மனங்கொண்ட படைப்பாக வந்திருக்கும் மக்கத்துச் சால்வை - மண்ணும் மணமும்

மல்லியப்புசந்தி திலகர்

நம்பிக்கையின் நிழல் என்ற தலைப்பில், மக்கத்துச் சால்வை வாசகர் வட்டம் எழுதிய அறிமுகக் குறிப்புடன் தொடங்குகிறது எழுத்தாளர் எஸ். எல்.எம். ஹனிபா நினைவுக் குறிப்புகள் அடங்கிய 'மக்கத்துச் சால்வை மண்ணும் மணமும்' எனும் தொகுப்பு நூல். இந்த நூல் தொகுப்பின் நோக்கம் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் அடுத்த கட்ட செயற்பாடுகள் பற்றியும் கூட விபரிக்கும் அறிமுகக் குறிப்பு நூலுக்குள் வாசகனை வரவேற்கிறது.

"உனது சுயமே உனக்குச் சொந்தம். அன்பாக சக மனிதனை மதித்து வாழ்வோம்.அடக்குமுறைக்கும் ஆணவத்திற்கும் பயந்து வாழ்வதைவிட அதை எதிர்த்து மடிதல் மேலானது" எனும்எஸ்எல்எம் ஹனிபாவின் பிரகடனத்துடன் அவரது அழகிய வண்ணப்புகைப்படம் பிரசுரம் பெறுகிறது.

அவரது வாழ்வும் பணியும் குறித்த நீண்ட கட்டுரையை ஓட்டமாவடி அறபாத் எழுதி நூலுக்குள் வாசகரை அழைத்துச்செல்கிறார். தேசிய மட்டப் போட்டிகள் வரை கலந்துகொண்ட குறுந்தூர ஓட்மவீரர் எஸ்எல்எம் என்பது பலருக்கு புதிய செய்தியாக இருக்கலாம். 1987 ல் வந்த மாகாண சபையின் உறுப்பினராக அறியப்பட்ட எஸ்எல்லெம் 1965 லேயே அரசியல் மேடை ஏறியவர் என்பதுவும் அப்படியே. தாவரவியல், விலங்கியல் தொடர்பான அவரது ஆர்வம் ஆலோசனை சேவை இயற்கையை நேசிக்கும் நெஞ்சம் என்பனவும் இந்தக் கட்டுரையில் பதிவாகிறது. பேராசிரியர் எம். ஏ. நுஹ்மானின் கட்டுரை யில் "ஹனிபா ஒரு கூர்மையான அவதானி, நிறைந்த அனுபவம் உடையவர். இந்த வயதிலும் அவருடைய நினைவாற்றல் நான் பொறாமைப்படக் கூடிய அளவுக்கு அலாதியானது. அவருடைய எழுத்தாற்றலும் அப்படித்தான்" என மனந்திறக்கிறார்.

வேதாந்தி ( சேகு இஸ்இதீன்), "ஒரு அடக்கமான அறிஞனின் ஈடுபாடு ஆன்ம தரிசனத்தை தேடுவதாயிருக்கும். ஹனிபா அதற்கு வேறானவர் இல்லை" என குறிக்கிறார்.கரிசல் காட்டுக்கு ஒரு கி.ராஜநாராயணன் என்றால் மட்டக்களப்புக்கு ஒரு எஸ்எல்எம், என்கிறார் வைத்தியரும் இலக்கியவாதியுமான எம்.கே. முருகானந்தன்.

பேராசிரியர் அ. ராமசாமி (தமிழ்நாடு ) யின் நினைவுகள ஒரு பயணக்கட்டுரையாக பதிவாகி, இறுதியில் " நேராக ஓட்டமாவடியில் வந்து இறங்கி அவர் தோட்டத்தில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி, ஆற்றில் குளித்து மீன் சுட்டுச் சாப்பிட வேண்டும். அவரது மனதில் இருந்த அழகுப் பெண்களைப் பற்றிய கதைகளையும் கேட்க வேண்டும்" என எல்லோர் மனது ஆசையையும் எடுத்துக் கூறி உள்ளார்.

பாரம்பரியமும் சரித்திரமும் கொண்ட ஒரு மனிதக் குடித்தொகையின் எழுச்சி, வீழ்ச்சி, வெற்றி, தோல்வி, குடியகல்வு, குடிப்பெயர்வு போன்றவற்றின் தகவல்களை அறியக்கூடிய இறுதி எச்சம் இவர் மட்டுமே என மு.கா.மு. மன்சூர் எழுதுகிறார்.

