதன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு தகர்க்கப்பட்டது என்பது போன்ற புரிதல்களுடன் இலங்கையின் பல்லினத்துவம், பன்மைத்துவம் பற்றி அலசி ஆராய்கிறார்.

இலங்கையின் சூழல் அமைவிடம் மற்றும் பன்மைத்துவம் இயற்கையாகவே தோற்றம் பெற்றது என்பதனை அதன் தரைத்தோற்ற சூழல் அமைவில் இருந்தே அடையாளம் காணுகிறார். இலங்கை ஒரு தீவானபோதும் தரைத்தோற்றம் உலக அரங்கில் இலங்கைக்கு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது என்கிறார்.

இலங்கையில் வாழ்கின்ற மக்களைப் பொறுத்தவரை ஒரே இனம், மதம், கலாசாரம், பண்பாடுகள் என அமையப் பெறாமல் பன்முகப்பட்ட கலாசார விடயங்கள் உள்வாங்கப் பட்டு இருப்பதால் தனித்துவத்தையும் வித்தியாசத்தையும் அடையாளப்படுத்தி நிற்கிறது. பல்லின கலாசாரம் உள்ளடக்கிய இலங்கைப் போன்ற நாடுகளில் கருத்தியல் ரீதியாகவும் சிந்தனா ரீதியாகவும் பல்வேறு முரண்பாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை வரலாற்று சம்பவங்கள் சான்று பகர்கின்றன.

இலங்கைச் சூழலில் பண்பாட்டு பன்மைத்துவம் வாழ்வியலுக்கான அடையாளமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு இனத்தவரது தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் கருவியாக பண்பாடு அமைந்துள்ளது. சிங்களவர்கள் ஆயினும் கண்டிய சிங்களவர்களுக்கும் தென்பகுதி சிங்களவர்களுக்கும் பண்பாட்டு வித்தியாசங்கள் காணப்படுகின்றன. தமிழர்களில் வடபகுதி, தென்பகுதி, மலையகத் தமிழரிடையே பண்பாட்டு அடிப்படையில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. கிழக்கு முஸ்லிம்களினதும் கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்களினதும் பண்பாடுகளில் பாரிய இடைவெளி காணப்படுகிறது.

இவ்வாறு இனரீதியாக பண்பாடு வேறுபடுவது மாத்திரமின்றி வேறுபட்ட குழுக்களுள்ளேயும் வேறுபட்ட பண்பாட்டுத் தன்மைகள் காணப்படுவதையும் வலியுறுத்துகிறார். கணிதத்தில் 0 ( பூச்சியம்) எவ்வாறு முதன்மையானதோ அவ்வாறே மானிடவியலிலும் பண்பாடு எனும் கருத்தியல் முதன்மையானதாக காணப்படுவதாக சமூகவியலாளர்கள் கருதுவதாக சுட்டிக் காட்டுகின்றார்.

இலங்கையில் இன முரண்பாடு தொடர்பாக பேசும்போது வரலாறு நெடுகிலும் அரசியல் தலைவர்கள் விட்ட பாரிய தவறுகளைப் பட்டியல் இட்டுச் செல்கின்றார்.அரசியல்வாதிகளின் பிற்போக்கான குறுகிய சிந்தனைகளினாலேயே இந்த பன்மைத்துவ நாடு பல தசாப்த காலமாக இரத்தக் காடாக மாறியது.

பௌத்த பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு குழு ஒன்று முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்னால் சென்றபோது அதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததனால் அது இனக்கலவரமாக மாறியது. அநகாரிக்க தர்மபால போன்ற அரசியல் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் விரோதப் பிரச்சாரமே இத்தகைய கலவரங்களுக்கு காரணம் என ‘பன்சலைப் புரட்சி’ எனும் நூலில் குறிப்பிட்டு இருப்பதாகவும் சுட்டிக் காட்டுகின்றார்.

“மொழி ஒன்று என்றால் நாடு இரண்டு, மொழி இரண்டு என்றால் நாடு ஒன்று” என்ற புகழ்பெற்ற வாக்கியத்தை முன்வைத்த கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வாதான், சாதாரண சட்டமாக இருந்த தனிச் சிங்களச் சட்டத்தை 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டமாக உயர்த்தும் அரசியல் யாப்பை எழுதினார் என்பதை மேற்கோள் காட்டுகிறார்.

இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் இயற்கைக் கொடுத்த வரமாக பன்மைத்துவம் எல்லாத்தளங்களிலும் கதையாடப்படும் விடயமாகவுள்ளது. இந்தச் சூழலில் மற்றமைகளின் இருப்பை ஏற்றுக்கொண்டு இணைந்து வாழவேண்டிய கடப்பாடு, தேச மக்கள் அனைவருக்கும் கடமையாகவுள்ளது. மேற்படி இனத்தவர்கள் அளவில் வேறுபட்ட போதிலும் தமக்கான தனிப்பட்ட இயல்புகளோடு இலங்கை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்னறர்.இந்த வித்தியாசங்களைப் புரிந்து கொண்டு, வித்தியாசங்களை ஏற்றுக் கொண்டு வாழப்பழகும்போதே சகவாழ்வு சாத்தியமாகும்.

இனங்கள் மதங்களுக்கு இடையில் இணைந்து வாழ்தல், சேர்ந்து வாழ்தல், புரிந்து கொள்ளுதல் என்ற கருத்தியல் மிகவும் பரந்துபட்ட விரிந்த தளத்துக்கு இட்டுச் செல்லும் ஒரு தத்துவமாகவே சகவாழ்வியம் ( Co - Existentialism) அமையப் பெற்றுள்ளது.

இவ்வாறு சிக்கலான ஒரு விடயப்பரப்பை கருப்பொருளாகக் கொண்டு ஒரு நூலை இளைய தலைமுறை எழுத்தாளர் ஒருவர் 2021 ஆம் ஆண்டு வெளியீடு செய்கிறார் என்பது நம்பிக்கை தருவதாகவே உள்ளது.

