சிறுதோட்ட உடைமை என்பது;மலையக தலைமுறையின் நாகரீகமான அரசியல், சமூக இருப்புக்கான கோரிக்கை
– முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்
இலங்கையில் இருநூறு வருடகால வரலாற்றைக் கொண்ட மலையகத் தமிழர் சமூகத்தினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கும் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உடமையாளர்களாக்க வேண்டும் எனும் கோரிக்கை தனியே தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கான தீர்வு மாத்திரமல்ல, அது ஐந்தாவது தலைமுறையான இன்றைய மலையக தலைமுறையின் நாகரீகமான அரசியல், சமூக இருப்புக்கான கோரிக்கையாகும் என்பதைப் புரிந்து கொண்டு இன்றைய இளைய தலைமுறை அதனை உரையாடவும் வென்றெடுக்கவும் முன்வரவேண்டும் என முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் சமூக ஆய்வாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.
மலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் ஏற்பாட்டில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜீவன் ராஜேந்திரனின் நெறிப்படுத்தலில் இணைய வழி கருத்தாடல் களம் கடந்த சனிக்கிழமை மாலை 7 மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளருமான மு.சிவலிங்கம், முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் சமூக ஆய்வாளருமான மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் உரையாளர்களாக கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

கருத்தாடல் களத்தின் கேள்வியாக “தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை கூலி உயர்வா? சிறுதோட்ட உடமையா ? அமைய வேண்டும் என்பதாக இருந்தது. அதற்கு பதில் அளித்து கருத்துரையாற்றிய மு.சிவலிங்கம் கூறியதாவது,இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும்போது அத்தகைய ஒரு கேள்வியுடன் தொடர்புடைய மூன்று தரப்பினரை நாம் அடையாளம் காணவேண்டியுள்ளது. அரசாங்கம், தோட்டக் கம்பனிகள், மக்கள் பிரதிநிதிகள் எனும் இந்த மூன்று தரப்பினர் மீதான விமர்சனங்களை முன்வைக்காது இந்த கருத்தாடலை முன்கொண்டு செல்ல முடியாது. குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் என்போர் தொழிற்சங்கத்தை தமது அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான கருவியாக கையாளத் தொடங்கியவுடன் அரசாங்கத்தின் மடியில் தவழும் செல்லப் பிள்ளைகளாகி எதனையும் தட்டிக் கேட்க முடியாதவர்களாக மாறிவிடுவது வேதனைக்குரியது. 1000/= என்பது சம்பளம் இல்லை.
இப்போது 2010 க்குப் பின்னான ஐந்தாம் தலைமுறையின் தமது இலக்காக கோரிக்கையாக முன்கொண்டு செல்லவேண்டிய விடயம் என்ன என நோக்கும்கோது அது தொழிலாளர்களை சிறு தோட்ட உடமையாக்குதல் என்பதே சரியான தெரிவாக அமைகிறது.
ஏனெனில் முதலாம் தலைமுறையே தன்னை தியாகம் செய்து உருவாக்கிய இரண்டாம் தலைமுறை காலத்தில் 1940 ல் முல்லோயா கோவிந்தன் எனும் தியாகியின் வீர மரணத்தின் ஊடாக கூலி உயர்வு கோரிக்கை முன்னிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்றாம் தலைமுறை காலத்தில் சிவனு லட்சுமணன் எனும் தியாகியின் வீர மரணத்தின் ஊடாக காணி உரிமை கோரிக்கை முன்னிறுத்தப்பட்டது.
எனவே ஐந்தாம் தலைமுறையினரான இன்றைய தலைமுறையினர் தமது பிரதான கோரிக்கையாக எதனைக் கொள்ளவேண்டும் என நோக்கும்போது இரண்டாம் தலைமுறை கூலி கோரிக்கையா? மூன்றாந்தலைமுறை காணி கோரிக்கையா? என சிந்திக்குமிடத்து இரண்டுக்கும் தீர்வைத் தரக்கூடிய சிறுதோட்ட உடமை எனும் கருத்தியலைத் துணிந்து ஏற்பவர்களாதல் வேண்டும். துரதிஷ்டவசமாக ஐந்தாம் தலைமுறையினர் இரண்டாம் தலைமுறையினர் நின்ற இடத்தில் நிற்கும் பலவீனத்தையே பார்க்க முடிகிறது.
சிறுதோட்ட உடைமையாளர் எனும் இலக்கு தனியே தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கான தீர்வு மாத்திரமல்ல, அது ஐந்தாவது தலைமுறையான இன்றைய மலையக தலைமுறையின் நாகரீகமான அரசியல், சமூக இருப்புக்கான கோரிக்கையாகும் என்பதைப் புரிந்து கொண்டு இன்றைய இளைய தலைமுறை அதனை உரையாடவும் வென்றெடுக்கவும் முன்வரவேண்டும் என்றார்.
( நன்றி வீரகேசரி )