சம்பள நிர்ணய சபைத் தீர்மானம்:முறைமை மாற்றத்துக்கான முதற்படி

இதுவரை காலம் ஆயிரம் ரூபாதான் பிரச்சினை என பேசிவந்த அரசியல், தொழிற்சங்க பிரதிநிதிகள் இப்போது அதற்கு அப்பால்சென்று வேலை நாட்கள் குறித்து பேசத் தலைப்பட்டுள்ளனர்.எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினை உக்கிரமடையும்போது முறைமை மாற்றம் குறித்து ஆயிரம் ரூபாவுக்கு வெளியே சென்று பேசும் பல திறப்புகள் வெளிப்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே சம்பள சபை மூலமான தீர்மானம், முறைமை மாற்றம் ஒன்றுக்கான முதற்படியாகும் என்கிறார் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் .

தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் சம்பள நிர்ணய சபை ஊடாக எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து கேசரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

அவருடனான உரையாடல் :

கேள்வி : தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் 1000/= ஆக தீர்மானித்திருப்பது பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில் : முதலில் அரசாங்கம் உறுதி அளித்தவாறு அடிப்படைச் சம்பளம் 1000/= வழங்கப்படவில்லை.அது 900/= ஆகவே உள்ளது. அடுத்தது, இதற்கு முன்னதான 700/= அடிப்படைச் சம்பளத்தின்போது மூன்று தொழிற்சங்கங்களில் ஒன்று கைச்சாத்திடாதபோதும் ஏனைய இரண்டு தொழில் சங்கங்களும் கம்பனிகளின் பிரதிநிதியும் கையொப்பம் இட்டு ஏற்றுக் கொண்டதால் நடைமுறைக்கு வந்தது. அப்போது அரசாங்கத்தின் ஒப்புதல் அவசியமாகி இருக்கவில்லை. ஆனால், இப்போது தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் ஒரு தொகைக்கு உடன்பட்டு வந்துள்ள போதும் கம்பனிகள் அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் எதிர்த்தும் வாக்களித்துள்ளன. எனவே அறிவிக்கப்பட்ட இந்த தொகையை வழங்க வேண்டிய கம்பனி உடன்படாமல் இருப்பது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமான முடிவு எனும் கேள்வியையே உருவாக்குகிறது.

கேள்வி : தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கையில் வெற்றி அடைந்துள்ளதாக கொண்டாடுகின்றனவே..

பதில் : அப்படி அறிவிக்கும் தேவைப்பாடு ஒன்று ஒரு தொழிற்சங்கங்கத்துக்கும் அரசாங்கத்துக்கும் உள்ளது. சம்பள நிர்ணய சபை தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட எல்லாத் தொழிற்சங்கங்களும் ஒரே நிலைப்பாட்டில் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். நாளுக்குரிய கூலித் தொகையில் அவர்களிடையே இணக்கப்பாடு தெரிந்தாலும் மாதத்தில் வழங்கப்படும் வேலைநாட்கள் தொடர்பில் அவர்களுக்குள் கருத்து முரண்பாடுகளும் ஐமிச்சங்களும் நிலவுவதை அவதானிக்கலாம். மாதத்தில் 25 நாள் வேலை வழங்கப்படல் வேண்டும் என எதிர்கட்சிசார்பு தொழிற்சங்கம் வலியுறுத்துகிறது. மறுபுறத்தில் அதனை சம்பள நிர்ணய சபை தீர்மானிக்க முடியாது என ஆளுங்கட்சி சார்பு தொழிற்சங்கம் தெரிவிக்கிறது.
தாங்கள் 1000/= நாட்சம்பளத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டதாக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கொண்டாடினாலும் அடுத்துவரும் மாதங்களில் அந்த சம்பளத்தை மாதாந்தம் பெறும் தொழிலாளர்களின் சம்பளப் பட்டியல் வாயிலாக அதன் உண்மைத் தன்மை வெளிப்படும். அப்போதுதான் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும்.

கேள்வி : இத்தனை வருடகாலம் இல்லாத சம்பளசபை முறைமை இப்போது திடீரென எப்படி வந்தது ?

பதில் : சம்பள நிர்ணய சபை ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தைத் தீர்மானிக்கும் முறைமை புதியதல்ல. ஆனாலும், கூட்டு ஒப்பந்தம் மூலம் தீர்மானிப்பதான ஒரு முறைமை வந்தவுடன் அந்த முறைமை கிடப்பில் போடப்பட்டது. இப்போது அதனைத் தூசுதட்டும் தேவைப்பாடு நடப்பு அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கொத்தபய ராஜபக்‌ஷ சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரமும், ஆண்டின் இறுதியில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ வரவு செலவுத் திட்டத்தில் விடுத்த அறிவிப்பும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரவில்லை. அது அரசாங்கத்துக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்த நிலையிலேயே சம்பளநிர்ணய சபையின் ஊடாக தீர்மானிப்பதற்கு தொழில் அமைச்சர் நிமால் சிறிபால சில்வா அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து சம்பள நிர்ணய சபைக்குச் செல்ரும் தீர்மானத்தை எடுத்தார்.

சம்பள நிர்ணய சபையில் அடிப்படை நாட்சம்பளம் 900/= எனவும் வரவுசெலவுத்திட்டபடி 100/= எனவும் வழங்க வேண்டும் எடுத்த முடிவுக்கு கம்பனிகள் இணங்கவில்லை என்பது அவர்கள் அதனை எதிர்த்து வாக்களித்ததில் இருந்தே தெளிவாக தெரிகிறது.

இங்கே தொடர்புபடும் மூன்று தரப்பினர்களில் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தை நிறைவேற்றும் பொறுப்பு அதனை மறுக்கும் கம்பனிகள் சார்ந்தது என்றவகையில் இனிவரும் காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை மாற்றுவடிவம் எடுக்க வாய்ப்புகள் உள்ளன.

கேள்வி : முதலாளிமார் சம்மேளனம் இணங்காவிட்டால் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் ?

பதில் : தோட்டக் கம்பனிகள் தமது ஆட்சேபனையைத் தெரிவிக்க 14 நாட்கள் கால அவகாசம் உண்டு. அது குறித்து தாம் கவனம் செலுத்த உள்ளதாக முதலாளிமார் சம்மேளனப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்து உள்ளார். அதற்குள் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை வெளியிட்டு, அதனை ஏற்று நடைமுறைப்படுத்த கம்பனிகள் நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர்கள் வழங்கும் வேலை நாட்களைக் குறைக்க வாயப்பு உள்ளது. அது தொழிலாளர்களின் மாத வருமானத்தைக் குறைக்க வல்லது.

எனவேதான் இதுவரை காலம் ஆயிரம் ரூபாதான் பிரச்சினை என பேசிவந்த அரசியல், தொழிற்சங்க பிரதிநிதிகள் இப்போது அதற்கு அப்பால்சென்று வேலை நாட்கள் குறித்து பேசத் தலைப்பட்டுள்ளனர்.எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினை உக்கிரமடையும்போது முறைமை மாற்றம் குறித்து ஆயிரம் ரூபாவுக்கு வெளியே சென்று பேசும் பல திறப்புகள் வெளிப்பட வாய்ப்புகள் உள்ளன.

கேள்வி : இப்போதைய புதிய முனைப்புகளினால் இதுவரை நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமை என்னவாகும் ?

நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமையில் மாற்றம் வேண்டுமென கடந்த காலங்களில் தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டு வந்துள்ளது. இப்போது சம்பள நிர்ணய சபை மூலம் தீர்மானிக்கப்பட்ட ஒரு தொகையை கம்பனிகள் வழங்க வேண்டும் அரசினால் நிர்ப்பந்திக்கப்படும் நிலையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமையின் இறுக்கம் தளர்ந்துள்ளது என்பதனைக் காட்டுகிறது. கம்பனிகளின் அறிக்கைகளில் அதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன.

இதனால், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை மாற்றுவடிவில் வெளிவரும். இதன்போது அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் மேலும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கும் தேவை எழும். அதன்போது முறைமை மாற்றம் ஒன்றிற்கான அழுத்தம் அதிகரிக்கும். சமூக மட்டத்திலும் ஆயிரம் ரூபாதான் பிரச்சினை என்கிற நிலையைக் கடந்து தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையை, மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினையைப் பார்க்கும் சூழ்நிலை ஏற்படும். இதனை அரசியல் ரீதியான ஒரு முன்னகர்வு என கொள்ளுதல் வேண்டும். அதே நேரம் அந்த அரசியலை கவனமாக முன்னகர்த்தவும் வேண்டும்.

கடந்த ஐந்து, ஆறு வடிவங்களாக பாராளுமன்றில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்ததன் விளைவாகவே, கடந்த கால் நூற்றாண்டு காலமாக கண்டு கொள்ளாமல் இருந்த அரசும் அரசாங்கமும் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பள விடயத்தில் தலையிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அரசாங்கம் இப்போதுதான் இந்த சுமையை சுமக்க ஆரம்பித்துள்ளது.

இதன் பிரதிபலிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன சபையில் தெரிவிக்கிறார். கம்பனிகள் மறுத்தால் தோட்டத்தை அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டுப் போகலாம் என தொழில் அமைச்சர் சபையிலே பகிரங்கமாக கூறியுள்ளார். எனவே, இந்த கால் நூற்றாண்டு காலமும் கம்பனிகளுக்கு 99 வருட குத்தகைக்குக் கொடுத்திருப்பதான கதை பொய்யானது என்பது தெளிவாகிறது. அரசுக்கே நிலம் சொந்தம்.அரசே தங்கப்பங்குடமையாளர். அதனால்தான் இத்தனை உறுதியாக கம்பனிகள் வெளியேறட்டும் என சொல்ல முடிகிறது.

1972 ஆம் ஆண்டு அரசாங்கம் பிரித்தானிய கம்பனிகளிடம் இருந்து தோட்டங்களைப் பொறுப்பெடுத்ததன் பின்னரே தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு அவை சிறுதொட்டங்களாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவையே இன்று தேயிலை ஏற்றுமதியில் 75 சதவீத வருமானத்தைப் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றன.

பெருந்தோட்டங்கள் தோல்வியடைந்த 25 ஆண்டுகளில் சிறுதோட்டங்கள் வெற்றியடைந்த வரலாற்றை வலியுறுத்தி தனியார் கம்பனிகளிடம் இருந்து தோட்டங்களைப் பெற்று அவற்றை தொழிலாளர்களுக்கு பகிர்ந்து அளிப்பதன் மூலமே, கூட்டு ஒப்பந்தம், சம்பள நிர்ணய சபை முதலான குழப்பகரமான சூழல்களைத் தவிர்க்கலாம். எனவே இன்றைய சூழலை முறைமை மாற்றத்திற்கான முதற்படியாக கொள்ளுதல் வேண்டும்.

15/02/2021 - Virakesari

இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் பொதுவானதாக அரசியலமைப்பு அமையவேண்டும்

- சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் கலந்துரையாடலில் திலகராஜ்

இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சி மீண்டும் பேசுபொருளாகி இருக்கும் நிலையில் உத்தேச அரசியல மைப்பானது எந்தவொரு இனத்தினருக்கோ, மதத்தினருக்கோ அல்லது குறித்த மொழிசார்ந்தவருக்கோ ஆனது என்ற உணர்வைத்தராத வகையில் அமைவதாக, இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் பொதுவானதாக உணரக்கூடியதான அடிப்படைகளைக் கொண்டிருத்தல் வேண்டும் என முன்னாள் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் அமைப்பு நிபுணர்களும் அரசியல் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் இணைத்ததான கருத்தாடல், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் இணைய வழியூடாக நடைபெற்றது.

திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அத்துலசிரி சமரநாயக்கவின் நெறிப்படுத்தலில் பேராதனைப் பல்கலைக்கழக சட்டபீடத் தலைவரும் முன்னாள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவியுமான பேராசிரியை தீப்பிக்கா உடுகம, சட்டத்தரணி மீரா மொஹிதீன் பாஹீஜ், முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

இந்த கருத்துரையின்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது முழுமையான உரை பின்வருமாறு:

அடிப்படைத் தத்துவம்

அரசியலமைப்புக்கான அடிப்படைத்தத்துவமானது, அரசியலமைப்பானது இன, மத, மொழி சார்ந்ததாக அமையப் பெறாது இலங்கைப் பிரஜை என்ற அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வகுக்கப்படுதல் வேண்டும். பிரஜை என்போர் எவ்வித பேதப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படமாட்டார் என்பது அடிப்படைக் கொள்கையாதல் வேண்டும். தேசிய கொள்கைகள் காலத்துக்கு காலம் மதிப்பாய்வு (Policy Evaluation) செய்யப்படுதல் வேண்டும். குறிப்பாக அபிவிருத்தி விடயங்கள் சார்ந்த தேசிய கொள்கைகள் காலத்துக்கு காலம் கண்காணிப்பு (Scrutinizing) செய்யப்படுவதுடன் புதுப்பிக்கப்படும் கொள்கைகள் நாட்டு மக்களின் இறைமையை பாதிப்பதாக இல்லாமல் அமைவதை அரசியலமைப்பு உறுதி செய்தல் வேண்டும்.

மக்களின் இறையாண்மை என்பது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அத்தகைய இறையாண்மை நிர்வாக அதிகாரங்களையும், அடிப்படை உரிமைகளையும், வாக்குரிமையையும் உறுதி செய்வதாக அமைதல் வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ஏற்றுக் கொண்ட சிவில், அரசியல் உரிமைகள், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள், இனப்பாகுபாட்டை அகற்றுவதற்கான உடன்படிக்கை ,பெண்களுக்கு எதிரான அனைத்துவகை பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான உடன்படிக்கை, குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை, சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் பற்றிய உடன்படிக்கை, கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை போன்ற உடன்படிக்கைகளும் மரபுரிமைகளும் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படுவது அடிப்படையாக கொள்ளப்படுதல் வேண்டும்.