எனினும் இந்த சகவாழ்வியத்தை வாழ்க்கைக் கோலமாகவும் ( Life Style ) அரசியல் செல்நெறியாகவும் ( Political Trend ) ஆக்கிக் கொள்வது அடுத்த தலைமுறை ஏற்கவேண்டிய சவாலாக உள்ளது. அத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் துணிவைப் பெற இத்தகைய நூல்களை வாசிப்பதும் அது சார்ந்து யோசிப்பதும் அவசியம்.
*


‘அக்கினிப்பூக்கள்’அந்தனி ஜீவா

மல்லியப்புசந்தி திலகர்

அந்தனிஜீவா எனும் பெயரை இலங்கை, தமிழ்நாடு, புலம்பெயர் இலக்கிய சூழலில் அறியாதோர் இருக்க வாய்ப்பில்லை. இந்திய இராணுவத்தில் பணியாற்றியபோது பர்மா சென்ற வீரர் கொழும்புக்கு வந்த சமயம் கொழும்பில் வாழ்ந்த பெண்ணை காதலித்து மணமுடிக்க அவர்களது இரண்டாது குழந்தையாகப் பிறந்தவர் அந்தனி ஜீவா.

கொழும்பு, கிருலப்பணை சுவர்ணா பாடசாலையிலும் பம்பலப்பிட்டி சென். மேரிஸ் பாடசாலையிலும் கற்றவர். தனது பாடசாலை ஆசிரியர்களான திரு. சந்தானம், திருமதி. எம். பேர்னாண்டோ ஆகிய இரு ஆசிரியர்களை மறவாமல் நினைவு கூரும் அவர், தனது பாடசாலை மூத்த மாணவரான கலைஞர் ஜே.பி.ராபர்ட், கலைஞர் ராஜபாண்டியன் ஆகியோரையும் தனது ஆரம்ப கால கலை வழிகாட்டிகளாக கூறுகின்றார்.

இலக்கியத்துறையில் மட்டுமல்லாது ஒடுக்கப்பட்டோர் அரங்கு, பிரயோக அரங்கு, பங்குபற்றல் அரங்கு, முதலான துறைகளோடு ஊடாட்டம் கொண்டு பங்களிப்பு செய்துள்ள அந்தனி ஜீவா ஒரு ‘வினையி’ (Activist) எனும் வகிபாகம் கொண்டவர் எனக்குறிக்கின்றார் பேராசிரியர் சபா.ஜெயராஜா.
சதா சுறுசுறுப்பாக இங்கிக்கொண்டு இருக்கும் அந்தனிஜீவா ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம் போன்றவர். எப்போதும் தகவல்களை விரல் நுணியில் வைத்திருப்பார். தொடர்பாடலில் வல்லவர். இலங்கைக்குள் எந்தத் திசை இலக்கியம் என்றால் என்ன? எந்த மொழி இலக்கியம் என்றால் என்ன? தமிழ் நாட்டில் எந்த அணி இலக்கியம் என்றால் என்ன? இவரது தொடர்பு நிச்சயமாக அவர்களுடன் இருக்கும்.

 

‘தலைநகரில் தமிழ் நாடக அரங்கு’ எனும் இவரது நூலுக்கு, ‘தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் எழுதி இருக்கும் குறிப்பு இவ்வாறு அமைகிறது: ‘இலங்கை நாடக மேடையின் வளர்ச்சிக்கு பங்களித்த அத்தனை பேரையும் ஒருவர் விடாமல் நினைவு கூர்ந்து பதிவு செய்திருக்கும் அந்தனிஜீவாவே ஓர் அற்பதமான கலைஞர். சுமார் 16 மேடை நாடகங்களை மேடை ஏற்றியவர். வீதி நாடகங்களையும் நடாத்தியவர்.

அந்தனிஜீவா போன்ற அயல்நாட்டு தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்றோரை தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் ‘கலைமாமணி’ போன்ற விருதுகளுக்கும் பாராட்டுகளுக்கும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மனிதனின் அடையாளம் கடவுச்சீட்டாக இருக்க முடியாது. மொழியாகததான் இருக்க முடியும்’. இவ்வாறு தமிழ்நாட்டிலும் தனக்கான ஒர் அங்கீகாரத்தைக் கொண்டிருப்பவர் அந்தனி ஜீவா. இவர் பல நாடகங்களை எழுதியவர், இயக்கியவர், தயாரித்தவர் என்ற போதும் ‘அக்கினிப்பூக்கள்’ மிக மிக பிரபலமான நாடகம். அந்த நாடகம் பின்னர் நூலாக வெளிவந்தபோது 1999 ஆம் ஆண்டு சிறந்த நாடகப்பிரதிக்கான சாகித்திய விருதினை வென்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைக் காலம் முதலே தனது படைப்புகளை பத்திரிகைகளுக்கு எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ள அந்தனிஜீவா, நீர்கொழும்பில் இருந்து வெளிவந்த ‘மாணவர் குரல்’ சஞ்சிகையில் ஆரம்பித்து, பாடசாலை நண்பர்களுடன் இணைந்து ‘கரும்பு’ எனும் கையெழுத்துப்பிரதியை நடாத்தி வந்துள்ளார். ஓவியர் சாமியும், பாடகர் முத்தழகுவும் கூட இவரது பள்ளிக்கூட நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில் வீரகேசரி, தினகரன் போன்ற முன்னணி பத்திரிகைகள், இதழ்களில் எல்லாம் எழுதிவந்தவர். தினபதி – சிந்தாமணி பத்திரிகைகளோடு பணியாற்றிய காலத்தில் பத்திரிகை ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் , தன்னை புடம் போட்டார் என நினைவுகூர்கிறார். பின்னாளில் ‘குன்றின் குரல்’, ‘கொழுந்து’ போன்ற சஞ்சிகைகளின் பொறுப்பாசிரியராக அந்தனிஜீவா செயற்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சம்.

இளம் வயது முதலே சிவப்பு நிறத்தில் ஆர்வம் கொண்ட தான், இடதுசாரி அரசியல் அணி சார்ந்து தான் செயற்பட்ட விதம் குறித்தும் தனது அனுபவ பகிர்வு நூலில் பதிவு செய்துள்ளார். டொமினிக் ஜீவா போன்றே இவரும் இந்திய இடதுசாரி தலைவர் ஜீவானந்தன் மீதான பற்றுதலால் தனது அந்தனியுடன் ஜீவாவை இணைத்துக் கொண்டவர்தான். இங்கா சமசமாஜ கட்சியில் தன்னை இணைந்துகொண்டவர், அதன் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றியுமுள்ளார்.

