‘அக்கினிப்பூக்கள்’அந்தனி ஜீவா

மல்லியப்புசந்தி திலகர்

அந்தனிஜீவா எனும் பெயரை இலங்கை, தமிழ்நாடு, புலம்பெயர் இலக்கிய சூழலில் அறியாதோர் இருக்க வாய்ப்பில்லை. இந்திய இராணுவத்தில் பணியாற்றியபோது பர்மா சென்ற வீரர் கொழும்புக்கு வந்த சமயம் கொழும்பில் வாழ்ந்த பெண்ணை காதலித்து மணமுடிக்க அவர்களது இரண்டாது குழந்தையாகப் பிறந்தவர் அந்தனி ஜீவா.

கொழும்பு, கிருலப்பணை சுவர்ணா பாடசாலையிலும் பம்பலப்பிட்டி சென். மேரிஸ் பாடசாலையிலும் கற்றவர். தனது பாடசாலை ஆசிரியர்களான திரு. சந்தானம், திருமதி. எம். பேர்னாண்டோ ஆகிய இரு ஆசிரியர்களை மறவாமல் நினைவு கூரும் அவர், தனது பாடசாலை மூத்த மாணவரான கலைஞர் ஜே.பி.ராபர்ட், கலைஞர் ராஜபாண்டியன் ஆகியோரையும் தனது ஆரம்ப கால கலை வழிகாட்டிகளாக கூறுகின்றார்.

இலக்கியத்துறையில் மட்டுமல்லாது ஒடுக்கப்பட்டோர் அரங்கு, பிரயோக அரங்கு, பங்குபற்றல் அரங்கு, முதலான துறைகளோடு ஊடாட்டம் கொண்டு பங்களிப்பு செய்துள்ள அந்தனி ஜீவா ஒரு ‘வினையி’ (Activist) எனும் வகிபாகம் கொண்டவர் எனக்குறிக்கின்றார் பேராசிரியர் சபா.ஜெயராஜா.
சதா சுறுசுறுப்பாக இங்கிக்கொண்டு இருக்கும் அந்தனிஜீவா ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம் போன்றவர். எப்போதும் தகவல்களை விரல் நுணியில் வைத்திருப்பார். தொடர்பாடலில் வல்லவர். இலங்கைக்குள் எந்தத் திசை இலக்கியம் என்றால் என்ன? எந்த மொழி இலக்கியம் என்றால் என்ன? தமிழ் நாட்டில் எந்த அணி இலக்கியம் என்றால் என்ன? இவரது தொடர்பு நிச்சயமாக அவர்களுடன் இருக்கும்.

 

‘தலைநகரில் தமிழ் நாடக அரங்கு’ எனும் இவரது நூலுக்கு, ‘தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் எழுதி இருக்கும் குறிப்பு இவ்வாறு அமைகிறது: ‘இலங்கை நாடக மேடையின் வளர்ச்சிக்கு பங்களித்த அத்தனை பேரையும் ஒருவர் விடாமல் நினைவு கூர்ந்து பதிவு செய்திருக்கும் அந்தனிஜீவாவே ஓர் அற்பதமான கலைஞர். சுமார் 16 மேடை நாடகங்களை மேடை ஏற்றியவர். வீதி நாடகங்களையும் நடாத்தியவர்.

அந்தனிஜீவா போன்ற அயல்நாட்டு தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்றோரை தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் ‘கலைமாமணி’ போன்ற விருதுகளுக்கும் பாராட்டுகளுக்கும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மனிதனின் அடையாளம் கடவுச்சீட்டாக இருக்க முடியாது. மொழியாகததான் இருக்க முடியும்’. இவ்வாறு தமிழ்நாட்டிலும் தனக்கான ஒர் அங்கீகாரத்தைக் கொண்டிருப்பவர் அந்தனி ஜீவா. இவர் பல நாடகங்களை எழுதியவர், இயக்கியவர், தயாரித்தவர் என்ற போதும் ‘அக்கினிப்பூக்கள்’ மிக மிக பிரபலமான நாடகம். அந்த நாடகம் பின்னர் நூலாக வெளிவந்தபோது 1999 ஆம் ஆண்டு சிறந்த நாடகப்பிரதிக்கான சாகித்திய விருதினை வென்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைக் காலம் முதலே தனது படைப்புகளை பத்திரிகைகளுக்கு எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ள அந்தனிஜீவா, நீர்கொழும்பில் இருந்து வெளிவந்த ‘மாணவர் குரல்’ சஞ்சிகையில் ஆரம்பித்து, பாடசாலை நண்பர்களுடன் இணைந்து ‘கரும்பு’ எனும் கையெழுத்துப்பிரதியை நடாத்தி வந்துள்ளார். ஓவியர் சாமியும், பாடகர் முத்தழகுவும் கூட இவரது பள்ளிக்கூட நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில் வீரகேசரி, தினகரன் போன்ற முன்னணி பத்திரிகைகள், இதழ்களில் எல்லாம் எழுதிவந்தவர். தினபதி – சிந்தாமணி பத்திரிகைகளோடு பணியாற்றிய காலத்தில் பத்திரிகை ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் , தன்னை புடம் போட்டார் என நினைவுகூர்கிறார். பின்னாளில் ‘குன்றின் குரல்’, ‘கொழுந்து’ போன்ற சஞ்சிகைகளின் பொறுப்பாசிரியராக அந்தனிஜீவா செயற்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சம்.

