மனங்கொண்ட படைப்பாக வந்திருக்கும் மக்கத்துச் சால்வை - மண்ணும் மணமும்

மல்லியப்புசந்தி திலகர்

நம்பிக்கையின் நிழல் என்ற தலைப்பில், மக்கத்துச் சால்வை வாசகர் வட்டம் எழுதிய அறிமுகக் குறிப்புடன் தொடங்குகிறது எழுத்தாளர் எஸ். எல்.எம். ஹனிபா நினைவுக் குறிப்புகள் அடங்கிய 'மக்கத்துச் சால்வை மண்ணும் மணமும்' எனும் தொகுப்பு நூல். இந்த நூல் தொகுப்பின் நோக்கம் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் அடுத்த கட்ட செயற்பாடுகள் பற்றியும் கூட விபரிக்கும் அறிமுகக் குறிப்பு நூலுக்குள் வாசகனை வரவேற்கிறது.

"உனது சுயமே உனக்குச் சொந்தம். அன்பாக சக மனிதனை மதித்து வாழ்வோம்.அடக்குமுறைக்கும் ஆணவத்திற்கும் பயந்து வாழ்வதைவிட அதை எதிர்த்து மடிதல் மேலானது" எனும்எஸ்எல்எம் ஹனிபாவின் பிரகடனத்துடன் அவரது அழகிய வண்ணப்புகைப்படம் பிரசுரம் பெறுகிறது.

அவரது வாழ்வும் பணியும் குறித்த நீண்ட கட்டுரையை ஓட்டமாவடி அறபாத் எழுதி நூலுக்குள் வாசகரை அழைத்துச்செல்கிறார். தேசிய மட்டப் போட்டிகள் வரை கலந்துகொண்ட குறுந்தூர ஓட்மவீரர் எஸ்எல்எம் என்பது பலருக்கு புதிய செய்தியாக இருக்கலாம். 1987 ல் வந்த மாகாண சபையின் உறுப்பினராக அறியப்பட்ட எஸ்எல்லெம் 1965 லேயே அரசியல் மேடை ஏறியவர் என்பதுவும் அப்படியே. தாவரவியல், விலங்கியல் தொடர்பான அவரது ஆர்வம் ஆலோசனை சேவை இயற்கையை நேசிக்கும் நெஞ்சம் என்பனவும் இந்தக் கட்டுரையில் பதிவாகிறது. பேராசிரியர் எம். ஏ. நுஹ்மானின் கட்டுரை யில் "ஹனிபா ஒரு கூர்மையான அவதானி, நிறைந்த அனுபவம் உடையவர். இந்த வயதிலும் அவருடைய நினைவாற்றல் நான் பொறாமைப்படக் கூடிய அளவுக்கு அலாதியானது. அவருடைய எழுத்தாற்றலும் அப்படித்தான்" என மனந்திறக்கிறார்.

வேதாந்தி ( சேகு இஸ்இதீன்), "ஒரு அடக்கமான அறிஞனின் ஈடுபாடு ஆன்ம தரிசனத்தை தேடுவதாயிருக்கும். ஹனிபா அதற்கு வேறானவர் இல்லை" என குறிக்கிறார்.கரிசல் காட்டுக்கு ஒரு கி.ராஜநாராயணன் என்றால் மட்டக்களப்புக்கு ஒரு எஸ்எல்எம், என்கிறார் வைத்தியரும் இலக்கியவாதியுமான எம்.கே. முருகானந்தன்.

பேராசிரியர் அ. ராமசாமி (தமிழ்நாடு ) யின் நினைவுகள ஒரு பயணக்கட்டுரையாக பதிவாகி, இறுதியில் " நேராக ஓட்டமாவடியில் வந்து இறங்கி அவர் தோட்டத்தில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி, ஆற்றில் குளித்து மீன் சுட்டுச் சாப்பிட வேண்டும். அவரது மனதில் இருந்த அழகுப் பெண்களைப் பற்றிய கதைகளையும் கேட்க வேண்டும்" என எல்லோர் மனது ஆசையையும் எடுத்துக் கூறி உள்ளார்.

பாரம்பரியமும் சரித்திரமும் கொண்ட ஒரு மனிதக் குடித்தொகையின் எழுச்சி, வீழ்ச்சி, வெற்றி, தோல்வி, குடியகல்வு, குடிப்பெயர்வு போன்றவற்றின் தகவல்களை அறியக்கூடிய இறுதி எச்சம் இவர் மட்டுமே என மு.கா.மு. மன்சூர் எழுதுகிறார்.

ஒளிபரப்பாளரான என். ஆத்மா, எஸ்எல்எம் உடனான தனது முதல் சந்திப்பு முதல் தனது நேரடி ஒளிபரப்புகளில் எஸ்எல்எம் தொடர்ச்சியாக கலந்து கொண்டதுவரையான பல சுவாரஷ்யமான பொழுதுகளை எண்ணிக் களிக்கிறார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ( தமிழ்நாடு ) மக்கத்துச் சால்வை எனும் தலைப்பிலேயே எழுதியுள்ள கட்டுரையில் "கிழக்கிலங்கைப் படைப்பாளிகள் பலருக்கும் அவர் ஞானத்தந்தை" என்றும் குறிக்கிறார்.