இதன்போது கொல்வின் ஆர.டி சில்வா, என்.எம்.பெரேரா , வாசுதேவ நாணயக்கார போன்ற அரசியல் தலைவர்களுடன் பழகும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இதன் நீட்சியாக 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் வேட்பாளராகவும் அந்தனிஜீவா பெயரிடப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கட்சியின் ‘தேசம்’ பத்திரிகையின் ஆசிரியர் பீடத்திலும் அங்கத்தினர், ஆலோசகர்.

‘மலையகம் எனது பிறப்பிடமல்ல. ஆனாலும் மலையக மண்ணில் பிறந்தவர்களைவிட அந்த மண்ணின் மீது நேசம் கொண்டவன். எனக்கு அந்த மலையக மண்ணின் மீது பாசத்தையும் நேசத்தையும் ஊட்டியவரக்ள இருவர். ஒருவர் இலங்கைத் திராவிடக் கழகப் பொhதுச் செயலாளர் நாவலர். ஏ.இளஞச்செழியன், மற்றவர் மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை. சி.வி. வேலுப்பிள்ளையுடனான தொடர்பு காரணமாக கிழமைக்கு இரண்டு நாட்களாவது சந்தித்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். மலையக இலக்கியத்தின் முதல்வரும் முன்னோடியுமான தேசபக்தன் கோ.நடேசய்யரின் பணிகள் குறித்த பல தகவல்களைச் சி.வி எனக்குச் சொல்லுவார்’ என தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் அந்தனிஜீவா.

உண்மையில் மலையக தேசப்பிதா கோ.நடேசய்யர் அவர்களைப்பற்றி அந்தனிஜீவா அளவுக்கு எடுத்துக்கூறி நின்றவர்கள் வேறு யாருமில்லை எனும் அளவுக்கு அவரது பணிகளை பல தளங்களில் பேசியவராக அந்தனிஜீவாவை அடையாளம் காட்ட முடியும். தேசபக்தன் கோ. நடேசய்யர், பத்திரிகையாளர் நடேசய்யயர் ஆகிய நூல்களை எழுதிய சாரல்நாடனும் கூட அந்தனிஜீவாவின் உந்துதலும் பங்களிப்பும் இல்லாமல் தனது ஆய்வு முயற்சிகள் சாத்தியமான ஒன்று அல்ல என்றே பதிவு செய்துள்ளார். கோ.நடேசய்யரின் ‘அந்தரப்பிழைப்பு’ நாடகத்தை குமரன் பதிப்பகம் ஊடாக அந்தனிஜீவா பதிப்பாசிரியராக இருந்து மறுபதிப்பு (2017) செய்துள்ளார் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.

மலையகத்துடனான இவரது ஈடுபாடு காரணமாக மலையக கலை இலக்கிய பேரவையின் செயலாளராக இருந்து ஆற்றிய இலக்கிய பணிகள் விரிவாக பேசக்கூடியவவை. பேரவை, கொழும்புத்தமிழ்ச் சங்கத்தில் ஒழுங்கு செய்த பாராட்டு நிகழ்வு ஒன்றிலேயே 1983 ம் ஆண்டு பேராசிரியர் க.கைலாசபதி முன்னிலை வகிக்க சி.வி. வேலுப்பிள்ளையை 'மக்கள் கவிமணி' என விருதளித்து கௌரவம் செய்துள்ளனர்.

1996 ஆம் ஆண்டு மாகாண கல்வி அமைச்சராக வி.புத்திரசிகாமணி செயற்பட்ட காலத்தில் இடம்பெற்ற ‘மலையகத் தமிழ் ஆராய்ச்சி’ மாநாட்டுக்கான ஒழுங்கமைப்பு குழுவின் தலைவராக தி.வே.மாரிமுத்து செயற்பட, செயலாளராக அந்தனி ஜீவா செயற்பட்டார் என்பது முக்கியமாக பதிவு செய்யப்படவேண்டியது. இந்த மாநாட்டின் முக்கிய பங்கேற்பாளராக பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் கலந்துகொண்டு உரை வழங்கி இருந்தார். பின்னாளில் மாநாட்டுக் கட்டுரைகளை தொகுத்து நூலாக்கியதிலும் அந்தனி ஜீவாவின் பங்களிப்பு போற்றுதற்குரியது.

ஈழத்தில் தமிழ் நாடகங்கள் (1981), அன்னை இந்திரா (1985), காந்தி நடேசய்யர் (1990), சுவாமி விபுலானந்தார்(1992), The Hill Country in Sri Lanka Tamil Literature (1995), மலையகமும் இலக்கியமும் (1995), மலையக மாணிக்கங்கள்(1999), அக்கினிப்பூக்கள் (1999) சி.வி.யும் நானும் (2001), மலையகத் தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு (2002), மலையகக் கவிதை வளர்ச்சி (2003), திருந்திய அசோகன்-சிறுவர் நாவல் (2003), நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம் (2004), மலையக தொழிற்சங்க வரலாறு (2005), சிறகு விரிந்த காலம்(2007), அ.ந.க ஒரு சகாப்தம்(2009), பார்வையின் பதிவுகள் (2010), தலைநகரில் தமிழ் நாடக அரங்கு(2013), ஒரு வானம் பாடியின் கதை (2014) போன்ற நூல்களுடன், சி.வி.வாழும்போதே ‘சி.வி.சில நினைவுகள்’ எனும் நூலை எழுதியவர். சி.வி நூற்றாண்டு நினைவையொட்டி ‘சி.வியும் நானும்’ என 2002 ல் வெளியிட்ட நூலை திருத்திய மறுபதிப்பாக 2014ஆம் ஆண்டு வெளியிட்டது மாத்திரமின்றி அவருக்குக் கொழும்புத் தமிழச்சங்கத்தில் விழாவும் எடுத்தவர்.

