பிரதேச செயலகங்களை அதிகரித்துக் கொள்வது கனவல்ல; அர்ப்பணிப்பு

- மயில்வாகனம் திலகராஜ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

நுவரெலிய மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை ஐந்தில் இருந்து பத்தாக உயர்த்திக் கொள்வது தொடர்பில் உள்ள தாமதம் அல்லது அக்கறையின்மைக் குறித்த கேள்வியை எழுப்பி கடந்த வாரம் வீரகேசரி ஞாயிறு வாரவெளியீட்டில் ஊடகவியலாளர் சிவலிங்கம் சிவகுமாரன் எழுதிய கட்டுரையில், குறித்த பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைத்தவன் என்ற வகையில் எனது பெயரையும் பிரேரணைப் பிரதியையும் பிரஸ்தாபித்திருந்தார். அதனடிப்படையில் பத்து பிரதேச செயலகங்களைச் சாத்தியமாக்குவது குறித்து என்ன செய்யலாம் என்பது தொடர்பான பதிவாக இந்தக் கட்டுரை அமைகிறது.

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?

நுவரெலியா மாவட்டத்தின் சனத்தொகை இன அடிப்படையில் மலையகத் ( இந்திய வம்சாவளி) தமிழ் மக்களை அதிகளவாகக் கொண்ட பிரதேசம் என்பதும், மொத்த சனத்தொகையில் 52 % அளவு தமிழர்களாக உள்ளனர் என்பதும் புள்ளிவிபரம். இந்த மக்கள் இலங்கை சுதந்திரமடைந்தது முதல் குடியுரிமைப் பறிக்கப்பட்டு அரச பொது நிர்வாக முறைமையில் இணைக்கப்படாமல் இருந்ததன் காரணமாக அந்த நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ‘பிரதேச செயலகங்களின்’ தேவைப்பாடு அதிகம் இருக்கவில்லை. 'கிராம சேவகர் பிரிவுகளின்’ தேவையும் அதிகம் எழவில்லை. இவை இரண்டுமே அடிப்படை அரச பொது நிர்வாக சேவைகளை அடிமட்டத்தில் உறுதி செய்கின்ற அரச நிர்வாக அமைப்புகள்.

இவை ஆற்றியிருக்க வேண்டிய பணியினை தோட்டப்பகுதி மக்களுக்கு ‘தோட்ட நிர்வாகங்களே’ வழங்கின. தோட்ட மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரை தோட்டங்களில் உள்ள ‘செக்ரோல்’ மூலமாகவே பதிவுகள் இடம்பெற்று வந்தன. தோட்டத்தில் வதியும் தொழிலாளர் அல்லாத விபரங்கள் கூட ‘செக்ரோலில்’ இருந்த காலம் ஒன்று இருந்தது. தோட்டங்களை 1972 ஆம் ஆண்டுவரை நிர்வகித்த பிரித்தானிய கம்பனிகளும், அதன்பின்னர் 1992 வரை அவற்றை நிர்வகித்த அரச கூட்டுத்தாபனங்களும் இந்த செக்ரோல் நடைமுறைகளை முறையாகப் பேணி வந்தன. ( நுவரெலியா - மஸ்கெலியா பெரும் சனத்தொகை- வாக்காளர் கொண்ட தொகுதியாக இன்றும் அடையாளப்படுத்தப்படுவதன் காரணம் கூட சுவாரஷ்யமானது.அதனைப் பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்).

கிராம சேவகர் பிரிவுகளுக்குள் உள்வாங்கப்படுதல்.

காலப்போக்கில் பிரஜாவுரிமை எனும் பெயரில் வாக்குரிமைப் படிப்படியாக கிடைக்கப் பெற்ற அதே நேரம் அரச கூட்டுத்தாபனங்கள் வசமிருந்த தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதும், கிராம சேவகர் பிரிவுகளின் கீழ் தோட்டங்கள் கொண்டுவரப்பட்டமையும் அரச பொதுநிர்வாகத்திற்குள் தோட்டப்பகுதி மக்களை உள்வாங்க வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தின. 90 களில் மாற்றம் கண்ட இந்த நடைமுறை 2000 ஆம் ஆண்டு ஆகும்போது அதிகளவில் இடம்பெறத் தொடங்கியது. இதனால் ஏற்கனவே செயற்பட்டுக் கொண்டிருந்த பிரதேச செயலகங்களைக் கொண்டு நிர்வாகத்தை முன்னெடுப்பது என்பது சிக்கலான பணியானது. அம்பகமுவ, நுவரெலியா ஆகிய பிரதேச செயலகங்கள் மாத்திரம் தலா இரண்டுலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் நிர்வாகத்தை ஏற்க நேர்ந்தது. அதேபோல வலப்பனை, கொத்மலை ஆகிய பிரதேச செயலகங்கள் தலா ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களையும் ஹங்குரங்கத்தை பிரதேச செயலகம் சுமார் எண்பதினாயிரம் அளவான சனத்தோகையினரின் நிர்வாகத்தையும் ஏற்க நேர்ந்தது. தோட்டங்களில் இருந்த 'செக்ரோல்' நடைமுறைகளில் தொழிலாளர் மாத்திரம் அதுவும் தொழில் விபரங்கள் மாத்திரம் பதியும் நிலை மாறியது. பிறப்பு சான்றிதழ் முதலான விடயங்களைப் பதிவு செய்வதில் இருந்து தோட்ட நிர்வாகம் விடுபட தொடங்கியது. ஒரு கிராம சேவகர் பிரிவின் கீழ் ‘ஒரு தோட்டம் ஒரு அலகாக’ பார்க்கப்பட்ட நிலை மாறி அந்த ஒரு அலகினுள் ( unit) வாழும் ஒவ்வொரு பிரஜையையும் கிராம அதிகாரி பதிவு செய்யும் நிலை எழுந்தது. இந்த நிலைமைகள் கிராம சேவகர் பிரிவுகளின் தேவையை அதிகரிக்க 1994 சந்திரிக்கா அரசாங்கத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. போதுமான அளவில் அவை இடம்பெறாதபோதும் ‘கிராம சேவகர் முறைமை’க்குள் தோட்டங்களின் உள்வாங்கல் ஆரம்பமானது.

வலுப்பெற்ற கோரிக்கை

2000 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்தே பிரதேச செயலகங்களின் அதிகரிப்புக்கான கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது. சிவில் சமூக அமைப்புகள் அஇது குறித்து அதிகம் பேச ஆரம்பித்தன. ஆங்காங்கே கலந்துரையாடல்கள் இடம்பெறத் தொடங்கின.அப்போது மாவட்ட மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இதில் நடந்த நன்மை என்னவெனில் தமது பணிச் சுமை தாங்காது மாவட்டச் செயலாளர்களும், பிரதேச செயலாளர்களும் கூட இந்தக் கோரிக்கையை ஏற்றமையாகும்.

ஆனாலும் மாவட்ட காரியாலயத்தில் அரசியல் பிரதிந்திகளுடன் நடைபெற்ற கூட்டங்களில் இனவாதப் பூனைகள் எட்டிப்பார்த்தன. அதனால் நியாயமான அடிப்படையில் 12-13 ஆகப் பிரிக்கப்படக்கூடிய பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை பத்தாக மாத்திரம் அதிகரிக்க மாவட்ட செயலகம் அறிக்கை தயார் செய்தது. உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட அந்த அறிக்கையின்படி இப்போதைய ஐந்து பிரதேச செயலகங்களையும் இவ்விரண்டாக பிரிப்பதான அந்த அறிக்கை நாளை அளவிலும் நியாயம் அற்றது என்பதே உண்மை.

ஏனெனில் 2 லட்சத்து 30 ஆயிரம் அளவான சனத்தொகை கொண்ட அம்பகமுவ பிரதேச செயலகமும் இரண்டாக பிரிக்கப்பட 86 ஆயிரம் சடத்தொகைக் கொண்ட ஹங்குரங்கத்தை பிரதேச செயலகமும் இரண்டாகப் பிரிக்கப்பட முன்மொழிவு செய்யப்பட்டது. அப்படி பார்த்தால் இப்போதைய அம்பகமுவை பிரதேச செயலகத்தை மாத்திரம் ஐந்தாக பிரிக்கலாம்.

பாராளுமன்ற பிரேரணை

இந்த நிலையிலேயே 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்தமாக நுவரெலிய மாவட்டத்தில் 15 பிரதேச செயலகங்கள் அமையப் பெறுவதற்கான போதுமான விஞ்ஞான பூர்வமான நியாயங்களை முன்வைத்து சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைத்தேன். அந்த உரையின் போது அப்போது மாவட்ட செயலாளரால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முன்மொழிவில் பத்து பிரதேச செயலகங்கள் கோரப்பட்டு இருப்பதனையும் சுட்டிக் காட்டி, இது மாவட்ட பொது மக்களின் கோரிக்கை மாத்திரம் அல்ல அதிகாரிகளும் இதனைக் கோரி நிற்கின்றனர் எனும் எனது வாதத்தை முன்வைத்தேன்.

எனது பிரேரணைக்கு ஆதரவாக அப்போது நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே. கே. பியதாச வும் உரையாற்றியிருந்தார். இதன் மூலம் தமிழ் மக்களின் கோரிக்கை மாத்திரமல்ல மாவட்டத்தின் சிங்கள மக்களதும் பிரச்சினை என்பதும் வெளிப்பட்டது. பிரேரணைக்கு பதில் வழங்கி உரையாற்றிய விடயத்துக்கு பொறுப்பாகவிருந்த அமைச்சர் வஜிர அபேவர்தன 10 பிரதேச செயலகங்களை ( மேலதிக 5) தற்போதைக்கு நிறுவ முடியும் என்றும் அதற்கு மேலதிகமான கோரிக்கைகளை எல்லை மீள் நிர்ணயத்தின் பின்னரே தீர்மானிக்க முடியும் எனவும் பதில் அளித்தார்.

அமைச்சர்கள் இவ்வாறு பதில் அளிப்பது பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்காவும் அமைந்து விடுவதுண்டு. ஆனாலும் அந்த அமைச்சரைக் காணும் போதெல்லாம் இதனைச் செய்யுமாறு வலியுறுத்துவது ( குறிப்பாக வேண்டுமென்றே அமைச்சருடன் மின்தூக்கி யில் பயணித்து நச்சரிப்பது ) பாராளுமன்றத்தில் அவரது அறைப்பக்கம் சென்று பேசுவது இப்படி இரண்டு வருடங்கள் ஓடியது. ஒரு முறை தமிழ் முற்போக்கு கூட்டணி உயர்பீட கூட்டத்தில் இதனை பிரஸ்தாபித்து 'எமது அமைச்சர்களும்' அமைச்சர்கள் என்ற வகையில் அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என விடுத்த வேண்டுகோளின் பேரில் ஒரு முறை அமைச்சர் வஜிர அபேவர்தன அலுவலகத்துக்கு சென்று கோவையைக் கொடுத்து படத்தைப் பிடித்து 'அழுத்தத்தை' கொடுத்து விட்டு வந்தோம். பாராளுமன்ற பிரேரணைகளுக்கு மேலதிகமாக இந்தப் 'படப்பிடிப்பு அழுத்தங்களும்' அரசியலில் வேண்டப்படுவது உண்டு. அமைச்சில் நடைபெற்ற அனைத்திலங்கை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் கூட அப்போது எங்களை ( ஏதேட்சையாக) அமரவைத்து அமைச்சர் ஒரு காட்சி நடாத்தினார்.

இத்தகைய வேண்டுகோள்களுக்கு அப்பால் மாவட்டத்தின் அனைத்துக்கட்சி உறுப்பினர்களை, ( பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் ) மாவட்ட அரச அதிகாரிகளைக் கொண்ட கூட்டம் ஒன்றும் அமைச்சரின் பாராளுமன்ற அறையில் 'இட நெருக்கடியுடன்' நடைபெற்றது. அதன்போதும் இந்த அமைச்சரவைப் பத்திரத்தை ( குறைந்த பட்சம் புதிதான 5 செயலகங்களை உருவாக்கி கொள்வது ) சாத்தியமாக்கிக் கொள்ள உரையாடல்களில் எனது ஆளுமையைப் பயன்படுத்தி இருந்தேன். ( அதில் கலந்து கொண்ட மாற்றுக்கட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள் இதனை அறிவார்கள்)

அமைச்சரவைப் பத்திரமும் வர்த்தமானியும்

ஒருவாறு அமைச்சரவைக்கு இந்த விடயம் அமைச்சரவைக்கு வந்தபோதுதான் அதுவரையான தாமதத்திற்கு காரணம் தெரிந்தது. அமைச்சர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது பங்கிற்கு காலி மாவட்டத்திற்கும் சில பிரதேச செயலகங்களை உருவாக்கி கொள்ளும் அரசியல் ராஜதந்திரத்தை அவர் மேற்கொண்டு அதனையும் இந்த பத்திரத்தோடு சேர்த்து சமர்ப்பித்து விட்டார்.

எப்படியோ நுவரெலிய மாவட்ட மட்டத்தில் இருந்த கோரிக்கை, பாராளுமன்ற உறுதிப்பாடு ( ஹன்சாட்), அமைச்சரவை அனுமதி ( பத்திரம்) என ஆவணவாக்கம் பெற்றது. இவை எல்லாம் உயர்பீட அனுமதிகள் மாத்திரமே. இதனை நடைமுறைப்படுத்த இன்னுமொரு முக்கியமான ஆவணம் தான் அந்த தீர்மானங்களை 'பிரகடனம்' செய்யும் 'வர்த்தமானி'. அதனைச் செய்யுமாறும் கோரி அடிக்கடி அமைச்சருடன் 'மின்தூக்கி' பயணம் செய்து இருக்கிறேன். ( சபையில் இருக்கும் அமைச்சர் வெளியேறும் போது நாமும் வெளியேறி அவருடன் பேச்சு கொடுப்பது. இது ஒரு நச்சரிப்பு உபாயம்)

இப்படியான இன்னொரன்ன நச்சரிப்புகளின் பேரில் 2019 ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபற்றுக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் வர்த்தமானி வெளிவந்தது. ( அடுத்து ஆளும் கட்சியில் இருக்க மாட்டோம் என தெளிவாக தெரிந்த நிலையில் எனது வலியுறுத்தலை இறுக்கமாக்கத் தொடங்கி இருந்தேன். அமைச்சரும் அதனை உணர்ந்தவராக வர்த்தமானியை வெளியிட்டார்)

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள்

அடுத்த நவம்பர் மாதம் நாங்கள் எதிரணியில் இருந்தோம். ஆனாலும் நுவரெலிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்த நான், வர்த்தமானி பிரகடனம் வெளிவந்து விட்டதால் அதனை அமைக்கும் பணியை துரிதமாக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தினேன். வாடகைக் கட்டடங்களில் பணியை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட செயலாளரை வலியுறுத்தினேன். ( இதற்கான ஆதாரங்களை கூட்டக் குறிப்புகளில் பெறலாம்). இதன்படி 2020 மார்ச் முதலாம் திகதி ஐந்து புதிய பிரதேச செயலகங்களை ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்டு நடவடிக்கைக்கள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த நாள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

எனினும் புதிதாக பதவிக்கு வந்த அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தும் என உறுதி கூறப்பட்டது. வலப்பனை புதிய பிரதேச செயலகத்தை ராகலை நகரில் அல்லாது இப்போது அமையப் பெற்றுள்ள வலப்பனை நில்தண்டஹேன பகுதியில் அதனை அமைப்பது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களும் எழுந்திருந்தன.

இப்போது ராகலையில் மட்டுமல்ல நுவரெலிய மாவட்டத்தில் எங்குமே எந்த புதிய செயலகம் பற்றிய பேச்சையும் காணவில்லை.இந்த பத்து பிரிக்கப்பட்டுள்ள முறைமை தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் உண்டு . எனினும் இப்போதைக்கு இதனை நிறுவிக்கொண்டால் அடுத்து வரும் காலங்களில் அவற்றை மேலும் பிரிப்பது தொடர்பில் புதிதான கோரிக்கைகளை எழுப்பலாம். ஏனெனில், இந்த மட்டத்துக்கு இதனைக் கொண்டுவருவதில் இருந்த சிக்கல் நிலைமைகளை இங்கே பதிவு செய்து வைப்பதன் நோக்கம் அதுதான்.

"இல்லை நாங்கள் பதினைந்து கொண்டு வரப்போகிறோம் நமது மக்கள் வாழும் பகுதிகளிலே அதனை அமைக்கப் போகிறோம்" என யாராவது கிளம்பினால், இந்த நடைமுறைகள் அனைத்தையும் கடந்து வரவேண்டும் என்பதை 2000 ஆம் ஆண்டுகளுக்கு பின்னரான சிவில் சமூக, மாவட்ட செயலக கலந்துரையாடல்கள், பாராளுமன்ற பிரேரணை முன்வைப்பு, அமைச்சர்களுடனான தொடர்பாடல், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உபதலைவர் முதலான விடயங்களிலும் பங்கு கொண்டவன் என்ற அனுபங்களின் அடிப்படையில் இதனை பொது வெளியில் பதிவு செய்வது கடமை என எண்ணுகிறேன்.

சிலநேரம் இப்போதைய மேலதிக ஐந்து புதிய செயலகங்களை அமைத்துக் கொண்டாலும் கூட அவற்றை மேலும் பிரிப்பதற்கு அடுத்த பத்து ஆண்டுகளில் தேவை எழும். அதற்கும் இந்த அனுபவம் அவசியப்படும்.

முடிவாக,

இது நுவரெலிய மாவட்டம் தமிழ் மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல. அனைத்து மக்களுக்குமான பிரசரசனை என்பதையும் , பொது நிர்வாக அணுகலை இலகு செய்கின்ற அரச அதிகாரிகளுக்கு உதவுகின்ற திட்டம் என்பதை புரிந்து கொண்டு அந்த நோக்கத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும். இது ஒரு 'கனவு' திட்டம் கிடையாது. காத்திரமாக அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய தலைமத்துவ ஆற்றல் கொண்டவர்களால் சாத்தியப்படுத்தக்கூடிய திட்டமே.

நன்றி : வீரகேசரி வாரவெளியீடு (20/06/2021)


'குன்றிலிருந்து கோட்டைக்கு' -இளையவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் ஆவணம் 

மலையகக் கல்வியாளரும் உயர் அரச பதவிகளை வகித்து ஓய்வு நிலையில் இருப்பவருமான எம்.வாமதேவன் தனது தன்வரலாற்று நினைவுப் பகிர்வாக எழுதி இருக்கும் நூல், குன்றிலிருந்து கோட்டைக்கு

மலையகமான குன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்து கோட்டை என அழைக்கப்படும் கொழும்புத் தலைநகரில் அரச நிர்வாகப்பணியில் அளப்பரிய சாதனைகளுடன் பணியாற்றி தற்போது ஓய்வு நிலையில் இருக்கும் எம். வாமதேவன், தான் கடந்து வந்த பாதையை சுவாரஷ்யமாக இந்த நூலிலே பதிவு செய்துள்ளார்.

