மலையகத் தமிழர் : அர்த்தமுள்ள குடியுரிமையை நோக்கி

மயில்வாகனம் திலகராஜ்- மு.பா.உ

(இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரினரின் இலங்கைக் குடியுரிமை பறிக்கப்பட்ட நவம்பர் 15 ம் திகதியை நினைவு கூர்ந்து மலையக அரசியல் விழிப்புணர்வுக் கழகம் ஒழுங்கு செய்த உரையரங்கத்தில் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் ஆற்றிய உரையின் தொகுப்பு)

இலங்கை சுதந்திரமடைந்ததோடு பிரித்தானியர்கள் இலங்கையை விட்டு வெளியேற, யாரெல்லாம் இலங்கைப் பிரஜைகள் என தீர்மானிப்பதற்காக இலங்கையின்  முதலாவது நாடாளுமன்றம் '1948 ஆம் ஆண்டு 18 ஆம்இலக்க குடியுரிமைச் சட்டத்தை' நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட நிபந்தனைகளின் பிரகாரம் லட்சக்கணக்கான  இந்திய வம்சாவளியினர் இலங்கைக் குடியுரிமையை இழந்தனர்.

இதனை அடுத்து 1949 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில்  குடியுரிமை இல்லாதவர்கள் வாக்குரிமையை இழப்பார்கள் என்ற சர்த்துச் சேர்க்கப்பட்டதால் அதற்கு முந்தைய 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் வாக்களித்து 7 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தமது வாக்குரமையையும் இழந்தனர். இந்த இரண்டு சட்டங்களும் 'குடியுரிமைச் சட்டம்', 'பாராளுமன்றத் தேர்தல் சட்டம்' எனும் பெயர்களில் இந்திய வம்சாவளியினரின் 'பிரஜா உரிமையைப்' பறிப்பதற்கான சட்டங்களாகவே அதைந்தன என்பது தெளிவு.

இந்த இரண்டு சட்ட ஏற்பாடுகளின்போதும் மேல்தட்டு இந்தியர்களினதும் பாகிஸ்தானியர்களினதும்  ( இந்தியாவுடன் பாகிஸ்தான் சேர்ந்து இருந்த போது இலங்கை வந்தவர்கள்) பிரஜாவுரைமையும் பறிபோனதால் அவர்களுக்கு மீளவும் வழங்கும் வகையில், அதே 1949 ஆம் ஆண்டு 3 ஆம்இலக்க இந்திய - பாகிஸ்தான் பிரஜைகளுக்கான குடியுரிமைச்  சட்டத்தினைக் கொண்டுவந்து, அதன் ஊடாக விண்ணப்பித்து குடியுரிமையைப் பெறலாம் எனும் மாயையை உருவாக்கி,  இந்திய மேல்தட்டு வர்க்கத்துக்கும்   மீளவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் இந்திய வம்சாவளியினரில் தோட்டத் தொழிலாளர்களான பாட்டாளி வர்க்கத்தினரின் குடியுரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் இந்தியர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அங்கேயே திருப்பி அனுப்புதல் என முடிவுக்கு வந்தது இலங்கை அரசு.

இதன்படி 1954 ( நேரு - கொத்லாவல ), 1964 (சிறிமா - சாஸ்த்திரி ) 1974 (சிறிமா - இந்திராகாந்தி )  ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன்மூலம் இவர்கள் இலங்கையர்கள் இல்லை என்ற வாதமும் அவர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவது என்ற திட்டமும் நடைமுறைக்கு  வந்தது.  1983 ஆம் ஆண்டு கலவரங்களுடன் இலங்கை உள்நாட்டு யுத்தம் உக்கிரமடைய, ராமானுஜம் கப்பல் சேவை நிறுத்தப்பட்டதால் சிறிமா - சாஸ்த்திரி ஒப்பந்தத்துக்கு அமைவாக இந்தியா ( தாயகம் ) திரும்புதல் தடைபட்டது.

