‘புகைமூட்டத்துக்குள்ளே…’ களப்பணியாளர்களின் கற்பனையற்ற கதைகூறல்

  ’நான் முதன் முதலாக சுசிலாவையும் இஸ்ராவையும் சந்தித்த பொழுது அவர்கள் இருவரும் முதுநிலை சமூகப் பணி மாணவிகளாக இருந்தனர். வரம்புக்குட்பட்ட வளங்களுடன் இன்னொரு நாட்டுக்கு வந்து கல்வி கற்பதற்கு நிறைய துணிச்சல் வேண்டி இருந்தது. இவர்களின் அறிவுத்தாகம் என்னை வியப்புறச் செய்தது’ என்று இந்த நூலின் பின்னட்டைக் குறிப்பில் எழுதுகிறார் பிந்து நாயர்.

யார் இந்த பிந்து நாயர்? என்பதற்கு முன்னதாக யார் இந்த சுசிலாவும் இஸ்ராவும் என்றால் அவர்கள் இருவரும்தான் இந்த ‘புகைமூட்டத்துக்குள்ளே…’ எனும் நூலின் தொகுப்பாசிரியர்கள். அவர்கள் பணியாற்றிய ‘ஆரோ’ ( AROH – Giving Hope) நிறுவனத்தின் முகாமையாளர்தான் இந்த பிந்து நாயர். பெயரைக் கொண்டு நோக்குகையில் அவர் ஒரு மலையாளியாக இருக்க வேண்டும்.

இந்த பிந்து நாயர் அறிமுகஞ் செய்யும் இரண்டு பெண்களான சுசிலா – இஸ்ரா இருவரையும் நான் (கட்டுரையாளர்) அறிமுகஞ் செய்திருந்தால்கூட இப்படித்தான் அறிமுகஞ் செய்திருப்பேன்.
இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாகித்யரத்ன தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு பிரபல இந்திய எழுத்தாளர் ஜெயமோகன் தலைமையில் இயங்கும் விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு ‘விஷ்ணுபுரம்’ விருதை அறிவித்தது. அதனைப் பெற்றுக்கொள்ள தெளிவத்தை தம்பதியரை கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றிருந்தேன். விருதுவிழா முடிந்த உடனேயே மேடையில் இருந்து கீழே இறங்கிவிட முடியாத அளவுக்கு வாசகர்கள் தெளிவத்தையாரை சூழத் தொடங்கிவிட்டனர். அவரிடம் கையெழுத்துப் பெறவும், நிற்படம் எடுக்கவும் என. விருதினை வழங்கி வைத்தவர்களில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி மேடையிலேயே பாதுகாப்பாக அமர்ந்துவிட்டார். 
திரை இயக்குனர் பாலா மேடையில் இருந்து இறங்கிச் சென்றார். சினமாகாரரான அவரைச் சூழ்ந்துகொள்ளாத கூட்டம் தெளிவத்தையாரைச் சூழ்ந்து கொண்டது. சூழ்ந்த கூட்டத்தினரிடம் இருந்து தெளிவத்தையாரை பாதுகாப்பாக மீட்கவேண்டியிருந்தது. ஏனெனில் அப்போதுதான் அவரது இருதயகோளாறுக்கான அறுவை சிகிச்சை செய்து ஆறுமாதங்களாகி இருந்தது. எனவே அவருக்கு அரணாக இருந்து முண்டியடிப்பவர்களிடம் இருந்து பாதுகாப்பாக மேடையில் இருந்து கீழே அழைத்து வருகிறேன்.
சபையில் அமர்ந்திருந்த எழுத்தாளர் கோவை ஞானியிடம் பேசுவதற்கு தெளிவத்தையார் ஆவல் கொண்டார். அப்போதும் கூட்டத்தினர் விடுவதாக இல்லை. இந்தக் கூட்டத்தினரிடையே இருந்து சிங்களத்தில் ஒரு குரல். முதலில் சாதாரணமாக உணர்ந்த எனக்கு இரண்டாவது முறையும் ஒலிக்கவே அந்த சிங்கள மொழிக்குரல் அசாதாரணமாக பட்டது. ஏனெனில் நான் நிற்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், கோயம்புத்தூரில்.
ஆச்சரியத்துடன் அதனை உணர்ந்தவனாக சிங்களக்குரல் வந்த திசையில் பார்க்கிறேன். அங்கே ஸ்ரீலங்கா முகத்துடன் இரண்டு இளம் பெண்கள். இப்போது இன்னும் கவனமாக சிங்களத்தில் என்னை நோக்கிப் பேசுகிறார்கள். ‘தெளிவத்தை அய்யாவைப் பார்க்க தொலைவில் இருந்து வந்து இருக்கிறோம். நாங்கள் இலங்கை மலையகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கே முதுமாணி படிக்கிறோம். எங்களை அனுமதியுங்கள்’என மூச்சுவிடாமல் தூரத்தில் இருந்தே தகவல் தருகிறார் அந்த முக்காடு (ஹிஜாப் ) அணிந்த  பெண். 
 