அரசின் தன்மை

இலங்கை ஒரு மதச்சார்பற்ற, பல்லினங்கள் வாழும், பல்கலாசார ஜனநாயக நாடு என அரசியலமைப்பில் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

எனினும் சுதந்திரந்துக்குமுன் இருந்து 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கம் வரை பௌத்த மதத்தை அரசியலமைப்பு போஷிப்பதாக இருக்கவேண்டும் என்ற நிலை உருவானதால் அத்தகைய ஒரு சரத்தினை மாற்றிக் கொள்வதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை நாம் யதார்த்தமாக உணர்ந்தவர்களாக உள்ளோம். கடந்த நல்லாட்சிகால முன்மொழிவுகளில் அத்தகைய முயற்சி எடுக்கப்பட்டபோது அதற்கு பாரிய எதிர்ப்பலை வந்ததோடு அதற்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட யோசனைகளில் பௌத்தத்திற்கு முன்னுரிமை என்ற கருத்தே பரவலாகக் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே பௌத்தத்திற்கு முன்னுரிமை என அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட வேண்டியது பெரும்பாலானவர்களின் அபிலாஷையெனில், ஏனைய மதங்களும் நம்பிக்கைகளும் சுதந்திரமாக இயங்குவதனையும் அரசியலமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுதல் வேண்டும். அத்துடன் பிரஜையொருவர் மதம் ஒன்றை பின்பற்றாதிருப்பதற்கு உள்ள உரிமையும் அரசியலமைப்பு உறுதி செய்தல் வேண்டும்.

இலங்கை நாட்டின் பெயர், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என்பதாகவே இருக்கலாம். தற்போதைய தேசிய கொடியின் மீது சிறுபான்மை தேசிய இனங்களுக்கு விமர்சனம் உள்ளபோதும் அதில் வழங்கப்பட்டிருக்கக்கூடிய குறைந்தபட்ச அங்கீகாரத்தையும் தனிநபரோ அல்லது அமைப்புகளோ தன்னிச்சையாக நீக்குவதான சந்தர்ப்பங்களை அரசியலமைப்பு தடைசெய்யும் ஏற்பாடுகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

இந்த நாட்டில் சிறுபான்மை தேசிய இனம் என்றவகையில் மலையகத்தவனாக அரசியல் உரிமை நீக்கம் செய்யப்பட்ட சமூகத்தில் இருந்து அதன் வலியை உணர்ந்து வந்தவன் என்றவகையில் எங்களது அடையாளம் இன்னும் இந்தியத் தமிழர் என இலங்கையில் பதிவு செய்யப்படுவது எங்களை இலங்கை தேசத்தில் இருந்து அந்நியப்படுத்தி வைப்பதான உணர்வு என்னிடத்தில் உண்டு.

இந்தியாவில் இருந்துவந்து இருநூறு வருடங்களை அடையும் மலையகத் தமிழர்கள், இப்போதாவது இலங்கை அரசியலமைப்பில் முழுமையான இலங்கை பிரஜையாக உணரும் ஏற்பாடுகளை எதிர்பார்க்கின்றேன்.

அந்தவகையில், மலையகத் தமிழ் இனத்தைக் குறிக்கும் நிற அடையாளமும் தேசிய கொடியில் மேலதிகமாக சேர்க்கப்படுதல் வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

தேசியகீதம் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பாடப்படுவதை அரசியலமைப்பு உறுதி செய்தல் வேண்டும்.

பாகுபாடு அற்ற குடியுரிமை உறுதி செய்யப்படல் வேண்டும். பதிவுப் பிரஜை எனும் வகுதி அகற்றப்படுதல் வேண்டும். பிறப்புச் சான்றிதழ் சகலருக்கும் ஒரே வடிவமைப்பிலானதாக மும்மொழிகளிலும் எழுதப்பட்டதாக இருத்தல் வேண்டும். (புதிய தேசிய அடையாள அட்டையில் உள்ளது போன்று).

இலங்கையில் தொடர்ச்சியாக ஐந்தாண்டு காலம் வாழ்ந்த ஒருவர் நிரந்தர வதிவிட (PR) வாய்ப்பு பெறவும், தொடர்ந்து பத்து ஆண்டுகள் வாழ்ந்த ஒருவர் குடியுரிமை பெறவும் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.

இலங்கையில் பிறந்தவராயினும் அவர் வேறு ஒரு நாட்டின் பிரஜைக்குரிய அந்தஸ்த்தை பெற்றிருக்கும் பட்சத்தில் இலங்கையில் அரசியல், நிர்வாக, பாதுகாப்பு துறைகளில் பதவியைப் பெறுபவராயின் பிறநாட்டு பிரஜாவுரிமை கைவிடல் வேண்டும்.

உரிமைகள்

அடிப்படை உரிமையாக மனசாட்சி சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், மத சுதந்திரம் , மதமற்று இருப்பதற்கான சுதந்திரம், வாழ்வதற்கான சுதந்திரம், காணி உடமைச் சுதந்திரம் - (வீட்டுக்கும் வாழ்வாதாரத்துக்குமான காணி ) சகல பிரஜைகளுக்கும் உறுதி செய்தல் வேண்டும்.

தனி நபர் பாதுகாப்புக்கான உரிமை, தொழில்உரிமை, தொழிற்சங்க உரிமை, சமத்துவமான கல்விக்கான உரிமை, பொது சுகாதார சேவைகளைப் பெறும் உரிமை, உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை ( இதனை உபசட்டங்களைக் கொண்டு தடுக்க முடியாத வகையில்) உறுதி செய்யப்படுதல் வேண்டும்

ஜனநாயக உரிமைகளாக கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், அமைதியாக ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், தகவல் அறியும் சுதந்திரம், சகல பிரஜைகளுக்கும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கும், போட்டியிடுவதற்கும், சேவையாற்றுவதற்குமான சுதந்திரம் ஆகியனவும், நடமாடுவதற்கான உரிமைகளாக இலங்கையில் எப்பகுதிலும் வாழ்வதற்கான சுதந்திரமும், இலங்கையை விட்டு வெளியேறுவதற்கான சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

சட்ட உரிமைகள் எனும் வகையில் நீதியையும் சட்டத்தையும் நியாமாக அமுலாக்குவதன் ஊடாக அனுபவிக்கும் சுதந்திரம். சட்டத்துக்கு முன் சமமாகவும் நியாயமாகவும் நடத்தக் கோருவதற்கான உரிமை, தடுப்புக் காவலில் வைக்க நேரிடும் இடத்து சட்ட உதவிகளைப் பெறும் உரிமை, சட்ட ஆலோசனை சேவை பெறும் உரிமை ஆள்கொண்ரவு மனுவுக்கான உத்தரவாதம், சட்டத்தின் முன் கைதான ஒருவர் அதனது தாய்மொழியில் வாக்குமூலம் வழங்கவும், தாய்மொழி தவிர்ந்த மொழிகளில் வாக்குமூலம் வழங்க மறுக்கவோ அல்லது தாய்மொழி தவிர்ந்த மொழி ஒன்றில் தயாரிக்கப்பட்ட எழுத்து மூல வாக்கு மூலத்தில் கையொப்பம் இடாமல் மறுப்பதற்கான உரிமை, நீதிமன்ற நடவடிக்கைகளின்போது தனது தாய்மொழியில் மொழிபெயர்ப்பைக் கோரும் உரிமை, நீதியும் நியாயமானதுமான விசாரணையைக் கோரி நிற்பதற்கான உரிமை, குற்றம் நிரூபிக்கப்படும்வரை நிரபராதி ஆக கருதப்படுவதற்கான உரிமை உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

சமத்துவ உரிமைகள் எனும் வகையில் இலங்கை ஒரு பல்லினத்துவ நாடு என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு இனமும் தேசிய அடையாளத்தை உறுதி செய்ய வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும். இனம் / பால்/ மதம் / வம்சாவளி / மொழி சார்ந்த தேசியங்களை சமத்துவமாக நடாத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.

இலங்கை நாட்டிற்குள் 'இந்திய தமிழர்' எனும் இன அடையாளம் நீக்கப்பட்டு இந்திய வம்சாவளியினரான அந்த மக்கள் தமது பண்பாட்டு அடையாளமாக வளர்த்தெடுத்துள்ள 'மலையகத் தமிழர்' எனும் அடையாளம் சனத்தகைக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படுதல் வேண்டும். தேசிய சிறுபான்மை இனத்தேசிய பண்பாட்டு அடையாளங்கள், மரபுரிமைகள், தொல்லியல் சிறப்பியல்புகள், கலை, கலாசாரங்கள், இலக்கியம், அரங்கம் போன்றனவற்றை பேணுவதற்கும் பாதுகாப்பதற்குமான உரிமை.

தனிநபர் உரிமைகளாக சட்டப்பாகுபாட்டில் இருந்து பாதுகாப்பு, இலவச கல்வியை அனுபவிப்பதற்கான உரிமை, இலவச பொது சுகாதாரத்தைப் பெறும் உரிமை, அந்தரங்க வாழ்க்கை பாதுகாப்பு உரிமை, பால் (Gender) ரீதியான உரிமை, மாற்றுப்பாலின உரிமை, இன, மத, சாதி பாகுபாட்டுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான உரிமை மாற்றுத்திறனாளிக்கான, மாற்றுப்பாலின பொதுவசதிகள் பெறும் உரிமைகள் அரசியலமைப்பில் உறுதிசெய்யப்படுவதுடன் குழு உரிமைகளாக இனத்தேசியமாகவும், சமூகக் குழுமமாகவும் அடையாளத்தைப் பேணும் உரிமை உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

கூட்டு உரிமைகளாக நிலைபேறான இயற்கை சூழல் பேணப்படுதல், இயற்கை வளம் சூறையாடப்படாமல் இருப்பதற்கான உரிமை, சமூக நீதியைப் பெறுவதற்கான உரிமை, அரச பொது நிர்வாக சேவையை நியாயமான முறையில் பெறுவதற்கான உரிமை, நுகர்வோர் உரிமைகள் போன்றவற்றுடன், பிரிக்கப்படமுடியாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வினை உறுதிசெயவதாகவும் இருத்தல் வேண்டும்.

ஏக்கிய, எக்சத் - ஒற்றையாட்சி, ஒருமித்த போன்ற சொல்லாடல் குழப்பங்களை தவிர்த்து அதிகாரபகிர்வின் ஊடாக மக்களை சக்திமயப்படுத்தும் ஆட்சி முறைமை குறித்த அவதானமே அவசியமானதாகும்.

'அரசியலமைப்புக்கான அடிப்படைத் தத்துவங்களும், அரசின் தன்மையும்' எனும் தலைப்பில் உரைகள் அமைந்தபோதும் உரையாடல்களின் போது அரசியலமைப்பு தயாரிப்பு முறைமை குறித்த இரண்டு முக்கிய விடயங்கள் அவதானத்தைப் பெற்றன.

மாற்றப்பட முடியாத அரசியலமைப்பு அடிப்படைத் தத்துவங்களை உருவாக்கிக் கொள்ள முடியுமா ? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஜயம்பத்தி விக்ரமரட்ண முன்வைத்த கேள்வியும், கலாநிதி சுஜாத்தா கமகே முன்வைத்த அரசியலமைப்பு பேரவை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அரசியலமைப்பு உருவாக்க பணிகளை முன்னெடுத்தல் என்பது அரசியலமைப்பு சபை ஒன்றுக்காக தனியான தேர்தலை நடாத்தி உறுப்பினர்களைத் தெரிவு செய்துகொள்வதன் மூலம் ஆளும் அரசாங்கங்களுக்குத் தேவையான நிபுணர்களை நியமித்து அரசியலமைப்பை உருவாக்க முனையும் கைங்கரியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் கருத்தாடல் இடம்பெற்றது.

கூடவே புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவைப்பாட்டுக்கான தூரநோக்கம் பற்றிய ஆய்வும் கலந்துரையாடலும்கூட அடுத்தடுத்த உரையாடல்களில் மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் உடன்பாடு எட்டப்பட்டது.

22/01/2021- Virakesari

இந்திய புலமைப்பரிசில் திட்டமும்  தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளும் 

மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் இருந்து மீண்டும் இந்தியா திரும்பி தேச விடுதலை போராட்டத்தை ஆரம்பித்த நாளை ( ஜனவரி 9) சிறப்பிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின விழா ஆண்டுதோறும் உலகெங்கிலும் உள்ள இந்திய உயர்ஸ்தாணிகர் காரியாலயங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் கண்டிக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் ( 19-01-2021) கண்டி மாவலி ரீச் விருந்தகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் செய்திக்குறிப்பு 
இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தின் ஊடாக கடந்த எழுபதாண்டுகளுக்கு மேலாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் ஆற்றி வரும் அளப்பரிய பணியை அதன் பயனாளிகளில் ஒருவனாக நன்றியுடன் நினைவு கூர்வதோடு, தொழிலாளர் பிள்ளைகளுக்கு என ஒதுக்கீடு செய்ய இந்திய அரசாங்கம்  முன்வரவேண்டும் என முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

2021 - கண்டியில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் தின விழாவில்
அவர் மேலும் உரையாற்றுகையில்,
மலையகத் தமிழர்களாகிய நாம் இந்திய வம்சாவளி யினர் என்பதுதான் எமது வரலாறு. அந்த வரலாற்றின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பதே இந்திய உயர்ஸ்தாணிகரகத்தின் கண்டி காரயாலயம்.  1947 ஆம் ஆண்டுமுதல் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகையாக மாதாந்தம் வழங்கி வரும் பங்களிப்பினை அதன் பயனாளிகளில் ஒருவனாக வரவேற்கின்றேன்.
2019 - இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்ற போது அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஶ்ரீமத் சுஷ்மா சுவராஜ் உடனான சந்திப்பின்போது....
அதே நேரம் அவ்வாறு வழங்கப்படும் உதவுதொகை உயர்தர மாணவர்களுக்கு ஐநூறு ரூபா, பல்கலைக் கழக மாணவர்களுக்கு 1500/- ரூபா என்ற அளவிலேயே நீண்டகாலமாக இருந்து வருகிறது. அதனை அதிகரிப்பதற்கு முன்னைய டெல்லி பயணங்களின்போது வெளிவிவகாரத்துறை அமைச்சராகவிருந்த மறைந்த சுஷ்மா சுவராஜ் அம்மையாரிடம் முன்மொழிவு செய்துள்ளேன்.
தவிரவும் இந்திய அரசாங்கத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்தியாவில் பட்டப்படிப்பு பெறுவதற்காக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு என ஒரு தொகையை ஒதுக்கீடு செய்வதிலும் அம்மையார் கொள்கை அளவில் இணங்கி இருந்தார். இந்த இரண்டு விடயங்களிலும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகரகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என எனது கோரிக்கையை வலியுறுத்த விரும்புகிறேன்.
2022 ஆம் ஆண்டு இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் 75 ஆண்டு நிறைவினை அடைகிறது. 1947 ஆம் ஆண்டு அமரர் அனி அவர்களினால் தாபிக்கப்பட்ட இந்த அமைப்பில் உதவி பெற்று கல்விகற்ற பலர் இன்று பல உயர்ந்த பதவிகளில் உள்ளனர். அவர்களது சாதனைகளைக் குறிக்கும் ஒரு நினைவு மலரை 75 வது ஆண்டு நிறைவாகக் கொண்டுவருவது மலையகக் கல்வி வளர்ச்சியின் ஓர் அடையாளமாகவும் இந்திய அரசாங்கத்தின் பணிகளின் ஒரு மீளாய்வாகவும் அமையக்கூடும். 1998 ஆம் ஆண்டு அத்தகைய ஒரு ஆவணம் வெளியிடப்பட்டுள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