இத்தகைய தனது  அனுபவங்களை நூலாக்க வேண்டும் என தன்னிடம் வேண்டுகோள் விடுத்ததாக எனது பெயரை ( கட்டுரையாளர்) எம்.வாமதேவன் இந்த நூலிலே குறிப்பிட்டு உள்ளார். அதற்கான காரணத்தை இங்கே பதிவு செய்வது அவசியம் என எண்ணுகிறேன்.

எனது பாடசாலை காலம். உயர்தர வகுப்பில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கற்றபோது இலங்கை மத்தியவங்கி தமது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்திருந்தது.

ஹட்டன் பிரதேச தமிழ், சிங்கள பாடசாலைகளின் உயர்தர மாணவர்கள் பங்கு கொண்டிருந்தோம். நிகழ்ச்சி முடிவடையும் வேளை மாணவர்கள் தரப்பில் இருந்து நன்றி உரை வழங்க அழைத்தார்கள். ஒரு சிங்கள மாணவர் நன்றி கூறிய பின்னர் தமிழில் உரையாற்ற எனலனை சைகை காட்டினார் எங்களை அழைத்துப் போன ஆசரியர். நான் நன்றியுரையோடு நிறுத்திக் கொள்ளாமல் சுவாரஷ்யத்துக்காக ஒரு விஷயத்தைச் சொன்னேன்.

மத்திய வங்கி மக்களோடு தொடர்புகளைப் பேணாது. வங்கிகளுடனேயே பேணும் என்றே படித்து இருகலகிறோம். ஆனால் இன்று இலங்கை மத்திய வங்கி மக்களாகிய எங்களோடு நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது. அதற்காக நன்றிகள் என்றேன். சபையில் ஒரு சலசலப்பும் கைதட்டலும். நிகழ்ச்சி  முடிந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வளவாளராக வந்திருந்த ஒருவர் என்னை அழைத்து எந்தப் பாடசாலை? ஹைலன்ஸ் கல்லூரியா ? எனக் கேட்டார். ஆம் என்றேன். நானும் ஹைலன்ஸ்தான். இப்படி முன்வந்து பேசுவது முக்கிய பண்பு. நல்ல பேச்சு என பாராட்டிவிட்டு கொழும்பு வந்தால் என்னை வந்து சந்திக்கலாம் என தனது விசிட்டிங் கார்ட்டைத் தந்தார். அதில்  எம். வாமதேவன் மேலதிகப் பணிப்பாளர் நிதி திட்டமிடல் திணைக்களம்  என்று இருந்தது.

இப்படியாக அவருடனான அறிமுகத்தை அடுத்து உயர்தரம் முடிய கொழும்பு வந்த நாள் ஒன்றில் இப்போதைய ஜனாதிபதி செயலகத்தில் இருந்த அவரது அலுவலகத்தில் அவரைச் சந்திக்கச் சென்றேன். அதனையும் பாராட்டிய அவர் அடுத்து வீட்டுக்கு வருமாறு முகவரி கூறினார். முதலாவது சந்திப்பிலேயே எனக்கு விருந்தளித்தார். ஊக்கமூட்டினார் இவ்வாறு எனக்கும் அவருக்குமான நட்பு இறுக்கமானது. 2000 ஆம் ஆண்டு நான் நடாத்திய கல்வியக பரிசளிப்பு விழாவுக்கு இவரையே பிரதம விருந்தினராக அழைத்து மாணவர்கள் மத்தியில் பேச வைத்தேன். இவ்வாறு நட்பு பலவாறாக தொடர்ந்தது.

2014 ஆம் ஆண்டு எனது பாக்யா பதிப்பகத்தின் ஊடாக  வாமதேவன் அவர்கள் எழுதிய மலையகம்  சமத்துவ அபிவிருத்தியை நோக்கி எனும் நூலை  வெளியிடும் முயற்சிகளில் இருந்த காலத்தில் மீரியபெத்தை மண்சரிவு இடம் பெற்றது.

அதன்போது எல்லோரும் நிவாரணப் பணியில் இறங்கியபோது நாங்கள் அங்கே பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சிகளைச் செய்தோம். அதன்போது இத்தகைய அனுபவத்தை தன் இளமைக் காலத்தில் அனுபவிக்க நேர்ந்த வாமதேவன் அவர்களை உதாரணம் காட்டி நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று அந்த மாணவர்களை ஆற்றுப்படுத்த முடிந்தது. அதற்கு வெளியிடுவதற்கு தயாராக இருந்த அவரது நூல் பெரும் துணையாக இருந்தது.

எனினும், அவரது வாழ்க்கைக் குறிப்புகள் அந்த நூலில் இல்லை. அதனை உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தெரியச் செய்வதற்காக கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் அற்றைத் திங்கள் நிகழ்வில் அவரது அனுபவப் பகிர்வு ஒன்றை ஒழுங்கு செய்தேன்.  கூடவே வசந்தம் தொலைக்கா ட்சியில் தூவானம் எனும் இலக்கிய   நிகழ்ச்சியில் அந்த நூலை முன்னிறுத்தி அவரைப் பேச வைப்பதற்கான முயற்சி ஒன்றையும் ஒழுங்கு செய்தேன்.

அதில் அவர் பகிர்ந்து கொண்ட நினைவுகளைத் தொகுப்பாக்கி பத்திரிகைகளுக்கு எழுதியதுடன் இந்த அனுபவங்கள் நூல் உருப்பெறவேண்டும் என்ற எனது அவாவையும் முன்வைத்தேன். இன்று ஆறு ஆண்டுகள் கழித்து அந்த அவா நிறைவேறி இருக்கிறது.

இந்தப் பின்னணிகளை இங்கே எழுதக் காரணம் எம். வாமதேவன் இளைஞர்களை வழிநாடத்தக் கூடிய பண்புகளைக் கொண்டுள்ளமையைச் சுட்டிகள் காட்டவும், இந்த  நூல் பலரை ஆற்றுப்படுத்தும் பண்புகளைக் கொண்டது என்பதைக் எடுத்து காட்டுவதற்குமாகவே.

தான் பிறந்த கொட்டகலை பகுதியில் ஆரம்பித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தான் கல்வி கற்ற விதம் குறித்தும் அதற்காக அவர் எதிர் கொண்ட சவால்கள் குறித்தும் விரிவாக எழுதி உள்ளார். அத்துடன் தனது மாணவர் காலத்தில் தன்னை வழிநடத்திய ஆசரியர்கள் தொடர்பில் எழுதி உள்ளார்.

ஒரு நீரோடை பொல ஏறும் அவரது நினைவுகள் சீராக வாசகர்கள் இதயத்தைச் சென்றடைகிறது. ஆடம்பரமில்லாத எடுத்தியம்பும் முறைமை இயல்பாக அவரது அனுபவங்களை வாசகருக்கு சென்று சேர்க்கின்றன. பல இடங்களில் மனதைத் தொடும் சோகம் இழையோடும் அதேவேளை வாய்விட்டுச் சிரிக்க நல்ல சுவையான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார்.

தனது சாதனைகளை மாத்திரம் பட்டியல் இடாமல் தான் சந்தித்த சவால்களை அடைந்த தோல்விகளை பதிவு செய்கிறார்.

ஐம்பதாண்டுகால தன்வரலாற்று அனுபவங்களை அந்தந்த கால கட்ட அரசியல், தொழிற்சங்க, கல்விப்பின்புல, கலை இலக்கிய ஆளுமகளையும் சம்பவங்களையும் கூட தொட்டுக் காட்டிக் கொண்டே செல்வதனால் தன்வரலாறாக மட்டுமன்றி ஒரு கால கட்ட மலையக வரலாற்றுப் பதிவாகவும் கூட அனையாளப்படுத்த முடிகிறது.

தமது கல்லூரியின் மாணவர் சங்கமான தமிழ்ச் சங்கத்தில் செயலாளராக செயற்பட்ட காலத்தில் கவிஞர் சக்தீ பால அய்யா அவர்களை அழைத்து அவரது தலைமையில் கவியரங்கம்  ஒன்றை நடாத்தினோம். இன்று எத்தனை மலையகப் பாடசாலைகள் இத்தகைய நிகழ்வுகளை ஒழுங்கு செய்கின்றன எனும் கேள்வியை எமக்குள் எழுப்புகிறது. தொழிற்சங் கவாதி  வி.கே. வெள்ளையன் அவர்களின் ரஷ்ய பயணத்தின் பின்னதாக அவரை பாடசாலைக்கு அழைத்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்தோம் என பதிவு செய்கிறார்.

இன்று அவ்வாறு பயணம் மேற்கொண்ட ஒரு தொழிற்சங்க தலைவரை அழைத்துப் பேசவைக்க மலையகப் பாடசாலைகளால் முடியுமா ? அல்லது அத்தகைய தொழிற்சங்க தலைவர்கள்தான் உள்ளனரா என்ற கேள்வியையும் இந்தப் பதிவுகள் ஏற்படுத்துகின்றன.

அதேபோல ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சரான தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மலையக மக்களை வடக்கில் வந்து குடியேறுமாறு அழைப்பு விடுத்தபோது, அதற்கடுத்து மாணவராக உரையாற்றிய எம். வாமதேவன், அமைச்சரின் கருத்தை மறுதலித்ததுடன் மலையகம் எங்கள் மண்.

எங்கள் தாயகம். அதனை விட்டு நாங்கள் வெளியேற முடியாது' எனும் பொருள்பட பேசி பாராட்டைப் பெற்றுள்ளார். இவ்வாறு மாணவர்களை அமைச்சர்களுடன் விவாதம் செய்யும் வகையிலாக உரையாற்றச் செய்யும் நிலைமைகள் இன்றைய மலையக பாடசாலை சூழலில் காணப்படுகின்றனவா?என்ப ன போன்ற நினைவலைகளை உருவாக்கி விடும் நூலாக இது உள்ளது.

தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவர்கள்  வெளிநாடுகளுக்குச் சென்று ஆங்கில மொழி மூலத்தில் கல்வி கற்பதில் இருக்கக்கூடிய தயக்கத்தை தனது அனுபவங்கள் ஊடாக தகர்த்தெரிவதையும் அவதானிக்க முடிகிறது.

February/ 28/2021

மலையகத் தமிழர் சமூகம் அமைச்சு செயலாளர்  எனும் உயர் அரச பதவியை அடைவது சாதாரணமானதல்ல. ஏனெனில் இலங்கை பிரஜை அந்தஸ்த்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட மலையகத் தமிழர் சமூகம் அரசாங்க பாடசாலை கல்வி மறுக்கப்பட்டு தோட்டப் பாடசாலைகளில் கற்று அரச பணிகளில் சேர்வதே சிம்ம சொப்பனமாக இருந்த நிலையில், அந்தச் சூழலில் இருந்து வந்து அத்தகைய அரச உயர் பதவியைப் பெற்ற இரண்டாமவராக எம். வாமதேவன் திகழ்கிறார்.

மற்றையவர் பிரதாப் ராமானுஜம்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமானுஜம் அவர்களின் புதல்வர் ). அந்தப் பயணம் நோக்கிய அனுபவங்கள் இளைய மலையகத்தவர் மத்தியில் ஒரு உந்ததுதலைத் தரவல்லது.

இதற்கும் அப்பால் தனது இலக்கிய முயற்சிகள், விளையாட்டுத் துறை ஈடுபாடுகள் என அனைத்தையும் பதிவாக்கி உள்ளார். இந்தப் பதிவுகள் தனியே எழுத்துக்களால் மட்டுமன்றி படங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய படங்கள் சொல்லும் செய்திகள் இன்னுமொரு வரலாற்றுக் காட்சிப்படுத்தலை வாசகர் இடையே நிகழ்த்துகிறது.

இவ்வாறு இந்த தன்வரலாற்று நூல் ஒன்றை எழுதத் தூண்டுதலாக இருந்தும், படங்களையும் சேர்த்து வெளியிட பரிந்துரை செய்தும், அட்டைப் படத்தில் சேர்க்கப்பட்டுள்ள எம்.வாமதேவன் அவர்களது அழகிய புகைப்படத்தை எடுத்தும் பங்களிப்பு செய்யக் கிடைத்தமை எனக்குள் உள்ளூற மகிழ்ச்சி தருகிறது.

குமரன் பதிப்பக வெளியீடாக 251 பக்கங்களினாலான இந்த நூல் இளைய சமூகத்தினரால் வாசிக்கப்பட வேண்டியது.


பூசணி பிடுங்குதல்

 இலங்கையின் தெரிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கிய படைப்புகள் ஆங்கிலத்தில்

 - மல்லியப்புசந்தி திலகர்

1950 களில் இருந்தே இலங்கை சமூகம் பல எழுச்சிகளையும் அரசியல் அமைதியின்மையும் பரவலாக எதிர்கொண்டே வந்துள்ளது. இதனூடு புதிய பரிட்சார்த்த எழுத்துக்களும் உருப்பெற்றன. அவை ஈழத்திலும் வெளிநாடுகளிலுமான தமிழர் வாழ்க்கையின் கூட்டான வேதனைகளினதும் கவலைகளினதும் குரலாக பதிவு பெற்றன.

இலங்கை தமிழ் சமூகத்தின் ஒரு காலகட்ட போராட்டமானது உயிரஇழப்புகளையும், அழிவுகளையும், இடப்பெயர்வுகளையும் தோற்றுவித்தன. அவை கவிதைகளாக, சிறு கதைகளாக,நாடகங்களாக பதிவு பெற்ற விதத்தை இந்த தொகுப்பு பதிவு செய்ய முனைகிறது என்ற பின்னட்டைக் குறிப்பு இந்த நூலை வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

1952 ஆம் ஆண்டு பிறந்து 2014 இல் இவ்வுலகைவிட்டுப் பிரிந்த பேராசிரியர் செல்வா கனகநாயகம் தொகுத்திருக்கும் நூல் Uprooting the Pumpkin.

‘பூசணி பிடுங்குதல்’ என தமிழாக்கம் செய்து கொண்டாலும், இந்த பூசணி எப்போதுமே ஒரு ஆச்சரியம் தரும் தாவரவகைதான். சிலநேரம் ஊரின் நடுநாயகமாக அமைந்துவிடும் ஆலமரம் எனும் பெரு விருட்சம் தரும் ஆலங்காய் யார் கண்ணிலும் படுவதில்லை. அத்தனைச் சிறியது. பெரும்பாலும் பயன்பாட்டுக்கும் உள்ளாவதில்லை. ஆனால், வேலி ஓரமாக வளைந்து ஓடி வளரும் விரல் மொத்த கொடியில் காய்க்கும் பூசணிக்காயின் அளவோ அந்த கொடிக்கு எந்தத் தொடர்பும் இல்லாத மொத்தத்தில் இருக்கும். நன்கு முற்றிய பூசணிக் காயை கொடியில் இருந்து பிடுங்கியவுடன் அதன் சுமையைத் தூக்கிப் பார்த்தால் வரும் ஆச்சரியம்தான்; இத்தனைப் பாரத்தை எப்படி இந்த சின்னக் கொடி தாங்கி நின்றது என்பது !

இத்தகைய சூக்குமத்தை இலக்கிய இரசணையோடு எடுத்துச் சொல்லவோ என்னவோ ஈழத்து தமிழ் எழுத்தாளர்களின் 40 படைப்புகளை ஆங்கிலவாக்கம் செய்து தொகுத்திருக்கும் பேராசிரியர் செல்வா கனகநாயகம் இந்த தொகுப்புக்கு ‘பூசணி பிடுங்குதல்’ என தலைப்பிட்டிருக்கிறார்.

உள்ளடக்கத்தை விளக்கும் பக்கத்துக்கு முன்னமே Let No one Uproot the Pumpkin- Okot P’Bitek’, song of Lawino என்ற குறிப்பையும் தந்துவிடுகிறார்.

1932 ஆம் ஆண்டு பிறந்து 1982 ஆம் ஆண்டு மறைந்த ஆபிரிக்க கவிஞரான P’Bitek’ இன் அரசியல் சாரம் மிக்க அந்த கவிதையின் ‘யாரையும் பூசணிக்காயை பிடுக்க அனுமதிக்க வேண்டாம்’ எனும் கருத்திலான வரிகளை இட்டு பூசணிக்காய் பிடுங்குதல் எனும் தலைப்பில் நூலைத் தொகுத்திருப்பதும் ஓர் அரசியல்தான்.

236 பக்கங்களைக் கொண்ட இந்த நூலானது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பதிப்பாக 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளிவந்திருக்கிறது. ஈழத்து தமிழ் படைப்பாளிகள் நாற்பது பேரின் தெரிவு செய்யப்பட்ட படைப்புகளை அவர்கள் பிறந்த கால ஒழுங்கில் தெரிவு செய்து 24 கவிதைகள், 15 சிறுகதைகள் , ஒரு நாடகம் என ஒட்டுமொத்தத் தொகுப்பாக ஆங்கிலத்தில் தந்துள்ளார் செல்வா கனகநாயகம்.

1927 ஆம் ஆண்டு பிறந்த (1971 ல் மறைந்துவிட்டார்) மகாகவி - உருத்தி

ரமூர்த்தி யின் கவிதை, கவிதைப் பட்டியலில் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. மகா கவியின் அகலிகை, தேரும் திங்களும் ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ‘அகலிகை’ கவிதையை தொகுப்பாளர் செல்வா கனகநாயகமும், ‘தேரும் திங்களும்’ கவிதையை கவிஞர் சோ. பத்மநாதனும் தமிழாக்கம் செய்துள்ளனர்.

பென்குயின் வெளியீடாக 2013 ஆண்டு institute of Pondicherry வெளிக்கொணர்ந்த Time will write a song for you (காலம் உனக்கொரு பாட்டெழுதும்) எனும் சமகால இலங்கைத் தமிழ் எழுத்துக்கள் எனும் தொகுப்பிலும் முதல் ஆக்கமாக இடம்பெற்றது, மகாகவியின் ‘தேரும் திங்களும்’ கவிதைதான். அதில் Temple Car and the Moon என மொழிமாற்றம் செய்யப்பட்டிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நூலில் அது The Chariot and the Moon என தலைப்பிடப்பட்டு திருப்தியைத் தருவதாக உள்ளது.

சிறுகதைகளின் வரிசையில் 1934 ஆம் ஆண்டு பிறந்த தெளிவத்தை ஜோசப்பின் ‘கூனல்’ சிறுகதை முதலாவதாக பதிவு பெற்றுள்ளது. “கூனல்” என்று ஒரு சிறுகதை. உலகப் பெருமைமிகு சிறுகதையாகவே அதை உணர்ந்தேன். ஏழையைக் கண்டு வருந்துவதைவிட ஏழ்மை குறித்து வருந்துவது கூடுதல் சுமை ஏற்றக்கூடியது. அதுபோன்ற சிறுகதைகளை, நாவல்களை கவனிக்காமல் விட்டது நமது பிழையா ? விரும்பியோ விரும்பாமலோ சிலரது படைப்புகள் அறியப்படாமலும், அறியப்படுத்தப்படாமலேயும் போய்விடுகிறது என ஆதங்கப்பட்டிருந்தார் மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி.(விஷ்ணுபுரம் விருது விழா தலைமையுரை - கோவை 2013-12-22)

இந்திரா பார்த்தசாரதியின் அந்த ஆதங்கத்தினை உணர்ந்தவராக 2014 ஆம் ஆண்டு தான் இறப்பதற்கு முன்பதாக இந்த தொகுப்பில் ‘கூனல்’ சிறுகதையை ஆங்கிலவாக்கமாக Deformity என பதிவு செய்ய எண்ணியுள்ளார் செல்வா கனகநாயகம். கதையை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் ஏ.ஜே.கனகரத்னா என்பது இன்னுமொரு பெருமிதம்.

