இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் பொதுவானதாக அரசியலமைப்பு அமையவேண்டும்

– சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் கலந்துரையாடலில் திலகராஜ்

இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சி மீண்டும் பேசுபொருளாகி இருக்கும் நிலையில் உத்தேச அரசியல மைப்பானது எந்தவொரு இனத்தினருக்கோ, மதத்தினருக்கோ அல்லது குறித்த மொழிசார்ந்தவருக்கோ ஆனது என்ற உணர்வைத்தராத வகையில் அமைவதாக, இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் பொதுவானதாக உணரக்கூடியதான அடிப்படைகளைக் கொண்டிருத்தல் வேண்டும் என முன்னாள் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் அமைப்பு நிபுணர்களும் அரசியல் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் இணைத்ததான கருத்தாடல், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் இணைய வழியூடாக நடைபெற்றது.

திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அத்துலசிரி சமரநாயக்கவின் நெறிப்படுத்தலில் பேராதனைப் பல்கலைக்கழக சட்டபீடத் தலைவரும் முன்னாள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவியுமான பேராசிரியை தீப்பிக்கா உடுகம, சட்டத்தரணி மீரா மொஹிதீன் பாஹீஜ், முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

இந்த கருத்துரையின்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது முழுமையான உரை பின்வருமாறு:

அடிப்படைத் தத்துவம்

அரசியலமைப்புக்கான அடிப்படைத்தத்துவமானது, அரசியலமைப்பானது இன, மத, மொழி சார்ந்ததாக அமையப் பெறாது இலங்கைப் பிரஜை என்ற அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வகுக்கப்படுதல் வேண்டும். பிரஜை என்போர் எவ்வித பேதப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படமாட்டார் என்பது அடிப்படைக் கொள்கையாதல் வேண்டும். தேசிய கொள்கைகள் காலத்துக்கு காலம் மதிப்பாய்வு (Policy Evaluation) செய்யப்படுதல் வேண்டும். குறிப்பாக அபிவிருத்தி விடயங்கள் சார்ந்த தேசிய கொள்கைகள் காலத்துக்கு காலம் கண்காணிப்பு (Scrutinizing) செய்யப்படுவதுடன் புதுப்பிக்கப்படும் கொள்கைகள் நாட்டு மக்களின் இறைமையை பாதிப்பதாக இல்லாமல் அமைவதை அரசியலமைப்பு உறுதி செய்தல் வேண்டும்.

மக்களின் இறையாண்மை என்பது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அத்தகைய இறையாண்மை நிர்வாக அதிகாரங்களையும், அடிப்படை உரிமைகளையும், வாக்குரிமையையும் உறுதி செய்வதாக அமைதல் வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ஏற்றுக் கொண்ட சிவில், அரசியல் உரிமைகள், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள், இனப்பாகுபாட்டை அகற்றுவதற்கான உடன்படிக்கை ,பெண்களுக்கு எதிரான அனைத்துவகை பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான உடன்படிக்கை, குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை, சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் பற்றிய உடன்படிக்கை, கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை போன்ற உடன்படிக்கைகளும் மரபுரிமைகளும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படுவது அடிப்படையாக கொள்ளப்படுதல் வேண்டும்.

அரசின் தன்மை

இலங்கை ஒரு மதச்சார்பற்ற, பல்லினங்கள் வாழும், பல்கலாசார ஜனநாயக நாடு என அரசியலமைப்பில் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