ஒளிபரப்பாளரான என். ஆத்மா, எஸ்எல்எம் உடனான தனது முதல் சந்திப்பு முதல் தனது நேரடி ஒளிபரப்புகளில் எஸ்எல்எம் தொடர்ச்சியாக கலந்து கொண்டதுவரையான பல சுவாரஷ்யமான பொழுதுகளை எண்ணிக் களிக்கிறார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ( தமிழ்நாடு ) மக்கத்துச் சால்வை எனும் தலைப்பிலேயே எழுதியுள்ள கட்டுரையில் "கிழக்கிலங்கைப் படைப்பாளிகள் பலருக்கும் அவர் ஞானத்தந்தை" என்றும் குறிக்கிறார்.

விரிவுரையாளர் அஷ்ஷெயக் எம். டி.எம். றிஸ்வி எஸ்எல்எம் "எதனைக் பேசினாலும் எதனை எழுதினாலும் இங்கிதம் பேசுபவர்" எனக் குறிப்பிடுகிறார். 'எஸ்எல்எம் எழுத வந்த கதை' எனும் தலைப்பில் இந்தக் கதைசொல்லியின் கதையைப் பதிவு செய்கிறார் பேராசிரியர் செ. யோகராசா.

எஸ். எல். எம். ஹனிபா வினது அரசியல், தொழில், ஆன்மீகம், இன நல்லுறவு செயற்பாடுகள் என பல பக்கங்கள் பற்றியும் குறிப்பிட்டு எழுதி உள்ளார் கலாசார உத்தியோகத்தர் ஏ. எல். பீர்முஹம்து. 'எஸ்எல்எம் எனது மாணவன்' என அவரது ஆசிரியர் ஏ. எம். அப்துல் காதர் சிறு வயது முதலான அவரது வாசிப்புப் பழக்கம் கற்பனையற்ற கதைகள் பற்றியும் விபரிக்கிறார். 'நிலம் மணக்கும் எஸ்எல்எம்மின் கதை வெளி' எனும் தலைப்பில் றமீஸ் பர்ஸான், எஸ்எல்எம் சிறுகதைகளை மதிப்பீடு செய்கிறார். வி. ஏ. ஜுனைத் எழுதியுள்ள பதிவில் லா.சா. ராவின் கதைகளின் மீதான பற்றுதலால் அவரைச் சந்திக்கச் சென்றதோடு அதனை தொடர் கட்டுரையாக பத்திரிகையில் எழுதிய தொடரையும் நினைவுபடுத்துகிறது.

எழுத்தாளர் நோயல் நடேசன் " பார்த்தசாரதியாக எஸ்எல்எம் ஹனிபா" எனும் தலைப்பில் இரண்டு பாகங்களாகவும், எஸ்ஸெல்லமும் நானும் எனும் தலைப்பில் ஜவ்வாத் மரைக்கார் ஒரு நினைவோட்டத்தையும் பதிவு செய்துள்ளார்கள்

ஹனீபா எனும் ஞானத்தந்தை" - இளைய அப்துல்லாஹ், "உங்களோடு இருபது ஆண்டுகள்" நபீல், 'கிராமிய அழகியல்' - சாஜித், 'தேர்ந்த கதைசொல்லி' - சிராஜ்மஷ்ஹூர், 'பெருவிருட்ஷம்' - அனார், எஸ்.எல்.எம் ஒரு முன்னோடியின் சுவடுகள் - கருணாகரன், 'வாழ்வை மீண்டும் வாழ்ந்துபார்த்தல்' - டி.சே. தமிழன், 'மக்கத்துச்சால்வை, அவளும் ஒரு பாற்கடல் தொகுதிகளை முன்வைத்து' - அம்ரிதா ஏயெம், எஸ்எல்எம் மாமா - சப்ரி, நம்முன், கடந்த காலத்தின் வாழ்வும் இறந்த காலத்தின் நிலமும் மனிதர்களும் - எம். பௌசர், எஸ்எல்எம் பற்றி - ஹசீன், இன நல்லுறவுக்கு ஒரு ஆவணம் எஸ்எல்எம்- எஸ். நளீம் என சமகால இலக்கியச் செயற்பாட்டாளர்களின் கட்டுரைகள் சுவாரஷ்யமிக்கவை.