ஆம் என்ற தொனியில்  தலையசைத்து ஆமோதிக்கிறார் அருகே நின்ற அசல் மலையகப் பெண். முதலில் சிரித்துவிட்டேன். ‘என்ன ஒரு ராஜதந்திரம்’ என்றெண்ணி. பிறகு சிங்களத்திலேயே பதில் சொன்னேன். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ஏற்பாடு செய்கிறேன் என.
எழுத்தாளர் கோவை ஞானி கண்பார்வை குறைந்த நிலையில் இருந்தார். அதன் காரணமாகவும் மரியாதை கருதியும் அவருடன் தெளிவத்தையார் உரையாடிய பொழுதில் கூட்ட முண்டியடிப்பு குறைந்திருந்தது. அந்த இடைவெளியில் சிங்களத்தில் அழைத்தேன். ஓடிவந்து தெளிவத்தையாரை வாழ்த்திவிட்டு எனக்கும் நன்றி சொன்னார்கள் அந்த இரண்டு இளம் பெண்களும்.
 
அந்த இரு மலையக இளம் பெண்களையும்தான் மலையாள பிந்து நாயர் இவ்வாறு எழுதி அறிமுகம் செய்கிறார்: 
‘வரம்புக்குட்பட்ட வளங்களுடன் இன்னொரு நாட்டுக்கு வந்து கல்வி கற்பதற்கு நிறைய துணிச்சல் வேண்டி இருந்தது’. உண்மையாகவே இந்த இரண்டு பெண்களும் துணிச்சல் மிக்கவர்கள் என்பதற்கு என்னோடு அறிமுகமான காட்சியே சாட்சி. இந்தநூல் இரண்டாவது சாட்சி.
 
தாஹிர் நூருல் இஸ்ரா எனும் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண் அசல் மலையகத்தவர். அதனைச் சொல்வதற்கும் அஞ்சாதவர். மலையகத்தின் முதல் கவிஞன் அருள்வாகி அப்துல் காதிருப் புலவர் வாழ்ந்த கலஹா, தெல்தோட்டைப் பகுதி தேயிலைத் தோட்டப் பெண் இஸ்ரா. சுசிலா யோகராஜன் தலவாக்கலை பகுதி தேயிலைத் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த பெண்.
 
இருவருமே பேராதனைப் பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரிகள். பிந்து நாயர் சொல்வதுபோல வரம்புக்குட்பட்ட வளங்களுடன் இன்னொரு நாட்டுக்கு வந்து கல்வி கற்பதற்கு  துணிந்த இளம் பெண்மணிகள். இந்திய பல்கலைக்கழகமொன்றில் சமூக சேவை துறையில் தத்துவமாணிப் பட்டப்படிப்புக்காக (MPhil) தங்கியிருந்த போதே எங்களையும் சந்தித்திருக்கிறார்கள்.
வரம்புக்குட்பட்ட வளங்களுடன் இன்னொரு நாட்டுக்கு வந்து கல்வி கற்பதற்கு நிறைய துணிச்சல் தேவைப்பட்ட இவர்களுக்கு பொருளாதாரமும் தேவைப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியமில்லை.  படிப்பு நேரம்போக பகுதி நேரமாக தொண்டு நிறுவனங்களில் தொழில் செய்து இருக்கிறார்கள். அதுவும் அவர்களது முதுத்தத்துவமாணி பட்டப்படிப்போடு இணைந்த சமூக சேவைத் துறையில் இயங்கும் தொண்டு நிறுவனத்தில். அந்தத் தொண்டு நிறுவனந்தான் ‘ஆரோ’ ( AROH -Giving Hope). அதன் முகாமையாளர்தான் பிந்து நாயர்.
 