விரிவுரையாளர் அஷ்ஷெயக் எம். டி.எம். றிஸ்வி எஸ்எல்எம் "எதனைக் பேசினாலும் எதனை எழுதினாலும் இங்கிதம் பேசுபவர்" எனக் குறிப்பிடுகிறார். 'எஸ்எல்எம் எழுத வந்த கதை' எனும் தலைப்பில் இந்தக் கதைசொல்லியின் கதையைப் பதிவு செய்கிறார் பேராசிரியர் செ. யோகராசா.

எஸ். எல். எம். ஹனிபா வினது அரசியல், தொழில், ஆன்மீகம், இன நல்லுறவு செயற்பாடுகள் என பல பக்கங்கள் பற்றியும் குறிப்பிட்டு எழுதி உள்ளார் கலாசார உத்தியோகத்தர் ஏ. எல். பீர்முஹம்து. 'எஸ்எல்எம் எனது மாணவன்' என அவரது ஆசிரியர் ஏ. எம். அப்துல் காதர் சிறு வயது முதலான அவரது வாசிப்புப் பழக்கம் கற்பனையற்ற கதைகள் பற்றியும் விபரிக்கிறார். 'நிலம் மணக்கும் எஸ்எல்எம்மின் கதை வெளி' எனும் தலைப்பில் றமீஸ் பர்ஸான், எஸ்எல்எம் சிறுகதைகளை மதிப்பீடு செய்கிறார். வி. ஏ. ஜுனைத் எழுதியுள்ள பதிவில் லா.சா. ராவின் கதைகளின் மீதான பற்றுதலால் அவரைச் சந்திக்கச் சென்றதோடு அதனை தொடர் கட்டுரையாக பத்திரிகையில் எழுதிய தொடரையும் நினைவுபடுத்துகிறது.

எழுத்தாளர் நோயல் நடேசன் " பார்த்தசாரதியாக எஸ்எல்எம் ஹனிபா" எனும் தலைப்பில் இரண்டு பாகங்களாகவும், எஸ்ஸெல்லமும் நானும் எனும் தலைப்பில் ஜவ்வாத் மரைக்கார் ஒரு நினைவோட்டத்தையும் பதிவு செய்துள்ளார்கள்

ஹனீபா எனும் ஞானத்தந்தை" - இளைய அப்துல்லாஹ், "உங்களோடு இருபது ஆண்டுகள்" நபீல், 'கிராமிய அழகியல்' - சாஜித், 'தேர்ந்த கதைசொல்லி' - சிராஜ்மஷ்ஹூர், 'பெருவிருட்ஷம்' - அனார், எஸ்.எல்.எம் ஒரு முன்னோடியின் சுவடுகள் - கருணாகரன், 'வாழ்வை மீண்டும் வாழ்ந்துபார்த்தல்' - டி.சே. தமிழன், 'மக்கத்துச்சால்வை, அவளும் ஒரு பாற்கடல் தொகுதிகளை முன்வைத்து' - அம்ரிதா ஏயெம், எஸ்எல்எம் மாமா - சப்ரி, நம்முன், கடந்த காலத்தின் வாழ்வும் இறந்த காலத்தின் நிலமும் மனிதர்களும் - எம். பௌசர், எஸ்எல்எம் பற்றி - ஹசீன், இன நல்லுறவுக்கு ஒரு ஆவணம் எஸ்எல்எம்- எஸ். நளீம் என சமகால இலக்கியச் செயற்பாட்டாளர்களின் கட்டுரைகள் சுவாரஷ்யமிக்கவை.

எழுத்தாளர் முருகபூபதி, விரிவுரையாளர் ஏ. எம். றியாஸ் அகமட் ஆகியோரின் கட்டுரைகள் இலக்கியத்தோடு இயற்கை மீது பற்று கொண்ட எஸ்எல்எம் பற்றி பேசுகின்றன.

தமயந்தி ( நோர்வே ) சீவகன் பூபாலரட்ணம் ( லண்டன் ), இளங்கோ, தேவமுகுந்தன், மல்லியப்புசந்தி திலகர் , எம்எச்எம் இத்ரிஸ் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகள் எஸ்எல்எம் உடானான தமது உறவாடலின் ஆழத்தைப் பதிவு செய்வன.SLM Haniffa : An Icon of the Eastern Tamil - Muslim Heartland எனும் ஆங்கிலக் கட்டுரையை MLM Mansoor எழுதி உள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன் ( தமிழ்நாடு ) எஸ்எல்எம் ஹனீபா எனும் தலைப்பில் எழுதி இருக்கும் கட்டுரையில் "நான் சமீபகாலத்தில் அவரைப்போன்ற உயாராற்றல் ஒவ்வொரு கண்மும் பீரிடும் ஒரு மனிதரைப் பார்த்ததில்லை" என பதிவு செய்கிறார். எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தனது கட்டுரையை சுகம் தரும் நினைவுகள் எனும் தலைப்பில் எழுதியுள்ளதோடு எஸ்எல்எம் பற்றிய நினைவுகள் நீண்டவை, சுகமானவை என பதிவு செய்கிறார்.

