சிந்தனா மொழியை எழுத்துப்பிரதிகளாக்க முனையும் ‘மந்திரிக்கப்பட்ட சொற்கள்’

மல்லியப்புசந்தி திலகர்

மனிதர்கள் ஒவ்வொருவரும் தனக்கான சிந்தனா மொழி ஒன்றை கொண்டே இயங்குகின்றனர். அதனை, தான் கற்றுக் கொள்ளும் மொழிகளால் வெளிப்படுத்துகின்றனர். தனது தாய்மொழியே பெரும்பாலும் சிந்தனா மொழியாக அமைவதுண்டு. அல்லது சிறு வயதுமுதலே தாய்மொழி அல்லாத வேறு மொழியில் பரிச்சயம் பெறும் ஒருவர் அதே மொழியிலேயே சிந்திக்கவும் கூடும். சிந்தனா மொழியில் இருந்து தான் கற்றுக்கொண்டுள்ள வேறு மொழியில் பேசும்போது தனக்குள்ளேயே ஒரு மொழிபெயர்ப்பு இடம்பெறுகின்றது.

அந்த மொழி பெயர்ப்பின் திறமையே சரளமாக ( fluent) பேசுவதன் அளவிடையாகிறது. சில சந்தர்ப்பங்களில் தான் சிந்திக்கும் தாய்மொழியையே தாய்மொழியிலேயே மொழிபெயர்ப்பு செய்து மற்றைவர்களுக்கு புரியும் படியாக எழுதும்போது அல்லது பேசும்போது அதனை புனைவு அல்லது அபுனைவு எனலாம். புனைவு அல்லது அபுனைவு அல்லாது தான் சிந்திக்கிற அதே மொழிதலை அப்படியே எழுத்துரு ஆக்கி, வெளியே அடுத்தவர் வாசிக்க வெளியீடாக ( Out put ) தர முடியுமெனில் அத்தகைய எழுத்துப்பிரதிகள் மிகவும் வித்தியாசமான தன்மையைக் கொண்டிருக்கும். அத்தகைய வித்தியாசமான ஒரு பிரதியே இமாம் அத்னான் எழுதி இருக்கும் ‘மந்திரிக்கப்பட்ட சொற்கள்’.

அப்படியான ஒரு தொகுப்பொன்று ஈழத்திலிருந்து தமிழ்ச்சூழலுக்கு வருவதையிட்டு சந்மோஷமாக உள்ளது என இந்த நூலிக்கான பின்னுரையை எழுதி இருக்கும் கவிஞர் ரியாஸ் குரானா குறிப்பிடுகிறார்.

சில பிரதிகளுக்கான குறிப்புகளை முன்னீடுகளாக அல்லாது பின்னீடுகளாக எழுதவேண்டும்.குறிப்புகள் வாசகனை பிரதி நோக்கி ஆற்றுப்படுத்துபவனவாக அல்லாமல் வாசித்த பின்னர் அல்லது நுகர்ந்த பின்னர் வாசகனுடனான அனுபவத்தை கலந்துரையாடுவதாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் கா.சிவத்தம்பி ( மல்லியப்புசந்தி – (2007) பின்னுரை). அவ்வாறு வாசகனுடனான கலந்துரையாடலாக அமையும் ரியாஸ் குரானாவின் பின்னுரையுடனேயே இந்தப் பிரதி நூலாக்கம் பெற்றிருப்பது இன்னுமொரு சிறப்பு. உண்மையில் இந்த நூலை வாசித்து முடிக்கும் வாசகனுடன் ஒரு கலந்துரையாடல் இடம்பெறுவதை பின்னுரை உறுதி செய்கிறது.

மொத்தமாக 88 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஈழத்துத் தமிழ் இலக்கிய சூழலில் புதுவரவுதான். 2018 ஆம் வெளிவந்த இந்த நூல் குறித்து பொதுவெளியில் உரையாடப்பட்ட அளவு குறைவாக இருக்கலாம். இந்த நூல் குறித்து உரையாட முனையும்போதும் அந்த உரையாடல் மொழியும் கூட சிந்தனாமுறை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாக அமைதல் வேண்டும் அல்லது அமைந்து விடும்.