எனினும் சுதந்திரந்துக்குமுன் இருந்து 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கம் வரை பௌத்த மதத்தை அரசியலமைப்பு போஷிப்பதாக இருக்கவேண்டும் என்ற நிலை உருவானதால் அத்தகைய ஒரு சரத்தினை மாற்றிக் கொள்வதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை நாம் யதார்த்தமாக உணர்ந்தவர்களாக உள்ளோம். கடந்த நல்லாட்சிகால முன்மொழிவுகளில் அத்தகைய முயற்சி எடுக்கப்பட்டபோது அதற்கு பாரிய எதிர்ப்பலை வந்ததோடு அதற்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட யோசனைகளில் பௌத்தத்திற்கு முன்னுரிமை என்ற கருத்தே பரவலாகக் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே பௌத்தத்திற்கு முன்னுரிமை என அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட வேண்டியது பெரும்பாலானவர்களின் அபிலாஷையெனில், ஏனைய மதங்களும் நம்பிக்கைகளும் சுதந்திரமாக இயங்குவதனையும் அரசியலமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுதல் வேண்டும். அத்துடன் பிரஜையொருவர் மதம் ஒன்றை பின்பற்றாதிருப்பதற்கு உள்ள உரிமையும் அரசியலமைப்பு உறுதி செய்தல் வேண்டும்.

இலங்கை நாட்டின் பெயர், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என்பதாகவே இருக்கலாம். தற்போதைய தேசிய கொடியின் மீது சிறுபான்மை தேசிய இனங்களுக்கு விமர்சனம் உள்ளபோதும் அதில் வழங்கப்பட்டிருக்கக்கூடிய குறைந்தபட்ச அங்கீகாரத்தையும் தனிநபரோ அல்லது அமைப்புகளோ தன்னிச்சையாக நீக்குவதான சந்தர்ப்பங்களை அரசியலமைப்பு தடைசெய்யும் ஏற்பாடுகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

இந்த நாட்டில் சிறுபான்மை தேசிய இனம் என்றவகையில் மலையகத்தவனாக அரசியல் உரிமை நீக்கம் செய்யப்பட்ட சமூகத்தில் இருந்து அதன் வலியை உணர்ந்து வந்தவன் என்றவகையில் எங்களது அடையாளம் இன்னும் இந்தியத் தமிழர் என இலங்கையில் பதிவு செய்யப்படுவது எங்களை இலங்கை தேசத்தில் இருந்து அந்நியப்படுத்தி வைப்பதான உணர்வு என்னிடத்தில் உண்டு.

இந்தியாவில் இருந்துவந்து இருநூறு வருடங்களை அடையும் மலையகத் தமிழர்கள், இப்போதாவது இலங்கை அரசியலமைப்பில் முழுமையான இலங்கை பிரஜையாக உணரும் ஏற்பாடுகளை எதிர்பார்க்கின்றேன்.

அந்தவகையில், மலையகத் தமிழ் இனத்தைக் குறிக்கும் நிற அடையாளமும் தேசிய கொடியில் மேலதிகமாக சேர்க்கப்படுதல் வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

தேசியகீதம் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பாடப்படுவதை அரசியலமைப்பு உறுதி செய்தல் வேண்டும்.

பாகுபாடு அற்ற குடியுரிமை உறுதி செய்யப்படல் வேண்டும். பதிவுப் பிரஜை எனும் வகுதி அகற்றப்படுதல் வேண்டும். பிறப்புச் சான்றிதழ் சகலருக்கும் ஒரே வடிவமைப்பிலானதாக மும்மொழிகளிலும் எழுதப்பட்டதாக இருத்தல் வேண்டும். (புதிய தேசிய அடையாள அட்டையில் உள்ளது போன்று).

இலங்கையில் தொடர்ச்சியாக ஐந்தாண்டு காலம் வாழ்ந்த ஒருவர் நிரந்தர வதிவிட (PR) வாய்ப்பு பெறவும், தொடர்ந்து பத்து ஆண்டுகள் வாழ்ந்த ஒருவர் குடியுரிமை பெறவும் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.

இலங்கையில் பிறந்தவராயினும் அவர் வேறு ஒரு நாட்டின் பிரஜைக்குரிய அந்தஸ்த்தை பெற்றிருக்கும் பட்சத்தில் இலங்கையில் அரசியல், நிர்வாக, பாதுகாப்பு துறைகளில் பதவியைப் பெறுபவராயின் பிறநாட்டு பிரஜாவுரிமை கைவிடல் வேண்டும்.