2011- டில்லியில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் தின விழாவில் உரையாற்றிய தருணம்
இத்தகைய உதவிகளைப் பெற்று கல்வி கற்றோர் இன்று கல்வியாளர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, வெளிநாட்டு தூதுவர்களாக, பேராசிரியர்களாக, உயர் தொழில் துறையினராக,  வளர்ந்திருக்கக் கூடிய பலரது சாதனைகள் பதிவு பெறுவது அவசியமாகும். அதுவே அவர்களது ஒன்று கூடல் நிகழ்வாக அமையுமெனில் மேலும் சக்தி மிக்கதாக இருக்கும் இது ஒரு வகையில் இந்த நிதியத்தினை மேலும் சக்தி மயப்படுத்துவதற்கும் எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமையும்  இந்திய வெளிவிவகார அமைச்சரின் அண்மைய விஜயத்தின்போது இந்தியாவில் வாழும் அகதிகளை திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு வட கிழக்கு அரசியல் தலைமைகள் கோரிக்கை விடுத்ததாக அறிந்தேன்.
ஆனால் இந்தியாவில் வாழும் அகதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் மலையகத்தில் இருந்து வன்னி சென்று அங்கிருந்து அகதியாகப் போன இந்தியா வம்சாவளி தமிழர்கள் என்றவகையில் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கடந்த வருடம் ஆவணங்களுடன் விடுத்த வேண்டுகோளை நினைவுபடுத்த விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளின் இந்திய புலமைப்பரிசில் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் (வீரகேசரி 21-01-2021)


சிறுதோட்ட உடைமை என்பது;மலையக தலைமுறையின் நாகரீகமான அரசியல், சமூக இருப்புக்கான கோரிக்கை

- முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்

இலங்கையில் இருநூறு வருடகால வரலாற்றைக் கொண்ட மலையகத் தமிழர் சமூகத்தினர் மத்தியில்  பேசுபொருளாகி இருக்கும் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உடமையாளர்களாக்க வேண்டும் எனும் கோரிக்கை தனியே தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கான தீர்வு மாத்திரமல்ல, அது ஐந்தாவது தலைமுறையான இன்றைய மலையக தலைமுறையின் நாகரீகமான அரசியல், சமூக இருப்புக்கான கோரிக்கையாகும் என்பதைப் புரிந்து கொண்டு இன்றைய இளைய தலைமுறை அதனை உரையாடவும் வென்றெடுக்கவும் முன்வரவேண்டும் என முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் சமூக ஆய்வாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

மலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் ஏற்பாட்டில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜீவன் ராஜேந்திரனின் நெறிப்படுத்தலில் இணைய வழி கருத்தாடல் களம் கடந்த சனிக்கிழமை மாலை 7 மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளருமான மு.சிவலிங்கம், முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் சமூக ஆய்வாளருமான மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் உரையாளர்களாக கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.


கருத்தாடல் களத்தின் கேள்வியாக “தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை கூலி உயர்வா? சிறுதோட்ட உடமையா ? அமைய வேண்டும் என்பதாக இருந்தது. அதற்கு பதில் அளித்து கருத்துரையாற்றிய மு.சிவலிங்கம் கூறியதாவது,இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும்போது அத்தகைய ஒரு கேள்வியுடன் தொடர்புடைய மூன்று தரப்பினரை நாம் அடையாளம் காணவேண்டியுள்ளது. அரசாங்கம், தோட்டக் கம்பனிகள், மக்கள் பிரதிநிதிகள் எனும் இந்த மூன்று தரப்பினர் மீதான விமர்சனங்களை முன்வைக்காது இந்த கருத்தாடலை முன்கொண்டு செல்ல முடியாது. குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் என்போர் தொழிற்சங்கத்தை தமது அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான கருவியாக கையாளத் தொடங்கியவுடன் அரசாங்கத்தின் மடியில் தவழும் செல்லப் பிள்ளைகளாகி எதனையும் தட்டிக் கேட்க முடியாதவர்களாக மாறிவிடுவது வேதனைக்குரியது. 1000/= என்பது சம்பளம் இல்லை.
அது கூலி. எனவே அந்தக் கோரிக்கையை தொடர்ச்சியாக கம்பனிகளிடம் வேண்டி நிற்பதானது நாங்கள் ‘கூலிகளாக’ தொடர்ந்து இருக்கத் தயார் என்ற அடிமை நிலைக் கோரிக்கையாகவும் அவலநிலை நிலைத் தொகையாகவும் மாறியுள்ளது. அதில் இருந்து விடுபட சுயாதீன உழைப்பாளர்களாக மாறும் தேவை உள்ளது. அதற்கு காணி என்பது மிக அவசியமான ஒன்று. எனவே காணியை அடிப்படையாகக் கொண்ட சிறுதோட்ட உடமையே கூலிச்சமூகம் எனும் அடிமைச் சமூக நிலையில் இருந்து மலையக சமூகத்தை மீட்டெடுக்க வழிகோலும் என தெரிவித்தார்.
கருத்தாடலில் பங்கு கொண்ட மயில்வாகனம் திலகராஜ் கூறுகையில்,
இலங்கை வந்து 200 வருடங்களை எட்டிப்பிடிக்கும் மலையகத் தமிழர் சமூகம் முதல் நூறு ஆண்டு காலமும் முற்று முழுதான கொத்தடிமைச் சமூகமாக வைக்கப்பட்டிருந்த வரலாறும் அதற்கடுத்த நூறு ஆண்டுகளில்  அடைந்திருக்கக் கூடிய அரசியல், சமூக, பண்பாட்டு பரிமான மாற்றங்களையும் அவதானத்தில் எடுத்து இன்றைய கோரிக்கை என்னவாக இருக்கவேண்டும் எனும் தீர்மானத்துக்கு வரவேண்டும்.

1820 முதல  1920 வரையான முதல் நூறு ஆண்டுகாலத்தில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்ட தலைமுறையினரை முதலாம் தலைமுறையினராகக் கொண்டால், அதற்கடுத்த ஒவ்வொரு முப்பதாண்டுகளிலும் வாழ்ந்த ஒவ்வொரு தலைமுறையும் மைன்கொண்டு சென்ற ஒரு அரசியல் தீர்மானம் பற்றிய ஆய்வு இங்கே வேண்டத்தக்கது.
1920 முதல் 1950 வரையான முப்பதாண்டு காலத்தில் அடிமைகளாக இருந்து அரசவையில் அங்கத்துவம் பெற்ற அரசியல் பரிமாணத்தை தொழிற்சங்க கட்டமைப்பின் ஊடாக இரண்டாந் தலைமுறை கண்டடைந்தது.
அதற்கடுத்த 1950 க்கும் 1980 க்குமான பகுதியில் பறிக்கப்பட்ட குடியுரிமையை மீளப்பெறும் போராட்டத்தில் மூன்றாம் தலைமுறை இயங்கியது. அதாவது இரண்டாந்  தலைமுறை கண்டைந்த வெற்றி பறிக்கப்பட்டபோது அதனை மீளப் பெறுவதில்  மூன்றாம் தலைமுறை இயங்கி இருக்கிறது. அதில் வெற்றியும் கண்டது.
அதற்கடுத்த 1980 முதல் 2010 வரையான நான்காம் தலைமுறையினர் மீளப்பெற்ற வாக்குரிமையைக் கொண்டு அரசியல் பிரதிநிதித்துவம் பெறுதல் அமைச்சரவையில் அங்கம் வகித்தல் எனும் அபிவிருத்திக்கான இலக்கினை ஒரு தலைமுறைக் கோரிக்கையாக முன்னெடுத்தது.

இப்போது 2010 க்குப் பின்னான ஐந்தாம் தலைமுறையின் தமது இலக்காக கோரிக்கையாக முன்கொண்டு செல்லவேண்டிய விடயம் என்ன என நோக்கும்கோது அது தொழிலாளர்களை சிறு தோட்ட உடமையாக்குதல் என்பதே சரியான தெரிவாக அமைகிறது.

ஏனெனில் முதலாம் தலைமுறையே தன்னை தியாகம் செய்து உருவாக்கிய இரண்டாம் தலைமுறை காலத்தில் 1940 ல் முல்லோயா  கோவிந்தன் எனும் தியாகியின் வீர மரணத்தின் ஊடாக கூலி உயர்வு கோரிக்கை முன்னிறுத்தப்பட்டுள்ளது.  அடுத்த மூன்றாம் தலைமுறை காலத்தில் சிவனு லட்சுமணன் எனும் தியாகியின் வீர மரணத்தின் ஊடாக காணி உரிமை கோரிக்கை முன்னிறுத்தப்பட்டது.

 நான்காம் தலைமுறை காலத்தில் அபிவிருத்தியை இலக்காக கொண்டு இந்த கூலி உயர்வும், காணி உரிமையும் இரண்டு கோரிக்கைகளும் மக்கள் போராட்டம் என்ற நிலையில் இருந்து கைநழுவி சென்றது. இதே சமகாலத்தில் காலனித்துவ வாதிகளிடம் இருந்து தோட்டங்களை அரசு பொறுப்பேற்று இருபதாண்டு ( 1972-1992) காலப்பகுதிக்குள்ளாகவே சிங்கள மக்களை சிறு தோட்ட உடமையாளர்களாகவும் மலையகத் தமிழரை தனியார் பெருந்தோட்டங்களின் கூலித் தொழிலாளர்களாக அதுவும் ஒப்பந்த அடிப்படை கூலிகளாக மாற்றி விட்டுள்ளது.

எனவே ஐந்தாம் தலைமுறையினரான இன்றைய தலைமுறையினர் தமது பிரதான கோரிக்கையாக எதனைக் கொள்ளவேண்டும் என நோக்கும்போது இரண்டாம் தலைமுறை கூலி கோரிக்கையா? மூன்றாந்தலைமுறை காணி கோரிக்கையா?  என சிந்திக்குமிடத்து இரண்டுக்கும் தீர்வைத் தரக்கூடிய சிறுதோட்ட உடமை எனும் கருத்தியலைத் துணிந்து ஏற்பவர்களாதல் வேண்டும். துரதிஷ்டவசமாக ஐந்தாம் தலைமுறையினர் இரண்டாம் தலைமுறையினர் நின்ற இடத்தில் நிற்கும் பலவீனத்தையே பார்க்க முடிகிறது.

சிறுதோட்ட உடைமையாளர் எனும் இலக்கு தனியே  தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கான தீர்வு மாத்திரமல்ல, அது ஐந்தாவது தலைமுறையான இன்றைய மலையக தலைமுறையின் நாகரீகமான அரசியல், சமூக இருப்புக்கான கோரிக்கையாகும் என்பதைப் புரிந்து கொண்டு இன்றைய இளைய தலைமுறை அதனை உரையாடவும் வென்றெடுக்கவும் முன்வரவேண்டும் என்றார்.


( நன்றி வீரகேசரி )


தோட்ட சுகாதாரம் : தொடரும் உரையாடல்கள்

  - மயில்வாகனம் திலகராஜா

அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் அமைச்சரவை பத்திரத்தினூடாக அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது. அதே நேரம் அமைச்சரவைப் பத்திரத்தினைத் தாண்டி தோட்ட சுகாதார முறைமையை தேசிய மயமாக்குவதற்கு பல பணிகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். அதற்கு சுகாதார மேற்பார்வைக் குழு அறிக்கையை கையில் எடுக்க  வேண்டும்.

தோட்ட சுகாதார முறைமை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சபையில் வழங்கிய உறுதிப்பாட்டை அடுத்து தோட்ட சுகாதார முறைமையை தேசிய சுகாதார முறைமையாக்குவதற்கு கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வழிமுறைகளையும் அவை வெற்றியளிக்காத நிலையில் எதிர்வரும் காலத்தில் அதனை வென்றெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராய்வதாக ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையோடு இணைந்ததாக இந்தக் கட்டுரை அமைகிறது. கூடவே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் சுகாதார துறை நாடாளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவராக சபைக்கு சமர்ப்பிக்கட்ட அறிக்கையும் இந்த கட்டுரையோடு இணைக்கப்பட்டுள்ளது.

தோட்ட சுகாதார முறைமையை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் பொருட்டு இதற்கு முன்னரும் இரண்டு அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

2006 ஆம் ஆண்டு நிமல் சிறிபால டி சில்வா சுகாதார அமைச்சராகவும் வடிவேல் சுரேஷ் பிரதி சுகாதார அமைச்சராகவும் இருந்த காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்தின் பேரிலேயே 44 தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன. எனினும் அதில் 22 அளவே இப்போது செயற்பாட்டில் உள்ளபோதும் ஏனையவை செயலற்று முடங்கின. அதற்கு பின்னர் வேறு வைத்திய நிலையங்களுக்காக அந்த அமைச்சரவைப் பத்திர தீர்மானம் பயன்படுத்தப்படாததோடு அந்த பத்திரமும் மாயமாகிவிட்டது.

அதன் பின்னர் 2018   ராஜித்த சேனரத்ன காலத்தில் ஒரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அபிப்பிராயம் கோரலுக்காக ஏனைய அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்டபோது அந்தத் திட்டத்தை மறுத்த அமைச்சுக்களும் உள்ளன.

இந்த நிலையிலேயே சுகாதரம் தொடர்பிலான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவராக நான் செயற்பட்ட காலத்தில்  திட்டத்துடன் தொடர்புடைய ஐந்து அமைச்சுக்களையும் இணைத்து பெறப்பட்ட உடன்பாட்டு அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. எட்டாவது பாராளுமன்றில் அங்கம் வகித்த நான் எனது இறுதி உரை என அறிவித்து 2020 பெப்ரவரி 19 ம் திகதி அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தின் ஊடாக அமைச்சரவை கவனத்துக்கு சமர்ப்பித்து விட்டு வந்தேன்.

