பாய்ச்சல் காட்ட மாட்டேன் - முன்னாள் எம்.பி திலகர்

 மலையகத்திற்கு உரிமைசார் அரசியலுக்கு முகவரி கொடுத்தவர் நீங்கள் அந்த வகையில் நீங்கள் உங்கள் பாராளுமன்ற பதவி காலத்தில் எதை சாதனையாக கருதுகின்றீர்கள் சாதிக்க முடியாது போனதாக எதை நினைக்கின்றிர்கள்?

1987 ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரதேச சபைச் சட்டத்தில் இருந்து மலையகப் பெருந்தோட்ட மக்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலைமை இருந்தும் அதனை திருத்தம் செய்யக் கோரி அன்று முதல் 2015 வரை பாராளுமன்றம் சென்ற எந்தவொரு உறுப்பினரும் பாராளுமன்ற பிரேரணை ஒன்றைமுன்வைத்திருக்கவில்லை. 2015 ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதி பாராளுமன்றம் சென்ற நான் டிசம்பர் முதலாம் திகதி அதனை முன்வைத்தேன். அதன் அடிப்படையிலேயே 2018 செப் 18 பிரதேச சபைச் சட்டம் திருத்தப்பட்டது. இதனைச் செய்வேன் என கூறியே நான் நாடாளுமன்றம் சென்றேன்.அதனை நிறைவேற்றியது சாதனையாகவே கருதுகிறேன்.

அதேபோல மலையக உரிமைசார்ந்த்  கல்வி, வீதி, நிர்வாகம், (பிரதேச செயலகம் ) , காணி, சம்பளவிடயத்தில் அரச தலையீடு, சிறுதோட்ட உடைமையாக்குதல், திறந்த பல்கலைக்கழகம், தபால் முதலான  9 பிரேரணைகளையும்  தோட்ட சுகாதாரத்தை தேசிய மயமாக்கும் உத்தியோகபூர்வ அறிக்கையாகவும் சமர்ப்பித்து உரையாற்றி உள்ளேன். இதுவும் ஒரு சாதனையே. இவற்றை தீர்வை நோக்கி நகர்த்துவது அவசியம்.

இதற்கு மேலாக " இந்தியத் தமிழர்" என்பதை "மலையகத் தமிழர்" என சனத்தொகைக் கணக்கெடுப்பில் குறிப்பிடப்படல் வேண்டும் எனும் எனது தனிநபர் பிரேரணை சபைக்கு கொண்டு வருவதற்கு சமர்ப்பித்தும் அதனை தாமதமாக்குவதில் 'தமிழ் முற்போக்கு கூட்டணி' உறுப்பினர்களே காட்டிக் கொடுப்புச் செய்ததால் முடியாது போனது.

பாராளுமன்ற காலத்தில் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தீர்கள் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லை எப்படி உணர்கின்றீர்கள்?

அதே சுறுசறுப்போடு இயங்கிக் கொண்டு இருக்கிறேன். பாராளுமன்றம் உள்ளே நான் போவதில்லையே தவிர வெளியே நான் மக்கள் பிரிதிநிதியே.அதனால் தான் இப்போதும் என்னை நேர்காணல் செய்வதற்கு உங்கள் வசம் கேள்விகள் இருக்கின்றன.

   உண்மையில் திகாவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை?

தனிப்பட்ட எந்த பிரச்சினையும் இல்லை. அவருக்கு வழமையாகவே ஒரு தாழ்வுச் சிக்கல் ( inferiority complex) இருந்து வந்தது. அதனை ஊதிப் பெருக்க அருகில் ஓரிருவர் இருக்கின்றனர். அதனால் அவரது சிக்கல்  கூடிக் கொண்டு போகிறது. அவ்வளவுதான். சிக்கல் முற்றும் நாளில் அவர் அதனை உணர்வார்.

    உதயா விலகியதற்கும் பின்னர் ராஜதுரை விலகியதற்கும் நீங்கள் தான் காரணம் என இப்போது குற்றம் சாட்டுகின்றார்களே அதுபற்றி?

