தொழிற்சங்கம் தவிர்ந்த வேறு துறையை நாடாதவர் செபஸ்தியன்

-அனுதாபச் செய்தியில் முன்னாள் எம்.பி.திலகர்

தொழிலாளர் தேசிய சங்கத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை இணைந்திருந்த இவர் தொழிற்சங்கம் தவிர்ந்த வேறு ஒரு துறையை தன் வாழ்நாளில் நாடாதவர். அத்தகைய அனுபவமிக்க ஒருவரின் இழப்பு மலையக தொழிற்சங்க இயக்கத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்து உள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் முதன்மை உறுப்பினர்களில் ஒருவருமான ஜே.எம்.செபஸ்தியன் அவர்களின் மறைவினை அடுத்து அவர் விடுத்திருக்கும் அனுதாபச் செய்மியிலேயே இவ்வாறு தெரிவித்து உள்ளார். அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச்செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய ஜே.எம். செஸ்தியன் பாடசாலைக்கல்வியை முடித்ததும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் தொழிற்சங்கத்துறை பயிலுனராக இணைந்தவர். அமரர் வி.கே.வெள்ளையன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்துவந்து தொழிலாளர் தேசிய சங்கத்தை உருவாக்கியபோது அவரோடு இணைந்து கொண்டவர்.

இவர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தினராக இல்லாமல் இருந்தாலோ அல்லது இவரது மருமகன் எனது நண்பன் ரொபர்ட் ( மொனரகலை பஸ் விபத்தில் காலமாகிவிட்டார்) தொழிலாளர் தேசிய சங்கத் தலைமைக் காரியாலயத்தில் தங்கி 92/93 காலப்பகுதியில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் என்னோடு சக மாணவனாக உயர்தரம் கற்றிருக்காவிட்டாலோ, எனக்கும் 'தொழிலளர் தேசிய சங்கத்துக்கும்' தொடர்பு ஏற்பட்டு இருக்காது.

அந்தவகையில் 1992 முதல் 2020 வரையான 28 ஆண்டு கால தொடர்பை தொழிலாளர் தேசிய சங்கத்துடன் ஏற்படுத்திய பெரியவர் செபஸ்டியன் அவர்களது இழப்பு எனக்கு பெரும் வேதனை அளிப்பது.

2007 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக நான் இணைந்து கொண்ட நாளில் இருந்து 2020 ஆண்டு ஒதுங்கிக் கொண்ட நாள் வரை பிரதிப் பொதுச் செயலாளர் பதவி வகித்தபோதும் உண்மையில் அந்த காலப்பகுதி முழுவதும் நிதிச் செயலாளராக பதவி வகித்த செபஸ்தியன் அவர்களுக்கு உதவியாளராகவே இருந்தேன்.

மாதாந்த கணக்காய்வு, வருடாந்த கணக்கு அறிக்கை சமர்ப்பிப்பு என கணக்காளர் கணேசனுடன் இணைந்து இவருடன் நெருங்கிப் பழகிய அனுபவம் எனக்கு உள்ளது. இப்போது அந்த இருவருமே மறைந்துவிட்டார்கள் என்பது பெரும் வேதனையானது.

செபஸ்தியன் அவர்களின் ஆங்கிலப்புலமையும் தொழிற்சங்க அனுபவங்களும் தொழிலாளர் தேசிய சங்க மீள் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தது. சங்கத்தின் வரலாறு குறித்த ஒரு நடமாடும் தகவல் களஞ்சியமாகவே அவர் செயற்பட்டிருந்தார். வி.கே வெள்ளையன் அவர்களுடன் இணைந்து தோட்டம் தோட்டமாக நடந்து திரிந்து தொழிற்சங்கம் அமைத்த அனுபவம் இவருக்கு உண்டு. அதனை அவ்வப்போது சுவாரஷ்யமாக பகிர்ந்து கொள்வார்.

