– வீரகேசரி வாரவெளீட்டில் வெளியான நேர்காணல் –
நீங்கள் ஏற்கனவே அங்கம் வகித்த அணியில் இருந்து விலகிக் கொண்டீர்களா அல்லது விலக்கப்பட்டுள்ளீர்களா ?
என்னை விலக்கும் அளவுக்கு தேவை ஒன்று அங்கே எழவில்லை. நானாகவே அந்த அணியினருடன் சேர்ந்தியங்குவதில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்து விட்டேன். தொழிலாளர் தேசிய சங்கத்தில் நான் வகித்த பதவியை சங்கத்தின் தேவை நிமித்தம் வேறு யாருக்கும் வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை 2012 ஆம் ஆண்டு தொழிலாளர் தினத்தன்றே பொதுச்செயலாளர் பிலிப் இடம் கையளித்து விட்டே தொடர்ந்தும் செயற்பட்டேன். ஏனெனில் அப்போதும் இப்படி விலகி இருந்தேன். அது தற்காலிக விலகல்.
2015 ல் பாராளுமன்ற உறுப்பினர் ஆக தெரிவானதுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தைத் தூது வந்தவர்களிடம் “வேண்டுமானால், வெள்ளைப் பேப்பரில் கையொப்பமிட்டு தருகிறேன். எந்த நேரத்திலும் எனது பாராளுமன்ற பதவியை எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இப்போதைக்கு எனக்கு மக்கள் வழங்கிய ஆணைப்படி செயற்பட விடுங்கள். உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் எந்தப் பதவியையும் விட்டுவிலக நான் தயாராகவே இருக்கிறேன்” என 2015 ஆகஸ்ட் மாத இறுதியிலேயே உறுதி அளித்துவிட்டே செப் முதலாம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்து கொண்டேன். எனவே என்னை விலக்க யாரும் சிரம்ப்படும் தேவை இருக்கவில்லை. எல்லாமே சுமூகமாக நடைபெறுகிறது.
தேர்தலில் போட்டியிட ஒரு தொகைப் பணம் கேட்கப்பட்டது என்று தெரிவித்து இருந்தீர்கள். அது ஏன் தேர்தல் செலவுகளுக்கானதாக இருந்திருக்கக் கூடாது ?
ஆம். நீங்கள் கேட்பதும் நான் கூறியதும் ஒன்றுதான். சிங்களத்தில் நான் கூறியதை நீங்கள் புரிந்து கொண்ட அளவுக்கு பலர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். நான் அதைத்தான் சொன்னேன். 2020 மார்ச் 11 அஅன்று எங்களிடையே இடம்பெற்ற உரையாடலை அதே விதமாக சிங்கள ஊடகம் ஒன்றில் பதிவு செய்துள்ளேன்.
அதில் என்னுடைய வாதம் என்னவெனில் ‘எனது’ தேர்தல் செலவுகளுக்கு இரண்டு கோடி தேவை இல்லை என்பதே. ஏனெனில், 2007 முதல் தொழிலாளர் தேசிய சங்க மீள் உருவாக்கம், கட்சி கட்டமைப்பை விருத்தி செய்தல், செயற்பாட்டாளர்களுக்கு அரசியல் வகுப்பு நடாத்துதல், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளித்தல் , தொழிற்சங்க முழுநேர ஊழியர்களுக்கு மாதாந்த மீளாய்வு கூட்டம் நடாத்துதல், முன்னோடிகளுக்கு விழா எடுத்தல், வட்டார அமைப்பு முறை அடிப்படையில் கட்சிக் கட்டமைப்பைப் பேணுதல், கூட்டணி கலாசாரம் பேணல், கொள்கைத் திட்டமிடல், ஊடக அறிக்கையிடல், ஊடகப்பங்கேற்றல் எனும் பல்பரிமாண அடிப்படையில் எனது மூளை உழைப்பை பல வருடங்களாக அமைப்புக்காக செலவிட்டவன்.