அவரது நாடகம், அனுபவப்பகிர்வு, பயணக்கட்டுரைகள் தவிர்ந்த ஏனைய நூல்கள் அளவில் மிகச்சிறியதே. அவை ஆழமான விடயங்களைச் சுமந்துவராத போதும், அந்த விடயதானங்கள் சமூகத்தளத்தில் பேசப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவன, அதற்காக அடியெடுத்துக் கொடுப்பன. மலையக பெண்கவிஞர்களின் தொகுப்பு, பெண் சிறுகதையாளர்களைக் கொண்டு தனது அம்மா நினைவாகத் தொகுத்த ‘அம்மா’ எனும் பெயரிலான தொகுப்பு முதலானவையும் இத்தகைய முயற்சிகளே. மலையகம் வெளியீட்டகம் என நூல் பதிப்பு முயற்சிகளிலும் இறங்கியவர்.

இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பரவலாக இலக்கியவாதிகள், கலைஞர்களுடன் தொடர்புகளைப் பேணுவதில் இவருக்கு தனியிடமுண்டு. குறிப்பாக கடிதம் எழுதுவதன் மூலம் நட்பை, உறவை, தோழமையை தொடர்பில் வைத்திருக்கும் உயர்வான பண்பு அந்தனிஜீவாவுக்கு உரியது எனலாம். புதிய எழுத்தாளர்கள், கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது, அவர்களுக்கு கடிதங்கள் எழுதி ஊக்குவிப்பது எனும் வழக்கத்தை தனதாக்கிக் கொண்டவர். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினராக, ஆட்சிக் குழு உறுப்;பினராக தொடர்ந்து இலக்கிய பணியில் தன்னை இணைத்துக்கொண்டவர்.

அந்தனிஜீவா நிற்கும் சூழல் எப்போதும் கலகலப்பாக இருக்கும். சதா ஏதாவது ஒரு விசயத்தை பேசிக்கொண்டு இருப்பவராக, தகவல் களஞ்சியமாக தன்னை தகவமைத்துக்கொண்டவர். தனது அரைநூற்றாண்டுகால பொது வாழ்க்கை அனுபவங்களை ‘ஜீவநதி’ இதழில் தொடர் கட்டுரையாக எழுதி வந்தவர், அதற்கு இட்ட தலைப்பு ‘ஒரு வானம் பாடியின் கதை’. அதனை ‘ஜீவநதி’ நூலாகவும் பதிப்பித்து அவருக்கு கௌரவம் செய்துள்ளது. அக்கினிப்பூக்கள் தந்த அந்தனிஜீவா எனும் வானம் பாடி, கலை இலக்கிய வானில் கானம் பாடி என்றும் சிறகடிக்கும் என்பது திண்ணம்.


தொ. தே. சங்கத்தையும் என்னையும் இணைத்து கதையாடல்கள் இடம்பெறுவது தவிர்க்க இயலாதது

 

- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ்

உரையாடல் : சாம்பசிவம் சதீஷ்குமார்.

கடந்த பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த நீங்கள் இப்போது அமைதியாக இருப்பதன் காரணம் என்ன?

நான் அமைதியாக இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்களாக வரப்பிரசாதம் பெற்றுக் கொண்டு சம்பளம் வாங்கிக் கொண்டு அங்கே செல்லாது இருப்பவர்களைவிட அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு சம்பிரதாய உரைகளை ஆற்றுபவர்களைவிட அதிகளவில் சமூகத்தளத்தில் பேசிக்கொண்டு இருக்கிறேன். அவை வெறும் வாய்ச் சவடால்களாகவோ அல்லது அவசரத்தில் ரயிலைப் பிடிக்க ஓடுவது போன்றோ அல்லாமல் நிதானமான ஆய்வுப் பதிவுகளாக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகத்தளத்திலும் உரையாடல் தளத்திலும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன. மலையக சமூகத்தின் அரசியல், சமூக, கல்விக், கலை கலாசாரம் பண்பாடு , பொருளாதாரம் சார்ந்த ஆய்வு ரீதியான எழுத்துக்களாகவும் உரைகளாகவும் அவை அமைகின்றன. நான் எப்போதும் போலவே மலையக விடயங்களில் இற்றைப்படுத்தலுடன் (Update )இருக்கிறேன்.

இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?

2006 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த எனது ஆலோசனை சேவை நிறுவனம் கடந்த ஐந்தாண்டு காலமாக அரசியல் பணிகள் காரணமாக செயற்படாமல் இருந்தது. அதனை மீண்டும் இயங்கச் செய்து பணி செய்து வருகிறேன். ஊடகங்களில் பல கட்டுரைகளை எழுதி வருகிறேன். கொவிட் சூழல் காரணமாக எழுந்திருக்கும் இணைய வழி கலந்துரையாடல்களில் வாரந்தோறும் ஒரு தளத்தில் பேசுகின்றேன். அவற்றில் சிலவற்றை நானே ஒழுங்கும் செய்கிறேன்.

தொழிலாளர் தேசிய சங்கத்தில் மீண்டும் இணையப் போவதாக செய்திகள் கசிகின்றனவே...

அது பற்றி நான் உங்கள் உதயசூரியன் பத்திரிகைக்கே இதற்கு முன்னர் தெளிவாக எனது நிலைப்பாட்டைத் தெரிவித்து உள்ளேன். பாய்ச்சல் காட்ட மாட்டேன் என. தொழிலாளர் தேசிய சங்கத்தின் இரண்டாம் எழுச்சி எனபது திலகர் இல்லாவிட்டால் நிகழ்ந்தே இருக்காது. எனவே என்னையும் சங்கத்தையும் இணைத்து கதையாடல்கள் இடம்பெறுவது தவிர்க்க இயலாதது. நான் இப்போது நாகரீகமாக அதில் இருந்து விலகி இருக்கும் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டு ஒதுங்கி இருக்கிறேன். அந்த நாகரீகம் கருதியே சங்கத்தில் உள்ள பலரும் என்னோடு உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் தோட்டக் கமிட்டி தலைவர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள், அமைப்பாளர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், உயர்பீட உத்தியோகத்தர்கள் என எல்லோரும் அடங்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் 5 முதல் பத்துப் பேர்வரையான ஒரு குழுவினர் மாத்திரமே என்னோடு நேரடியாக பேசுவதில்லை.