தொழிற்சங்கம் தவிர்ந்த வேறு ஒரு துறையை தன் வாழ்நாளில் நாடாதவர் இவர் அத்தகைய அனுபவமிக்க ஒருவரின் இழப்பு மலையக தொழிற்சங்க இயக்கத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அன்னாருக்கு மலையக அரசியல் அரங்கத்தின் சார்பில் அஞ்சலியைப் பதிவு செய்வதுடன் அவரது பிரிவால் துயருற்று இருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொழிற்சங்க அங்கத்தினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.


அடுத்தத் தலைமுறைக்கான அரசியல் பாலமே 'மலையக அரசியல் அரங்கம்'

- தலைமை ஒருங்கிணைப்பாளர் திலகராஜ் கூறுகிறார்-

‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் பெயரில் கடந்த ஞாயிறு அமைப்பு ஒன்று தலவாக்கலை நகரில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ், உதயசூரியனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.

உரையாடல் : சதீஷ்குமார்.

மலையக அரசியல் அரங்கம் எனும் அமைப்பானது அரசியலோடு தொடர்பு பட்டதா?

அரசியல் தொடர்பில்லாத அமைப்பாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அமைப்பின் பெயரிலேயே ‘அரசியல்’ எனும் பதம் வரும் வகையில் வடிவமைத்தோம். நிச்சயமாக அரசியல் தொடர்புடையதுதான்.

 

அரங்கம் தொடர்பில் சற்று விளக்க முடியுமா?

1. மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் தளத்தை உரையாடல் வெளியை ஏற்படுத்துவது
2. மாவட்ட எல்லைகளைக் கடந்து மலையக அரசியலை முன்னெடுப்பது
3. ஆண்களுக்குச் சமனாக பெண்களுக்கும் அரசியலில் சம வாய்ப்பளிப்பதை வலியுறுத்துவது
4. மலையகத்தில் அடுத்த தலைமுறை அரசியலுக்கு பாலம் அமைப்பது
எனும் நான்கு இலக்குகளைப் பிரதானமாகக் கொண்டு மலையக அரசியல் அரங்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

உங்களுடைய அமைப்பின் இலட்ச்சினைகள் தொடர்பில் கூறமுடியுமா?

மலையகத் தமிழ் சமூகம் இலங்கையில் இருநூறு வருடங்களை நிறைவு செய்கிறது. அதில் சரியாக ஒரு நூற்றாண்டு காலமாக பிரதிநிதித்துவ அரசியலை முன்னெடுத்து 1921 முதல் சட்டவாக்கச் சபை ( Legislative Council) அரச பேரவை ( State Council ) நாடாளுமன்றம் ( Parliament ) மாகாண சபை ( Provincial Council) உள்ளூராட்சி சபை ( Local Authorities ) என அங்கத்துவம் கண்டுள்ளது.

இந்தப் பயணத்தை மலையகம் என்ற உணர்வோடு ஆரம்பித்து வைத்த மலையக தேச பிதா கோ.நடேசய்யர் அவர்களையும் அவரது துணைவியாரும் அரசியல் சமூக கலை இலக்கிய செயற்பாட்டாளருமான மீனாட்சியம்மை ஆகியோரின் உருவப் படங்களை இலட்சினையாகக் கொண்டுள்ளோம்.

இதன்மூலம் மலையகத் தமிழ்ச் சமூகத்தை கூலிச்சமூகமாகக் காட்ட முயல்வதற்கு மாறாக ஓர் அரசியல் சமூகமாக அடையாளப்படுத்தவும், ஆண்களைப் போலவே பெண்களும் மலையக அரசியலில் சம்பங்கு வகித்துள்ளார்கள் என்பதையும் வலியுறுத்துவதோடு பிரதிநிதித்துவ அரசியல் மாத்திரம் அன்றி சமூக அரசியலும் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அவசியமானது என்பதையும் வெளிப்படுத்துவதாக இலச்சினை அமைகிறது.

