ஆயிரம் ; தொகையல்ல குறியீடு 

-மல்லியப்புசந்தி திலகர்

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி சரியாக ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வரையான நாட்சம்பளம் வழங்கப்படும் என வரவு செலவுத்திட்டத்தில் அறிவித்த நிலையிலும் 2021 ஜனவரி 15 ல  அதற்கான பதிலாக கிடைத்திருப்பது 1105/= நாட்சம்பளம் என்ற முதலாளிமார் சம்மேளனத்தின் முன்மொழிவு .

 

கபடக்கணக்கு

அடடே … ஆயிரம் ரூபா கேட்டவர்களுக்கு அதற்கும் மேலதிகமாக 105/= சேர்த்து கொடுத்துவிட்டோம் என கணக்கு விடும் கம்பனிகளின் கபடத்தனமே இது.
இந்த 1105/= ரூபா எவவாறு கணக்கிடப்படுகிறது என்பதில் இருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம். முதலில் 105/= ரூபாவை எடுத்துக்கொள்வோம்.

105/- எப்படி வருகிறது ?

தொழிலாளி ஒருவரின் அடிப்படை நாட்சம்பளத்தில் 12 % ஐ தொழில் வழங்குனர் மாதாந்தம் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ( EPF) செலுத்த வேண்டும் என்பது ஊழியர் சேமலாப நிதிய நியதிச் சட்டம். இந்த நிதியத்துக்கு தொழிலாளர்களும் தமது பங்கிற்கு 10% செலுத்த வேண்டும் என்பதும் சட்டத்தில் உள்ளது. மேலதிகமாக 3 % ஐ ஊழியர் நம்பிக்கை நிதியத்துக்காக தொழில் வழங்குனர் வழங்குதல் வேண்டும் என்பதுவும் தனியான நியதிச் சட்டம்.

இதன் பிரகாரம் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 15 % தொழில் வழங்குனரும் 10 % வீதம் தொழிலாளர்களும் நிதியத்துக்கு செலுத்திவைக்க வேண்டியது, அவர்கள் வயோதிப காலத்தில் வேலையை விட்டு விலகிச்செல்லும்போது அதற்குப் பின்னான வாழ்க்கைக்கான சமூக பாதுகாப்புத் தொகையாகும். இது ஒரு வகையில் சேமிப்பு ஆகிறது. இதனை தொழிலாளி ஒருவர் 55 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வேலையைவிட்டு நீங்கியபிறகு வட்டியுடன் மீளப்பெற்றுக்கொள்ளக்கூடியது.

ஆனால், தற்போது கம்பனிகள் முன்வைத்துள்ள முன்மொழிவில் தாம் நிதியத்துக்கு செலுத்தும் 15% ஐயும் ( EPF 12%+ETF3%) கணக்கிட்டு நாள் சம்பளத்தில் சேர்க்கின்றன. அதாவது இன்றைய நாள்சம்பளத்தை 25-30 வருடங்கள் கழித்து தொழிலாளி பெறவேண்டும் என்கிற புதுவிதமான ஒரு (அ)நியாயம்.

இப்போது இவர்களின் 1105/= ரூபா தொகையில் இந்த 105/= இப்படித்தான் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே அடிப்படைச்சம்பளம் நாள் ஒன்றுக்கு 700/= தான் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. 12+3/100×700 = 105 என்பதே அந்தக் கணிப்பீடு.

 

தொழில் வழங்குனரின் பங்களிப்பை நாள் சம்பளத்துடன் கூட்டிப் பார்த்தால் தொழிலாளர்களின் பங்களிப்பை கழித்துப் பார்க்க வேண்டுமே என ஒரு வாதத்திற்கு இப்படி ஒரு கணிப்பீடு செய்தால்,  அதாவது தொழிலாளியின் பங்களிப்பு 10 சதவீதமும் இப்போது அவர்களது கைக்கு கிடைப்பதில்லை. எனவே 10/100x 700 = 70 எனப்பார்த்தால் அடிப்படைச் சம்பளமாக தொழிலாளி கைக்கு கிடைப்பது 630/- மட்டுமே

 

எனவே அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட 1000/= அடிப்படைச்சம்பளம், ‘தைப்பிறந்தால் வழிபிறக்கும்’ என்ற தத்துவம் எல்லாமே தவிடுபொடியாகியுள்ளது.

