இந்திய புலமைப்பரிசில் திட்டமும்  தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளும் 

மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் இருந்து மீண்டும் இந்தியா திரும்பி தேச விடுதலை போராட்டத்தை ஆரம்பித்த நாளை ( ஜனவரி 9) சிறப்பிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின விழா ஆண்டுதோறும் உலகெங்கிலும் உள்ள இந்திய உயர்ஸ்தாணிகர் காரியாலயங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் கண்டிக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் ( 19-01-2021) கண்டி மாவலி ரீச் விருந்தகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் செய்திக்குறிப்பு 
இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தின் ஊடாக கடந்த எழுபதாண்டுகளுக்கு மேலாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் ஆற்றி வரும் அளப்பரிய பணியை அதன் பயனாளிகளில் ஒருவனாக நன்றியுடன் நினைவு கூர்வதோடு, தொழிலாளர் பிள்ளைகளுக்கு என ஒதுக்கீடு செய்ய இந்திய அரசாங்கம்  முன்வரவேண்டும் என முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

2021 – கண்டியில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் தின விழாவில்
அவர் மேலும் உரையாற்றுகையில்,
மலையகத் தமிழர்களாகிய நாம் இந்திய வம்சாவளி யினர் என்பதுதான் எமது வரலாறு. அந்த வரலாற்றின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பதே இந்திய உயர்ஸ்தாணிகரகத்தின் கண்டி காரயாலயம்.  1947 ஆம் ஆண்டுமுதல் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகையாக மாதாந்தம் வழங்கி வரும் பங்களிப்பினை அதன் பயனாளிகளில் ஒருவனாக வரவேற்கின்றேன்.
2019 – இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்ற போது அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஶ்ரீமத் சுஷ்மா சுவராஜ் உடனான சந்திப்பின்போது….
அதே நேரம் அவ்வாறு வழங்கப்படும் உதவுதொகை உயர்தர மாணவர்களுக்கு ஐநூறு ரூபா, பல்கலைக் கழக மாணவர்களுக்கு 1500/- ரூபா என்ற அளவிலேயே நீண்டகாலமாக இருந்து வருகிறது. அதனை அதிகரிப்பதற்கு முன்னைய டெல்லி பயணங்களின்போது வெளிவிவகாரத்துறை அமைச்சராகவிருந்த மறைந்த சுஷ்மா சுவராஜ் அம்மையாரிடம் முன்மொழிவு செய்துள்ளேன்.
தவிரவும் இந்திய அரசாங்கத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்தியாவில் பட்டப்படிப்பு பெறுவதற்காக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு என ஒரு தொகையை ஒதுக்கீடு செய்வதிலும் அம்மையார் கொள்கை அளவில் இணங்கி இருந்தார். இந்த இரண்டு விடயங்களிலும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகரகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என எனது கோரிக்கையை வலியுறுத்த விரும்புகிறேன்.
2022 ஆம் ஆண்டு இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் 75 ஆண்டு நிறைவினை அடைகிறது. 1947 ஆம் ஆண்டு அமரர் அனி அவர்களினால் தாபிக்கப்பட்ட இந்த அமைப்பில் உதவி பெற்று கல்விகற்ற பலர் இன்று பல உயர்ந்த பதவிகளில் உள்ளனர். அவர்களது சாதனைகளைக் குறிக்கும் ஒரு நினைவு மலரை 75 வது ஆண்டு நிறைவாகக் கொண்டுவருவது மலையகக் கல்வி வளர்ச்சியின் ஓர் அடையாளமாகவும் இந்திய அரசாங்கத்தின் பணிகளின் ஒரு மீளாய்வாகவும் அமையக்கூடும். 1998 ஆம் ஆண்டு அத்தகைய ஒரு ஆவணம் வெளியிடப்பட்டுள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

2011- டில்லியில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் தின விழாவில் உரையாற்றிய தருணம்
இத்தகைய உதவிகளைப் பெற்று கல்வி கற்றோர் இன்று கல்வியாளர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, வெளிநாட்டு தூதுவர்களாக, பேராசிரியர்களாக, உயர் தொழில் துறையினராக,  வளர்ந்திருக்கக் கூடிய பலரது சாதனைகள் பதிவு பெறுவது அவசியமாகும். அதுவே அவர்களது ஒன்று கூடல் நிகழ்வாக அமையுமெனில் மேலும் சக்தி மிக்கதாக இருக்கும் இது ஒரு வகையில் இந்த நிதியத்தினை மேலும் சக்தி மயப்படுத்துவதற்கும் எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமையும்  இந்திய வெளிவிவகார அமைச்சரின் அண்மைய விஜயத்தின்போது இந்தியாவில் வாழும் அகதிகளை திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு வட கிழக்கு அரசியல் தலைமைகள் கோரிக்கை விடுத்ததாக அறிந்தேன்.
ஆனால் இந்தியாவில் வாழும் அகதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் மலையகத்தில் இருந்து வன்னி சென்று அங்கிருந்து அகதியாகப் போன இந்தியா வம்சாவளி தமிழர்கள் என்றவகையில் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கடந்த வருடம் ஆவணங்களுடன் விடுத்த வேண்டுகோளை நினைவுபடுத்த விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளின் இந்திய புலமைப்பரிசில் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் (வீரகேசரி 21-01-2021)