இப்போது  நாடாளுமன்றத்தில் வாய்மொழி வினா நேரத்தில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேள்வி எழுப்பியமை வரவேற்கத்தக்கது.  சுகாதார அமைச்சரின் பதிலும் வரவேற்கத்தக்கது.

அதே நேரம் கடந்த கால அமைச்சரவைப் பத்திரங்களுக்கு  என்ன ஆனது என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நன்கு அறிவார்.

நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையிலே உடன்பட்டவாறு அனைத்து அமைச்சுக்களையும் இணைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். 500 தோட்ட வைத்திய நிலையங்களையும்  அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர  நிர்வாக மட்டத்தில் ஏற்பாடுகள் சீர் செய்யப்பட்டுள்ளன.

திட்டத்துடன் தொடர்புடைய சுகாதார அமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு, காணி அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, மாகாண சபைகள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்ட அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிகள் சுகாதார அமைச்சின் ' தோட்ட, நகர சுகாதார பிரிவு' பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அதனை அதனை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள நிலையில் அதற்கான  அங்கீகாரத்தை புதிய அமைச்சரவைப் பத்திரம் வழங்கினாலே போதுமானது

நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத காலத்திலும் கூட கடந்த செப்டெம்பர் (2020) மாதம் அமைச்சு அதிகாரிகளுக்கும் சிவில் சமூகத்தினருக்குமான கலந்துரையாடல் நுவரெலியவில் நடாத்தியிருந்தோம். சிவில் சமூக மட்டத்தில் தோட்ட சுகாதார முறைமையை தேசிய மயப்படுத்தும் கொள்கை உருவாக்க செயற்பாடுகளிலும் பரப்புரைகளிலும்  ஈடுபட்டு வரும் மனித உரிமைத் தாபனத்தையும் ( HDO - Kandy) இந்தக் கலந்துரையாடலில் இணைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்சி, அரசியல் பேதங்களுக்கு அப்பால் தோட்ட சுகாதார முறைமையை தேசிய சுகாதார முறைமைக்குள்  கொண்டு வர அனைவரும் ஓரணியாக குரல் கொடுக்க முன்வர வேண்டும். செயற்படவும் வேண்டும்.

 


மலையகத் தமிழர்களை அர்த்தமுள்ள குடிகளாக அரசியலமைப்பில் உறுதி செய்யவேண்டும் - திலகர்

 

இலங்கையில் மூன்றாவது குடியரசு அரசியல் அமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்காக பொதுமக்களிடமும் அமைப்புகளிடமும் இருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன.

நீதி அமைச்சின் அறிவித்தலின்படி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கும் கால எல்லை 2020 டிசம்பர் 31 ம் திகதியுடன் முடிவுற்றது.

அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழுவின் ‘அ’ முதல் ‘ஓ’ வரையான பிரமாணங்களில் முன்மொழியப்பட்டுள்ள விடயதானங்களுக்கு மேலாக ‘ஔ’ பிரமாணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘அக்கறையுள்ள வேறு ஏதேனும் விடயங்கள்’ எனும் பிரிவின் கீழ் பினவரும் விடயங்கள் மலையகத் தமிழ் மக்கள் சார்ந்ததாககவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.

சுதந்திர இலங்கையின் முதலாவது ஆண்டிலேயே சட்டத்தின் பிரகாரம் இலங்கைக் குடியுரிமைப் பறிக்கப்பட்ட இந்தியவம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் இப்போது குடியுரிமை என்கிற பெயரில் வாக்குரிமை மாத்திரமே வழங்கப்பட்டு உள்ளனர். அதனை குடியுரிமை அந்தஸ்த்து எனக் கொண்டாலும் அவை அர்த்தபூர்வாமானதாக இல்லை.

எனவே இலங்கையில் மூன்றாவது குடியரசு அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுமிடத்து மலையகத் தமிழர்களை அர்த்தபூர்வமான இலங்கைக் குடிமக்களாக அங்கீகரிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும் எனும் எனது முன்மொழிவுகளின் சிறப்பு பகுதி இது.

 

மயில்வாகனம் திலகராஜா

இலங்கை சுதந்திரமடைந்ததோடு குடியுரிமைப் பறிக்கப்பட்டு நாற்பது வருடங்களின் பின்னர் சிறுக சிறுக மீள வழங்கப்பட்ட இலங்கைக் குடியுரிமையை அர்த்தமுள்ளதாக்க பின்வரும் ஏற்பாடுகளை சிறப்பு ஏற்பாடுகளாக ( Affirmative action) குடியுரிமை மறுககப்பட்டிருந்த இந்தியத் தமிழ் வம்சாவளியினருக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.

1. ‘இந்தியத் தமிழர்’ எனும் பதிவு நீக்கப்பட்டு மூன்று மொழிகளிலுமே அவர்கள் ‘மலையகத் தமிழர்கள்’ ( Malayagath Thamils) என பதிவு செய்யப்படுதல் வேண்டும்.இந்த ஏற்பாடு இலங்கைத் தேசியத்தில் இருந்து ( Sri Lankan Nationality ) இந்த மக்களை அந்நியப்படுத்துவதில் இருந்து தவிர்க்க உறுதி செய்யும்.

2. சனத்தொகைக் கணக்கெடுப்பில் இந்திய அடையாளத்தை விரும்புவோர் வசதிக்காக ‘மலையகத் தமிழர்’ என்பதற்கு மேலதிகமாக ‘இந்திய வம்சாவளியினர்’ ( Indian origins ) எனும் வகுதி சேர்க்கப்படலாம். அதனை விரும்புகிற தமிழரும், தமிழர் அல்லாத இந்திய வம்சாவளியினரும் கூட அதனைத் தெளிவாகக் கொள்ளலாம்.

3. பதிவுப் பிரஜகளாக அன்றி இலங்கை நாட்டின் முழுமையான பிரஜைகளாக மலையகத் தமிழர்கள் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அரச பிரகடனம் செய்யப்படுதல் வேண்டும்.

4. தோட்டத் தொழிலாளர்களாக காலனித்துவ காலத்தில் அவர்கள் குடியமர்த்தப்பட்ட பிரதேசங்கள் ‘கிராமங்களாக’ பிரகடனம் செய்யப்படுதல் வேண்டும். அந்த கிராமங்கள் அரச பொது நிர்வாக முறைமைக்குள் கொண்டுவர ஆவண செய்யப்படுதல் வேண்டும்.

5. சுகாதாரம், போக்குவரத்து பாதை, போக்குவரத்து சேவை, தபால் சேவைகள், மின்சார வசதிகள், தொலைத் தொடர்பு வசதிகள் போன்றன தோட்ட நிர்வாக தலையீடுகள் இன்றி அரச பொது நிர்வாக சேவைகள் ஊடாக கிடைக்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும், பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகள் என்ற வகையில் அடங்கும் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் குறைந்த பட்சம் இரண்டு ஏக்கர் காணிகள் அரசினால் வழங்கப்படுதல் வேண்டும்.

6. ‘ லயம்’ (Line Rooms) எனும் குடியிருப்பு முறைமையில் இருந்து அவர்களுக்கு தனிவீடுகள் அமைப்பதற்கான வீடமைப்பு காணிகள் அரசினால் இலவசமாக வழங்கப்படுதல் வேண்டும். அந்த வீடமைப்பு காணியின் பரப்பளவு குறைந்தபட்சம் 7 பேர்ச்சஸாக அமைவதுடன் அவர்களுக்கான வாழ்வாதார நிலம் புறம்பாக வழங்கப்படுதல் வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில் வீடமைப்பு காணி பரப்பளவு 20 பேர்ச்சஸ் ஆக அமைதல் வேண்டும்.

7. பெருந்தோட்ட நிர்வாக முறைமை மாற்றப்பட்டு சகலரும் சிறுதோட்ட உடமையாளர்களாக்கப்படல் வேண்டும். கம்பனிகள் தொழிற்சாலைகளுக்கு பொறுப்பாக இருந்து சுயாதீன விவசாயிகளிடம் இருந்து தேயிலை, ரப்பரை கொளவனவு செய்து உற்பத்தி நடவடிக்கைககளில் ஈடுபடலாம். தென்னிலங்கையில் நடைமுறையில் உள்ள அதே நடைமுறை உயர் நிலப்பகுதியிலும் பின்பற்றப்படல் வேண்டும்.

8. இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசியலமைப்பு மாற்றம் செய்யப்படுமிடத்து “மலையகத் தமிழர்” தனியான தேசிய இனம் என்ற அடிப்படையில் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் உள்ளீர்க்கபடல் வேண்டும்.

9. இலங்கைத் தமிழ், முஸ்லிம் இன மக்களுக்கு சிறுபான்மைத் தேசிய இனம் என்றவகையில் ‘தனியான நிர்வாக அலகு’ எனும் தீர்மானம் எட்டப்படுமிடத்து “பெருந்தோட்டப் பிராந்தியங்கள்” அமைந்த பகுதிகள் நிலத்தொடர்ச்சியற்ற அதிகார அலகாக ‘மலையகத் தமிழர்கள்’ எனும் தேசிய இனத்துக்காக உருவாக்கப்படுதல் வேண்டும். ( 2018 ஆம் ஆண்டு 30,32 ஆம் இலக்கச் சட்டங்களின் பிரகாரம் ‘பெருந்தோட்ட பிராந்தியங்கள்’ வியாக்கியானம் பின்பற்றப்படுதல் வேண்டும்)

 


என்னை யாரும் விலக்கவில்லை. நானே விலகிக் கொண்டேன் 

 - வீரகேசரி வாரவெளீட்டில் வெளியான நேர்காணல் -

நீங்கள் ஏற்கனவே அங்கம் வகித்த அணியில் இருந்து விலகிக் கொண்டீர்களா அல்லது விலக்கப்பட்டுள்ளீர்களா ?

என்னை விலக்கும் அளவுக்கு தேவை ஒன்று அங்கே எழவில்லை. நானாகவே அந்த அணியினருடன் சேர்ந்தியங்குவதில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்து விட்டேன். தொழிலாளர் தேசிய சங்கத்தில் நான் வகித்த பதவியை சங்கத்தின் தேவை நிமித்தம் வேறு யாருக்கும் வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை 2012 ஆம் ஆண்டு தொழிலாளர் தினத்தன்றே பொதுச்செயலாளர் பிலிப் இடம் கையளித்து விட்டே தொடர்ந்தும் செயற்பட்டேன். ஏனெனில் அப்போதும் இப்படி விலகி இருந்தேன். அது தற்காலிக விலகல்.

 

2015 ல் பாராளுமன்ற உறுப்பினர் ஆக தெரிவானதுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தைத் தூது வந்தவர்களிடம் “வேண்டுமானால், வெள்ளைப் பேப்பரில் கையொப்பமிட்டு தருகிறேன். எந்த நேரத்திலும் எனது பாராளுமன்ற பதவியை எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இப்போதைக்கு எனக்கு மக்கள் வழங்கிய ஆணைப்படி செயற்பட விடுங்கள். உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் எந்தப் பதவியையும் விட்டுவிலக நான் தயாராகவே இருக்கிறேன்” என 2015 ஆகஸ்ட் மாத இறுதியிலேயே உறுதி அளித்துவிட்டே செப் முதலாம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்து கொண்டேன். எனவே என்னை விலக்க யாரும் சிரம்ப்படும் தேவை இருக்கவில்லை. எல்லாமே சுமூகமாக நடைபெறுகிறது.

 

தேர்தலில் போட்டியிட ஒரு தொகைப் பணம் கேட்கப்பட்டது என்று தெரிவித்து இருந்தீர்கள். அது ஏன் தேர்தல் செலவுகளுக்கானதாக இருந்திருக்கக் கூடாது ?

ஆம். நீங்கள் கேட்பதும் நான் கூறியதும் ஒன்றுதான். சிங்களத்தில் நான் கூறியதை நீங்கள் புரிந்து கொண்ட அளவுக்கு பலர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். நான் அதைத்தான் சொன்னேன். 2020 மார்ச் 11 அஅன்று எங்களிடையே இடம்பெற்ற உரையாடலை அதே விதமாக சிங்கள ஊடகம் ஒன்றில் பதிவு செய்துள்ளேன்.

அதில் என்னுடைய வாதம் என்னவெனில் ‘எனது’ தேர்தல் செலவுகளுக்கு இரண்டு கோடி தேவை இல்லை என்பதே. ஏனெனில், 2007 முதல் தொழிலாளர் தேசிய சங்க மீள் உருவாக்கம், கட்சி கட்டமைப்பை விருத்தி செய்தல், செயற்பாட்டாளர்களுக்கு அரசியல் வகுப்பு நடாத்துதல், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளித்தல் , தொழிற்சங்க முழுநேர ஊழியர்களுக்கு மாதாந்த மீளாய்வு கூட்டம் நடாத்துதல், முன்னோடிகளுக்கு விழா எடுத்தல், வட்டார அமைப்பு முறை அடிப்படையில் கட்சிக் கட்டமைப்பைப் பேணுதல், கூட்டணி கலாசாரம் பேணல், கொள்கைத் திட்டமிடல், ஊடக அறிக்கையிடல், ஊடகப்பங்கேற்றல் எனும் பல்பரிமாண அடிப்படையில் எனது மூளை உழைப்பை பல வருடங்களாக அமைப்புக்காக செலவிட்டவன்.

பொருளியளின் அமையச் செலவு ( Opportunity cost ) கோட்பாட்டுக்கு அமைவாக அந்த மூளை உழைப்பை எனது சொந்த உழைப்புக்காகப் பயன்படுத்தி இருந்தால், இரண்டு கொடி என்ன என்னிடத்தில் நான்கு கொடியே இருந்திருக்கும். அமையச் செலவு கொட்பாடு தெரியாதவர்களுக்கு எனது கருத்துப் புரியாது. அதற்காக நான் ஒன்றும் செய்யவும் முடியாது. எனவே நான் உருவாக்கிவைத்த கட்டமைப்பு, என்னுடைய ஆடம்பரமற்ற எளிமையான அரசியல் நடத்தைகள் ( Simple Political behaviors) அடிப்படையில் தேர்தலை எதிர் கொள்ள சுமார் பத்துலட்சம் எனக்கு போதுமானது என்பதே எனது வாதம்.

