ஆயிரமும் அதற்கு பின்னான பிரச்சினைகளும்:

மலையகப் பெருந்தோட்டங்களை முன்நிறுத்திய பார்வை

- மல்லியப்புசந்தி திலகர்

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சமகால (2015-2020) கோரிக்கையாகக் காட்டப்பட்டுவந்த 1000/- அடிப்படை நாட்சம்பள கோரிக்கை தற்போது நிறைவுக்கு வந்ததான தோற்றப்பாடு எழுந்துள்ளது. அதாவது அரசாங்கம் சம்பள நிர்ணய முறைமையினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக (900 அடிப்படையும் 100 நாளாந்த மேலதிக கொடுப்பனவும்) வழங்கவேண்டும் என பெருந்தோட்ட கம்பனிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

எனினும் இந்த 1000 ரூபா நாளாந்த வேதனத்தைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இணக்கம் தெரிவித்த பெருந்தோட்ட கம்பனிகள் பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

1. 1992 தனியார்மயமாக்கலுக்கு பின்னதாக 1998 முதல் நடைமுறையில் இருந்து வந்த கூட்டு ஒப்பந்த நடைமுறையில் இருந்து விலகிக் கொள்ளுதல்

2. சம்பளநிர்ணய முறைமை ஏற்புடையதல்ல என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருத்தல் (வழக்கு நீதிமன்றத்தில் தொடர்கிறது)

3. தோட்டத் தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 20 கிலோ தேயிலை கட்டாயம் பறிக்க வேண்டும் எனும் நிபந்தனையின் அடிப்படையில் வேலை வழங்க முன்வருதல்

4. மாதம் ஒன்றுக்கு 13 நாட்கள் மாத்திரம் வேலை வழங்குதல்

இந்த நடவடிக்கைகள் காரணமாக தோட்டத் தொழிலாளர்களிடையே சுமார் ஐந்தாண்டு கால கோரிக்கையாக இருந்த ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிக்கை மாற்று வடிவம் எடுத்திருக்கிறது என்பதனை அவதானிக்க முடிகிறது. அதுதான் நாள் ஒன்றுக்கு 20 கிலோகிராம் கொழுந்து பறிக்க வேண்டும் எனும் நிபந்தனையை ஏற்க மறுத்தும் மாதமொன்றுக்கு 13 நாள் வேலை மட்டுமே வழங்கப்படுவதை எதிர்த்தும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தப்போராட்டம் ஆயிரம் ரூபா போராட்டம் போல வீரியம் பெறுவற்கு தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத மலையகம் மற்றும் மலையகம் சாசரா சமூகங்களின் தரப்பில் இருந்தும் தோழமை குரல்கள் எழும்புதல் வேண்டும். இப்போதைக்கு அப்படியான குரல்கள் குறைவாகவே எழும்புவதனையும் அவதானிக்க முடிகின்றது.

அதற்கான காரணம்,

1. கொவிட் 19 நோய்ப்பரவல் சூழல் 2021 ஏப்பிரல், மே மாதங்களில் உயர்வான அளவில் பரவலடைகின்றமை.

2. சும்பள நிர்ணய முறை தீர்மானங்கள், 20 கிலோ விவகாரம் 13 நாள் வேலை தொடர்பில் இன்னும் பரவலாக வெளி உலகம் அறியாமை.

ஆயிரம் ரூபா பிரச்சினை தீர்ந்துவிட்டது என்ற அடிப்படையில் அரசாங்கமும் அதனோடு இணைந்திருக்கும் பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிற்சங்கங்களும் (அரசியல் கட்சிகளும்) அறிக்கைகளை வெளியிட்டாலும் அந்தப்பிரச்சினை வடிவம் மாற்றம் அடைந்து மீண்டும் உருவெடுக்கிறது என்பதே உண்மையாகும்.

இந்த உண்மையை அரசாங்கம் விளங்கிக்கொள்ளத் தலைப்படாது. விளங்கியும் விளங்காததும்போல இருக்கும். ஏனெனில் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட பிரச்சினையும் அவர்கள் உறுதியளித்த விடயமும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பது என்பதுதான்.

இப்போது அதனை நிறைவேற்றியதாக பாசாங்கு செய்து சர்வதேச தொழிலாளர் தினத்தில் அரசாங்கம் தனது வெற்றிப்பட்டியலிலும் சேர்த்துக்கொண்டுள்ளது. அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடுகளை நன்றி தெரிவித்து அங்கீகரிக்க வேண்டிய அரச ஆதரவு அரசியல் தொழிற்சங்க அமைப்புகள், எழுகின்ற 20 கிலோ , 13 நாள் வேலை போன்றவற்றை புதுப்பிரச்சினையாக கையாள்வதற்கே எத்தனிக்கிறது.

ஆனால், உண்மை என்னவெனில் ஆயிரம் ரூபா பிரச்சினை வடிவம் மாறி தொடர்கிறது என்பதைப் புரிந்து கொள்வதேயாகும்.

அது எவ்வாறு நிகழ்ந்துள்ளது எனில்,

1. சம்பள நிர்ணய சபையின் ஊடாக ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க அரசாங்கம் கம்பனிகள் மீது அழுத்தத்தை பிரயோகித்ததுடன் அவை ஏற்றுக்கொண்டன.

2. அதே நேரம் அரசாங்கத்தினால் சம்பள நிர்ணய சபையின் ஊடாக அழுத்தம் கொடுக்க முடியாத விடயங்களை தமக்கு சாதகமாக அமைத்துக்கொண்டன.

கம்பனிகளுக்கு சாதகமான அத்தகைய விடயங்களாக பின்வருவன அமைகின்றன

1. மாதத்தில் நாள் ஒன்றுக்கு வழங்கும் நாள் சம்பளத்தை 1000 ஆக வழங்க வேண்டும் என சம்பள நிர்ணய சபை தீர்மானித்தாலும் மாதம் ஒன்றுக்கு குறித்த நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும் என எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எனவே கூட்டு ஒப்பந்த நடைமுறையில் 25 வேலை நாட்கள் குறைந்த பட்சம் மாதத்தில் வழங்க வேண்டும் (வருடத்தில் 300 வேலை நாட்கள் வழங்கப்படல் வேண்டும் என கூட்டு ஒப்பந்தத்தில் குறப்பிடப்பட்டிருந்ததது. அதன்படி கம்பனிகள் நடைமுறையில் செயற்படாவிட்டாலும் ஒரு ஒப்பந்த கடப்பாடு இருந்தது) என்ற நிபந்தனையை மீறி கம்பனிகளால் செயற்பட முடிகிறது. இதனால் ஒரு தொழிலாளியின் சம்பளத்திற்காக செலவிடப்படும் மொத்தத் தொகையை மாற்றாமல் சம்பள நிர்ணய சபையின் உத்தரவையும் நிறைவேற்ற முடிகிறது.

நாட்சம்பளம் 750 ரூபாவாக இருந்தபோது 25 நாட்கள் வேலை செய்த ஒரு தொழிலாளிக்கு மாதம் (25x750) 18750 ரூபா செலவிட்டு இருக்கும். அதே 18750 ரூபாவையே குறித்த தொழிலாளிக்கு செலவிட நாள் ஒன்றின் சம்பளத்தை ஆயிரம் ஆக்குகின்றபோது வேலை நாட்களை 19 நாட்களாக குறைத்தால் கம்பனிக்கு சம்பள நிர்ணய சபை அழுத்தத்தால் எந்த விதமான பொருளாதார தாக்கமும் ஏற்படப்போவதில்லை.

ஆனால், 750 ரூபா சம்பளம் அடிப்படைச் சம்பளம் வழங்கிய காலத்தில் 700/- அடிப்படைக்கு ஊழியர் சேமலாப நிதியாக 12 வீதமும் ஊழியர் நம்பிக்கை நிதியாக 3 வீதமும் செலுத்த 105 ரூபாவை மாதாந்தம் தனது கையில் கம்பனிகள் செலுத்த வேண்டி இருந்ததது. எனவே குறித்த தொழிலாளி 25 நாள் வேலை செய்திருந்தால் கம்பனி 2625 ரூபா செலுத்த வேண்டும்.

இப்போது 25 நாட்கள் வேலைக்கு 1000 ரூபாவுக்கு (900+100 இரண்டுக்குமாக ஊழியர் சேமலாப நிதி கணக்கிடப்படும் என சம்பள நிர்ணய சபையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது) 3750 ரூபா செலவிடல் வேண்டும். இங்கே ஏற்படும் மேலதிக செலவினைக் குறைத்துக் கொள்ள மேலதிகமாக வேலை வழங்கும் நாட்களைக் கம்பனிகளை குறைத்துக்கொள்கிறது.

முன்பு 25 நாட்கள் என இருந்தாலும் 75 வீத நாட்கள் வேலைக்கு சமூகமளித்தால் வரவுக்கொடுப்பனவு ஒன்று வழங்கும் நடைமுறை இருந்தபோது அதனைப் பூர்த்தி செய்யும் நோக்கில் 19 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில் தொடர்ச்சியாகாவும் 19 நாட்கள் குறைந்த பட்சம் வேலை வழங்கப்பட்டு வந்ததது. இப்போது அந்த அவசியம் இல்லை . ஆகையால், இப்போது 19 நாட்கள் வேலைக்கான மாதாந்த சம்பளத்தொகையை தற்போதைய சம்பளத்தொகைக்கு ஏற்ப சரிசெய்து கொள்ளவும் அதற்கேற்ப ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பற்றை சரி செய்து கொள்ளவும் 13 அல்லது 14 நாட்கள் வேலை வழங்கினால் போதுமானது எனும் நிலைப்பாட்டை கம்பனிகள் எடுத்து இருக்கின்றன.

எனவே கம்பனிகள் சராசரியாக மாதம் ஒன்றுக்கு தொழிலாளி ஒருவருக்கு செலவிடும் மாதாந்த தொகை 14x1000 = 14000 உடன் அதற்கான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியப் பங்களிப்பு 2100 உள்ளடங்களாக 16,100 ரூபா என்பதாக பேணிக்கொள்வதன் ஊடாக கூலிச்செலவாக (Wages Cost) பொருளதார சிக்கனத்தை (Economy) கடைப்பிடிக்கும் ஒரு கைங்கரியத்தை கம்பனிகள் கையாள்கின்றன.