மலையக அரசியல் அரங்கம் எனும் அமைப்பானது மலையக பெருந்தோட்ட மக்களை பொருத்தவரையில் எந்நதளவில் பயன் தரும் ?
பெருந்தோட்டம் என்பது அருகிவரும் ஒரு பொருளாதார வலயம். இலங்கை சுதந்திரமடையும்போது 100% ஆக இருந்த பெருந்தோட்டக் கட்டமைப்பு 1972 ஆம் ஆண்டு ஆகும்போது 25 % சிறுதோட்டமாகவும் 75% பெருந்தோட்டங்களாகவும் இருந்தன. 1992 ல் இரண்டும் தலா 50% ஆக பதிவானது. ஆனால் , 2020 ல் சிறுதோட்டம் 75%ஆகவும் பெருந்தோட்டங்கள் 25 % ஆகவும் குறைந்துள்ளதோடு 2050 ஆம் ஆண்டு ஆகும்போது பெருந்தோட்டம் 1% ஆக குறைப்பதற்கு உத்மியோகபூர்வமாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

எனவே பெருந்தோட்டம் என்பதற்கு இந்த நாட்டில் எதிர்காலம் இல்லை.அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரியத் தொடங்கிவிட்டது. பெருந்தோட்டத்தைப் பாதுகாப்போம் எனும் கோஷத்தை முன்வைப்பவர்கள் இதனை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. தவிரவும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்தான் இற்றைநாள்வரை மலையக அரசியலின் வேர்களாக இருந்து வருகிறார்கள். தோட்டத் தொழிலாளர்கள் அல்லாதவர்கள் இன்னும் தங்களை ‘அரசியல் ரீதியாக’ அடையாளப்படுத்தாமை மலையக சமூகத்தின் பெரும் சாபக்கேடு. தொழிற்சங்கங்கள் இன்று திராணியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட நிலையில் தொழிற்சங்க அரசியலில் தங்கி இருப்பதானது திராணியற்ற அரசியல் பயணத்திற்கே இட்டுச் செல்கிறது.

இப்போதைய அவசியத்தேவை தோட்டத் தொழிலாளர் நலனில் அக்கறைகொண்ட தொழிலாளர் அல்லாத மலையகத் தரப்பினர் முன்னெடுக்கும் அரசியலே ஆகும். அத்தகைய அக்கறையாளர்களை வெவ்வேறு பெயர்களில் மலையகத் தளத்திலே காணக்கிடைக்கிறது.

அவர்கள் தம்மை அரசியல் ரீதியாக அடையாளப்படுத்த தவறவிடும்போது மலையகத் தமிழ் சமூகத்தின் விடுதலை தாமதமாகிறது என்பதே அர்த்தமாகும். அத்தகைய அக்கறை கொண்ட அமைப்புக்களை, தனிநபர்களை மாவட்ட எல்லைகள் கடந்து மலையக அரசியல் தளத்தில் ஒன்று சேர்ப்பது எமது அமைப்பின் பிரதான இலக்காகும்.

இந்த அமைப்பிற்கு மலையக அரசியல்வாதிகளால் எதிர்ப்புகள் வரகூடிய வாய்ப்புகள் உள்ளதா?

நான் மேலே கூறிய விடயங்கள் எந்தவொரு அரசியல் தரப்புக்கும் எதிரானது அல்ல. ஆனால் , மக்கள் சார்பானது, மக்களுக்கு அவசியமானது. எனவே இதனை யாரும் எதிர்க்கும் தேவை இருக்கும் என நான் நினைக்கவில்லை. மாறாக ஆதரவு தரலாம். அரங்கத்தில் வந்து தாராளமாக இணையலாம்.

தற்போது மலையகத்தில் உள்ள அரசியல்வாதிகளின் வாரிசுகள் எதிர்வரும் காலங்களில் அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன இது குறித்து தாங்களின் கருத்து என்ன?

