மலைநாட்டுத் தமிழர்கள்

தோட்டத் தமிழர்கள், இந்திய வம்சாவளி தமிழர்கள், மலைநாட்டுத் தமிழர்கள், நாடற்றவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் எனும் பல பெயர்களில் இலங்கையின் பெருந்தோட்டங்களில், தேயிலை ரப்பர் தொழில்துறைகளில் அடிமைகள் போன்று தலைமுறை தலைமுறையாக வாழவைக்கப்பட்டிருக்கும் ‘ஒரு தமிழ்ச்சமூகம்’ பற்றிய தனது புரிதலாக, உமா மகேஸ்வரன் தலைமையில் இயங்கிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வெளியீடாக கொண்டு வந்திருக்கக் கூடியதே THE UPCOUNTRY TAMILS – The Wretched of the Earth (மலைநாட்டுத் தமிழர்கள் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட தரப்பினர் ) எனும் இந்த ஆங்கில நூல்.

இந்த நூல் குறித்த பார்வைக்கு வருவதற்கு முன் நடைமுறை அரசியலுடன் தொடர்புபடுத்திய விடயம் ஒன்றைப் பார்த்துவிட்டு வருவது பொருத்தமானது.

கடந்தவாரம் (23/01/2021)ஒரு வானொலி நிகழ்ச்சி. அதில் இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற எம்.ஏ.சுமந்திரன் நேர்காணல் செய்யப்படுகிறார். அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் உங்கள் கருத்து நிலைப்பாடு என்ன? என்பதாக இருந்தது.அதற்கான அவரது பதில்; அதற்கு ‘கூட்டு ஒப்பந்தம்’ மூலமாக தீர்வு காண்பதே சரியானதாகும். அங்கே தோட்டங்கள் தனியார் கம்பனிகளிடமே வழங்கப்பட்டுள்ளன. எனவே அவர்களோடு பேரம்பேசி கூட்டு ஒப்பந்தம் மூலம் தீர்வு காண்பதே சரி என நினைக்கிறேன்.அரசாங்கம் தலையீடு செய்வதில் எந்த பிரயோசனமும் இல்லை என்பதாக அமைந்தது.

இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கூறிய எந்த பதில் ஒரு சட்டத்தரணியின் பதிலாக, சரியானதாகவும் இருந்ததுவே அன்றி அரசியல்வாதியுடைய பதிலாக இருக்கவில்லை. அதுவும் ‘இலங்கைத் தமிழரசு கட்சியின்’ பேச்சாளராக, நாடாளுமன்ற உறுப்பினராக அந்த பதில் ஏற்புடையதாக இருக்கவில்லை.

இலங்கைத் தமிழரசு கட்சிக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்ததோடு உருவான அந்த கட்சிக்கு 70 ஆண்டுகால வரலாறு உண்டு. அந்த வரலாற்றின் ஆரம்பமே மலைநாட்டுத் தமிழர் தொடர்பானது என்பதுதான் இங்கே குறித்துரைக்கத்தக்கது.

சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் முதல் பத்து மாதங்களுக்குள் கொண்டுவரப்பட்டச் சட்டம் இந்திய வம்சாவளி மக்களின் ( மலைநாட்டுத் தமிழர் உள்ளடங்களாக) இலங்கைக் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம். இதற்கு ஆதரவாக எதிராக வாக்களிப்பது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சிக்குள்ளே ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ். ஜே.வி.செல்வநாயகம் ஆகியோரிடையே கருத்து முரண்பாடு ஏற்படவே, எஸ். ஜே.வி.செல்வநாயகம் ( தந்தை செல்வா) பிரிந்து சென்று ‘இலங்கைத் தமிழரசு கட்சி’ யை உருவாக்கினார் என்பது தொடக்க வரலாறு. அதற்குப் பின் அந்த கட்சிக்கு இற்றைவரையான நீண்ட வரலாறு இருக்கலாம்.