மறுபுறத்தில் தொழிலாளர்கள் முன்பு பெற்றுவந்த குறைந்த பட்ச வேலை நாள் எண்ணிக்கை 19 என்ற அடிப்படையில் 750 நாட்சம்பளம் என்ற அடிப்டையில் 14750 அதில் 700 ரூபாவுக்கான EPF /ETF 105 படி 1995 ரூபா எனப்பாரத்தால் 14750+1995 = 16745 என்ற தொகையை விட குறைந்த தொகையே (16100) நாளாந்தம் பெற நேர்கிறது.

எனவே கம்பனிகள் தொழிலாளி ஒருவருக்காக மாதாந்தம் செலவிடக் கூடியதான தனது பாதீடு (Budget) அடிப்படையில் சம்பளத்திட்டத்தை தொழிலாளி ஒருவருக்காக மாதாந்தம் 16,000 முதல் 17,000 என்ற அளவிற்குள் மாற்றமின்றி வைத்துக்கொண்டுள்ளன.

இதனைவிட கூடுதலான சம்பளச்சிட்டையை (Pay sheet) காட்டி கம்பனிகள் தமது தந்திரோபாயத்தை நியாயப்படுத்தலாம். அது மேலதிக கொழுந்து என்பதன் ஊடாக நிகழ்வது. அதனால் தான் 20 கிலோ விவகாரம் மேல் எழுகின்றது.

2. நாள் ஒன்றுக்கு 20 கிலோ கொழுந்து எழுக்க வேண்டும் எனும் நிபந்தனை

இந்த 20 கிலோ கோரிக்கை என்பது கம்பனிகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்த எண்ணி கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு மாற்று முறையாக / முன்மொழிவாக செய்து வந்த வெளியகப்பயிரிடல் (அவுட்குரோவர்) முறைமையின் வெளிப்பாடு ஆகும். அதன்படி தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 20 கிலோ கெழுந்து பறித்தால் ஒரு கிலோவுக்காக விலை 50 ரூபா என்பதன் அடிப்படையில் (முன்பு மேலதிகமாக பறிக்கும் கொழுந்துக்கு 50 ரூபா வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது) 50ரூபா x 20 கிலோ எனும் அடிப்படையில் நாட்சம்பளம் 1000 என்பதை சமன் செய்ய அல்லது சரிசெய்து கொள்ள எடுக்கும் முயற்சியாகும்.

இதன் படி ஒரு தொழிலாளி 20 கிலேவை சராசரியாக பறித்துக்கொடுத்தால் கம்பனிகள் நாட்கூலிக்காக செலவிடும் 1000 ரூபாவுக்கான உற்பத்தி அளவைப் பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சியாகும். இது உற்பத்தித்திறன் அடிப்படையிலான கம்பனிகளின் தந்திரோபாயம்.

இதனைத் தொழிலாளர்கள் மறுக்கும்போது அவர்களது உற்பத்தி பெறுமதி குறைவடையும். எனவே அவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியாது. எனவே நாள் ஒன்றுக்கு ஒரு தொழிலாளியிடம் இருந்து இருபது கிலோவைப் பெற்றுக்கொள்வதற்கு ‘தொழிற்சங்கங்கள்’ மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வகையில் கம்பனிகள் செயற்படுகின்றன.

தொழிற்சங்கங்கள் மீதான அழுத்தம்

கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது (அதற்கு முன்பிருந்தும்) புரிந்துணர்வு அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத்துக்கான மாதாந்த சந்தா தொகையை நாட் சம்பளத்தில் கழித்து தொழிற்சங்கத்துக்கு அனுப்பும் வேலையை கம்பனிகள் செய்து வந்தன.

2021 ஏப்பிரல் மாதத்துடன் சில கம்பனிகள் அந்த நடைமுறையை கைவிட்டுள்ளன. இது தொழிற்சங்கங்களுக்கு நிர்வாக ரீதியான அழுத்தங்களைக் கொடுத்துள்ளன. இந்த அழுத்தம் 20 கிலோ நாளாந்தம் எனும் கோரிக்கையை தொழிற்சங்கங்கள் ஏற்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். (இந்த சந்தா சேகரிப்பு முறைமை இதன் அரசியல் தாக்கம் குறித்து தனியாக பார்க்கலாம்.)

அரசாங்கம் மீதான கம்பனிகளின் அழுத்தம்

கம்பனிகள் மீது அரசாங்கம் அழுத்தம் கொடுத்து ஆயிரம் ரூபாவை கொடுக்கச் செய்ததுபோல கம்பனிகளும் அரசாங்கம் மீது அழுத்தத்தைக் கொடுக்கும் கைங்கரியங்களை ஆரம்பித்துள்ளன. குறிப்பாக தொழிலாளர்களின் சுகாதார துறையை தமது கட்டுப்பாட்டிலும் நிர்வாகத்திலும் வைத்திருக்கும் கம்பனிகள் அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் ஆளணியினரையும் அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இது குறித்த பிரச்சினைகள் எதிர்வரும் காலங்களில் வெளிப்படும். கூடவே தொழிலாளர்களின் சேமநலன் விடயங்களுக்கு பொறுப்பான ‘ட்ரஸட்’நிறுவனத்துக்கு ஒதுக்கும் தொகையையும் அதற்கான கொடுப்பனவுகளையும் கம்பனிகள் குறைக்க வாய்ப்புகள் உள்ளது. இது அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தை எதிர்காலத்தில் அதிகரிக்கச் செய்யும் (இது குறித்தும் தனியான பார்வை அவசியம்)

எது எவ்வாறு எனினும் பெருந்தோட்ட முறைமையினை இல்லாமல் செய்யும் நீண்டகால நிகழ்ச்சி நிரலின் அம்சங்களே இவை என்பதை ஆய்வுகளின் ஊடாக புரிந்து கொள்ள வேண்டும். அதனிடையே பெருந்தோட்டங்கள் இல்லாமல் ஆகும்போது அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம், வாழிடம் குறித்த அரசியல் இந்த ‘ஆயிரம்’ பிரச்சினைகளின் ஆதாரமாகும்.

18.07.2021 அன்று ஞாயிறு வீகேசரி பத்திரிகையில் வெளியான கட்டுரை


இலங்கை சீனர்கள்

தம்மாதீன தேரர் தரும் தகவல்கள்

-மல்லியப்புசந்தி திலகர்

இலங்கை - சீன என்றதும் இப்போது பல்வேறு பார்வைக் கோணங்கள் வளர்ந்துவிட்டிருக்கிற சூழநிலையில் பேராசிரியர் சங்கைக்குரிய நெதாலகமுவே தம்மாதீன தரும் தகவல்கள் இலங்கை சீனர்கள் பற்றிய ஆய்வாக அமைகிறது ‘இலங்கை சீனர்கள்’ ( Sri Lankan Chinese) எனும் ஆங்கில நூல்.

இலங்கையில் வாழும் சீன சமுதாயத்தினர் பற்றியும் சீன மொழி பற்றியும் குறைந்தளவான அக்கறையே காட்டப்படுகிறது. பண்டைய கால பட்டுப்பாதைத் திட்டத்தின் ஊடாக இலங்கை - சீன நாடுகள் பல வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்தனர்.பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்தே இலங்கையில் சீனர்கள் வாழ்கின்றனர். காலனித்துவ காலத்தில் சீனர்களின் வருகை அபரிமிதமாக அதிகரித்தது. இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் வணிக நோக்கத்தில் சீனர்கள் இலங்கை வந்துள்ளனர்.

இந்த நூல் கவனிப்பாரற்று இருக்கும் இலங்கை சீனர்கள் வரலாற்றினை பதிவு செய்யும் ஆய்வினை செய்யும் அறிக்கையாகக் கொள்ளலாம் எனும் பின்னட்டைக்குறிப்புடன் சமயவர்தன புத்தகாலய வெளியீடாக 2018 ஆம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

எழுபத்திரண்டு பக்கங்களைக் கொண்ட இந்த நூலின் ஆசிரியர் ஒரு பௌத்த துறவியும் களனி பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியரும் ஆவார்.

ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் முதலாவது அத்தியாயத்தில் ஹான் வம்சம் முதல் இன்று வரையான இலங்கை - சீன உறவுபற்றி பேசப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் சுவாரஷ்யமான விடயமாக அமைவது இலங்கைக்கான பண்டைய சீன பெயர்கள் பற்றிய தகவலாகும்.

செரண்டிப், தப்ரோபன் போன்ற பெயர்கள் குறித்து பரவலாக அறியப்பட்டுள்ளது. ஈழம் என்பது கூட இலங்கைக்கான மறுபெயர்தான் என்னாலும் இன்று அதனை வேறு அர்த்தத்தில் நோக்குவோரும் உளர். சிலோன் என்பதை இன்றும் கூட ஐரோப்பாவில் சைலோன் என்றே நினைவில் வைத்துள்ளனர். சைலோன் டீ ( Ceylon Tea) ஐராப்பிய நாடுகளில் பிரபலம்.


இப்படி சீனர்கள் இலங்கையை எப்படி எல்லாம் அழைத்து இருக்கிறார்கள் என்பது சுவாரஷ்யமாகவே உள்ளது. ‘சி ச்செங் பூ’ - இதற்கு சிங்க(ள) தீப்ப என்று சிங்களத்தில் பொருளாம். ‘சி டியாவ் குவா’ அல்லது சி டியாவ் சுவா என்பதும் கூட அதே அர்த்தம்தானாம். பொதுவாக அழைக்கப்பட்ட பெயராக ‘ஷி ஸி குவோ’ இருந்துள்ளது. இதன் அர்த்தம் சிங்க நாடு என்பதாகும்.

இதே முதலாம் அத்தியாயத்தில் இலங்கை - சீன பௌத்த தொடர்புகள் பற்றியும் பேசப்பட்டுள்ளது.இரண்டாம் அத்தியாயத்தில் இலங்கை சீனர்களின் சனத்தொகை பற்றி விவாதிக்கப்படுகிறது. 1816 ஆம் ஆண்டு 80 முதல் 100 ஆண்கள் என்று இருந்து, 1881 ஆம் ஆண்டு 35 ஆண்கள், 14 பெண்கள் என்பதாக பதிவாகிறது. 1963 ஆம் ஆண்டு 238 ஆண்கள் 159 பெண்கள் 1981 ஆம் ஆண்டு 448 ஆண்கள், 128 பெண்கள் என பதிவு பெறுகிறது.