இந்த ‘ஆரோ’ நிறுவனம் புற்றுநோயினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு நம்பிக்கைதரும், அவர்களுக்கு உதவும் நிறுவனம். இஸ்ரா – சுசிலா இருவரும் இந்த தொண்டு நிறுவனத்தில் வேலை செய்த காலத்தில் சந்தித்த அனுபவங்களை கதைகளாக சொல்கிறார்கள்.
‘ஒரு ரூபாயில் ஓர் உயிர்’, ‘ம்ம்…ம்ம…. பொம்மை கார்’, ‘அப்புச்சவுக்கு நல்ல இரண்டு செருப்பு’, ‘அக்கிணியில் அடைக்கலம்’, ‘இலைகள் துளிர்க்கத் தொடங்கின’, ‘கொத்தடிமை’, ‘இம்முட்டுப் பெரிய கேக்கா’, ‘என்பையன் காலேஜுக்குப் போகணும்’, ‘பேசுற நேரம் பேசிக்கோங்க’, ‘அம்மா நீ போ’, என்பன இவர்கள் சொல்லும் கதைகளுக்கான தலைப்புகள். இவை சிறு கதைகள் அல்ல. பெருங்கதைகள்.
 
புற்றுநோய் வந்துவிட்ட ஒரு குழந்தைக்காய் ஓடாய்த் தேயும் குடும்பங்களின் பெருங்கதைகள். அந்த பெருங்கதைகளில் வரும் போராட்டங்களை, இழப்புகளை, சோதனைகளை, நம்பிக்கைகளை, நம்பிக்கையீனங்களை, ஏக்கங்களை, எதிர்பார்ப்புகளை எல்லா கோணங்களில் இருந்தும் கூறும் கதைகள் இவை. எல்லாமே உண்மைக் கதைகள். இந்தக் கதைகளின் கருவாக, கருகிப்போவதற்காகவே மலர்ந்த மொட்டுகளைப் போன்ற குழந்தைகளாக அமைவது கொடுமை. அந்தப் மொட்டுக்களைச் சுற்றி இலைகளாக, கிளைகளாக, மரமாக, செடியாக ஏன் முள்ளாகக் கூட கதை மாந்தர்கள்.
 
பெரும்பாலான கதைமாந்தர்கள் கரிசல் காட்டு கதாபாத்திரங்களாக விபரிக்கப்படுகின்றன. கதைத் தலைப்புக்களைத் தெரிவு செய்வதில் மிகுந்த கவனம், வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கமின்மை என்பன இந்த இஸ்ரா – சுசிலா ஆகிய இரண்டு கதைச் சொல்லிகளையும் பார்த்து எம்மை வியப்படையச் செய்கின்றன.
‘எங்களுக்கு சிறுநீர் கழிக்கும் தேவை எழுந்தது சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பொறுமை காத்துக் கொண்டு கிராமத்தை அடைந்தோம்’ என தங்களது களப்பணி அனுபவங்களை எழுத்தில் பதியும் துணிச்சல் இந்த இளம் பெண்களுக்கு இருக்கிறது.
 
‘ஒரு வயதில் வாங்கிய சட்டையைத் தான் அவன் மூன்று வயதாகியும் போட்டிருந்தான். அவனது தொப்பை வயிறுக்கு மேலாகவே அது இருந்தது. சிப் ( Zip) இல்லாத  அவனது காற்சட்டைக்கு வெளியில் அவனது பிறப்புறுப்பு சற்று வெளியே எட்டிப் பார்த்தது’. என கூறும் இயல்பான கதை கூறல்.
 
குழந்தைகளின் உயிரைக்காக்க போராடும் அம்மா, அப்பாக்களுக்கு மத்தியில் அப்படியான ஒரு குழந்தையைப் பராமரிப்பதில் அக்கறை கொள்ளாமல் தன்னை தினமும் திருமணவீட்டுக்கு போவதுபோல அலங்கரித்துக் கொள்ளும் ஒரு அம்மாவையும் இந்த கதைச் சொல்லிகள் கண்டுபிடிக்கிறார்கள்.
 