2015 லும் நான் நண்பர்களின் உதவியுடன் அத்தகைய தொகையுடனேயே தேர்தலை வெற்றி கொண்டேன். அப்போது என்னிடம் யாரும் கோடிகள் கொடுக்கவும் இல்லை. கேட்கவும் இல்லை. 2015 தேர்தல் பிரசாரகாலப் படங்கள் இப்போதும் எனது முகநூலில் உண்டு. அப்போதும் நான் தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் வசிக்கும் அசோக் எனும் சகோதரனின் LH ரக வாடகை வேிலும், ஆட்டோவிலுமே பிரசாரத்துக்கு போனேன். சில சமயங்களில் மலையக மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் இராஜாராம் அவரது பழைய ஜீப்பில் என்னை உட்காரவைத்து ‘கெத்தாக’ அழைத்துக் கொண்டு போயுள்ளார் என்பதை நன்றியுடன் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

நீங்கள் கூறுவது போல தேர்தலில் போட்டியிட அந்தந்த வேட்பாளர்கள்தான் செலவிட்டுக் கொள்ள வேண்டுமானால் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அவரது நுவரெலியா மாவட்ட செலவுகளுக்கு சஜித் பெற்றுக் கொடுத்த தொகை பற்றி வெளியே பேசப்படுகிறதா? அல்லது கணக்குகள்தான் காட்டப்படுகிறதா? என்னுடைய சொத்துப் பொறுப்பு விபரங்களை பொது வெளியில் வெளியிட நான் எழுத்து மூல அனுமதி கடிதத்தை 30 சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்த பொது வழங்கி உள்ளேன். அது ஒரு பப்ளிக் டொக்கியுமன்ட்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏன் தேசிய பட்டியல் ஒன்றைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை?

ஆர்வம் காட்டிப் பெற்றுவிட்டால், அதனை எனக்கு வழங்க வேண்டி வந்திருக்கும் அல்லவா? அதனால் ஆர்வம் காட்டவில்லை போலும். ஹ...ஹ..😄

அப்படியாயின் உங்களைத் திட்டமிட்டே ஓரங்கட்டினார்கள் என்கிறீர்களா ?

நிச்சயமாக. பாராளுமன்ற உறுப்பினராக முதல் முறையிலேயே மக்கள் இடத்தில் நன்மதிப்பைப் பெற்றவனை, மாவட்டத்தில் முதலிடம் பெற்றவனை, பாராளுமன்றில் 225 ல் 29 ம் இடத்தில் தரப்படுத்தப்பட்டவனை தேர்தலில் போட்டியிட அனுமதிக்காததில் இருந்தே புரியவில்லையா இது திட்டமிடப்பட்ட சதி என்று?. ஏற்கனவே உறுப்பினராக சிறப்பாக செயற்பட்ட ஒருவரை போட்டியிட அனுமதிக்காதிருக்க எத்தனைத் துணிவு வேண்டும். அதனைத் துணிந்து தீர்மானிக்க முடியுமெனில் அதாவது போட்டியிட வாய்ப்பு இல்லை என அறிவிக்க முடியுமெனில் தேசிய பட்டியல் இல்லை என அறிவிப்பது எம்மாத்திரம்.

நீங்கள் நுவரெலியா பிரசாரத்துக்கு வராமல் விட்டதுதான் தேசிய பட்டியல் வழங்காமைக்கு காரணம் என சொல்லப்பட்டதே ?

ஹா... ஹா .. 😄 நான் மார்ச் 11 கட்சி மட்டத்திலும் மார்ச் 15 கூட்டணி மட்டத்திலும் இடம்பெற்ற உரையாடல்களில் “நுவரெலியா பிரசாரத்துக்கு வரமாட்டேன்” என்ற நிபந்தனை அடிப்படையிலேயே தேசிய பட்டியல் நியமனத்தை ஏற்றுக் கொண்டேன்.முதலாவதின்போது கட்சியின் தேசிய அமைப்பாளரும், கூட்டணி மட்டத்தில் அன்றைய தினம் கலந்து கொண்ட அனைத்து அரசியல் உயர்பீட உறுப்பினர்களும் இதற்கு சாட்சி. தவிரவும் மார்ச் 15 உயர்பீட கூட்டக்குறிப்பிலும் அது எழுத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்தவர் பிரதி செயலாளர் சட்ட முதுமாணி சண்.பிரபா. நிலைமை இப்படி இருக்க நான் நுவரெலியா வரவில்லை என்பது “ வெத்துக் காரணம்” என்பது விளங்கவில்லையா?.

 

தவிரவும் நான் நுவரெலியா பிரசாரத்துக்கு வராமல் விட்டது மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 5 வரையான தேர்தல் பிரசார காலம் முழுவதும். ஆக, ஐந்து மாநங்களாக நான் நுவரெலியா மாவட்டத்துக்கு வராமல் இரத்தினபுரி, மொனராகலை, மாத்தளை, காலி மாவட்டங்களில் ‘தொலைபேசி’ சின்னத்துக்காக பிரச்சாரம் செய்தபோது ஊடகங்கள் கூட்டணி தலைவர்களிடம் எனது தேசிய பட்டியல் விவகாரம் குறித்து கேட்டபோது கூறிய பதில்கள் என்ன? “திலகராஜ் படித்தவர் .. திறமையானவர் அதனால்தான் தேசிய பட்டியல் வழங்குகிறோம்” என்றார் ஒருவர்.

திலகராஜின் அருமை பெருமை எல்லாம் பேசி தேசியபட்டியல் நிச்சயம் வழங்கப்படும் என பெட்டிப்போட்டு, வட்டம்போட்டு பேசினார் இன்னொருவர். “நாங்கள் மூன்றுபேரும் வென்றால் திலகராஜுக்கு தேசிய பட்டியல்” என நுவரெலியா மாவட்டம் முழுவதும் மேடைக்கு மேடை முழங்கினார்கள் மூவர். அந்த பதிவுகள் எல்லாம் எழுத்திலும் வீடியோ வடிவத்திலும் இன்னும் கிடைக்கக் கூடியதாக உள்ளது. இப்படி எல்லாம் எல்லாம் ஏன் அப்போது பதில் சொல்லி இருக்க வேண்டும். திலகராஜ், நுவரெலியா மாவட்ட பிரச்சாரத்துக்கு வரமாட்டேன் என்கிறார். ஐந்து மாதமாக அவர் நுவரெலியா வரவில்லை. அதனால் அவருக்கு தேசிய பட்டியல் வழங்க மாட்டோம் என தேர்தலுக்கு முன்னமே சொல்லி இருக்கலாமே. இப்போது புரிகிறதா ‘வெத்துக்காரணம்’ என்று?

நுவரெலியாவுக்கு பிரசாரத்துக்கு வரமாட்டேன் என ஏன் அந்த நிபந்தனை .. ?

நான் மார்ச் 11 முதல் கூறிவரும் இந்த நிபந்தனைக்கான காரணத்தை இதுவரை யாரும் கேட்கவில்லை. இப்போது, எல்லாம் முடிந்தபின்னர் சரி நீங்கள் கேட்டதற்கு நன்றி. தேர்தலில் ஒருவருக்கு எதற்கு பணம் வேண்டும்? பிரசாரத்துக்கு செலவழிக்க. எனக்கு ஏன் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை? பிரசாரத்துக்கு பணம் இல்லை என. என்னிடம்தான் பிரசாரத்துக்கு பணம் இல்லையே.

அப்போ எந்தப்பணத்தைக் கொண்டு நான் நுவரெலியா பிரசாரத்துக்கு வருவேன்? என் கையில் பத்து லட்சத்தை வைத்துக் கொண்டு எனக்கே பிரச்சாரம் செய்து கொள்ள முடியாதபோது அதனைக் கொண்டு நான் அங்கே யாருக்கு பிரசாரம் செய்வது? அப்படி 2010 பொதுத்தேர்தலில் நான் பிறருக்கு பிரசாரம் செய்திருந்தபோதும் அப்போதும் தேசிய பட்டியல் வழங்காமல் மறுக்கப்பட்டதே. இப்போது 2020 ல் வழங்குவார்கள் என்பதில் என்ன நிச்சயம். அதுதானே நடந்தது.

எனவேதான் என்வசம் இருந்த பணத் தொகையைக் கொண்டு தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டால் எனது வேலைத்திட்டம் என்ன என்பதை விளக்கும் வகையில் கூட்டணி எம்பிக்கள் இல்லாத மாவட்டங்களில் எனது பிரசாரத்தை தொலைபேசிக்காக செலவிட்டேன். அதன் மூலம் பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத மலையக மாவட்டங்களை இலக்குவைத்து எனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திட்டத்தை முன்வைத்தேன்.

முற்போக்குக் கூட்டணி வடக்கு கிழக்குக்கு வெளியே அரசியலை முன்னெடுக்கும் தமிழ்த்தரப்பு எனில் நிச்சயமாக தேசிய பட்டியல் உறுப்புரிமையைப் பெற்று எனது திட்டத்தை நடைமுறைப் படுத்தினால் மட்டுமே அது சாத்தியம். அந்த பதவியில் நான்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை.அடுத்த இருவராக பிரேரிக்கப்பட்டு இருந்த லோரன்ஸ் அல்லது குருசாமிக்கு சரி பெற்றுக் கொடுத்திருக்கலாம்.இதனைக் கூட செய்ய முடியாத பலவீனம் யாருடையது?

நான்தான் நுவரெலியா வரவில்லை எனும் வறட்டு வாத்த்தை வைத்துக்கொண்டாலும், தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது நுவரெலியா மாவட்டம் முழுவதும் பிரசாரப் பணியில் ஈடுபட்ட அண்ணன் லோரன்சுக்கு அதனை வழங்காது விட்டதன் காரணத்தை யார் சொல்வது?தமது தளபதி குருசாமிக்கு கொடுங்கள் என அவர்களது படைவீர்ரளின் கோரிக்கைக்கு ஏன் செவி சாய்க்கவில்லை? குருசாமிக்கே கொடுக்கவில்லை என்றால், சாமியே சரணம் ஐயப்பா .. ஹா ...ஹா... ஹா..

 

தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவு செய்வதில் ஏற்பட்ட சிக்கலின் பின்னணியில் நீங்கள் இருப்பதாக ...

ஹா...ஹா.. 😄 ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து போய் செய்யமுடியாத ஒரு காரியத்தை ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தடுத்து நிறுத்தியதாக காரணம் காட்டினால் அது யாருடைய பலவீனம்? உயர்பீடத்தில் ஒரு பெண் உறுப்பினர் இணைக்கப்படாத கட்சி பதிவு நடைமுறை பின்பற்றப்படாததுதான் பதிவு விண்ணப்ப நிராகரிப்புக்கு காரணம் என முன்னாள் செயலாளர் லோரன்ஸ் ஊடகங்களுக்கு அறிவித்து உள்ளாரே.

அதில் இருந்து தெரியவில்லையா அறுவருக்கும் அந்த விடயத்தில் உள்ள அனுபவக் குறைவே காரணம் என்று. அந்த ஆறுபேரில் ஒருவருக்கு கூட கட்சி ஒன்றை யாப்பெழுதி உருவாக்கிய அனுபவம் இல்லை. அதற்கு முன்னர் உருவாக்கப்பட்டிருந்த ஒரு கட்சியில் தங்களைக் கட்டமைத்துக் கொண்டவர்கள்.

நான் அதில் இருந்து மாறுபட்டவன். எனக்கு யாப்பெழுதி, கட்டமைப்பு உருவாக்கி, கட்சியைப் பதிவு செய்த அனுபவம் உண்டு. என்வசம் இருந்த கூட்டணியின் ஆவணங்களை அவர்கள் நேர்முகத் தேர்வுக்கு பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பொதுச் செயலாளர் சந்த்ரா ஷாப்டர் வீட்டுக்கே சென்று கையளித்து விடைபெற்றுக் கொண்டவன் நான். எனக்கு கட்சி தாவுதல், கட்சியை அழிக்கும் கலைகள் தெரியாது. கட்சியை மக்களிடையே கட்டமைப்புச் செய்யவும் அதற்கு ஆணைக்குழுவிலும் மக்களிடமும் அங்கீகாரம் பெறவும் தெரியும். அதனை எனது காலகட்ட அரசியல் நடத்தைகளில் நீங்கள் அவதானிக்கலாம்.

அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவேன் ஆனால் எதிர் அணியில் இணையவோ புதிய கட்சி தொடங்கவோ எண்ணமில்லை என்பதன் அர்த்தம் என்ன?

ஆற்றில் போட்டுவிட்டு கிணற்றில் தேடக்கூடாது என்பது அர்த்தம். தொழிலாளர் தேசிய சங்கம் எனது மானசீக ஆசான்கள் வி.கே.வெள்ளையன் - சி.வி.வேலுப்பிள்ளை போன்ற ஆளுமைகளின் உயர்ந்த எண்ணத்தில் உருவானது. எனது நேசத்துக்குரிய சங்க / கட்சி உறுப்பினர்களை நான் குறைசொல்ல தயாராக இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் என்னில் அன்பும் மதிப்பும் வைத்து இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

இப்போது அங்கே ஒரு சிலர் எனக்கு அநீதி இழைத்தார்கள் என்பதற்காக முழு அமைப்பையும் சாடுவதற்கும், அதனை வாழை மரம் என்றும் எதிரணிதான் ஆலமரம் என்றும் வாய்கூசாமல் கூறி எனது குடும்பத்தை இகழ்ந்தும் எதிரணியைப் புகழ்ந்தும் பேசும் நாக்கு எனக்கு வாய்க்கவில்லை. அப்படி ஒரு அரசியல் வாழ்க்கை எனக்கு அவசியமும் இல்லை.இந்த உத்தரவாதத்தையே என்னைச் சந்திக்கவந்த சங்கத்தின் மூத்தவர்களிடம் கூறி வைத்தேன். அதனையே நடைமுறைப்படுத்தியும் வருகிறேன்.

நீங்களும் அனுஷா சந்திரசேகரனும் இணைந்து ஏன் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கக்கூடாது?

அவரிடம் அதிக நேரம் நான் பேசியது கூட இல்லை. ஆனால் ஊடகங்களில் அவரது உரைகளைக் கேட்டு இருக்கிறேன். அவரும் ‘அப்பா’ அரசியலை முன்வைக்கும் ஒருவராகவே இப்போதைக்கு எனக்குத் தெரிகிறார். அவரது அப்பா எங்களுக்கு ‘அண்ணனாக’ இருந்தபோது அப்போதும் எங்களுக்கு எதிரணியில் இருந்த ‘தம்பி’ யுடன் மல்லியப்புசந்தியில் கரம் கொர்த்ததை நேரடியாக விமர்சித்ததே ‘மல்லியப்புசந்தி’.