2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் எனக்கு தேசிய பட்டியல் தருவதாக அறிவித்து அது தலைமைத்துவத்தால் முடியாது போன நிலையில், 2011 ஆம் ஆண்டு உள் ஊராட்சி மன்ற தேர்தல் வரை எனது பணிகளைச் செய்து கொடுத்து விட்டு, தொழிலாளர் தேசிய சங்கத்தில் இருந்து தற்காலிகமாக விலகி இருப்பதாக நான் 2012ஆம் ஆண்டு மேதினத்தன்று அதன் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் அவர்களிடம் கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டேன். (அந்தக் கடிதம் இப்போதும் அவரிடம் இருக்கும்) அதற்கு பிறகு 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொதுத் தேர்தல் வேட்பாளராக கையொப்பம்  இட்ட பின்னரே நான் தலைமை காரியாலயத்துக்கு வந்தேன்.

இந்த மூன்று வருட காலப்பகுதியில்தான் உதயகுமார் வெளியேறியதும் ராஜதுரை வந்து போனதும் நடந்தேறியது. ஆக நான் பதவியில் இல்லாத காலத்தில் நடந்த சம்பவத்தை என்னோடு சேர்த்து பேசுவது எந்தளவு காழ்ப்புணர்ச்சி மிக்கது. நான் 2015 மீண்டும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் மீண்டும் இணையும் போது அவர்கள் இருவரும் அங்கே இருக்கவில்லை. அவர்கள் மீது இத்தனைப் பாசம் இருப்பவர்கள் விலகி இருந்து என்னை அழைத்து ஏன் தேர்தலில் போட்டியிடச் செய்யவேண்டும். அவர்கள் இருவரும் அப்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சி யானைச் சின்னத்தில் தானே போட்டி இட்டார்கள். அப்போதே அவர்களை தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைத்து போட்டியிடச் செய்து இருக்கலாமே.

25/02/2021 உதயசூரியன்

எனவே அவர்களது வெளியேற்றத்துக்கு பின்னால்  தலைமை பொறுப்பாக இருந்திருக்க முடியுமா அல்லது விலகி இருந்த நான் இருந்திருக்க முடியுமா என்பதை அந்த இருவருக்கும் எதிராக பத்திரிகை  அறிக்கைகளை யார் விடுத்து இருக்கிறார்கள் என்பதை ஊடகவியலாளர்களாகிய நீங்கள் தேடினால் விடை கிடைக்கும். தலைவருக்காக அந்த அறிக்கைகளை எழுதியவர் இப்போதும் அங்கேதான் உள்ளார். அப்போது அவரது வேலையே அதுதான்.

 நீங்கள் தொ.தே.ச தலைமை கட்டிடத்தை உதயாவிற்கு விற்று விட்டதாக குற்றம் சாட்டுகின்றீர்கள் ஆனால் அது வாடகை கட்டிடம் எனவும் அதனை சொந்தமாக வாங்கி வாடகை இன்றி இலவசமாக உதயா வழங்கியதாகவும் ,உதயா கட்டிடத்தை வாங்கிய போது அதற்கு சாட்சி கையெழுத்து போட்டது நீங்கள் எனவும் பீலிப் சொல்கின்றாறே அது பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

நான் சாட்சியாக கையெழுத்து இட்டதால்தான் தானே இந்த விடயத்தை உறுதியாகவும் தெளிவாகவும் சொல்கிறேன். நான் சொன்னது 'விற்றுவட்டார்கள்' என்று அல்ல. உதயகுமார் " கையகப்படுத்திக் கொண்டார்" என்பதே.

இதன் மூலம் சொல்ல வருவது என்ன?