பொருளியளின் அமையச் செலவு ( Opportunity cost ) கோட்பாட்டுக்கு அமைவாக அந்த மூளை உழைப்பை எனது சொந்த உழைப்புக்காகப் பயன்படுத்தி இருந்தால், இரண்டு கொடி என்ன என்னிடத்தில் நான்கு கொடியே இருந்திருக்கும். அமையச் செலவு கொட்பாடு தெரியாதவர்களுக்கு எனது கருத்துப் புரியாது. அதற்காக நான் ஒன்றும் செய்யவும் முடியாது. எனவே நான் உருவாக்கிவைத்த கட்டமைப்பு, என்னுடைய ஆடம்பரமற்ற எளிமையான அரசியல் நடத்தைகள் ( Simple Political behaviors) அடிப்படையில் தேர்தலை எதிர் கொள்ள சுமார் பத்துலட்சம் எனக்கு போதுமானது என்பதே எனது வாதம்.
2015 லும் நான் நண்பர்களின் உதவியுடன் அத்தகைய தொகையுடனேயே தேர்தலை வெற்றி கொண்டேன். அப்போது என்னிடம் யாரும் கோடிகள் கொடுக்கவும் இல்லை. கேட்கவும் இல்லை. 2015 தேர்தல் பிரசாரகாலப் படங்கள் இப்போதும் எனது முகநூலில் உண்டு. அப்போதும் நான் தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் வசிக்கும் அசோக் எனும் சகோதரனின் LH ரக வாடகை வேிலும், ஆட்டோவிலுமே பிரசாரத்துக்கு போனேன். சில சமயங்களில் மலையக மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் இராஜாராம் அவரது பழைய ஜீப்பில் என்னை உட்காரவைத்து ‘கெத்தாக’ அழைத்துக் கொண்டு போயுள்ளார் என்பதை நன்றியுடன் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
நீங்கள் கூறுவது போல தேர்தலில் போட்டியிட அந்தந்த வேட்பாளர்கள்தான் செலவிட்டுக் கொள்ள வேண்டுமானால் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அவரது நுவரெலியா மாவட்ட செலவுகளுக்கு சஜித் பெற்றுக் கொடுத்த தொகை பற்றி வெளியே பேசப்படுகிறதா? அல்லது கணக்குகள்தான் காட்டப்படுகிறதா? என்னுடைய சொத்துப் பொறுப்பு விபரங்களை பொது வெளியில் வெளியிட நான் எழுத்து மூல அனுமதி கடிதத்தை 30 சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்த பொது வழங்கி உள்ளேன். அது ஒரு பப்ளிக் டொக்கியுமன்ட்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏன் தேசிய பட்டியல் ஒன்றைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை?
ஆர்வம் காட்டிப் பெற்றுவிட்டால், அதனை எனக்கு வழங்க வேண்டி வந்திருக்கும் அல்லவா? அதனால் ஆர்வம் காட்டவில்லை போலும். ஹ…ஹ..😄
அப்படியாயின் உங்களைத் திட்டமிட்டே ஓரங்கட்டினார்கள் என்கிறீர்களா ?
நிச்சயமாக. பாராளுமன்ற உறுப்பினராக முதல் முறையிலேயே மக்கள் இடத்தில் நன்மதிப்பைப் பெற்றவனை, மாவட்டத்தில் முதலிடம் பெற்றவனை, பாராளுமன்றில் 225 ல் 29 ம் இடத்தில் தரப்படுத்தப்பட்டவனை தேர்தலில் போட்டியிட அனுமதிக்காததில் இருந்தே புரியவில்லையா இது திட்டமிடப்பட்ட சதி என்று?. ஏற்கனவே உறுப்பினராக சிறப்பாக செயற்பட்ட ஒருவரை போட்டியிட அனுமதிக்காதிருக்க எத்தனைத் துணிவு வேண்டும். அதனைத் துணிந்து தீர்மானிக்க முடியுமெனில் அதாவது போட்டியிட வாய்ப்பு இல்லை என அறிவிக்க முடியுமெனில் தேசிய பட்டியல் இல்லை என அறிவிப்பது எம்மாத்திரம்.