இந்த கதையை இந்தத் தொகுப்பில் சேர்ப்பதற்கான காரணமாக தனது முன்னுரையிலே இவ்வாறு எழுதுகிறார் செல்வா கனகநாயகம்:

 

இலங்கைத் தமிழ் சமூகங்கள் அரிதாகவே ஒரே விதமானவையாக இருக்கும் . மதமும் பிரதேசமும் ( Religion and region ) அவர்களின் எழுத்தின் போக்கினை வேறுபடுத்தும் காரணிகளாகின்றன. வடபகுதியில் இருந்துவரும் எழுத்துக்களில் இருந்து குறிப்பிடத்தக்க வேறுபட்ட தன்மைகளைக் கொண்டதாக கிழக்கில் இருந்து வரும் எழுத்துக்களில் பிரதிபலிக்கும். மலைநாட்டில் வரும் தமிழ் எழுத்தாளர்களிடத்தில் முற்றிலும் வேறுபட்ட முன்னோக்கங்கள் காணப்படும்....

கிழக்கிழங்கையிலும் மத்திய மலைநாட்டிலும் வாழும் தமிழர்கள் தாம் சொல்வதற்கு என தனியான கதைக்களங்களைக் கொண்டுள்ளனர்.மலைநாட்டுத் தமிழர்களைப் பொறுத்தவரை காலனித்துவதக்கு முன்பிருந்த அதே ஒடுக்குமுறை பின்காலனித்துவ காலத்திலும் தொடர்வதைக் காணலாம். வேறுபட்ட வடிவங்களில் அவர்கள் சுரண்டலுக்கு உள்ளாகி விளிம்பு நிலைச்சமூகமாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தோன்றிய பல எழுத்தாளர்கள் அவற்றை வெளிப்படுத்தி உள்ளனர். தெளிவத்தை ஜோசப்பின் ‘கூனல்’ எனும் கதை இதற்கு ஓர் உதாரணமாகும் எனக் குறிக்கின்றார்.

இதே தொகுப்பில் வரும் எஸ்.ஶ்ரீதரனின் ‘ராமசாமி’ எனும் கதையையும் கூட தொகுப்பாசிரியர் இங்கே நினைவுபடுத்திச் செல்கின்றார். அந்தக் கதையில் வடபகுதிக்குச் சென்ற மலையகத்தவர்க்கு அங்கே நிகழக்கூடிய ஒடுக்குமுறைகளை வடபிரதேச எழுத்தாளரான ஶ்ரீதரன் விபரித்து இருப்பார்.

பிற கவிதைகளின் வரிசையில் கவிஞர்களான நீலாவணன், த.இராமலிங்கம், ஆர்.முருகையன், சண்முகம் சிவலிங்கம், எஸ்.சிவசேகரம், எம்.ஏ.நுஹ்மான், வ.ஐ.ச.ஜெயபாலன்,அ.யேசுராசா, மு.புஷ்பராஜன், புதுவை இரத்தினதுரை, சு.வில்வரத்தினம், கி.பி.அரவிந்தன், திருமாவளவன், சோளைக்கிளி, ஆர்.சேரன், செழியன், எஸ்.கருணாகரன், வினோதினி சச்சிதானந்தன், ப.அகிலன், பஹீமா ஜெஹான், நட்சத்திரன் செவ்விந்தியன், அ.றஷ்மி, அனார் ஆகியோரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

சிறுகதைகள் வரிசையில் அ.முத்துலிங்கம், எஸ்.கதிர்காமநாதன், செ.யோகநாதன், எம்.எல்.எம்.மன்சூர், ரஞ்சகுமார், உமா வரதராஜன், குந்தவை, அ.ரவி, சித்தார்த்த சேகுவேரா, பார்த்தீபன், குமார் மூர்த்தி, சந்திரா ரவீந்திரன், ஷோபா சக்தி ஆகிய சிறுகதையாளர்களின் கதைகளும் இடம்பெற்றுள்ளன.

குழந்தை எம்.சண்முகலிங்கத்தின் ‘எமது பெற்றோரின் நிலம்’ எனும் நாடகப்பிரதியும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

ஏ.ஜே.கனகரத்னா, காஞ்சனா தாமோதரன், லக்‌ஷ்மி ஹோம்ஸரோம், ஆர்.முருகையன், பத்மா நாராயணனன், சோ.பத்மநாதன், எஸ்.ராஜசிங்கம், கோவர்த்தணன் ராமச்சந்திரன், எஸ்.சிவசேகரம் ஆகியோருடன் தொகுப்பாளர் செல்வா கனகநாயகம் அவர்களுமாக, தமிழில் வெளிவந்த படைப்புக்களை ஆங்கிலவாக்கம் செய்து தமது பங்களிப்பைச் செய்துள்ளனர்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராக  இருந்தவரும் 'தமிழ் இலக்கிய வரலாறு' நூலை எழுதியவருமான பேராசிரியர் செல்வநாயகம் அவர்களின் மகனான தொகுப்பாளர் செல்வா கனகநாயகம், கனடா - டொரொண்டோ பல்கலைக் கழகத்தில் ஆங்கில துறையில் பேராசிரியராக பணியாற்றியவர்.அத்தோடு தென் ஆசிய கற்கை துறையில் பின்காலனிய இலக்கிய ஆய்வுகளை மேற்கொண்டவர். பல தமிழ் இலக்கிய ன படைப்புகளை ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பு செய்தவர். இந்த நூலை தொகுப்பதற்கு அவர் முயற்சி மேற்கொண்டிருந்த போதே 2014 ஆம் ஆண்டு காலமானார். அவரது மறைவின் பின்னரே 2016 ஆண்டு வெளிவந்திருக்கிறது.

பின்னட்டைக் குறிப்பில் எழுதப்பட்டிருப்பதுபோல காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ள இந்த எழுத்துக் களஞ்சியம், இலங்கை தமிழ் அடையாளத்தின் ஊடாக எழுந்த கருத்துக்களை இலக்கிய வடிவத்தில் பதிவு செய்துவைப்பதுபோல தனது செழுமையான இலக்கிய பணியால், குறிப்பாக இறக்கும் தறுவாயிலும் இத்தகைய தொகுப்பைத் தந்துவிட்டுப் போயிருக்கும் செல்வா கனகநாயகம் அவர்களும் இலங்கைத் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வார்.

***


இலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட வேண்டி இருக்கும்

( நேர்காணல் : யோ.தர்மராஜ்)

அரசாங்கம் வசம் ஜனாதிபதி பதவி இருக்கும்போது பாராளுமன்றத்தையும் தங்கள் பலத்தில் வைத்துக்கொள்ளவே ஆளுங்கட்சி தேர்தலைக் கோருகிறது. எதிர்கட்சி இப்போது பலமாக இருப்பதால் தேர்தலைப் பிற்போட்டு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோருகிறது. எனவே இரண்டு தரப்பிலும் அவர்தம் சுயநலம் உண்டு. சிலவேளை எதிர் கட்சி தற்போது பெரும்பான்மை கொண்டிருக்காவிட்டால் எப்படியான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் எனும் கேள்வியும் உள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், தேர்தலைப் பிற்பொடுவதால் நாட்டில் ஜனநாயக சூழல் உருவாவது பின்னோக்கிப் போகிறது எனும் அபாயம் உள்ளது இனி இலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார்.

 

கொரொனா தொற்றுடன் உங்களைப் போன்ற அரசியல் தலைவர்களை காண முடியாதுள்ளதே ஏன்?

இந்த கொரொனா காலத்தில் எல்லோரும் வீட்டிலேயே இருங்கள் வெளியே செல்லாதீர்கள் எனும்போது எங்களைப் போன்ற அரசியல்வாதிகளை நீங்கள் எங்கே காணவேண்டும் என எண்ணுகிறீர்கள்?. சமூக சேவை செய்து களைத்துப் படுத்துறங்கும் ஓர் அரசியல்வாதியை நீங்கள் அவரது முகநூலில் பார்ப்பதில் திருப்தி அடையலாம்.அந்தப்படம் யாரால் எடுக்கப்பட்டது? எப்படி அவரது முநூலிலேயே பதிவேற்றம்பெற்றது பொன்ற மறுபக்கங்களும் அதில் உண்டு.

என்னால் முடிந்த பணிகளை வீட்டில் இருந்தவாறு செய்துகொண்டு எழுத்து வேலைகளில் அதிக கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறேன். அவை ஊடகங்களிலும் எனது சமூக வலைத்தள பக்கங்களிலும் வந்து கொண்டு இருக்கின்றன. அதனால்தான் நீங்களும் இப்போது என்னைப் பேட்டி காணும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அவசியம் என கருதப்பட்ட கூட்டங்களுக்குச் சென்று வந்து கொண்டு இருக்கிறேன் . தேவையானவர்களுடன் பேசி தீர்வுகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன் .

 

கொரொனா தொற்று அச்சுறுத்தலையடுத்து மலையக மக்களுக்கு வழங்கும் நிவாரண பொருட்களிலும் மலையக தலைவர்கள் அரசியல் இலாபம் தேடுவதா மக்களின் நகுற்றச்சாட்டை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

அவர்கள் அரசியல்தலைவர்களாக அல்லது மக்கள் பிரதிநிதிகளாக அந்த நிவாரணப் பணிகளை முன்னெடுக்கிறார்களா? அல்லது “வேட்பாளர்களாக” நிவாரணப் பணி செய்கிறார்களா என்ற கேள்விக்கு விடை தேடினால் உங்களுக்கு இந்தக் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும்.என்னைப் பொறுத்தவரை தேர்தல் காலத்தில் இந்த கொரொனா இடர் வந்திருக்காவிட்டால் அரசியல்வாதிகள் தமது சொந்த நிதியில் இந்தளவுக்கு நிவாரணம் வழங்கி இருப்பார்கள் என நான் எண்ணவில்லை. எனவே வேட்பாளராக தனது பெயரை முன்னிறுத்தி நிவாரணம் வழங்குவது அரசியல் லாபம் என நீங்கள் கருதினால் நானும் ஆம் என்றேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும் அரசியல்வாதிகளின் பணி அரசாங்கத்திடம் இருந்து மக்களுக்கு தேவையான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என்பது. அதனை எவ்வாறு செய்யலாம் எனும் ஆலோசனையை கொரொனா ஆரம்ப நாட்களிலேயே என்சாரந்த அரசியல் கூட்டணிக்கு நான் முன்வைத்தேன்.இன்றுவரை அது பற்றி அக்கறைகொள்ளாமை தொடர்பாக உள்ளக ரீதியாகவும் பகிரங்கமாகவும் எனது அதிருப்பதியைப் பதிவு செய்துள்ளேன்.

பாராளுமன்றம் இயங்கி இருந்தால் கட்சி அல்லது கூட்டணி எல்லைகளைக் கடந்து அந்த அழுத்தத்தை பாராளுமன்றத்தின் ஊடாக வழங்கி இருப்பேன். துரதிஸ்டவசமாக இப்போது அதுவும் இல்லை என்ற அடிப்படையில் கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம் அவ்வாறான ஒன்று நடக்காதது கவலைக்குரிய விடயம் . அரசியல் இயக்கங்களும் நிவாரணம் பொதி வழங்குவதோடு திருப்தி அடையுமானால் அவை தர்மஸ்தாபனமாகவே இயங்கிவிட்டுப் போகலாம்.

 

இவ்வாறான அசாதாரண நிலைமைகளில் கூட மலையத் தலைவர்களிடத்தில் ஒற்றுமையின்மை மக்களை பாதிக்காதா?

மலையக அரசியல் தலைவர்களிடம் மாத்திரமல்ல இலங்கையின் எந்த அரசியல் தலைவர்களிடத்திலும் அப்படியான ஒற்றுமையைக் காணக்கிடைக்கவில்லை. மாறாக உள் முரண்பாடுகள் கூட அதிகளவு வெளிப்பட்டு நிற்பதை அவதானிக்கலாம். இது இலங்கை அரசியல் கட்டமைப்புக்கு ஏற்பட்டு இருக்கும் சாபம்.

மலையக மக்களுக்கு எப்போதும் ஏமாற்றம் மட்டுமா கிட்டும், 1000 மற்றும் 50 ரூபா என

ஏமாற்றப்பட்ட மக்களுக்கு பின்னர் சம்பள உயர்விலும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அரசின் 5000 ரூபாவிலும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதற்கு அரசின் அக்கறையின்மையா

அல்லது மலையத் தலைவர்களின் பொறுப்பற்றத் தன்மை காரணமா?

இதன் பின்னணியைத் தேடி பார்க்க வேண்டியது ஊடகவியலாளர்களாக உங்களைப் போன்றவர்களது கடமை. நான் இது தொடர்பாக தொடர்ந்து பேசி வந்துள்ளேன் . கொரொனா இடர்கால ஆரம்பத்தில் இதனை வலியுறுத்தி கூறி இருந்தேன் .

இந்தப் பேட்டி வெளிவரும் இதே நாளில் உங்களது சகோதர ஊடகம் ஒன்றுக்கு விரிவான கட்டுரை ஒன்றையும் எழுதி உள்ளேன் . எனவே இங்கே சுருக்கமாக சொல்கிறேன்.

மலையக மக்கள் அரச பொது நிர்வாகத்தில் முழுமையாக உள்வாங்கப்படாமையே இதற்கான காரணம். அதற்கு பல தடைகள் உள்ளன. அவற்றை ஓரளவுக்கு நிவர்த்திக்கும் வகையிலேயே மலையக அதிகார சபை உருவாக்கப்பட்டது. அது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம். அந்த சட்டத்தை இன்னும் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிக்க வில்லை. ஆனால் அந்தச் சட்டத்தின்படி அமையப்பெற்ற அதிகாரசபையின் அனைத்து வெற்றிடங்களும் நிரப்பபட்டுள்ளன. எனவே இப்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் அந்த அதிகாரம் கொண்ட பதவியில் இருப்போர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என குறைந்த பட்சம் ஊடகங்கள் தானும் கேள்வி எழுப்பலாம்.

மார்ச் மாத சம்பளத்தில் 1000 ரூபா சம்பளம் உயர்வு கிடைக்குமென கூறியதை பெற்றுக் கொள்ள முடியாதமைக்கு கொரோனா காரணமாகிற்றா?

இல்லை. அது சாத்தியமில்லை என்பதை அமைச்சரவை அனுமதி வழங்கிவிட்டது என்ற அறிவிப்பு வந்த ஜனவரி மாதம் முதலே பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் நான் பகிரங்கமாக தெரிவித்து வந்துள்ளேன். கொரொனா வருவதற்கு முன்னர் அரசாங்கம் - கம்பனி - தொழிற்சங்கம் ஆகிய முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தது என்பதை மறந்துவிணக்கூடாது . மார்ச் 19 தான் கொரொனா ஊரடங்கு வந்தது. மார்ச் 1 முதல் கொடுப்பதாகவே சொன்னார்கள். பெருந்தோட்டத்துறை கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவராமல் 1000 ரூபா மட்டுமல்ல மலையகத்தின் 1000 பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லை.

பெருந்தோட்ட மக்களுக்கு விடிவு கிடைக்குமென ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் கூறுகின்ற போதிலும் அரசுக்கு அரசு ஏமாற்றமடைவது பெருந்தோட்ட மக்களின் விதியா அல்லது மலையக அரசியல்வாதிகளின் தந்திர அரசியலா?

ராஜதந்திரமற்ற அரசியல் எனலாம். மக்களுக்கான அரசியலை முன்வைக்கும் இதயசுத்தியும், ஈடுபாடும், அர்ப்பணிப்பும் சார்ந்த அரசியல் பணி அவசியம். பாராளுமன்றத்தை சரியாக பயன்படுத்தவும் தெரிய வேண்டும். தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காக சுதந்திரத்துக்குப் பின்வந்த அனைத்து மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்கள்ளையும் ஆய்வுக்கு உட்படுத்தி குறைந்த பட்சம் ஒருவர் எத்தனை மலையக பிரச்சினைகளை பிரேரணையாக முன்வைத்த உள்ளார்கள் என்பதைத்தானும் உங்களால் கண்டுபிடிக்க முடியுமானால் உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.

தேர்தல் ஆணைக்குழுவுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் உறுப்பினர் என்ற வகையில் பாராளுமன்றத் தேர்தல் கள நிலவரங்கள் எவ்வாறுள்ளது?

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான தொழிலாளர் தேசிய முன்னணி யின் பொதுச் செயலாளர் என்ற வகையிலேயே நான் கலந்து கொள்கிறேன். எமது கட்சி ஐக்கிய மக்கள் சக்தி எனப்படும் கூட்டணியின் அங்கத்துவ கட்சி என்றஙவகையில் மார்ச் 11 க்குப்பிறகு மே 13 மாத்திரமே ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்தில் பகிரப்பட்ட கருத்துகள் அடிப்படையில் ஆளும் கட்சியின் ஆதரவு கட்சிகள் தேர்தல் நடாத்தப்படவேண்டும் என்றும் எதிர்கட்சிகள் பிற்போடப்படவேண்டும் என்ற கருத்தும் வெளிப்பட்டது.

பிற்பொடைவது நல்லது எனும் எனது கருத்து கொரொனா பரவல் ஏதும் வந்துவிடும் எனும் அச்சந்தான். மற்றபடி தேர்தலைப் பிற்பொடுவதால் நாட்டில் ஜனநாயக சூழல் உருவாவது பின்னோக்கிப் போகிறது எனும் அபாயம் உள்ளது. அதனாலேயே தேர்தல். செலவுகள் குறித்து கேட்டிருந்தேன். இனி ஆறுமாதங்கள் கழித்துதான் தேர்தல் என்றாலும் அது இப்போதைய செலவுமதிப்பீட்டின் இரட்டிப்பைவிட அதிகரிக்கும் என ஆணையாளர் பதில் அளித்தார். இனி இலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட வேண்டி இருக்கும்.

ஜூன் பாராளுமன்றத் தேர்தல் நடக்குமா?  நடத்தாவிட்டால் அரசியலமைப்பின் படி அடுத்தக் கட்ட நகர்வுகள் எவ்வாறிருக்க வேண்டும்?

இன்றைய திகதியில் ஜூன் நடக்க வாய்ப்பில்லை. அது தொடர்பில் 9 வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. எனவே நீதிமன்ற தீர்ப்பு அடுத்த வாரம் வெளிவரும் வரை உறுதியான திகதியைக் குறிப்பிடமுடியாது. ஆனால் திகதி மாறியென்றாலும் தேர்தல் நடக்கும் சாத்தியமே உள்ளது. நடக்காவிட்டால் அதுநடைபெறும் வரை நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பதை தீர்மானிக்கும் அடுத்த வழக்குகள் இடம்பெற வாய்ப்புண்டு. எனவே நீதியையே மக்கள் எதிர்பார்த்திருக்க வேண்டி உள்ளது.

ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுவதாக எதிர்க் கட்சியினர் குற்றச்சாட்டுவதில் உண்மையுள்ளதா?

ஜூன் முதலாம் திகதிவரை அவருக்கு அரசியலமைப்பு ரீதியாக பாராளுமன்றம் இன்றி நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரம் ஐனாதிபதிக்கு உண்டு. மார்ச் 2 முதல் ஜூன் 1 வரையான அந்த மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடாத்தி புதிய பாராளுமன்றத்தை அமைக்கும் நிபந்தனையுடனேயே தனது அதிகாரத்தைக் கொண்டு ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.எனவே தேர்தலை நடாத்த அவரது அணி முனைகிறது என கொள்ளலாம். ஆனால் கொரொனா இடர் இயல்பாக தேர்தல் திகதியை பின்கொண்டு சென்றதால் உருவாகியுள்ள புதிய சூழல் அரசியலமைப்பு திகில் நிலையைத் தோற்றுவித்துள்ளன.

அச்சத்துடன் தேர்தலுக்கான நகர்வுகளை அரசு முன்னெடுப்பது அரசின் சுயநலமா அல்லது அரசின் பலமா?

கொரொனா இல்லாவிட்டாலும்கூட எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் கூட்டணி ஆட்சியமைக்கும் பலத்தை பெறும் அரசியல் சூழ்நிலையே நாட்டில் உள்ளது. கலைக்கப்பட்ட பாராளுமன்றில் பெரும்பான்மைக் கொண்டிருந்த ஐக்கிய தேசிய முன்னணி ஐக்கிய தேசிய கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சக்தியாகவும் இரு பிரிவுகளாக களம் இறங்குகின்றனர் என்பதே இதற்கான பிரதான காரணமாகும்.

இந்த நிலையில் அரசாங்கம் வசம் ஜனாதிபதி பதவி இருக்கும்போது பாராளுமன்றத்தையும் தங்கள் பலத்தில் வைத்துக்கொள்ளவே ஆளுங்கட்சி தேர்தலைக் கோருகிறது. எதிர்கட்சி இப்போது பலமாக இருப்பதால் தேர்தலைப் பிற்போட்டு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோருகிறது. எனவே இரண்டு தரப்பிலும் அவர்தம் சுயநலம உண்டு. சிலவேளை எதிர் கட்சி தற்போது பெரும்பான்மை கொண்டிருக்காவிட்டால் எப்படியான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் எனும் கேள்வியும் உள்ளது. கொரொனா அச்சுறுத்தல் தொடர்பாக சுகாதார துறை அறிக்கை சாதகமான சமிக்ஞையை காட்டினால் தேர்தலை நடாத்திவிடுவது ஒட்டுமொத்த முடிவைத் தந்துவிடும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

பாராளுமன்றத் தேர்தலில் உங்னளைப் போன்ற படித்த அரசியல்வாதிகளுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

படிப்பதற்கு பணத்தை செலவிட்டுவிட்டேன். அவை என்னுள் மனித மூலதனமாகவும் ( Human. Capital ) ஐந்தாண்டு பதவி காலத்தின் பின் சமூக மூலதனமாகவும் ( Social Capital ) ஆகவும் மாறி இருக்கிறது. ஒரு மனிதனுக்குள் இருக்கும் மனித மூலதனத்தையோ அவன்பால் சார்ந்திருக்கும் சமூக மூலதனத்தையோ உணர்ந்து கொள்ளும் அரசியல் கலாசாரம் நம் இடையே இன்னும் ஏற்படவில்லை என நினைக்கிறேன். எனது படிப்பு செலவுகளுக்கு தோட்டத் தொழிலாளிகளான எனது பெற்றோரின் உழைப்பும் சிறுவயது முதலான உழைப்பும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

“திலகர் நன்றாக பாராளுமன்றில் பேசுகிறார்” என்று யாராவது சொன்னால், அது அம்மா அப்பாவின் உழைப்பின் விளைச்சல் என அவர்களுக்கே அதனைக் காணிக்கையாக்குவேன். அந்த அம்மா அப்பா போல ஆயிரமாயிரம் அம்மா அப்பாவின் பிள்ளையாக அவர்களுக்கான குரலாக ஒலிப்பதே எனது இலக்கு. கடந்த முறை போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்ட போது அந்த ஆயிரமாயிரம் அம்மா அப்பாக்களும் சகோதரர்களும் சகோதரிகளும் எனக்கு அறுபத்தேழாயிரம் வாக்குகளை வழங்கி ஆசிர்வதித்திருந்தார்கள். அதற்கான நியாயத்தை ( justify ) நான் கடந்த நான்கரை வருடங்களில் வழங்கி உள்ளேன் என நம்புகிறேன். அந்த திருப்தியோடு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறேன். இந்தமுறை யும் களமிறங்கியிருந்தால் எனக்கான ஆசீர்வாதம் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை.

தேசியப் பட்டியலில் தெரிவு செய்வது குறித்து முன்னரே உங்களிடம் பேசப்பட்டதா அல்லது கட்சியே தீர்மானித்து உங்களிடம் அனுமதிக்கோரியதா?

இல்லை. கட்சி மட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஒரு கூட்டம் நடாத்தப்பட்டு அந்த முடிவு எடுக்கப்படவில்லை. மார்ச் முதலாம் திகதி இடம்பெற்ற தேசிய சபை கூட்டத்தில் பின்னர் தீர்மானிக்கப்படும் என சொல்லப்பட்டபோதும் அவ்வாறு எந்த கூட்டமும் 19 ம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் வரை நடாத்தப்படவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு தலைமையினால் அறிவிக்கப்பட்டது. அதன்போது கட்சி உயர்பீடத்தையோ நிர்வாக சபையையும் கூட்டுவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. ஆனால் கூட்டணி யின் உயர்பீடம் மார்ச் 15 கூடியது. அதிலும் எனக்கு அறிவிக்கப்பட்டதை நானே கூட்டணி உயர்பீடத்துக்கும் அறிவித்தேன்.

அப்போதைய சூழலில் நிபந்தனைகளின் அடிப்படையில் தேசிய பட்டியலுக்கான பெயர் பிரேரணையை ஏற்றுக் கொண்டேன். ஆனால் அந்தக்கூட்டத்துக்குப் பின்னர் நடந்த சம்பவங்கள் காரணமாக தேசிய பட்டியலிலும் எனது பெயர் இடம்பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வந்து அதற்கான வேட்பு மனுவிலும் கையொப்பம் இடுவதில் இருந்தும் என்னைத் தவிரத்துக் கொண்டேன். அப்போதும் தொடர்ந்து கட்சியில் இயங்கும் உடன்பாடு எனக்கு இருந்தது. எனினும் வேட்புமனுவுக்கு முதல்நாள் தலைமை தனிப்பட்ட ரீதியில் எனக்கு உத்தரவாதம் அளித்து எனது இல்லத்துக்கு வந்து அழைத்துச்சென்று மனுவில் கையொப்பம் இடக் கோரியதன் பின்னணியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் எனது பெயரும் உள்ளது. அதனைப் பெற்றுக் கொடுப்பதை கட்சித்தலைமையும் கூட்டணி உயர்பீடமுமே இனித் தீர்மானிக்க வேண்டும்.எனது கையில் ஒன்றும் இல்லை. ஏனெனில் 2010 ல் நான் நடந்த நாடகத்தின் காட்சிகளில் நான் திரும்பவும் நடிக்கத் தயார் இல்லை.

 

உங்களைப் போன்றவர்களை போட்டியிடுவதிலிருந்து புறக்கணிப்பதன் ஊடாக பாராளுமன்றத்திற்கு இளையத் தலைமுறையினரின் வருகைகான கதவுகள் மூத்த அரசியல் தலைவர்களால் மூடப்படுகின்றதாக நினைக்கின்றீர்களா?

இளமைத்முடிப்புடைவராக இருக்கவேண்டும், படித்தவராக இருக்கவேண்டும், பாராளுமன்றத்தில் பேசக்கூடியவராக இருக்கவேண்டும் என்பது போலவே பணம் படைத்தவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இந்த அரசியல் சூழலில் இருக்கிறது. நான் அதிஷ்டவசமாக அரசியலுக்கு வந்தவனல்ல. திட்டமிட்டே வந்தவன். யாரையும் நட்டப்படுத்தி நான் வரவில்லை. என்னோடு பயணித்தவர்களை இணைத்துக் கொண்டே எனது பயணம் செல்கிறது. என்னிடம் ஒரே கொள்கை. ஒரே கட்சி. எனது போராட்டங்களை அதற்குள்ளேயே நிகழ்த்துவேன். அஞ்சி ஓடமாட்டேன்.

சமூகத்திற்கான அரசியல் ஒன்றை முன்னெடுப்பதில் எதிர்கட்சியுடனான போராட்டத்தை விட உள்கட்சி கட்டமைப்பை கட்டி எழுப்புவதே கடினம் என்பது அரசியல் யதார்த்தம். ஊருக்குள் ஒரு மரணாதார சங்ககம், கலை, இலக்கிய மன்றம், விளையாட்டு கழகம் போன்றவற்றில் கூட இந்த உள் அரசியல் பிரச்சினைகளை பார்க்கலாம். இப்போது மலையக அரசியலை கட்சி பேதமின்றி விமர்சிக்கும் எல்லோரும் சேர்ந்து ஒரு கட்சியை தொடங்கினால் மலையக மக்களுக்கான தூய்மையான அரசியல் அமைப்பு உதயமாகிவிடும். ஏனெனில் இன்றைக்கு மலையக அரசியலை விமர்சிப்பவர்களே அதிகம் . அதற்கான காரணம் கூட எல்லோரிடத்திலும் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் அத்தகைய கட்சி ஒன்றை அவர்களால் ஏன் ஒன்றிணைந்து உருவாக்கிவிட முடியாதுள்ளது. இதுதான் அரசியலில் உள்ள பிரச்சினை என்பது புரியும்.

எனவே தொழிலாளர் தேசிய சங்க மீள எழுச்சிக்கு வித்திட்டவன் என்ற தகுதியும் தொழிலாளர் தேசிய முன்னணி யின் ஸ்தாபக செயலாளர் என்ற பலமும் என் இடத்தில் உண்டு. அதனடிப்படையில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை தொடரும். கதவுகளை மூட நான் அறை அரசில்காரன் அல்ல. கள அரசியல்காரன்.

நன்றி : ஞாயிறு தினக்குரல்

 


எண்பதாண்டுகளுக்கு முன் வெளிவந்த கோ.நடேசய்யர் எழுதிய நூலின் இரண்டாம் பதிப்பு

- மல்லியப்புசந்தி திலகர்

இலங்கை மலையக வரலாற்றில் கோ.நடேசய்யருக்கு என்று தனித்துவமான இடமுண்டு. 1920 களிலேயேமலையகப் பெருந்தோட்ட தொழிலாளர் மக்களிடையே தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்கி அவர்களைஅமைப்பாக்கம் செய்தவர். அத்தகைய அமைப்பாக்கத்தின் தொடர்ச்சியாகவே அந்த மக்கள்அரசியல்மயப்படுத்தப்பட்டனர். அதன்விளைவாக அப்போதைய நாடாளும் சபையான அரச பேரவையிலும் அந்தமக்களின் பிரிதிநிதியாக அங்கம் வகித்தார்.

இந்த அமைப்பாக்கத்தை  அரசியல், தொழிற்சங்கசெயற்பாட்டுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளாமல், அடிப்படையில் ஒரு பத்திரிகையாளரான நடேசய்யர்தனது பத்திரிகைப் பணியையும் தொடர்ந்தார். அவர் ‘தேசநேசன்’, ‘தேசபக்தன்’,’உரிமைப்போர்’, ‘ The Citizen’, ‘ The Forward’, உட்பட 11 பத்திரிகைகளையும் வெளியிட்டவர். அந்தப் பத்திரிகை ஒன்றில் அவர்எழுதிய ‘ ராமசாமி சேர்வையின் சரிதம்’ என்ற கதை மலையகத்தின் முதலாவது சிறுகதையாகவும் பதிவாகிறது.

இவ்வாறு தொழிற்சங்க, அரசியல், ஊடகவியல், இலக்கியம் ( சிறுகதை), வரிசையில் நாடகத்துறையிலும்ஈடுபட்டுள்ள இவர் நூல்களை அச்சிட்டு வெளியிட்டதன் மூலம் ஒரு பதிப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்தியமலையக நிர்மாண சிற்பி கோ.நடேசய்யர்.

தனதுபதிப்பு முயற்சிபள் மூலம் ‘வெற்றியுனதே’, ‘நீ மயங்குவதேன்’, ‘ புபேந்திரன் சிங்கன் அல்லதுநரேந்திரபதியின் நகர வாழ்க்கை’, ‘ இந்தியா - இலங்கை ஒப்பந்தம்’, ‘ தொழிலாளர் சட்ட புஸ்த்தகம்’, ‘ The Planter Raj’, ‘The Ceylon & Indian Critics’ ‘கணக்குப்பதிவு நூல்’, ‘ கணக்குப் பரிசோதனை’, ‘ ஆபில் எஞ்சின்’, போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டவர்.

அந்த வரிசையில் 1937 ஆம் அவர் வெளியிட்ட நூல்களில் ஒன்று ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர்அந்தரப் பிழைப்பு நாடகம்’. இந்த நாடகத்தில் வரும் பாடல்களை எழுதியவர் ஶ்ரீமதி கோ.ந.மீனாட்சிம்மாள்என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நூலினை கோ.நடேசய்யர் யாருக்கு உரிமையாக்கியுள்ளார் என்பதுஉணர்ச்சிகரமானது.

“அந்நியர் லாபம் பெற அந்திய நாட்டில் நெற்றி வியர்வை நிலத்தில் வீழ உழைத்துப் போதிய ஊதியமும் பெறாதுஉழலும் எனது இந்திய சகோதர சகோதரிகளுக்கு இந்தூல் உரிமையாக்கப்பெற்றது” எனக்குறிக்கின்றார்கோ.நடேசய்யர்.

இந்த நாடக நூல் மலையகப் பெருந்தோட்ட மக்களின் வரலாற்று ஆவணம் என்றவகையில் இதனை 2018 ஆண்டு மறுபதிப்பு செய்துள்ளார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அந்தனிஜீவா. 1937 ஆம் ஆண்டுகொழும்பு கமலா அச்சகத்தில் முதற்பதிப்பாக அச்சிடப்பட்டுள்ள இந்த நூலை கொழும்பு, குமரன் பதிப்பகம் ( புத்தக இல்லம்) மறுபதிப்பு செய்துள்ளது.

இலக்கியப் பயணியான ( Literary Traveller) அந்தனிஜீவா இந்தியா சென்றிருந்த சமயம் சென்னையில்நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் பற்றிய சிறப்பிதழாகவெளிவந்திருந்த ‘மாற்றுவெளி’ இதழில் ஆங்கில விரிவுரையாளரும் நாடக செயற்பாட்டாளருமானதிருமதி.

அ.மங்கை எழுதியிருந்த கட்டுரையில் இந்த நடேசய்யரின் நாடக நூலைப் படித்ததாக குறிப்பிட்டி ருந்ததை அறிந்து, ரோஜா முத்தையா நூலகத்துக்குச் சென்று அந்தப் பிரதியினைப் பெற்று இந்தமறுபதிப்பைக் கொண்டுவந்துள்ளார். அத்துடன் அ.மங்கை எழுதிய ‘மாற்றுவெளி’ ( 2010) கட்டுரையையும் இந்தநூலில் இணைத்துள்ளார். அதில் ‘நான் அறிந்தவரையில் தமிழில் அரசியல் அரங்கம் குறித்த வரலாற்றைஎழுதுகையில் தொழிற்சங்கவாதியாகவும் அரசியலில் தீவிரமாகவும் பணியாற்றிய ஒருவரின் நாடக முயற்சியாகஇந்நாடகத்தைக் காணலாம்’ என அ.மங்கை பதிவு செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

மேலும் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கேசரி தகவல் களஞ்சியத்தில்’ ஆய்வறிஞர் மு.நித்தியானந்தன்எழுதியுள்ள கட்டுரையை இந்த நூலுக்கான முன்னுரையாகவும் இணைத்துள்ளார் பதிப்பாசிரியர் அந்தனிஜீவா. அந்த கட்டுரையில் அற்புதமான பல தகவல்களைத் தரும் அது.நித்தியானந்தன் இறுதியாக இவ்வாறு நிறைவுசெய்கிறார்:

‘இந்த நாடகத்திற்கு நடேசய்யர் எழுதியிருக்கும் முகவுரை இலங்கையில் வாழும் இந்தியத் தொழிலாளர்களின்நிலைமை பற்றிய அரசியல் பிரகடனமாகும்.இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் தோட்டத்தொழிலாளர்கள் ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றப்பட்டு கடத்தப்பட்டு வருபவர்கள்தானே தவிர, தமதுசுயவிருப்பின் தெரிவில் வருபவர்கள் அல்லர் என்பதை நடேசய்யர் இந்நாடகநூலில் ஆணித்தரமாகவலியுறுத்துகிறார். இந்தத் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்கள் என்பதுதான்நடேசய்யர் இந்நூலில் உணர்த்த விரும்பும் உண்மையாகும்’.

இந்த மறுபதிப்பு நூலின் வெளியீட்டினை 2017 செப்தெம்பரில் பிரான்சில் இடம்பெற்ற உலகத்தமிழ் நாடகவிழாவில் நடாத்த பதிப்பாசிரியர் அந்தனிஜீவா எண்ணியிருந்தாலும் அது சாத்மியமற்றுப் போகவே, அதே ஆண்டுதமிழ்நாடு திண்டுக்கல் காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற மலையக இலக்கியஆய்வரங்கில் அப்போதைய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மயிலவாகனம் திலகராஜாகரங்களில் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு வெளியிட்டு வைத்தார்.

அதனை அடுத்து 2018 ஆம் ஆண்டுகொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் அறிமுகவிழாவினை நடாத்தி இருந்தார். இதன்போது கிழக்குப்பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராசா ‘ஈழத்தின் முதலாவது அரசியல் நாடக நூல்’ கோ.நடேசய்யரின் ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்’ எனஆதாரபூர்வமாக உரையாற்றி இருந்தார். இந்த விழாவிலும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கியதுடன் 50 பிரதிகளையும் கொள்வனவு செய்து மலையகப் பிரதேச நூலகங்களுக்கு வழங்கிவைத்திருந்தார் ம.திலகராஜா.

இந்த மறுபதிப்பைச் செய்து வெளியிட்ட அந்தனிஜீவா அனைவரதும் பாராட்டுக்குரியவர். அதேநேரம் இந்தநூலின் பிரதிகளை வாங்கி வாசித்து இந்த நாடகத்தை மேடையேற்றுவதே பதிப்பாசிரியருக்கும் நூலாசிரியர்கோ.நடேசய்யருக்கும் வழங்கும் கௌரவமாகும்.