இது நடந்தது 1948, 1949 களில். அப்போதிருந்து 20 ஆண்டுகள் கழித்து இன்னுமொரு அரசியல் நிகழ்வு ஒன்று நடந்தது. அதுதான் ‘தமிழர் கூட்டணியின்’ உருவாக்கம். இந்தக் கூட்டணியில் அன்று பிரிந்து சென்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசும், இலங்கைத் தமிழரசு கட்சியும் இணைந்ததோடு, தாம் எதற்காகப் பிரிந்தார்களோ, அதாவது மலையகத் தமிழர்களின் வாக்குரிமைப் பறிப்புக்காக சண்டையிட்டுப் பிரிந்து கொண்டவர்கள் அதே மக்களின் அரசியல் தொழிற்சங்க அமைப்பான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையும் இந்த தமிழர் கூட்டணியில் இணைத்துக் கொண்டார்கள்.

சௌமியமூர்த்தி தொண்டமானையும் சேர்த்து மூன்று தலைவர்களுமே கூட்டணியின் இணைத் தலைவர்களாகவும் இருந்தார்கள். 1976 ஆம் ஆண்டு இந்தக் கூட்டணி தமிழர் ( ஐக்கிய ) விடுதலைக் கூட்டணியாக உருப்பெற்றதோடு, வட்டுக்கோட்டையில் மாநாடு கூட்டி தனித் தமிழ் ஈழம் ஒன்றே தமிழர் விடுதலைக்கு தீர்வு என ‘வட்டுக்கோட்டை தீர்மானம்” நிறைவேற்றினார்கள். எனினும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இந்த கூட்டணியில் இருந்தும் அந்தத் தீர்மானத்தில் இருந்தும் தம்மை விலக்கிக் கொண்டது. அது சரியான முடிவும் கூட.

இந்த 1950 க்கும் 1970 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியானது ‘ இலங்கைத் தொழிலாளர் கழகம்’ என்ற தொழிற்சங்கத்தை 1962 ஆம் ஆண்டு உருவாக்கி மலையகப் பெருந்தோட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.

இவ்வாறு தமது கட்சியின் உருவாக்கத்திற்கான அடிப்படையாகவும், தாம் உருவாக்கிய கூட்டணியில் பங்காளியாகவும் மலையகத் தமிழர்களை தம்மோடு இணைத்துக் கொண்டதோடு தோட்டத் தொழிலாளர்களுக்கு என தொழிற்சங்க இயக்கமும் நடாத்திய இலங்கைத் தமிழரசு கட்சி இப்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத் தலையீடு அவசியமற்றது என்ற நிலைப்பாட்டை எடுக்குமானால் அதுவே இங்கு விசித்திரமான விடயமாக உள்ளது.

இந்த நிலையிலேயே 1976 க்குப் பின் வடக்கு கிழக்கில் தமிழர் விடுதலைக்காகத் தோற்றம் பெற்ற இளைஞர் (விடுதலை) இயக்கங்கள், மலையகத் தமிழர்கள் தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன என்பது பற்றிய பார்வை அவசியமாகிறது. அவற்றுள் ஈரோஸ் இயக்கம் தமது ‘ஈழம்’ சிந்தனைக்குள் மலையகத்தையும் சேர்த்து வரைந்திருந்தார்கள் ( Sketch ). நாம் ஈழவர், நமது மொழி தமிழ், நம்நாடு ஈழம் என்பது அவர்களது கோஷமாக இருந்தது. இது குறித்த நூல்களும் உள்ளன.

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ( புளோட்), அப்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து வெளியேறியிருந்த பெரியசாமி சந்திரசேகரனையும் ( பின்னரே மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரானார்) இணைத்துக் கொண்டு களம் இறங்கி இருந்தது. அந்த ‘புளோட்’ ( தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) மலையகத் தமிழர் தொடர்பில் எத்தகைய நிலைப் பாட்டைக் கொண்டிருந்தது என்பதை விளக்குவதே இந்த நூல்.