நீங்கள் நுவரெலியா பிரசாரத்துக்கு வராமல் விட்டதுதான் தேசிய பட்டியல் வழங்காமைக்கு காரணம் என சொல்லப்பட்டதே ?
ஹா… ஹா .. 😄 நான் மார்ச் 11 கட்சி மட்டத்திலும் மார்ச் 15 கூட்டணி மட்டத்திலும் இடம்பெற்ற உரையாடல்களில் “நுவரெலியா பிரசாரத்துக்கு வரமாட்டேன்” என்ற நிபந்தனை அடிப்படையிலேயே தேசிய பட்டியல் நியமனத்தை ஏற்றுக் கொண்டேன்.முதலாவதின்போது கட்சியின் தேசிய அமைப்பாளரும், கூட்டணி மட்டத்தில் அன்றைய தினம் கலந்து கொண்ட அனைத்து அரசியல் உயர்பீட உறுப்பினர்களும் இதற்கு சாட்சி. தவிரவும் மார்ச் 15 உயர்பீட கூட்டக்குறிப்பிலும் அது எழுத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்தவர் பிரதி செயலாளர் சட்ட முதுமாணி சண்.பிரபா. நிலைமை இப்படி இருக்க நான் நுவரெலியா வரவில்லை என்பது “ வெத்துக் காரணம்” என்பது விளங்கவில்லையா?.
தவிரவும் நான் நுவரெலியா பிரசாரத்துக்கு வராமல் விட்டது மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 5 வரையான தேர்தல் பிரசார காலம் முழுவதும். ஆக, ஐந்து மாநங்களாக நான் நுவரெலியா மாவட்டத்துக்கு வராமல் இரத்தினபுரி, மொனராகலை, மாத்தளை, காலி மாவட்டங்களில் ‘தொலைபேசி’ சின்னத்துக்காக பிரச்சாரம் செய்தபோது ஊடகங்கள் கூட்டணி தலைவர்களிடம் எனது தேசிய பட்டியல் விவகாரம் குறித்து கேட்டபோது கூறிய பதில்கள் என்ன? “திலகராஜ் படித்தவர் .. திறமையானவர் அதனால்தான் தேசிய பட்டியல் வழங்குகிறோம்” என்றார் ஒருவர்.
திலகராஜின் அருமை பெருமை எல்லாம் பேசி தேசியபட்டியல் நிச்சயம் வழங்கப்படும் என பெட்டிப்போட்டு, வட்டம்போட்டு பேசினார் இன்னொருவர். “நாங்கள் மூன்றுபேரும் வென்றால் திலகராஜுக்கு தேசிய பட்டியல்” என நுவரெலியா மாவட்டம் முழுவதும் மேடைக்கு மேடை முழங்கினார்கள் மூவர். அந்த பதிவுகள் எல்லாம் எழுத்திலும் வீடியோ வடிவத்திலும் இன்னும் கிடைக்கக் கூடியதாக உள்ளது. இப்படி எல்லாம் எல்லாம் ஏன் அப்போது பதில் சொல்லி இருக்க வேண்டும். திலகராஜ், நுவரெலியா மாவட்ட பிரச்சாரத்துக்கு வரமாட்டேன் என்கிறார். ஐந்து மாதமாக அவர் நுவரெலியா வரவில்லை. அதனால் அவருக்கு தேசிய பட்டியல் வழங்க மாட்டோம் என தேர்தலுக்கு முன்னமே சொல்லி இருக்கலாமே. இப்போது புரிகிறதா ‘வெத்துக்காரணம்’ என்று?