ஆனால், அவர்கள் சதா என்னைப் பற்றி சிந்தித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவருகிறது. அந்த உரையாடலில் கலந்து கொள்ளும் யாராயினும் ஒருவர் எனக்கு அதனை அறிவிக்கிறார். இது எப்படியோ நடந்து விடுகிறது. இது தவிர நானாக யாரிடமும் எந்த விசயத்துக்ககவும் பேசவும் இல்லை அணுகவும் இல்லை. அதற்கான எந்தத் தேவையும் இப்போது எழவில்லை.

அப்படியாயின் நீங்கள் மீளவும் வந்தால் சிலர் விலகுவதாக தலைமைக்கு அறிவித்து உள்ளதாக தகவல் வந்துள்ளதே...

அந்த ஒரு சிலரைத்தான் நான் முன்னர் குறிப்பிட்டேன். அவர்களை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் தங்களது எதிர்ப்பை தன் பெயர் கொண்டு வெளிப்படுத்த முடியாத கோழைகள். ஏனெனில், 'இப்படி ஒரு செய்தி வந்துள்ளது. நான் எதிர்ப்பு இல்லை' என பலர் எனக்கு அழைப்பு எடுத்துப் பேசினார்கள். அவர்களிடம் நான் சொன்னது, 'இப்படி என்னிடம் பேசுவதற்கே உங்களிடம் நேர்மை இருக்கிறது. அதனால் நீங்கள் நிச்சயம் அந்தப் பட்டியலில் இல்லை' என்பதுதான். அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் கடைசிவரை அவர்கள் பெயரை வெளியே சொல்லாமல் செய்திகளைக் கசியவிடும் கோழைகள்.

அந்தக் கோழைகளை தலைமைக்கே கூட அடையாளம் காண முடியாது. அத்தகைய கோழைகள் நிச்சயமாக தொழிலாளர் தேசிய சங்க நித்திய உறுப்பினர்களாக இருந்திருக்க மாட்டார்கள். உண்மையான தொழிலாளர் தேசிய சங்கப் பற்றுக் கொண்ட யாரும் எனக்கு எதிர்நிலையில் இருக்க மாட்டார்கள் என்பது எனது பூரண நம்பிக்கை. ஏனெனில் சங்கத்தின் வளர்ச்சியில் எனது பங்களிப்பை அவர்கள் அறிவார்கள். எப்போதும் சங்கம் உடைந்து செல்வதை நான் விரும்பியவனல்ல. அதனால்தான் நான் ஒதுங்கி வந்தபோதும் கூட ஒருவரையும் கூட அழைத்து வரவில்லை. பெருந்திரளாக விலகி வரவிருந்த பலரையும் நான் தடுத்து நிறுத்தினேன் என்பதை அங்கே மனசாட்சியுடையவர்கள் அறிவார்கள். இப்போது கூட சங்கம் உடைந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். ஏனெனில் அதனை மீளக்கட்டமைக்க பட்ட சிரமங்களை நானே அறிவேன்.

சங்கத்தில் நீங்கள் இல்லாத இடைவெளி உணரப்படுவதாக நீங்கள் அறிவீர்களா?

ஓராண்டு கடக்கும் நிலையிலும் நீங்கள் ஊடகவியலாளராக என்னோடு இது குறித்து உரையாடுவதே சங்கத்தில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியின் குறியீடு தானே.

மலையக அரசியலிலும் இந்த இடைவெளி தெரிகிறது என நான் கூறினால்...

நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன். உள்நாட்டில் , வெளிநாட்டில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு உரையாடும் பலர் இந்த இடைவெளி குறித்து என்னுடன் பேசுகிறார்கள். அது நிரப்பப்பட வேண்டியது என்பதையும் நான் உணராமல் இல்லை. இடைவெளி உணரப்படும்போதே எழுச்சி உண்டாகும். இந்த இடைவெளியை உணர்ந்து எழும் எழுச்சியே அடுத்த கட்ட அரசியல் செல்நெறியாக வேண்டும் என்பதில் நான் தெளிவாக உள்ளேன்..அதற்கேற்ப எனது உரையாடல் வெளியை மேற்கொண்டு வருகிறேன்.

உங்களது அடுத்தத் திட்டம் என்ன ?

அரசியலில் 5 வருடங்கள் என்பது ஒரு யுகத்திற்கு ஒப்பானது. கடந்த தேர்தலுக்குப் பின்னர் ஒரு ஆண்டு கூட இன்னும் கடந்து விடவில்லை. கடந்த ஆண்டு இந்த நேரம் தீவிர பிரச்சாரம் இடம்பெற்ற காலம். அப்போது என்பெயரைக் கூறி தமக்கு வாக்குக் கேட்டுக் கொண்டவர்களும் இந்த பாராளுமன்றில்தான் இருக்கிறார்கள். ஓராண்டு ஆவதற்குள் என்னென்ன நடந்துள்ளது என்பதை மக்கள் அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு எதிராக எந்தக் காலத்திலும் செயற்பட்டவனும் இல்லை. செயற்படப் போவதும் இல்லை. காலம் வரும்போது எனது வகிபாகம் என்ன என்பது தெரியவரும். நான் ஒப்புக்கு பாராளுமன்ற அமர்வுகளுக்குப் போவதுமில்லை, அங்கே ஒப்புக்குப் பேசுவதும் இல்லை. எனது உரைகளுக்கும், பணிகளுக்கும், மக்களுக்கும் ஒரு இடைத்தொடர்பு இருந்தது. மக்கள் ஒவ்வொருவரும் அதனைத் தமது குரலாக உணர்ந்தார்கள். ஏனெனில் எனது வார்த்தைகள் இதயத்தில் இருந்து வரும். உதட்டில் இருந்து வந்து உளறாது.

இறுதியாக பாராளுமன்ற உறுப்பினர் பழநி திகாம்பரம் எப்போது உங்களோடு பேசினார்? என்ன பேசினார் ?

ஆறுமுகன் தொண்டமான் இறந்து விட்டதாக தொலைபேசியில் எனக்கு கூறியது அவர்தான். அதற்கு அடுத்த நாள் பாராளுமன்ற முன்றலுக்கு ஆறுமுகன் தொண்டமானின் தேகம் கொண்டு வந்தபோது ஓரிரண்டு வார்த்தைகள். அதுதான் அவரும் நானும் பேசிக் கொண்டதும் சந்தித்துக் கொண்டதுமான கடைசி தருணம் என்பது எனக்குத் தெளிவாக நினைவில் உள்ளது.