மூன்றாவது அத்தியாயம் நவீன இலங்கையின சீனர்களின் பல்வேறு பரிமாணங்களை ஆராய்கிறது. இதில் அவர்கள் பிரஜா உரிமைப் பெற்ற காலம், கல்வி நிலை, பெயர்கள், திருமண பந்தம், தொழில் முதலான விடயங்களுடன் அவர்களது வாழ்க்கைக் கோலம் பற்றியும் ஆராயப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு சீன வம்சாவளியினருக்கான பிரஜாவுரிமை வழங்கும் சட்டம் இலங்கைப் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (2009 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க சட்டமே இந்திய முகாம்களில் வாழும் இந்திய வம்சாவளியினரான இலங்கை அகதிகளுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கும் சட்டம் நிறை ஏற்றப்பட்டது)

2016 ஆம் ஆண்டில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட சீன மக்கள் இலங்கையில் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தைப் ( Working Permit ) பெற்றுக் கொண்டுள்ளதாகவும் புத்தகம் பதிவு செய்கிறது.

நான்காவது அத்தியாயம் இலங்கையில் சீன மொழி கற்றல் கற்பித்தல் பற்றியானது. 1954 ஆம் ஆண்டிலேயே கொழும்பில் சீன மொழி கற்பிக்க பாடசாலை உருவாக்கம் பெற்றுள்ளது. 1970 களில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் வித்யாலங்கார வளாகத்தில் சீன மொழிக் கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகள் சான்றிதழ் கற்கை நெறியாக தமிழ் , ஹிந்தி, ஜப்பான்,ஆங்கிலம் , பிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்யா என்பவற்றோடு சீன மொழியும் கற்பிக்கப்பட்டுள்ளது.

1972 ஆம் ஆண்டு பேலியகொட வளாகத்திலும் ( களனி பல்கலைக் கழகம்) இதே முறைமையில் சீன மொழிக் கற்கைகளை ஆரம்பித்துள்ளது. 1980 ஆம் இலங்கையின் உயர்தர பாடவிதானத்திலும் சீன மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

2008 க்குப்பின் களனிப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியன கன்பூசியஸ் நிறுவகம் என்ற பெயரிலும்,சப்ரகமுவ பல்கலைக் கழகம் லும்பினி கல்லூரி போன்றனவும் சீன மொழி சான்றிதழ் கற்கை நெறியாக உள்வாரி, வெளிவாரி பாடநெறிகளைக் கொண்டுள்ளன.

அத்தியாயம் ஐந்து இலங்கை சீனர்களின் இலக்கியம் பற்றி ஆய்வு செய்கிறது. அவை பெரும்பாலும் இலக்கிய படைப்புகளாக அன்றி பாடப்புத்தகங்களாக, மொழிபெயர்ப்புகளாக, கதைப் புத்தகங்களாக வெளிவந்துள்ளமை பதிவாகிறது. ஆறாவது அத்தியாயம் சீன மொழியில் உள்ள வேறுபாடுகள் அவை இலங்கையில் பிரதிபலிக்கும் விதம் பற்றி ஆராய்கிறது.சீன மொழி பேசும் பலர் இலங்கையில் நிரந்தரமாக வாழ்வது சிறப்பம்சம் என்றும் ஆய்வு கூறுகிறது.

இலங்கையில் அமையப்பெற்றுள்ள சீன வியாபார நிலையங்கள், சீன குடும்பங்கள், சீன மொழி புத்தகங்கள முதலான படங்களும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.

சீன மொழி சிறப்புப் பட்டம் பெற்ற பேராசிரியர் சங்கைக்குரிய நெதாலகமுவே தம்மாதீன தேரர் 1999 ஆம் ஆண்டு களனிப் பல்கலைக் கழகத்தில் இணைந்ததுடன் 2007 ஆம் ஆண்டு சங்காய் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளார். எங்கள் சீனம், இலங்கை சுற்றுலாத்துறைக்கான சீன மொழி உள்ளடங்களாக பல நூல்களை எழுதி உள்ளார். இலங்கை ஒரு பன்மொழி, பல்லின, பல்கலாசார பண்பாட்டு அம்சங்களைக் கொண்ட நாடு எனவும் நூலாசிரியர் வலியுறுத்துகின்றார்.

இந்த ஆய்வின் அவதானிப்புகள் இலங்கை சீன மக்களினதும் அவர்தம் மொழியிலும் நவீன இலங்கையில் ஏற்பட்டிருக்கக் கூடிய துரித முன்னேற்றங்களை சுட்டி நிற்பதாக பின்னட்டைக் குறிப்பை நிறைவு செய்கிறார் நூலாசிரியர்.

காலத்தின் தேவையுடன் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது.

 


41வது இலக்கிய சந்திப்புக்கான பயணத்தை முன்னிறுத்திய ஒரு நினைவுப்பதிவு

 -மல்லியப்புசந்தி திலகர்

2013 ஜுலை 19ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் செல்வதற்கு 16ஆம் திகதியே இரண்டு பஸ் டிக்கட்டுகளை எனக்கும், என் நண்பர் லெனின் மதிவானம் அவர்களுக்கும் பதிவு செய்து கொண்டேன்.

உலகின் பல நாடுகளுக்கு பயணித்துள்ள நான் சில நாடுகளுக்கு பலமுறை பயணித்துள்ளேன் என்றாலும், அப்போதெல்லாம் இல்லாத பரபரப்பும் ஒரு தவிப்பும் இப்போது எனக்குள் எழுந்து கொண்டேயிருந்தது.

நான் யாழ்ப்பாணம் செல்லும் பிரதான நோக்கம் அங்கு 20, 21

 

ஆம் திக

 

 

திகளில் நடக்கும் 41ஆவது இலக்கிய சந்திப்பில் உரையாற்றுவது. ஆரம்பத்தில் ஓர் ஆசிரியனாக பணியாற்றியதாலும் தற்போது முகாமைத்துவ உசாத்துணைவனாக பணி செய்வதாலும் கட்டுரை சமர்ப்பிப்பது, உரையாற்றுவது போன்ற விடயங்கள் பதற்றத்தைத் தருவதில்லை. இருந்தும் இந்தப் பயணத்தின் பரபரப்புக்கான காரணம் வேறாக இருந்தது.

1973ஆம் ஆண்டில் இலங்கையில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது, வறுமை தாங்காது அரசாங்கம் குடும்பத்துக்கு அரைக்கொத்து அரிசி கொடுத்த செப்டெம்பர் 29ஆம் திகதி நுவரெலியா மாவட்டம், வட்டகொடை நகருக்கு அருகேயுள்ள மடகொம்பரை எனும் தோட்டத்தில் ‘புதுக்காடு’ எனும் பிரிவில் தோட்டத் தொழிலாளர் லயன் குடியிருப்பில் நான்காவது பிள்ளையாக (முதலாவது ஆண்பிள்ளை சந்திரசேகரன் ஒரு வயதுக்குள்ளேயே இறந்து விட்டாராம்) பிறந்தவன் நான். மற்றைய இருவ

ரும் மூத்த சகோதரிகள்.

என் பிறப்பிற்கு இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்பே என் தந்தையின் அப்பா ‘தாத்தா’ குடும்பத்துடன் வன்னியின் கிளிநொச்சி-வட்டக்கச்சி பிரதேசத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். மலையகத்தில் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளிகளாக இருந்த குடும்பத்தை, காலம் வன்னியில் விவசாயப் பண்ணைகளில் தொழிலாளிகளாக்கியிருக்கிறது.

இடம்பெயர்ந்த குடும்பமென்பது, எனது மூன்று அத்தைமார்களையும் என் சிறிய தந்தையையும்

உள்ளடக்கியது. எங்கள் குடும்பமும் ஓர் அத்தையும் இரண்டு பெரியப்பாமாரும் மலையகத்தின் மடகொம்பரையில் தொடர்ந்து வாழ்ந்தனர். பின்னாளில் மூத்த பெரியப்பாவும் குடும்பத்தோடு வன்னியில் குடியேறிவிட்டார். எஞ்சியிருந்த நாங்கள் அவ்வப்போது வன்னிக்குச் சென்று வந்தோம். அப்படி முதல் தடவையாக ஐந்து வயதில் (1978) சிறிய தந்தையுடன் சென்று வந்த ஞாபகம் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. என் தாத்தாவையும், ஆச்சியையும் (மலையகத்தின் அப்பாயி -ஆச்சி யானது வன்னித் தொடர்பாக இருக்கலாம்) முதன்முதலாக பார்த்தது அப்போதுதான்.

1979ஆம் ஆண்டு மடகொம்பரை (வடக்கிமலை) தோட்டப் பாடசாலையில் மண் தரையில் அமர்ந்து, ‘ஆனா’ எழுதும் முன்னரே எங்கள் தோட்டத்திற்கு உள் நுழையும் பாதையோரத்தில் இருக்கும் பி.டபிள்யூ.டி குவாட்டர்ஸில் வாழ்ந்த சிங்களக் குடும்பத்தாருடன் இருந்த தொடர்புகள் காரணமாக ‘அயன்ன’ எழுதியிருந்தே

ன். அதற்கு முன்பு எனக்கே வயது தெரியாத நாளில் அடுத்த வீட்டு அந்தி நேர ‘நைட் ஸ்கூலில்’ ஐயா மேகராஜா (என் உறவு வழி சிறிய தந்தை – தற்பொது தமிழகம் குன்னூரில் வாழ்கிறார்) அவர்களினால் என்மீது ‘அரிச்சுவடி’ (அ முதல் Z வரை) எழுதப்பட்டிருந்தது. எனவேதான் அந்தத் தொழிலாளி சித்தப்பா மேகராஜாவையே என் ‘குருநாதர்’ என்று நான் எப்போதும் சொல்வதுண்டு. ‘மல்லியப்பு சந்தி’யில் இந்த குருநாதர் பற்றிய எனது பதிவுகளும் (மீண்டும் குழந்தையாகிறேன் பக்-96) என்னைப் பற்றிய அவரது பதிவுகளும் (குருவிடமிருந்து பக்-VII) உள்ளடங்கியுள்ளன.