இளம் வயது முதலே சிவப்பு நிறத்தில் ஆர்வம் கொண்ட தான், இடதுசாரி அரசியல் அணி சார்ந்து தான் செயற்பட்ட விதம் குறித்தும் தனது அனுபவ பகிர்வு நூலில் பதிவு செய்துள்ளார். டொமினிக் ஜீவா போன்றே இவரும் இந்திய இடதுசாரி தலைவர் ஜீவானந்தன் மீதான பற்றுதலால் தனது அந்தனியுடன் ஜீவாவை இணைத்துக் கொண்டவர்தான். இங்கா சமசமாஜ கட்சியில் தன்னை இணைந்துகொண்டவர், அதன் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றியுமுள்ளார்.

இதன்போது கொல்வின் ஆர.டி சில்வா, என்.எம்.பெரேரா , வாசுதேவ நாணயக்கார போன்ற அரசியல் தலைவர்களுடன் பழகும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இதன் நீட்சியாக 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் வேட்பாளராகவும் அந்தனிஜீவா பெயரிடப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கட்சியின் ‘தேசம்’ பத்திரிகையின் ஆசிரியர் பீடத்திலும் அங்கத்தினர், ஆலோசகர்.

‘மலையகம் எனது பிறப்பிடமல்ல. ஆனாலும் மலையக மண்ணில் பிறந்தவர்களைவிட அந்த மண்ணின் மீது நேசம் கொண்டவன். எனக்கு அந்த மலையக மண்ணின் மீது பாசத்தையும் நேசத்தையும் ஊட்டியவரக்ள இருவர். ஒருவர் இலங்கைத் திராவிடக் கழகப் பொhதுச் செயலாளர் நாவலர். ஏ.இளஞச்செழியன், மற்றவர் மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை. சி.வி. வேலுப்பிள்ளையுடனான தொடர்பு காரணமாக கிழமைக்கு இரண்டு நாட்களாவது சந்தித்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். மலையக இலக்கியத்தின் முதல்வரும் முன்னோடியுமான தேசபக்தன் கோ.நடேசய்யரின் பணிகள் குறித்த பல தகவல்களைச் சி.வி எனக்குச் சொல்லுவார்’ என தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் அந்தனிஜீவா.

உண்மையில் மலையக தேசப்பிதா கோ.நடேசய்யர் அவர்களைப்பற்றி அந்தனிஜீவா அளவுக்கு எடுத்துக்கூறி நின்றவர்கள் வேறு யாருமில்லை எனும் அளவுக்கு அவரது பணிகளை பல தளங்களில் பேசியவராக அந்தனிஜீவாவை அடையாளம் காட்ட முடியும். தேசபக்தன் கோ. நடேசய்யர், பத்திரிகையாளர் நடேசய்யயர் ஆகிய நூல்களை எழுதிய சாரல்நாடனும் கூட அந்தனிஜீவாவின் உந்துதலும் பங்களிப்பும் இல்லாமல் தனது ஆய்வு முயற்சிகள் சாத்தியமான ஒன்று அல்ல என்றே பதிவு செய்துள்ளார். கோ.நடேசய்யரின் ‘அந்தரப்பிழைப்பு’ நாடகத்தை குமரன் பதிப்பகம் ஊடாக அந்தனிஜீவா பதிப்பாசிரியராக இருந்து மறுபதிப்பு (2017) செய்துள்ளார் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.

மலையகத்துடனான இவரது ஈடுபாடு காரணமாக மலையக கலை இலக்கிய பேரவையின் செயலாளராக இருந்து ஆற்றிய இலக்கிய பணிகள் விரிவாக பேசக்கூடியவவை. பேரவை, கொழும்புத்தமிழ்ச் சங்கத்தில் ஒழுங்கு செய்த பாராட்டு நிகழ்வு ஒன்றிலேயே 1983 ம் ஆண்டு பேராசிரியர் க.கைலாசபதி முன்னிலை வகிக்க சி.வி. வேலுப்பிள்ளையை 'மக்கள் கவிமணி' என விருதளித்து கௌரவம் செய்துள்ளனர்.