‘வாரிசு அரசியல்’ மலையகத்துக்குப் புதியதல்ல. இலங்கையிலும், இந்தியா உள்ளிட்ட தென் ஆசிய பிராந்தியத்திலும் இந்த வாரிசு அரசியல் இருப்பதை எடுத்துக்காட்டி, வாரிசு அரசியலை தமக்கு சாதகமாக நியாயப்படுத்திக் கொள்ளும் போக்கு மலையகத்தில் காணப்படுவது துரதிஷ்ட்டவசமே. வாரிசு அரசியலுக்கு எதிராக பேசி மக்களிடம் வாக்குகளைச் சூறையாடியவர்களும் கூட இப்போது தமது வாரிசுகளைக் களத்தில் இறக்க முனைப்புக் காட்டுவது நகைப்புக்குரியது. அதே நேரம் அடுத்துவரும் ஐம்பது ஆண்டுகளுக்கான தலைவரை தமது கட்சிக்கு தேர்ந்து எடுத்துவிட்ட அரசியல் கட்சிகளையும் மலையகத்தில் காண்கிறோம். கட்சித்தலைமையில் அரைநூற்றாண்டு காலத்திற்கு மாற்றம் வராது எனத் தெரிந்த பின்னரும் மாற்று அரசியல் கலாசாரத்தையும் அரசியல் அமைப்புகளையும் கட்டியெழுப்ப மலையக இளந்தலைமுறையினர் சிந்திக்கத் தவறினால், கடந்த எண்பதாண்டு காலம் கண்ட அதே அவல நிலையை அடுத்த ஐம்பதாண்டு காலத்திற்கும் தொடரத் தயாராக வேண்டியதுதான்.

தற்பொழுது மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாளாந்தம்எதிர்நோக்குகின்ற பிரச்சினை தொடர்பில் உங்கள் மலையக அரசியல் அரங்க அமைப்பின் ஊடாக தீர்வினை பெற்றுகொள்ளும் வகையில் ஏதாவது வழிமுறைகள்உள்ளனவா?

மலையக அரசியல் அரங்கம் ஒரு தொழிற்சங்கம் அல்ல. தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் சந்தா வாங்கும் அமைப்பு அல்ல. எனவே அவர்களது நாளாந்த தொழில் பிரச்சினைகளை கையாள வேண்டியது அவர்களிடம் சந்தா வாங்கும் தொழிற்சங்கங்களின், அரசியல் கடசிகளின் கடப்பாடு ஆகும்.
அதே நேரம் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைசார்ந்த விடயங்களில் மலையக அரசியல் அரங்கம் நிச்சயம் பங்கேற்கும்.

எதிர்வரும் மாகாணசபை தேர்தலின் போது மலையக அரசியல் அரங்கம் என்ற அமைப்பின் ஊடாக தேர்தலில் களமிறக்கப்படுவார்களா?

அரசியல் ரீதியாக அமைப்பொன்றைத் தோற்றுவித்துவிட்டு தேர்தலில் பங்கேற்காதுவிட்டால், மன்றங்கள், விளையாட்டுக் கழகங்கள் போன்று செயற்பட்டுவிட்டுப் போகலாம். எனவே தேர்தல் ஒன்று வரும் போது அதற்குரிய வியூகத்தில் எமது அமைப்பினர் களம் இறங்குவார்கள்.அது கட்டாயமாக மலையக அரசியல் அரங்கம் என்ற பெயரில்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. வேறு கூட்டணி வடிவங்களையும் எடுக்கலாம். ஆனால், இப்போதைக்கு மாகாண சபை தேர்தல் அல்ல எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் மனநிலையில் அரசும் இல்லை மக்களும் இல்லை என்பதுதான் உண்மை நிலை. காலம் மிகப் பெரிய ஆசான். அது தீர்மானங்களை எடுக்கும் திசையை தீர்மானிக்க வல்லது.