ஏனெனில் இவை கதைகள்,சிறுகதைகள், குறுங்கதைகள், கவிதை என மரபுசார்ந்த அமைப்பு வடிவங்களில் இருந்து வேறுபட்டு நிற்கின்றன. கதைபோல தெரியும் ஒரு பிரதி கவிதையாகவும் பார்க்கப்படும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. உரையாடல்மொழியில் மட்டுமே அல்லது விவரண வடிவில் மட்டுமே அவை முழுமையான ஒரு கதை நிகழ்வாக அல்லது கவிதை நிகழ்வாக அமையப் பெறுகின்றன. சுருங்கச் சொன்னால் தனது சிந்தனா மொழியை அவ்வாறே எழுத்தில் பதிவு செய்யவும் அதனை தமிழில் தருவதற்கும் முயற்சித்துள்ளார் நூலாசிரியர்.

நூலாசிரியர் இமாம் அத்னான் உடன் உரையாடும்போது இந்த உணர்வைப் பெற முடியும். அவர் உரையாற்றும்போது கூட அதனை உணர முடியும். உரையாற்றும்போது அத்னான் உட்கார்ந்திருக்கிறார் என புறநிலையில் அவதானிக்கும ஒருவர் அவரது உரையின் உண்மையான சாரத்தைப் புரிந்துகொள்ள எத்தனித்தால் அத்னான் உட்கார்ந்துகொண்னு மட்டும்இல்லை அவர் நடக்கவும் செய்கிறார் என்கிற உணர்வை அவதானிப்பார்.

இளம்பருவ சிந்தனையாளராக, எழுத்தாளராக எனக்குள் ( கட்டுரையாளர்) இந்த ஆச்சர்யத்தை நிகழ்த்திக் காட்டியவர் அத்னான். நிந்தவூரில் நடைபெற்ற ஒரு இலக்கிய உரையாடலிலேயே (2017) இந்த நிகழ்வு நடந்தது. அப்போதே அத்னான் ஒரு நூலை எழுதினால் எப்படி இருக்கும் என எண்ணிப்பார்த்ததுண்டு.

அந்த விடயம் 2018 ல் நடந்தேறி 2019 ஆம் ஆண்டு நடைபெற இருந்த வெளியீட்டு நிகழ்வில் நூல் குறித்து உரையாற்ற அழைத்துருந்தாலும் ஏனோ அந்த நிகழ்வு இடம்பெறாத நிலையில் 2021 ல் நடந்த நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் சந்தித்த இமாம் அத்னான் தந்த மந்திரிக்கப்பட்ட சொற்கள் குறித்து இன்று உங்களோடு உரையாட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

கிழக்கிலங்கையப் பிறப்பிடமாகக் கொண்ட இலக்கியச் செயற்பாட்டாளர் இமாம் அத்னான். புனைவின் புதுவகைச் சாத்தியங்களை பரிசோதித்தல், பிரதிகள் மீதான மாறுபட்ட வாசிப்புகளை முன்னெடுத்தல், இலக்கிய கலந்துரையாடல் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல், பொதுப்போக்கினை இடையீடு செய்தல் என்பதாக இயங்கி வருபவர். சமூகப் பணி கற்கையில் இளமாணிப் பட்டம் பெற்றிருக்கும் இவரது இரண்டாவது நூல் ‘மந்திக்கப்பட்ட சொற்கள் . ஏற்கனவே  மொழியின் மீது சத்தியமாக (2017) எனும் கவிதைத் தொகுதியை வெளியிட்டு உள்ளதாகவும் அறிமுகக் குறிப்பில் அறியமுடிகிறது.

மந்திரிக்கப்பட்ட சொற்களாக முப்பது தலைப்புகளில் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் அத்னான் அதற்கு நிச்சயமான வடிவங்கள் எதனையும் திட்டமிட்டு திணிக்காமல் அதனை அப்படியே பதிவு செய்ய எத்தனிக்கிறார்.மூன்றாம், பதினோறாம் நிகழ்வுகளைப் பதிவு செய்ய முனைகையில் தான் அதற்கான தலைப்பை உணராதபோது அதனை அப்படியே விடுகிறார். அந்த பதினோறாவது கதை இவ்வாறு முடிவுறுகிறது:

கழுகுகளை அன்பாக வளர்ப்பது எப்படி என்பதை வழிகாட்டக்கூடிய புத்தகங்களோ பாடத்திட்டங்களோ நம்மிடமில்லை என்பது பெரும் அவலம் என விம்மி முழங்கிய அறிஞர் பெருந்தகையோடு பலரும் வாஞ்சையுடன் கைலாகு செய்து பாராட்ட தயாகிறார்கள்.