1977இல் ஆட்சி மாறினாலும் எங்கள் பட்டினி மாறவில்லை. காலையில் ஒரு ‘இசுகோத்து’. பகலுக்கு ‘சவசவக்காய்’ (மலையகத்தில் பிரபலமான காய் வகை) அவியல், பொருளாதாரம் இடமளித்தால் இரவுக்கு கொஞ்சம் சோறு என நாட்கள் நகர்ந்த காலம் அது. வறுமை எங்

களை விரட்ட, வறுமையை விரட்ட அப்பாவுக்குத் தெரிந்த அடுத்த ஒரே வழி தானும் வன்னிக்குச் செல்வதுதான்.

அப்போதும் இருந்த இன வன்முறைகளைப் பார்த்து ‘இனி இந்த நாட்டில் வாழ்வதென்றால் சிங்கள மொழிக் கல்விதான் ஒரே வழி’ என்ற யாருடையதோ தூரநோக்கு சிந்தனையை உள்வாங்கிக் கொண்ட அப்பா, எங்கள் மூவரையும் வட்டகொடை சிங்கள வித்தியாலயத்தில் சேர்த்து விட்டார்.

ஒரு வருடமாக மடகொம்பரை தோட்டத்துப்பள்ளியில் ‘வேட்டி கட்டிய’ யாழ்ப்பாண வாத்தியார் ‘கோபிநாத்’ மாஸ்டர் (தவறு செய்தால் பின்பக்க தொடையில் நறுக்கென கிள்ளுவார். தற்போது பிரான்ஸில் வாழ்வதாக அறியக்கிடைக்கிறது.) அருமைநாயகம் மாஸ்டர் (மட்டக்களப்பு என நினைக்கிறேன்), பள்ளிக்கூட கங்காணி (அங்கேயுமா..!) ‘வத்தங்கி’ தாத்தா ஆகியோரிடமும், ‘அ’ எழுதிப் பழகிய ‘கள்ளுக்குச்சி-சிலேட்டிடமும்’ நண்பர்கள் பலரிடமும் பாலர் வகுப்பிலேயே விடை பெறவேண்டியதாயிற்று.

இப்போது மீண்டும் ‘அயன்ன’ சொல்லிக்கொடுக்க ‘மெனிக்கே டீச்சர்’, ‘அம

ரக்கோன் டீச்சர்’, ‘சரத் சேர்’, மற்றும் ‘விதான சேர்’ என பல சிங்கள ஆசிரியர்கள். மடகொம்பரை மண்தரைப் பள்ளியின் மதியாபரணம், குணராஜாவுக்குப் பதிலாக வட்டகொடையில் நண்பர்களாக ரவீந்திர, நந்தசேன, இந்திக்க, ஜயசேன என எல்லாம் மாறிப்போனது.

அவ்வப்போது அப்பா அனுப்பும் மணியோடர் பசியை ஆற்றியது. கடிதங்க

ள் ஆறுதலையும் ஆர்வத்தையும் தந்தன. கடிதத்தில் நாட்டு நடப்புகளை சுவாரஸ்யமாகவும் ‘பெருமை’யாகவும் எழுதியிருப்பார். ஆனாலும் எங்கள் வீட்டில் வறுமை நீடித்தது.

அம்மாவின் நாட்கூலி வறுமையைப் போக்க உதவியது. அப்பாவுக்கு மட்டுமல்ல, அம்மாவுக்கும் யாரோ தூரநோக்கு ‘ஐடியாவை’ கொடுத்திருக்க வேண்டும். ‘சிங்களமே படித்துவிட்டால் நாளைக்கு பிள்ளைகளுக்கு தமிழ் தெரிய வேண்டாமா?’. எனவே ‘சிங்கள பாடசாலை முடிந்ததும் அந்தியில் தமிழ் படிக்க’ வென ‘டிவிஷன்’க்கு (Tuition) சேர்த்து விட்டார். அதனால் அந்தியானதும் ‘வட்டகொடை ஸ்ரீ கிருஷ்ணா சமூக நலப் பாடசாலை’யில் ஆஜராகி விடுவோம். என் வாழ்வின் இன்னுமொரு வழிகாட்டி இந்தப் பள்ளியின் ஆசிரியர், நடத்துனர் சண்முகம் மாஸ்டர் அவர்கள். வட்டகொடை – சுப்பையா ராஜசேகரன் என சூரியகாந்தி பத்திரிகையில் எழுதி வருபவர். பாண் தந்து பசியைப் போக்கி, படிப்பு தந்து, வாழ்வையும் உயர்த்தியவர்.இவரைப் பற்றிய ஒரு பதிவும் மல்லியப்புசந்தியில் உண்டு.

1983ஆம் ஆண்டு ஜூலையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. தமிழர்கள் எரிந்து கொண்டிருந்த நாளில், நான் சிங்களப் பாடசாலையில் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். என் நண்பன் ‘ரவீந்திர’ ஏதோவொரு சண்டையில் என்னை ‘பறதெமளா’ என திட்டுகிறான். அடுத்த கணம் என் கை ஓங்குகிறது. அவன் வாயில் ரத்தம் வழிய, கையில் கடவாய்ப்பல் ஒன்றை ஏந்தியவாறு அழுது கொண்டிருக்க, அதிபர் முன்னிலையில் விசாரணை. சிங்களத்தில் வாக்குமூலம் கொடுக்கிறேன். (இப்போதும் அப்படித்தான்).

விதான ‘சேர்’ வெறுப்புமிழ்ந்து பார்க்கிறார். சரத் ‘சேர்’ கருணையோடு பார்க்கிறார். பாடசாலை நேரம் முடிய மணியும் அடித்தது. ‘நாளையும் விசாரணையும் தொடரும்’ என அனுப்பி வைத்தார்கள். வரிசையில் சென்ற எங்கள் மூவரையும் சரத் ‘சேர்’ ஓர் ஓரத்திற்கு அழைக்கிறார். அன்பாகப் பேசினார். ‘இனிமேல் இந்த பாடசாலைக்கு படிக்க வராதீர்கள். உங்கள் நன்மைக்குத்தான் சொல்லுகிறேன்’ என்றார். சிங்கள கலாசாரத்தின்படி அவரை வணங்கி விடைபெறுகிறோம். ‘புதுசரணை’ என ஆசிர்வதித்து அனுப்பினார்.

இன்றும் கூட வெள்ளைச்சட்டை, வெள்ளை நீளக்காற்சட்டை அணிந்து சுருள் முடி, கூர்மையான மூக்குடன் என் முன் புன்னகைத்து நிழலாடுகிறார் சரத் ‘சேர்’. உள்ளத்திலும் தோற்றத்திலும் உயர்ந்த மனிதர் சரத் ‘சேர்’.

அப்பாவினது ‘தூரநோக்கு’ நொடிப்பொழுதில் உடைந்துவிட, அம்மாவின் ‘தூரநோக்கு’ கைகொடுக்கிறது. எங்களை வட்டகொடை தமிழ் வித்தியாலயத்துக்கு அழைத்துச் சென்ற சண்முகம் மாஸ்டர், அதிபர் சண்முகநாதனுக்கு எங்களை அறிமுகப்படுத்தி நடந்தவற்றை விளக்குகிறார். சற்று யோசித்த அதிபர் மூன்றாம் வகுப்பு தமிழ்ப்பாட புத்தகத்தைக் கொண்டுவரச் சொல்லி வாசிக்கச் சொன்னார். மரியாதையுடன் கால்கள் இரண்டையும் கிட்டவாக வைத்து நேராக நின்றவன் மூச்சு விடாமல் வாசித்துக்கொண்டு சென்றேன்.

என் முதுகில் தட்டிக்கொடுத்தவாறே புன்னகைத்தார். "இங்கு (தமிழ்ப்பள்ளி) ஐந்தாம் வகுப்புக்காரன் இப்படி வாசிப்பானா என்பது எனக்குச் சந்தேகம்தான்" என சண்முகம் மாஸ்டரைப் பார்க்க, அவர் கடந்த மூன்று வருடம் அம்மாவின் வேண்டுகோளின் பேரில் தனது தனியார் பள்ளியின் மாலை வகுப்பு பற்றி விளக்கினார். நான் நன்றியோடு சண்முகம் மாஸ்டரைப் பார்த்தேன். "அப்பா வரையில்லையாடா.. தம்பி" என்றார் அதிபர். "அப்பா யாழ்ப்பாணத்தில் ரைஸ் மில்லில் வேலை செய்றார், நாங்கள் அம்மாவுடன் தான் இருக்கிறோம். எங்களுடன் சித்தப்பா வந்திருக்கிறார்" என அப்பாவின் தம்பி சித்தப்பா தர்மகுலராஜாவைக் காட்டினேன். "யாழ்ப்பாணத்தில் எந்த ஊர்?" என அதிபர் விசாரிக்க, "கொக்குவில்"என விபரத்தைச் சொன்னார் சித்தப்பா.

அப்பா ‘வன்னி’க்குப் போகவில்லை. அவர் போனதோ யாழ்ப்பாணத்திற்கு – அவர் அனுப்பும் கடிதங்களின் ‘என்விலப்பில்’ ‘…..’ ரைஸ் மில் (அரசி ஆலை) கொக்குவில். என அச்சடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு பூரிப்படைந்திருக்கிறேன்.

"அட… நான் இணுவில்காரனடா… ஏன் நீங்கள் இங்க கிடந்து மாயிறியள்… பேசாமல் அங்க போய் படியுங்கோடா… அதுவரைக்கும் இங்கு அனுமதிக்கிறன். அப்பாக்கு கடிதம் எழுதி விஷயத்தைச் சொல்லுங்கோ" என உடனடியாக வட்டகொடை தமிழ்ப்பள்ளியில் அனுமதித்த அதிபர், அடுத்த தூரநோக்கையும் எங்கள் தலையில் திணித்து விட்டார்.