26 பக்கங்பளைக் கொண்ட இந்தச் சிறிய ஆங்கில நூல் அந்த அமைப்பின் பெயரிலேயே தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. அதுவும் இந்தியாவில் ( சென்னையில்) வெளிவந்துள்ளது என்பது அவதானத்துக்கு உரியது. வெளிவந்த ஆண்டு குறித்த தெளிவான பதிவு ஒன்று இல்லாதபோதும் 1983, 1985 ஆம் ஆண்டுகளில் அமைப்பின் தலைவர் உமா மகேஷ்வரன் கூறியதான இரண்டு கருத்துகள் ( Messages) நூலில் ஆண்டுகளுடன் குறிப்பிடப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. எனவே இந்த நூல் வெளிவந்திருக்கக் கூடிய ஆண்டு 1986 ஆக இருக்கலாம்.

இந்த நூலில் உமா மகேஷ்வரன் கூறும் இரண்டு கருத்துக்களை இங்கே சுருக்கமாகச் சொல்லாம்.

“வவுனியா, கிளிநொச்சி, மலையகத்தில் வாழும் தொழிலாளர்கள்( Workers), விவசாயத் தொழிலாளர்களுடன் ( Peasants) மட்டக்களப்பில் வாழும் மீனவர் சமூகமும் பாதுகாப்பும் அரணும் வேண்டி நிற்கிறார்கள்” (1983 – உரை – அண்ணாமலைப் பல்கலைக் கழகம்).

“ தோழர்களே நாம் மொழியாலும் பௌதிகமாகவும் பிரிந்து நின்றாலும் நம்மை ஒடுக்கும் ஏகாதிபத்தியம் ஒன்றுதான். அந்த எதிரியை எதிர்கொள்ள கரம் கோர்ப்பொம்” ( 1985 மேதினச் செய்தியில் சிங்கள மக்களை நோக்கி)

இவை எல்லாம் நடைமுறைச் சாத்தியம் கண்டனவா என்பதற்கு அப்பால் மலையகத் தமிழர் சமூகம் குறித்த புளோட் டின் வாசிப்பு எப்படியானதாக இருந்தது என்பதற்கு இந்த நூல் நல்ல ஆதாரமாக உள்ளது.

மலையகத் தமிழர்களின் வரலாற்றை 1842 இல் இருந்தே அணுகுவது
1947 ஆம் ஆண்டு தேர்தலில் மலையகத் தமிழர்கள் ஏழு நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றதோடு அவர்கள் மேலதிக 13 தொகுதிகளின் உறுப்புரிமையை அப்போதைய அரசுக்கு எதிராக உருவாக்கியமை
1930 களில் இருந்து மலையகத் தமிழர் எதிர்ப்பு சிங்களத் தரப்பில் தலை தூக்கியமை
1948 ஆம் ஆண்டு வடக்குத் தமிழர் தரப்பு மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்புக்கு ஆதரவாக வாக்களித்த துரதிஷ்ட்டம்.

1964 ஆம் ஆண்டு மலையகத் தமிழர்களை நாடு கடத்துவதற்கு இலங்கை – இந்திய அரசுகள் செய்து கொண்ட ‘சிறிமா சாஸ்த்திரி’ ஒப்பந்தம் ஆகியவற்றோடு இணைத்து அவர்களின் வரலாற்றை அணுகி நோக்கி இருக்கிறது. மறுபுறமாக இலங்கையில் மலையகத் தமிழர்களது,
வீடமைப்பு
நாட்கூலி
கல்வி
சுகாதாரம்
முதலான விடயங்களையும் ஆராய்ந்து தமது பார்வையை ஆழப்படுத்திக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

150 வருடகாலமாக மலையகத்தமிழர்களுக்காக உள்ள வீடமைப்பு முறைமையில் உள்ள ‘லைன்’ வீட்டு அமைப்பு முறை தொடர்பிலும் அங்கு இருக்கக் கூடிய மலசலகூட வாய்ப்புகள் ஏகாதிபத்தியவாதிகளின் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்பனவும் பதிவு பெற்றிருக்கின்றன.இதன்போது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த என்.சண்முகதாசனின் நூலில் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது எதிர்காலமும் எனும் அத்தியாயம் பற்றியும் மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ளது.