மூன்றாவது பதிவின் இறுதி வரிகள் இவ்வாறு அமைகின்றன: புனையப்பட்ட கதைகள் தங்களைத் தக்கவைத்துக் கொள்ள குருவிகளை ராட்சத நச்சுயிர்களாக பரிணமிக்க செய்து விடுகின்றன.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ‘கழுகுகளை அன்பாக வளர்ப்பது ‘, ‘குருவிகளை ராட்சத நச்சுயிர்களாக’ பரணமிக்கச் செய்வது போன்றன குறித்து வாசகர் தனக்குள் கலந்நதுரையாட முனைந்தால் சிந்தனா மொழியின் பதிவுப் பிரதிகள் குறித்த பிரக்ஞையைப் பெறலாம்.

ஏனைய 29 நிகழ்வுகளுக்கும் தலைப்பிடும் அத்னான் தனது சிந்தனையில் வந்தவாறே எழுத்தில் தருகிறார் எனலாம். ஜெமோசுவின் அடையாளம், ஒற்றைத் தாளில் ஆகாயம் தொடும் தொழுவங்கள், சூறத்துல் நானும் என் எதிர்த்தலும், Always Yes for Mona Lisa, அவளுக்கான காதல் கடிதம், புனைவில் பன்மித்து மிதக்கும் மதுப்புட்டிகள், அப்போதும் எஞ்சியிருக்கும் சொற்களில் அடங்கும் முயல், சூறத்துல் நானும் என் எதிர்த்தலும்-2, அறிவிப்பாளரின் தடங்கலுக்கு வருந்துகிறோம், பல்பக்லி, ஆ.Terms and conditions of the novel, ஏக பிரம்மையைப் பேயோட்டுதல், பெரும் கதை, திருமண மேடையில் பெற்றோர்கள் கைது…!  பெற்றோரை விடுவிக்கக் கோரி மாணவர்கள் ஆர்ம்பாட்டம், மூஸாவின் கோல்கள், வேண்டுவதெல்லாம், நாக்கோட்டி நயத்தல், ஆதிப்புனைவு, மூத்தம்மாவின் விரல்கள், கற்களின் வழியாய், பெருகிக் கொதுகொதுப்பது, கதகதப்பு, மரி என்னும் இன்னொரு பெண், நூலறுந்து சாத்மியமாகும் ஜாலங்கள், ஜனாஸா அறிவித்தலொன்று, சொல்லிப்பார்த்தல், வரைபடத்தில் ஒரு யுவதி, ஆசிரியர் வராதபோது என எழுதிச் செல்கிறார்.

இந்தப் பிரதிகளை இலக்கிய குடும்பத்திற்குள் இதுவரை அடையாளப்படுத்தும் எந்தப் பெயரைக் குறித்து அழைப்பது ? என ஒரு கேள்வியை முன்வைத்து விவாதிக்கிறார் பின்னுரையில் ர்ரியாஸ் குரானா.

இவை இந்த புனை பிரதியின் தொடர்பில் மேலோட்டமாக கூறக்கூடிய விசயங்கள் மாத்திரமே. ஆனால், எப்படியான அம்சங்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது, அது எப்படி புனை பிரதியாக உருப்பெறுகிறது, அதற்குக் கையாளப்பட்டிருக்கும் புனைவுத்திகள் எவை, என்று விரிவாக பேச நமக்கு அதிக வாய்ப்பை இந்தப் பிரதிகள் கொண்டிருக்கின்றன  எனும் கவிஞர் ரியாஸ் குரானாவின் பின்னுரைக் குறிப்பு உணர்த்தும் உண்மையை, மந்திரிக்கப்பட்ட சொற்களை வாசிப்பதனால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் அல்லது விவாதிக்க முடியும்.