தோட்ட சுகாதாரம் : தொடரும் உரையாடல்கள்

  – மயில்வாகனம் திலகராஜா

அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் அமைச்சரவை பத்திரத்தினூடாக அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது. அதே நேரம் அமைச்சரவைப் பத்திரத்தினைத் தாண்டி தோட்ட சுகாதார முறைமையை தேசிய மயமாக்குவதற்கு பல பணிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அதற்கு சுகாதார மேற்பார்வைக் குழு அறிக்கையை கையில் எடுக்க  வேண்டும்.

தோட்ட சுகாதார முறைமை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சபையில் வழங்கிய உறுதிப்பாட்டை அடுத்து தோட்ட சுகாதார முறைமையை தேசிய சுகாதார முறைமையாக்குவதற்கு கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வழிமுறைகளையும் அவை வெற்றியளிக்காத நிலையில் எதிர்வரும் காலத்தில் அதனை வென்றெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராய்வதாக ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையோடு இணைந்ததாக இந்தக் கட்டுரை அமைகிறது. கூடவே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் சுகாதார துறை நாடாளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவராக சபைக்கு சமர்ப்பிக்கட்ட அறிக்கையும் இந்த கட்டுரையோடு இணைக்கப்பட்டுள்ளது.

தோட்ட சுகாதார முறைமையை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் பொருட்டு இதற்கு முன்னரும் இரண்டு அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

2006 ஆம் ஆண்டு நிமல் சிறிபால டி சில்வா சுகாதார அமைச்சராகவும் வடிவேல் சுரேஷ் பிரதி சுகாதார அமைச்சராகவும் இருந்த காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்தின் பேரிலேயே 44 தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. எனினும் அதில் 22 அளவே இப்போது செயற்பாட்டில் உள்ளபோதும் ஏனையவை செயலற்று முடங்கின. அதற்கு பின்னர் வேறு வைத்திய நிலையங்களுக்காக அந்த அமைச்சரவைப் பத்திர தீர்மானம் பயன்படுத்தப்படாததோடு அந்த பத்திரமும் மாயமாகிவிட்டது.

அதன் பின்னர் 2018   ராஜித்த சேனரத்ன காலத்தில் ஒரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அபிப்பிராயம் கோரலுக்காக ஏனைய அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்டபோது அந்தத் திட்டத்தை மறுத்த அமைச்சுக்களும் உள்ளன.

இந்த நிலையிலேயே சுகாதரம் தொடர்பிலான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவராக நான் செயற்பட்ட காலத்தில்  திட்டத்துடன் தொடர்புடைய ஐந்து அமைச்சுக்களையும் இணைத்து பெறப்பட்ட உடன்பாட்டு அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. எட்டாவது பாராளுமன்றில் அங்கம் வகித்த நான் எனது இறுதி உரை என அறிவித்து 2020 பெப்ரவரி 19 ம் திகதி அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தின் ஊடாக அமைச்சரவை கவனத்துக்கு சமர்ப்பித்து விட்டு வந்தேன்.

இப்போது  நாடாளுமன்றத்தில் வாய்மொழி வினா நேரத்தில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேள்வி எழுப்பியமை வரவேற்கத்தக்கது.  சுகாதார அமைச்சரின் பதிலும் வரவேற்கத்தக்கது.

அதே நேரம் கடந்த கால அமைச்சரவைப் பத்திரங்களுக்கு  என்ன ஆனது என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நன்கு அறிவார்.

நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையிலே உடன்பட்டவாறு அனைத்து அமைச்சுக்களையும் இணைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். 500 தோட்ட வைத்திய நிலையங்களையும்  அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர  நிர்வாக மட்டத்தில் ஏற்பாடுகள் சீர் செய்யப்பட்டுள்ளன.

திட்டத்துடன் தொடர்புடைய சுகாதார அமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு, காணி அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, மாகாண சபைகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்ட அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிகள் சுகாதார அமைச்சின் ‘ தோட்ட, நகர சுகாதார பிரிவு’ பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அதனை அதனை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள நிலையில் அதற்கான  அங்கீகாரத்தை புதிய அமைச்சரவைப் பத்திரம் வழங்கினாலே போதுமானது

நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத காலத்திலும் கூட கடந்த செப்டெம்பர் (2020) மாதம் அமைச்சு அதிகாரிகளுக்கும் சிவில் சமூகத்தினருக்குமான கலந்துரையாடல் நுவரெலியவில் நடாத்தியிருந்தோம். சிவில் சமூக மட்டத்தில் தோட்ட சுகாதார முறைமையை தேசிய மயப்படுத்தும் கொள்கை உருவாக்க செயற்பாடுகளிலும் பரப்புரைகளிலும்  ஈடுபட்டு வரும் மனித உரிமைத் தாபனத்தையும் ( HDO – Kandy) இந்தக் கலந்துரையாடலில் இணைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்சி, அரசியல் பேதங்களுக்கு அப்பால் தோட்ட சுகாதார முறைமையை தேசிய சுகாதார முறைமைக்குள்  கொண்டு வர அனைவரும் ஓரணியாக குரல் கொடுக்க முன்வர வேண்டும். செயற்படவும் வேண்டும்.