இத்தகைய சுகமான அனுபவங்களாக எஸ்எல்எம் தனது வாழ்வு நினைவுகளை நினைந்தெழுதியுள்ள ஐந்து கட்டுரைகளுடன் சுந்தர ராமசாமி, செல்வராசா, பித்தன் ஷா, உமா வரதராஜன், சோலைக்கிளி, அன்புமணி நாகலிங்கம், எஸ். பொன்னுத்துரை ( எஸ். பொ) போன்றோர் எஸ்எல்எம்முக்கு எழுதிய கடிதங்களும் தொகுப்பு முழுவதும் விரவிக்கிடங்கும் நிழற்படங்களும் தொகுப்பின் பெறுமதிக்கு வலு சேர்ப்பன.

நிழற்படங்களில் மக்களுக்கு நிகராக மாடுகள், ஆடுகள், மான்களுடன் எஸ்எல்எம் எடுத்துக் கொண்டதான படங்கள் சம அளவில் போட்டியிடுவது எஸ்எல்லத்தின் உள்ளத்தைக் காட்டுகிறது.

ஓவியர்கள் புகழ், றஷ்மி, நளீம்,பிருந்தாஜினி,கோமதி சரவணன் , ஸஜ்ஜாத்,ஏ.எம். சமீம் வரைந்த எஸ்எல்எம்மின் முகத்தோற்றங்களையும் ஈரிஏ ஸஜ்ஜாத் ஒரு பக்கத்தில் தொகுத்தளித்துள்ளார். இத்தனை ஆளுமைகளின் நினைவுப் பதிவுகளுடன் கடிதங்கள், படங்கள், ஓவியங்கள் குறிப்புகள் என ஓரிடத்தில் குவியச்செய்த இந்தத் தொகுப்பில் எஸ்எல்எம்மின் 'கடுகு' சிறுகதையும் சேர்க்கப்பட்டுள்ளது.

இத்தனை உள்ளடக்கங்களையும் கொண்டதாக ஒரு தொகுப்பினைக் கொண்டு வந்து ஓர் இலக்கியவாதியை வாழும்போதே வாழ்த்துவதற்கு பெரும் மனது வேண்டும். அந்த மனங்கொண்ட நல்லிதயங்களின் ஒன்றிணைந்த உழைப்பால் உருப்பெற்றுள்ள 'மக்கத்துச்சால்வை - மண்ணும் மணமும்' , எஸ்எல்எம் ஹனிபா' எனும் மானுடத்தின் வாழ்க்கையின் ஊடாக ஒரு வரலாற்றுப் பதிவு செய்யும் தொகுப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வாசிக்க மட்டுமல்ல வைத்துப் பாதுகாக்கவும் வேண்டிய வரலாற்று ஆவணம் இது.


சுவாரஷ்யம் குன்றாத 'சொல்லத்தவறிய கதைகள்'

- மல்லியப்புசந்தி திலகர்

ஒவ்வொருவருக்குள்ளும் ‘சொல்ல மறந்த கதைகள்’ பல இருக்கும். ‘சொல்லவேண்டிய கதைகள்’ பலவும் இருக்கும். ‘சொல்லத்தவறிய கதைகள்’ கூட பல இருக்கும். இந்த மூன்று வகை கதைகளையும் ஒருவர் சொல்ல முனைந்துள்ளார். அவற்றைச் சொன்னது மட்டுமல்லாது , எழுத்தினாலான அந்தக் கதைகளைத் தொகுத்து நூல்களாக்கியுமுள்ளார். அதில் ஒரு நூல்தான் ‘சொல்லத்தவறிய கதைகள்’.

சொல்லத்தவறிய கதைகளின் சொந்தக்காரர் லெ.முருகபூபதி. தமிழ் இலக்கியபரப்பில் நன்கறிந்த பெயர். அவரது எழுத்தும் வாழ்வும் இலங்கையைக் கடந்து புலம் பெயர்ந்தும் செல்வது. நீர்கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட இந்திய வம்சாவளி தமிழரான லெ.முருகபூபதி அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர்.

ஆனால், அதனைத் தனியே ஒரு தொழிலாக மாத்திரம் கொள்ளாது அதனையே வாழ்வாக்கிக் கொண்டவர். அந்த வாழ்வில் ஒர் அரசியல் அணிசார்ந்தும், ஓர் இலக்கிய முகாம் சார்ந்தும் தன்னை அடையாளப்படுத்தி அமைப்பாக்கச் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவாறே பத்திரிகை துறையில் பணியாற்றியவர்.

பத்திரிகையாளரான நான் நடுநிலைமையில் செயற்படுபவன் என போலியாக பக்கம் சாயாது, இலங்கை இடது சாரி அரசியல் இயக்கச் செயற்பாடுகளிலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகளிலும் தன்னைப் பக்கம் சாய்த்து பத்திரிகை பணி செய்தவர். வீரகேசரி பத்திரிகையில் நீண்டகாலமாக பணியாற்றியவர். முப்பது வருடங்களுக்கு மேலாக அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார். ஆனால் இப்போதும் இலங்கைக் கள நிலவரங்களை மிகுந்த அவதானத்துடன் கவனித்து வருபவர். எழுதியும் வருபவர்.

