காலத்தை வென்ற கவிதை

இலங்கையின் மத்திய மலைநாட்டில் மேகம் தழுவும் நக்கிள்ஸ் மலையடிவாரத்தில் உள்ள கொற்றகங்கைத் தோட்டத்தில் பிறந்தவர் கவிஞர் அரு.சிவானந்தன். சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தம் காரணமாக புலம் பெயர்ந்து தமிழகம் சென்று கவிதா வானிலே “வண்ணச்சிறகு” என்ற பெயரில் சிறகு விரித்தவர்.

இவரின் கவிதைகள் “வண்ணச்சிறகு கவிதைகள்” என்ற மகுடத்தில் 1985ஆம் ஆண்டு தமிழகத்தின் “மலையரசி” பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் அரு.சிவானந்தன் அகால மரணமானார்.

குறிப்பாக இலங்கையில் குடியுரிமைப் பறிக்கப்பட்டு இலங்கை இந்திய அரசாங்கங்கள் 1964 ஆம் ஆண்டு செய்து கொண்ட சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் காரணமாக கட்டாயமாக

நாடு விட்டு நாடு செல்ல நேர்ந்த தனது சோகத்தைப் பதிவு செய்த “ சென்று வருகிறேன் ஜென்ம பூமியே” கவிதை மலையக சமூகத்தின் நாடு கடத்தல் வரலாற்றுப் பதிவு.

அந்த கவிதை அவரது தனிப்பட்ட சோகமல்ல. அவ்வாறு சென்ற ஐந்து லட்சம் பேரின் சோகப்பதிவு. அந்தக்கவிதையின் முக்கியத்துவம் கருதி 2007 ஆம் ஆண்டு நவம்பர் – டிசம்பர் “கொழுந்து” காலாண்டு இதழில் அவரது அகால மரணத்தையும் நினைவு கூர்ந்து பிரசுரித்திருந்தேன்.

அதே 2007 ம் ஆண்டு தனது “மல்லியப்புசந்தி” கவிதை நூலை வெளியிட்டதுடன் தனது தாயாரின் பெயரில் பாக்யா பதிப்பகம் எனும் பதிப்பகத்தையும் தொடங்கியிருந்தார் திலகர். அதன் முதல் வெளியீடுகளாக தனது நூலை மாத்திரமல்லாது. மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் “இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே” எனும் நெடுங்கவிதை நூலை ஆங்கிலமூலத்துடன் இணைத்து மறுமதிப்பு செய்தும் வெளியிட்டிருந்தார். ஆச்சரியமிக்க அந்தப் பணியின் நோக்கத்தை கேட்டபோது, “இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே” முக்கியத்துவம் மிக்க கவிதை நூல். ஆனால் இன்றைய தலைமுறை வாசிக்க பிரதிகள் இல்லை. அதனால் மறுபதிப்பு செய்ய எண்ணினேன். எனது நூல் ஒன்றை வெளியிடும்போது இத்தகைய முக்கியத்துவம் மிக்க நூல் ஒன்றை மறுபதிப்பு செய்யலாம் என எண்ணம் கொண்டுள்ளேன் என்றார்.

அதன்போதே வண்ணச்சிறகு அரு. சிவானந்தன் பற்றியும் அவரது “ சென்று வருகிறேன் ஜென்ம பூமியே” கவிதை பற்றியும் கூறினேன். மனதில் உள்வாங்கிக்கொண்டவர் பின்னொருதடவை சந்தித்த போது “வண்ணச்சிறகு” கவிதைத்தொகுதியை இந்தியா சென்ற போது தேடிப்பிடித்து விட்டதாகவும் தனது இரண்டாவது நூல் வெளிவரும்போது நிச்சயம் மறுபதிப்பு செய்வேன் என்றும் சொன்னார். அவரது ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

அந்தக்காலம் 2012ஆக இருக்கலாம். அப்போது கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறும் “இலக்கியக்களம்” நிகழ்ச்சியில் அரு.சிவானந்தன் கவிதைகள் பற்றி பேச முடியுமா எனக் கேட்டேன். ஒத்துக் கொண்டவர், எனது தலைமையில் ஆற்றிய ஆய்வுரை பலரதும் பாராட்டைப் பெற்றது. அந்த உரையின் சாராம்சத்தையே இந்த இரண்டாம் பதிப்புக்கான பதிப்புரையாக இந்த நூலில் பதிவு செய்திருப்பது சிறப்பு.