1996 ஆம் ஆண்டு மாகாண கல்வி அமைச்சராக வி.புத்திரசிகாமணி செயற்பட்ட காலத்தில் இடம்பெற்ற ‘மலையகத் தமிழ் ஆராய்ச்சி’ மாநாட்டுக்கான ஒழுங்கமைப்பு குழுவின் தலைவராக தி.வே.மாரிமுத்து செயற்பட, செயலாளராக அந்தனி ஜீவா செயற்பட்டார் என்பது முக்கியமாக பதிவு செய்யப்படவேண்டியது. இந்த மாநாட்டின் முக்கிய பங்கேற்பாளராக பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் கலந்துகொண்டு உரை வழங்கி இருந்தார். பின்னாளில் மாநாட்டுக் கட்டுரைகளை தொகுத்து நூலாக்கியதிலும் அந்தனி ஜீவாவின் பங்களிப்பு போற்றுதற்குரியது.

ஈழத்தில் தமிழ் நாடகங்கள் (1981), அன்னை இந்திரா (1985), காந்தி நடேசய்யர் (1990), சுவாமி விபுலானந்தார்(1992), The Hill Country in Sri Lanka Tamil Literature (1995), மலையகமும் இலக்கியமும் (1995), மலையக மாணிக்கங்கள்(1999), அக்கினிப்பூக்கள் (1999) சி.வி.யும் நானும் (2001), மலையகத் தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு (2002), மலையகக் கவிதை வளர்ச்சி (2003), திருந்திய அசோகன்-சிறுவர் நாவல் (2003), நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம் (2004), மலையக தொழிற்சங்க வரலாறு (2005), சிறகு விரிந்த காலம்(2007), அ.ந.க ஒரு சகாப்தம்(2009), பார்வையின் பதிவுகள் (2010), தலைநகரில் தமிழ் நாடக அரங்கு(2013), ஒரு வானம் பாடியின் கதை (2014) போன்ற நூல்களுடன், சி.வி.வாழும்போதே ‘சி.வி.சில நினைவுகள்’ எனும் நூலை எழுதியவர். சி.வி நூற்றாண்டு நினைவையொட்டி ‘சி.வியும் நானும்’ என 2002 ல் வெளியிட்ட நூலை திருத்திய மறுபதிப்பாக 2014ஆம் ஆண்டு வெளியிட்டது மாத்திரமின்றி அவருக்குக் கொழும்புத் தமிழச்சங்கத்தில் விழாவும் எடுத்தவர்.

அவரது நாடகம், அனுபவப்பகிர்வு, பயணக்கட்டுரைகள் தவிர்ந்த ஏனைய நூல்கள் அளவில் மிகச்சிறியதே. அவை ஆழமான விடயங்களைச் சுமந்துவராத போதும், அந்த விடயதானங்கள் சமூகத்தளத்தில் பேசப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவன, அதற்காக அடியெடுத்துக் கொடுப்பன. மலையக பெண்கவிஞர்களின் தொகுப்பு, பெண் சிறுகதையாளர்களைக் கொண்டு தனது அம்மா நினைவாகத் தொகுத்த ‘அம்மா’ எனும் பெயரிலான தொகுப்பு முதலானவையும் இத்தகைய முயற்சிகளே. மலையகம் வெளியீட்டகம் என நூல் பதிப்பு முயற்சிகளிலும் இறங்கியவர்.

இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பரவலாக இலக்கியவாதிகள், கலைஞர்களுடன் தொடர்புகளைப் பேணுவதில் இவருக்கு தனியிடமுண்டு. குறிப்பாக கடிதம் எழுதுவதன் மூலம் நட்பை, உறவை, தோழமையை தொடர்பில் வைத்திருக்கும் உயர்வான பண்பு அந்தனிஜீவாவுக்கு உரியது எனலாம். புதிய எழுத்தாளர்கள், கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது, அவர்களுக்கு கடிதங்கள் எழுதி ஊக்குவிப்பது எனும் வழக்கத்தை தனதாக்கிக் கொண்டவர். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினராக, ஆட்சிக் குழு உறுப்;பினராக தொடர்ந்து இலக்கிய பணியில் தன்னை இணைத்துக்கொண்டவர்.

அந்தனிஜீவா நிற்கும் சூழல் எப்போதும் கலகலப்பாக இருக்கும். சதா ஏதாவது ஒரு விசயத்தை பேசிக்கொண்டு இருப்பவராக, தகவல் களஞ்சியமாக தன்னை தகவமைத்துக்கொண்டவர். தனது அரைநூற்றாண்டுகால பொது வாழ்க்கை அனுபவங்களை ‘ஜீவநதி’ இதழில் தொடர் கட்டுரையாக எழுதி வந்தவர், அதற்கு இட்ட தலைப்பு ‘ஒரு வானம் பாடியின் கதை’. அதனை ‘ஜீவநதி’ நூலாகவும் பதிப்பித்து அவருக்கு கௌரவம் செய்துள்ளது. அக்கினிப்பூக்கள் தந்த அந்தனிஜீவா எனும் வானம் பாடி, கலை இலக்கிய வானில் கானம் பாடி என்றும் சிறகடிக்கும் என்பது திண்ணம்.