இலங்கையில் ஏற்பட்டிருந்த இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியாக  இந்திய மத்தியஸ்த்தத்துடன் பூட்டான் நாட்டின் தலைநகரமான ‘திம்பு’ வில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 'நாடற்ற தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்' எனும் தமிழர் தரப்பின்  கோரிக்கையின் பயனாக  ( மலையகத் தமிழர்களுக்கு என நேரடியாக குறித்துரைக்காதபோதும் ) '1986 ஆம் ஆண்டு ஐந்தாம் இலக்க நாடற்றவர்களுக்கான குடியுரிமை சட்டம்' நிறைவேற்றப்பட்டது.

இதுவரை, மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது எனும்  எண்ணத்திலேயே   இருந்த அரசு, இந்தச் சட்டத்தில் இந்த மக்கள் 'நாடற்றவர்கள்'  ( Stateless) எனும் அடையாளத்தை சுமத்தி, இலங்கைக் குடியுரிமை வழங்கியது. இதன் பின்னணியில் மலையகத்தையும் தளமாக இணைத்து இயங்கிய ஈரோஸ் அமைப்பின் கருத்து நிலையே காரணம் என்பது நன்றியுடன் நினைவுகூரப்படல் வேண்டும். இந்தச் சட்டத்தின் தொடர்ச்சியாக 1988 ஆம் ஆண் டு திருத்தம் ஒன்றை முன்வைத்து ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு  வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் அப்போதைய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு வேட்டைக்கு இவர்களின் வாக்குகள் அவசியமாக இருந்தது என்பதே உண்மையான காரணமாகும்.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த  இந்தியாவுக்கு திரும்பிச்செல்லல் பட்டியலில்  இந்திய கடவுச்சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டதால் இலங்கையிலேயே வாழ நேர்ந்த  91000 பேருக்கான குடியுரிமையை வழங்குவதற்காக  2003 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இந்திய வம்சாவளியினருக்கான குடியுரிமை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்போதும் இந்த மக்களை இந்திய வம்சாவளியினர் என அடையாளப்படுத்தவே இலங்கை அரசு முனைப்பு காட்டியுள்ளது.

இந்தச் சட்டத்திற்கான ஒரு திருத்தமாகவே 2009 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்கச்சட்டம் கொண்டுவரப்பட்டு,  நாடற்றவர் நிலையில் மலைநாட்டுப் பகுதியில் இருந்து வன்னி, கிளிநொச்சி  மாவட்டங்களுக்குக் குடியேறி,  அங்கிருந்து யுத்தம் காரணமாக அகதியாக தமிழ்நாட்டுக்குள் அகதிகளாகச்  சென்று சேர்ந்த  28459 பேருக்கு, இலங்கைத் திரும்பினால் இலங்கைக் குடியுரிமை வழங்கப்படும் என்ற ‘ஏற்பாடு’ செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் மலையகத் தமிழரின் குடியுரிமை சம்பந்தமான சட்டம் ஒன்றுக்கான தேவை எழவில்லை.

ஆனாலும்  1948 ல் பறிக்கப்பட்ட குடியுரிமை வெவேறு கட்டங்களில் வெவ்வேறு பெயரிலான வேறுபட்ட நோக்கங்களிலான சட்டங்களின் ஊடாக திரும்ப வழங்கப்பட்டதே தவிர,  இவர்களிடம் பறிக்கப்பட்ட குடியுரிமைக்காக மன்னிப்புக் கோரலுடன், உண்மையில் பிரஜாவுரிமையை வழங்க வேண்டும் உந்துதலுடன் உள்நோக்கத்துடன் எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை 1949 முதல் 2009 வரையான குடியுரிமையை மீள் வழங்கிய சட்டங்களின் பெயர்களைக் கொண்டே இதனை உறுதி செய்ய முடியும்.

எனவே 2009 என்பது ஏதோ ஒரு வகையில் தீர்க்கப்பட்ட மலையகத் தமிழர் குடியஉரிமைப் பிரச்சினை நிறைவுக்கு வந்த ஆண்டு எனலாம். அதேநேரம், இலங்கையில் இரண்டு தமிழ் தரப்புகள் ( இலங்கைத் தமிழர் - மலையகத் தமிழர்) மேற்கொண்டிருந்த நாட்டுரிமைக்கான போராட்டங்கள் முடிவுக்கு  வந்த ஆண்டு 2009 என்றும் கூறலாம். இந்தக் கட்டத்தில் இன்னுமொரு வரலாற்று வடிவையும் பதிவு செய்து செல்வது நல்லது.  இந்திய வம்சாவளி மலையகப் பெருந்தோட்டத் தமிழ் சமுதாயத்தினரை  இலங்கையின் உள்நாட்டவர்களாக இலங்கை  ஏற்றுக் கொள்வது இல்லை எனும் ஒரு நிலைப்பாடு குறித்த பிறிதொரு அம்சத்தையும் சுட்டிக் காட்டுவது பொருத்தமானது.