விலைசகாய படி நீக்கம்

கூடவே 700/= அடிப்படைக்கு மேலதிகமாக இப்போது நடைமுறையில் உள்ள விலை சகாயப்படி (PSS – Price Share Supplement) 50/= முற்றாக புதிய முன்மொழிவில் நீக்கப்பட்டுள்ளது. இது 700/= அடிப்படைக்கு மேலதிகமாக நிரந்தரமாக கடந்த இரண்டு ஆண்டுகளும் கொடுக்கப்பட்டு வந்தது.

 

வரவுக் கொடுப்பனவு 150/-

இதற்கு மாற்றமாக இனி வரவுக் கொடுப்பனவு 150/= எனும் முன்மொழிவைப் பார்ப்போம். மாதம் ஒன்றில் கம்பனிகள் வழங்கும் வேலை 25 நாட்களாக இருந்தால் (வருடாந்தம் வழங்கப்படும் வேலைநாட்கள் 300 ஆக இருக்க வேண்டும் என மூல கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு சரத்து உண்டு. ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவது இல்லை) அதில் 19 (18.75) நாட்கள் வேலைக்குச் சென்றிருந்தால் மாத்திரமே ஒரு நாளைக்கு 150/= வீதம் 19 நாட்களுக்கும் கிடைக்கும். தற்செயலாக 18 நாட்கள்தான் ஒரு தொழிலாளி சமூகமளித்திருந்தால் ஒட்டுமொத்த 18 நாட்களுக்குமான அந்த 150/= கிடைக்காது. எனவே 19 நாள் வேலைசெய்தால் 19×150=2850/= கிடைக்கும்.

18 நாட்கள் அல்லது அதற்கு குறைவாக வேலை செய்திருந்தால் 18×0=0 வரவுக் கொடுப்பனவு அறவே கிடைக்காது. எனவே மாத த்தில் வேலை செய்ய நாட்கள் முழுவதற்குமாக நாளுக்கான அடிப்படைச் சம்பளம் 700/= மட்டுமே கிடைக்கும். மழையும் குளிரும் நிறைந்த காலநிலையில் மலையேறி, குளிரில் நடுங்கி வேலை செய்யும் தொழிலாளி சுகவீனத்தினாலோ அல்லது வேறு காரணத்திற்காகவோ வழங்கும் வேலை நாட்களில் 75 சதவீமான அளவுக்கு குறைவாக சமுமளித்திருந்தால் இந்த சம்பளம் அவர்களைச் சென்றடையாது. எனவே நிபந்தனை அடிப்படையிலான இந்த வரவுக் கொடுப்பனவு முறைமையை நாட்சம்பள அதிகரிப்பாகக் கருத முடியாது.

உற்பத்தித்திறன் கொடுப்பனவு 150/- 

உற்பத்தித் திறன் கொடுப்பனவு 150/= என்பதும் இதேபோன்ற ஒரு நிபந்தனைத் தொகைதான். ஒரு நாளைக்கு 20 கிலோ கொழுந்துக்கு மேலதிகமாக எடுத்தால்தான்( இந்த கிலோ அளவு மாறுபடலாம். இரப்பருக்பும் ஒரு அளவு உண்டு ) இந்த 150/= கிடைக்கும். தேயிலை உற்பத்தி வறட்சியினால் வீழ்ச்சி அடைந்தால் அல்லது ஒரு தொழிலாளி தனது சாதாரண உழைப்பால் அதனை அடைய முடியாது போனால் இந்தத் தொகைக் கிடைக்காது.

எப்போதாவது ஒரிரு தொழிலாளிகள்  எடுத்த இந்த நிறையளவைக் காரணம் காட்டி கம்பனிகள் இதனை ஒரு கணக்காக் காட்டுகின்றன. ஆனால் ஒரு நாளைக்கு 14 கிலோ கொழுந்து தான் சாதாரண உழைப்பாளி ஒருவரால் எடுக்க முடியும் என்பதே இதுவரையான சராசரி ஓர் ஆய்வு அளவாகும்.