 

 

 

 

 

 

 

 

 


41வது இலக்கிய சந்திப்புக்கான பயணத்தை முன்னிறுத்திய ஒரு நினைவுப்பதிவு

 -மல்லியப்புசந்தி திலகர்

2013 ஜுலை 19ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் செல்வதற்கு 16ஆம் திகதியே இரண்டு பஸ் டிக்கட்டுகளை எனக்கும், என் நண்பர் லெனின் மதிவானம் அவர்களுக்கும் பதிவு செய்து கொண்டேன்.

உலகின் பல நாடுகளுக்கு பயணித்துள்ள நான் சில நாடுகளுக்கு பலமுறை பயணித்துள்ளேன் என்றாலும், அப்போதெல்லாம் இல்லாத பரபரப்பும் ஒரு தவிப்பும் இப்போது எனக்குள் எழுந்து கொண்டேயிருந்தது.

நான் யாழ்ப்பாணம் செல்லும் பிரதான நோக்கம் அங்கு 20, 21

 

ஆம் திக

 

 

திகளில் நடக்கும் 41ஆவது இலக்கிய சந்திப்பில் உரையாற்றுவது. ஆரம்பத்தில் ஓர் ஆசிரியனாக பணியாற்றியதாலும் தற்போது முகாமைத்துவ உசாத்துணைவனாக பணி செய்வதாலும் கட்டுரை சமர்ப்பிப்பது, உரையாற்றுவது போன்ற விடயங்கள் பதற்றத்தைத் தருவதில்லை. இருந்தும் இந்தப் பயணத்தின் பரபரப்புக்கான காரணம் வேறாக இருந்தது.

1973ஆம் ஆண்டில் இலங்கையில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது, வறுமை தாங்காது அரசாங்கம் குடும்பத்துக்கு அரைக்கொத்து அரிசி கொடுத்த செப்டெம்பர் 29ஆம் திகதி நுவரெலியா மாவட்டம், வட்டகொடை நகருக்கு அருகேயுள்ள மடகொம்பரை எனும் தோட்டத்தில் ‘புதுக்காடு’ எனும் பிரிவில் தோட்டத் தொழிலாளர் லயன் குடியிருப்பில் நான்காவது பிள்ளையாக (முதலாவது ஆண்பிள்ளை சந்திரசேகரன் ஒரு வயதுக்குள்ளேயே இறந்து விட்டாராம்) பிறந்தவன் நான். மற்றைய இருவ

ரும் மூத்த சகோதரிகள்.

என் பிறப்பிற்கு இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்பே என் தந்தையின் அப்பா ‘தாத்தா’ குடும்பத்துடன் வன்னியின் கிளிநொச்சி-வட்டக்கச்சி பிரதேசத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். மலையகத்தில் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளிகளாக இருந்த குடும்பத்தை, காலம் வன்னியில் விவசாயப் பண்ணைகளில் தொழிலாளிகளாக்கியிருக்கிறது.

இடம்பெயர்ந்த குடும்பமென்பது, எனது மூன்று அத்தைமார்களையும் என் சிறிய தந்தையையும்

உள்ளடக்கியது. எங்கள் குடும்பமும் ஓர் அத்தையும் இரண்டு பெரியப்பாமாரும் மலையகத்தின் மடகொம்பரையில் தொடர்ந்து வாழ்ந்தனர். பின்னாளில் மூத்த பெரியப்பாவும் குடும்பத்தோடு வன்னியில் குடியேறிவிட்டார். எஞ்சியிருந்த நாங்கள் அவ்வப்போது வன்னிக்குச் சென்று வந்தோம். அப்படி முதல் தடவையாக ஐந்து வயதில் (1978) சிறிய தந்தையுடன் சென்று வந்த ஞாபகம் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. என் தாத்தாவையும், ஆச்சியையும் (மலையகத்தின் அப்பாயி -ஆச்சி யானது வன்னித் தொடர்பாக இருக்கலாம்) முதன்முதலாக பார்த்தது அப்போதுதான்.

1979ஆம் ஆண்டு மடகொம்பரை (வடக்கிமலை) தோட்டப் பாடசாலையில் மண் தரையில் அமர்ந்து, ‘ஆனா’ எழுதும் முன்னரே எங்கள் தோட்டத்திற்கு உள் நுழையும் பாதையோரத்தில் இருக்கும் பி.டபிள்யூ.டி குவாட்டர்ஸில் வாழ்ந்த சிங்களக் குடும்பத்தாருடன் இருந்த தொடர்புகள் காரணமாக ‘அயன்ன’ எழுதியிருந்தே

ன். அதற்கு முன்பு எனக்கே வயது தெரியாத நாளில் அடுத்த வீட்டு அந்தி நேர ‘நைட் ஸ்கூலில்’ ஐயா மேகராஜா (என் உறவு வழி சிறிய தந்தை – தற்பொது தமிழகம் குன்னூரில் வாழ்கிறார்) அவர்களினால் என்மீது ‘அரிச்சுவடி’ (அ முதல் Z வரை) எழுதப்பட்டிருந்தது. எனவேதான் அந்தத் தொழிலாளி சித்தப்பா மேகராஜாவையே என் ‘குருநாதர்’ என்று நான் எப்போதும் சொல்வதுண்டு. ‘மல்லியப்பு சந்தி’யில் இந்த குருநாதர் பற்றிய எனது பதிவுகளும் (மீண்டும் குழந்தையாகிறேன் பக்-96) என்னைப் பற்றிய அவரது பதிவுகளும் (குருவிடமிருந்து பக்-VII) உள்ளடங்கியுள்ளன.

1977இல் ஆட்சி மாறினாலும் எங்கள் பட்டினி மாறவில்லை. காலையில் ஒரு ‘இசுகோத்து’. பகலுக்கு ‘சவசவக்காய்’ (மலையகத்தில் பிரபலமான காய் வகை) அவியல், பொருளாதாரம் இடமளித்தால் இரவுக்கு கொஞ்சம் சோறு என நாட்கள் நகர்ந்த காலம் அது. வறுமை எங்

களை விரட்ட, வறுமையை விரட்ட அப்பாவுக்குத் தெரிந்த அடுத்த ஒரே வழி தானும் வன்னிக்குச் செல்வதுதான்.

அப்போதும் இருந்த இன வன்முறைகளைப் பார்த்து ‘இனி இந்த நாட்டில் வாழ்வதென்றால் சிங்கள மொழிக் கல்விதான் ஒரே வழி’ என்ற யாருடையதோ தூரநோக்கு சிந்தனையை உள்வாங்கிக் கொண்ட அப்பா, எங்கள் மூவரையும் வட்டகொடை சிங்கள வித்தியாலயத்தில் சேர்த்து விட்டார்.

ஒரு வருடமாக மடகொம்பரை தோட்டத்துப்பள்ளியில் ‘வேட்டி கட்டிய’ யாழ்ப்பாண வாத்தியார் ‘கோபிநாத்’ மாஸ்டர் (தவறு செய்தால் பின்பக்க தொடையில் நறுக்கென கிள்ளுவார். தற்போது பிரான்ஸில் வாழ்வதாக அறியக்கிடைக்கிறது.) அருமைநாயகம் மாஸ்டர் (மட்டக்களப்பு என நினைக்கிறேன்), பள்ளிக்கூட கங்காணி (அங்கேயுமா..!) ‘வத்தங்கி’ தாத்தா ஆகியோரிடமும், ‘அ’ எழுதிப் பழகிய ‘கள்ளுக்குச்சி-சிலேட்டிடமும்’ நண்பர்கள் பலரிடமும் பாலர் வகுப்பிலேயே விடை பெறவேண்டியதாயிற்று.

இப்போது மீண்டும் ‘அயன்ன’ சொல்லிக்கொடுக்க ‘மெனிக்கே டீச்சர்’, ‘அம

ரக்கோன் டீச்சர்’, ‘சரத் சேர்’, மற்றும் ‘விதான சேர்’ என பல சிங்கள ஆசிரியர்கள். மடகொம்பரை மண்தரைப் பள்ளியின் மதியாபரணம், குணராஜாவுக்குப் பதிலாக வட்டகொடையில் நண்பர்களாக ரவீந்திர, நந்தசேன, இந்திக்க, ஜயசேன என எல்லாம் மாறிப்போனது.

அவ்வப்போது அப்பா அனுப்பும் மணியோடர் பசியை ஆற்றியது. கடிதங்க

ள் ஆறுதலையும் ஆர்வத்தையும் தந்தன. கடிதத்தில் நாட்டு நடப்புகளை சுவாரஸ்யமாகவும் ‘பெருமை’யாகவும் எழுதியிருப்பார். ஆனாலும் எங்கள் வீட்டில் வறுமை நீடித்தது.

அம்மாவின் நாட்கூலி வறுமையைப் போக்க உதவியது. அப்பாவுக்கு மட்டுமல்ல, அம்மாவுக்கும் யாரோ தூரநோக்கு ‘ஐடியாவை’ கொடுத்திருக்க வேண்டும். ‘சிங்களமே படித்துவிட்டால் நாளைக்கு பிள்ளைகளுக்கு தமிழ் தெரிய வேண்டாமா?’. எனவே ‘சிங்கள பாடசாலை முடிந்ததும் அந்தியில் தமிழ் படிக்க’ வென ‘டிவிஷன்’க்கு (Tuition) சேர்த்து விட்டார். அதனால் அந்தியானதும் ‘வட்டகொடை ஸ்ரீ கிருஷ்ணா சமூக நலப் பாடசாலை’யில் ஆஜராகி விடுவோம். என் வாழ்வின் இன்னுமொரு வழிகாட்டி இந்தப் பள்ளியின் ஆசிரியர், நடத்துனர் சண்முகம் மாஸ்டர் அவர்கள். வட்டகொடை – சுப்பையா ராஜசேகரன் என சூரியகாந்தி பத்திரிகையில் எழுதி வருபவர். பாண் தந்து பசியைப் போக்கி, படிப்பு தந்து, வாழ்வையும் உயர்த்தியவர்.இவரைப் பற்றிய ஒரு பதிவும் மல்லியப்புசந்தியில் உண்டு.

1983ஆம் ஆண்டு ஜூலையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. தமிழர்கள் எரிந்து கொண்டிருந்த நாளில், நான் சிங்களப் பாடசாலையில் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். என் நண்பன் ‘ரவீந்திர’ ஏதோவொரு சண்டையில் என்னை ‘பறதெமளா’ என திட்டுகிறான். அடுத்த கணம் என் கை ஓங்குகிறது. அவன் வாயில் ரத்தம் வழிய, கையில் கடவாய்ப்பல் ஒன்றை ஏந்தியவாறு அழுது கொண்டிருக்க, அதிபர் முன்னிலையில் விசாரணை. சிங்களத்தில் வாக்குமூலம் கொடுக்கிறேன். (இப்போதும் அப்படித்தான்).

விதான ‘சேர்’ வெறுப்புமிழ்ந்து பார்க்கிறார். சரத் ‘சேர்’ கருணையோடு பார்க்கிறார். பாடசாலை நேரம் முடிய மணியும் அடித்தது. ‘நாளையும் விசாரணையும் தொடரும்’ என அனுப்பி வைத்தார்கள். வரிசையில் சென்ற எங்கள் மூவரையும் சரத் ‘சேர்’ ஓர் ஓரத்திற்கு அழைக்கிறார். அன்பாகப் பேசினார். ‘இனிமேல் இந்த பாடசாலைக்கு படிக்க வராதீர்கள். உங்கள் நன்மைக்குத்தான் சொல்லுகிறேன்’ என்றார். சிங்கள கலாசாரத்தின்படி அவரை வணங்கி விடைபெறுகிறோம். ‘புதுசரணை’ என ஆசிர்வதித்து அனுப்பினார்.

இன்றும் கூட வெள்ளைச்சட்டை, வெள்ளை நீளக்காற்சட்டை அணிந்து சுருள் முடி, கூர்மையான மூக்குடன் என் முன் புன்னகைத்து நிழலாடுகிறார் சரத் ‘சேர்’. உள்ளத்திலும் தோற்றத்திலும் உயர்ந்த மனிதர் சரத் ‘சேர்’.

அப்பாவினது ‘தூரநோக்கு’ நொடிப்பொழுதில் உடைந்துவிட, அம்மாவின் ‘தூரநோக்கு’ கைகொடுக்கிறது. எங்களை வட்டகொடை தமிழ் வித்தியாலயத்துக்கு அழைத்துச் சென்ற சண்முகம் மாஸ்டர், அதிபர் சண்முகநாதனுக்கு எங்களை அறிமுகப்படுத்தி நடந்தவற்றை விளக்குகிறார். சற்று யோசித்த அதிபர் மூன்றாம் வகுப்பு தமிழ்ப்பாட புத்தகத்தைக் கொண்டுவரச் சொல்லி வாசிக்கச் சொன்னார். மரியாதையுடன் கால்கள் இரண்டையும் கிட்டவாக வைத்து நேராக நின்றவன் மூச்சு விடாமல் வாசித்துக்கொண்டு சென்றேன்.

என் முதுகில் தட்டிக்கொடுத்தவாறே புன்னகைத்தார். "இங்கு (தமிழ்ப்பள்ளி) ஐந்தாம் வகுப்புக்காரன் இப்படி வாசிப்பானா என்பது எனக்குச் சந்தேகம்தான்" என சண்முகம் மாஸ்டரைப் பார்க்க, அவர் கடந்த மூன்று வருடம் அம்மாவின் வேண்டுகோளின் பேரில் தனது தனியார் பள்ளியின் மாலை வகுப்பு பற்றி விளக்கினார். நான் நன்றியோடு சண்முகம் மாஸ்டரைப் பார்த்தேன். "அப்பா வரையில்லையாடா.. தம்பி" என்றார் அதிபர். "அப்பா யாழ்ப்பாணத்தில் ரைஸ் மில்லில் வேலை செய்றார், நாங்கள் அம்மாவுடன் தான் இருக்கிறோம். எங்களுடன் சித்தப்பா வந்திருக்கிறார்" என அப்பாவின் தம்பி சித்தப்பா தர்மகுலராஜாவைக் காட்டினேன். "யாழ்ப்பாணத்தில் எந்த ஊர்?" என அதிபர் விசாரிக்க, "கொக்குவில்"என விபரத்தைச் சொன்னார் சித்தப்பா.

அப்பா ‘வன்னி’க்குப் போகவில்லை. அவர் போனதோ யாழ்ப்பாணத்திற்கு – அவர் அனுப்பும் கடிதங்களின் ‘என்விலப்பில்’ ‘…..’ ரைஸ் மில் (அரசி ஆலை) கொக்குவில். என அச்சடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு பூரிப்படைந்திருக்கிறேன்.

"அட… நான் இணுவில்காரனடா… ஏன் நீங்கள் இங்க கிடந்து மாயிறியள்… பேசாமல் அங்க போய் படியுங்கோடா… அதுவரைக்கும் இங்கு அனுமதிக்கிறன். அப்பாக்கு கடிதம் எழுதி விஷயத்தைச் சொல்லுங்கோ" என உடனடியாக வட்டகொடை தமிழ்ப்பள்ளியில் அனுமதித்த அதிபர், அடுத்த தூரநோக்கையும் எங்கள் தலையில் திணித்து விட்டார்.

சுமார் ஒரு மாதம் வட்டகொடை தமிழ்ப் பாடசாலையில் படித்திருப்பேன். எங்கள் உறவுகள் ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பபந்தத்தின் கீழ் இந்தியா (தாயகம்) திரும்பும்போது தோட்டத்தில் வீடு வீடாகச் சென்று ‘பயணம்’ சொல்லி வருவது போல் நாங்களும் பயணம் சொல்லிவிட்டு குடும்பமாய் வன்னிக்கு குடிபெயர்ந்தோம். அங்கு அக்காமாருடன் என்னையும் சேர்த்து கிளிநொச்சி சென்.திரேசா பள்ளியில் (ஐந்தாம் வகுப்பு வரை அப்போது அங்கு ஆண்பிள்ளைகளும் படிக்கலாம் – இப்போது எப்படியென்று தெரியவில்லை) சேர்த்து விட்டார்கள்.

இதில் அப்பாவின் தூரநோக்கம் ஏதும் இருந்ததா அல்லது கொக்குவில் பக்கத்திலேயே அப்பா வாழ்ந்தும் ‘கொக்குவில் இந்து’ வில் என்னைச் சேர்த்துக்கொள்ள முடியாத ‘ராசதந்திரம்’ ஏதும் நிகழ்ந்ததா எனத் தெரியவில்லை. 41வது இலக்கிய சந்திப்பில் சாதியம் பற்றிய அமர்வில் ஆசிரிய ஆலோசகர் திரு.ஏ.சி.ஜோர்ஜ் அவர்கள் ஆற்றிய உரை, அப்பாவிடம் இது பற்றி விசாரித்துப் பார்க்க வேண்டும் என இப்போது எனக்குள் ஒரு உந்துதலைக் கொடுத்துள்ளது.

கிளிநொச்சி, கரடிப்போக்கு, சென்.திரேசா பள்ளி நாட்கள் எனக்குள் பல மனத்தாக்கங்களைத் தந்தன. மலையகத் தோட்டத்தில் வாழும்போது அப்பாவை மட்டும் பிரிந்திருந்த நான் இப்போது அம்மாவையும் பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்களை வட்டக்கச்சி அத்தை வீட்டில் நிறுத்தி அங்கிருந்து பாடசாலைக்குப் போகுமாறு சொல்லிவிட்டு, அம்மாவும் அப்பாவும் யாழ்ப்பாண வேலைச்சூழலில் அமைந்த வீட்டில் தங்கிவிட்டார்கள். இடையிடையே யாழ்ப்பாண வீட்டிற்கு போய் வருவோம்.

அப்போதெல்லாம் கிளிநொச்சி – யாழ்ப்பாணம் பஸ்ஸில் ‘சித்திரச்செவ்வானாம் சிரிக்கக்கண்டேன் …..முத்தான முத்தம்மா’ -ஜெயச்சந்திரன் பாடலும், கண்ணே… கலைமானே…. ஜேசுதாஸ் பாடலும் ஒலித்துக் கொண்டிருக்கும். வானொலியில் கே.எஸ். ராஜா வெள்ளித்திரை விருந்து வைத்துக்கொண்டிருப்பார். சித்தப்பாவுடன் போய் சாந்தியில் ‘மாடிவீட்டு ஏழை’, வின்சரில் ‘அன்பே வா’, மனோகராவில் ‘மீண்டும் கோகிலா’ ராஜாவில்‘மூன்றாம் பிறை’, ராணியில் ‘டிக்…டிக்…டிக்’ பார்த்ததாகச் சின்னதாய் நினைவு இருக்கிறது.

அரிசி ஆலையின் நெல் காய விடுவதற்கான பெரிய சீமெந்துத் தளத்தின் ஓரத்தில் எங்களுக்கு சிறியதாய் ஒரு வீடு வழங்கப்பட்டிருந்தது. அந்தத் தளத்தில் எப்படி வேண்டுமானாலும் சைக்கிள் ஓடிப் பழகலாம். அவ்வளவு பெரியது. வலதுபக்கம் உள்நுழையும் ஒழுங்கையை மதில் மறைத்திருக்கும். வீட்டுக்குப் பின்னால் புளியமரம். கூரைக்கு ஏறிவிட்டால் புளியம்பழம் தின்று தீர்க்கலாம். வீட்டின் இடது பக்க ஓரத்தில் முருங்கை மரம். காயாகவும், கீரையாகவும் பறித்துவந்து ‘அம்மா’ கைப்பட சமைத்த உணவு யாழ்ப்பாண வீட்டின் மறக்க முடியாத அனுபவங்கள்.