அது எழுதப்பட்டதும் எனது கள அரசியல் ஆரம்பமானதும் 2000 ஆம் ஆண்டுகளில். என்னிடத்தில் அண்ணன் - தம்பி - அப்பா - மாமா - மச்சான் அரசியலுக்கு இடமில்லை. நான் மக்கள் அரசியலை முன்வைத்து பேசி, செயற்பட்டு வருபவன். அனுஷா இப்போதுதான் அரசியல் கற்றுக் கொண்டு இருக்கிறார். ஒரு அண்ணனாக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்க மாத்திரமே இப்போதைக்கு என்னால் முடியும்.

மலையக மக்கள் முன்னணி பொதுச் செயலாளராக பேராசிரியர் விஜேசந்திரன் நியமிக்கப்பட்டு இருப்பது பற்றி ..

அவருக்கு தொலைபேசி அழைப்பெடுத்தும் ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்துத் தெரிவித்த முதல் ஆள் நானாகவே இருக்கலாம். மலையக அரசியலின் புதிய திசை வழியை தீர்மானிக்கும் திகதி அந்த நாள் என அறிவித்து உள்ளேன். பேராசிரியராக பணியில் இருக்கும்போதே மலையக அரசியல் கட்சி ஒன்றின் பொதுச் செயலாளராக ஒருவர் வந்திருப்பது இதுவே முதல்தடவை. மலையகம் அதற்கான பிரதிபயனைப் பெற வாழ்த்துகிறேன்.

இன்னுமொரு கட்சியின் பொதுச் செயலாளராகவும் கலாநிதி ஒருவர் வரவுள்ளதாக அறிய முடிந்தது. அரசியல் கட்சிக்குள் வந்து கலாநிதி ஆகிக் கொள்ளும் காலகட்ட சூழலில் கலாநிதி ஒருவர் கட்சி செயலாளர் ஆக வருவதை வரவேற்கிறேன்.அவருக்கும் முன்கூட்டியே வாழ்த்துகிறேன்.(அது யார் என என்னிடம் கேட்காதீர்கள்.ஹா ஹா. 😄 நீங்கள் ஊடகவியலாளர்கள்)

உங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்குமானால் உங்களது அமைப்பில் இருந்தே மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு இருக்கலாமே... ?

இப்போதே அங்கு ‘எங்க ஏரியா உள்ள வராத’ சண்டை ஆரம்பித்துவிட்டது. அந்தச் சண்டையில் ஏன் என்னையும் இழுத்து விடப்பார்கிறீர்கள். ஹா ஹா .ஹா

ஆறுமுகன் தொண்டமானின் அனுதாபப் பிரேரணையில் மலையகப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாமை குறித்து..?

அது அரசியல் அநாகரீகம் என உங்கள் பத்திரிகை ஆசிரிய தலையங்கமே எழுதி உள்ளதே. என்னைப்போல அவரை நேரடியாக பெயர் கூறி விமர்சித்தவர்கள் யாரும் இல்லை என நினைக்கிறேன். அதற்கு பாராளுமன்ற ஹன்சாட் சாட்சி பகரும். அதேநேரம் அவர் இறந்து இரண்டு மணித்தியாலங்களிலேயே நேரலையில் அஞ்சலி செலுத்தவும் அவர் பற்றிய நினைவுகளைப் பகிரவும் நான் தயங்கவில்லை. அதனை வானொலி தொலைக்காட்சி ஊடகங்களிலும் கூட செய்திருந்தேன்.

இறந்தவுடன் அவர் இல்லம் நோக்கி ஓட முடியுமென்றால், பாராளுமன்ற முன்றலில் குனிந்து கும்பிடுபோட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த முடியுமென்றால், நோர்வூட் மைதானத்தில் பூதவுடல் முன்னே உட்கார்ந்து காத்துக் கொண்டிருக்க முடியும் என்றால் ஏன் அனுதாபப் பிரேணையில் கலந்து கொள்ள முடியாது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நான் பாராளுமன்றில் இருந்திருந்தால் அவரது அரசியல் செயற்பாட்டில் உள்ள நிறை குறைகளைச் சுட்டிக்காட்டி, அன்னாரது குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவித்து, அவரது பூதவுடலின் பேரில் மலையக மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி அவருக்கு உண்மையான அனுதாபத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை அழுத்தி இருப்பேன்.அதில் 1000/= நாட்சம்பளம் முதல் மலையகப் பல்கலைக்கழகம் வரையான பல விடயங்கள் அடக்கம். கட்சி பேதங்களுக்கு அப்பால் அவையாவும் மலையக மக்களின் கோரிக்கைகள் என்பதுதானே உண்மை. அமரர் ஆறுமுகனின் பேரில் அவை நடந்தாலும் மக்களுக்குத்தானே நன்மை.

 

உங்கள் எதிர்கால அரசியல் நகர்வுகள் எவ்வாறு இருக்கும்?

நிகழ்காலத்தில் சர்வதேச மாநாடுகள், பங்கு பற்றல்கள் உரைகள் என இயங்கிக் கொண்டு இருக்கிறேன். கடந்த திங்களன்று கூட ஐக்கிய நாடுகள் இணை நிகழ்வு ஒன்றில் ஐ.நாவுக்கான ஜேர்மனிய நாட்டு தூதரகத்தின் ஊடாக மலையகப் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஐ.நாவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தேன். அதற்கு முதல்வாரம் ஆசிய மதிப்பாய்வு மாநாட்டில் இலங்கை சார்பில் உரையிற்றி இருந்தேன்.

அதற்கு முதல் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் நெல்லைக் கிளை ஏற்பாட்டில் ஒரு மணித்தியால உரை ஒன்றை இணையவழியாக ஆற்றி இருந்தேன். கடந்த வாரம் உள்நாட்டு தேர்தல் முறைமைகள், அரசியலமைப்பு மாற்றச் செயற்பாடுகள் குறித்த சிவில் சமூக கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு இருந்தேன்.ஊடகங்களில் அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொள்கிறேன்.

இதுபோல நிகழ்காத்தில் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் அரசியல் செயற்பாட்டில் இருப்பதால் எதிர்காலத்தில் அரசியலை நகர்த்துவது இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன். முக்கியமாக நாளை முதல் இந்த நேர்காணலுக்கு வழங்கப்படும் பதிற்குறிகளை செவிமடுக்க மாட்டேன்.எனது எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்கான எனது ‘எனர்ஜியை’ வீண்டிக்க நான் விரும்பவில்லை.

நன்றி : வீரகேசரி வாரவெளியீடு - சிவலிங்கம் சிவகுமாரன்

 


இலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட வேண்டி இருக்கும்

( நேர்காணல் : யோ.தர்மராஜ்)

அரசாங்கம் வசம் ஜனாதிபதி பதவி இருக்கும்போது பாராளுமன்றத்தையும் தங்கள் பலத்தில் வைத்துக்கொள்ளவே ஆளுங்கட்சி தேர்தலைக் கோருகிறது. எதிர்கட்சி இப்போது பலமாக இருப்பதால் தேர்தலைப் பிற்போட்டு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோருகிறது. எனவே இரண்டு தரப்பிலும் அவர்தம் சுயநலம் உண்டு. சிலவேளை எதிர் கட்சி தற்போது பெரும்பான்மை கொண்டிருக்காவிட்டால் எப்படியான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் எனும் கேள்வியும் உள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், தேர்தலைப் பிற்பொடுவதால் நாட்டில் ஜனநாயக சூழல் உருவாவது பின்னோக்கிப் போகிறது எனும் அபாயம் உள்ளது இனி இலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார்.

 

கொரொனா தொற்றுடன் உங்களைப் போன்ற அரசியல் தலைவர்களை காண முடியாதுள்ளதே ஏன்?

இந்த கொரொனா காலத்தில் எல்லோரும் வீட்டிலேயே இருங்கள் வெளியே செல்லாதீர்கள் எனும்போது எங்களைப் போன்ற அரசியல்வாதிகளை நீங்கள் எங்கே காணவேண்டும் என எண்ணுகிறீர்கள்?. சமூக சேவை செய்து களைத்துப் படுத்துறங்கும் ஓர் அரசியல்வாதியை நீங்கள் அவரது முகநூலில் பார்ப்பதில் திருப்தி அடையலாம்.அந்தப்படம் யாரால் எடுக்கப்பட்டது? எப்படி அவரது முநூலிலேயே பதிவேற்றம்பெற்றது பொன்ற மறுபக்கங்களும் அதில் உண்டு.

என்னால் முடிந்த பணிகளை வீட்டில் இருந்தவாறு செய்துகொண்டு எழுத்து வேலைகளில் அதிக கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறேன். அவை ஊடகங்களிலும் எனது சமூக வலைத்தள பக்கங்களிலும் வந்து கொண்டு இருக்கின்றன. அதனால்தான் நீங்களும் இப்போது என்னைப் பேட்டி காணும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அவசியம் என கருதப்பட்ட கூட்டங்களுக்குச் சென்று வந்து கொண்டு இருக்கிறேன் . தேவையானவர்களுடன் பேசி தீர்வுகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன் .

 

கொரொனா தொற்று அச்சுறுத்தலையடுத்து மலையக மக்களுக்கு வழங்கும் நிவாரண பொருட்களிலும் மலையக தலைவர்கள் அரசியல் இலாபம் தேடுவதா மக்களின் நகுற்றச்சாட்டை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

அவர்கள் அரசியல்தலைவர்களாக அல்லது மக்கள் பிரதிநிதிகளாக அந்த நிவாரணப் பணிகளை முன்னெடுக்கிறார்களா? அல்லது “வேட்பாளர்களாக” நிவாரணப் பணி செய்கிறார்களா என்ற கேள்விக்கு விடை தேடினால் உங்களுக்கு இந்தக் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும்.என்னைப் பொறுத்தவரை தேர்தல் காலத்தில் இந்த கொரொனா இடர் வந்திருக்காவிட்டால் அரசியல்வாதிகள் தமது சொந்த நிதியில் இந்தளவுக்கு நிவாரணம் வழங்கி இருப்பார்கள் என நான் எண்ணவில்லை. எனவே வேட்பாளராக தனது பெயரை முன்னிறுத்தி நிவாரணம் வழங்குவது அரசியல் லாபம் என நீங்கள் கருதினால் நானும் ஆம் என்றேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும் அரசியல்வாதிகளின் பணி அரசாங்கத்திடம் இருந்து மக்களுக்கு தேவையான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என்பது. அதனை எவ்வாறு செய்யலாம் எனும் ஆலோசனையை கொரொனா ஆரம்ப நாட்களிலேயே என்சாரந்த அரசியல் கூட்டணிக்கு நான் முன்வைத்தேன்.இன்றுவரை அது பற்றி அக்கறைகொள்ளாமை தொடர்பாக உள்ளக ரீதியாகவும் பகிரங்கமாகவும் எனது அதிருப்பதியைப் பதிவு செய்துள்ளேன்.

பாராளுமன்றம் இயங்கி இருந்தால் கட்சி அல்லது கூட்டணி எல்லைகளைக் கடந்து அந்த அழுத்தத்தை பாராளுமன்றத்தின் ஊடாக வழங்கி இருப்பேன். துரதிஸ்டவசமாக இப்போது அதுவும் இல்லை என்ற அடிப்படையில் கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம் அவ்வாறான ஒன்று நடக்காதது கவலைக்குரிய விடயம் . அரசியல் இயக்கங்களும் நிவாரணம் பொதி வழங்குவதோடு திருப்தி அடையுமானால் அவை தர்மஸ்தாபனமாகவே இயங்கிவிட்டுப் போகலாம்.

 

இவ்வாறான அசாதாரண நிலைமைகளில் கூட மலையத் தலைவர்களிடத்தில் ஒற்றுமையின்மை மக்களை பாதிக்காதா?

மலையக அரசியல் தலைவர்களிடம் மாத்திரமல்ல இலங்கையின் எந்த அரசியல் தலைவர்களிடத்திலும் அப்படியான ஒற்றுமையைக் காணக்கிடைக்கவில்லை. மாறாக உள் முரண்பாடுகள் கூட அதிகளவு வெளிப்பட்டு நிற்பதை அவதானிக்கலாம். இது இலங்கை அரசியல் கட்டமைப்புக்கு ஏற்பட்டு இருக்கும் சாபம்.

மலையக மக்களுக்கு எப்போதும் ஏமாற்றம் மட்டுமா கிட்டும், 1000 மற்றும் 50 ரூபா என

ஏமாற்றப்பட்ட மக்களுக்கு பின்னர் சம்பள உயர்விலும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அரசின் 5000 ரூபாவிலும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதற்கு அரசின் அக்கறையின்மையா

அல்லது மலையத் தலைவர்களின் பொறுப்பற்றத் தன்மை காரணமா?

இதன் பின்னணியைத் தேடி பார்க்க வேண்டியது ஊடகவியலாளர்களாக உங்களைப் போன்றவர்களது கடமை. நான் இது தொடர்பாக தொடர்ந்து பேசி வந்துள்ளேன் . கொரொனா இடர்கால ஆரம்பத்தில் இதனை வலியுறுத்தி கூறி இருந்தேன் .

இந்தப் பேட்டி வெளிவரும் இதே நாளில் உங்களது சகோதர ஊடகம் ஒன்றுக்கு விரிவான கட்டுரை ஒன்றையும் எழுதி உள்ளேன் . எனவே இங்கே சுருக்கமாக சொல்கிறேன்.

மலையக மக்கள் அரச பொது நிர்வாகத்தில் முழுமையாக உள்வாங்கப்படாமையே இதற்கான காரணம். அதற்கு பல தடைகள் உள்ளன. அவற்றை ஓரளவுக்கு நிவர்த்திக்கும் வகையிலேயே மலையக அதிகார சபை உருவாக்கப்பட்டது. அது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம். அந்த சட்டத்தை இன்னும் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிக்க வில்லை. ஆனால் அந்தச் சட்டத்தின்படி அமையப்பெற்ற அதிகாரசபையின் அனைத்து வெற்றிடங்களும் நிரப்பபட்டுள்ளன. எனவே இப்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் அந்த அதிகாரம் கொண்ட பதவியில் இருப்போர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என குறைந்த பட்சம் ஊடகங்கள் தானும் கேள்வி எழுப்பலாம்.

மார்ச் மாத சம்பளத்தில் 1000 ரூபா சம்பளம் உயர்வு கிடைக்குமென கூறியதை பெற்றுக் கொள்ள முடியாதமைக்கு கொரோனா காரணமாகிற்றா?