இவரது எழுத்தில் எப்போதுமே மாறாத ஒன்று அதன் சுவாரஷ்யமும் பலபரிமாணமும். சொல்லத்தவறிய கதைகள் நூலிலும் அந்த இரண்டுக்கும் குறைவில்லை. 2019 ஆம் ஆண்டு மகிழ்(கிளிநொச்சி) பதிப்பக வெளியீடாக வந்த ‘சொல்லத்தவறிய கதைகள்’ நூல்அவரது கைகளினாலேயே அந்த ஆண்டின் இறுதியில் கிடைக்கப் பெற்றது. அப்போது முதல் இப்போது வரை ‘சொல்லவேண்டிய கதைகள்’ பல என்னிடம் இருந்தால், முருகபூபதியின் ‘சொல்லத்தவறிய கதைகள்’ பற்றி இங்கே இப்போது சொல்லலாம் என எழுதுகிறேன்.

இந்த நூலில் இருப்பது இருபது கட்டுரைகள்.அந்த இருபதும் கதைகள். இவை கதைகளா? கட்டுரைகளா? எனக்கேட்டால், கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ள கதைகள் எனலாம். தன் வாழ்வில் தான் சந்திக்க நேர்ந்த மனிதர்கள் பற்றி, சம்பவங்கள் பற்றி கதைகதையாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்த நூலை வாசிக்கும் ஒருவருக்கு முருகபூபதியின் ‘சொல்லமறந்த கதைகள்’ நூலையும் ‘சொல்லவேண்டிய கதைகள்’ நூலையும் வாசிக்க தூண்டுதல் ஏற்படுவது நிச்சயம்.

‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ - பிள்ளைகளை அடித்து வளர்ப்பது முதல் கணவன் மனைவியை அடிப்பது மனைவி கணவனை அடிப்பது என அடி உதை கதைகள் என்றாலும் அதனை இலங்கையில் எவ்வாறு பார்க்கிறார்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் எவ்வாறு பார்க்கிறார்கள் என விபரிக்கும் கதை. ‘மறைந்தவர்களின் தொலைபேசி எண்கள்’ எனது டயறியில் குறித்து வைத்துள்ள தொலைபேசிய எண்கள் ஊடாக தான் ஊடாடிய உறவுகளை நட்புகளை மீட்டுப்பார்க்கும் கதைகள். கைத்தொலைபேசி பாவனைகள் வந்தபிறகு இந்த கட்டுரைக் கதை பல நினைவுகளை எம்முன் நிறுத்துகிறது.

‘பத்துவயதில் ஆடிய கரகாட்டம்’ பால்ய கால அவரது கரகாட்டத்தையும் அதுபோல ஆடி இருக்கக் கூடிய பலரதும் நினைவுகளை மீட்பது. ‘கலவரங்களும் கண்துடைப்புகளும்’ அரசியல் பேசுவது. ‘சிங்கள இலக்கியங்களை தமிழுக்குத்தந்த முஸ்லிம் சகோதர்ர்கள்’ இலக்கியம் பேசுவது. ‘ புத்தகங்கள் என்ன குற்றம் செய்தன’ யாழ்.நூலக எரிப்புடன் கூடியதாக புத்தகம் பற்றி பேசுவது. ‘சொடக்கு மேல சொடக்குப்போடும் தாத்தாமார்’ உறவுகள் பற்றி பேசுவது. ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ யார் யாருக்கு சொல்லலாம் என சொல்லும் கதை.

‘எழுத்துலகில் சனிபகவான்’ பத்திரிகையில் பணியாற்றும் ஒப்புநோக்குனர்கள் பற்றிய கதை. சிரிக்கச் சிரிக்க வாசிக்க பல குறுங்கதைகள் இங்கே உண்டு. ‘சனிக்கிழமையன்று ஜனாதிபதி வெளிநாடு பயணம்’ எனும் தலைப்பை எழுத்துக்கள் குறைவால் ( Letter press அச்சுக்கோர்ப்பு காலத்தில் ) ‘சனியன்று ஜனாதிபதி வெளிநாடு பயணம்’ என கோர்ப்பதற்கு தீர்மானித்து இறுதியில் ‘று ‘ எழுத்தை தவறவிட்டு பத்திரிகையில் அச்சிட்ட கதை.

இப்படி புகையிலை, புகையிலைச் சுருட்டு, சுருட்டு கடைகள் பற்றிய கதைகள், தேங்காய் கதை, திரையரங்குகளின் கதை, பாதணிகள் கதை என பல கதைகள். இவை எல்லாவற்றிலும் தனது வாழ்வனுபவங்களையும் அந்த காலத்து அரசியல் பின்புலங்களையும், அரசியல் பிரபலங்களையும் இணைத்துச் சொல்வதில்தான் கதைகளின் சுவாரஷ்யம் கூடுகிறது. ஜி.ஜி.பொன்னம்பலம் எனும் அரசியல்வாதியின் கழுத்தில் விழுந்த பலநூறு பெறுமதியான் பூமாலைகளுக்கு என்ன ஆனது என எழுதிய அதேநேரம், பல ஆயிரம் பெறுமதியான தங்கமாலைக்கு என்ன ஆனது என எழுதாமலே விடுவது சுவாரஷ்யத்முக்கு இன்னுமோர் உதாரணம்.