லீவு முடிந்து திரும்பவும் கிளிநொச்சிக்குப்போய் பள்ளிக்குப் புறப்படுகையில் கண்களில் கண்ணீர் முட்டும் பாடசாலைக்குப் போக தயக்கமாக இருக்கும். மலையகத்தில் சிங்களப் பள்ளிக்குப் போகும்போது கூட இப்படித் தயங்கியது இல்லை.

நான் சிங்களப் பாடசாலையில் இருந்து வந்தவன். எனக்கு வகுப்பறையின் ‘டெக்னிக்கல் டேர்ம்ஸ்’ எல்லாம் தமிழில் வராது. ஆனால் தமிழ் பேசுவேன், வாசிப்பேன், படிப்பேன். உதாரணமாக ‘அழிறப்பர்’ என அங்குள்ள மாணவர்கள் சொல்ல, எனக்கு ‘ம(க்)கனே’ என்றுதான் வாயில் வரும். இரண்டுக்கும் அழிப்பான் என்றுதான் பொருள். ஆனால் முன்னையது தமிழ் பின்னையது சிங்களம் என்பதுதான் பிரச்சினை.

நான் தமிழன். ஆனால் என்னை எல்லோரும் ‘சிங்களவனாகவே’ பார்ப்பதாக உணருவேன். வகுப்பறையில் நான் கடைசி பெஞ்சில் அழுகை முட்ட உட்கார்ந்திருப்பேன். ஒருவன் மாத்திரம் எனக்கு நண்பன். நான் வாழ்க்கையில் மீண்டும் சந்திக்க மாட்டேனா என இன்றுவரை ஏங்கும் நண்பன் ‘நேசகுமார்’. அவன் கண்டி தெல்தெனியா பக்கத்தில் இருந்து ‘வன்செயலில் அடிபட்டு’ வந்திருந்தவன். அவன் தமிழ்ப் பாடசாலையில் இருந்து வந்ததால் அவனுக்கு இந்தத் தமிழ் ‘டெக்னிக்கல் டேர்ம்ஸ்’ எல்லாம் தெரிந்திருந்தது. அவனோடு இருக்கும்போது மட்டும் மனதுக்கு இலேசாக இருப்பதாக உணர்வேன்.

ஒருவாறு ஆண்டிறுதி பரீட்சை வந்தது. அதிக புள்ளி பெற்று முதலாமிடத்துக்கு வந்துவிட்டேன். அடுத்த வகுப்பில் முதல் வரிசையில் இடம் கிடைத்தது எப்படியென்று தெரியவில்லை. இப்போது ‘அழிறப்பர்’ மட்டுமல்ல ‘வெளிக்கிட்டு’, ‘சைக்கிள் உலக்கி’, ‘பேந்து’ என்றெல்லாம் பேசவும் தொடங்கி விட்டேன்.

அந்த நாளிலேயே அங்கு வாழ்ந்த மச்சான் செந்தூரனுடன் சேர்ந்து போய் ‘ஈஸ்வரா’ தியேட்டரில் ரஜினியின் ‘ஆறில் இருந்து அறுபது வரை’ பார்த்ததாகவும் ஞாபகம்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த காலத்தின் ஒரு நாள் பெரும் மழையினால் இரணைமடுக் குளம் உடைந்து பெருக்கெடுத்து ஓட, வட்டக்கச்சிக்கும் கிளிநொச்சிக்கும் இடையேயான பாதையின் ‘பன்னங்கண்டி’ பாலங்கள் காணாமல் போயின.

காலையில் பாடசாலைக்கு போய் விட்டோம் பின்னேரம் வீடு திரும்ப முடியவில்லை. ஊர் மக்களின் பகீரதப் பிரயத்தனத்தில் கட்டிய கட்டுமரத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி வீடு போய்ச் சேர்ந்தோம். பாடசாலை செல்வது அடிக்கடி தடைபட்டது. அப்பா மடகொம்பரை தோட்டத்துக்குப் போனவர் சுகவீனமடைந்ததால் மீண்டும் வடக்கு திரும்புவதில் சிக்கல் வந்தது. அம்மாவும் கிளிநொச்சி வந்து சேர அத்தை வீட்டாரினால் சுமையைத் தாங்க முடியவில்லை.

இப்போது எந்தத் தூரநோக்கும் இல்லாமல் மீண்டும் ‘மலையகம்’ திரும்பி விட்டோம்.
மீண்டும் சண்முகம் மாஸ்டர், சண்முகநாதன் அதிபர், வட்டகொடை தமிழ் வித்தியாலயம். மூன்றாம் வகுப்பில் போனவன் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கு வட்டகொடைக்கே திரும்ப வந்து நின்றேன். அந்தப் பரீட்சையில் சித்திபெற முடியாத அளவுக்கு ‘வீக்’ ஆகியிருந்தேன். இப்போது என் பேச்சில் யாழ்ப்பாண வாசனை அடித்தது. பாக்யலக்ஷ்மி, கோமதி, முத்துலக்ஷ்மி, ஞானாம்பிகை, பவானி, இன்னும்…மணி என பெயர் முடியும் இன்னொரு ஆசிரியை மற்றும் ‘கொத்துரொட்டி’ என பட்டப்பெயர் வைத்து நாங்கள் விளிக்கும் இரத்தினராஜா கணக்குவாத்தி என பல யாழ்ப்பாண ஆசிரியர்கள் வட்டகொடைப் பள்ளியில் பணியாற்றினார்கள்.

பாக்யலக்ஷ்மி டீச்சர் என்னை வைத்து யாழ்ப்பாண பேச்சு வழக்கிலான நாடகம் ஒன்றை வட்டகொடையில் மேடையேற்றினார்கள். அதில் எனக்கு ‘விதானையார்’ பாத்திரம். அசலாக நடிப்பதாக பாராட்டுப் பெற்றேன்.

கொஞ்சநாள் செல்ல மலையகத் தமிழ் மீண்டும் என்னோடு ஒட்டிக்கொண்டது. ஆனால் வட்டகொடைப் பள்ளி ஒட்டவில்லை. பின்பு சித்தப்பா தர்மகுலராஜா அவர் முன்பு படித்த பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் என்னையும் சேர்த்து விட்டார்.

நான் பள்ளியில் சேர்கிறேன். அதிபர் நடராஜா பதவி உயர்வு பெற்று போகிறார். பின்னாளில் அவர் எனக்கு நெருக்கமான போது, எனக்கு ‘புரமோஷன்’ கொடுத்தவன் என சிரிப்பார்.

அங்கும் குகேஸ்வரராஜா (வர்த்தகம்), இருதயநாதன் (தமிழ்), ராஜரட்னம் (கணிதம்), முரளிதரன் (விஞ்ஞானம்), விக்கினேஸ்வரன் (வகுப்பாசிரியர்) என யாழ்ப்பாண ஆசிரியர்கள் இருந்தனர். ஆசிரியர்.ஜி.முரளிதரன் நல்லதொரு கலைஞர். பேராசிரியர் மௌனகுருவின் (தகவலின்படி) ‘மழை’ நாடகத்தைத் தழுவி ‘விடியலைத்தேடும் விழிகள்’ எனும் நாடகத்தை என்னைப் பிரதானமாகக் கொண்டு இயக்கியிருந்தார். தமிழ்மொழித் தினப்போட்டிகளில் தேசிய மட்டம் வரை வந்த நாடகம் அது. தேசிய மட்டப் போட்டியில் கலந்துகொள்ள வந்துகொண்டிருந்த போது கொழும்பு – கண்டி வீதியில் நிட்டம்புவைப் பக்கமான வழியில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தினவுக்கு வைத்த குண்டில் பதற்றமடைந்து திரும்பிவிட்டோம்.

பின்னாளில் பி.பி.தேவராஜ் இந்து கலாசார அமைச்சராக தலைமை வகித்து நடாத்திய தேசிய சாகித்திய விழாவில் அந்த நாடகம் அரங்கேற்றப்பட்டு சிறந்த நடிகராகவும் (பாடசாலை நாட்களில்) தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.

1989ஆம் ஆண்டு ஜே.வி.பி கலவரம். இலங்கைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அந்நிய முதலீடுகளை அழிப்பதாகச் சொல்லி தேயிலைத் தொழிற்சாலைகளை தீயிட்டு கொளுத்திய காலம். ஜே.வி.பி. மலையகத் தொழிலாளர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் எச்சங்கள் என உச்சரித்திருந்தமையும் நினைவுக்கு வருகிறது.

மடகொம்பரையில் இருந்து பூண்டுலோயா பள்ளிக்குச் செல்லும் போது, இடையில் வரும் மடகும்புர காட்டுப்பகுதியில் பலர் கழுத்தில் டயர் மாட்டப்பட்டு எரியுண்டு கிடப்பதை பல தடவை பார்த்திருக்கிறேன். காலையில் பாடசாலை செல்லும்போது எங்கள் மடகொம்பரைத் தோட்டத்துரை (முகாமையாளர்) தர்மராஜா எனும் தமிழர், ஜே.வி.பி.யினரால் தலையில் சுடப்பட்டு வீதியோரத்தில் கிடந்ததை ஊருக்கு ஓடி தகவல் சொன்னதே நான்தான். அவரது கல்லறை இன்னும் ஊர் முகப்பில் சுட்டுக்கிடத்தப்பட்ட இடத்தில் அடையாளமாக உள்ளது.

அதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் மக்கள் கவிமணி சி.வி வேலுப்பிள்ளை அவர்களின் கல்லறை அதே வீதியோரத்தில் உள்ளது. தெற்கில் ஜே.வி.பி பிரச்சினையை உச்சமாகியிருந்த நிலையில் வடக்கில் இந்திய ராணுவத்தை வெளியேற்றிய நிலையில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. பேச்சுவார்த்தைக்கு என கொழும்புக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள் புலிகள். வன்னியே பாதுகாப்பானது போல் உணர்வு மீண்டும் ஏற்பட்டது.

1990ஆம் ஆண்டு க.பொ.த சா.த பரீட்சை எழுதிவிட்டு மீண்டும் வன்னிக்கு உயர்தரம் படிக்கவென கிளம்பியாயிற்று. இப்போது நான் மட்டும். இலங்கையில் 13ஆவது சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு பல மாற்றங்கள் நடந்து இந்தியப் படைகளும் வெளியேறியிருந்த காலம் அது. இப்போது நான் சென்று சேர்ந்த இடம் விஸ்வமடு. அங்கு ஓர் அத்தை குடும்பமும், பெரியப்பாவும் இருந்தார்கள்.

அத்தை வீட்டில் தங்கியிருந்து முரசுமோட்டையில் அல்லது கண்டாவளையில் உயர்தரம் படிக்கலாம் என எண்ணியிருந்தேன். விஸ்வமடுவில் எங்களுக்கு காணியும் இருந்தது. விடுமுறையில் மாமாவின் விவசாயத்துக்கு உதவிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது துவக்குகளுடன் நடந்த செல்லும் இயக்கப் போராளிகளை கண்டிருக்கிறேன்.

ஒரு நாள் காணிக்கு சைக்கிளில் போய்க்கொண்டிருந்த போது ஒழுங்கை வழியில் அகப்பட்ட முச்சந்தி ஒன்றில் எந்தப்பக்கமும் போக முடியாதவாறு துப்பாக்கித்தாங்கிய மூன்று சைக்கிள்களால் முடக்கப்பட்டேன். எனக்கு உதறல் எடுத்தது.

‘என்ன பெயர்? எங்கு வந்திருக்கிறாய்? எதற்காக வந்திருக்கிறாய்? ஈ.பியுடன் தொடர்பு உண்டா?’ இப்படி ஏகப்பட்ட கேள்விகள். உச்சி வெயிலில், முச்சந்தியில் நின்று பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். ஏற்கனவே இவர்கள் வீதியில் உலாவுவதைக் கண்டுள்ளதனால் அவர்கள் புலிகளென ஊகிக்க முடிந்தது. அவர்கள் விசாரணை முடிந்துவிட்டதாக நினைத்த சில நேரங்களின் பின்னர், ‘சரி போகலாம்’ என வழிவிட்டார்கள்.

சைக்கிளை உலக்கினேன் பயத்தோடும், பதற்றத்தோடும் காணிக்குப் போனேன். பின்னர் வீட்டுக்குப் போனேன். மாமாவிடம் விடயத்தைச் சொன்னேன். ‘அப்படியா?’ என நிதானமாகக் கேட்ட மாமா, ‘வெளிக்கிடு ஒரு இடத்துக்குப் போகலாம்’ என உத்தரவிட்டவராக அவசரமாய் வெளியே புறப்பட்டார். மலையகத் தொழிற்சங்கத் தலைவர் ஏ.அஸீஸ் அவர்கள் காலமான செய்தி வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

வெளியே சென்று வந்த மாமா ஆயத்தமாய் இருந்த என்னை அவரது சைக்கிளில் ஏற்றினார். வேகமாக மிதிக்கத் தொடங்கினார். நான் படிக்க நினைத்தாக எண்ணிய கண்டாவளை, முரசு மோட்டைப் பள்ளிக் கூடங்கள் எனது சைக்கிள் பயணத்தில் கடந்து போகின்றன. எங்கே போகிறோம் என தெரியவில்லை. என்னைப் பற்றிய சரியான தகவல்களைப் பதிவு செய்ய ‘பெரிய இடத்துக்கு’ மாமா அழைத்துச் செல்கிறார் என்ற கற்பனையோடு ‘சைக்கிள் பாரில்’ உட்கார்ந்து நானும் சப்போர்ட் மிதி கொடுக்கிறேன். அவர் ஒன்றும் பேசுவதாயில்லை. ‘பெரியதுகள் போய்விடு முன் நாம் போய் சேர்ந்து விடவேண்டும்’ என்ற நினைப்பில் மாமா சைக்கிள் மிதிப்பதாகவே எனக்குப் பட்டது. பரந்தன் ரயில்வே நிலையத்துக்கு முன் வந்து இறங்கிய பின்னர் தான் பேசினார்.

‘உனக்கு யாருடனும் தொடர்பில்லை என அவர்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டால் உனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் உங்கள் குடும்பத்துக்கு அதுவே பிரச்சினையாகி விடும். நீ வீட்டுக்கு ஒத்தையாள். எனக்கு தெரிந்த ஒரே வழி, உன்னை ஊருக்கு அனுப்புவதுதான்’ என்றார். அப்போதுதான் அவர் போய்விடும் என அவசரப்பட்டது ‘யாழ்தேவி’க்காக என்பது புரிந்தது எனக்கு.

முன்னர் படித்த சென்.திரேசா பாடசாலையை ரயிலில் இருந்தவாறே பார்த்துக் கொண்டு பொல்காவலை வழியாக வட்டகொடை வந்து சேர்ந்தேன். வந்து சேர்ந்து ஒரு மாதத்தில் இரண்டு பொலிஸ் நிலையங்கள் மடகொம்பரை வீட்டை சுற்றிவளைத்தது தனிக்கதை. ஆனால் அன்று என்னைப் பொல்காவலையில் இறக்கி விட்டுப்போன ‘யாழ்தேவி’ இன்றுவரை மீண்டும் யாழ்ப்பாணம் போகவில்லை என்பதுதான் தற்போதைய கதை. வவுனியா, தாண்டிக்குளம், என படிப்படியாக இப்போதுதான் கிளிநொச்சிப் போக எத்தணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த யாழ்தேவியின் மீள்பயணத்தை முந்திக்கொண்டு நான் இன்று பஸ்ஸில் யாழ்ப்பாணம் போகிறேன் என்பதால்தான் எனக்குள் இத்தனைப் பதற்றம், பரபரப்பு.

மாமா கூட எத்தனை ‘தூரநோக்குடன்’ செயற்பட்டிருக்கிறார். மாமா சொன்னதைக் கேட்டு அன்று வந்தவன் இன்று இருபத்து மூன்று வருடங்களுகுப் பின் வன்னியைக் கடந்து 27 வருடங்களுக்குப் பின் யாழ்ப்பாணத்துக்குப் போகிறேன்;. இந்த கால இடை வெளியில் வன்னியில் பெரியப்பா மகன் தவராஜா அண்ணன் தற்கொலை செய்து கொண்டிருந்தான். என்னைப் படம் பார்க்கக் கூட்டிப்போன அத்தை மகன் திருச்செந்தூரன் ‘நித்தி’ யாகப் புதைக்கப்பட்டிருந்தான். அத்தை மகள்- மச்சாள் சாந்தினி ‘பூங்குயிலாக’ விதைக்கப்பட்டிருந்தாள். இவர்கள் எல்லாம் மடகொம்பரை மண்ணில் பிறந்து கைக்குழந்தையாக வன்னிக்கு தூக்கிச் செல்லப்பட்டவர்கள் என்பதை யாரறிவார்? ‘ரெயிலராக’ தொழில் செய்த பெரியப்பா மெய்யர் (தங்கையா ரெயிலர்) இறுதிகட்டப் போரில் மக்களை வெளியேறுமாறு கோரப்பட்டபோது தனது தையல் மெஷின் மேல்பாகத்தை மட்டும் தூக்கிக்கொண்டே ஓடிவந்து, அதையும் தூக்க சக்தியில்லாமல் போட்டுவிட்டு வந்த துக்கத்திலேயே நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். ‘அருணாசலம்’ முள்வேலியில் இருந்து அவரை மீட்டெடுத்து வைத்தியம் பார்த்தும் வெற்றியளிக்காமல் இறந்துபோக அவர் பிறந்த மடகொம்பரை மண்ணிலேயே மீண்டும் புதைத்தோமே… இதையெல்லாம் என் மனதில் சுமந்தபடி எப்படி பதற்றமின்றி பயணப்படுவது?

நண்பர் லெனினுடன் உரையாடிக்கொண்டே பயணம் தொடர்ந்தது. இடையில் அவர் உறங்கிவிட்டாலும் எனக்குள் இருந்த தவிப்பு உறக்கத்தை ஏற்க மறுத்தது. சுவடுகளைப் பார்த்தவாறே பயணித்தேன். இப்போதைக்கு வன்னிக்குள் இறங்குவதில்லை என்ற முடிவோடு யாழ்ப்பாணத்திற்கு. இடையிடையே பஸ் ஓட்டுனரும் ‘மரண’ பயத்தைத் தரத் தவறவில்லை. சில இடங்களில் அவர் மீது கோபப்பட்டாலும் ‘புதிதாக’ திரும்பிப் போகும் எனக்குள் சில கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொண்டேன்.

பஸ்ஸில் ஊடகவியலாளர்கள் தேவகௌரி, துஷ்யந்தினி மற்றும் கேஷாயினி உடன் பயணித்தாலும் அதிகம் உரையாடக் கிடைக்கவில்லை. அதற்குப் போதுமான நேரடியான அறிமுகமும் அப்போது இருக்கவில்லை.
grope
யாழ்ப்பாணத்தில் இறங்கி நேரடியாக ‘இலக்கியச் சந்திப்பு’ நடக்கும் இடத்திற்குச் சென்றது முதல் அடுத்த நாள் சந்திப்பு முடியும் வரை அங்கிருந்து எங்கும் அசையவில்லை.