இல்லை. அது சாத்தியமில்லை என்பதை அமைச்சரவை அனுமதி வழங்கிவிட்டது என்ற அறிவிப்பு வந்த ஜனவரி மாதம் முதலே பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் நான் பகிரங்கமாக தெரிவித்து வந்துள்ளேன். கொரொனா வருவதற்கு முன்னர் அரசாங்கம் - கம்பனி - தொழிற்சங்கம் ஆகிய முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தது என்பதை மறந்துவிணக்கூடாது . மார்ச் 19 தான் கொரொனா ஊரடங்கு வந்தது. மார்ச் 1 முதல் கொடுப்பதாகவே சொன்னார்கள். பெருந்தோட்டத்துறை கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவராமல் 1000 ரூபா மட்டுமல்ல மலையகத்தின் 1000 பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லை.

பெருந்தோட்ட மக்களுக்கு விடிவு கிடைக்குமென ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் கூறுகின்ற போதிலும் அரசுக்கு அரசு ஏமாற்றமடைவது பெருந்தோட்ட மக்களின் விதியா அல்லது மலையக அரசியல்வாதிகளின் தந்திர அரசியலா?

ராஜதந்திரமற்ற அரசியல் எனலாம். மக்களுக்கான அரசியலை முன்வைக்கும் இதயசுத்தியும், ஈடுபாடும், அர்ப்பணிப்பும் சார்ந்த அரசியல் பணி அவசியம். பாராளுமன்றத்தை சரியாக பயன்படுத்தவும் தெரிய வேண்டும். தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காக சுதந்திரத்துக்குப் பின்வந்த அனைத்து மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்கள்ளையும் ஆய்வுக்கு உட்படுத்தி குறைந்த பட்சம் ஒருவர் எத்தனை மலையக பிரச்சினைகளை பிரேரணையாக முன்வைத்த உள்ளார்கள் என்பதைத்தானும் உங்களால் கண்டுபிடிக்க முடியுமானால் உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.

தேர்தல் ஆணைக்குழுவுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் உறுப்பினர் என்ற வகையில் பாராளுமன்றத் தேர்தல் கள நிலவரங்கள் எவ்வாறுள்ளது?

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான தொழிலாளர் தேசிய முன்னணி யின் பொதுச் செயலாளர் என்ற வகையிலேயே நான் கலந்து கொள்கிறேன். எமது கட்சி ஐக்கிய மக்கள் சக்தி எனப்படும் கூட்டணியின் அங்கத்துவ கட்சி என்றஙவகையில் மார்ச் 11 க்குப்பிறகு மே 13 மாத்திரமே ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்தில் பகிரப்பட்ட கருத்துகள் அடிப்படையில் ஆளும் கட்சியின் ஆதரவு கட்சிகள் தேர்தல் நடாத்தப்படவேண்டும் என்றும் எதிர்கட்சிகள் பிற்போடப்படவேண்டும் என்ற கருத்தும் வெளிப்பட்டது.

பிற்பொடைவது நல்லது எனும் எனது கருத்து கொரொனா பரவல் ஏதும் வந்துவிடும் எனும் அச்சந்தான். மற்றபடி தேர்தலைப் பிற்பொடுவதால் நாட்டில் ஜனநாயக சூழல் உருவாவது பின்னோக்கிப் போகிறது எனும் அபாயம் உள்ளது. அதனாலேயே தேர்தல். செலவுகள் குறித்து கேட்டிருந்தேன். இனி ஆறுமாதங்கள் கழித்துதான் தேர்தல் என்றாலும் அது இப்போதைய செலவுமதிப்பீட்டின் இரட்டிப்பைவிட அதிகரிக்கும் என ஆணையாளர் பதில் அளித்தார். இனி இலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட வேண்டி இருக்கும்.

ஜூன் பாராளுமன்றத் தேர்தல் நடக்குமா?  நடத்தாவிட்டால் அரசியலமைப்பின் படி அடுத்தக் கட்ட நகர்வுகள் எவ்வாறிருக்க வேண்டும்?

இன்றைய திகதியில் ஜூன் நடக்க வாய்ப்பில்லை. அது தொடர்பில் 9 வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. எனவே நீதிமன்ற தீர்ப்பு அடுத்த வாரம் வெளிவரும் வரை உறுதியான திகதியைக் குறிப்பிடமுடியாது. ஆனால் திகதி மாறியென்றாலும் தேர்தல் நடக்கும் சாத்தியமே உள்ளது. நடக்காவிட்டால் அதுநடைபெறும் வரை நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பதை தீர்மானிக்கும் அடுத்த வழக்குகள் இடம்பெற வாய்ப்புண்டு. எனவே நீதியையே மக்கள் எதிர்பார்த்திருக்க வேண்டி உள்ளது.

ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுவதாக எதிர்க் கட்சியினர் குற்றச்சாட்டுவதில் உண்மையுள்ளதா?

ஜூன் முதலாம் திகதிவரை அவருக்கு அரசியலமைப்பு ரீதியாக பாராளுமன்றம் இன்றி நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரம் ஐனாதிபதிக்கு உண்டு. மார்ச் 2 முதல் ஜூன் 1 வரையான அந்த மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடாத்தி புதிய பாராளுமன்றத்தை அமைக்கும் நிபந்தனையுடனேயே தனது அதிகாரத்தைக் கொண்டு ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.எனவே தேர்தலை நடாத்த அவரது அணி முனைகிறது என கொள்ளலாம். ஆனால் கொரொனா இடர் இயல்பாக தேர்தல் திகதியை பின்கொண்டு சென்றதால் உருவாகியுள்ள புதிய சூழல் அரசியலமைப்பு திகில் நிலையைத் தோற்றுவித்துள்ளன.

அச்சத்துடன் தேர்தலுக்கான நகர்வுகளை அரசு முன்னெடுப்பது அரசின் சுயநலமா அல்லது அரசின் பலமா?

கொரொனா இல்லாவிட்டாலும்கூட எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் கூட்டணி ஆட்சியமைக்கும் பலத்தை பெறும் அரசியல் சூழ்நிலையே நாட்டில் உள்ளது. கலைக்கப்பட்ட பாராளுமன்றில் பெரும்பான்மைக் கொண்டிருந்த ஐக்கிய தேசிய முன்னணி ஐக்கிய தேசிய கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சக்தியாகவும் இரு பிரிவுகளாக களம் இறங்குகின்றனர் என்பதே இதற்கான பிரதான காரணமாகும்.

இந்த நிலையில் அரசாங்கம் வசம் ஜனாதிபதி பதவி இருக்கும்போது பாராளுமன்றத்தையும் தங்கள் பலத்தில் வைத்துக்கொள்ளவே ஆளுங்கட்சி தேர்தலைக் கோருகிறது. எதிர்கட்சி இப்போது பலமாக இருப்பதால் தேர்தலைப் பிற்போட்டு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோருகிறது. எனவே இரண்டு தரப்பிலும் அவர்தம் சுயநலம உண்டு. சிலவேளை எதிர் கட்சி தற்போது பெரும்பான்மை கொண்டிருக்காவிட்டால் எப்படியான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் எனும் கேள்வியும் உள்ளது. கொரொனா அச்சுறுத்தல் தொடர்பாக சுகாதார துறை அறிக்கை சாதகமான சமிக்ஞையை காட்டினால் தேர்தலை நடாத்திவிடுவது ஒட்டுமொத்த முடிவைத் தந்துவிடும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

பாராளுமன்றத் தேர்தலில் உங்னளைப் போன்ற படித்த அரசியல்வாதிகளுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

படிப்பதற்கு பணத்தை செலவிட்டுவிட்டேன். அவை என்னுள் மனித மூலதனமாகவும் ( Human. Capital ) ஐந்தாண்டு பதவி காலத்தின் பின் சமூக மூலதனமாகவும் ( Social Capital ) ஆகவும் மாறி இருக்கிறது. ஒரு மனிதனுக்குள் இருக்கும் மனித மூலதனத்தையோ அவன்பால் சார்ந்திருக்கும் சமூக மூலதனத்தையோ உணர்ந்து கொள்ளும் அரசியல் கலாசாரம் நம் இடையே இன்னும் ஏற்படவில்லை என நினைக்கிறேன். எனது படிப்பு செலவுகளுக்கு தோட்டத் தொழிலாளிகளான எனது பெற்றோரின் உழைப்பும் சிறுவயது முதலான உழைப்பும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

“திலகர் நன்றாக பாராளுமன்றில் பேசுகிறார்” என்று யாராவது சொன்னால், அது அம்மா அப்பாவின் உழைப்பின் விளைச்சல் என அவர்களுக்கே அதனைக் காணிக்கையாக்குவேன். அந்த அம்மா அப்பா போல ஆயிரமாயிரம் அம்மா அப்பாவின் பிள்ளையாக அவர்களுக்கான குரலாக ஒலிப்பதே எனது இலக்கு. கடந்த முறை போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்ட போது அந்த ஆயிரமாயிரம் அம்மா அப்பாக்களும் சகோதரர்களும் சகோதரிகளும் எனக்கு அறுபத்தேழாயிரம் வாக்குகளை வழங்கி ஆசிர்வதித்திருந்தார்கள். அதற்கான நியாயத்தை ( justify ) நான் கடந்த நான்கரை வருடங்களில் வழங்கி உள்ளேன் என நம்புகிறேன். அந்த திருப்தியோடு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறேன். இந்தமுறை யும் களமிறங்கியிருந்தால் எனக்கான ஆசீர்வாதம் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை.

தேசியப் பட்டியலில் தெரிவு செய்வது குறித்து முன்னரே உங்களிடம் பேசப்பட்டதா அல்லது கட்சியே தீர்மானித்து உங்களிடம் அனுமதிக்கோரியதா?

இல்லை. கட்சி மட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஒரு கூட்டம் நடாத்தப்பட்டு அந்த முடிவு எடுக்கப்படவில்லை. மார்ச் முதலாம் திகதி இடம்பெற்ற தேசிய சபை கூட்டத்தில் பின்னர் தீர்மானிக்கப்படும் என சொல்லப்பட்டபோதும் அவ்வாறு எந்த கூட்டமும் 19 ம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் வரை நடாத்தப்படவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு தலைமையினால் அறிவிக்கப்பட்டது. அதன்போது கட்சி உயர்பீடத்தையோ நிர்வாக சபையையும் கூட்டுவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. ஆனால் கூட்டணி யின் உயர்பீடம் மார்ச் 15 கூடியது. அதிலும் எனக்கு அறிவிக்கப்பட்டதை நானே கூட்டணி உயர்பீடத்துக்கும் அறிவித்தேன்.

அப்போதைய சூழலில் நிபந்தனைகளின் அடிப்படையில் தேசிய பட்டியலுக்கான பெயர் பிரேரணையை ஏற்றுக் கொண்டேன். ஆனால் அந்தக்கூட்டத்துக்குப் பின்னர் நடந்த சம்பவங்கள் காரணமாக தேசிய பட்டியலிலும் எனது பெயர் இடம்பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வந்து அதற்கான வேட்பு மனுவிலும் கையொப்பம் இடுவதில் இருந்தும் என்னைத் தவிரத்துக் கொண்டேன். அப்போதும் தொடர்ந்து கட்சியில் இயங்கும் உடன்பாடு எனக்கு இருந்தது. எனினும் வேட்புமனுவுக்கு முதல்நாள் தலைமை தனிப்பட்ட ரீதியில் எனக்கு உத்தரவாதம் அளித்து எனது இல்லத்துக்கு வந்து அழைத்துச்சென்று மனுவில் கையொப்பம் இடக் கோரியதன் பின்னணியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் எனது பெயரும் உள்ளது. அதனைப் பெற்றுக் கொடுப்பதை கட்சித்தலைமையும் கூட்டணி உயர்பீடமுமே இனித் தீர்மானிக்க வேண்டும்.எனது கையில் ஒன்றும் இல்லை. ஏனெனில் 2010 ல் நான் நடந்த நாடகத்தின் காட்சிகளில் நான் திரும்பவும் நடிக்கத் தயார் இல்லை.

 

உங்களைப் போன்றவர்களை போட்டியிடுவதிலிருந்து புறக்கணிப்பதன் ஊடாக பாராளுமன்றத்திற்கு இளையத் தலைமுறையினரின் வருகைகான கதவுகள் மூத்த அரசியல் தலைவர்களால் மூடப்படுகின்றதாக நினைக்கின்றீர்களா?

இளமைத்முடிப்புடைவராக இருக்கவேண்டும், படித்தவராக இருக்கவேண்டும், பாராளுமன்றத்தில் பேசக்கூடியவராக இருக்கவேண்டும் என்பது போலவே பணம் படைத்தவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இந்த அரசியல் சூழலில் இருக்கிறது. நான் அதிஷ்டவசமாக அரசியலுக்கு வந்தவனல்ல. திட்டமிட்டே வந்தவன். யாரையும் நட்டப்படுத்தி நான் வரவில்லை. என்னோடு பயணித்தவர்களை இணைத்துக் கொண்டே எனது பயணம் செல்கிறது. என்னிடம் ஒரே கொள்கை. ஒரே கட்சி. எனது போராட்டங்களை அதற்குள்ளேயே நிகழ்த்துவேன். அஞ்சி ஓடமாட்டேன்.

சமூகத்திற்கான அரசியல் ஒன்றை முன்னெடுப்பதில் எதிர்கட்சியுடனான போராட்டத்தை விட உள்கட்சி கட்டமைப்பை கட்டி எழுப்புவதே கடினம் என்பது அரசியல் யதார்த்தம். ஊருக்குள் ஒரு மரணாதார சங்ககம், கலை, இலக்கிய மன்றம், விளையாட்டு கழகம் போன்றவற்றில் கூட இந்த உள் அரசியல் பிரச்சினைகளை பார்க்கலாம். இப்போது மலையக அரசியலை கட்சி பேதமின்றி விமர்சிக்கும் எல்லோரும் சேர்ந்து ஒரு கட்சியை தொடங்கினால் மலையக மக்களுக்கான தூய்மையான அரசியல் அமைப்பு உதயமாகிவிடும். ஏனெனில் இன்றைக்கு மலையக அரசியலை விமர்சிப்பவர்களே அதிகம் . அதற்கான காரணம் கூட எல்லோரிடத்திலும் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் அத்தகைய கட்சி ஒன்றை அவர்களால் ஏன் ஒன்றிணைந்து உருவாக்கிவிட முடியாதுள்ளது. இதுதான் அரசியலில் உள்ள பிரச்சினை என்பது புரியும்.