நுவரெலியாவுக்கு பிரசாரத்துக்கு வரமாட்டேன் என ஏன் அந்த நிபந்தனை .. ?
நான் மார்ச் 11 முதல் கூறிவரும் இந்த நிபந்தனைக்கான காரணத்தை இதுவரை யாரும் கேட்கவில்லை. இப்போது, எல்லாம் முடிந்தபின்னர் சரி நீங்கள் கேட்டதற்கு நன்றி. தேர்தலில் ஒருவருக்கு எதற்கு பணம் வேண்டும்? பிரசாரத்துக்கு செலவழிக்க. எனக்கு ஏன் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை? பிரசாரத்துக்கு பணம் இல்லை என. என்னிடம்தான் பிரசாரத்துக்கு பணம் இல்லையே.
அப்போ எந்தப்பணத்தைக் கொண்டு நான் நுவரெலியா பிரசாரத்துக்கு வருவேன்? என் கையில் பத்து லட்சத்தை வைத்துக் கொண்டு எனக்கே பிரச்சாரம் செய்து கொள்ள முடியாதபோது அதனைக் கொண்டு நான் அங்கே யாருக்கு பிரசாரம் செய்வது? அப்படி 2010 பொதுத்தேர்தலில் நான் பிறருக்கு பிரசாரம் செய்திருந்தபோதும் அப்போதும் தேசிய பட்டியல் வழங்காமல் மறுக்கப்பட்டதே. இப்போது 2020 ல் வழங்குவார்கள் என்பதில் என்ன நிச்சயம். அதுதானே நடந்தது.
எனவேதான் என்வசம் இருந்த பணத் தொகையைக் கொண்டு தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டால் எனது வேலைத்திட்டம் என்ன என்பதை விளக்கும் வகையில் கூட்டணி எம்பிக்கள் இல்லாத மாவட்டங்களில் எனது பிரசாரத்தை தொலைபேசிக்காக செலவிட்டேன். அதன் மூலம் பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத மலையக மாவட்டங்களை இலக்குவைத்து எனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திட்டத்தை முன்வைத்தேன்.
முற்போக்குக் கூட்டணி வடக்கு கிழக்குக்கு வெளியே அரசியலை முன்னெடுக்கும் தமிழ்த்தரப்பு எனில் நிச்சயமாக தேசிய பட்டியல் உறுப்புரிமையைப் பெற்று எனது திட்டத்தை நடைமுறைப் படுத்தினால் மட்டுமே அது சாத்தியம். அந்த பதவியில் நான்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை.அடுத்த இருவராக பிரேரிக்கப்பட்டு இருந்த லோரன்ஸ் அல்லது குருசாமிக்கு சரி பெற்றுக் கொடுத்திருக்கலாம்.இதனைக் கூட செய்ய முடியாத பலவீனம் யாருடையது?
நான்தான் நுவரெலியா வரவில்லை எனும் வறட்டு வாத்த்தை வைத்துக்கொண்டாலும், தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது நுவரெலியா மாவட்டம் முழுவதும் பிரசாரப் பணியில் ஈடுபட்ட அண்ணன் லோரன்சுக்கு அதனை வழங்காது விட்டதன் காரணத்தை யார் சொல்வது?தமது தளபதி குருசாமிக்கு கொடுங்கள் என அவர்களது படைவீர்ரளின் கோரிக்கைக்கு ஏன் செவி சாய்க்கவில்லை? குருசாமிக்கே கொடுக்கவில்லை என்றால், சாமியே சரணம் ஐயப்பா .. ஹா …ஹா… ஹா..
தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவு செய்வதில் ஏற்பட்ட சிக்கலின் பின்னணியில் நீங்கள் இருப்பதாக …
ஹா…ஹா.. 😄 ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து போய் செய்யமுடியாத ஒரு காரியத்தை ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தடுத்து நிறுத்தியதாக காரணம் காட்டினால் அது யாருடைய பலவீனம்? உயர்பீடத்தில் ஒரு பெண் உறுப்பினர் இணைக்கப்படாத கட்சி பதிவு நடைமுறை பின்பற்றப்படாததுதான் பதிவு விண்ணப்ப நிராகரிப்புக்கு காரணம் என முன்னாள் செயலாளர் லோரன்ஸ் ஊடகங்களுக்கு அறிவித்து உள்ளாரே.
அதில் இருந்து தெரியவில்லையா அறுவருக்கும் அந்த விடயத்தில் உள்ள அனுபவக் குறைவே காரணம் என்று. அந்த ஆறுபேரில் ஒருவருக்கு கூட கட்சி ஒன்றை யாப்பெழுதி உருவாக்கிய அனுபவம் இல்லை. அதற்கு முன்னர் உருவாக்கப்பட்டிருந்த ஒரு கட்சியில் தங்களைக் கட்டமைத்துக் கொண்டவர்கள்.
நான் அதில் இருந்து மாறுபட்டவன். எனக்கு யாப்பெழுதி, கட்டமைப்பு உருவாக்கி, கட்சியைப் பதிவு செய்த அனுபவம் உண்டு. என்வசம் இருந்த கூட்டணியின் ஆவணங்களை அவர்கள் நேர்முகத் தேர்வுக்கு பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பொதுச் செயலாளர் சந்த்ரா ஷாப்டர் வீட்டுக்கே சென்று கையளித்து விடைபெற்றுக் கொண்டவன் நான். எனக்கு கட்சி தாவுதல், கட்சியை அழிக்கும் கலைகள் தெரியாது. கட்சியை மக்களிடையே கட்டமைப்புச் செய்யவும் அதற்கு ஆணைக்குழுவிலும் மக்களிடமும் அங்கீகாரம் பெறவும் தெரியும். அதனை எனது காலகட்ட அரசியல் நடத்தைகளில் நீங்கள் அவதானிக்கலாம்.
அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவேன் ஆனால் எதிர் அணியில் இணையவோ புதிய கட்சி தொடங்கவோ எண்ணமில்லை என்பதன் அர்த்தம் என்ன?
ஆற்றில் போட்டுவிட்டு கிணற்றில் தேடக்கூடாது என்பது அர்த்தம். தொழிலாளர் தேசிய சங்கம் எனது மானசீக ஆசான்கள் வி.கே.வெள்ளையன் – சி.வி.வேலுப்பிள்ளை போன்ற ஆளுமைகளின் உயர்ந்த எண்ணத்தில் உருவானது. எனது நேசத்துக்குரிய சங்க / கட்சி உறுப்பினர்களை நான் குறைசொல்ல தயாராக இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் என்னில் அன்பும் மதிப்பும் வைத்து இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
இப்போது அங்கே ஒரு சிலர் எனக்கு அநீதி இழைத்தார்கள் என்பதற்காக முழு அமைப்பையும் சாடுவதற்கும், அதனை வாழை மரம் என்றும் எதிரணிதான் ஆலமரம் என்றும் வாய்கூசாமல் கூறி எனது குடும்பத்தை இகழ்ந்தும் எதிரணியைப் புகழ்ந்தும் பேசும் நாக்கு எனக்கு வாய்க்கவில்லை. அப்படி ஒரு அரசியல் வாழ்க்கை எனக்கு அவசியமும் இல்லை.இந்த உத்தரவாதத்தையே என்னைச் சந்திக்கவந்த சங்கத்தின் மூத்தவர்களிடம் கூறி வைத்தேன். அதனையே நடைமுறைப்படுத்தியும் வருகிறேன்.
நீங்களும் அனுஷா சந்திரசேகரனும் இணைந்து ஏன் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கக்கூடாது?