நன்றி - உதயசூரியன் / 12.08.2021

'சமூக நீதி' கோரிக்கையாக மாற வேண்டிய நீதிக்கான கோஷங்கள்

மயில்வாகனம் திலகராஜா (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

கடந்த இரண்டு வாரங்களும் மலையகத்தில் மட்டுமல்லாது மலையகத்துக்கு வெளியேயும் இலங்கையில் 'நீதி' கோரிய கோஷங்கள் எழுந்திருந்தன. அந்த கோஷத்தை முன்னிறுத்தச் செய்தது ஒரு சிறுமியின் உயிர். அந்த சிறுமியின் துர்பாக்கிய நிலை மரணத்துக்கு நீதி வேண்டிய கோஷங்களுக்கு மத்தியில் 'அரசியல்' நிகழ்ச்சி நிரல்களும் தம்மைப் பிணைத்துக்கொண்டன என்பது வெளிப்படை. ஆனால், அதனையும் தாண்டிய சமூக 'உணர்ச்சி' நிலை மலையகத்தில் ஆத்மார்த்தமாக மேம்பட்டு நின்றது.

மலையகத்தில் மக்களால் முன்வைக்கப்பட்ட 'நீதி வேண்டும்' கோஷம், அரசியல் - பணபலங்களைக் கொண்டு மறைக்கப்பட்டிருக்கக்கூடிய மரணத்தை நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்தி இருக்கிறது. சம்பவம் நடந்து பத்து நாட்களாக உயிருக்குப் போராடிய குழந்தையை வைத்தியசாலைக்குச் சென்று பார்க்கத் துணியாத, அப்போது விசாரணையைத் துரிதப்படுத்துங்கள் என காவல் துறையைத் தூண்டத் துணியாத, மரணத்துக்குப் பின் நீதி கேட்டாலும் அதற்காக பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பாக சட்டத்தரணிகளை நியமிக்காத மலையக அரசியல் பிரதிநிதிகள் மத்தியில் அந்த சிறுமிக்காக தன்னார்வமாக முன்வந்து மன்னறில் ஆஜரான மலையக சட்டத்தரணிகள், இந்த வழக்கிற்கு வெளியே ஒன்றை ஆழமாக உணர்த்தி நிற்கிறார்கள்.

அது மலையகம் எனும் 'உணர்வு'. உணர்ச்சி நிலையில் ஓங்கி நிற்கும் சமூகத்தை உணர்வுநிலையில் புரிந்து கொண்டு செயற்படும் தலைமைக்கான வெற்றிடம் தாராளமாகவே வெளிப்பட்ட தருணம் இது.

இந்தப் பிரச்சினைகளின் பின்னணிகளை நீதிமன்றம் ஆராய்வதற்கு முன்னமே தீர்ப்பெழுதிய தனிநபர்கள், நிறுவனங்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு, பிரச்சினைக்கு பின்னணியாக இருந்திருக்கக் கூடியதான காரணங்களைக் கண்டறிவதும் அவற்றுக்கான தீர்வைத் தேடுவதன் ஊடாக இது போன்றதோர் இன்னுமொரு அவலமும், மரணமும் மலையகத்தில் நேராதிருப்பது எவ்வாறு என சிந்திப்பதே சமூகத்தின் பொறுப்பாகிறது.

ஒட்டு மொத்த இலங்கையுமே சிறுவர் தொழிலாளர்களை அனுமதித்துக் கொண்டிருப்பதாக பல புள்ளிவிபரங்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக வெளி வந்து கொண்டிருக்கிறது. அவற்றை இங்கே அலசி ஆராயாவிட்டாலும் அந்த புள்ளி விபரங்கள் சொல்லும் தகவல் முக்கியமானது.
மலையகத்தில் மட்டுமல்ல மலையகத்துக்கு வெளியேயும் இலங்கையில் இத்தகைய பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது அந்தச் செய்தி.

மலையகத்தில், இப்போது நடந்திருப்பதுதான் முதலாவது சம்பவமும் அல்ல. இதற்கு முன்னர் நடந்தபோது 'நீதி வேண்டும்' கோஷங்கள் மலையகத்தில் எழும்பாமலும் இல்லை. இப்போது மலையகம் நிற்கும் புள்ளியும் அப்போது நின்ற புள்ளியும் ஒன்று தான். இது மலையகம் நிற்க வேண்டிய புள்ளியல்ல, அசைய வேண்டிய புள்ளி என்ற நிலையில் இருந்து விடயங்களை அலசி ஆராய வேண்டியது சமூகக் கடமையாகிறது.

இவ்வாறு சிறுவர்கள், பெண்கள் வீட்டு வேலைக்குச் செல்லும் நிலை ஏன் உருவாகிறது என்பதற்கு பொதுவானதும் உண்மையானதுமான ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அது வறுமை. மலையகப் பெருந்மோட்டப் பகுதிகளில் வறுமை நிலவுகிறது என்பதற்கான குறிகாட்டியாக சிறுமியின் மரணம் இருந்துவிட முடியாது. இலங்கைத் தொகை மதிப்பு புள்ளிவிபரத்திணைக்களம், மத்தியவங்கி அறிக்கைகள் தமது விபரப்பட்டியலை துறைசார்ந்து மூன்றாக வகுத்துக்கொண்டுள்ளன. அவை நகரம் (Urban), கிராமம் (Rural), தோட்டம் (Estate) என்பதாகும்.

