‘மரப்பாலம்’ – வாசிக்க வேண்டிய வரலாற்று புதினம்
– மல்லியப்புசந்தி திலகர்
இன்றைய கொரொனா பேரழிவுகளைக் கடந்தும் உலகம் எஞ்சும். எதிர்காலத்தில் இந்த பேரழிவுகளை உலகம் வரலாறாக வாசிக்கும். அந்த வரலாற்றை ஆய்வுக் கட்டுரையாகவோ அல்லது நாவலாகவோ யாரோ எழுதவும் கூடும். எதிர்கால சந்ததியினருக்கு அப்படித்தான் இந்த கொரொனா யுகம் கடத்தப்படும். அப்போது சுவாசத்துக்காக ஒக்சிஜன் விலைக்கு வாங்கத் தொடங்கிய காலம் 2021 என பதிவு பெறலாம். இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதனை மூன்றாம் உலகமகாயுத்தம் எனவும் எதிர்காலம் பெயரிடலாம்.
அப்படியாயின் இரண்டாம் உங்க யுத்தம் எந்த காலகட்டத்தில் நடந்தது? எவ்வாறு நிகழ்ந்தது? அதில் எம்மவர்கள் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பது பற்றிய வரலாற்றை பதிவு செய்யும் தமிழ் நூல்கள் உள்ளனவா எனக்கேட்டால் பரிந்துரைக்கக் கூடிய நூல்தான் ‘மரப்பாலம்’.
இந்தியத் தமிழகத் தளத்தில் இருந்து இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னணியில் நடந்த சம்பவங்களின் கோர்வையாக, ஆய்வாகவும் புனைவாகவும் கலந்து தந்திருக்கிறார் நாவலாசிரியர் கரன் கார்க்கி.
எழுத்து சினமா இரண்டிலும் இயங்கும் கரன் கார்க்கி படைக்கும் காட்சிப் படிமங்கள் மனதில் நிற்பன. நிலைப்பன.
தமிழ் நாட்டில் இருந்து பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கொத்துக் கொத்தாக மக்களை அயல் நாடுகளுக்கு அழைத்துச்சென்றது ஏன் என இலங்கையர்கள் இலகுவாக புரிந்து கொள்ள ‘மலையகத் தமிழர்களே’ இன்றும் காட்சி தருகிறார்கள். சாட்சி பகர்கிறார்கள். இவ்வாறு மலேசிய தமிழர்கள், பர்மா தமிழர்கள், சிங்கப்பூர் தமிழர்கள் என சிதறுண்டு கிடக்கும் மக்கள் கூட்டம் சிதைந்த பதிவே ‘மரப்பாலம்’ நாவலின் மையம் எனலாம்.
ஹிட்லரின் பேராசையால் ஜேர்மனியில் ஆரம்பித்த இரண்டாம் உலக மகாயுத்தம் எப்படி இந்தியாவின் கிராமத்து தமிழர்களையும் பலிக்கடாவாக்கியது என்பதை மரப்பாலம் விபரித்துச் செல்கிறது.
இலங்கை மலையகத்தில் தேயிலை உற்பத்திக்கு முன்பதாகவே கோப்பி காலத்தில் புகையிரத பாதைகள் அமைக்க அழைத்துவரப்பட்ட மக்கள் எவ்வாறு செத்து மடிந்திருப்பார்கள் என்பதை ‘மரப்பாலம்’ அமைக்க போன தமிழர்களின் நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிகிறது. ஆனால் அங்கே அழைத்து போனவர்கள் , இந்திய தேச விடுதலையின் பேரில் என்பதுவும் அங்கே அவர்களை கொடுமைபடுத்தியவர்கள் ஜப்பானியர்கள் என்பதும் விரிவாக விபரிக்கப்படுகிறது.
இந்தியாவை கைப்பற்றி ஆட்சி செய்த பிரித்தானியர் பர்மாவில், சிங்கப்பூரில் தமிழர்களோடு சேர்ந்து செத்து மடிந்த கதையும் ஹிட்லருடன் சேர்ந்து இட்ட திட்டத்தில் இந்தியாவைக் கைப்பற்ற இந்தியர்களைக் கொண்டே ஜப்பானியர்கள் பாலம் அமைத்தார்கள் என்பதையும் ‘மரப்பாலம்’ விபரிக்கின்றது.
தமிழ் நாட்டு கிராமம் ஒன்றில் பிறக்கும் குழந்தை ஒருவன் தாயை இழந்தபின்னர் தந்தையினால் பாதிரியார் ஒருவரிடம் ஒப்படைக்க அவர் அவனை ஆங்கிலம் தெரிந்த ஜோர்ஜ் ஆக வளர்த்தெடுக்கவும் கிறார். அதனால் பிரித்தானிய காலத்தில் சென்னையில் ஏற்றுமதி வர்த்தகம் செய்த ஒரு இங்கிலாந்து காரரிடம் உதவியாளராக சேர்கிறான். அவன் நண்பனைப் போன்று பழகுவதுடன் தனது தொழில் காலம் முடிய இங்கிலாந்து செல்லும்போது ஜோர்ஜையும் அழைத்துச்செல்ல எண்ணுகிறான். ஜோர்ஜ் கற்பனையில் மிதக்கிறான்.
இங்கிலாந்தில் இருந்து வரும் கடிதம் ஒன்று தனது முதலாளி நண்பனான லூயிஸின் பயணத்தை திசை திருப்ப சிங்கப்பூர் நோக்கி கப்பலில் பயணத்தை ஆரம்பித்து சிங்கப்பூரில் இறங்கியதில் இருந்து திசைமாறிய பறவைகளாகும் நண்பர்களான ஜோர்ஜையும் லூயிசையும் இரண்டாம் உலக யுத்தம் எவ்வாறு சின்னாபின்னமாக்கி இணைக்கிறது என்பது கதை சுருக்கம். அதற்குள் நடக்கும் அத்தனை அட்டூழியங்களும் வரலாறாக வருகிறது. இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டமைத்த சுபாஷ் சந்திரபோஸின் அரசியலும் பேசப்படுகிறது. அவருக்கு என்ன நடந்தது என்பதும் எழுதப்படுகிறது. இந்த காட்சிகளில் இலங்கை உள்நாட்டுப்போரின் காட்சிகளையும் அரசியலையும் கூட இணைத்துப் பார்க்கும் அரசியல் வாசிப்பு எமக்குள் நிகழ்கிறது.
“இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் வாழ்க்கையின் அவலங்களையும் குரூரங்களையும் சித்திரித்த பிறிதொரு நாவல் தமிழில் எழுதப்படவில்லை.வரலாற்றின் கோர முகத்தை போரின் கொடூரங்களை மனம் நடுங்க இந்த நாவல் சித்திரிக்கிறது.உலகத் தரத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல் இது என நெஞ்சு நிமிர்த்தி உரைப்பேன். பல நூல்களை வாசிக்காமல் மரப்பாலம் சாத்தியமில்லை.ஜப்பானிய போர் விமானங்களின் உறுமல்களும் வன்முறைகளும் நெஞ்சை நிலைகுலைய வைக்கின்றன. கரன் கார்க்கி தன் எழுத்தாலும் உழைப்பாலும் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்துள்ளார்”
என பேராசிரியர் பா. ரவிக்குமார் எழுதியிருக்கும் மதிப்புரை நிச்சயமான உண்மை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
உயிர்மை பதிப்பகம் (2019. ‘மரப்பாலம்’ வாசிக்கவும் வைத்துப் பாதுகாக்கவும் வேண்டிய நூல்.