சுமார் ஒரு மாதம் வட்டகொடை தமிழ்ப் பாடசாலையில் படித்திருப்பேன். எங்கள் உறவுகள் ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பபந்தத்தின் கீழ் இந்தியா (தாயகம்) திரும்பும்போது தோட்டத்தில் வீடு வீடாகச் சென்று ‘பயணம்’ சொல்லி வருவது போல் நாங்களும் பயணம் சொல்லிவிட்டு குடும்பமாய் வன்னிக்கு குடிபெயர்ந்தோம். அங்கு அக்காமாருடன் என்னையும் சேர்த்து கிளிநொச்சி சென்.திரேசா பள்ளியில் (ஐந்தாம் வகுப்பு வரை அப்போது அங்கு ஆண்பிள்ளைகளும் படிக்கலாம் – இப்போது எப்படியென்று தெரியவில்லை) சேர்த்து விட்டார்கள்.

இதில் அப்பாவின் தூரநோக்கம் ஏதும் இருந்ததா அல்லது கொக்குவில் பக்கத்திலேயே அப்பா வாழ்ந்தும் ‘கொக்குவில் இந்து’ வில் என்னைச் சேர்த்துக்கொள்ள முடியாத ‘ராசதந்திரம்’ ஏதும் நிகழ்ந்ததா எனத் தெரியவில்லை. 41வது இலக்கிய சந்திப்பில் சாதியம் பற்றிய அமர்வில் ஆசிரிய ஆலோசகர் திரு.ஏ.சி.ஜோர்ஜ் அவர்கள் ஆற்றிய உரை, அப்பாவிடம் இது பற்றி விசாரித்துப் பார்க்க வேண்டும் என இப்போது எனக்குள் ஒரு உந்துதலைக் கொடுத்துள்ளது.

கிளிநொச்சி, கரடிப்போக்கு, சென்.திரேசா பள்ளி நாட்கள் எனக்குள் பல மனத்தாக்கங்களைத் தந்தன. மலையகத் தோட்டத்தில் வாழும்போது அப்பாவை மட்டும் பிரிந்திருந்த நான் இப்போது அம்மாவையும் பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்களை வட்டக்கச்சி அத்தை வீட்டில் நிறுத்தி அங்கிருந்து பாடசாலைக்குப் போகுமாறு சொல்லிவிட்டு, அம்மாவும் அப்பாவும் யாழ்ப்பாண வேலைச்சூழலில் அமைந்த வீட்டில் தங்கிவிட்டார்கள். இடையிடையே யாழ்ப்பாண வீட்டிற்கு போய் வருவோம்.

அப்போதெல்லாம் கிளிநொச்சி – யாழ்ப்பாணம் பஸ்ஸில் ‘சித்திரச்செவ்வானாம் சிரிக்கக்கண்டேன் …..முத்தான முத்தம்மா’ -ஜெயச்சந்திரன் பாடலும், கண்ணே… கலைமானே…. ஜேசுதாஸ் பாடலும் ஒலித்துக் கொண்டிருக்கும். வானொலியில் கே.எஸ். ராஜா வெள்ளித்திரை விருந்து வைத்துக்கொண்டிருப்பார். சித்தப்பாவுடன் போய் சாந்தியில் ‘மாடிவீட்டு ஏழை’, வின்சரில் ‘அன்பே வா’, மனோகராவில் ‘மீண்டும் கோகிலா’ ராஜாவில்‘மூன்றாம் பிறை’, ராணியில் ‘டிக்…டிக்…டிக்’ பார்த்ததாகச் சின்னதாய் நினைவு இருக்கிறது.

அரிசி ஆலையின் நெல் காய விடுவதற்கான பெரிய சீமெந்துத் தளத்தின் ஓரத்தில் எங்களுக்கு சிறியதாய் ஒரு வீடு வழங்கப்பட்டிருந்தது. அந்தத் தளத்தில் எப்படி வேண்டுமானாலும் சைக்கிள் ஓடிப் பழகலாம். அவ்வளவு பெரியது. வலதுபக்கம் உள்நுழையும் ஒழுங்கையை மதில் மறைத்திருக்கும். வீட்டுக்குப் பின்னால் புளியமரம். கூரைக்கு ஏறிவிட்டால் புளியம்பழம் தின்று தீர்க்கலாம். வீட்டின் இடது பக்க ஓரத்தில் முருங்கை மரம். காயாகவும், கீரையாகவும் பறித்துவந்து ‘அம்மா’ கைப்பட சமைத்த உணவு யாழ்ப்பாண வீட்டின் மறக்க முடியாத அனுபவங்கள்.

லீவு முடிந்து திரும்பவும் கிளிநொச்சிக்குப்போய் பள்ளிக்குப் புறப்படுகையில் கண்களில் கண்ணீர் முட்டும் பாடசாலைக்குப் போக தயக்கமாக இருக்கும். மலையகத்தில் சிங்களப் பள்ளிக்குப் போகும்போது கூட இப்படித் தயங்கியது இல்லை.

நான் சிங்களப் பாடசாலையில் இருந்து வந்தவன். எனக்கு வகுப்பறையின் ‘டெக்னிக்கல் டேர்ம்ஸ்’ எல்லாம் தமிழில் வராது. ஆனால் தமிழ் பேசுவேன், வாசிப்பேன், படிப்பேன். உதாரணமாக ‘அழிறப்பர்’ என அங்குள்ள மாணவர்கள் சொல்ல, எனக்கு ‘ம(க்)கனே’ என்றுதான் வாயில் வரும். இரண்டுக்கும் அழிப்பான் என்றுதான் பொருள். ஆனால் முன்னையது தமிழ் பின்னையது சிங்களம் என்பதுதான் பிரச்சினை.

நான் தமிழன். ஆனால் என்னை எல்லோரும் ‘சிங்களவனாகவே’ பார்ப்பதாக உணருவேன். வகுப்பறையில் நான் கடைசி பெஞ்சில் அழுகை முட்ட உட்கார்ந்திருப்பேன். ஒருவன் மாத்திரம் எனக்கு நண்பன். நான் வாழ்க்கையில் மீண்டும் சந்திக்க மாட்டேனா என இன்றுவரை ஏங்கும் நண்பன் ‘நேசகுமார்’. அவன் கண்டி தெல்தெனியா பக்கத்தில் இருந்து ‘வன்செயலில் அடிபட்டு’ வந்திருந்தவன். அவன் தமிழ்ப் பாடசாலையில் இருந்து வந்ததால் அவனுக்கு இந்தத் தமிழ் ‘டெக்னிக்கல் டேர்ம்ஸ்’ எல்லாம் தெரிந்திருந்தது. அவனோடு இருக்கும்போது மட்டும் மனதுக்கு இலேசாக இருப்பதாக உணர்வேன்.

ஒருவாறு ஆண்டிறுதி பரீட்சை வந்தது. அதிக புள்ளி பெற்று முதலாமிடத்துக்கு வந்துவிட்டேன். அடுத்த வகுப்பில் முதல் வரிசையில் இடம் கிடைத்தது எப்படியென்று தெரியவில்லை. இப்போது ‘அழிறப்பர்’ மட்டுமல்ல ‘வெளிக்கிட்டு’, ‘சைக்கிள் உலக்கி’, ‘பேந்து’ என்றெல்லாம் பேசவும் தொடங்கி விட்டேன்.

அந்த நாளிலேயே அங்கு வாழ்ந்த மச்சான் செந்தூரனுடன் சேர்ந்து போய் ‘ஈஸ்வரா’ தியேட்டரில் ரஜினியின் ‘ஆறில் இருந்து அறுபது வரை’ பார்த்ததாகவும் ஞாபகம்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த காலத்தின் ஒரு நாள் பெரும் மழையினால் இரணைமடுக் குளம் உடைந்து பெருக்கெடுத்து ஓட, வட்டக்கச்சிக்கும் கிளிநொச்சிக்கும் இடையேயான பாதையின் ‘பன்னங்கண்டி’ பாலங்கள் காணாமல் போயின.

காலையில் பாடசாலைக்கு போய் விட்டோம் பின்னேரம் வீடு திரும்ப முடியவில்லை. ஊர் மக்களின் பகீரதப் பிரயத்தனத்தில் கட்டிய கட்டுமரத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி வீடு போய்ச் சேர்ந்தோம். பாடசாலை செல்வது அடிக்கடி தடைபட்டது. அப்பா மடகொம்பரை தோட்டத்துக்குப் போனவர் சுகவீனமடைந்ததால் மீண்டும் வடக்கு திரும்புவதில் சிக்கல் வந்தது. அம்மாவும் கிளிநொச்சி வந்து சேர அத்தை வீட்டாரினால் சுமையைத் தாங்க முடியவில்லை.

இப்போது எந்தத் தூரநோக்கும் இல்லாமல் மீண்டும் ‘மலையகம்’ திரும்பி விட்டோம்.
மீண்டும் சண்முகம் மாஸ்டர், சண்முகநாதன் அதிபர், வட்டகொடை தமிழ் வித்தியாலயம். மூன்றாம் வகுப்பில் போனவன் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கு வட்டகொடைக்கே திரும்ப வந்து நின்றேன். அந்தப் பரீட்சையில் சித்திபெற முடியாத அளவுக்கு ‘வீக்’ ஆகியிருந்தேன். இப்போது என் பேச்சில் யாழ்ப்பாண வாசனை அடித்தது. பாக்யலக்ஷ்மி, கோமதி, முத்துலக்ஷ்மி, ஞானாம்பிகை, பவானி, இன்னும்…மணி என பெயர் முடியும் இன்னொரு ஆசிரியை மற்றும் ‘கொத்துரொட்டி’ என பட்டப்பெயர் வைத்து நாங்கள் விளிக்கும் இரத்தினராஜா கணக்குவாத்தி என பல யாழ்ப்பாண ஆசிரியர்கள் வட்டகொடைப் பள்ளியில் பணியாற்றினார்கள்.

பாக்யலக்ஷ்மி டீச்சர் என்னை வைத்து யாழ்ப்பாண பேச்சு வழக்கிலான நாடகம் ஒன்றை வட்டகொடையில் மேடையேற்றினார்கள். அதில் எனக்கு ‘விதானையார்’ பாத்திரம். அசலாக நடிப்பதாக பாராட்டுப் பெற்றேன்.

கொஞ்சநாள் செல்ல மலையகத் தமிழ் மீண்டும் என்னோடு ஒட்டிக்கொண்டது. ஆனால் வட்டகொடைப் பள்ளி ஒட்டவில்லை. பின்பு சித்தப்பா தர்மகுலராஜா அவர் முன்பு படித்த பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் என்னையும் சேர்த்து விட்டார்.