அவரிடம் அதிக நேரம் நான் பேசியது கூட இல்லை. ஆனால் ஊடகங்களில் அவரது உரைகளைக் கேட்டு இருக்கிறேன். அவரும் ‘அப்பா’ அரசியலை முன்வைக்கும் ஒருவராகவே இப்போதைக்கு எனக்குத் தெரிகிறார். அவரது அப்பா எங்களுக்கு ‘அண்ணனாக’ இருந்தபோது அப்போதும் எங்களுக்கு எதிரணியில் இருந்த ‘தம்பி’ யுடன் மல்லியப்புசந்தியில் கரம் கொர்த்ததை நேரடியாக விமர்சித்ததே ‘மல்லியப்புசந்தி’.
அது எழுதப்பட்டதும் எனது கள அரசியல் ஆரம்பமானதும் 2000 ஆம் ஆண்டுகளில். என்னிடத்தில் அண்ணன் – தம்பி – அப்பா – மாமா – மச்சான் அரசியலுக்கு இடமில்லை. நான் மக்கள் அரசியலை முன்வைத்து பேசி, செயற்பட்டு வருபவன். அனுஷா இப்போதுதான் அரசியல் கற்றுக் கொண்டு இருக்கிறார். ஒரு அண்ணனாக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்க மாத்திரமே இப்போதைக்கு என்னால் முடியும்.
மலையக மக்கள் முன்னணி பொதுச் செயலாளராக பேராசிரியர் விஜேசந்திரன் நியமிக்கப்பட்டு இருப்பது பற்றி ..
அவருக்கு தொலைபேசி அழைப்பெடுத்தும் ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்துத் தெரிவித்த முதல் ஆள் நானாகவே இருக்கலாம். மலையக அரசியலின் புதிய திசை வழியை தீர்மானிக்கும் திகதி அந்த நாள் என அறிவித்து உள்ளேன். பேராசிரியராக பணியில் இருக்கும்போதே மலையக அரசியல் கட்சி ஒன்றின் பொதுச் செயலாளராக ஒருவர் வந்திருப்பது இதுவே முதல்தடவை. மலையகம் அதற்கான பிரதிபயனைப் பெற வாழ்த்துகிறேன்.
இன்னுமொரு கட்சியின் பொதுச் செயலாளராகவும் கலாநிதி ஒருவர் வரவுள்ளதாக அறிய முடிந்தது. அரசியல் கட்சிக்குள் வந்து கலாநிதி ஆகிக் கொள்ளும் காலகட்ட சூழலில் கலாநிதி ஒருவர் கட்சி செயலாளர் ஆக வருவதை வரவேற்கிறேன்.அவருக்கும் முன்கூட்டியே வாழ்த்துகிறேன்.(அது யார் என என்னிடம் கேட்காதீர்கள்.ஹா ஹா. 😄 நீங்கள் ஊடகவியலாளர்கள்)
உங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்குமானால் உங்களது அமைப்பில் இருந்தே மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு இருக்கலாமே… ?
இப்போதே அங்கு ‘எங்க ஏரியா உள்ள வராத’ சண்டை ஆரம்பித்துவிட்டது. அந்தச் சண்டையில் ஏன் என்னையும் இழுத்து விடப்பார்கிறீர்கள். ஹா ஹா .ஹா
ஆறுமுகன் தொண்டமானின் அனுதாபப் பிரேரணையில் மலையகப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாமை குறித்து..?
அது அரசியல் அநாகரீகம் என உங்கள் பத்திரிகை ஆசிரிய தலையங்கமே எழுதி உள்ளதே. என்னைப்போல அவரை நேரடியாக பெயர் கூறி விமர்சித்தவர்கள் யாரும் இல்லை என நினைக்கிறேன். அதற்கு பாராளுமன்ற ஹன்சாட் சாட்சி பகரும். அதேநேரம் அவர் இறந்து இரண்டு மணித்தியாலங்களிலேயே நேரலையில் அஞ்சலி செலுத்தவும் அவர் பற்றிய நினைவுகளைப் பகிரவும் நான் தயங்கவில்லை. அதனை வானொலி தொலைக்காட்சி ஊடகங்களிலும் கூட செய்திருந்தேன்.
