‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ எல்லா காலத்திலுமான சமூகத்திற்கான மொழிபெயர்ப்பு

மல்லியப்புசந்தி திலகர்

நாவலாக ஜனித்த ஆதிரை இன்று பதிப்பகமாக வளர்ந்து நிற்கிறது. சிறுகதை களில் ஆரம்பித்து நாவலுக்குள் வந்து தமிழ் வாசிப்பு வாசகர்களிடையே தன்னை நிலைநிறுத்திக் கொண்ட எழுத்தாளர் சயந்தன். தனது இரண்டாவது நாவலான ஆதிரை யின் பெயரிலேயே ஒரு பதிப்பகத்தையும் ஆரம்பித்துள்ள சயந்தன் இவ்வாறு எழுதுகிறார்.

 

நூலாக்கப் பணி ஓர் அலாதியான அனுபவம். கடந்த ஐந்தாறு மாதங்களாக ஆதிரை வெளியீட்டின் புத்தகங்களான, என்ட அல்லாஹ், திருமதி பெரேரா, அஷேரா, அந்திமகாலத்தின் இறுதி நேசம் ஆகியவற்றின் தயாரிப்புக்களில் இணைந்திருந்தேன். தினமும் காலையில் நான்கு நான்கரையிலிருந்து, மூலப்பிரதிகளைப் படிப்பது, அவற்றில் திளைப்பதில் தொடங்கி, வடிவமைப்பில் எழுத்துப் பிழைகளைச் சரிசெய்து இறுதியாக்குவது வரை என இரண்டு மணி நேர உற்சாகமான பொழுதுகள்..

சயந்தனின் உற்சாகமான பொழுதுகளின் பணியாக உருப்பெற்றிருக்கும் அந்திம காலத்தின் இறுதி நேசம்  மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பினை அவரே தபாலில் சேர்த்திருந்தார். ஒரு பயணப் பொழுதில் வாசித்து முடிந்த அந்த அந்திம கால நேசம் பற்றிய கதைகள் எல்லா காலத்திற்குமான மொழி பெயர்ப்பு கதைகளாக மனதுக்குள் நுழைந்து ஊடுருவிக் கொண்டுள்ளது.

ரிஷான் ஷரீப் பின் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பல்லாத மூலப்பிரதியான உணர்வைத்தருகின்றன. ஆனாலும் நூல் முழுவதுமே மொழிபெயர்ப்பாளர் ரிஷான் தலைகாட்டாது கதையாசிரியர் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி உலாவருவது மொழிபெயர்ப்பின் வெற்றி. கதைச் சொல்லும் பாங்கில் தக்‌ஷிலா காட்டும் நுட்பம் மாறாது தமிழில் தந்திருக்கும் ரிஷான் ஷரீப் பாராட்டுக்குரியவர்.

கதைமாந்தர்கள், கதைக்களம், கதை நகர்வின் ஊடாக ஒரு காட்சி படிமத்தை வாசகர்களிடம் விரித்துவிடுவதில் தக்‌ஷிலா வெற்றிபெறுகிறார். தக்‌ஷிலா ஒரு சமூகவியல் முதுமாணி பட்டதாரி யாகவும் பள்ளி ஆசிரியராகவும் இருந்து கதை கூறுவது கதைகளின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்க்கிறது. கதையின் ஒரு பாத்திரமாக நூலாசிரியர் எழுதிச் செல்வது வாசகரை கைபிடித்து அழைத்துப் போவதான ஓர் உணர்வு.

கிராமங்களின் குறுக்கு வீதிகளும் கொழும்புத் தலைநகரின் சேரிகளும் பெருவீதிகளும், ஆள் அரவம் குறைந்த ரப்பர் மரக்காடுகளும் என கதை உலாவும் இடங்களெங்கும் வாசகனால் பயணிக்க முடிகிறது. எந்தக் கதையும் கற்பனையாகத் தெரியவில்லை. எந்தப் பாத்திரங்களும் விலகி நிற்கவில்லை.

வறிய மற்றும் மத்தியதர வகுப்பினரின் வாழ்க்கை பலவித அழுத்தங்களைக் கொண்டிருக்கும்.வெளியில் இருந்து பார்க்கும்போது பளபளப்பாகத் தென்படும் மத்தியதரப்பினரின் ஜீவிதங்கள் எப்போதும் மெல்லிய பதற்றத்தோடுதான் கழிந்து கொண்டிருக்கும்.பலவித காரணங்களால் அவை காயம்பட்டிருக்கும்.அவ்வாறான காயங்கள் எவற்றால் ஏற்பட்டிருக்கும் என ஆராய்ந்து பார்க்க அந்தத் தரப்பினருக்குள் வாழ்க்கை நடத்த மிகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் நபர்களின் ஆத்ம பாஷை மிகவும் உபயோகமாகும்.