நான் பள்ளியில் சேர்கிறேன். அதிபர் நடராஜா பதவி உயர்வு பெற்று போகிறார். பின்னாளில் அவர் எனக்கு நெருக்கமான போது, எனக்கு ‘புரமோஷன்’ கொடுத்தவன் என சிரிப்பார்.

அங்கும் குகேஸ்வரராஜா (வர்த்தகம்), இருதயநாதன் (தமிழ்), ராஜரட்னம் (கணிதம்), முரளிதரன் (விஞ்ஞானம்), விக்கினேஸ்வரன் (வகுப்பாசிரியர்) என யாழ்ப்பாண ஆசிரியர்கள் இருந்தனர். ஆசிரியர்.ஜி.முரளிதரன் நல்லதொரு கலைஞர். பேராசிரியர் மௌனகுருவின் (தகவலின்படி) ‘மழை’ நாடகத்தைத் தழுவி ‘விடியலைத்தேடும் விழிகள்’ எனும் நாடகத்தை என்னைப் பிரதானமாகக் கொண்டு இயக்கியிருந்தார். தமிழ்மொழித் தினப்போட்டிகளில் தேசிய மட்டம் வரை வந்த நாடகம் அது. தேசிய மட்டப் போட்டியில் கலந்துகொள்ள வந்துகொண்டிருந்த போது கொழும்பு – கண்டி வீதியில் நிட்டம்புவைப் பக்கமான வழியில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தினவுக்கு வைத்த குண்டில் பதற்றமடைந்து திரும்பிவிட்டோம்.

பின்னாளில் பி.பி.தேவராஜ் இந்து கலாசார அமைச்சராக தலைமை வகித்து நடாத்திய தேசிய சாகித்திய விழாவில் அந்த நாடகம் அரங்கேற்றப்பட்டு சிறந்த நடிகராகவும் (பாடசாலை நாட்களில்) தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.

1989ஆம் ஆண்டு ஜே.வி.பி கலவரம். இலங்கைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அந்நிய முதலீடுகளை அழிப்பதாகச் சொல்லி தேயிலைத் தொழிற்சாலைகளை தீயிட்டு கொளுத்திய காலம். ஜே.வி.பி. மலையகத் தொழிலாளர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் எச்சங்கள் என உச்சரித்திருந்தமையும் நினைவுக்கு வருகிறது.

மடகொம்பரையில் இருந்து பூண்டுலோயா பள்ளிக்குச் செல்லும் போது, இடையில் வரும் மடகும்புர காட்டுப்பகுதியில் பலர் கழுத்தில் டயர் மாட்டப்பட்டு எரியுண்டு கிடப்பதை பல தடவை பார்த்திருக்கிறேன். காலையில் பாடசாலை செல்லும்போது எங்கள் மடகொம்பரைத் தோட்டத்துரை (முகாமையாளர்) தர்மராஜா எனும் தமிழர், ஜே.வி.பி.யினரால் தலையில் சுடப்பட்டு வீதியோரத்தில் கிடந்ததை ஊருக்கு ஓடி தகவல் சொன்னதே நான்தான். அவரது கல்லறை இன்னும் ஊர் முகப்பில் சுட்டுக்கிடத்தப்பட்ட இடத்தில் அடையாளமாக உள்ளது.

அதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் மக்கள் கவிமணி சி.வி வேலுப்பிள்ளை அவர்களின் கல்லறை அதே வீதியோரத்தில் உள்ளது. தெற்கில் ஜே.வி.பி பிரச்சினையை உச்சமாகியிருந்த நிலையில் வடக்கில் இந்திய ராணுவத்தை வெளியேற்றிய நிலையில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. பேச்சுவார்த்தைக்கு என கொழும்புக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள் புலிகள். வன்னியே பாதுகாப்பானது போல் உணர்வு மீண்டும் ஏற்பட்டது.

1990ஆம் ஆண்டு க.பொ.த சா.த பரீட்சை எழுதிவிட்டு மீண்டும் வன்னிக்கு உயர்தரம் படிக்கவென கிளம்பியாயிற்று. இப்போது நான் மட்டும். இலங்கையில் 13ஆவது சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு பல மாற்றங்கள் நடந்து இந்தியப் படைகளும் வெளியேறியிருந்த காலம் அது. இப்போது நான் சென்று சேர்ந்த இடம் விஸ்வமடு. அங்கு ஓர் அத்தை குடும்பமும், பெரியப்பாவும் இருந்தார்கள்.

அத்தை வீட்டில் தங்கியிருந்து முரசுமோட்டையில் அல்லது கண்டாவளையில் உயர்தரம் படிக்கலாம் என எண்ணியிருந்தேன். விஸ்வமடுவில் எங்களுக்கு காணியும் இருந்தது. விடுமுறையில் மாமாவின் விவசாயத்துக்கு உதவிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது துவக்குகளுடன் நடந்த செல்லும் இயக்கப் போராளிகளை கண்டிருக்கிறேன்.

ஒரு நாள் காணிக்கு சைக்கிளில் போய்க்கொண்டிருந்த போது ஒழுங்கை வழியில் அகப்பட்ட முச்சந்தி ஒன்றில் எந்தப்பக்கமும் போக முடியாதவாறு துப்பாக்கித்தாங்கிய மூன்று சைக்கிள்களால் முடக்கப்பட்டேன். எனக்கு உதறல் எடுத்தது.

‘என்ன பெயர்? எங்கு வந்திருக்கிறாய்? எதற்காக வந்திருக்கிறாய்? ஈ.பியுடன் தொடர்பு உண்டா?’ இப்படி ஏகப்பட்ட கேள்விகள். உச்சி வெயிலில், முச்சந்தியில் நின்று பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். ஏற்கனவே இவர்கள் வீதியில் உலாவுவதைக் கண்டுள்ளதனால் அவர்கள் புலிகளென ஊகிக்க முடிந்தது. அவர்கள் விசாரணை முடிந்துவிட்டதாக நினைத்த சில நேரங்களின் பின்னர், ‘சரி போகலாம்’ என வழிவிட்டார்கள்.

சைக்கிளை உலக்கினேன் பயத்தோடும், பதற்றத்தோடும் காணிக்குப் போனேன். பின்னர் வீட்டுக்குப் போனேன். மாமாவிடம் விடயத்தைச் சொன்னேன். ‘அப்படியா?’ என நிதானமாகக் கேட்ட மாமா, ‘வெளிக்கிடு ஒரு இடத்துக்குப் போகலாம்’ என உத்தரவிட்டவராக அவசரமாய் வெளியே புறப்பட்டார். மலையகத் தொழிற்சங்கத் தலைவர் ஏ.அஸீஸ் அவர்கள் காலமான செய்தி வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

வெளியே சென்று வந்த மாமா ஆயத்தமாய் இருந்த என்னை அவரது சைக்கிளில் ஏற்றினார். வேகமாக மிதிக்கத் தொடங்கினார். நான் படிக்க நினைத்தாக எண்ணிய கண்டாவளை, முரசு மோட்டைப் பள்ளிக் கூடங்கள் எனது சைக்கிள் பயணத்தில் கடந்து போகின்றன. எங்கே போகிறோம் என தெரியவில்லை. என்னைப் பற்றிய சரியான தகவல்களைப் பதிவு செய்ய ‘பெரிய இடத்துக்கு’ மாமா அழைத்துச் செல்கிறார் என்ற கற்பனையோடு ‘சைக்கிள் பாரில்’ உட்கார்ந்து நானும் சப்போர்ட் மிதி கொடுக்கிறேன். அவர் ஒன்றும் பேசுவதாயில்லை. ‘பெரியதுகள் போய்விடு முன் நாம் போய் சேர்ந்து விடவேண்டும்’ என்ற நினைப்பில் மாமா சைக்கிள் மிதிப்பதாகவே எனக்குப் பட்டது. பரந்தன் ரயில்வே நிலையத்துக்கு முன் வந்து இறங்கிய பின்னர் தான் பேசினார்.

‘உனக்கு யாருடனும் தொடர்பில்லை என அவர்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டால் உனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் உங்கள் குடும்பத்துக்கு அதுவே பிரச்சினையாகி விடும். நீ வீட்டுக்கு ஒத்தையாள். எனக்கு தெரிந்த ஒரே வழி, உன்னை ஊருக்கு அனுப்புவதுதான்’ என்றார். அப்போதுதான் அவர் போய்விடும் என அவசரப்பட்டது ‘யாழ்தேவி’க்காக என்பது புரிந்தது எனக்கு.

முன்னர் படித்த சென்.திரேசா பாடசாலையை ரயிலில் இருந்தவாறே பார்த்துக் கொண்டு பொல்காவலை வழியாக வட்டகொடை வந்து சேர்ந்தேன். வந்து சேர்ந்து ஒரு மாதத்தில் இரண்டு பொலிஸ் நிலையங்கள் மடகொம்பரை வீட்டை சுற்றிவளைத்தது தனிக்கதை. ஆனால் அன்று என்னைப் பொல்காவலையில் இறக்கி விட்டுப்போன ‘யாழ்தேவி’ இன்றுவரை மீண்டும் யாழ்ப்பாணம் போகவில்லை என்பதுதான் தற்போதைய கதை. வவுனியா, தாண்டிக்குளம், என படிப்படியாக இப்போதுதான் கிளிநொச்சிப் போக எத்தணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த யாழ்தேவியின் மீள்பயணத்தை முந்திக்கொண்டு நான் இன்று பஸ்ஸில் யாழ்ப்பாணம் போகிறேன் என்பதால்தான் எனக்குள் இத்தனைப் பதற்றம், பரபரப்பு.