உரிமைகள்

அடிப்படை உரிமையாக மனசாட்சி சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், மத சுதந்திரம் , மதமற்று இருப்பதற்கான சுதந்திரம், வாழ்வதற்கான சுதந்திரம், காணி உடமைச் சுதந்திரம் – (வீட்டுக்கும் வாழ்வாதாரத்துக்குமான காணி ) சகல பிரஜைகளுக்கும் உறுதி செய்தல் வேண்டும்.

தனி நபர் பாதுகாப்புக்கான உரிமை, தொழில்உரிமை, தொழிற்சங்க உரிமை, சமத்துவமான கல்விக்கான உரிமை, பொது சுகாதார சேவைகளைப் பெறும் உரிமை, உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை ( இதனை உபசட்டங்களைக் கொண்டு தடுக்க முடியாத வகையில்) உறுதி செய்யப்படுதல் வேண்டும்

ஜனநாயக உரிமைகளாக கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், அமைதியாக ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், தகவல் அறியும் சுதந்திரம், சகல பிரஜைகளுக்கும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கும், போட்டியிடுவதற்கும், சேவையாற்றுவதற்குமான சுதந்திரம் ஆகியனவும், நடமாடுவதற்கான உரிமைகளாக இலங்கையில் எப்பகுதிலும் வாழ்வதற்கான சுதந்திரமும், இலங்கையை விட்டு வெளியேறுவதற்கான சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

சட்ட உரிமைகள் எனும் வகையில் நீதியையும் சட்டத்தையும் நியாமாக அமுலாக்குவதன் ஊடாக அனுபவிக்கும் சுதந்திரம். சட்டத்துக்கு முன் சமமாகவும் நியாயமாகவும் நடத்தக் கோருவதற்கான உரிமை, தடுப்புக் காவலில் வைக்க நேரிடும் இடத்து சட்ட உதவிகளைப் பெறும் உரிமை, சட்ட ஆலோசனை சேவை பெறும் உரிமை ஆள்கொண்ரவு மனுவுக்கான உத்தரவாதம், சட்டத்தின் முன் கைதான ஒருவர் அதனது தாய்மொழியில் வாக்குமூலம் வழங்கவும், தாய்மொழி தவிர்ந்த மொழிகளில் வாக்குமூலம் வழங்க மறுக்கவோ அல்லது தாய்மொழி தவிர்ந்த மொழி ஒன்றில் தயாரிக்கப்பட்ட எழுத்து மூல வாக்கு மூலத்தில் கையொப்பம் இடாமல் மறுப்பதற்கான உரிமை, நீதிமன்ற நடவடிக்கைகளின்போது தனது தாய்மொழியில் மொழிபெயர்ப்பைக் கோரும் உரிமை, நீதியும் நியாயமானதுமான விசாரணையைக் கோரி நிற்பதற்கான உரிமை, குற்றம் நிரூபிக்கப்படும்வரை நிரபராதி ஆக கருதப்படுவதற்கான உரிமை உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

சமத்துவ உரிமைகள் எனும் வகையில் இலங்கை ஒரு பல்லினத்துவ நாடு என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு இனமும் தேசிய அடையாளத்தை உறுதி செய்ய வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும். இனம் / பால்/ மதம் / வம்சாவளி / மொழி சார்ந்த தேசியங்களை சமத்துவமாக நடாத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

இலங்கை நாட்டிற்குள் ‘இந்திய தமிழர்’ எனும் இன அடையாளம் நீக்கப்பட்டு இந்திய வம்சாவளியினரான அந்த மக்கள் தமது பண்பாட்டு அடையாளமாக வளர்த்தெடுத்துள்ள ‘மலையகத் தமிழர்’ எனும் அடையாளம் சனத்தகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படுதல் வேண்டும். தேசிய சிறுபான்மை இனத்தேசிய பண்பாட்டு அடையாளங்கள், மரபுரிமைகள், தொல்லியல் சிறப்பியல்புகள், கலை, கலாசாரங்கள், இலக்கியம், அரங்கம் போன்றனவற்றை பேணுவதற்கும் பாதுகாப்பதற்குமான உரிமை.