எழுத்தாளர் முருகபூபதி, விரிவுரையாளர் ஏ. எம். றியாஸ் அகமட் ஆகியோரின் கட்டுரைகள் இலக்கியத்தோடு இயற்கை மீது பற்று கொண்ட எஸ்எல்எம் பற்றி பேசுகின்றன.

தமயந்தி ( நோர்வே ) சீவகன் பூபாலரட்ணம் ( லண்டன் ), இளங்கோ, தேவமுகுந்தன், மல்லியப்புசந்தி திலகர் , எம்எச்எம் இத்ரிஸ் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகள் எஸ்எல்எம் உடானான தமது உறவாடலின் ஆழத்தைப் பதிவு செய்வன.SLM Haniffa : An Icon of the Eastern Tamil - Muslim Heartland எனும் ஆங்கிலக் கட்டுரையை MLM Mansoor எழுதி உள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன் ( தமிழ்நாடு ) எஸ்எல்எம் ஹனீபா எனும் தலைப்பில் எழுதி இருக்கும் கட்டுரையில் "நான் சமீபகாலத்தில் அவரைப்போன்ற உயாராற்றல் ஒவ்வொரு கண்மும் பீரிடும் ஒரு மனிதரைப் பார்த்ததில்லை" என பதிவு செய்கிறார். எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தனது கட்டுரையை சுகம் தரும் நினைவுகள் எனும் தலைப்பில் எழுதியுள்ளதோடு எஸ்எல்எம் பற்றிய நினைவுகள் நீண்டவை, சுகமானவை என பதிவு செய்கிறார்.

இத்தகைய சுகமான அனுபவங்களாக எஸ்எல்எம் தனது வாழ்வு நினைவுகளை நினைந்தெழுதியுள்ள ஐந்து கட்டுரைகளுடன் சுந்தர ராமசாமி, செல்வராசா, பித்தன் ஷா, உமா வரதராஜன், சோலைக்கிளி, அன்புமணி நாகலிங்கம், எஸ். பொன்னுத்துரை ( எஸ். பொ) போன்றோர் எஸ்எல்எம்முக்கு எழுதிய கடிதங்களும் தொகுப்பு முழுவதும் விரவிக்கிடங்கும் நிழற்படங்களும் தொகுப்பின் பெறுமதிக்கு வலு சேர்ப்பன.

நிழற்படங்களில் மக்களுக்கு நிகராக மாடுகள், ஆடுகள், மான்களுடன் எஸ்எல்எம் எடுத்துக் கொண்டதான படங்கள் சம அளவில் போட்டியிடுவது எஸ்எல்லத்தின் உள்ளத்தைக் காட்டுகிறது.

ஓவியர்கள் புகழ், றஷ்மி, நளீம்,பிருந்தாஜினி,கோமதி சரவணன் , ஸஜ்ஜாத்,ஏ.எம். சமீம் வரைந்த எஸ்எல்எம்மின் முகத்தோற்றங்களையும் ஈரிஏ ஸஜ்ஜாத் ஒரு பக்கத்தில் தொகுத்தளித்துள்ளார். இத்தனை ஆளுமைகளின் நினைவுப் பதிவுகளுடன் கடிதங்கள், படங்கள், ஓவியங்கள் குறிப்புகள் என ஓரிடத்தில் குவியச்செய்த இந்தத் தொகுப்பில் எஸ்எல்எம்மின் 'கடுகு' சிறுகதையும் சேர்க்கப்பட்டுள்ளது.

இத்தனை உள்ளடக்கங்களையும் கொண்டதாக ஒரு தொகுப்பினைக் கொண்டு வந்து ஓர் இலக்கியவாதியை வாழும்போதே வாழ்த்துவதற்கு பெரும் மனது வேண்டும். அந்த மனங்கொண்ட நல்லிதயங்களின் ஒன்றிணைந்த உழைப்பால் உருப்பெற்றுள்ள 'மக்கத்துச்சால்வை - மண்ணும் மணமும்' , எஸ்எல்எம் ஹனிபா' எனும் மானுடத்தின் வாழ்க்கையின் ஊடாக ஒரு வரலாற்றுப் பதிவு செய்யும் தொகுப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வாசிக்க மட்டுமல்ல வைத்துப் பாதுகாக்கவும் வேண்டிய வரலாற்று ஆவணம் இது.