மாமா கூட எத்தனை ‘தூரநோக்குடன்’ செயற்பட்டிருக்கிறார். மாமா சொன்னதைக் கேட்டு அன்று வந்தவன் இன்று இருபத்து மூன்று வருடங்களுகுப் பின் வன்னியைக் கடந்து 27 வருடங்களுக்குப் பின் யாழ்ப்பாணத்துக்குப் போகிறேன்;. இந்த கால இடை வெளியில் வன்னியில் பெரியப்பா மகன் தவராஜா அண்ணன் தற்கொலை செய்து கொண்டிருந்தான். என்னைப் படம் பார்க்கக் கூட்டிப்போன அத்தை மகன் திருச்செந்தூரன் ‘நித்தி’ யாகப் புதைக்கப்பட்டிருந்தான். அத்தை மகள்- மச்சாள் சாந்தினி ‘பூங்குயிலாக’ விதைக்கப்பட்டிருந்தாள். இவர்கள் எல்லாம் மடகொம்பரை மண்ணில் பிறந்து கைக்குழந்தையாக வன்னிக்கு தூக்கிச் செல்லப்பட்டவர்கள் என்பதை யாரறிவார்? ‘ரெயிலராக’ தொழில் செய்த பெரியப்பா மெய்யர் (தங்கையா ரெயிலர்) இறுதிகட்டப் போரில் மக்களை வெளியேறுமாறு கோரப்பட்டபோது தனது தையல் மெஷின் மேல்பாகத்தை மட்டும் தூக்கிக்கொண்டே ஓடிவந்து, அதையும் தூக்க சக்தியில்லாமல் போட்டுவிட்டு வந்த துக்கத்திலேயே நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். ‘அருணாசலம்’ முள்வேலியில் இருந்து அவரை மீட்டெடுத்து வைத்தியம் பார்த்தும் வெற்றியளிக்காமல் இறந்துபோக அவர் பிறந்த மடகொம்பரை மண்ணிலேயே மீண்டும் புதைத்தோமே… இதையெல்லாம் என் மனதில் சுமந்தபடி எப்படி பதற்றமின்றி பயணப்படுவது?

நண்பர் லெனினுடன் உரையாடிக்கொண்டே பயணம் தொடர்ந்தது. இடையில் அவர் உறங்கிவிட்டாலும் எனக்குள் இருந்த தவிப்பு உறக்கத்தை ஏற்க மறுத்தது. சுவடுகளைப் பார்த்தவாறே பயணித்தேன். இப்போதைக்கு வன்னிக்குள் இறங்குவதில்லை என்ற முடிவோடு யாழ்ப்பாணத்திற்கு. இடையிடையே பஸ் ஓட்டுனரும் ‘மரண’ பயத்தைத் தரத் தவறவில்லை. சில இடங்களில் அவர் மீது கோபப்பட்டாலும் ‘புதிதாக’ திரும்பிப் போகும் எனக்குள் சில கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொண்டேன்.

பஸ்ஸில் ஊடகவியலாளர்கள் தேவகௌரி, துஷ்யந்தினி மற்றும் கேஷாயினி உடன் பயணித்தாலும் அதிகம் உரையாடக் கிடைக்கவில்லை. அதற்குப் போதுமான நேரடியான அறிமுகமும் அப்போது இருக்கவில்லை.
grope
யாழ்ப்பாணத்தில் இறங்கி நேரடியாக ‘இலக்கியச் சந்திப்பு’ நடக்கும் இடத்திற்குச் சென்றது முதல் அடுத்த நாள் சந்திப்பு முடியும் வரை அங்கிருந்து எங்கும் அசையவில்லை.

இரண்டாவது நாள்; காலையில் முதல் அமர்வில் நான் ‘மலையகக் கவிதை இலக்கிய செல்நெறியும்- மலையக தேசியமும்’ எனும் தலைப்பிலும், மாலையில் இறுதி அமர்வில் ‘மலையக தேசியம்- ஒரு பதிகை’ எனும் தலைப்பில் நண்பர் லெனின் மதிவானமும் உரையாற்றினோம். இரண்டாம் நாள் இரவே புறப்படும் எங்கள் திட்டம் தோல்வியடையுமாப்போல் தெரிய மேலதிக ஒரு நாளைக்குமாக பயணத்தை ஒத்திவைத்தோம்.

இரண்டாம் நாள் இரவு தங்குவதற்காக இடம் மாறி வந்தோம். நட்போடு ஆரம்பித்த நண்பர்கள் அசுரா, தேவதாஸ் அன்போடு அரவணைத்துக் கொண்டார்கள். தங்குமிடம் போகும் முன் ராகவன் – நிர்மலா வீட்டுக்குச் சென்றோம். மேசை மீது ஏறியமர்ந்த தேவதாஸ் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் மலைநாட்டுப் பாடலைப் பாட, நிர்மலாவும், சுமதியும் திருமதி. மீனாட்சியம்மாள் நடேசய்யர் பாடலைப் பாட கச்சேரியே ஆரம்பித்து விட்டது. கோவை நந்தன், அசுரா, ராகவன், லெனின் ஆகியோர் கைதட்டி உற்சாகமூட்ட பலரும் அதிகம் கேட்டிராத மலையகக் ‘கானா’ மன்னன் வட்டகொடை கபாலி செல்லனின் (அவர் இறந்து அப்போது ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை) தோட்டப்புற பாடல்களை நான் பாடினேன்.

‘நாடு… எந்த நாடு…
நம்பி வாழ… சொந்த நாடு…
அந்தரத்தில் வாழச் சொல்லி அனுப்பியிருக்கான் சிட்டிசன் கார்டு’, …..

‘ஏய்க்கிறான் ஆளு ஏய்க்கிறான்.. எங்கள ஏமாளி என்று சொல்லி ஏய்க்கிறான்…’
போன்ற துள்ளிசைப் பாடல்கள் நிர்மலா உள்ளிட்ட நண்பர்களை ஆட்டமே போடவைத்தன. பழகுவதற்கு இனிமையானவராக ஒரு தாய்மையின் ஸ்தானத்தில் இருந்து என்னை வாழ்த்தினார் நிர்மலா.

இலக்கிய சந்திப்பில் உள்ளடங்காது இரவில் இயல்பாக எழுந்த இசை அரங்கு மலையகப் பாடல்களை மாத்திரமே கொண்டிருந்தமை எதேச்சையாக நடந்த ஆச்சரியம். இரவு உணவை முடித்துக் கொண்டு இரவு தங்குவதற்கு இன்னுமொரு வீட்டுக்குச் சென்றோம்.

அங்கே, காகம் – பதிப்பக நண்பர்கள் இத்ரிஸ், இர்பான், இம்தாத் சகோதரர்களுடன் நவாஸ் சௌபி, ஸ்டாலின் ஞானம், விஜி, கவியுவன், தம்பிகள் ஜேசு, திலீபன் ஆகியோருடன் கலகலப்பான கதையாடல்களுடன் இரவு கழிந்தது.

நண்பர் இத்ரிஸ் மத்தியில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்து வழிநடத்த நாங்கள் வட்டமாக பாயில் அமர்ந்து விவாதிக்க இலக்கியச் சந்திப்பின் இன்னுமொரு அமர்வானது அந்த இரவு.

மூன்றாம் நாள் காலை. இருபத்துமூன்று வருடங்களுக்குப் பிறகு கப்பியிழுத்து கிணற்று நீர்க் குளியல். சில்லென்று இருந்தது காலையுணர்வு. நண்பர்களோடு காலையுணவு.

யாழ்ப்பாணத்தைச் சுற்றிப்பார்க்கப் போவதாக நானும் லெனினும் கிளம்பினோம். நண்பர் லெனினிடம் என் திட்டத்தைச் சொன்னேன். ‘ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் எங்கு போக வேண்டுமோ அங்கு போவோம்’ என ஒத்துழைத்தார்.

காங்கேசன்துறை பஸ்ஸில் ஏறி ‘தாவடியில் இறக்கிவிடுங்க தம்பி’ எனச் சொன்னேன். சொன்னபடி செய்தான் கண்டக்டர் தம்பி. 27 வருடமாக என் மனக்காட்சியில் இருந்த நினைவுகளை வைத்துக்கொண்டும், பாதையோரத்தில் இருந்த கராஜில் ‘அந்த அரிசி ஆலையை’ விசாரித்துக் கொண்டும் அந்த ஒழுங்கைக்குள் நடக்கிறோம். உச்சி வெயில் வேறு.

அந்த ஆலையின் ‘கேட்’டை அடைந்ததும் ஒழுங்கை முடிந்து விடும். அந்த எல்லைக்குள் போனதும் எனக்குள் ஒரு தவிப்பு. லெனின் என் உணர்வுகளைப் புரிந்துகொண்டவராகத் தெரிந்தார்.
நான் சைக்கிளோடிய தளம் ஆங்காங்கே காட்டுச் செடி மண்டிக்கிடக்க, இங்கேதானே வீடு இருந்தது என நெருங்கிப் பார்த்தேன். வீடு இருந்த அடையாளங்களாக அத்திவாரம் கொஞ்சம் தெரிந்தது. முட்டிய கண்ணீரை வெளியே வரவிடாமல் பார்த்துக்கொண்டேன். ஆலைக்குச் சென்று விசாரித்தால் "அவர்கள் எங்களுக்கு விற்று கணகாலம் ஆச்சுது" என்று சொன்னார்கள்.

நாங்கள் வாழ்ந்த வீட்டு பிரதேசம் தளமும் கூறுபோட்டு விற்கப்பட்டிருந்தது. (ஆசையாய் நான் குளிக்கும்)‘தண்ணீர் தொட்டி எங்கே?’ எனக் கேட்டேன்.. ‘அதோ…’ என திசை காட்டினார் புதியவர். படம் எடுத்துக்கொள்ளலாமா என்றேன். முதலாளியைக் கேட்டுச் சொல்வதாகச் சொன்னார். வேண்டாமென நாங்களே தவிர்த்துவிட்டு, வீடும் தளமும் இருந்த அடையாளத்தோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

அந்த நிமிடங்களில் பழைய நாட்களின் அத்தனை நினைவுகளையும் தவிர வேறொன்றும் மனதில் எழவில்லை.
1984 ஆக இருக்கலாம். 10-11 வயதுப் பையனாக ஓடித் திரியும் நான். விடுமுறையில் வந்து அம்மாவுடன் நிற்பதென்றால் தனிச் சந்தோஷம். தோட்டத்தில் வாளி கொண்டுபோய் பீலிக்கரையில் தண்ணீர் பிடிப்பது மாதிரி, அரிசி ஆலையில் இயந்திரத்தில் அரிசி கொட்டும்போது, அதனை வாளியில் பிடிப்பதில் பெரும் ஆனந்தம் எனக்கு. அப்படி பிடித்து வரும் சூடான அரிசியைக் கொண்டு சோறாக்கிச் சாப்பிட்ட காலம் அது. அடிக்கடி கடைக்கு ஓடுவதில் சின்ன சந்தோஷம்.