இந்த சுமையை அவர்கள் சுமந்தபடி நிலுவை செய்யும் மத்திய இடத்திற்கு வரவேண்டும். அதிலும் தண்ணீர் சேர்த்த பாரம் என்றும், தட்டுப்பாரம் ( தராசில் தேயிலையைக் கொட்டும் தட்டு) என்றும், தரக்குறைப்புக்கான கழிவு என்றும் மொத்த கிலோவில் 2 முதல் 3 கிலோ கணக்கில் சேர்ப்பதில்லை. இப்படியாக இந்த உற்பத்தித் திறன் கொடுப்பனவு தொழிலாளிக்கு சென்று சேராமல் இருப்பதற்கான ஏற்பாடுகளே அதிகம்.


மேலும் இவை இரண்டும் புத்தம் புதிய முன்மொழிவுகளும் கூட இல்லை. இந்த இரண்டு நடைமுறைகளும் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் கூட்டு ஒப்பந்த சரத்துகளாகச் சேர்க்கப்பட்டு பிறகு சிக்கல்களை உணர்ந்து அகற்றப்பட்ட முறைமைகள்தான்.

இப்படியாகக் கபடத்தனமான கணக்கு காட்டுதல் மூலமாக 1105/= நாட்சம்பளம் என முன்மொழிவில் காட்டப்பட்டாலும் 700/= மட்டுமே நிரந்தரமானது. இருந்த நிரந்தர 50/= தொகையும் இல்லாமல் ஆக்கப்படுகிறது.

தோல்வியடைந்த முறைமை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள இங்கே உள்ள பிரச்சினை 1000/= அல்ல. ஆயிரம் என்பது ஒரு குறியீடு எனக் கொள்ளுதல் வேண்டும். அது இப்போது நடைமுறையில் உள்ள குறைபாடு என கொள்ளுதல் வேண்டும். கடந்த 25 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் இந்தத் முறைமை ‘தோல்வி’ கரமான ஒரு முறைமை என்பதன் குறிகாட்டியாக பின்வருவனவற்றைக் கொள்ளலாம்.
தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும் 1000/= அடிப்படை சம்பளம் என்பதை பெற்றுக் கொள்ள முடியாத தொழிலாளர்கள் பக்கமும் தோல்வி
தொடர்ச்சியாக தாம் நட்டத்தில் இயங்குவதாகக் கூறும தோட்டக் கம்பனிகளால் ‘நட்டம்’ என்ற சொல்லினால் உணர்த்தப்படுவது தோல்வி. ஏனெனில் 25 ஆண்டுகளில் பயிர்ச்செய்கை பரப்பளவு நிலம் வெகுவாக குறைந்துள்ளது. தொழிலாளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. உற்பத்தி அளவு குறைவடைந்துள்ளது. ஏற்றமதி வருமானம் ‘ பெருந்தோட்டத்துறையில்’ இருந்து குறைவடைந்துள்ளது.எனவே தொழில் தருனர் பக்கத்திலும் தோல்வி.

கடந்த நல்லாட்சி அரசாங்கம் அரச மானியமாக நாளாந்தம் 50/ பெற்றுக் கொடுக்க பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு (ஒன்றுக்கு இரண்டு தடவைகள் ) பெறுக் கொடுக்க எடுத்த முயற்சிகள் தோல்வி.

தற்போதைய அரசாங்கம் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெறுக் கொடுக்க 2020 ஜனவரியில் அனுமதித்த அமைச்சலவைப் பத்திரம் தோல்வி.அதுவும் ‘நிறைவேற்றதிகார ஜனாதிபதி’ சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் தோல்வி.
தற்போதைய அரசாங்கம் 2021 ஜனவரி முதல் ஆயிரம் ரூபா நாள் சம்பளம் வழங்குவதாக வரவுசெலவுத்திட்டத்தில், அதுவும் நாட்டின் பிரதமரே அறிவித்த தொகை தோல்வி.