நாட்கூலி தொடர்பில் ஆராயும்போது 1984 ஆம் ஆண்டு வில்மட் பெரேரா ஆணைக்குழுவின் பரிந்முரைப்பான ஒரு நாளைக்கு 5 ரூபா 20 சதம் எனவும் மாதாந்தம் அது 135/= ஆக அமைய வேண்டும் என்ற பரிந்துரைப்பையும் சுட்டிக்காட்டி அதில் இருந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் நாட்கூலி தொடர்பிலும் அது ஏனைய தொழிலாளர்களிடத்மில் இருந்து எவ்வாறெல்லாம் வேறுபடுகின்றது என்பதாகவும் ஆய்வு செய்துள்ளது.

Master plan for Tea என அப்போது மேற்கொண்ட மாதிரி கணக்கெடுப்பு ஆய்வு ஒன்றில், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளடங்களாக மாதச்சம்பளமாக சராசரியாக 200/= வழங்கபடுதல் வேண்டும் என்ற சராசரி பரிந்துரைப்புப் பற்றியும் கூட பதிவு செய்கிறது. அந்த காலத்தில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டங்களும் ஆய்வறிக்கைகள் குறித்தும் கூட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கல்வி நிலை குறித்த ஆய்வுகளின் போது ஐந்தாம் வகுப்பு வரை மாத்திரமே கொண்ட தோட்டப் பாடசாலை முறைமை தொடர்பாக விவாதிக்கப்படுவதுடன், அப்போதைய Economic Review சஞ்சிகையில் அது குறித்து வெளிவந்த ஆய்வுக் கட்டுரையும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

சுகாதாரம் தொடர்பாக கருத்துரைக்கும் போது, அங்குள்ள குறைந்த மட்ட கூலி வழங்குதலை வெளிப்படுத்தும் ‘நிலைக் கண்ணாடியாக’ அங்குள்ள சுகாதார நிலை நிலவுவதாக கருத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் மிக முக்கிய தகவலாக ஒரு விடயம் பதிவாகி உள்ளது. அதாவது நாடு முழுவதும் இலவச சுகாதார சேவை நடைமுறையில் உள்ளபோது தோட்டத் தொழலாளர்கள் அந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ள தோட்ட நிர்வாகம் வருடாந்தம் ஒரு தொழிலாளிக்கு 3 ரூபா 50 சதம் வீதம் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தாமல் விடுவதனால் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவையான சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்ள அரச மருத்துவ மனைகளுக்கு தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை அனுப்புவதில்லை. தாம் நடாத்தும் தோட்ட வைத்திய நிலையங்களில் ஏதாவது ஒரு மருந்தைக் கொடுத்து சமாளித்து விடுவார்கள்.

அப்படியே தோட்ட நிர்வாகம் அரசுக்கு ஆண்டுதோறும் 3 ரூபா ஐம்பது சதம் செலுத்துவதாக இருந்தாலும் அவை தொழிலாளியின் உழைப்பில் இருந்தே கழிக்கப்பட்டு செலுத்தப்படும். எனவே எல்லோருக்கும் இலவச சுகாதார சேவை என இந்த நாட்டில் இருக்க தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் (தோட்ட நிர்வாகம் ஊடாக ) பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.

இந்த முறைமை அவர்களது நாட்கூலியைக் குறைக்கும் என்பதையும் அதாவது இதனை அரசாங்கத்துக்கு செலுத்தும் தோட்ட நிர்வாகம் அதனை தொழிலாளிக்கான சேவையின் ஒரு பகுதியாக சேர்ப்பதனால் நாட் கூலியை உயர்த்த தயங்கிவருகின்றன.