 

1). 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழு ஏற்பாட்டில் ‘சர்வஜன வாக்குரிமை’ இலங்கையின் ஏனைய இன மக்களைப் போலவே இந்திய வம்சாவளி மக்களுக்கும் கிடைத்த போதும் அது பிரித்தானியர்களின் ‘இலங்கையில்’ வழங்கப்பட்டதாக எண்ணிக்கொண்ட உள் நாட்டு சக்திகள், இந்த மக்களை உள்நாட்டு நிர்வாகத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது.
2). 1987 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டபோது அதற்கு உதவும் அடுத்த படிநிலையாக (Tier), அதுவரை நடைமுறையில் இருந்த கிராமசபை (கம்சபா) முறைமையை பிரதேச சபையாக மாற்றியமைக்க  தீர்மானம் எடுக்கப்பட்டே பிரதேச சபைகள் சட்டம் உருவாக்கப்பட்டது.

அதற்கு முன்பதான கிராமசபை (கம்சபா) முறைமைக்குள்  மலையகப் பெருந்தோட்டத்துறை மக்களை ஆரம்பத்தில் இருந்தே உள்வாங்கிக்கொள்ளாத  அதே நேரம் ‘கிராம சபை’ முறைமை மாற்றப்பட்டு, 1987 ஆம் ஆண்டு  பிரதேச சபைகள் முறையாக மாற்றப்பட்டுச்  சட்டம் இயற்றப்பட்டபோது அந்தச் சட்டத்திலேயும்  ( 33 வது பிரிவு ) தோட்டப் பகுதிகளுக்கு ‘பிரதேச சபைகள்’ சேவை வழங்க முடியாது என இருந்த கிராம சபை முறைமையில் இருந்த அந்த பாரபட்சம் அப்படியே எழுதப்பட்டது.

மாகாண சபைகள் மூலம் தமக்கு அதிகார பகிர்வைப் பெற்றுக் கொள்ள முனைந்த வடகிழக்கு தரப்பு,  மறுபக்கமாக மாற்றமுறும் கிராம சபை முறைமையில்  ஏற்கனவே உள்வாங்கப்பட்டிருக்காத  மலையகப் பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகத்தினருக்கு  பிரதேச சபைச் சட்டத்தில் இருந்தும் விலக்களிக்கப்படுகின்றது என்பதையும்  அதிகார பகிர்வில் அவர்கள் துண்டிக்கப்படுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவில்லை. ஒருபக்கம் 'மாகாண சபை மூலம்' தமக்கு அதிகாரப் பகிர்வை பெறும் அதே பொறிமுறைக்குள் சகோதர மலையகத் தமிழ் சமூகத்துக்கு 'பிரதேச சபையில்' கூட அதிகாரப் பகிர்வு மறுக்கப்படுகின்றது என்பது வடக்கு கிழக்கு தமிழர் தரப்பு கிஞ்சித்தும் கவனிக்கவில்லை. வடகிழக்குத் தரப்பு மாத்திரமல்ல,  அப்போது  அமைச்சுப்பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருந்த மலையகத் தலைமைகளும் வாளாவிருந்துள்ளன என்பது  மலையக அரசியலின் மிகமிக துரதிஷ்ட்டமான வரலாற்று வடுவாகும்.

இறுதியாக 2018 ஆம் ஆண்டே பிரதேச சபைகள் சட்டம் திருத்தப்பட்டு, தோட்டப் பகுதிக்கும் சேவையாற்றலாம் எனும் நிலைமை உருவாக்கப்பட்டது. சுருங்கச் சொன்னால் மலையகப் பெருந்தோட்டச் சமூகம் இலங்கையின் உள்நாட்டு நிர்வாகத்தில் அதிகாரம் பெற்ற ஆண்டு 2018 தான் என்பதுவே உண்மை.