அவ்வாறான வறிய மற்றும் மத்தியதர குடும்பங்களைச் சேர்ந்த ஒருவர் வழமைக்கு மாறாக தனது சமூக அந்தஸ்த்தையோ அடுத்தவர் என்ன நினைப்பார் என்பதைப் பற்றியோ சிறிதும் பொருட்படுத்தாமல் தனக்கு பிடித்தவர் மீது காட்டும் பாசத்தை, அவர்களது ஆத்ம பாஷையில் தக்‌ஷிலா இக் கதைகளில் எடுத்துக்கூறி இருக்கிறார் என கதைகளை மொழிபெயர்த்திருக்கும் எழுத்தாளர் ரிஷான் ஷரீப் அறிமுக குறிப்பில் எழுதி இருப்பது நிதர்சனம். வாழ்க்கை என்பதற்கு சிங்களத்தில் ‘ஜீவித்தய’ என்று பொருள். அதனைத் தமிழில் ஜீவிதம் என எழுதி அண்மிக்கிறார் ரிஷான்.

‘தெருவழியே’ எனும் முதலாவது கதையை வாசிக்கும்போதே இந்த உணர்வை வாசகர்களால் பெற்றுவிடமுடிகிறது. கிராமத்தில் இருந்து நகர்நோக்கிவந்து மத்தியர தட்டுக்குள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பிரயத்தனப்படும் அதேநேரம் தனது கிராமத்திற்கு செல்வதில் உள்ள அவஷ்த்தையை, நகர வாழ்வின் போலிகளை கிராமத்துக்குச் சுமந்து செல்வதில் உள்ள மனக்குழப்பங்கள் பதிவு பெறுகின்றன.

‘மாங்காய்ப்பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொருநாள் தொடங்கியது’ எனும் கதையில் திருமண வாழ்வின் எதிர்பார்ப்புகளும் அதன் பின்னதான எதிர்பார்ப்புகளும் மானுடவியல் கண்ணோட்டத்தில் உரையாடல் மொழியாகத் தொடர்கிறது.

அன்றைக்குப் பிறகு அவன்,அவளருகே வரவேயில்லை எனும் கதை அலுவலகத்தின் தன்னுடன் வேலை செய்யும் பெண் ஒருவரது வீட்டைத் தேடிச் செல்லும் ஆண் ஒருவன் ஊடாக வாசகர்களை கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறது. முச்சக்கரவண்டி குலுங்கிக் குலுங்கிச் சென்றது.கீழே விழுவதைப் போல உணரச் செய்தன குழிகள்.

இங்கே இன்னும் அபிவிருத்தி வரவில்லைப் போல  என சமிலுக்குத் தோன்றியது. என அந்த கிராமத்துக்கான பயணத்தை விபரிக்கும் கதையாசிரியர்  இங்கே இன்னும் அபிவிருத்தி வரவில்லைப் போல எனும் வார்த்தைகளுக்குக் இட்டிருக்கும் மேற்கோள்கள் ஊடாக முன்வைக்கும் அரசியல் ஏறக்குறைய எல்லாக்கதைகளிலும் வியாபகம் பெறுகின்றன.

ஒருவர் மரணித்த பிறகு அஞ்சலியுரையில், அனுதாபச் செய்தியில் வெளிக்காட்டப்படும் போலிப்புகழாரங்களை அடித்து நொறுக்குகிறது அந்திம காலத்தின் இறுதி நேசம்.

எப்போதும் மேரி நினைவில் வருகிறாள்’ எனும் கதையில் வரும் மேரி எனும் இளமைக் காலங்களும் அந்திம காலங்களும் அதற்கான காரணங்களும் சமூகம் மீதான பல கேள்வியை எழுப்புவன. இந்தக் கதையை வாசிக்கும்போது பல மேரி கள் எமது நினைவில் வருகிறார்கள்.

‘நந்தியாவட்டைப் பூக்கள்’ பூக்கள் கதையில் வரும் பெரியம்மா கூட அத்தகைய ஒரு ஆள்தான், கதைமாந்தர்தான்.

பொட்டு  எனும் தலைப்பு சிங்கள மொழி கதாசிரியரின் தலைப்பாக வரும்போது வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது. தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘பொட்டு’ எனும் சிறுகதை யில் பொட்டு என்பதன் குறியீட்டில் இருந்து ஸ்வர்ணமாலியின் குறியீடு வேறுபட்டு நிறகிறது.

தெளிவத்தை ஜோசப்பின் கதையில் வரும் தமிழ்ப்பெண் வைக்கத் தயங்கும், வைப்பதனால் வரக்கூடிய பிரச்சினைகளைப் பேசுகிறது. ஆனால், ஸ்வர்ணமாலி யின் பொட்டு சிங்களப் பெண் ஒருவர் வைக்கலாமா என ஏக்கம் கொள்ளும் பொட்டு பற்றியது. கதையின் இறுதிப்பாகம் வாசகனை உலுக்கிப் போடுகிறது. இனக்குழுமச் சண்டையில் எந்தவொரு நியாயமான காரணமுமில்லாது மரணித்துப் போன சிங்கள சாதாரண மக்கள் பற்றிய கவனத்தை வேண்டி நிற்கிறது. பெண்மன உணர்வுகள் மெல்லியதாக பதிவு பெறுகின்றன.