இவ்வாறு தொழிலாளர் – தொழில் வழங்குனர் – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு- பிரதமர் ( வரவு செலவுத்திட்டம் , பாராளுமன்றம்) – நிறைவேற்றதிகார ஜனாதிபதி, அமைச்சரவை என எல்லாத்தரப்பு முயற்சிகளும் தோல்வி அடைந்த ஒரு தோல்வி முறைமையே இப்போது பெருந்தோட்டப் பொருளாதாரத்தில் நடைமுறையில் உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

 

அரசாங்கம் தோட்டங்களைப் பொறுப்பேற்றால்… ?

இதற்கான மாற்று வழிகளாக அரசாங்கம் தோட்டங்களைப் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதில் எந்த முன்னேற்றமும் நிகழப்போவதில்லை. ஏற்கனவே 200 வருட கால பெருந்தோட்ட வரலாற்றில் பத்துசதவீதமான காலப்பகுதியில் ( 1972 முதல் 1992 வரையான இருபது ஆண்டுகள்) மட்டுமே அரசாங்கம் பொறுப்பேற்று நடாத்தியது. அப்போது தாம் நட்டமடைந்ததாக கூறியே, 1992 ஆம் ஆண்டு மீண்டும் ( உள்நாட்டு) தனியாருக்கு ஒப்படைத்தார்கள். எனவே அரசாங்கம் ஏற்று நடாத்தினாலும் தோல்வி.

ஆனால், அரசு வெற்றிபெற்ற புள்ளியும் இங்கேதான் இருக்கிறது. 1972 ஆண்டு காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் பிரித்தானிய கம்பனிகளிடம் இருந்து பெருந்தோட்டங்களைப் பொறுப்பேற்ற அரசு, 1992 ஆம் ஆண்டு மீளவும் உள்நாட்டு தனியாருக்கு தோட்டங்களை முகாமிக்க பகிரந்தளித்தபோது மேல்நிலைத் தேயிலையின் ( High grown tea) 98 சதவீதப் பகுதியையும் , மத்திய நிலத் தேயிலையின் ( Mid grown tea ) 25 சதவீத பகுதியையும், தாழ்நிலத் தேயிலையின் ( low grown) 5 சதவீதப் பகுதியையும் வழங்கியது. மறுபக்கமாக சொன்னால் தாழ்நிலத்தேயிலையின் 95 சதவீதமான பகுதியை அங்கு வாழும் மக்களுக்கு பகிரந்தளித்துவிட்டது. மத்திய நிலத்தேயிலையின் 75 சதவீத்த்தை அங்கு வாழும் மக்களுக்குப் பகிரந்தளித்து விட்டது. எஞ்சிய உயர்நிலத் தேயிலையின் 98 சதவீத்தை தனியார் பிராந்திய கம்பனிகளுக்கும் ( RPC) ஏனைய 2 சதவீத்த்தை அரசும் நடாத்தி நட்டத்தில் இயங்க வைத்துள்ளது.

தேயிலை வகையும் ஏற்றுமதி நிலையும்

இப்போதைய புள்ளிவிபரங்களின்படி மக்களுக்கு பகிரந்தளிக்கப்பட்ட தாழ்நில, மத்திநில ( lowgrown and mid grown) தேயிலை உற்பத்தியில் இருந்தே 72 சதவீதமான ஏற்றுமதி இடம்பெறுகிறது. எனவே வெற்றிபெற்ற முறைமை என்பது மக்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்ட பகுதியில் இருந்தே கிடைந்துள்ளது. இத்தனைக்கும் அங்கு மொத்த தேயிலை உற்பத்தி நிலத்தின் 30 சதவீதமான பகுதியே உள்ளது. அவை மக்களின் ( சிறு தோட்ட )உடமையாக உள்ளது. அதில் இருந்து 72 சதவீதமான ஏற்றுமதி கிடைக்கிறது. அந்த மக்கள் ஆயிரம் ரூபா வேண்டும் என கோஷம் எழுப்புவதில்லை. தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்படும் 98 சதவீத ஆய்வுகள் சிறு தோட்டங்களை முன்னேற்றும் நோக்கம் கொண்டன.