இப்படியாக 1948 முதல் 2018 வரை வெவ்வேறு வடிவங்களில் பெற்றுக் கொள்ளப்பட்ட, பறிக்கப்பட்ட குடியுரிமையானது பல்வேறு காலகட்டங்களில் மீளக்கிடைக்க கிடைக்கப்பெற்றாலும் அவை அர்ததமுள்ள குடியுரிமையாக அல்லாமல் வாக்களிக்கும் உரிமையை மாத்திரம் வழங்கும் ஒரு பிரஜா உரிமை வடிவமாகவே வழங்கப்பட்டுள்ளது என்பதே இன்றைய மலையகத்தின் இக்கட்டான நிலைக்கு பிரதான காரணமாகும.

சுமார் நாற்பது வருடங்களாக நாடற்றவர்களாக வைக்கப்பட்டு இருந்தவர்கள் நாட்டின் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் தேசிய நிர்வாகப் பொறிமுறைக்குள் இன்னும் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. கிராமசேவகர் பிரிவுகள் முறையாக வழங்கப்படவில்லை. இன்னுமே கூட தனியா கம்பனிகளின் தோட்ட  நிர்வாகத்தால் அவர்களது சமூக நிர்வாகம் கட்டுப்படுத்தப்படுகின்றது.

காலம் தாழ்த்தி 'இலவசக் கல்வி' அவர்களுக்கு வழங்கப்பட்டாலும் பெருந்தோட்டப் பாடசாலை அலகு எனும் ஓர் அலகினால் பாரபட்சமாகவே அதன் நிர்வாகம் இன்றும்கூட மேற்கொள்ளப்படுகின்றது. அவர்கள் வாழும் பகுதிகளின் வீதிகள் ‘தோட்ட வீதிகள்’ என கணக்கிடப்பட்டு உள்நாட்டு நிர்வாக வீதி கட்டமைப்பில்  சேர்க்கப்படாமல் உள்ளது. ஆபத்தான முறைமையில்  பழைய லயன் குடியிருப்புகளுக்குமின்சாரம் வழங்கப்பட்டு அடிக்கடி அவை பற்றி தீபற்றி எரியும் ஆபத்தை எதிர் கொண்டு உள்ளன.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றாக தோட்ட சுகாதார முறைமை என ஒரு முறைமையின் கீழ் தேசிய சுகாதார முறைமைக்குள் உள்வாங்கப்படாத சமூகமாகவே வைக்கப்பட்டுள்ளனர். அதனை மாற்றுவதற்கான முழுமையான உத்தியோகபூர்வ அறிக்கை 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளபோதும் அதனை அடுத்து ஓர் அடியும் நகராமல் உள்ளது. இந்தச் சுகாதார முறைமை மாற்ற விடயம் உச்சகட்டமாக பாராளுமன்றிலும் குழு அறையிலும் பேசப்பட்டுவந்த 2015 - 2020 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார கொத்தணிகளை உருவாக்க்குவதற்கான தேசிய கொள்கை வகுப்பின்போது தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தில்,  "இந்த ஆரம்ப சுகாதார கொத்தணி முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் பெருந்தோட்டப்பகுதி யில் வாழும் குடிபெயர்ந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பமும் (Plantation ‘migrant Workers’ and their families) நன்மையடைவார்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே கொள்கை வகுப்பாளர்களின் பார்வையில் இன்னும் இலங்கையின் குடிமக்களாக அல்லாது குடிபெயர்ந்த (இந்தியாவில் இருந்து) வந்த தொழிலாளர் களாகவே (Migrant Workers ) தெரிகிறார்கள் என்பது இந்த மக்கள் இன்னும் இந்த நாட்டில் அர்த்தமுள்ள குடிமக்களாக மாற்றப்படவில்லை என்பதன் அடையாளத்துக்கான ஒரு சான்றாகும். இதனை மனதில் கொண்டு  2020 ஆண்டுக்குப் பின்னரும் நிவாரண அரசியலில்  தங்கியிருக்காது,  தமது 'அர்த்தமுள்ள குடியுரிமையைப்' ( Meaningful Citizenship) பெறுவதற்கான அரசியல் நகர்வை முன்கொண்டு செல்லவேண்டிய ஒரு யுகத்தை மலையக அரசியல் களம் வேண்டி நிற்கிறது.