ஒவ்வொரு கதையும் ஒரு Case Study ஆக உள்ளதை உள்ளபடியே ஆராய்கிறது.அதனை அப்படியே எடுத்தும் சொல்கிறது. இதனை ஏன் சொல்லவந்தோம் என தங்களது ‘எமதுரையில்’ சொல்கிறார்கள் இந்த இளம் பெண்கள்.
 
‘இவ்வாறான நோயாளர்களைத் தொட்டால் பாவம் என்று எட்டடிக்கு அப்பால் விட்டென பறக்கும் மனிதர்களின் அறிமைக் கண்களைத் திறப்பது, சமூகத்தில் காணப்படும் சில மூட நம்பிக்கைகளையும் தவறான மனப்பாங்குகளையும் படம் பிடித்துக் காட்டுவது,
சாதாரண மக்கள் மத்தியில் அவர்களுக்கு புரியும் பாணியில் ஒரு வித்தியாசமான மொழிக்கூடாக சிறுவர் புற்று நோய் பற்றிய பரந்த அறிவைக் கொண்டு செல்வதனூடாக புற்று நோயால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்றவற்றை  முதல் நோக்கமாகவும்,
 
ஒரு சமூகப் பணியாளனின் வகிபாகத்தை வெளிக்காட்டுவதும் அதனுடன் இணைந்ததாக ஒரு சாதாரண மனிதனின் சமூகப் பொறுப்பை அதிகிரிக்க வைப்பதனையும் இன்னொரு நோக்கமாகவும் கொண்டு எழுதப்பட்டது என்கிறார்கள்.
 உண்மையில் இவர்களது இரண்டாவது நோக்கம் வெற்றிபெற வேண்டுமெனில் இந்த நூல் பரவலாக வாசிக்கப்பட வேண்டும்.
‘புற்றுநோய் தொற்று நோய் அல்ல’ என இவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். முன்னுரை எழுதி இருக்கும் மருத்துவரும் இலக்கியவாதியுமான எம்.கே. முருகானந்தனும் அதனை உறுதி செய்கிறார். 
 
அதே நேரம் ஒரே சமகாலத்தில் எனது (கட்டுரையாளர்) நண்பனுக்கும் அவரது மனைவிக்கும் புற்றுநோய் வந்து ஒரே சமயத்தில் அவர்கள் இருவரும் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நாழிகைகளை நினைக்கையில் என் மனது புற்று நோய் தொற்று நோய் அல்ல என ஏற்க மறுக்கவே செய்கிறது. எனினும் இது போன்ற களப்பணியாளர்களின் கற்பனையற்ற கதைகூறல்கள் எனக்கு நேர்ந்ததுபோல அசாதாரண அனுபவங்களையும் பதிவு செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தைத் தூண்டுவனவாக உள்ளன.
 
அத்தகைய அனுபவங்களை அதீத வர்ணனைகள் இன்றி இயல்பான போக்கில் எழுதி புனைவுப் பிரதிகளின் பாங்கான வடிவில் தந்திருப்பதாக கவிஞர் மேமன்கவி தனது கருத்துரையில் பதிவு செய்வது உண்மையான கூற்றாகிறது.
 
மொத்ததில் கற்பனைக் கதைகள் எழுதுவதில் இருந்து களப்பணியாளர்களின் எழுத்து என்பது வேறுபட்டது என்பதற்கு சாட்சியான அனுபவப் பதிவுகளாக அமைகின்றன.
எழுத்தாளர்கள் நூல்களை எழுதும்போது நூலாசரியர்கள் என அழைக்கப்படுவது அவர்கள் பாடங்களைக் கற்றுத் தருகிறார்கள் என்பதே. நிச்சயமாக இந்த இரண்டு நூலாசிரியர்களும் ஆசரியர்கள் என தகுதி பெறுகிறார்கள்.
இந்த கதைகளை தமிழ்- சிங்களம் – ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பதிப்பித்து வெளியிட்டு இருக்கும் கொடகே பதிப்பகமும் பாராட்டுக்குரியது.
 
இரண்டு இளம் பெண் ஆளுமைகள் தங்களது முதல் படைப்பையே மூன்று மொழிகளிலும் வெளியீடு செய்யும் தகைமையும் துணிச்சலும் பெற்றிருக்கிறார்கள் என்பதே நாளைய மகளிர் தினத்தில் நம்பிக்கை தரும் செய்தியாக பதிவு செய்ய வேண்டியுள்ளது.