இதில் பொருளாதார பிரதிகள் தோட்டத்துறையில் உயர்வான பதிவுகளைச் செய்ய சமூகக் குறிகாட்டிகள் மோசமான பிரதிகளைச் சுட்டிக்காட்டுவதனை அவதானித்தல் வேண்டும். நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் சுதந்திரத்துக்கு முன்பு இருந்த காலம் தொட்டே உயர்வான பதிவுகளைக் காட்டிவரும் தோட்டத்துறை தேயிலை ஏற்றுமதி இன்றுவரை கணிசமான பெறுமதியைக் கொண்டே காணப்படுகிறது. இலங்கைத் தேயிலை ஏற்றுமதி 2021 இல் 650 மில்லியன் அமெரிக்க டொலர் என பதிவாவதுடன், இலங்கையின் விவசாய ஏற்றுமதிப் பொருட்களில் 52வீதத்துக்கும் அதிகமாக தேயிலையே இடம்பெறுகிறது. இவை சிறுதோட்டம், பெருந்தோட்டம் இரண்டும் கலந்த ஏற்றுமதிப் பெறுமதிதான் என்றாலும் இலங்கையில் இன்று சிறுதோட்டங்களாக பகிரந்தளிக்கப்பட்டவையும் பெருந்தோட்டங்களாக இருந்தவையே. அதுவும் இந்த இருநூறு வருடகால வரலாற்றின் பகுதிதான்.

இலங்கைக்கு இலவசக்கல்வி, இலவச சுகாதாரம், ரயில்போக்குவரத்து, பாதை வலையமைப்பு, வங்கிக் காப்புறுதி துறை அபிவிருத்தி வலைபின்னல், உட்கட்டுமான அபிவிருத்தி என காலனித்துவ காலத்தில் இருந்தே அதற்கான அடிப்படையைக் கொடுத்தது பெருந்தோட்டத் துறையே என்பதனை யாராலும் மறுக்க முடியாது. விவசாயத்துறை தொழிற்படையில் 62.6 வீதம் தோட்டத்துறை உழைப்பாளர்களே உள்ளனர் என்றும் பதிவாகிறது.

இந்த தொழிற்படையின் இருநூறு வருடகால உழைப்புக்கு மாற்றீடாக பெருந்தோட்டத் துறை உழைப்பாளர் சமூகத்துக்கு இலங்கை வழங்கியுள்ள பரிசு வறுமையில் உயர் இடத்தில் இருக்கிறார்கள் என்பதே. தலைக்கான வறுமைச் சுட்டி எனும் தரவுகளில் நகரத்துறை 1.9 ஆகவும் கிராமத்தில் 4.3 ஆகவும் உள்ள தகவல்கள் தோட்டத்துறையில் 8.8 புள்ளியாக அமைந்து தோட்டத்துறையில் வறுமை உச்சம் என காட்டி நிற்கிறது. எனவே தோட்டத்துறை என்பதை பொருளாதார 'செழுமையும்' சமூக 'வறுமையும்' கொண்ட துறையாக பேணுவதில் இலங்கை அரசு இருநூறு வருட காலத்தில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.

இந்த பின்னணியில், சிறுமியின் மரணத்தில் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜராக்கியபோது சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக ஆஜரான பிரதி மன்றாடிகள் நாயகம் கூறியுள்ள விடயம் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. 'பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வீட்டு வேலைக்கு சிறுவர்களைக் கொண்டுவருவது ஒரு ஆட்கடத்தல் வியாபாரம் போலவே நடைபெற்று வருகிறது'.

இந்தக் கூற்று யாரால் யாருக்குச் சொல்லப்பட்டது என்பது வரலாற்று முக்கித்துவத்துமிக்கது. இலங்கையின் சட்ட வழிகாட்டலுக்கு பொறுப்பான சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு மலையகச் சிறுவர்கள் ஆள்கடத்தல் முறையில் தலை நகருக்கு அழைத்து வருவது தெளிவாகத் தெரிந்தும் அதனைத் தடுப்பதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்காமலேயே இருந்து வருகிறது என தெளிவான பொருள் கொள்ளலாம்.

இப்படி அரசின்பக்கம் கவனிப்பாரற்ற சமூகமாக மலையகத் தோட்ட சமூகம் காலங்காலமாக இருந்துவரும் நிலையில், இந்த மக்களுக்காக முன்வைக்கப்படும் அரசியல் நிலைப்பாடு தோட்டத் தொழிலாளர்களுக்கு வெளியே தனது கவனத்தை பெரிதாக திருப்பாத நிலையிலேயே இயங்கி வந்துள்ளது.

தொழிற்சங்க அங்கத்தவர்களின் பலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் அரசியலாகவே அந்தக் கட்டமைப்பு இயங்கி வந்த நிலையில் அந்தத் தொழிற்சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனையோடு அரசியல் கட்சியைக் கட்டமைப்பதில் தாமதித்தே வந்துள்ளது.

1992 ஆம் ஆண்டுக்குப்பின்னரான தோட்டத் தொழில் கட்டமைப்பு மாறி வந்துள்ள நிலையில் அப்போதிருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆறு லட்சமாக இருந்து 2020 ஆம் ஆண்டு ஆகும் போது ஒரு லட்சம் எனும் அளவுக்கு குறைந்துள்ளது. ஆனாலும் பெருந்தோட்ட நிறுவனங்களும் கட்டமைப்பும் அவ்வாறே செயற்பட்டு வருகின்றன. அப்படியாயின் அந்த தொழிற்படையில் சேரந்திருக்க வேண்டிய தோட்ட சமூகப்பிரிவினர் ஆண்டுக்கு சராசரியாக 15,000 வீதம் வேறு துறைகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அடுத்த தலைமுறையினர் தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை என வாதிட்டாலும் அந்த வாதம் சரி என்றாலும் கூட அவ்வாறு தோட்டத் தொழிலில் இணையாத அல்லது இணைய வாய்ப்பு வழங்கப்படாத எல்லோரும் கல்வித்துறையில் சாதித்தவர்களாக உயர் தொழிலுக்கு சென்றவர்கள் இல்லை. அதன் வீதாசாரம் குறைவானது. அவர்களில் முறைசாராத தொழில்களுக்கு சென்றவர்களின் எண்ணிக்கையே அதிகம். இந்த காலப்பகுதியில்தான் வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைப் பணிகளுக்கும், தலைநகர் கொழும்பில் வீட்டு வேலைப் பணிகளுக்கும் என பெண்கள் படை எடுக்கலாயினர். அதேபோல கடைச்சிப்பந்திகளாகவும் (இந்தத் துறையில் ஏற்கனவே ஒரு நாட்டம் மலையக இளைஞர்களிடையே இருந்துவந்தது) இன்னோரன்ன உடல் உழைப்பாளர்களாகவும் மலையக இளைஞர்கள் வெளியேறத் தொடங்கினர்.