எனவே தொழிலாளர் தேசிய சங்க மீள எழுச்சிக்கு வித்திட்டவன் என்ற தகுதியும் தொழிலாளர் தேசிய முன்னணி யின் ஸ்தாபக செயலாளர் என்ற பலமும் என் இடத்தில் உண்டு. அதனடிப்படையில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை தொடரும். கதவுகளை மூட நான் அறை அரசில்காரன் அல்ல. கள அரசியல்காரன்.

நன்றி : ஞாயிறு தினக்குரல்

 


ஆயிரமும் காரணங்களும்

- மயில்வாகனம் திலகராஜா

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக் கொடுக்கபடவுள்ளதான அறிவிப்பும் - பேச்சுவார்த்தைகளும்- மறுப்புகளும் - போராட்டங்களும் - வாக்குறுதிகளும் - ஆட்சிமாற்றமும் - அமைச்சரவைப் பத்திரமும் - மீண்டும் பேச்சுவார்த்தையும் - வழங்கப்படாமைக்கான காரணங்களும் என ஐந்து வருடங்கள் கடந்து செல்கின்றன.

 

2015 பொதுத்தேர்தல் பிரசார மேடைகளில் வழங்கப்பட்ட வாக்குறுதி 2020 பொதுத்தேர்தலிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த 2020 தேர்தலுக்கு முன்பதாக அதனைக் கொடுத்துவிட்டால் தேர்தலில் பெரு வெற்றிப்பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் 2020 ஜனவரி யில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரமும் இப்போது அர்த்தமற்றதொன்றாகவே தோன்றுகிறது. இதனைப் பெற்றுக் கொடுத்துவிடுவதனால் தோட்டத் தொழிலாளர்களும் நன்மையடைந்து அதனால் அரசியல் இலாபம் ஒன்றும் அடையப்படமுடியுமெனில் அதற்கான இறுதி சந்தர்ப்பம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 10 ஆம்திகதி யாகும்.

ஒவ்வொரு மாதமும் பத்தாம் திகதி அதற்கு முதல் மாத சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் நிலையில், ஜூலை மாதச்சம்பளத் தொகையில் அது சேர்க்கப்படுமானால் ஆகஸ்ட் 10 ஆம் திகதியே கிடைக்கும். அப்போது (ஆகஸ்ட் 5 ) பொதுத்தேர்தல் நிறைவுபெற்றிருக்கும். எனவே அரசியல் இலாபம் இல்லாது தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னான மாதங்களில் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என எதிர்பார்ப்பு கொள்ள முடியாதுள்ளது. மாறாக அப்போதும் ஏன் ஆயிரம் ரூபா கொடுக்க முடியாது? என்பதற்கான காரணத்தையே கேட்கநேரலாம். காரணம் இப்போதே அதற்கான காரணம் தேடித்தேடி கண்டுபிடிக்கப்பட்டு சொல்லப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

 

இறுதியாக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தமிழ் ஊடகங்களின் செய்திப் பிரதானிகள் உடனான சந்திப்பில் பிரமர் மகிந்த ராஜபக்‌ஷ ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துள்ளார். அதுதான் தேர்தல் காலத்தில் இந்தத் தொகை வழங்கப்படுமாக இருந்தால் அதனை சுயாதீன தேர்தல் ஆணைக்குழு வாக்காளருக்கான லஞ்சம் வழங்கலாகப் பார்க்கக் கூடும் என்பதாகும். ஏற்கனவே மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளமாக நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் என அமைச்சரவைப் பத்திரம் ஊடாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக “தை பிறந்தால் வழி பிறக்கும்” கோஷத்தோடு ஜனவரி 15 அறிவிக்கப்பட்ட போது ஏப்ரல் 10 ஆம் திகதி வழங்கப்பட்டிருக்கக் கூடிய மார்ச் மாத சம்பளத்தில் கிடைத்திருக்க வேண்டும்.

அதன்போது ஏப்ரல் 25 பொதுத்தேர்தல் என அறிவிக்கப்பட்டது. எனவே ஏப்ரல் 10 தேர்தல் பிரசார காலமாகவே இருந்திருக்க வேண்டும். எனவே மார்ச் 11 ல் தேர்தல் ஆணைக்குழு காரியாலயத்தில் இடம்பெற்ற கட்சி செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதன்போது பதில் வழங்கிய தேர்தல் ஆணைக்குழு தலைவர் “பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே அமைச்சரவை அனுமதிக்கப்பட்ட இந்த விடயத்தை அதுவும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான இந்த விடயத்தினை ஆணைக்குழு எந்தவித்த்திலும் தடுக்காது” என உறுதி வழங்கப்பட்டது.

 

எனவே இப்போது தேர்தல் காலத்தில் இந்த சம்பளவுயர்வு வழங்கப்பட்டால் தேர்தல் ஆணைக்குழு அதனை லஞ்சம் என குற்றம் சுமத்தலாம் என்ற பிரதமரின் கருத்து ஒரு நொண்டிச் சாட்டு. ஏனெனில் இதற்கு முன்னதாக உறுதி செய்யப்பட்ட மார்ச் முதலாம் திகதி முதல் கொடுக்கப்படாமைக்கான காரணமாக “கொரொனா” முன்வைக்கப்பட்டது. அதுவும் நொண்டிச்சாட்டே என்பது அப்போதே தெளிவாகியது. ஏனெனில் கொரொனா வுக்கான ஊரடங்கு அறிவிப்பு வந்ததே மார்ச் 19 ஆம்திகதி இரவுதான். எனவே மார்ச் ஒன்று முதலே அதற்கான காரணம் கண்டறியப்பட்டமை கண்துடைப்பே அன்றி வேறில்லை.

 

இப்படி காலத்துக்குக் காலம் ஆரிரம் ரூபா வழங்கப்படாமைக்கு அரசாங்கம் பலவித காரணங்களை கண்டறிய முற்படுகிறதே தவிர அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொறிமுறை அரசாங்கத்திடம் இல்லை என்பதே உண்மை. இந்த அரசாங்கத்திடம் மட்டுமல்ல இதற்கு முன்னதான அரசாங்கத்திடமும் அதற்கு முன்னரும் கூட இருக்கவில்லை.

 

1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார்மயப்படுத்தலுக்கு உள்ளானதன் பின்னர் அந்தப் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பளவிடயத்தில் அரசாங்கம் கொண்டிருந்த கட்டுப்பாடுகள் அதிகாரங்கள் எல்லாமே இழக்கப்பட்டன. சம்பளநிர்ணய சபைச் சட்டத்தின் பிரகாரம் அரசாங்கமும் ஓர் அங்கமாக பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் வாய்ப்பு இழக்கப்பட்டது.

 

கூட்டு ஒப்பந்த அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் தீர்மானிக்கப்படும் முறைமை நடைமுறைக்கு வந்ததோடு தொழிற்சங்க பிரதிநிதிகளும் - தோட்ட முதலாளிகளும் கூடிப்பேசித் தீர்மானித்துவிடுவதால் அரசாங்கம் அந்த விடயத்தில் ஒரு பார்வையாளர் மட்டுமே. ஏதேனும் அரசியல் அழுத்தங்களால் தொழில் அமைச்சரோ அல்லது அவரின் பிரதிநிதிகளோ அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது அல்லது ஒப்பந்தம் கைச்சாத்திடும்போது பார்வையாளர்களாக அமரந்திருந்திருக்கின்றார்களே அன்றி அவர்களுக்கு அந்தத் தொகையைத் தீர்மானிக்கும் எந்த அதிகாரமும் இருந்திருக்கவில்லை.

 

பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதி அமைச்சராகவும் ( தொழில் அமைச்சர் அல்லாத) செயற்பட்டு வந்ததால் அரசாங்கத்தின் தலையீட்டுடன் சம்பளம் பேசித்தீர்மானிக்கப்பட்டதான ஒரு மாயை ( Illusion) உருவாக்கப்பட்டு வந்தது. அந்த மாயை யை மேலும் விரிவாக்க தொழிற்சங்கப் பிரதிநிதியான அந்த அமைச்சர் அப்போது ஜனாதிபதியாக அல்லது பிரதமராக இருப்பவர் முன்னிலையில் தோட்ட முதலாளிகளுடன் கையொப்பம் இட்டு பந்தா காட்டிவிடுவதால் அரசாங்கம் தலையிட்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதான ஒரு தோற்றப்பாடு மக்களுக்கும் காட்டப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்துக்கு உள்ளே என்ன உள்ளது என்பதை ஜனாதிபதியோ அல்லது பிதரமரோ அறியார். அதற்கான தேவையும் அவருக்கு எழுந்திருக்கவில்லை. அதனை அமைச்சுப் பதவிகள் கொடுக்கும்போதே அவர்கள் கைகழுவி விட்டிருந்தனர்.

இப்போதைய கள நிலவரங்களின்படி அப்படி காட்சிப்பொருளாக கையொப்பம் இடும் தரப்பினர் நடுவே நிற்கும் நிலைமை ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ இல்லை. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு பாராளுமன்றத்தில் கொச்சைத் தமிழில் அடிக்கடி கூவியவர் மகிந்தானந்த அளுத்கமகே. அவரும் ஒரு தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத் தலைவர் என்பது பலரும் அறியாத செய்தி. அந்த சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட “இடாப்புப்” பெயர் என்ன என்று ஊர்ஜிதமாக தெரியாத நிலையில் நாவலப்பிட்டி பகுதியில் “மகிந்தானந்த யூனியன்” என அதன் “வீட்டுப் பெயரில்” தொழிலாளர்கள் அதில் அங்கம் வகிக்கின்றனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின்போது இந்த ஆயிரம் ரூபா சம்பளவிவகாரத்தை தாங்கள் வந்ததும் நடைமுறைப்படுத்துவோம் என்றவர்கள் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நாளில் அங்கே கண்ணில்பட்ட தோட்டத் தொழிலாளி பெண் ஒருவரை தன் அருகே அழைத்த ஜனாதிபதி அவரது சுக நலன்களை விசாரித்ததுடன் தேர்தல் முடிந்த கையோடு நவம்பர் 19 முதல் அதனைப் பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்ததாக அப்போது ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அது நடைமுறைச் சாத்தியமில்லாதது என அப்போதைய வேட்பாளரும் இப்போதைய ஜனாதிபதியுமான கோட்டபாய ராஜபக்‌ஷ அறிந்துகொண்டு தான் ஜனாதிபதியானதும் இதனை செய்ய முயற்சித்து இருக்கலாம். இதன்போதும் அவருக்காக அங்கும் இங்கும் ஓடித்திரிந்தவர் மகிந்தானந்த அளுத்கமகே ஆவார். அதன் பின்னர் ஜனாதிபதி ஓர் ஆய்வினைச் செய்திருக்க வேண்டும். அப்போதே இந்தப் பிரச்சினையின் ஆழ அகலங்களை அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கிடையில் பொதுத்தேர்தல் காலமும் நெருங்க, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி எடுத்துள்ளதான தோற்றப்பாட்டினைக் காட்ட அவரது முன்னெடுப்பிலேயே அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அனுமதியும் கிடைத்தது.

 

அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைத்தவுடன் வழங்கப்படுவதாக இருந்தால் இந்த நாட்டில் எத்தனையோ விடயங்கள் இன்று நிறைவு பெற்று இருக்கும். கடந்த அரசாங்கத்தில் நாளாந்த மானியமாக 50/= கொடுப்பதற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சரும், அப்போதைய

பிரதமரும் தனித்தனியே அத்தகைய பத்திரம் சமர்ப்பித்து அவை அனுமதிக்கப்பட்ட போதும் இன்று வரை அது கொடுக்கப்படவில்லை. எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு நடைமுறை அப்படி ஆனதல்ல என்பதை இப்போதே “அரசாங்கங்கள் “ உணரத் தொடங்குகின்றன.

 

தாங்கள் என்னதான் அமைச்சரவையில் தீர்மானம் எடுத்தாலும் ஆயிரம் ரூபாவை அடிப்படைச் சம்பளமாக கொடுப்பதாக இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அந்த கம்பனிகளை நடாத்தும் தோட்ட முதலாளிகள் கைகளிலேயே உள்ளது. கம்பனிகளை பொறுத்தவரை இலங்கை குறைந்தபட்ச சம்பளச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச வேதனமான 400/= ககும் மேலான ஒரு தொகையாக 700/=ஐ அடிப்படை சம்பளமாக இப்போது கொடுக்கின்றன. அதுவும் ஒப்பந்த தொழிலாளர்கள் விடயத்தில் குறைந்தபட்ச சம்பளச் சட்டம் அவ்வளவு இறுக்கமானதாகவும் இல்லை.

 

எனவே அவர்கள் நிலையில் சட்டத்தை மீறவில்லை என நினைக்கின்றனர். ஆனால் பொதுவான சட்டமான இதில் அடங்கும் தோட்டத் தொழிலாளர்கள் அப்படி ஒன்றும் இலகுவான வேலையில் ஈடுபடவில்லை. அவர்களுக்கு ஆயிரம் ரூபா அல்ல அதற்கு மேலும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு முதலில் வரவேண்டும். அந்த உணர்வை ஆட்சியாளர்கள் பெறாதவரை இந்தப் பிரச்சினை அவர்களுக்கு பத்தோடு பதினொன்றுதான்.

 

ஒன்றில் அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க குறைந்த பட்ச சம்பளச் சட்டத்தைத் திருத்தி ஆயிரமாக அதனை உயர்த்த வேண்டும். இதனால் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் இன்று ஏனைய தொழில் துறை நாட்கூலித் தொழிலாளர்களும் நன்மைப் பெறுவர். அல்லது ஆயிரம் ரூபாவையும் விட அதிகமாக நாளாந்தம் உழைக்கக்கூடியதாக தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளராக்க வேண்டும். இதனை தென்பகுதி சிங்கள மக்களுக்கு “அரசாங்கங்கள்” செய்து கொடுத்துள்ளன.

 

எனவே பொறுப்புள்ள அரசாங்கங்கம் எனில் பொருத்தமான தீர்வை முன்வைக்குமேயன்றி கொடுக்காமல் இருப்பதற்கான காரணங்களைத் தேடித் தேடி கண்டறியாது!

( மஸ்கெலியா பகுதி தோட்டம் ஒன்றில் தற்போதைய நாட்சம்பளம் பகிரங்கமாக விபரக்கப்பட்டுள்ள காட்சி - படம்)