‘கங்கை மகள்’ எனும் தனது சிறுகதை பற்றிய கதை, சிங்கள இராணுவத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட ஜேவிபி இயக்கப் பெண்மணியான பிரேமாவதி மனம்பேரியின் கதை. அவளை கதிர்காமத்தில் நிர்வாணமாக வீதி வழியே இராணுவம் இழுத்து வந்த போது கத்தரகம முருகா என்ன செய்து கொண்டிருந்தார் எனும் கேள்வி; எள்ளல்.

எழுத்தாளர் பிரமிள் பற்றிய தகவல்களும் எண்கணித சாத்திரக் கதையும் எனக்குப் புதிது. பிரமிள் படைப்புகளை அறிந்துருந்தும் பிரமிளை இன்னும் அறிய வைத்த கதை இது. ‘திசை மாறிய ஒரு பறவையின் வாக்குமூலம்’ எனது வாக்குமூலத்தை ஒத்ததாகவே இருந்தது.

“நீங்கள் எப்படி இப்படி சரளமாக சிங்களம் பேசுகிறீர்கள்” எனும் கேள்வியை எதிர்கொண்ட, “ஏன் என்று தெரியாது விசாரணை செய்கிறோம்” என்ற பதிலையும் பெற்ற நான்றிந்த இன்னொருவராக முருகபூபதியும் இருந்துள்ளார் என்பதை உறுதி செய்த கதை.

“இந்தச் ‘சொல்லத்தவறிய கதைகள்’ ஒரு வகையில் வரலாற்றின் சாயல் கொண்டவை. இன்னொரு வகையில் சமூகவியலின் பாற்பட்டவை. இன்னொரு கோணத்தில் எம்மைச் சுற்றியும் நிகழ்ந்தவற்றின் கதைகள் எல்லாவற்றுக்கும் மேலாக நாம் கவனித்தேயாக வேண்டிய கதைகள்” எனும் கவிஞர் கருணாகரனின் பதிப்புரையின் வரிகள் நிதர்சனமிக்கவை.

 

கொரொனா முடக்க காலத்தைக் கடத்த சுவாரஷ்யம் குன்றாத ‘சொல்லத்தவறிய கதைகள்’ வாசிக்கலாம்.


இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்

 மல்லியப்புசந்தி திலகர்

இலங்கை மலையக வரலாற்றில் கோ.நடேசய்யருக்கு என்று தனித்துவமான இடமுண்டு. 1920 களிலேயேமலையகப் பெருந்தோட்ட தொழிலாளர் மக்களிடையே தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்கி அவர்களைஅமைப்பாக்கம் செய்தவர். அத்தகைய அமைப்பாக்கத்தின் தொடர்ச்சியாகவே அந்த மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டனர்.

அதன்விளைவாக அப்போதைய நாடாளும் சபையான அரச பேரவையிலும் அந்தமக்களின் பிரிதிநிதியாக அங்கம் வகித்தார். இந்த அமைப்பாக்கத்தை அரசியல், தொழிற்சங்கசெயற்பாட்டுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளாமல், அடிப்படையில் ஒரு பத்திரிகையாளரான நடேசய்யர்தனது பத்திரிகைப் பணியையும் தொடர்ந்தார்.

அவர் ‘தேசநேசன்’, ‘தேசபக்தன்’,’உரிமைப்போர்’, ‘ The Citizen’, ‘ The Forward’, உட்பட 11 பத்திரிகைகளையும் வெளியிட்டவர். அந்தப் பத்திரிகை ஒன்றில் அவர்எழுதிய ‘ ராமசாமி சேர்வையின் சரிதம்’ என்ற கதை மலையகத்தின் முதலாவது சிறுகதையாகவும் பதிவாகிறது.

இவ்வாறு தொழிற்சங்க, அரசியல், ஊடகவியல், இலக்கியம் ( சிறுகதை), வரிசையில் நாடகத்துறையிலும்ஈடுபட்டுள்ள இவர் நூல்களை அச்சிட்டு வெளியிட்டதன் மூலம் ஒரு பதிப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்தியமலையக நிர்மாண சிற்பி கோ.நடேசய்யர்.

தனதுபதிப்பு முயற்சிபள் மூலம் ‘வெற்றியுனதே’, ‘நீ மயங்குவதேன்’, ‘ புபேந்திரன் சிங்கன் அல்லதுநரேந்திரபதியின் நகர வாழ்க்கை’, ‘ இந்தியா - இலங்கை ஒப்பந்தம்’, ‘ தொழிலாளர் சட்ட புஸ்த்தகம்’, ‘ The Planter Raj’, ‘The Ceylon & Indian Critics’ ‘கணக்குப்பதிவு நூல்’, ‘ கணக்குப் பரிசோதனை’, ‘ ஆபில் எஞ்சின்’, போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டவர்.