இறந்தவுடன் அவர் இல்லம் நோக்கி ஓட முடியுமென்றால், பாராளுமன்ற முன்றலில் குனிந்து கும்பிடுபோட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த முடியுமென்றால், நோர்வூட் மைதானத்தில் பூதவுடல் முன்னே உட்கார்ந்து காத்துக் கொண்டிருக்க முடியும் என்றால் ஏன் அனுதாபப் பிரேணையில் கலந்து கொள்ள முடியாது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
நான் பாராளுமன்றில் இருந்திருந்தால் அவரது அரசியல் செயற்பாட்டில் உள்ள நிறை குறைகளைச் சுட்டிக்காட்டி, அன்னாரது குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவித்து, அவரது பூதவுடலின் பேரில் மலையக மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி அவருக்கு உண்மையான அனுதாபத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை அழுத்தி இருப்பேன்.அதில் 1000/= நாட்சம்பளம் முதல் மலையகப் பல்கலைக்கழகம் வரையான பல விடயங்கள் அடக்கம். கட்சி பேதங்களுக்கு அப்பால் அவையாவும் மலையக மக்களின் கோரிக்கைகள் என்பதுதானே உண்மை. அமரர் ஆறுமுகனின் பேரில் அவை நடந்தாலும் மக்களுக்குத்தானே நன்மை.
உங்கள் எதிர்கால அரசியல் நகர்வுகள் எவ்வாறு இருக்கும்?
நிகழ்காலத்தில் சர்வதேச மாநாடுகள், பங்கு பற்றல்கள் உரைகள் என இயங்கிக் கொண்டு இருக்கிறேன். கடந்த திங்களன்று கூட ஐக்கிய நாடுகள் இணை நிகழ்வு ஒன்றில் ஐ.நாவுக்கான ஜேர்மனிய நாட்டு தூதரகத்தின் ஊடாக மலையகப் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஐ.நாவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தேன். அதற்கு முதல்வாரம் ஆசிய மதிப்பாய்வு மாநாட்டில் இலங்கை சார்பில் உரையிற்றி இருந்தேன்.
அதற்கு முதல் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் நெல்லைக் கிளை ஏற்பாட்டில் ஒரு மணித்தியால உரை ஒன்றை இணையவழியாக ஆற்றி இருந்தேன். கடந்த வாரம் உள்நாட்டு தேர்தல் முறைமைகள், அரசியலமைப்பு மாற்றச் செயற்பாடுகள் குறித்த சிவில் சமூக கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு இருந்தேன்.ஊடகங்களில் அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொள்கிறேன்.
இதுபோல நிகழ்காத்தில் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் அரசியல் செயற்பாட்டில் இருப்பதால் எதிர்காலத்தில் அரசியலை நகர்த்துவது இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன். முக்கியமாக நாளை முதல் இந்த நேர்காணலுக்கு வழங்கப்படும் பதிற்குறிகளை செவிமடுக்க மாட்டேன்.எனது எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்கான எனது ‘எனர்ஜியை’ வீண்டிக்க நான் விரும்பவில்லை.
நன்றி : வீரகேசரி வாரவெளியீடு – சிவலிங்கம் சிவகுமாரன்
I’m extremely pleased to discover this website. I wanted to thank you for ones time just for this fantastic read!! I definitely enjoyed every part of it and i also have you bookmarked to see new stuff in your site.
Definitely, what a great blog and revealing posts, I definitely will bookmark your site. Best Regards!
I got what you intend,bookmarked, very decent website.
Really nice design and good subject material. Please also check my website. I love cars!