தற்போதைய அரசாங்கத்தின் வரவுசெலுவு திட்டம் தொடர்பாக தாங்களின்கருத்து எவ்வாறு அமையும் என கூறுவீர்கலா?

ஐநூறு மில்லியன் நிதியில் மூன்று வருடத்தில் மலையகத்தில் எல்லா லயன்களையும் இல்லாமல் ஆக்கும் திட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். அவை குடும்பம். ஒன்றுக்கு பத்து பேர்ச்சஸ் நிலத்தைப் பெறுக்கொடுப்பதாயும் கூரைக்கு பதில் கொங்ரீட் தளமாக (ஸ்லப்) அமைந்து அடுத்த தலைமுறை வீடு கட்டும் ஏற்பாட்டையும் கொண்டிருக்கும் எனவும் எண்ணுகிறேன். அப்படித்தானே தேர்தல் அறிக்கைகள் கூறி இருந்தன.

மலையக அரசியல் அரங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?

2021 ஒக்டோபர் 30 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப்போது ஒரு மாதம் கடந்த நிலையில் இரண்டு செயற்குழு கூட்டத்தையும், ஒரு மெய்நிகர் உரை அரங்கத்தையும், ஒரு நாள் கருத்தரங்கையும், ஒரு ஊடகச்சந்திப்பையும், ஒரு மக்கள் சந்திப்பையும் நடாத்தி உள்ளோம். இதன்மூலம் வேறுபட்ட தளங்களில் எமது அரங்கம் விரிவாக்கம் பெற்றுள்ளது.

செயற்குழு கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராக நானும், செயலாளராக என்.கிருஷ்ணகுமாரும், பிரதான அமைப்பாளராக இராமன் செந்தூரனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவை தவிர மாவட்ட வாரியாக செயற்குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களுக்குச் செல்லும்போது அதன் விபரங்கள் தெரியவரும். மாதாந்த உரை நிகழ்வை மறைந்த மலையக அரசியல் தலைவர்களின் பெயரில் நினைவுப் பேருரையாக நிகழ்த்த உள்ளோம்.முதலாவது உரையை அரசியல் ஆய்வாளர் பி.ஏ.காதர் ‘இருநூற்றாண்டு கால மலையகமும் அதன் நூற்றாண்டு கால அரசியல் பிரதிநிதித்துவமும்’ எனும் தலைப்பில் மலையகத் தேச பிதா கோ.நடேசய்யர் நினைவுப் பேருரையாக ஆற்றினார். அதனை சிறுபிரசுரமாக வெளியிட்டு விநியோகிக்க உள்ளோம்.

அடுத்த உரை டிசம்பர் மாத இறுதி சனியன்று ‘தேர்தல் முறைமை மாற்றமும் மலையகப் பிரதிந்தித்துவத்தில் அதன் தாக்கமும்’ எனும் தலைப்பில் மலையக காந்தி கே.ராஜலிங்கம் நினைவுப் பேருரையாக இடம்பெறவுள்ளது. இவ்வாறு இருநூற்றாண்டு மலையக ஞாபகார்த்தமாக 24 உரைகளை நிகழ்த்தி அவற்றைப் பிரசுரமாக வெளியிட்டு விநியோகம் செய்ய உள்ளோம்.

மாதம் ஒரு மாவட்டம் என மலையக மாவட்டங்கள் தோறும் மக்கள் சந்திப்புகளை நடாத்தத் திட்டமிட்டு உள்ளோம். கொவிட் முடக்கம் வராதவிடத்து அதனை முறையாகச் செயற்படுத்த உள்ளோம். மாவட்ட ரீதியாக செயற்பட முன்வருவோரை இணைத்து அரங்கத்தை மலையக சமூக அரசியல் தளமாகக் கட்டி எழுப்பத் திட்டமிட்டுள்ளோம்.