 

 

அந்த வரிசையில் 1937 ஆம் அவர் வெளியிட்ட நூல்களில் ஒன்று ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர்அந்தரப் பிழைப்பு நாடகம்’. இந்த நாடகத்தில் வரும் பாடல்களை எழுதியவர் ஶ்ரீமதி கோ.ந.மீனாட்சிம்மாள்என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நூலினை கோ.நடேசய்யர் யாருக்கு உரிமையாக்கியுள்ளார் என்பதுஉணர்ச்சிகரமானது.

“அந்நியர் லாபம் பெற அந்திய நாட்டில் நெற்றி வியர்வை நிலத்தில் வீழ உழைத்துப் போதிய ஊதியமும் பெறாதுஉழலும் எனது இந்திய சகோதர சகோதரிகளுக்கு இந்தூல் உரிமையாக்கப்பெற்றது” எனக்குறிக்கின்றார்கோ.நடேசய்யர். இந்த நாடக நூல் மலையகப் பெருந்தோட்ட மக்களின் வரலாற்று ஆவணம் என்றவகையில் இதனை 2018 ஆண்டு மறுபதிப்பு செய்துள்ளார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அந்தனிஜீவா.

1937 ஆம் ஆண்டுகொழும்பு கமலா அச்சகத்தில் முதற்பதிப்பாக அச்சிடப்பட்டுள்ள இந்த நூலை கொழும்பு, குமரன் பதிப்பகம் ( புத்தக இல்லம்) மறுபதிப்பு செய்துள்ளது.

இலக்கியப் பயணியான ( Literary Traveler) அந்தனிஜீவா இந்தியா சென்றிருந்த சமயம் சென்னையில்நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் பற்றிய சிறப்பிதழாகவெளிவந்திருந்த ‘மாற்றுவெளி’ இதழில் ஆங்கில விரிவுரையாளரும் நாடக செயற்பாட்டாளருமானதிருமதி.அ.மங்கை எழுதியிருந்த கட்டுரையில் இந்த நடேசய்யரின் நாடக நூலைப் படித்ததாககுறிப்பிட்டிருந்ததை அறிந்து, ரோஜா முத்தையா நூலகத்துக்குச் சென்று அந்தப் பிரதியினைப் பெற்று இந்தமறுபதிப்பைக் கொண்டுவந்துள்ளார்.

அத்துடன் அ.மங்கை எழுதிய ‘மாற்றுவெளி’ ( 2010) கட்டுரையையும் இந்தநூலில் இணைத்துள்ளார். அதில் ‘நான் அறிந்தவரையில் தமிழில் அரசியல் அரங்கம் குறித்த வரலாற்றைஎழுதுகையில் தொழிற்சங்கவாதியாகவும் அரசியலில் தீவிரமாகவும் பணியாற்றிய ஒருவரின் நாடக முயற்சியாகஇந்நாடகத்தைக் காணலாம்’ என அ.மங்கை பதிவு செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

மேலும் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கேசரி தகவல் களஞ்சியத்தில்’ ஆய்வறிஞர் மு.நித்தியானந்தன்எழுதியுள்ள கட்டுரையை இந்த நூலுக்கான முன்னுரையாகவும் இணைத்துள்ளார் பதிப்பாசிரியர் அந்தனிஜீவா.

அந்த கட்டுரையில் அற்புதமான பல தகவல்களைத் தரும் அது.நித்தியானந்தன் இறுதியாக இவ்வாறு நிறைவுசெய்கிறார்:

‘இந்த நாடகத்திற்கு நடேசய்யர் எழுதியிருக்கும் முகவுரை இலங்கையில் வாழும் இந்தியத் தொழிலாளர்களின்நிலைமை பற்றிய அரசியல் பிரகடனமாகும்.இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் தோட்டத்தொழிலாளர்கள் ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றப்பட்டு கடத்தப்பட்டுவருபவர்கள்தானே தவிர, தமதுசுயவிருப்பின் தெரிவில் வருபவர்கள் அல்லர் என்பதை நடேசய்யர் இந்நாடகநூலில் ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். இந்தத் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்கள் என்பதுதான்நடேசய்யர் இந்நூலில் உணர்த்த விரும்பும் உண்மையாகும்’.

இந்த மறுபதிப்பு நூலின் வெளியீட்டினை 2017 செப்தெம்பரில் பிரான்சில் இடம்பெற்ற உலகத்தமிழ் நாடகவிழாவில் நடாத்த பதிப்பாசிரியர் அந்தனிஜீவா எண்ணியிருந்தாலும் அது சாத்தியமற்றுப் போகவே, அதே ஆண்டுதமிழ்நாடு திண்டுக்கல் காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற மலையக இலக்கியஆய்வரங்கில் கட்டுரையாளரால் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு வெளியிட்டு வைக்கப்பட்டது.

அதனை அடுத்து 2018 ஆம் ஆண்டுகொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் அறிமுகவிழாவினை நடாத்தி இருந்தார்.