1965 ஆம் ஆண்டு முதல் 2010 வரை 45 ஆண்டுகள் நிரந்தர வாடகையில் தொழிலாளர் தேசிய சங்கம் அந்தக் கட்டடத்தில் இருந்ததானால், அதன் உரிமையாளர்கள் 3 கொடி பெறுமதியான கட்டடத்தை 30 லட்சத்துக்கு தருவதற்கு சம்மதித்தார்கள்.எனக்கு அவர்கள் அறிமுகமானவர்கள் ஆதலால் மேலதிக மாக 10 வீதம் கழித்து 27 லட்சத்துக்கு தந்தார்கள். அதனை அப்போது உதயகுமார் தான் வாங்குவது என்றும் பின்னர் சங்கம் அதனைத் திருப்பிச் செலுத்தி சங்கத்தின் பெயரில் எழுதுவது என்பது உடன்பாடு. எனவே இங்கு தொழிலாளர் தேசிய சங்க நன்மதிப்பு குடியிருப்பு பெறுமதி 2 கோடி 70 லட்சம். அதன்படி அது தொழிலாளர் தேசிய சங்கத்தின் சொத்தா அல்லது 27 லட்சம் வழங்கிய உதயகுமாரின் சொத்தா? இப்போது சொல்லுங்கள் அட்டன் பிரதான இடத்தில அமைந்த அந்த இடத்தை 27 லட்சத்துக்கு "அமுக்கிக்" கொண்டுள்ளார் என்பது தெளிவாகி இருக்கும். எனது வெளிப்படுத்தலினால்தான் இந்த விடயம் அம்பலமாகி உள்ளது. இப்போது உதயா பெயரில் அட்டன் தொழிற்சங்க தலைமையகம் இருப்பதை அவர்கள் ஒத்துக் கொண்டது எனக்கு வெற்றி. உறுப்பினர்கள் அதனை மீட்க முன்வரவேண்டும். இதற்கு சாட்சியாகவே நான் கையொப்பம் இட்டுள்ளேன். எனது கோரிக்கை அந்த கட்டடம் "தொழிலாளர் தேசிய சங்கம்" எனும் மக்கள் அமைப்பின் பெயரில் அதனை எழுத வேண்டும் என்பதே. இதெல்லாம் பிலிப் அவர்களுக்கு தெரியும். இப்போது அவர் சூழ் நிலைக் கைதியாக அவரது பெயரில் எழுதப்பட்ட அறிக்கைக்கு பொறுப்பாகி உள்ளார். அதில் உள்ள கருத்துக்கு அவர் பொறுப்பாளி இல்லை.

 தொ.தே.சங்கத்திற்கு புத்துயிர் கொடுத்து கட்டியெழுப்பியதில் பிரதான பங்குதார் ஒருவர் நீங்கள் ஆக அந்த கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருப்பதை விலகியிருப்பதை எப்படி உணர்கின்றீர்கள்?

நேர்வழியில்பயணிக்காது குறுக்கு வழி தேடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் ஒதுங்கிச் சென்று விடுவது உண்டு. அப்படியான சந்தர்ப்பத்தில் இது மூன்றாவது. அரசியலை கட்டிப்பிடித்துக் கொண்டு ஈ ஓட்டும் அரசியல் என்னிடம் இல்லை. காத்திரமாக முன்னெடுப்பதே எனது இலக்கு. இதேபோல 2012 நான் விலகி இருந்த போதும் எனது அரசியலைக் கைவிடவில்லை. அதனால்தான் 2010 ல் எனக்கு தேசிய பட்டியல் தருவதாக ஏமாற்றியவர்களுக்கு எதிராக  2015 ல் போட்டியிட்டு தெரிவானேன். 2010 ல் என்ன செய்தார்களோ யாரெல்லாம் சேர்ந்து செயதார்களோ அதனையே 2020 லும் செய்தார்கள். இந்த சவால்களான சந்தர்ப்பங்களில் எல்லாம் நான் தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு எதிரான ஒரு அமைப்பிடம் ஓடி அடைக்கலம் தேடியவனல்ல என நீங்கள் ஏற்கனவே கேட்ட உதயகுமார், ராஜதுரை போன்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் மூத்த உறுப்பினர்களை ஓரம் கட்டி முன்னுக்கு வர எத்தணிக்கும் உதயகுமார், நகுலேஸ்வரன், நந்தகுமார், ராம் என்ற வரிசை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இருந்து 2013 க்குப் பிறகு தான் வந்தார்கள். நான் 1992 ல் இருந்து அங்கே தொடர்பிலே இருப்பவன். இன்றைய திகதி வரை வேறு சங்கத்தில் கட்சியில் உறுப்புரிமை பெறாத தொழிலாளர் தேசிய சங்கத்தைத் தூற்றாத பண்பைப் கொண்டுள்ளவன். அதனை மலையகமே அறியும். இனியும் கூட தூற்ற மாட்டேன். எனது கருத்து நிலையில் வந்த அரசியல் வி.கே. வெள்ளையன், சி.வி. வேலுப்பிள்ளை போன்றவர்களின் சிந்தனையுடன் இணைந்து பயணிப்பது. அவர்களை மீளவும் மீளவும் வலியுறுத்தி அந்த அரசியலை வளர்த்து எடுத்தவன். ஆனால் "தொண்டமான்" தாசர்கள் "திகாம்பரம்" தாசர்களாக மாறி இப்போது பிழைப்பு நடாத்துகிறார்கள். அதில் திகாம்பரம் அற்ப சந்தோஷம் அடைகிறார் அவ்வளவுதான் நடக்கிறது.

முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தை தெ.தே.சங்கத்திற்கு கொண்டுவந்நது நீங்கள் என்கின்றீர்கள்,அவரை அழைத்துவர காரணம் என்ன?

அவரை தலைமைத்துவ பண்பு கொண்ட மலையக இளைஞராக நான் பல்கலைக் கழக மாணவராக இருந்த காலத்தில் அவதானித்தேன்.  அப்போது அவரது அரசியல் நாட்டமும் புரிந்தது. அவரது பெற்றோர் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தார்கள். . தோட்டத் தொழிலாளர்களிடத்தில் மாத்திரம் தங்கியிருந்த மலையக அரசியலின் அடுத்த படிமமாக கொழும்பில் தொழில் புரியம் மலையக இளைஞர்கள் இறங்க வேண்டும் என்ற சிந்தனையின் தெரிவே அவர். அவருக்குள் அந்த அவா அப்போது இருந்தது.எனவே 2004 மாகாண சபை தேர்தல் முதல் அவரை மலையக அரசியலில் ஆற்றுப்படுத்தினேன்.(அவரை எவ்வாறு மலையக அரசியலுக்கு நான் ஆற்றுப்படுத்தினேன் என்பதை இப்போது அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதில் இருந்து உலகம் அறியும்)

என்னுடைய ஆலோசனைகளையும் மீறி தொழிலாளர் விடுதலை முன்னணி எனும் அமைப்பில் அவர் சேர்ந்தார். அதற்கு நான் உடன்படாமல் ஒதுங்கி இருந்ததால்  சில காலம் சென்ற பின்னர் இவரிடம் ஏதும் இல்லை என தொழிலாளர் விடுதலை முன்னணி யினரால் நிதிச் செயலாளர் பதவியில் இருந்து தூக்கி வீசினர். அப்போது தனது அடுத்த கட்டம் என்ன என்று தெரியாமல் எனது வத்தளை வீட்டு வாசலில் நின்றார். அப்போது தொழிலாளர் தேசிய சங்கத்துடனான எனது தொடர்புகளின் அடிப்படையில் தொழிலாளர் தேசிய சங்க உயர்பீடத்தினரை அதே வீட்டுக்கு அழைத்து திகாம்பரத்தை தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைத்துக் கொண்டு செயற்படுமாறு ஆலோசனை வழங்கி இணைத்து வைத்தேன். அப்போது தலைவராக இருந்த புண்ணியமூர்த்தி ( மஸ்கெலிய ) சட்டத்தரணி ( இப்போது ) செல்வராஜா ( பொகவந்தலாவை) ரட்ணசாமி ( மஸ்கெலிய ) பிலிப் (  பொதுச் செயலாளர்) எல்லோருமே எனது வீட்டில் அமர்ந்து பேசியே திகாம்பரம் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். இவ்வாறு பெயர்,திகதி, இடம், சம்பவம், தொடர்புபட்ட நபர்கள்  என இருபது வருட கால எனது அரசியல் பங்களிப்பை ஒரு குறிப்பும் இல்லாமல் என்னால் உரையாக கூட ஆற்ற முடியும்.