விவாகரத்துப் பெற்ற தம்பதியர் இடையே இடம்பெறும் உரையாடல் ஊடாக விரியும் கதை இப்போதும் இருவரும் இடைக்கிடையே சந்தித்துக் கொள்கிறோம். மாங்காய்ப்பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொருநாள் தொடங்கியது’ எனும் கதையில் திருமண வாழ்வின் எதிர்பார்ப்புகளும் அதன் பின்னதான எதிர்பார்ப்புகளும் இந்த கதையிலும் இன்னுமொரு கண்ணோட்டத்தில் உரையாடல் மொழியாகத் தொடர்கிறது.

ஒரே திடல் போன்ற கதைகளை எழுதுவதற்கு கடினமான உழைப்புத் தேவை. நிச்சயமாக ஸ்வர்ணமாலி இந்தக் காட்சிகளை நிஜத்தில் கண்டிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இத்தகைய கற்பனைகளை இலகுவாகக் கண்டடைந்துவிடமுடியாது. இந்தக் கதையில் வரும் சித்தப்பா எப்போதும் வாசகர் இடத்தில் வாழ்வார்.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க அலையும் அவலம் தமிழ்ச்சூழலில் மட்டுமல்ல சிங்கள சமூகச் சூழலிலும் கூட நிகழ்ந்து கொண்டிருப்பவைதான் என்பதை நினைவுபடுத்திச் செல்லும் கதை ‘தங்கையைத் தேடித்தேடி அவன் அலைந்தான்’. அதிகார வர்க்கம் தமது நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள இன,மத,மொழி பேதங்களைக் கடந்து பயணிக்கும். அதிகார மோகத்தின் முன்னே அவை எல்லாம் வெறி மட்டுமே என்பதை எழுதிச் செல்லும் கதை இது.

தனிமனித உணர்வுகளின் ஊடே சமூகவியல் பதிவுகளை இயல்பான மொழி நடை காட்சிப்படிமங்கள் ஊடாக எழுதி எம்மை வியக்கவைக்கிறார் தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி.களனி பல்கலைக் கழகத்தில் சமூகவியல்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ள ஆசிரியையான இவர் இலக்கிய உலகில் கவிதை, சிறுகதை, நாவல் எனும் படைப்புகள் வழியே அறியப்படுபவர். இந்தச் சிறுகதைத் தொகுப்பு கூட ஒரு நாவலை வாசிப்பதுபோன்ற ஒரே வகையான சமூகச் சூழலின் மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது.

“நீங்களும் நானும் மண்ணில் பிறந்து, மண்ணில் வாழ்ந்து மண்ணிலேயே மரணித்துக் கொள்கிறோம்.இந்த மண்ணில்தான் சந்தித்து இருக்கிறோம்.இப்போதும் இந்த மண்ணை நேசிக்கிறோம். எம்மைச் சூழவும் கட்டி எழுப்பப்பட்டுள்ள வர்த்தக வாணிபக் கொண்டாட்டங்கள், எமது பிள்ளைகளை இந்த மண்ணில் மூடி மறைக்கப்பட்டுள்ள உண்மைகளைவிட்டுத் தொலைவாகியுள்ளன….

எப்போதும் தமிழ் எழுத்துக்களைக் காண்கையில் அவற்றுள், இம்மண்ணில் கலைந்துபோன விடுதலையின் கனவு தவிர்க்கவே முடியாமல் எனக்குத் தென்படுகிறது.தமிழ் எழுத்துக்களை வாசிக்கும,எழுதும், தமிழ் மொழியால் சிந்திக்கும் உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்… எந்த மொழியைப் பேசுபவராகிலும் துயருற்ற மக்களுக்காகப் போரிட்ட அனைத்துத் தோழர்களையும் சகோதரர்களையும் நான் மிகவும் மதிப்பதையும் எழுதி வைக்கிறேன்” என தனது முன்குறிப்பில் எழுதி வைக்கிறார் நூலாசிரியர் ஸ்வர்ணமாலி.

இனம்,மதம்,மொழிகடந்து மானுட வாழ்வை தரிசித்து சிறுகதைகள் ஊடாக அதனை சமூகத்திடம் முன்வைத்து பரஸ்ப்பர புரிந்துணர்வை உருவாக்க முனையும் ஸ்வர்ணமாலி போன்ற உள்ளங்கள் வாசிக்கப்பட வேண்டியது. வாய்ப்பினை உருவாக்கிய ரிஷான், சயந்தன் உள்ளிட்ட இலக்கிய உள்ளங்களின் உழைப்பும் நினைப்பும் போற்றுதற்குரியது.