சகவாழ்வியம் -இலங்கையை மையப்படுத்திய உரையாடல்

- மல்லியப்புசந்தி திலகர்

தனது சிந்தனைத் தளத்தை மொழிப்புலமையோடு கலந்து இலக்கியப் பிரதியாக்கி இறக்கி வைக்கும் புதிய முயற்சியாக வெளிவந்திருக்கும் நூல் 'சகவாழ்வியம்'.

பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் ஊடகவியலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் இளம் எழுத்தாளர் எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத், 'இலங்கையை மையப்படுத்திய உரையாடல்' எனும் உப தலைப்போடு எழுதியிருக்கும் இந்த நூலை , முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மையம் வெளியீடு செய்துள்ளது. பெற்றோருக்குப் பின் தன்னை வளர்த்த மாமாவுக்கும் சித்திக்கும், தனது தூண்டல் புள்ளிகளான நண்பர்களுக்கும் இந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார் நூலாசிரியர்.

ஒற்றைத் தன்மை, பன்மைத்தன்மை, பல்லினத்தன்மை முதலான விடயங்கள் தத்துவஞானிகள், கல்வியியலாளர்கள், சிந்தனையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள காலகட்டம் ஒன்றில், இலங்கையை மையப்படுத்தியதாக இத்தகைய நூல் ஒன்றை எழுதுவது வரவேற்கத்தக்கது.

பிஸ்ரின் பேசப்படாத விஷயங்களைப் பேசத்துணியும் ஓர் ஊடகவியலாளர். பெண்களின் விருத்தச் சேதனம் தொடர்பிலும், இலங்கை முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பது பற்றியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றையே தயாரித்து நெறிப்படுத்தியவர். வயோதிப ஆண்கள் ஏன் பாலியல் வன்புணர்வு நோக்கி உந்தப்படுகிறார்கள் என்பதையும் பொது வெளியில் உரையாடத் துணிந்தவர்.

அவரது துணிச்சலான முயற்சிகளில் ஒன்று இந்த சகவாழ்வியம். அவரது இரண்டாவது நூல்.106 பக்கங்களைக் கொண்ட இந்தச் சிறியநூலில் 10 தலைப்புகளில் இலங்கையின் சகவாழ்வியம் பற்றி உரையாட முனைகிறார்.

ஒற்றைத் தன்மையும் பன்மைத்துவமும், பன்மைத்துவமும் மனிதனும், இனம், மதம், சாதியம் கலாசாரம் என்பவற்றுள்ளான பன்மைத்துவ புரிதல், இலங்கையின் சூழல் அமைவிடம் மற்றும் இனம்சார் பன்மைத்துவம், இலங்கைச் சூழலும் பண்பாட்டு பன்மைத்துவமும், இலங்கையின் இன முரண்பாடு, இலங்கையின் அரசியல் பன்மைத்துவத்தின் 51 நாள் செயற்பாடு , சகவாழ்வு, சகவாழ்வியம், இலங்கையின் சகவாழ்வு பற்றிய விமர்சனங்களும் முன்மொழிவுகளும் எனும் பத்து தலைப்புகளில் 'சகவாழ்வியம்' குறித்த உரையாடலைப் பதிவு செய்ய முனைகிறார் நூலாசிரியர்.

உலகம் நிறங்களால் அற்றதாக, முழுவதுமே கருப்பு நிறமாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என வாசகர்களைக் கற்பனச் செய்யக் கோரி, அதனூடே ஏற்படும் மன உணர்வில் இருந்து பன்மைத்துவம் என்பதனை அழகியல் உணர்வோடு உணரச் செய்கிறார். நிறங்களால் பல வண்ணங்களால் ஆன உலகுதானே அழகாய்த் தெரிகிறது. எனவே பன்மைத்துவமே அழகானதாக இருக்கும் என வித்தியாசங்களின் முக்கியத்துவத்தை உணரச் செய்வதன் ஊடே ஆரம்பமாகிறது நூல்.

வித்தியாசங்களினாலேயே உலகம் அமையப் பெற்றுள்ளது. பன்மைத்துவம் என்பது இயற்கையில் இயல்பாகவே தோற்றம்பெற்ற ஒரு விடயமாகவுள்ளது.எனவே பன்மைத்துவம் என்ற கதையாடல் உலகின் இயங்கியலின் எல்லாத்தளங்களிலும் ஊடுருவியுள்ள பல கோணங்களில் நின்று கதைக்கப்படவேண்டிய நீண்ட உரையாடலுக்கான விடயமாக உள்ளது என்கிறார்.