மாறாக மொத்த தேயிலை உற்பத்தி நிலத்தில் 70 சதவீத்த்தை உயர் தேயிலை நிலங்கள் ( high grown ) கொண்டுருக்கின்றன. அவை கம்பனிகள், அரச கூட்டுத்தாபனங்கள் வசமே உள்ளன. 28 சதவீத ஏற்றுமதியையே செய்கின்றன. நட்டத்தில் இயங்குவதாகவும் சொல்கின்றன. நிலத்தை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கத் தயங்குகின்றன.அவர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக்குவதற்கு பதிலாக ‘அவுட்குரோவர் முறைமை’ ( உற்பத்தித் திறன் முறை என்பது இதுதான்) என கம்பனிகளே அரசின் நிலத்தை வைத்துக் கொண்டு தொழிலாளர்களை அதில் கூலிகளாக வைப்பதற்கே முயற்சிக்கின்றன.

( இந்த முறைமை முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் EPF / ETF முற்றாக இல்லாமல் செய்யப்படும் அபாயம் உள்ளது) தொழிலாளர்கள் தொடர்ந்தும் 1000/= என கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கின்றனர்.

 

இந்தக் கதைத் தொடரின் முக்கிய திருப்பம் இனித்தான் வரப்போகிறது. உயர்நிலத் தேயிலை உற்பத்தியில் 99.9 சதவீதம் “தமிழ் தொழிலாளர்களும்”, மத்திய மற்றும் தாழ் நிலத்தேயிலையில் 99சதவீதம் “சிங்கள  சிறுதோட்ட உடமையாளர்களும் ” உள்ளனர்.

 

1000 தொகையல்ல குறியீடு

எனவே 1000 என்பது தொகை அல்ல ஒரு குறியீடு என்பது இப்போது புரிந்திருக்கும். இங்கே சிங்கள மக்களை குறை சொல்வதற்கு இல்லை. அவர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக இருப்பதில் எமக்கு ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அந்த உரிமையை தமிழ் தொழிலாளர்களுக்கு ( அல்லது மலையகத் தமிழ் மக்களுக்கு ) வழங்க முடியாது என்கிற ‘தத்துவார்த்தமே’ இந்த 1000/- பிரச்சினையின் அடிப்படையாகும்.

இலங்கை அரசு ( அது எந்த அரசாங்கமாக இருந்தபோதும்)  மலையகத் தமிழ் மக்களுக்கு காணியைப் பெற்றுக் கொடுக்க திறந்த மனதோடு முன்வரவில்லை என்பதே இந்த பிரச்சினையின் பிரதான மையப் புள்ளி ஆகும்.

இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு எடுக்க இலங்கையை பௌத்த தேசமாக நிறுவுவதற்கு தத்துவார்த்தத்தை வழங்கிய அநகாரிக்க தர்மபாலவின் கருத்து நிலை ஆழ வேரூன்றி உள்ளது. பிரித்தானியருக்கு எதிரான கருத்து நிலையில்  இலங்கை மண்ணை மீட்டு பௌத்த அரசை நிறுவும் அவரது கோட்பாட்டில், அந்த பிரத்தானியரால் அழைத்து வரப்பட்ட இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள்களுக்கு இலஙலகையில் இடம் இருக்கவில்லை. எனவேதான்

1. 1948 ல் அவர்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கியிருந்த குடியுரிமை சுதேச அரசினால் பறிக்கப்பட்டது
2. 1964 ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து நாடு கடத்தப்பட்டது
3. பிரஜாவுரிமை என்ற பெயரில் வாக்குரிமை மாத்திரம் வழங்கப்பட்டது
4.1972-  1992 காலப்பகுதியில் சிங்கள மக்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக மாற்றப்படும்போது தமிழ்த் தொழிலாளர்கள் தொடர்ந்தும் கூலகளாகவே வைக்கப்பட்டுள்ளார்கள்.
5. குறைந்தபட்சம் அவர்களின் வீடமைப்புக்கான 7 பேர்ச் காணி கூட கொள்கை அடிப்படை அல்லாது தற்காலிகமான அமைச்சரவைப் பத்திரங்களால் அவ்வப்போது அனுமதிக்கப்படுகிறது. அதுவும் தற்போதைய தொழிலாளர்க்கு மாத்திரம்.

6. தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகளே தோட்ட மக்களின் சேம நலன்களை கவனிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்கிறது ( பிரித்தானியர் காலத்தில் அந்தக் கம்பனிகளும், 72-92 காலப்பகுதியில் அரசின் சார்பாக நிர்வகித்த கூட்டுத்தாபனஙலகளும், 1992 க்குப் பின்னர் தனியார் கம்பனிகளின் பங்களிப்பில் நாடத்தப்படும் PHDT (TRUST ) நிறுவனமும் அதற்கு பொறுப்பாக இருந்தன / இருக்கின்றன.

இதன் உச்சகட்டமாக “தோட்ட மக்களின் சுகாதாரம் முதல் சகல சேமநலன்களையும் நாங்களே கவனிக்கிறோம். அவர்களின் சம்பளவிடயத்தில் தலையிடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை ” என முதலாளிமார் சம்மேளன பேச்சாளர் ரொஷான் ராஜதுரை ஊடகங்களுக்கு (20-01-2021 Daily mirror) தெரிவிக்கும் அளவுக்கு மலையகத் தமிழ் மக்கள் இலங்கை அரசில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள்.

தலைவர்கள் நிலை

எனவே, மலையகத் தமிழ் மக்களை காணி உரிமையுடன்  கூடிய அர்த்தமுள்ள குடிகளாக, அரச சேவைகளைப் பெற உரித்துடுவர்களாக ஆக்கும் வரை 1000/- 2000/- என ஆண்டுகள் மாறி கோரிக்கைகள் தொடரும். அவை 1105/- போன்றதொகைகளால் கபடத்தனமாகக் கண்க்குக் காட்டப்பட்டு நகர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கும்.

எனவே 1000/- ஒரு தொழிற்சங்க பிரச்சினை இல்லை. அது கம்பனிகளுடன் நடாத்தும் பேச்சுவார்த்தையில் / கூட்டு ஒப்பந்தத்தில் தீர்க்கப்படும் பிரசரசனையுமில்லை. அதனை ஆஜானுபாகுவாக தீர்த்துவைக்கும் அரசியல் தொழிற்சங்க தலைவர்களும் இல்லை .

இது ஒரு தலைமுறை சார்ந்த பிரச்சினை.

மலையகத்தின் முதலாம் தலைமுறை கொத்தடிமை நிலையில் இருந்தது. இரண்டாம் தலைமுறை அந்த சமூகத்தை அரசியல் மயப்படுத்தி  நாடாளும் சபைக்கு வந்தது, அதனைத் தடுக்க குடியுரிமையைப் பறித்த போது மூன்றாந்தலைமுறை அதனை போராடி மீளவும் பெற்றது. மீளப்பெற்ற வாக்குரிமையைக் கொண்டு மீண்டும் நாடாளுமன்றம் வந்த நான்காம் தலைமுறை அபிவிருத்தி அரசியலை கையில் எடுத்தது. அதுவரை இருந்த உரிமை அரசியலை கைவிட்டது. அந்தப் பாரமே இப்போது ஐந்தாம் தலைமுறையினரின் கைக்கு வந்துள்ளது.

நீண்டதூர அரசியல் பார்வையும் வரலாற்று ஆய்வுப்புலமும் கொண்ட அரசியல் செயற்பாட்டினால் மட்டுமே மலையகத் தமிழர் அர்த்தமுள்ள குடிகளாக இலஙலகை மண்ணில் வாழ வழி சமைக்க முடியும். அதனையே அடுத்த மலையகத் தலைமுறையினர் தமது அரசியல் செயற்பாடாக கொள்ள வேண்டும்.