சம்பள நிர்ணய சபைத் தீர்மானம்:முறைமை மாற்றத்துக்கான முதற்படி

இதுவரை காலம் ஆயிரம் ரூபாதான் பிரச்சினை என பேசிவந்த அரசியல், தொழிற்சங்க பிரதிநிதிகள் இப்போது அதற்கு அப்பால்சென்று வேலை நாட்கள் குறித்து பேசத் தலைப்பட்டுள்ளனர்.எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினை உக்கிரமடையும்போது முறைமை மாற்றம் குறித்து ஆயிரம் ரூபாவுக்கு வெளியே சென்று பேசும் பல திறப்புகள் வெளிப்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே சம்பள சபை மூலமான தீர்மானம், முறைமை மாற்றம் ஒன்றுக்கான முதற்படியாகும் என்கிறார் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் .

தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் சம்பள நிர்ணய சபை ஊடாக எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து கேசரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

அவருடனான உரையாடல் :

கேள்வி : தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் 1000/= ஆக தீர்மானித்திருப்பது பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில் : முதலில் அரசாங்கம் உறுதி அளித்தவாறு அடிப்படைச் சம்பளம் 1000/= வழங்கப்படவில்லை.அது 900/= ஆகவே உள்ளது. அடுத்தது, இதற்கு முன்னதான 700/= அடிப்படைச் சம்பளத்தின்போது மூன்று தொழிற்சங்கங்களில் ஒன்று கைச்சாத்திடாதபோதும் ஏனைய இரண்டு தொழில் சங்கங்களும் கம்பனிகளின் பிரதிநிதியும் கையொப்பம் இட்டு ஏற்றுக் கொண்டதால் நடைமுறைக்கு வந்தது. அப்போது அரசாங்கத்தின் ஒப்புதல் அவசியமாகி இருக்கவில்லை. ஆனால், இப்போது தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் ஒரு தொகைக்கு உடன்பட்டு வந்துள்ள போதும் கம்பனிகள் அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் எதிர்த்தும் வாக்களித்துள்ளன. எனவே அறிவிக்கப்பட்ட இந்த தொகையை வழங்க வேண்டிய கம்பனி உடன்படாமல் இருப்பது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமான முடிவு எனும் கேள்வியையே உருவாக்குகிறது.

கேள்வி : தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கையில் வெற்றி அடைந்துள்ளதாக கொண்டாடுகின்றனவே..

பதில் : அப்படி அறிவிக்கும் தேவைப்பாடு ஒன்று ஒரு தொழிற்சங்கங்கத்துக்கும் அரசாங்கத்துக்கும் உள்ளது. சம்பள நிர்ணய சபை தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட எல்லாத் தொழிற்சங்கங்களும் ஒரே நிலைப்பாட்டில் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். நாளுக்குரிய கூலித் தொகையில் அவர்களிடையே இணக்கப்பாடு தெரிந்தாலும் மாதத்தில் வழங்கப்படும் வேலைநாட்கள் தொடர்பில் அவர்களுக்குள் கருத்து முரண்பாடுகளும் ஐமிச்சங்களும் நிலவுவதை அவதானிக்கலாம். மாதத்தில் 25 நாள் வேலை வழங்கப்படல் வேண்டும் என எதிர்கட்சிசார்பு தொழிற்சங்கம் வலியுறுத்துகிறது. மறுபுறத்தில் அதனை சம்பள நிர்ணய சபை தீர்மானிக்க முடியாது என ஆளுங்கட்சி சார்பு தொழிற்சங்கம் தெரிவிக்கிறது.
தாங்கள் 1000/= நாட்சம்பளத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டதாக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கொண்டாடினாலும் அடுத்துவரும் மாதங்களில் அந்த சம்பளத்தை மாதாந்தம் பெறும் தொழிலாளர்களின் சம்பளப் பட்டியல் வாயிலாக அதன் உண்மைத் தன்மை வெளிப்படும். அப்போதுதான் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும்.

கேள்வி : இத்தனை வருடகாலம் இல்லாத சம்பளசபை முறைமை இப்போது திடீரென எப்படி வந்தது ?

பதில் : சம்பள நிர்ணய சபை ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தைத் தீர்மானிக்கும் முறைமை புதியதல்ல. ஆனாலும், கூட்டு ஒப்பந்தம் மூலம் தீர்மானிப்பதான ஒரு முறைமை வந்தவுடன் அந்த முறைமை கிடப்பில் போடப்பட்டது. இப்போது அதனைத் தூசுதட்டும் தேவைப்பாடு நடப்பு அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கொத்தபய ராஜபக்‌ஷ சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரமும், ஆண்டின் இறுதியில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ வரவு செலவுத் திட்டத்தில் விடுத்த அறிவிப்பும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரவில்லை. அது அரசாங்கத்துக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்த நிலையிலேயே சம்பளநிர்ணய சபையின் ஊடாக தீர்மானிப்பதற்கு தொழில் அமைச்சர் நிமால் சிறிபால சில்வா அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து சம்பள நிர்ணய சபைக்குச் செல்ரும் தீர்மானத்தை எடுத்தார்.

சம்பள நிர்ணய சபையில் அடிப்படை நாட்சம்பளம் 900/= எனவும் வரவுசெலவுத்திட்டபடி 100/= எனவும் வழங்க வேண்டும் எடுத்த முடிவுக்கு கம்பனிகள் இணங்கவில்லை என்பது அவர்கள் அதனை எதிர்த்து வாக்களித்ததில் இருந்தே தெளிவாக தெரிகிறது.