இதன்போது கிழக்குப்பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராசா ‘ஈழத்தின் முதலாவது அரசியல் நாடக நூல்’ கோ.நடேசய்யரின் ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்’ எனஆதாரபூர்வமாக உரையாற்றி இருந்தார். இந்த நாடகம் எவ்வாறு மேடையேற்றப்பட வேண்டும் என்பதனை மிகுந்த கரிசணையுடன் நூலில் குறிப்பிடுகிறார் கோ.நடேசய்யர்.

இந்த மறுபதிப்பைச் செய்து வெளியிட்ட அந்தனிஜீவா அனைவரதும் பாராட்டுக்குரியவர். அதேநேரம் இந்தநூலின் பிரதிகளை வாங்கி வாசித்து இந்த நாடகத்தை மேடையேற்றுவதே பதிப்பாசிரியருக்கும் நூலாசிரியர் கோ.நடேசய்யருக்கும் வழங்கும் கௌரவமாகும்.


சிறுதோட்ட உடைமை என்பது;மலையக தலைமுறையின் நாகரீகமான அரசியல், சமூக இருப்புக்கான கோரிக்கை

- முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்

இலங்கையில் இருநூறு வருடகால வரலாற்றைக் கொண்ட மலையகத் தமிழர் சமூகத்தினர் மத்தியில்  பேசுபொருளாகி இருக்கும் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உடமையாளர்களாக்க வேண்டும் எனும் கோரிக்கை தனியே தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கான தீர்வு மாத்திரமல்ல, அது ஐந்தாவது தலைமுறையான இன்றைய மலையக தலைமுறையின் நாகரீகமான அரசியல், சமூக இருப்புக்கான கோரிக்கையாகும் என்பதைப் புரிந்து கொண்டு இன்றைய இளைய தலைமுறை அதனை உரையாடவும் வென்றெடுக்கவும் முன்வரவேண்டும் என முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் சமூக ஆய்வாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

மலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் ஏற்பாட்டில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜீவன் ராஜேந்திரனின் நெறிப்படுத்தலில் இணைய வழி கருத்தாடல் களம் கடந்த சனிக்கிழமை மாலை 7 மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளருமான மு.சிவலிங்கம், முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் சமூக ஆய்வாளருமான மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் உரையாளர்களாக கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.


கருத்தாடல் களத்தின் கேள்வியாக “தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை கூலி உயர்வா? சிறுதோட்ட உடமையா ? அமைய வேண்டும் என்பதாக இருந்தது. அதற்கு பதில் அளித்து கருத்துரையாற்றிய மு.சிவலிங்கம் கூறியதாவது,இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும்போது அத்தகைய ஒரு கேள்வியுடன் தொடர்புடைய மூன்று தரப்பினரை நாம் அடையாளம் காணவேண்டியுள்ளது. அரசாங்கம், தோட்டக் கம்பனிகள், மக்கள் பிரதிநிதிகள் எனும் இந்த மூன்று தரப்பினர் மீதான விமர்சனங்களை முன்வைக்காது இந்த கருத்தாடலை முன்கொண்டு செல்ல முடியாது. குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் என்போர் தொழிற்சங்கத்தை தமது அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான கருவியாக கையாளத் தொடங்கியவுடன் அரசாங்கத்தின் மடியில் தவழும் செல்லப் பிள்ளைகளாகி எதனையும் தட்டிக் கேட்க முடியாதவர்களாக மாறிவிடுவது வேதனைக்குரியது. 1000/= என்பது சம்பளம் இல்லை.
அது கூலி. எனவே அந்தக் கோரிக்கையை தொடர்ச்சியாக கம்பனிகளிடம் வேண்டி நிற்பதானது நாங்கள் ‘கூலிகளாக’ தொடர்ந்து இருக்கத் தயார் என்ற அடிமை நிலைக் கோரிக்கையாகவும் அவலநிலை நிலைத் தொகையாகவும் மாறியுள்ளது. அதில் இருந்து விடுபட சுயாதீன உழைப்பாளர்களாக மாறும் தேவை உள்ளது. அதற்கு காணி என்பது மிக அவசியமான ஒன்று. எனவே காணியை அடிப்படையாகக் கொண்ட சிறுதோட்ட உடமையே கூலிச்சமூகம் எனும் அடிமைச் சமூக நிலையில் இருந்து மலையக சமூகத்தை மீட்டெடுக்க வழிகோலும் என தெரிவித்தார்.
கருத்தாடலில் பங்கு கொண்ட மயில்வாகனம் திலகராஜ் கூறுகையில்,
இலங்கை வந்து 200 வருடங்களை எட்டிப்பிடிக்கும் மலையகத் தமிழர் சமூகம் முதல் நூறு ஆண்டு காலமும் முற்று முழுதான கொத்தடிமைச் சமூகமாக வைக்கப்பட்டிருந்த வரலாறும் அதற்கடுத்த நூறு ஆண்டுகளில்  அடைந்திருக்கக் கூடிய அரசியல், சமூக, பண்பாட்டு பரிமான மாற்றங்களையும் அவதானத்தில் எடுத்து இன்றைய கோரிக்கை என்னவாக இருக்கவேண்டும் எனும் தீர்மானத்துக்கு வரவேண்டும்.

