தொழிற்சங்கம் தவிர்ந்த வேறு துறையை நாடாதவர் செபஸ்தியன்

-அனுதாபச் செய்தியில் முன்னாள் எம்.பி.திலகர்

தொழிலாளர் தேசிய சங்கத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை இணைந்திருந்த இவர் தொழிற்சங்கம் தவிர்ந்த வேறு ஒரு துறையை தன் வாழ்நாளில் நாடாதவர். அத்தகைய அனுபவமிக்க ஒருவரின் இழப்பு மலையக தொழிற்சங்க இயக்கத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்து உள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் முதன்மை உறுப்பினர்களில் ஒருவருமான ஜே.எம்.செபஸ்தியன் அவர்களின் மறைவினை அடுத்து அவர் விடுத்திருக்கும் அனுதாபச் செய்மியிலேயே இவ்வாறு தெரிவித்து உள்ளார். அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச்செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய ஜே.எம். செஸ்தியன் பாடசாலைக்கல்வியை முடித்ததும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் தொழிற்சங்கத்துறை பயிலுனராக இணைந்தவர். அமரர் வி.கே.வெள்ளையன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்துவந்து தொழிலாளர் தேசிய சங்கத்தை உருவாக்கியபோது அவரோடு இணைந்து கொண்டவர்.

இவர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தினராக இல்லாமல் இருந்தாலோ அல்லது இவரது மருமகன் எனது நண்பன் ரொபர்ட் ( மொனரகலை பஸ் விபத்தில் காலமாகிவிட்டார்) தொழிலாளர் தேசிய சங்கத் தலைமைக் காரியாலயத்தில் தங்கி 92/93 காலப்பகுதியில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் என்னோடு சக மாணவனாக உயர்தரம் கற்றிருக்காவிட்டாலோ, எனக்கும் ‘தொழிலளர் தேசிய சங்கத்துக்கும்’ தொடர்பு ஏற்பட்டு இருக்காது.

அந்தவகையில் 1992 முதல் 2020 வரையான 28 ஆண்டு கால தொடர்பை தொழிலாளர் தேசிய சங்கத்துடன் ஏற்படுத்திய பெரியவர் செபஸ்டியன் அவர்களது இழப்பு எனக்கு பெரும் வேதனை அளிப்பது.

2007 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக நான் இணைந்து கொண்ட நாளில் இருந்து 2020 ஆண்டு ஒதுங்கிக் கொண்ட நாள் வரை பிரதிப் பொதுச் செயலாளர் பதவி வகித்தபோதும் உண்மையில் அந்த காலப்பகுதி முழுவதும் நிதிச் செயலாளராக பதவி வகித்த செபஸ்தியன் அவர்களுக்கு உதவியாளராகவே இருந்தேன்.

மாதாந்த கணக்காய்வு, வருடாந்த கணக்கு அறிக்கை சமர்ப்பிப்பு என கணக்காளர் கணேசனுடன் இணைந்து இவருடன் நெருங்கிப் பழகிய அனுபவம் எனக்கு உள்ளது. இப்போது அந்த இருவருமே மறைந்துவிட்டார்கள் என்பது பெரும் வேதனையானது.

செபஸ்தியன் அவர்களின் ஆங்கிலப்புலமையும் தொழிற்சங்க அனுபவங்களும் தொழிலாளர் தேசிய சங்க மீள் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தது. சங்கத்தின் வரலாறு குறித்த ஒரு நடமாடும் தகவல் களஞ்சியமாகவே அவர் செயற்பட்டிருந்தார். வி.கே வெள்ளையன் அவர்களுடன் இணைந்து தோட்டம் தோட்டமாக நடந்து திரிந்து தொழிற்சங்கம் அமைத்த அனுபவம் இவருக்கு உண்டு. அதனை அவ்வப்போது சுவாரஷ்யமாக பகிர்ந்து கொள்வார்.

தொழிற்சங்கம் தவிர்ந்த வேறு ஒரு துறையை தன் வாழ்நாளில் நாடாதவர் இவர் அத்தகைய அனுபவமிக்க ஒருவரின் இழப்பு மலையக தொழிற்சங்க இயக்கத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அன்னாருக்கு மலையக அரசியல் அரங்கத்தின் சார்பில் அஞ்சலியைப் பதிவு செய்வதுடன் அவரது பிரிவால் துயருற்று இருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தொழிற்சங்க அங்கத்தினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.