இங்கே தொடர்புபடும் மூன்று தரப்பினர்களில் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தை நிறைவேற்றும் பொறுப்பு அதனை மறுக்கும் கம்பனிகள் சார்ந்தது என்றவகையில் இனிவரும் காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை மாற்றுவடிவம் எடுக்க வாய்ப்புகள் உள்ளன.

கேள்வி : முதலாளிமார் சம்மேளனம் இணங்காவிட்டால் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் ?

பதில் : தோட்டக் கம்பனிகள் தமது ஆட்சேபனையைத் தெரிவிக்க 14 நாட்கள் கால அவகாசம் உண்டு. அது குறித்து தாம் கவனம் செலுத்த உள்ளதாக முதலாளிமார் சம்மேளனப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்து உள்ளார். அதற்குள் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை வெளியிட்டு, அதனை ஏற்று நடைமுறைப்படுத்த கம்பனிகள் நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர்கள் வழங்கும் வேலை நாட்களைக் குறைக்க வாயப்பு உள்ளது. அது தொழிலாளர்களின் மாத வருமானத்தைக் குறைக்க வல்லது.

எனவேதான் இதுவரை காலம் ஆயிரம் ரூபாதான் பிரச்சினை என பேசிவந்த அரசியல், தொழிற்சங்க பிரதிநிதிகள் இப்போது அதற்கு அப்பால்சென்று வேலை நாட்கள் குறித்து பேசத் தலைப்பட்டுள்ளனர்.எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினை உக்கிரமடையும்போது முறைமை மாற்றம் குறித்து ஆயிரம் ரூபாவுக்கு வெளியே சென்று பேசும் பல திறப்புகள் வெளிப்பட வாய்ப்புகள் உள்ளன.

கேள்வி : இப்போதைய புதிய முனைப்புகளினால் இதுவரை நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமை என்னவாகும் ?

நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமையில் மாற்றம் வேண்டுமென கடந்த காலங்களில் தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டு வந்துள்ளது. இப்போது சம்பள நிர்ணய சபை மூலம் தீர்மானிக்கப்பட்ட ஒரு தொகையை கம்பனிகள் வழங்க வேண்டும் அரசினால் நிர்ப்பந்திக்கப்படும் நிலையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த கூட்டு ஒப்பந்த முறைமையின் இறுக்கம் தளர்ந்துள்ளது என்பதனைக் காட்டுகிறது. கம்பனிகளின் அறிக்கைகளில் அதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன.

இதனால், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை மாற்றுவடிவில் வெளிவரும். இதன்போது அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் மேலும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கும் தேவை எழும். அதன்போது முறைமை மாற்றம் ஒன்றிற்கான அழுத்தம் அதிகரிக்கும். சமூக மட்டத்திலும் ஆயிரம் ரூபாதான் பிரச்சினை என்கிற நிலையைக் கடந்து தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையை, மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினையைப் பார்க்கும் சூழ்நிலை ஏற்படும். இதனை அரசியல் ரீதியான ஒரு முன்னகர்வு என கொள்ளுதல் வேண்டும். அதே நேரம் அந்த அரசியலை கவனமாக முன்னகர்த்தவும் வேண்டும்.

கடந்த ஐந்து, ஆறு வடிவங்களாக பாராளுமன்றில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்ததன் விளைவாகவே, கடந்த கால் நூற்றாண்டு காலமாக கண்டு கொள்ளாமல் இருந்த அரசும் அரசாங்கமும் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பள விடயத்தில் தலையிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அரசாங்கம் இப்போதுதான் இந்த சுமையை சுமக்க ஆரம்பித்துள்ளது.

இதன் பிரதிபலிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன சபையில் தெரிவிக்கிறார். கம்பனிகள் மறுத்தால் தோட்டத்தை அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டுப் போகலாம் என தொழில் அமைச்சர் சபையிலே பகிரங்கமாக கூறியுள்ளார். எனவே, இந்த கால் நூற்றாண்டு காலமும் கம்பனிகளுக்கு 99 வருட குத்தகைக்குக் கொடுத்திருப்பதான கதை பொய்யானது என்பது தெளிவாகிறது. அரசுக்கே நிலம் சொந்தம்.அரசே தங்கப்பங்குடமையாளர். அதனால்தான் இத்தனை உறுதியாக கம்பனிகள் வெளியேறட்டும் என சொல்ல முடிகிறது.

1972 ஆம் ஆண்டு அரசாங்கம் பிரித்தானிய கம்பனிகளிடம் இருந்து தோட்டங்களைப் பொறுப்பெடுத்ததன் பின்னரே தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு அவை சிறுதொட்டங்களாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவையே இன்று தேயிலை ஏற்றுமதியில் 75 சதவீத வருமானத்தைப் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றன.

பெருந்தோட்டங்கள் தோல்வியடைந்த 25 ஆண்டுகளில் சிறுதோட்டங்கள் வெற்றியடைந்த வரலாற்றை வலியுறுத்தி தனியார் கம்பனிகளிடம் இருந்து தோட்டங்களைப் பெற்று அவற்றை தொழிலாளர்களுக்கு பகிர்ந்து அளிப்பதன் மூலமே, கூட்டு ஒப்பந்தம், சம்பள நிர்ணய சபை முதலான குழப்பகரமான சூழல்களைத் தவிர்க்கலாம். எனவே இன்றைய சூழலை முறைமை மாற்றத்திற்கான முதற்படியாக கொள்ளுதல் வேண்டும்.

15/02/2021 - Virakesari