-​திகாம்பரம் தற்போது உங்கள் அரசியல் எதிரியா?

எனக்கு நிச்சயமாக இல்லை. என்னை அவர் எதிரியாக்கிக் கொண்டால் அதற்காக அனுதாப்படுகிறேன். இயற்கை நீதி என்ற ஒன்று இருக்கிறதல்லவா? நாக்கை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப  மாற்றி பேசலாம். மனசாட்சியை மாற்ற முடியாது. அது உள்ளே இருந்து குடையும்.

 உங்களுக்கும் திகாம்பரத்திற்கும் இடையில் முரன்பாடு ஏற்பட பின்புலத்தில் யாராவது இருக்கின்றார்காள?

சில அடிவருடிகள் அவரைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்கள் திகம்பரத்தை காட்டிக் கொடுக்கும் நாளில் அவர்கள் யார் என அவர் அறிவார்.

 உங்களுக்கு என மலையகத்தில் தனியான ஆதரவு தளம் இருக்கின்றது ஆக நீங்கள் புது கட்சி ஆரம்பிப்பீர்களா?அல்லது ஏதாவது கட்சியில் இணைவீர்களா?

நான் எப்போதும் நிதானமாக முடிவுகளை எடுத்து செயற்படுத்துபவன்.அதனால் தான் சூழ்ச்சிகள் நிறைந்த அரசியல் சூழலில் என்னை அடையாளப் படுத்த முடிந்தது. எனவே எனது அரசியல் தீர்மானங்களை நிதானமாக எடுப்பேன். பாய்ச்சல் காட்ட மாட்டேன்.

- உங்கள் ஆதரவாளர்கள் உட்பட மலையக மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.

மாவட்ட எல்லைகளைக் கடந்து மலையக மக்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். அவர்களும் என்னை நேசிக்கிறார்கள். என்னைப் போன்றவர்களை அவமானப்படுத்தி விடுவதனால், என்மீது அவதூறுகளை எழுதி விடுவதால் என்னை ஓரம் கட்ட நினைப்பவர்களுக்கு மத்தியில் என்னை நேசிக்கும் மக்களின் ஆன்ம பலம் என்னை தொடர்ச்சியாக இயங்கச் செய்கிறது. நான் தொடர்ந்து இயங்குவேன். திலகர் திரும்பவும் பாராளுமன்றம் போனால் என்ன செய்வேன் என மலையக மக்களுக்கு மாத்திரமல்ல தமிழ் பேசும் சமூகத்துக்கு தெரியும். சிங்கள சமூகம் கூட இனவாதமல்லாத எனது அரசியலைப் புரிந்து கொண்டுள்ளார்கள்.

இப்போது எனது இலக்கு எப்படியாவது நாடாளுமன்ற கதிரையில் அமர்ந்து விடவேண்டும் என்பதல்ல. அடுத்த தலைமுறை அரசியலை எவ்வாறு முன்வைப்பது என்பதுதான். 2000 ஆம் ஆண்டுகளில் இளைஞர்களாக நாங்கள் முன்வைத்த அரசியல் மாற்றுப் பார்வையின் விளைவுகளே 2015 ல் வெளித் தெரிய ஆரம்பித்ததே தவிர அது தற்செயல் நிகழ்வல்ல. எனவே 2020 ல் நாங்கள் எத்தகைய சிந்தனைகளை முன்வைக்கிறோம் என்பதிலேயே 2030 ல் மலையகம் எதனை அடையப் போகிறது என்பது தங்கியுள்ளது. அதற்கேற்ற வியூகங்களை இளைய தலைமுறையினருடன் இணைந்து முன்வைப்பதில் பங்களிப்புச் செய்வேன். பொறுமையாக. நிதானமாக. காத்திருங்கள். காலம் எல்லோரையும் விட பெரியவன்.

நன்றி எஸ்.மோகன் (உதய சூரியன்)