ஒரு நாள் கடைக்குப் போன என்னிடமும் கூட்டமாய் சைக்கிளில் போன அண்ணாமார்கள் சில துண்டுப்பிரசுரங்களை கொடுத்து விட்டுச் சென்றிருந்தார்கள். அது என்ன ஏதென்று தெரியாமல் கையில் வைத்துக் கொண்டு மிளகாய்த்தூள் வாங்குவதற்கு சந்தியில் இருந்த கிரைண்டிங் மில்லில் நின்றிருந்தேன். பட…பட… வென ஒரே சத்தம். சனம் அலறியடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தது. வீதியை எட்டிப் பார்த்தேன்.

துண்டுப் பிரசுரம் விநியோகித்தவர்களைத் தேடி ஆமி வெறியாட்டம் ஆடிவருவதாகக் கூறி ‘ஓடடா தம்பி வீட்டுக்கு’ என்று என்னை விரட்டினார் கடையுரிமையாளர் வீரப்பா தாத்தா. வீதியைத் தாண்டும் போது மாடு ஒன்று சூடுபட்டு சுருண்டு விழுவதைக் கண்ணுள் வாங்கியவாறே ஒழுங்கைக்குள் ஓட்டமெடுத்தேன். வளவு ‘கேட்டை’ இறுக்கி தாழிட்டுப் பூட்டிவிட்டு, மூச்சு வாங்க அம்மாவிடம் ஓடி நடந்ததைச் சொன்னேன். உள்ளதைச் சுருட்டிக் கொண்டு அம்மாவும் நானும் வெளியே வந்தோம். அப்பா சற்றே உள்ளே அமைந்த ஆலையில் வேலை. ஆலை பக்கத்தில் உள்ள முதலாளி வீட்டில் இருந்து அவரது அம்மா வெளியே வந்தார். நாங்கள் கலவரப்படுவதை அவதானித்தார். நான் அவரிடம் நடந்ததை சொல்லிக் கொண்டிருக்கும்போது நான் இறுகப் பூட்டிய கேட்டை கூட்டமாக வந்த ஒரு குடும்பம் பதற்றத்தோடு தட்டியது.

"ஆமி.. சுட்டுக் கொண்டு.. வாரான்… எங்களை காப்பாத்துங்கோ…கேட்டைத் திறவுங்கோ…" என அலறியது. கணவன், மனைவி, பிள்ளைகள் என ஒரு ஐந்தாறு பேர் இருக்கும். அரிசி ஆலையை வந்தடையும்; ஒழுங்கையின் ஒரு பக்கத்தில் அமைந்துள்ள குடிசைகளில் வாழும் குடும்பங்களில் ஒன்று என நான் அடையாளம் கண்டவனாக கேட்டைத் திறக்க ஓடினேன். "தம்பி… திறவாதையோடா….திறவாதையோடா…’" என என்னைத் தடுத்தார் முதலாளி(யின்) அம்மா.

வந்தவர்கள் துடிக்கிறார்கள். அழுகிறார்கள். கெஞ்சுகிறார்கள். ஆனால் முதலாளி- அம்மாவோ கடிந்து கொள்கிறார், என்னை அதட்டுகிறார். எனக்குக் காரணம் புரியவில்லை. சூடுபட்டு சுருண்டுவிழுந்த மாட்டைக் கண்ணால் பார்த்து வெருண்டு போயிருந்த எனக்கு முதலாளி அம்மாவின் அதட்டல் இன்னும் பயத்தைக் கொடுத்தது. எனது அம்மா என்னைக்கிட்டவாக இழுத்து அணைத்துக் கொள்கிறார். நான் கேட்டைத் திறப்பதிலேயே குறியாயிருந்தேன். சூட்டுச் சத்தம் அண்மித்து கேட்கத் தொடங்கியது…
ஓடிவந்த குடுமபத்தின் ஒரு மனிதர், மேல் சட்டையில்லாது சாரத்தை தொடை வரை மடித்துக்கட்டி இடுப்பில் சின்னக்கத்தியும் சொருகியிருந்தார்.

கறுத்த உயர்ந்த அந்த மனிதர் கேட்மீது ஏறி உள்ளே பாய்ந்தார். அவரது முறுக்கேறிய பலம் கொண்ட கை இழுத்த ஓர் இழுவைக்கே பூட்டு பிளந்தது. கேட் திறந்தது. இப்போது அதிக எண்ணிக்கையானோர் நாங்கள் நின்றிருந்த ஆலை வளவுக்குள் நுழைந்தனர். அவர்கள் கையில் அகப்பை, கத்தி, சமையல் சாமான்களும், சிறுசுகள் கையில் உருட்டி விளையாடிய சைக்கிள் டயர்களுமாகக் கூட்டமாக உள்ளே வந்தார்கள். நின்றது நிற்க ஓடிவந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது ஆமியின் சத்தம் குறைந்திருந்தது. இரண்டு மூன்று வளைவுகள் கொண்ட அந்த ஒழுங்கையில் ஆமி இரண்டாவது வளைவைத் தாண்டி உள்ளே வரவில்லை. வெறிச்சோடிக்கிடந்த வீடுகளைப் பார்த்துவிட்டு மீண்டும் வீதிக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் உள்ளே வந்த குடும்பத்தினர் ஆலையின் எல்லையெங்கும் பறந்தனர். முதலாளி அம்மா இரண்டு கையாலும் தலையில் அடித்துக் கொண்டார்.

மலையகத் தோட்டங்களில் தொழிலாளர்கள் மத்தியில் ‘ராங்கிப்’ பேசிக் கொள்வதால் சிறுவர்களும் சாதாரணமாகப் பேசுவார்கள். அம்மா என்னை அந்தச் சூழலில் இருந்து தவிர்த்தே வளர்த்து வந்தார். ஆனால் உள்ளே வந்த உயர்ந்த, கறுத்த மனிதர் முதலாளி அம்மாவை நெருங்கி… என்னடி சாதி… ‘………’ சாதி… என இன்னோரன்ன மொழியில் திட்டித்தீர்த்தார். அவர் பேசிய ராங்கி சூழலில் இருந்து அம்மாவால் என்னைத் தவிர்க்க முடியவில்லை. தடுக்கவும் முடியவில்லை. நானும் அந்த ராங்கியை அன்று விரும்பி ரசித்தவனாகவே இன்று உணர்கிறேன். ஆலையில் இருந்து வெளியே வந்த அப்பா முதல் அனைத்து வேலையாட்களும் நாங்களுமாக ஒரு நாடகம் மாதிரி அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தோம்.

அப்போது எனக்கு அதிகம் புரியாத அன்றைய நாளின் காட்சிகள் இலக்கிய சந்திப்பில் எழுத்தாளர் தெணியான், சீனியர் குணசிங்கம், அகல்யா, தேவதாஸ், ரெங்கன் தேவராஜன், ஏ.ஸி.ஜோர்ஜ் போன்றோரின் உரைகளினூடும் அமர்வின் இணைப்பாளராகவிருந்த வேல்தஞ்சனின் படபடப்பில் இருந்தும் அதிகமாகவே புரிந்தது. சிங்களப் பாடசாலையின் ‘சரத் சேர்’ இப்போதும் என் கண்ணுக்குள் நிழலாடிச் செல்கிறார்.


நினைவுகளில் மீண்டவனாக நானும் நண்பர் லெனின் மதிவானமும் திரும்பவும் கே.கே.எஸ். வீதி நோக்கி நடந்தோம். யாழ்.நூலகம், நல்லூர் கோயில் இரண்டுக்கும் சென்றோம். உள்ளே போகக் கிடைக்கவில்லை. பௌர்ணமி நாளில் யாழ்.நூலகம் மூடியிருந்தது. நல்லூர் பூஜை நேர முடிவால் பூட்டியிருந்தது. ஆனால் இலங்கையில் பௌர்ணமி நாளிலும் தங்களது திறமையை பையில் சுமந்தபடி வந்த தேவதாஸ், அசுரா, கோவை நந்தனுடன் ராகவன்-நிர்மலா, சுமதி சிவமோகன், வாசுகி ஆகியோரின் புதிய வீட்டைச் சென்றடைந்தோம்.

முதல் நாள் இரவு கச்சேரி நடாத்திய பழைய வீடு அவர்களது சகோதரி ‘ராஜினி திராணகம’ நினைவகமாக பராமரிக்கிறார்கள் என்பது தெரியவந்தது. வாசலில் அமர்ந்து கலகலப்பாக இருந்துவிட்டு முதல்நாள் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தோம். இரண்டு நாளைக்கு மாத்திரம் ஆடைகள் கொண்டுபோயிருந்த நாங்கள் மூன்றாம் நாள் பயணத் திரும்புதலின்போது நண்பன் அசுரா தனது பிரான்ஸ் பயணப் பொதியில் இருந்து வெளியே இழுத்துத் தந்த புதிய ஷேர்ட்டுகளை அணிந்து கொண்டோம்.

யாழ்ப்பாணத்துடன் ஒரு புதிய உறவு ஏற்பட்டிருப்பதாய் உணர்ந்தேன். பஸ் ஏறும் வரை கூடவே வந்து வழியனுப்பிய நண்பர்கள் அசுரா, தேவதாஸ் ஆகியோருடன் உணர்வுகலந்து விடைபெற்றுக் கொண்டு, ஒடியல், கருவாடு, பருத்தித்துறை தட்டைவடை, இடியப்பத் தட்டு, மோர்மிளகாய், பனங்கட்டி என ஒரு குட்டிச் ‘ஷொப்பிங்’ ஒன்றையும் முடித்துக் கொண்டு கொழும்பு பஸ்ஸில் ஏறிவிட்டோம்.

அவ்வப்போது சட்டைப் பைக்குள் இருந்து கொண்டு நண்பன் அசுரா பகிடி விட்டுக்கொண்டிருப்பது போன்ற உணர்வு அடிக்கடி வந்துபோனது.

அடுத்த நாள் காலை ஆறுமணிக்கு வீடு வந்து சேர்ந்ததும் அம்மா கேட்ட முதல் கேள்வி:
"நம்ம இருந்த யாழ்ப்பாண வீடு எப்படிப்பா இருக்கு……?"
(முற்றும்)
25.7.2013
நன்றி:- ‘ஜீவநதி’