இவர்கள் தமது பெற்றோருடன் தொடர்ந்தும் வாழ வகையற்றவர்களாக வீடுகளில் இருந்து வெளியேற நேர்ந்தது. சிறுக சிறுக ஆரம்பித்த இந்த முறைசாரா துறையில் ( informal sector) தொழில் செய்வோர் முறைசார் தோட்டத்துறையில் (formal Estate sector) தொழில் செய்வோர் எண்ணிக்கையை விட அதிகமாகும். அந்த அதிமான தொகையை ஒரு மதிப்பீட்டின் மூலம் ஊகிக்கலாமே தவிர அதன் சரியான தரவுகளைப் பெற்றுக்கொள்ள எந்த ஒரு பொறிமுறையும் இல்லை.

அதனால்தான் கொரொனா பரவல் தொடங்கியதும் 7000 பேர் லொறிகளில் ஏறி மலையகத்துக்கு வந்துவிட்டனர் என அரசியல் பிரதிநிதிகளால் கற்பனை கணக்கு காட்ட முடிந்தது அல்லது ஒட்டுமொத்த மலையக சனத்தொகையில் ஒரு லட்சமே தொழிலாளர்கள் ஏனையோர் தொழிலாளர்கள் இல்லை என வாய்ச்சவடால் விட முடிந்தது.

அந்த மிச்சம் பேர் என்ன செய்கின்றனர் என அறிய முடியாத கட்சிக் கட்டமைப்பைக் கொண்ட தலைவர்களால் அந்த வகுதியில் ஒருவராக இவ்வாறு அவலமாக இறந்துபோன சிறுமிகளுக்காக நியாயமான விசாரணையைக் கோர முடியுமே தவிர நல்வாழ்வுக்கான திட்டங்களைத் தீட்ட முடியாது. தரகர்களை கண்டால் தாக்கச் சொல்ல முடியுமே தவிர, அதனால் வரக்கூடிய விளைவுகளை உணரமுடியாது.

தரகர்கள் உருவாகாமல் இருக்க வழி சொல்லவும் தெரியாது. வீதியில் இறங்கிப் போராடுவதற்கு மக்களே தலைவர்களுக்கு வழிகாட்டுகின்றனர் என்பதனை நன்கு அவதானித்தால் புரியும். மாறாக மக்களுக்கு வழிகாட்டும் தலைமைக்காக மலையகத் தமிழ் மக்கள் காத்திருக்கும் நிலையே உள்ளது. மலையகத்துக்கு வெளியே வந்த 'நீதி வேண்டும்' கோஷங்கள் எல்லாமே மலையக சமூகம் மீதான அக்கறையில் வந்ததில்லை என்ற கசப்பான உண்மையை உணர்ந்தவர்களாக மலையகத்துக்கு வெளியேயான நேச சக்திகளை சரியாக அடையாளம் காணுதலும் அத்தகைய தலைமையின் தகைமைகளில் ஒன்றாயிருத்தல் வேண்டும்.

இந்த நிலையிலேயே இறந்துபோன சிறுமிக்காக 'நீதி வேண்டும்' கோஷம் எழுப்பும் மலையகத்தின் இளைய தலைமுறையினர் 'சமூக நீதிக்கான கோரிக்கையாக' அதனை மாற்றியமைக்கும் செயற்பாடுகளை இலக்கு வைத்து செயற்படுபவர்களாக மாற வேண்டிய காலம் எழுந்துள்ளது.

சிறுமியின் அவல மரணத்துக்கு வறுமைதான் காரணமெனில் அந்த வறுமையை சரியாக அடையாளம் கண்டு அதற்கு தீர்வு தேடும் அரசியல் தலைமைத்துவத்தின் அவசியம் குறித்து சிந்தித்தல் வேண்டும். மலையகத்தில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமை எல்லையைக் கடந்தும் தோட்ட எல்லையைக் கடந்தும் வெளியேறிவிட்டனர். அவர்களின் எண்ணிக்கை சுமார் லட்சம் அளவினைக் கொண்டது. மலையகத் தோட்டப் பகுதியில் வாழ்வோர் எண்ணிக்கை 9 இலட்சம் அளவாக உள்ளது.

அவர்களுள் வறுமையின் எல்லையைக் கடந்து வெளியேறுவோர் 10 சதவீதமாகவும் வறுமைக்கு மத்தியிலும் போராடி முன்நகர்வோர் 30 சதவீமாகவும் வறுமை நிலையில் சமாளித்து வாழ்க்கை நடாத்துவோர் 40 சதவீதமாகவும் உள்ளநிலையில் வறுமையில் இருந்து மீளமுடியாத நிலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டோர் வீதம் 10 சதவீதம் மாத்திரமே (இது ஒரு தோட்டப்பிரிவு மட்டத்தில் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு பொதுவாக பொருந்திவரக்கூடிய முடிவும் கூட).

ஆனால், இந்த பத்து சதவீத பகுதியையே ஒட்டமொத்த மலையகத் தோட்டத் துறைச் சமூகமாக சித்திரிக்கப்படுகிறது. இந்த பத்து சதவீத்தில் இருந்தே சிறுவர் தொழிலாளர்களும், முதியோர் தொழிலாளர்களும், என இக்கட்டான தொழில்களுக்குச் செல்லத் தள்ளப்படுகின்றனர்.

அவர்களை அடையாளம் காணவும் உதவிகள் செய்யவும் ஒரு பொறிமுறை தேவை அவ்வளவுதான். இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இன்றைய 'நீதி வேண்டும்' கோஷம் ஒரே ஒரு சிறுமிக்காக எழுந்ததாக இருந்துவிடக் கூடாது. இதுபோன்ற இன்னுமொரு சிறுமிக்கு நேர்ந்துவிடாத 'சமூக நீதிக்கான' அரசியல் களம் குறித்த சிந்தனையும் செயற்பாடுகளுமே மலையகத்தின் அடுத்த கட்ட அரசியலாதல் வேண்டும். அதனை முன்னெடுக்கும் பாரிய பொறுப்பினை மலையக இளையத் தலைமுறையினர் தமது தலையில் சுமக்கத் தயாராதல் வேண்டும்.