1820 முதல  1920 வரையான முதல் நூறு ஆண்டுகாலத்தில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்ட தலைமுறையினரை முதலாம் தலைமுறையினராகக் கொண்டால், அதற்கடுத்த ஒவ்வொரு முப்பதாண்டுகளிலும் வாழ்ந்த ஒவ்வொரு தலைமுறையும் மைன்கொண்டு சென்ற ஒரு அரசியல் தீர்மானம் பற்றிய ஆய்வு இங்கே வேண்டத்தக்கது.
1920 முதல் 1950 வரையான முப்பதாண்டு காலத்தில் அடிமைகளாக இருந்து அரசவையில் அங்கத்துவம் பெற்ற அரசியல் பரிமாணத்தை தொழிற்சங்க கட்டமைப்பின் ஊடாக இரண்டாந் தலைமுறை கண்டடைந்தது.
அதற்கடுத்த 1950 க்கும் 1980 க்குமான பகுதியில் பறிக்கப்பட்ட குடியுரிமையை மீளப்பெறும் போராட்டத்தில் மூன்றாம் தலைமுறை இயங்கியது. அதாவது இரண்டாந்  தலைமுறை கண்டைந்த வெற்றி பறிக்கப்பட்டபோது அதனை மீளப் பெறுவதில்  மூன்றாம் தலைமுறை இயங்கி இருக்கிறது. அதில் வெற்றியும் கண்டது.
அதற்கடுத்த 1980 முதல் 2010 வரையான நான்காம் தலைமுறையினர் மீளப்பெற்ற வாக்குரிமையைக் கொண்டு அரசியல் பிரதிநிதித்துவம் பெறுதல் அமைச்சரவையில் அங்கம் வகித்தல் எனும் அபிவிருத்திக்கான இலக்கினை ஒரு தலைமுறைக் கோரிக்கையாக முன்னெடுத்தது.

இப்போது 2010 க்குப் பின்னான ஐந்தாம் தலைமுறையின் தமது இலக்காக கோரிக்கையாக முன்கொண்டு செல்லவேண்டிய விடயம் என்ன என நோக்கும்கோது அது தொழிலாளர்களை சிறு தோட்ட உடமையாக்குதல் என்பதே சரியான தெரிவாக அமைகிறது.

ஏனெனில் முதலாம் தலைமுறையே தன்னை தியாகம் செய்து உருவாக்கிய இரண்டாம் தலைமுறை காலத்தில் 1940 ல் முல்லோயா  கோவிந்தன் எனும் தியாகியின் வீர மரணத்தின் ஊடாக கூலி உயர்வு கோரிக்கை முன்னிறுத்தப்பட்டுள்ளது.  அடுத்த மூன்றாம் தலைமுறை காலத்தில் சிவனு லட்சுமணன் எனும் தியாகியின் வீர மரணத்தின் ஊடாக காணி உரிமை கோரிக்கை முன்னிறுத்தப்பட்டது.

 நான்காம் தலைமுறை காலத்தில் அபிவிருத்தியை இலக்காக கொண்டு இந்த கூலி உயர்வும், காணி உரிமையும் இரண்டு கோரிக்கைகளும் மக்கள் போராட்டம் என்ற நிலையில் இருந்து கைநழுவி சென்றது. இதே சமகாலத்தில் காலனித்துவ வாதிகளிடம் இருந்து தோட்டங்களை அரசு பொறுப்பேற்று இருபதாண்டு ( 1972-1992) காலப்பகுதிக்குள்ளாகவே சிங்கள மக்களை சிறு தோட்ட உடமையாளர்களாகவும் மலையகத் தமிழரை தனியார் பெருந்தோட்டங்களின் கூலித் தொழிலாளர்களாக அதுவும் ஒப்பந்த அடிப்படை கூலிகளாக மாற்றி விட்டுள்ளது.

எனவே ஐந்தாம் தலைமுறையினரான இன்றைய தலைமுறையினர் தமது பிரதான கோரிக்கையாக எதனைக் கொள்ளவேண்டும் என நோக்கும்போது இரண்டாம் தலைமுறை கூலி கோரிக்கையா? மூன்றாந்தலைமுறை காணி கோரிக்கையா?  என சிந்திக்குமிடத்து இரண்டுக்கும் தீர்வைத் தரக்கூடிய சிறுதோட்ட உடமை எனும் கருத்தியலைத் துணிந்து ஏற்பவர்களாதல் வேண்டும். துரதிஷ்டவசமாக ஐந்தாம் தலைமுறையினர் இரண்டாம் தலைமுறையினர் நின்ற இடத்தில் நிற்கும் பலவீனத்தையே பார்க்க முடிகிறது.

சிறுதோட்ட உடைமையாளர் எனும் இலக்கு தனியே  தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கான தீர்வு மாத்திரமல்ல, அது ஐந்தாவது தலைமுறையான இன்றைய மலையக தலைமுறையின் நாகரீகமான அரசியல், சமூக இருப்புக்கான கோரிக்கையாகும் என்பதைப் புரிந்து கொண்டு இன்றைய இளைய தலைமுறை அதனை உரையாடவும் வென்றெடுக்கவும் முன்வரவேண்டும் என்றார்.


( நன்றி வீரகேசரி )