மனிதனின் பன்மைத்துவத்தை உரையாட வரும்போது, உயிரினம் ஒன்றாயினும் அவை வாழும் சூழல், இட அமைவு என்பவற்றுக்கு ஏற்ப பல்வகைத்தனமைப் பெறுவதை, ஒரே உயிரினம் உலகின் இரண்டு பிரதேசங்களில் எவ்வாறு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளன என்பதைக் கொண்டு விளக்குகிறார்.

மனித இனமானது இயற்கை அமைவியல், காலநிலை, சூழல், மரபணு என்பவற்றால் வேறுபடுவதையும் அதனால் மானிடவியல் ஆய்வாளர்கள், மனிதனின் தோற்றம், தோல்,கண்ணின் நிறம், மண்டையோட்டு அமைப்பு இரத்தத்தொகுதி என்பவற்றின் அடிப்படையில் மங்கோலிய இனம், காக்கேஷியஸ் இனம், நீக்ரோ இனம் என மூன்று வகையாக வகுத்துள்ளனர் என்கிறார்.

மனிதனின் தோற்றம் முதற்கொண்டு மனிதப்பரவல் பூமியில் ஆரம்பமான காலத்தில் இருந்தே இனம், மதம், சாதியம், கலாச்சாரம், பண்பாடு என்ற புரிதல், வித்தியாசமான தளங்களில் இருந்து தோற்றம் பெற்றுள்ளதைப் போலவே, கருத்தியல், சிந்தனைசார் புதுமைகளையும் ஏற்படுத்தியுள்ளன.

நவீன தொழிநுட்ப வளர்ச்சியை அடுத்து மதங்கள் மீது மனிதர்கள்கொண்ட ஆதிக்கம் குறைந்து, இயற்கையில் பொதிந்த ரகசியங்கள் விஞ்ஞானத்தின் ஊடாகக் கட்டுடைப்புச் செய்யப்பட்டதால், மத்த்தின் மீது மனிதன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு தகர்க்கப்பட்டது என்பது போன்ற புரிதல்களுடன் இலங்கையின் பல்லினத்துவம், பன்மைத்துவம் பற்றி அலசி ஆராய்கிறார்.

இலங்கையின் சூழல் அமைவிடம் மற்றும் பன்மைத்துவம் இயற்கையாகவே தோற்றம் பெற்றது என்பதனை அதன் தரைத்தோற்ற சூழல் அமைவில் இருந்தே அடையாளம் காணுகிறார். இலங்கை ஒரு தீவானபோதும் தரைத்தோற்றம் உலக அரங்கில் இலங்கைக்கு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது என்கிறார்.

இலங்கையில் வாழ்கின்ற மக்களைப் பொறுத்தவரை ஒரே இனம், மதம், கலாசாரம், பண்பாடுகள் என அமையப் பெறாமல் பன்முகப்பட்ட கலாசார விடயங்கள் உள்வாங்கப் பட்டு இருப்பதால் தனித்துவத்தையும் வித்தியாசத்தையும் அடையாளப்படுத்தி நிற்கிறது. பல்லின கலாசாரம் உள்ளடக்கிய இலங்கைப் போன்ற நாடுகளில் கருத்தியல் ரீதியாகவும் சிந்தனா ரீதியாகவும் பல்வேறு முரண்பாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை வரலாற்று சம்பவங்கள் சான்று பகர்கின்றன.

இலங்கைச் சூழலில் பண்பாட்டு பன்மைத்துவம் வாழ்வியலுக்கான அடையாளமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு இனத்தவரது தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் கருவியாக பண்பாடு அமைந்துள்ளது. சிங்களவர்கள் ஆயினும் கண்டிய சிங்களவர்களுக்கும் தென்பகுதி சிங்களவர்களுக்கும் பண்பாட்டு வித்தியாசங்கள் காணப்படுகின்றன. தமிழர்களில் வடபகுதி, தென்பகுதி, மலையகத் தமிழரிடையே பண்பாட்டு அடிப்படையில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. கிழக்கு முஸ்லிம்களினதும் கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்களினதும் பண்பாடுகளில் பாரிய இடைவெளி காணப்படுகிறது.