இரண்டாவது நாள்; காலையில் முதல் அமர்வில் நான் ‘மலையகக் கவிதை இலக்கிய செல்நெறியும்- மலையக தேசியமும்’ எனும் தலைப்பிலும், மாலையில் இறுதி அமர்வில் ‘மலையக தேசியம்- ஒரு பதிகை’ எனும் தலைப்பில் நண்பர் லெனின் மதிவானமும் உரையாற்றினோம். இரண்டாம் நாள் இரவே புறப்படும் எங்கள் திட்டம் தோல்வியடையுமாப்போல் தெரிய மேலதிக ஒரு நாளைக்குமாக பயணத்தை ஒத்திவைத்தோம்.

இரண்டாம் நாள் இரவு தங்குவதற்காக இடம் மாறி வந்தோம். நட்போடு ஆரம்பித்த நண்பர்கள் அசுரா, தேவதாஸ் அன்போடு அரவணைத்துக் கொண்டார்கள். தங்குமிடம் போகும் முன் ராகவன் – நிர்மலா வீட்டுக்குச் சென்றோம். மேசை மீது ஏறியமர்ந்த தேவதாஸ் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் மலைநாட்டுப் பாடலைப் பாட, நிர்மலாவும், சுமதியும் திருமதி. மீனாட்சியம்மாள் நடேசய்யர் பாடலைப் பாட கச்சேரியே ஆரம்பித்து விட்டது. கோவை நந்தன், அசுரா, ராகவன், லெனின் ஆகியோர் கைதட்டி உற்சாகமூட்ட பலரும் அதிகம் கேட்டிராத மலையகக் ‘கானா’ மன்னன் வட்டகொடை கபாலி செல்லனின் (அவர் இறந்து அப்போது ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை) தோட்டப்புற பாடல்களை நான் பாடினேன்.

‘நாடு… எந்த நாடு…
நம்பி வாழ… சொந்த நாடு…
அந்தரத்தில் வாழச் சொல்லி அனுப்பியிருக்கான் சிட்டிசன் கார்டு’, …..

‘ஏய்க்கிறான் ஆளு ஏய்க்கிறான்.. எங்கள ஏமாளி என்று சொல்லி ஏய்க்கிறான்…’
போன்ற துள்ளிசைப் பாடல்கள் நிர்மலா உள்ளிட்ட நண்பர்களை ஆட்டமே போடவைத்தன. பழகுவதற்கு இனிமையானவராக ஒரு தாய்மையின் ஸ்தானத்தில் இருந்து என்னை வாழ்த்தினார் நிர்மலா.

இலக்கிய சந்திப்பில் உள்ளடங்காது இரவில் இயல்பாக எழுந்த இசை அரங்கு மலையகப் பாடல்களை மாத்திரமே கொண்டிருந்தமை எதேச்சையாக நடந்த ஆச்சரியம். இரவு உணவை முடித்துக் கொண்டு இரவு தங்குவதற்கு இன்னுமொரு வீட்டுக்குச் சென்றோம்.

அங்கே, காகம் – பதிப்பக நண்பர்கள் இத்ரிஸ், இர்பான், இம்தாத் சகோதரர்களுடன் நவாஸ் சௌபி, ஸ்டாலின் ஞானம், விஜி, கவியுவன், தம்பிகள் ஜேசு, திலீபன் ஆகியோருடன் கலகலப்பான கதையாடல்களுடன் இரவு கழிந்தது.

நண்பர் இத்ரிஸ் மத்தியில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்து வழிநடத்த நாங்கள் வட்டமாக பாயில் அமர்ந்து விவாதிக்க இலக்கியச் சந்திப்பின் இன்னுமொரு அமர்வானது அந்த இரவு.

மூன்றாம் நாள் காலை. இருபத்துமூன்று வருடங்களுக்குப் பிறகு கப்பியிழுத்து கிணற்று நீர்க் குளியல். சில்லென்று இருந்தது காலையுணர்வு. நண்பர்களோடு காலையுணவு.

யாழ்ப்பாணத்தைச் சுற்றிப்பார்க்கப் போவதாக நானும் லெனினும் கிளம்பினோம். நண்பர் லெனினிடம் என் திட்டத்தைச் சொன்னேன். ‘ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் எங்கு போக வேண்டுமோ அங்கு போவோம்’ என ஒத்துழைத்தார்.

காங்கேசன்துறை பஸ்ஸில் ஏறி ‘தாவடியில் இறக்கிவிடுங்க தம்பி’ எனச் சொன்னேன். சொன்னபடி செய்தான் கண்டக்டர் தம்பி. 27 வருடமாக என் மனக்காட்சியில் இருந்த நினைவுகளை வைத்துக்கொண்டும், பாதையோரத்தில் இருந்த கராஜில் ‘அந்த அரிசி ஆலையை’ விசாரித்துக் கொண்டும் அந்த ஒழுங்கைக்குள் நடக்கிறோம். உச்சி வெயில் வேறு.

அந்த ஆலையின் ‘கேட்’டை அடைந்ததும் ஒழுங்கை முடிந்து விடும். அந்த எல்லைக்குள் போனதும் எனக்குள் ஒரு தவிப்பு. லெனின் என் உணர்வுகளைப் புரிந்துகொண்டவராகத் தெரிந்தார்.
நான் சைக்கிளோடிய தளம் ஆங்காங்கே காட்டுச் செடி மண்டிக்கிடக்க, இங்கேதானே வீடு இருந்தது என நெருங்கிப் பார்த்தேன். வீடு இருந்த அடையாளங்களாக அத்திவாரம் கொஞ்சம் தெரிந்தது. முட்டிய கண்ணீரை வெளியே வரவிடாமல் பார்த்துக்கொண்டேன். ஆலைக்குச் சென்று விசாரித்தால் "அவர்கள் எங்களுக்கு விற்று கணகாலம் ஆச்சுது" என்று சொன்னார்கள்.

நாங்கள் வாழ்ந்த வீட்டு பிரதேசம் தளமும் கூறுபோட்டு விற்கப்பட்டிருந்தது. (ஆசையாய் நான் குளிக்கும்)‘தண்ணீர் தொட்டி எங்கே?’ எனக் கேட்டேன்.. ‘அதோ…’ என திசை காட்டினார் புதியவர். படம் எடுத்துக்கொள்ளலாமா என்றேன். முதலாளியைக் கேட்டுச் சொல்வதாகச் சொன்னார். வேண்டாமென நாங்களே தவிர்த்துவிட்டு, வீடும் தளமும் இருந்த அடையாளத்தோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

அந்த நிமிடங்களில் பழைய நாட்களின் அத்தனை நினைவுகளையும் தவிர வேறொன்றும் மனதில் எழவில்லை.
1984 ஆக இருக்கலாம். 10-11 வயதுப் பையனாக ஓடித் திரியும் நான். விடுமுறையில் வந்து அம்மாவுடன் நிற்பதென்றால் தனிச் சந்தோஷம். தோட்டத்தில் வாளி கொண்டுபோய் பீலிக்கரையில் தண்ணீர் பிடிப்பது மாதிரி, அரிசி ஆலையில் இயந்திரத்தில் அரிசி கொட்டும்போது, அதனை வாளியில் பிடிப்பதில் பெரும் ஆனந்தம் எனக்கு. அப்படி பிடித்து வரும் சூடான அரிசியைக் கொண்டு சோறாக்கிச் சாப்பிட்ட காலம் அது. அடிக்கடி கடைக்கு ஓடுவதில் சின்ன சந்தோஷம்.

ஒரு நாள் கடைக்குப் போன என்னிடமும் கூட்டமாய் சைக்கிளில் போன அண்ணாமார்கள் சில துண்டுப்பிரசுரங்களை கொடுத்து விட்டுச் சென்றிருந்தார்கள். அது என்ன ஏதென்று தெரியாமல் கையில் வைத்துக் கொண்டு மிளகாய்த்தூள் வாங்குவதற்கு சந்தியில் இருந்த கிரைண்டிங் மில்லில் நின்றிருந்தேன். பட…பட… வென ஒரே சத்தம். சனம் அலறியடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தது. வீதியை எட்டிப் பார்த்தேன்.

துண்டுப் பிரசுரம் விநியோகித்தவர்களைத் தேடி ஆமி வெறியாட்டம் ஆடிவருவதாகக் கூறி ‘ஓடடா தம்பி வீட்டுக்கு’ என்று என்னை விரட்டினார் கடையுரிமையாளர் வீரப்பா தாத்தா. வீதியைத் தாண்டும் போது மாடு ஒன்று சூடுபட்டு சுருண்டு விழுவதைக் கண்ணுள் வாங்கியவாறே ஒழுங்கைக்குள் ஓட்டமெடுத்தேன். வளவு ‘கேட்டை’ இறுக்கி தாழிட்டுப் பூட்டிவிட்டு, மூச்சு வாங்க அம்மாவிடம் ஓடி நடந்ததைச் சொன்னேன். உள்ளதைச் சுருட்டிக் கொண்டு அம்மாவும் நானும் வெளியே வந்தோம். அப்பா சற்றே உள்ளே அமைந்த ஆலையில் வேலை. ஆலை பக்கத்தில் உள்ள முதலாளி வீட்டில் இருந்து அவரது அம்மா வெளியே வந்தார். நாங்கள் கலவரப்படுவதை அவதானித்தார். நான் அவரிடம் நடந்ததை சொல்லிக் கொண்டிருக்கும்போது நான் இறுகப் பூட்டிய கேட்டை கூட்டமாக வந்த ஒரு குடும்பம் பதற்றத்தோடு தட்டியது.

"ஆமி.. சுட்டுக் கொண்டு.. வாரான்… எங்களை காப்பாத்துங்கோ…கேட்டைத் திறவுங்கோ…" என அலறியது. கணவன், மனைவி, பிள்ளைகள் என ஒரு ஐந்தாறு பேர் இருக்கும். அரிசி ஆலையை வந்தடையும்; ஒழுங்கையின் ஒரு பக்கத்தில் அமைந்துள்ள குடிசைகளில் வாழும் குடும்பங்களில் ஒன்று என நான் அடையாளம் கண்டவனாக கேட்டைத் திறக்க ஓடினேன். "தம்பி… திறவாதையோடா….திறவாதையோடா…’" என என்னைத் தடுத்தார் முதலாளி(யின்) அம்மா.

வந்தவர்கள் துடிக்கிறார்கள். அழுகிறார்கள். கெஞ்சுகிறார்கள். ஆனால் முதலாளி- அம்மாவோ கடிந்து கொள்கிறார், என்னை அதட்டுகிறார். எனக்குக் காரணம் புரியவில்லை. சூடுபட்டு சுருண்டுவிழுந்த மாட்டைக் கண்ணால் பார்த்து வெருண்டு போயிருந்த எனக்கு முதலாளி அம்மாவின் அதட்டல் இன்னும் பயத்தைக் கொடுத்தது. எனது அம்மா என்னைக்கிட்டவாக இழுத்து அணைத்துக் கொள்கிறார். நான் கேட்டைத் திறப்பதிலேயே குறியாயிருந்தேன். சூட்டுச் சத்தம் அண்மித்து கேட்கத் தொடங்கியது…
ஓடிவந்த குடுமபத்தின் ஒரு மனிதர், மேல் சட்டையில்லாது சாரத்தை தொடை வரை மடித்துக்கட்டி இடுப்பில் சின்னக்கத்தியும் சொருகியிருந்தார்.

கறுத்த உயர்ந்த அந்த மனிதர் கேட்மீது ஏறி உள்ளே பாய்ந்தார். அவரது முறுக்கேறிய பலம் கொண்ட கை இழுத்த ஓர் இழுவைக்கே பூட்டு பிளந்தது. கேட் திறந்தது. இப்போது அதிக எண்ணிக்கையானோர் நாங்கள் நின்றிருந்த ஆலை வளவுக்குள் நுழைந்தனர். அவர்கள் கையில் அகப்பை, கத்தி, சமையல் சாமான்களும், சிறுசுகள் கையில் உருட்டி விளையாடிய சைக்கிள் டயர்களுமாகக் கூட்டமாக உள்ளே வந்தார்கள். நின்றது நிற்க ஓடிவந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது ஆமியின் சத்தம் குறைந்திருந்தது. இரண்டு மூன்று வளைவுகள் கொண்ட அந்த ஒழுங்கையில் ஆமி இரண்டாவது வளைவைத் தாண்டி உள்ளே வரவில்லை. வெறிச்சோடிக்கிடந்த வீடுகளைப் பார்த்துவிட்டு மீண்டும் வீதிக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் உள்ளே வந்த குடும்பத்தினர் ஆலையின் எல்லையெங்கும் பறந்தனர். முதலாளி அம்மா இரண்டு கையாலும் தலையில் அடித்துக் கொண்டார்.

மலையகத் தோட்டங்களில் தொழிலாளர்கள் மத்தியில் ‘ராங்கிப்’ பேசிக் கொள்வதால் சிறுவர்களும் சாதாரணமாகப் பேசுவார்கள். அம்மா என்னை அந்தச் சூழலில் இருந்து தவிர்த்தே வளர்த்து வந்தார். ஆனால் உள்ளே வந்த உயர்ந்த, கறுத்த மனிதர் முதலாளி அம்மாவை நெருங்கி… என்னடி சாதி… ‘………’ சாதி… என இன்னோரன்ன மொழியில் திட்டித்தீர்த்தார். அவர் பேசிய ராங்கி சூழலில் இருந்து அம்மாவால் என்னைத் தவிர்க்க முடியவில்லை. தடுக்கவும் முடியவில்லை. நானும் அந்த ராங்கியை அன்று விரும்பி ரசித்தவனாகவே இன்று உணர்கிறேன். ஆலையில் இருந்து வெளியே வந்த அப்பா முதல் அனைத்து வேலையாட்களும் நாங்களுமாக ஒரு நாடகம் மாதிரி அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தோம்.

அப்போது எனக்கு அதிகம் புரியாத அன்றைய நாளின் காட்சிகள் இலக்கிய சந்திப்பில் எழுத்தாளர் தெணியான், சீனியர் குணசிங்கம், அகல்யா, தேவதாஸ், ரெங்கன் தேவராஜன், ஏ.ஸி.ஜோர்ஜ் போன்றோரின் உரைகளினூடும் அமர்வின் இணைப்பாளராகவிருந்த வேல்தஞ்சனின் படபடப்பில் இருந்தும் அதிகமாகவே புரிந்தது. சிங்களப் பாடசாலையின் ‘சரத் சேர்’ இப்போதும் என் கண்ணுக்குள் நிழலாடிச் செல்கிறார்.


நினைவுகளில் மீண்டவனாக நானும் நண்பர் லெனின் மதிவானமும் திரும்பவும் கே.கே.எஸ். வீதி நோக்கி நடந்தோம். யாழ்.நூலகம், நல்லூர் கோயில் இரண்டுக்கும் சென்றோம். உள்ளே போகக் கிடைக்கவில்லை. பௌர்ணமி நாளில் யாழ்.நூலகம் மூடியிருந்தது. நல்லூர் பூஜை நேர முடிவால் பூட்டியிருந்தது. ஆனால் இலங்கையில் பௌர்ணமி நாளிலும் தங்களது திறமையை பையில் சுமந்தபடி வந்த தேவதாஸ், அசுரா, கோவை நந்தனுடன் ராகவன்-நிர்மலா, சுமதி சிவமோகன், வாசுகி ஆகியோரின் புதிய வீட்டைச் சென்றடைந்தோம்.

முதல் நாள் இரவு கச்சேரி நடாத்திய பழைய வீடு அவர்களது சகோதரி ‘ராஜினி திராணகம’ நினைவகமாக பராமரிக்கிறார்கள் என்பது தெரியவந்தது. வாசலில் அமர்ந்து கலகலப்பாக இருந்துவிட்டு முதல்நாள் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தோம். இரண்டு நாளைக்கு மாத்திரம் ஆடைகள் கொண்டுபோயிருந்த நாங்கள் மூன்றாம் நாள் பயணத் திரும்புதலின்போது நண்பன் அசுரா தனது பிரான்ஸ் பயணப் பொதியில் இருந்து வெளியே இழுத்துத் தந்த புதிய ஷேர்ட்டுகளை அணிந்து கொண்டோம்.

யாழ்ப்பாணத்துடன் ஒரு புதிய உறவு ஏற்பட்டிருப்பதாய் உணர்ந்தேன். பஸ் ஏறும் வரை கூடவே வந்து வழியனுப்பிய நண்பர்கள் அசுரா, தேவதாஸ் ஆகியோருடன் உணர்வுகலந்து விடைபெற்றுக் கொண்டு, ஒடியல், கருவாடு, பருத்தித்துறை தட்டைவடை, இடியப்பத் தட்டு, மோர்மிளகாய், பனங்கட்டி என ஒரு குட்டிச் ‘ஷொப்பிங்’ ஒன்றையும் முடித்துக் கொண்டு கொழும்பு பஸ்ஸில் ஏறிவிட்டோம்.

அவ்வப்போது சட்டைப் பைக்குள் இருந்து கொண்டு நண்பன் அசுரா பகிடி விட்டுக்கொண்டிருப்பது போன்ற உணர்வு அடிக்கடி வந்துபோனது.

அடுத்த நாள் காலை ஆறுமணிக்கு வீடு வந்து சேர்ந்ததும் அம்மா கேட்ட முதல் கேள்வி:
"நம்ம இருந்த யாழ்ப்பாண வீடு எப்படிப்பா இருக்கு……?"
(முற்றும்)
25.7.2013
நன்றி:- ‘ஜீவநதி’


மலையகத்தின் புதிய பரிமாணமாக….