இலக்கிய செயல்பாடுகளுடன் அரசியல் சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் கூட கொண்டிருந்த திலகர் 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இனி இலக்கியப்பக்கம் வரமாட்டார் என்று எதிர்பார்த்தவர்களை ஆச்சரியப்படச்செய்த அவரோ முன்பை விட தீவிரமாகவே இலக்கியச் செயற்பாட்டிலும் ஈடுபடலானார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலக்கிய சந்திப்புகள், ஆய்வரங்கங்களில் கலந்து கொள்ளச் செய்தார். இந்தியா, தமிழ்நாடு திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம் நடாத்திய மலையக இலக்கிய ஆய்வரங்கில் எங்களுடன் ஓர் இலக்கியவாதியாகவே கலந்து கொண்டு மலையக கவிதை இலக்கிய செல்நெறி குறித்து கட்டுரை சமர்ப்பித்தார். தவிரவும், தமிழ்நாட்டுடன் குறிப்பாக தாயகம் திரும்பிய உறவுகளுடன் எப்போதும் நெருக்கமான தொடர்பைப் பேணுபவராகவும் திலகர் திகழ்கிறார்.

2020 அவரது முதலாவது பதவிக்கால இறுதி நாளான மார்ச் 02 காலை எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தவர் கொழும்புத் தமிழ்ச்சங்கம் எனக்களித்த “தமிழ்நிதி” பட்டத்திற்காக வாழ்த்து தெரிவித்ததோடு உங்களுக்கு இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி, என்னுடைய இரண்டாவது நூலான “மலைகளைப் பேசவிடுங்கள்” அடுத்த வாரம் வெளிவரவுள்ளது கூடவே “வண்ணச்சிறகு” கவிதைகளை “ “சென்று வருகிறேன் ஜென்ம பூமியே” எனும் தலைப்பில் மறுபதிப்பு செய்தும் வெளியிட உள்ளேன். உங்களுடைய குறிப்பு இந்த நூலுக்கு முக்கியம் வேண்டும் என்றார்.

2007 ல் நான் விடுத்த வேண்டுகோளை 13 வருடங்கள் கழித்தும் நிறைவேற்றும் நல்லுள்ளம் கொண்டவர் மல்லியப்புசந்தி திலகர். அவரதுஅரசியல் பணிகள் மாத்திரமல்ல இலக்கிய பணிகளும் தனித்துவமானவை. வரலாற்றில் இடம் பெறக்கூடியவை. அவரது பாக்யா பதிப்பக முயற்சிகள் மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை, மூதறிஞர் சக்தீ பால அய்யா, சாகித்ய ரத்ணா தெளிவத்தை ஜோசப், கல்வியாளர் எம்.வாமதேவன், கலாபூஷணம் மு.சிவலிங்கம், நாடகாசிரியர் முத்தையா மாஸ்டர் போன்ற மூத்தவர்களினது படைப்புகளை பதிப்பித்த சிறப்பு கொண்டது. அத்துடன் திறனாய்வாளர் லெனின் மதிவானம் எழுதிய கட்டுரைத் தொகுப்பு, இளம்வரவு தானா.மருதமுத்துவின் கவிதை நூல் ஆகியவற்றையும் கூட வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் அரு.சிவானந்தனின் கவிதைகளையும், அவரது “வண்ணச்சிறகு” தொகுப்பில் வெளிவந்த காலத்தை வென்ற கவிதையான “சென்று வருகிறேன் ஜென்ம பூமியே” எனும் மகுடத்தில் மறுபதிப்பு செய்வதன் ஊடாக பாக்யா பதிப்பகம் ஓர் உயிர்த்தெழுதலை நிகழ்த்துகிறது எனலாம்.

திலகரின் எல்லா முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

 

அன்புடன்

அந்தனி ஜீவா.

57, மகிந்த பிளேஸ் , கிருலப்பனை

03.03.2020