இவ்வாறு இனரீதியாக பண்பாடு வேறுபடுவது மாத்திரமின்றி வேறுபட்ட குழுக்களுள்ளேயும் வேறுபட்ட பண்பாட்டுத் தன்மைகள் காணப்படுவதையும் வலியுறுத்துகிறார். கணிதத்தில் 0 ( பூச்சியம்) எவ்வாறு முதன்மையானதோ அவ்வாறே மானிடவியலிலும் பண்பாடு எனும் கருத்தியல் முதன்மையானதாக காணப்படுவதாக சமூகவியலாளர்கள் கருதுவதாக சுட்டிக் காட்டுகின்றார்.

இலங்கையில் இன முரண்பாடு தொடர்பாக பேசும்போது வரலாறு நெடுகிலும் அரசியல் தலைவர்கள் விட்ட பாரிய தவறுகளைப் பட்டியல் இட்டுச் செல்கின்றார்.அரசியல்வாதிகளின் பிற்போக்கான குறுகிய சிந்தனைகளினாலேயே இந்த பன்மைத்துவ நாடு பல தசாப்த காலமாக இரத்தக் காடாக மாறியது.

பௌத்த பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு குழு ஒன்று முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்னால் சென்றபோது அதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததனால் அது இனக்கலவரமாக மாறியது. அநகாரிக்க தர்மபால போன்ற அரசியல் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் விரோதப் பிரச்சாரமே இத்தகைய கலவரங்களுக்கு காரணம் என ‘பன்சலைப் புரட்சி’ எனும் நூலில் குறிப்பிட்டு இருப்பதாகவும் சுட்டிக் காட்டுகின்றார்.

“மொழி ஒன்று என்றால் நாடு இரண்டு, மொழி இரண்டு என்றால் நாடு ஒன்று” என்ற புகழ்பெற்ற வாக்கியத்தை முன்வைத்த கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வாதான், சாதாரண சட்டமாக இருந்த தனிச் சிங்களச் சட்டத்தை 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டமாக உயர்த்தும் அரசியல் யாப்பை எழுதினார் என்பதை மேற்கோள் காட்டுகிறார்.

இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் இயற்கைக் கொடுத்த வரமாக பன்மைத்துவம் எல்லாத்தளங்களிலும் கதையாடப்படும் விடயமாகவுள்ளது. இந்தச் சூழலில் மற்றமைகளின் இருப்பை ஏற்றுக்கொண்டு இணைந்து வாழவேண்டிய கடப்பாடு, தேச மக்கள் அனைவருக்கும் கடமையாகவுள்ளது. மேற்படி இனத்தவர்கள் அளவில் வேறுபட்ட போதிலும் தமக்கான தனிப்பட்ட இயல்புகளோடு இலங்கை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்னறர்.இந்த வித்தியாசங்களைப் புரிந்து கொண்டு, வித்தியாசங்களை ஏற்றுக் கொண்டு வாழப்பழகும்போதே சகவாழ்வு சாத்தியமாகும்.

இனங்கள் மதங்களுக்கு இடையில் இணைந்து வாழ்தல், சேர்ந்து வாழ்தல், புரிந்து கொள்ளுதல் என்ற கருத்தியல் மிகவும் பரந்துபட்ட விரிந்த தளத்துக்கு இட்டுச் செல்லும் ஒரு தத்துவமாகவே சகவாழ்வியம் ( Co - Existentialism) அமையப் பெற்றுள்ளது.

இவ்வாறு சிக்கலான ஒரு விடயப்பரப்பை கருப்பொருளாகக் கொண்டு ஒரு நூலை இளைய தலைமுறை எழுத்தாளர் ஒருவர் 2021 ஆம் ஆண்டு வெளியீடு செய்கிறார் என்பது நம்பிக்கை தருவதாகவே உள்ளது.

எனினும் இந்த சகவாழ்வியத்தை வாழ்க்கைக் கோலமாகவும் ( Life Style ) அரசியல் செல்நெறியாகவும் ( Political Trend ) ஆக்கிக் கொள்வது அடுத்த தலைமுறை ஏற்கவேண்டிய சவாலாக உள்ளது. அத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் துணிவைப் பெற இத்தகைய நூல்களை வாசிப்பதும் அது சார்ந்து யோசிப்பதும் அவசியம்.
*