இந்த நூல் 1980 களின் நடுப்பகுதியில் வெளிவந்த போது இருந்த நிலைமையே இப்போதும் தொடர்வது எத்தனை துரதிஷ்டமானது. கடந்த 2021-01-20 ஆம் திகதி Daily Mirror ஊடகத்துக்கு கருத்துத் தெரிவித்து இருக்கும் முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை இவ்வாறு கூறுகிறார்:

“தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் முதல் சுகாதார சேவை அரசாங்கம் பெற்றுக் கொடுப்பதில்லை. தோட்டக் கம்பனிகளே பெற்றுக் கொடுக்கின்றன. அந்த தொழில் துறையின் பலம் பலவீனத்தை அதனை செய்பவர்களே அறிவோம். உண்மையில் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தலையிடக்கூடாது” ( ரொஷான ராஜதுரை – முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் –

“The Government does not provide for these workers. From salaries to medical facilities, it is the tea companies that are looking after these plantation workers. First of all, the government really should not get involved in wage setting because it is only those who are in the business know the strengths and weaknesses of the sector. Anyone can give political promises. But, when practically speaking, fulfilling such promises is not possible at the moment,” Mr. Rajadurai said.( Daily Mirror 20-01.2021)

இந்தக் கருத்து தோட்டப் பகுதி சுகாதார துறையில் அரசாங்கம் ஈடுபடவில்லை என்பதைக் காரணம் காட்டி எவ்வாறு கூலி உயர்வு மறுக்கப்படுகிறது என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும்.எனவே கூலி உயர்வு விடயத்தில் அரசாங்கம் தலையிடக் கூடாது என முதலாளிமார் சம்மேளனம் கேட்பது போலவே, இந்த மக்களும் இலங்கை நாட்டின் பிரஜைகள் எங்களுக்கு அரச சுகாதார சேவையை வழங்கு, அதற்காக தோட்டக் கம்பனிகள் கழித்துக் கொள்ளும் தொழிலாளர்களின் ஊதியத்தின் ஒரு பகுதியை நட்கூலியில் சேர்த்துக் கொடுத்தல் அவர்களது சம்பளமும் கூடும் கம்பனிகளிடம் அடிமையாக வாழும் நிலைமையும் மாறும் என்பதற்காகவே அரசாங்கத்தின் தலையீடு வேண்டப்படுகிறது என்பதனை அரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும் இன்றைய நிலையில் கம்பனிகளின் பிரதிநிதிகளைப் போலவே அரசியல் பிரதிநிதிகளும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியமில்லை என்ற மனப்பாங்கைக் கொண்டிருப்பது துரதிஷ்டவசமானது.

எம்.ராமலிங்கம் ( ராகலை) – ஈரோஸ் சார்பாக மலையகத்துக்கு என தேசிய பட்டியல் நிமனம் பெற்றவர்.

இந்த நூலைப் பொறுத்தவரை புளோட் இயக்கத்தின் பிரசார ஏடாக மலையகத் தமிழர்களை தமது அமைப்பு சார்ந்து கவர்வதற்கான அதுவும் இந்திய வம்சாவளியினரான அவர்கள் பற்றி இந்தியாவில் வெளியிட்ட நூல் என்பதன் அடிப்படையிலேயே நோக்க வேண்டி இருக்கிறது. இந்த நூலில் மலையகத் தமிழர்களுக்கு இரண்டு தெரிவுகளைச் சுட்டுக்காட்டும் புளோட் அமைப்பு ஒன்றில் அவர்கள் மலையகத்தில் தொடர்ந்து வாழலாம் அன்றில் வடக்கில் வன்னியில் வந்து குடியேறலாம் அதற்கு தாம் உறுதுணையாக இருப்போம் என்பதாக தெரிவித்துள்ளது. அத்தகைய தெரிவை மேற்கொண்ட மலையகத் தமிழர்களின் வன்னி, கிளிநொச்சி வாழ்க்கை அவலம் குறித்து தனியாக ஒரு நூல் எழுதலாம்.

ஆனாலும் மலையகத் தமிழர்கள் குறித்த அரசியல் உரையாடலைச் செய்வதற்கு அந்த மக்கள் குறித்த வரலாற்று பூர்வமானதும் தத்துவார்த்த ரீதியுமான ஆய்வுகள் அவசியம் என்பதற்கு இந்த நூல் ஆதாரமான ஒரு சான்றாக அமைந்துள்ளது எனலாம்.

(முற்றும்)