ஈழம் என்று சொன்னால் நாம் எல்லாம் அதில் உணர்வுபூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் இணைந்திருக்கிறோம் . அதற்கு காரணம் 1983க்குப் பிறகு ஈழத்தில் சிங்களத்-தமிழ் இனக்கலவரத்தோடு ஏற்பட்ட போர்ச்சூழல். அதையொட்டி தமிழகத்தில் ஈழம் தொடர்பான ஒரு ஆதரவுக் குரல்கள் வெளிப்பட்டு இன்றுவரை அதனை வெவ்வேறு வடிவங்களில் அதனைத் தாங்கியவர்களாக உள்ளோம்.
அரசியல் களம் தாண்டி ஈழத்திற்கு இன்று இன்னொரு முகம் இருக்கிறது. ஒரு காலத்தில் தமிழ் இலக்கியம் தமிழ்ப்பண்பாடு என்பது தமிழகம் அளவினதாக  இருந்தது. ஆனால் இன்று தமிழ்ப் பண்பாடு என்பதும் தமிழ் இலக்கியம் என்பதும் தமிழகம் தாண்டி ஈழத்தில் வாழக்கூடிய மக்கள் சார்ந்ததாகவும் அதனையும் தாண்டி உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பண்பாடு சார்ந்ததாகவும் மாறி இருக்கிறது.
ஏறக்குறைய தமிழ் இலக்கியமே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை எனும் ஐந்திணைகள் வகுத்தது இன்றைக்கு கடல்வழியாகவும், வான்வழியாகவும் புலம்பெயர்ந்து சென்று நாடற்றவர்களாக, தங்களது மனோபாவங்களைத் தேசத்தைத் தாண்டியவர்களாக  கொண்டு வாழ்வோரின், அவர்களது வாழ்நிலப்பரப்பை  ஆறாம் திணையாக வேண்டி நிற்கிறது.
ஏறக்குறைய 1983 க்குப் பின்னாhல் ஈழத்தில் இடம்பெற்ற சூடான நினைவுகளை தமிழகத்தில் வைத்திருப்பது அரசியல் மட்டுமல்ல அதற்கு அங்கிருந்து வெளிவந்த படைப்புகளும் மிக  முக்கியமான பங்கை வகிக்கின்றது. குறிப்பாக சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் உள்ளிட்டோர் ஈழப்பிரச்சினை குறித்து எழுதிய கவிதைகள் அந்தப் பிரச்சினையை தமிழ்நாட்டில் புரிந்துகொள்வதற்கு பெரும் உதவியாக இருந்தது.
இப்படி ஈழம் பற்றிய ஒரு பார்வை இருக்கின்ற நிலையில், ஈழம் பற்றி நாம் யோசிக்கும்போது பெரும்பாலும் நம் கவனத்துக்கு வராத ஒரு பகுதி இருக்கிறது. அது ஈழம் என்ற பொது அடையாளம் எந்த அளவுக்கு கவனத்துக்கு வந்து இருக்கிறதோ அதற்கு இணையாக வந்திருக்க வேண்டிய ஒரு அடையாளம். ஒரு பேசுபொருள். ஆனால் துரதிஸ்டவசமாக அது அந்தளவுக்கு வரவில்லை. அது என்னவன்றால் ஈழத்தில் வாழக்கூடிய தமிழ் மக்கள் என்றால் அது; ஒரு பகுதியைசார்ந்தவர்கள் இல்லை. அங்கு வடபகுதியில் யாழ்ப்பாணத்தில், கிழக்கில் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழ்வதைப்போலவே தெற்கில் மலையகத் தமிழர்கள் எனும் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்பதுதான். ஈழத்தில் மலையகத் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்பதை அறியாத ஒரு தலைமுறையினரே கூட இப்போது இங்கே தமிழகத்தில் இருக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் என்று சொன்னால் அதில் மலையகத் தமிழர்களும் அடங்கியுள்ளார்கள் எனும் புரிந்துகொள்ளக்கூடிய ஓர் ஓர்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டிய ஓர் அவசியத்தில் நாம் இப்போது இருக்கிறோம். அத்தகைய ஒரு விழிப்புணர்வை, மலையகம் எனும் தனி அடையாளத்தை உருவாக்கி வளர்த்து வந்ததில் ஒரு பெரிய ஒரு மரபு இருக்கிறது. அந்த மரபின் தொடர்ச்சியாக ஒரு எழுத்தாளராகவும் அரசியல் செயற்பாட்hளராகவும் மலையகத்தை சர்வதேச மட்டத்திற்கும் கொண்டு சென்றதில் மல்லியப்புசந்தி திலகர் எனும் இந்த நூலாசியருக்கு ஒரு பங்கு இருக்கிறது.
ஏறக்குறைய 150 முதல் 200 வருட காலத்திற்கு முன்பு கோப்பி, தேயிலை முதலான பயிர்சார்ந்து பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் உழைப்பதற்காக தமிழகத்தில் இருந்து கொத்துக் கொத்தாக தமிழர்கள் இடம்பெயர்நது சென்றார்கள். இந்த 150-200 வருடகால வரலாற்றில் அவர்கள் தமிழக அடையாளங்களில் இருந்து முற்றிலும் விலகி ஈழத்தில் தனித்துவ அடையாளம் பெற்றவர்களாக அந்த வாழ்வாதாரத்தின் பின்னணியில் வாழக்கூடியவர்களாக பழகிப்போனர்கள். இப்போது அவர்களின் சொந்த நாட்டோடு எந்த தொடர்பும் இருக்க முடியாது. அதேநேரம் ஈழத்தில் பாரம்பரியமாக  வாழ்ந்துவருகிற  தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாகவும் ஆகிப்போனார்கள். இப்படி பண்பாட்டு அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் தனித்துவமான, தனித்து நடாத்தப்புடுவதனால் அதுசார்ந்த தனித்த அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்களாக மலையகத் தமிழர்கள் உருவானார்கள்.
அவர்களுடடைய பிரச்சினைகள், போராட்டம் அனைத்து ஈழத்தமிழர்கள் எதிர்கொள்கின்ற அடையாளங்களை ஒத்ததாக இருந்த அதேநேரம் அவர்களுக்கென்றே தனித்துவமான பிரச்சினைகளைக் கொண்டதாகவும் இருந்தது. பெருமளவு தோட்டத் தொழிலாளிகளாக, உடல் உழைப்பாளர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களுடைய உழைப்பு அவர்களுடைய  வாழ்வியல் முறை என்பது வேறாக இருந்தது. அவர்கள் மத்தியில் பணியாற்றுவதற்கு, தொழிற்சங்கங்களும், அந்த தொழிற்சங்கம் சார்ந்த அமைப்புகளும் அதன் தலைவர்களும் உருவாக வேண்டிய அவசியம் எழுந்தது
. இந்த நிலையில்தான் மலையகத் தமிழர்களின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்ட ஒரு தனித்த இலக்கிய மரபு உருவானது. அந்த தனித்த இலக்கிய மரபு என்பது ஈழத்து தமிழர்கள் மத்தியிலான எழுத்துசார்ந்த மரபுபோல் அல்லாமல் வாய்மொழி பாடல்களாக, கீர்த்தனைகளாக, சிந்துகளாக இங்கிருந்து இடம்பெயரந்து சென்ற மக்கள், தாங்கள் இடம்பெயர்ந்துசென்ற அந்த வழிநடையின் துயரத்தை பாடல்களாக மாற்றினார்கள்.
அங்கே தோட்டத் துரைமார் எவ்வாறு அவர்களை நடாத்தினார்கள் அதற்காக எவ்வாறு, போராடினார்கள் என்பதை ஆரம்பத்தில் வாய்மொழியாகவும் பின்னாளில் எழுத்துருவிலும் இலக்கியங்களாக உருவாக்கியிருக்கிறார்கள். எந்தவகையிலும் மலையகத்தவர்கள் யாழ்ப்பாணத்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லக்கூடிய வகையிலே மலையத்தவர்கள் இலக்கியத்திலே ஒரு பொது அடையாளத்தை உருவாக்கியிருககிறார்கள். ‘மiகைளைப் பேசவிடுங்கள்’ எனும் தலைப்பே கூட வ.செல்வராஜா எழுதிய ஒரு நாடகத்தினதும்  தலைப்பு என்றே நூலாசிரியர் தன்னுரையிலே குறிப்பிடடுள்ளார். மல்லியப்புசந்தி என்பதே கூட அவர் முதலாவாக வெளியிட்ட கவிதைத் தொகுப்பின் பெயர்தான். அது மலையககத்திலே ஹட்டனிலே அமைந்திருக்கக்கூடிய மக்கள் சந்திக்கின்ற ஒரு இடத்தின் பெயர்   அது வெறும் இடமல்ல. அது ஒரு அடையாளம்.  அது அவர்களின் வாழ்வியலோடு இணைந்த விடயங்களைச் சொல்லுகின்றபோது ஒரு இடத்தின் பெயராக அல்லாமல் ஓர் வாழ்வின்  அடையாளமாகவே அமைந்துவிடுகின்றது. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் முன்னுரையோடு நூலிசியரே உருவாக்கிய பதிப்பகத்தின் ஊடாக ‘மல்லியப்புசந்தி’ எனும் நூலை அவரே வெளியிட்டு இருக்கிறார்.
மலையக இலக்கியம் தொடர்பான ஒரு ஆய்வரங்கம் இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கல், காந்தி கிராமிய பல்கலைக்கழகத்திலே நடைபெற்றது. இலங்கை மலையகத்pல் இருந்து பல இலக்கிய ஆய்வறிஞர்கள் எழுத்தாளர்கள் அங்கே உரையாற்ற வந்திருந்தார்கள். அதன்போது ஈழத்தின் மிக முக்கிய எழுத்தாளுமையான தெளிவத்தை ஜோசப் அவர்களும் வந்திருந்தார். அவரின் வயதின் காரணமாக அவருடன் கூட வந்திருந்த இளையவரான  அவரது  உதவியாளர் என்றுதான்  மல்லியப்புசந்தி திலகரை நான் கணித்தேன். பின்புதான் தன்னை முன்னிலைப்படுத்தாத மூத்தவருக்கு உதவுகின்ற எளிமையான மக்கள் பிரதிநிதியாக நான் அவரை அறிந்துகொண்டேன். அதன் பின்னர் சமூகவலைதளத்தின் ஊடாக அவரை பின்தொடரந்தபோதுதான் அவரது முக்கியத்துவத்தை உணரக்கூடியதாக இருந்தது.
சமகாலத்தில் மலையகத் தமிழர்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்பவர்களில் திலகர் தனித்துவமானவராக விளங்குகிறார். அவர் கல்விப்புலமிக்கவமராக் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழி பேசுபவராக இருப்பது, இதழ்களில் எழுதுபவராக, கவிதை இயற்றுபவராக, மலையக இலக்கிய முன்னோடிகளைத்  தேடிச்சென்று ஒரு தொடர்பை உருவாக்கிக்கொள்பவராக, மலையகத்தின் வரலாறு பற்றிய ஓர் ஓர்மையை உள்வாங்கி அதனடிப்படையில் மலையக மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்பவராக இருப்பதை இவரிடத்தில் காண்கிறேன். இவற்றுக்கு மேலாக அதிகாரப்பகிர்வு விடயத்தில் மலையகத்துக்கு இருக்க Nவுண்டிய பக்கத்தை பிச்சினைகளை தனது அரசியல் முன்னோடிகளான மனோகணேசன், திகாம்பரம் போன்றவர்களின் வரிசையிலே இணைந்து முன்வைப்பவராக, மலையக மக்களின் பிரச்சினைகளை  சர்வதேச அரங்குகளிலும் பேசுபவராக பல்வேறு நாடுகளுக்கு பயணிப்பவராகவும் உள்ளார். சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் பிரச்சினை என்பது ஒன்று அல்ல அங்கு வாழ்கின்ற மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறானதாக இருக்கின்றது என்பதை  இணைத்துச் சொல்பவராகவவும் எடுத்துச் செல்லக்கூடியவராகவும் இவரை அடையாளம் காண முடியும். இது அவரது முன்னோடிகளுக்கு இல்லாத வாய்ப்பு. அந்த வாய்ப்பினை மலையகத் தமிழர்களின் மாற்றத்துக்காக முன்னேற்றத்துக்காக இவர் செயற்படுத்திக்கொண்டிருபதை செலவிட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த வளரந்த ஒருவரான   திலகர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வந்திருக்கிறார் என்பது இங்கு கவனத்துக்குரியது. அந்த அனுபவம் அவருக்கு பெருமளவிலே உதவியிருக்கிறது.
ஆங்கிலேயர்கள் உருவாக்கிய பள்ளிக்கூடங்கள், சிறைச்சாலைகள் போன்றனவும் தொழிற்துறைகளில் உருவாக்கிய குடியிருப்புகள் அவர்களின் கண்காணிப்புக்கு ஏதுவாகவே அமைக்கப்பட்டுள்ளது. மலையகத்திலே அவை லைன் வீடுகள் என அழைக்கப்படுகின்றன. அத்தகைய லைன் வீடுபகளில் பிறந்து வளர்ந்த திலகர் அத்தகைய லைன் வீடுகளை மாற்றி தனித்தனியான வீடுகளை அமைக்கும் எண்ணக்கருவை வலுப்படுத்துதல், அந்த பிரதேசங்களை கிராமங்களாக மாற்றுவதற்கான திறவுகோலாக மலையக அதிகார சபை ஒன்றை நிறுவுதல் முதலான விடயங்களில் அதிக அக்கறை காட்டியு;ளளார்.
அவ்வாறு உருவாக்கப்பட்ட அதிகார சபை சம்பந்தமாக இந்த நூலிலே விரிவாக எழுதியுள்ளார். அரசியல் செயற்பாட்டாளரான திலகர் ஒரு எழுத்தாளராக இருப்பதன் காரணமாக தினசரிகளில், வார இதழ்களில் மலையக மக்களின் வரலாற்றையும் கடந்தகால அனுபவங்களையும் ஏறிட்டு அதில் இருந்து அவர்களின் தேவை என்ன என்பதையும் அது எவ்வாறு நிறுவப்பட்டிருக்கிறது என்பதையும் அடையாளம் கண்டு தொடராக பல கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். அத்தகைய கட்டுரைகளில் ‘அரங்கம்’, ‘ஞாயிறு தினக்குரல்’ ஆகிய பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
இந்த நூலினைப் படிக்கும்போது இரண்டு செய்திகளை நாம் அறிந்துகொள்ள முடியம். ஒன்று மலையகத் தமிழர் எனும் அடையாளம் எவ்வாறு உருவானது? அதற்கு முன்னர் அவர்களைச் சுட்டிய பெயர்கள் என்ன என்பன போன்ற விடயங்கள். மலையகத் தமிழர்கள் தொடர்ச்சியாக நடாத்திவந்திருக்ககூடிய போராட்டங்களுக்கு ஒரு ‘ஏஜன்ஸி இருக்கிறது. ஏஜன்ஸி என்றால்  இன்று அவர்களுக்கு கிடைத்துpருக்கக்கூடிய உரிமைகளுக்காக அவர்களே நடாத்தியிருக்கக்கூடிய போராட்டங்களை இந்த நூல் எடுத்துக்காட்ட முனைகிறது. ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட சமூகத்துக்கு இரண்டு விதமான போராட்டங்கள் அமையப்பெறுவதுண்டு. ஒன்று வெளியில் இருந்து அவர்கள் மீதான அரசியல் பரிவுணர்ச்சியின் காரணமாக இரக்கப்பட்டோ அல்லது தார்மீக உணரச்சியின் அடிப்படையிலோ வெளியில் இருந்து அவர்களுக்காக போராடக்கூடிய ஒரு பகுதி. உலகாளவிய ரீதியில் அவ்வாறான போராட்டங்களே அதிகம் பேசப்படுவதாக இருக்கின்றது. இன்னொன்று அந்த சமூகமே தனக்கான உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டம். ஒரு சமூகம் தமக்குத் தாமே நடாத்திக்கொள்ளும் போராட்டம் பெரும்பாலும் சொல்லப்படுவதில்லை.
எழுதப்படுவதுமில்லை. திலகர் இந்த நூலை எழுதிச்செல்லுகின்றபோது மலையகம் ஏனும் அடையாளததை உருவாக்குவதில் இருந்து இன்று தமக்கான அதிகாரசபை சட்டத்தை  நிறைNவுற்றியது வரையாக தாங்கள் தன்னிச்சையாக நடாத்திவந்த போராட்டங்களை மிக ஏதுவாக தொகுத்துக்காட்டியிருக்கிறார். அதற்கான பொருள் அவர்களு;கக்காக மற்றவர்கள் பாடுபட்டார்கள் என்பதை புறக்கிணப்பதோ மறுப்பதோ அல்ல. ஒரு சமூகம் எப்Nபுhதும் வாய் மூடி கிடப்பதில்லை. அவர்களு;காக மற்றவர்கள் பாடுபடுவதுபோலவே, அவர்கள் அடக்கப்பட்டதற்காக அவர்களே கிளரந்ந்தெழுந்து போராடக்கூடிய ஒருவகைப் போராட்டம் ஒன்று இருக்கிறது. இந்த நூலில் என்னைக் கவர்ந்த அம்சமே, எங்களுக்கு ஒரு ஏஜன்ஸி இருக்கிறது. எங்களது முன்னோடிகள் கோ.நடேசய்யர் முதல் சிவலிங்கம் முதலானர்வகள்  எவ்வாறு அதனை முன்னகர்த்தி வந்துள்ளார்கள் என்பதை அவர் சொல்லமுனைவதுதான்.
மலையகத் தமிழர் வாழ்விலே இரண்டு விடயங்கள் ; பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒன்று 1948 குடியுரிமைப்பறிப்புச் சட்டம். இந்தச் சட்டம் அவர்களின் இலங்கைக் குடியுரிமையை மறததது. அதற்க காரணம் அவர்கள் கொண்டிருந்த இந்திய அடையாளம். இரண்டாவது 1964 ஆம் ஆண்டு செய்யப்பட்ட சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தம். இந்த ஒப்பபந்தத்தின் அடிப்படையிலே இந்தியாவில் இருந்து இலங்கை சென்று அங்கு பல ஆண்டுகாலம் வாழ்ந்து தலைமுறைகளைக் கடந்தவர்கள்; திடீரெண இரண்டு அரசாங்கங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்கு நீங்கள் திரும்புங்கள் என்று சொல்லக்கூடிய ஒரு நிலை.
இந்த இரண்டு சட்ட விடயங்களினால் இந்த மக்களின் நிலை இலங்கையில் இந்தியர்கள் என்றும் இந்தியாவில் சிலோன்காரர்கள் என்றும் அந்நியப்படுத்தப்படுவதை இந்த நூலிலே தெளிவாக விளக்குகிறார். இந்த இரண்டுமே அவர்களது அடையாளத்தை மறுப்பதாகவே தெரிகிறது. மறுபுறம் மலையகத்தில் இருந்து சமவெளிப் பகுதியான வன்னியிலே சென்று ஒரு பகுதியினர் குடியேறியது பற்றியும் அவர்களுக்கு அங்கு என்ன நடந்தது என்புது பற்றியும் விரிவாக குறிப்பிடுகின்றார். அதில் அந்தனி என்பவரைப் பற்றிய விரிவான ஒரு பதிவை இந்த நூலிலே பதிவு செய்துள்ளார். பெரியவர்களாக அல்லாமல் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் மகத்தான காரியங்கரளச் செய்கின்றபோது அவர்களது வரலாற்று அடையாளங்களைத் தேடித்தரவேண்டியது நமது கடமை. அத்தகைய ஒருவராக அந்தனி என்பவர் திகழ்ந்திருக்கிறார். அவருக்குரிய அடையாளததைத் தந்தமைக்காக திலகர் மிகுந்த பாராட்டுக்குரியவராகிறார்.
இந்த நூல் இலங்கை மலையகம் தொடர்பாக அறியாமல் இருப்பவர்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டக்கூடியதாக இருக்கும். அறிந்திருப்பார்களானால் அவர்களுக்கு  ஒரு புதிய பரிமாணத்தை வழங்கக்கூடும். அதற்காகவே இருசாராரும் வாசி;க்க வேண்டிய நூல். நூலாசிரியர் திலகருக்கு எனது வாழ்த்துக்கள்.
முனைவர் ஸ்டாலின் ராஜாங்கம்
பேராசிரியர்- அமெரிக்கன் கல்லூரி 
மதுரை  08-11-2019