தனிநபர் உரிமைகளாக சட்டப்பாகுபாட்டில் இருந்து பாதுகாப்பு, இலவச கல்வியை அனுபவிப்பதற்கான உரிமை, இலவச பொது சுகாதாரத்தைப் பெறும் உரிமை, அந்தரங்க வாழ்க்கை பாதுகாப்பு உரிமை, பால் (Gender) ரீதியான உரிமை, மாற்றுப்பாலின உரிமை, இன, மத, சாதி பாகுபாட்டுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான உரிமை மாற்றுத்திறனாளிக்கான, மாற்றுப்பாலின பொதுவசதிகள் பெறும் உரிமைகள் அரசியலமைப்பில் உறுதிசெய்யப்படுவதுடன் குழு உரிமைகளாக இனத்தேசியமாகவும், சமூகக் குழுமமாகவும் அடையாளத்தைப் பேணும் உரிமை உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

கூட்டு உரிமைகளாக நிலைபேறான இயற்கை சூழல் பேணப்படுதல், இயற்கை வளம் சூறையாடப்படாமல் இருப்பதற்கான உரிமை, சமூக நீதியைப் பெறுவதற்கான உரிமை, அரச பொது நிர்வாக சேவையை நியாயமான முறையில் பெறுவதற்கான உரிமை, நுகர்வோர் உரிமைகள் போன்றவற்றுடன், பிரிக்கப்படமுடியாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வினை உறுதிசெயவதாகவும் இருத்தல் வேண்டும்.

ஏக்கிய, எக்சத் – ஒற்றையாட்சி, ஒருமித்த போன்ற சொல்லாடல் குழப்பங்களை தவிர்த்து அதிகாரபகிர்வின் ஊடாக மக்களை சக்திமயப்படுத்தும் ஆட்சி முறைமை குறித்த அவதானமே அவசியமானதாகும்.

‘அரசியலமைப்புக்கான அடிப்படைத் தத்துவங்களும், அரசின் தன்மையும்’ எனும் தலைப்பில் உரைகள் அமைந்தபோதும் உரையாடல்களின் போது அரசியலமைப்பு தயாரிப்பு முறைமை குறித்த இரண்டு முக்கிய விடயங்கள் அவதானத்தைப் பெற்றன.

மாற்றப்பட முடியாத அரசியலமைப்பு அடிப்படைத் தத்துவங்களை உருவாக்கிக் கொள்ள முடியுமா ? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஜயம்பத்தி விக்ரமரட்ண முன்வைத்த கேள்வியும், கலாநிதி சுஜாத்தா கமகே முன்வைத்த அரசியலமைப்பு பேரவை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அரசியலமைப்பு உருவாக்க பணிகளை முன்னெடுத்தல் என்பது அரசியலமைப்பு சபை ஒன்றுக்காக தனியான தேர்தலை நடாத்தி உறுப்பினர்களைத் தெரிவு செய்துகொள்வதன் மூலம் ஆளும் அரசாங்கங்களுக்குத் தேவையான நிபுணர்களை நியமித்து அரசியலமைப்பை உருவாக்க முனையும் கைங்கரியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் கருத்தாடல் இடம்பெற்றது.

கூடவே புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவைப்பாட்டுக்கான தூரநோக்கம் பற்றிய ஆய்வும் கலந்துரையாடலும்கூட அடுத்தடுத்த உரையாடல்களில் மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் உடன்பாடு எட்டப்பட்டது.

22/01/2021- Virakesari